25) மைத்ரகா அரசு

மைத்ரகா அரசர்கள் (கி.பி.493-776)

இன்றைய செளராஷ்டிராவை ஆண்டவர்கள். குப்தர்களின் கீழ் சேனாதிபதியாக அந்த பகுதியை நிர்வகித்துட்டு இருந்தவரான  பத்தர்கா குப்த பேரரசு கலகலத்தவுடன் தனியாக சுயாட்சி கி.பி.475ல் அறிவித்தார். அவரும் அவருக்கு பின் வந்த முதலாம் தரசேனா இவரும் சேனாதிபதி பட்டத்தை மட்டும் வைத்திருந்தனர். பத்தர்காவுக்கு 4 மகன்கள். இரண்டாவது மகனான துரோணசிம்மா தன்னை மஹாராஜா என்று அறிவித்துவிட்டு ஆட்சி புரிந்தார். ஆரம்பத்தில் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய குழப்பம். மைத்ரகா என்பவர் பத்தர்காவை வென்று ஆட்சிபுரிந்தாரா என்று. செப்பு தகட்டுகளில் மைத்ரகா என்று பெயர் இருப்பதால் அவர்கள் வெளியில் இருந்து வந்து பத்தர்காவை வென்று ஆட்சியை பிடித்தவர்களா என்று சந்தேகமும் இருந்தது. பிறகு மைத்ரா என்றால் சூரியன். இவர்கள் சூரிய குலத்தவர்கள் என்பதால் தங்களை அவ்வாறு அழைத்துக் கொண்டனர் என்று புலனாகிற்று.


பத்தர்கா (கி.பி.475-493) :

குப்தர்கள் ஆட்சியில் செளராஷ்டிரா பகுதிக்கு ராணுவ ஆளுநராக இருந்தவர். குப்த பேரரசு கலகலத்தவுடன் தன்னை சுயாட்சி பெற்ற சேனாதிபதியாக அறிவித்துவிட்டு ஆட்சியை ஆரம்பித்தார். இவர் சைவத்தை பின்பற்றியவர். தலைநகராக கிர்னார் இருந்ததை வல்லபிக்கு (இன்றைய வாலா) மாற்றினார். எல்லா ஆட்சியாளர்களின் செப்பு தகட்டிலும் நாணயங்களிலும் ஶ்ரீபத்தர்கா என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இவரிலிருந்தே வம்சம் உதயமாகியிருப்பதை அறியமுடிகிறது.


முதலாம் தாரசேனா (கி.பி.493-499) :

பத்தர்காவுக்கு பின் அவரது நான்கு மகன்களில் மூத்தவரான தரசேனா பட்டத்திற்கு வந்தார். இவரும் தன்னை சேனாதிபதி என்றே அழைத்துக் கொண்டார். 

துரோணசிம்ஹா (கி.பி.499-519) :

சகோதரன் தாரசேனாவுக்கு பின் பத்தர்காவின் இரண்டாவது மகன் தன்னை மஹாராஜா என்று அறிவித்து அரசாட்சி புரிந்தார். இவரின் ஆட்சிகாலத்தில் தான் கி.பி.510ல் பானுகுப்தர் படையெடுத்தார் என்ற விவரம் குப்தர்களின் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

முதலாம் துருவசேனா (கி.பி.519-549) :

பத்தர்காவின் மூன்றாவது மகன் தனது இரண்டாவது அண்ணன் துரோணசிம்ஹாவுக்கு பின் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சியில் மால்வாவின் அரசன் யசோதவர்மன் வாகதகர்களின் ஹரிசேனா மற்றும் ஹீணர்களின் மிகிரகுலாவை தோற்கடித்தார்.  இவர் மட்டுமே இவரின் வம்சாவளியில் வைஷ்ணவத்தை கடைப்பிடித்தார். கி.பி. 535ல் புத்த மடத்தை வல்லபியில் கட்டினார். பிராமணர்களுக்கு வாத் நகரில் நிறைய நிலங்களை தானமளித்தார். இவரின் மனைவியான சந்திரலேகா உஜ்ஜையினி அரசனான தாரசனாசரா என்ற தேவசேனாவின் மகள். இவரின் மனைவியின் முயற்சியாலையே வல்லபியில் சமணர்கள் அமைப்பு உருவாகிற்று. இந்த காலகட்டத்தில் இவரின் மகன் மறைந்ததை "கல்ப சுத்ரா" எனப்படும் சமண கையேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கையேடு அனந்தபுரா(வாத் நகர்) என்ற இடத்திலிருந்து வெளியிடப்பட்டதால் அரசு துவாரகா வரை பரவியிருந்ததை அறியமுடிகிறது. கருடர்கள் இவர்களின் மேலாண்மையை ஏற்று இவர்களின் உதவியினால் துவாரகையை கைப்பற்றினார்கள்.

தாரபட்டா (கி.பி.549-553) :

முதலாம் துருவசேனாவுக்கு பின் அவரது தம்பி (பத்தர்காவின் நான்காவது மகன்) ஏற்கனவே வயது முதிர்ந்தவர் குறைந்த காலத்திற்கே பட்டத்தில் இருந்தார். இவர் ஒருவரே  "பரமாதித்ய பக்தா(சூரியனே கடவுள்)" என்று அழைக்கப்பட்டவர். இவரது பேரன் பொறித்த செப்பு பட்டயத்திலிருந்தே இவரை பற்றி அறியமுடிகிறது.

குஹசேனா (கி.பி.553-569) :

இவரின் ஆட்சியில் மெளகாரா வம்சத்து அரசன் ஈஸ்வரவர்மன் படையெடுத்து வந்தார். அவரின் படையெடுப்பில் யார் வெற்றி பெற்றது என்ற விவரம் ஜான்பூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. இவரின் காலத்திய செப்பு தகடுகளில் சிவனின் வாகனமான நந்தி பொறிக்கப்பட்டுருப்பதிலிருந்து இவர் சிவனை வழிபட்ட சைவர் என்று புலனாகிறது. கடைசி காலங்களில் புத்த மதத்தையும் ஆதரித்தார். இவர் சம்ஸ்கிருதம், பிராகிருதம், செளர்செனி அபராம்சா மொழிகளில் செய்யுள்களையும் எழுதியுள்ளார்.

இரண்டாம் தாரசேனா (கி.பி.569-590) :

குஹசேனாவுககு பின் அவரது மகன் பட்டத்திற்கு வந்தார்.

முதலாம் சிலாதித்யா (கி.பி.590-615) :

இவர் தர்மாதித்யா (தர்மத்தின் சூரியன்) என்று அழைக்கப்பட்டார். இவர் சைவத்தை பின்பற்றினார். சமணர்களின் நூலான "சத்ருனாஞ்சய மஹாத்ம்ய" இவர் எல்லா மதங்களையும் சமமாக ஆதரித்தார். அதனால் தான் தர்மாதித்யா என்று அழைக்கப்பட்டார் என்று கூறுகிறது. இவர் தனது அரசில் இருந்த சில பெளத்தர்களை இவரின் எதிரியான ஹர்ஷருக்கு சாதகமாக நின்றதால் நாட்டை விட்டு வெளியே அனுப்பினார். அதனால் அவர்கள் இவரை பற்றி தப்பிதமாக பதிவு செய்துள்ளனர் என்றும் கூறுகிறது. இவர் இரண்டாம் புலிகேசிக்கு காலச்சூரிகளுக்கு எதிரான போரில் உதவி புரிந்தார் . ஜான்ஜிக்கா என்ற ராணியின் பெயர் தாமிர தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது . அவர் இவரது மனைவியாக இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

முதலாம் காரகிரஹா (கி.பி. 615-621) :

இவர் முதலாம் சிலாதித்யாவுக்கு பிறகு ஆட்சியேறிய அவரின் இளைய சகோதரர். இவர் ஈஸ்வரகிரஹா என்ற பெயரிலையே அழைக்கப்படுகிறார். விர்டியில் கிடைத்த தாமிர தகட்டில் இவர் உஜ்ஜையினியை வென்று தன் நாட்டுடன் இணைத்ததை பற்றி குறிப்பிட்டுள்ளது. இவரின் சகோதரர் ஆட்சியில் ஏற்பட்ட ஹர்ஷருடனான பகைமை இவரின் ஆட்சியிலும் தொடர்ந்தது. இவர் சைவ சமயத்தை பின்பற்றினார்.

மூன்றாம் தாரசேனா (கி.பி.621-627) :

காரகிருஹாவுக்கு பின் அவரின் மகனான மூன்றாம் தாரசேனா பட்டத்துக்கு வந்தார். இவர் கேடகாவில் (இன்றைய பெயர் கேடா Kheda) இராணவத்தளம் அமைத்தார். இவருக்கு பக்கத்திலிருந்த சாளுக்கிய புலிகேசி மற்றும் புஷ்யபூச வம்சத்து ஹர்ஷவர்த்தனரின் தொல்லைகளும் தொடர்ந்தே இருந்தது. இவரும் சைவத்தை பின்பற்றினார்.

இரண்டாம் துருவசேனா (பாலாதித்யா) கி.பி.627-641 :

மூன்றாம் தாரசேனாவுக்கு பின் அவரின் இளைய சகோதரர் இரண்டாம் துருவசேனா ஆட்சிக்கு வந்தார். இவர் பாலாதித்யா (உதயசூரியன்) என்று அழைக்கப்பட்டார். இவர் அரசியலின் இலக்கணம் மற்றும் அறிவியல் அறிந்தவர் என்று யுவான் சுவாங் குறிப்பிடுகிறார்.இவர் புத்த மடாலயங்களும் விகாரைகளும் இந்து கோவில்களையும் கட்டினார். யுவான் சுவாங் இவர் கன்னோசியின் ஹர்ஷவர்த்தரின் மகளை மணந்து கொண்டார் என்று குறிப்பிடுகிறார். இவரின் காலத்தில் இவரின் ஆட்சி மேற்கு உஜ்ஜையினியின் ரத்லம் நகரில் இருந்து விலக்கப்பட்டு மத்திய மற்றும் வடக்கு குஜராத் பிரதேசங்களே மைத்ரகர்களின் ஆட்சியில் இருந்தது.


நான்காம் தாரசேனா (கி.பி.641-650) :

இரண்டாம் துருவசேனாவுக்கு பின் பட்டத்திற்கு வந்தார். தெற்கு குஜராத்தின் லத்தா வம்சத்து அரசர்களை அடக்கியதை ப்ரூச் நகரில் கண்டெடுக்கப்பட்ட தாமிர தகடுகளின் மூலம் அறியலாம். இவர் புத்த மதத்தினருக்கும் பிராமணர்களுக்கும் நிறைய சலுகைகள் அளித்தார். இவரின் காலத்தே பட்டி என்ற புலவர் "பட்டிகாவ்யா  அல்லது ராவணவதா" என்ற செய்யுள் நூல் இயற்றினார். இவருக்கு மகன்கள் இல்லாததால் இவரின் மூத்த சகோதரர்கள் வம்சத்தில் (தேராபட்டா வழி) வந்த மூன்றாம் துருவசேனா பட்டத்துக்கு வந்தார்.

மூன்றாம் துருவசேனா (கி.பி.650-655) :

இவர் நான்காம் தாரசேனாவின் சகோதரர் தேராபட்டாவின் மகன். இவர் சைவத்தை பின்பற்றியவர். இவர் லத்தா பகுதிகளை (குஜராத் தெற்கு) சாளுக்கியர்களிடம் இழந்தார்.

இரண்டாம் காரகிரஹா (கி.பி.655-658)  :

மூன்றாம் துருவசேனாவுக்கு பின் அவரது அண்ணன் இரண்டாம் காரகிரஹா பட்டத்திற்கு வந்தார். இவருக்கும் சாளுக்கியர்களின் தொல்லை இருந்துகொண்டே இருந்தது. இவருக்கு மகன் இல்லாததால் இவருக்கு பின் இவரது அண்ணன் இரண்டாம் சிலாதித்யா ஆட்சிக்கு வந்தார்.

இரண்டாம் சிலாதித்யா (கி.பி.658-685) :

இவர் தெற்கு குஜராத்தின் லத்தா பகுதிகள் சாளுக்கியர்களின் கீழ் இருந்த தளபதி சென்ட்ரகா என்பவரிடமிருந்து கைப்பற்றினார். பின்னர் சாளுக்கிய மன்னர் முதலாம் விக்ரமாதித்யா திரும்பவும் அதை கைப்பற்றி தனது மகன் தாராஸ்ரய ஜெயசிம்ஹாவை ஆளுநராக நியமித்தார். லத்தா ராஜ்யம் இவர்களுக்கு எப்போதுமே தொல்லையாகவே இருந்தது. அரபு தளபதி இஸ்மாயில் கி.பி.677ல் கோஹா வை படையெடுத்தாக சொல்லப்படுகிறது. அவர் இரண்டாம் சிலாதித்யாவால் தோற்கடிக்க பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மூன்றாம் சிலாதித்யா (கி.பி.690-710) :

இரண்டாம் சிலாதித்யாவின் மகனான இவர் அவருக்கு பின் பட்டத்திற்கு வந்தார். பஞ்சாஸர் பகுதி சாவ்டா வம்ச அரசன் ஜெயசேகராவால் படையெடுக்கப்பட்டது.

நான்காம் சிலாதித்யா (கி.பி.710-740) :

மூன்றாம் சிலாதித்யாவின் மகனான இவர் அவருக்கு பின் ஆட்சிபொறுப்பை ஏற்றார். இவரின் காலத்தில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்ரமாதித்யன் கேடா பகுதியை லத்தா பகுதியை ஆண்ட குர்ஜர அரசன் நான்காம் ஜெயபட்டா உதவியினால் கைப்பற்றினார். கி.பி.733ல் பொறிக்கப்பட்ட சஞ்சன் தகடுகளின் மூலம் இராஷ்டிரகூட அரசன் முதலாம் இந்திரா சாளுக்கிய இளவரசி பவகங்காவை மணந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. அதன் மூலம் கேடா பகுதியை பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. 

மைத்ரகா வம்ச ஆட்சி தொடர்ச்சியான அரபு படையெடுப்புகளை அதன் தளபதி ஜீனைத்தின் கீழ் சந்தித்ததாக 735-736 ம் வருட லத்தாவை ஆண்ட குர்ஜர அரசர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. நவ்சாரி செப்புதகடுகள் அரபுகள் தொடர்ச்சியாக கட்ச், சைந்தவர்கள், செளராஸ்ட்ரா, மெளரியர்கள் மற்றும் குர்ஜரர்களை வென்றதாக குறிப்பிட்டுள்ளது. வல்லபியில் (இன்றைய வாலா) நடந்த போரில் அரபுகளுக்கு எதிராக லத்தாவின் குர்ஜர அரசன் ஜெயபட்டா மைத்ரகர்களுக்கு உதவியாக போரில் ஈடுபட்டான். ஆனால் சாளுக்கிய படைகளை அரபுக்களை வென்று விரட்டியடித்ததாக நவ்சாரி தகடுகள் கூறுகிறது.

ஜந்தாம் சிலாதித்யா (கி.பி.740-762) :

அரபுக்களின் படையெடுப்புக்கு பிறகு இவர் மேற்கு மாகாணங்களை இணைத்தார். ஆனால் இன்றைய ஜோத்பூர் மற்றும் இராஜஸ்தான் பிரதேசங்கள் அதற்கு முன்பே குர்ஜர-பிரதிஹரர்களின் வசம் போய்விட்டது. கி.பி.760ல் அந்த பிரதேசங்களை மீட்க கோத்ராவில் இராணுவமுகாம் ஏற்படுத்தினார். ஆனாலும் இழந்த பகுதிகளை மீட்க முடியவில்லை. அரபு (தஜிக்கா) படையெடுப்பை கடலில் இருந்து கி.பி.759ல் எதிர்கொள்ள வேண்டியாதாகிற்று. அமரூபின் ஜமால் தலைமையிலான கடற்படையை மைத்ரிகர்களுக்கு அடங்கிய சைந்தவர்கள் அரசு முறியடித்தது.

சிலாதித்யா (கி.பி.762-776) :

இவருக்கு தாருபட்டா என்பது இயற்பெயர். இவர் ஆட்சியின் போது மீண்டும் கி.பி.776ல் அரபுக்கள் படையெடுத்து பார்டா நகரை (இன்றைய போர்பந்தருக்கு அருகிலுள்ளது) கைப்பற்றினார்கள். அரபு கலிபா மீண்டும் போர் தொடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்து நிறுத்தியதை சைந்தவர்கள் வம்ச அரசர்களின் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளது. அரபுக்களுடன் நடந்த போரில் தோற்ற பிறகு இவர்களின் அரசு எப்படி வீழ்ந்தது என்ற விவரம் கிடைக்கவில்லை. கி.பி. 783ல் மைத்தரகா வம்ச ஆட்சி முற்றிலும் முடிந்ததாக தெரிகிறது. வல்லபி அரசு (மைத்தரகா) வீழ்ந்தவுடன் கிர்னார் மற்றும் வந்திலி ஆளுநர்கள் தாங்கள் சுயராஜ்ய ஆளுநர்கள் என்று அறிவித்துக் கொண்டனர்.

செளராஷ்டிராவின் மேற்கு கடற்கரையோரம் இவர்களின் ஆட்சியின் போது நூற்றுக்கணக்கான கோயில்கள் கட்டப்பட்டன. புத்த சமண விகாரைகளும் எழுப்பப்பட்டன.


இவர்களின் ஆட்சியில் தான் "வல்லபி பல்கலைக்கழகம்" கட்டப்பட்டது. அந்த காலத்தில் நாளாந்தா பல்கலைக்கழகத்திற்கு இணையான புகழை பெற்றது. வதாபத்ராவில் கட்டப்பட்ட சிவன்கோவில் (கி.பி.609), பார்தீஸ்வரா கோவில் (கி.பி.631), கோமதிக்கா கோவில்(கி.பி.639), ஹதாப்பில் கட்டப்பட்ட பாண்டுராயா கோவில் (கி.பி.502), சப்தமாத்ரிகா கோவில் (கி.பி.676), வதாபத்ராவில் கட்டப்பட்ட சூரியக்கோவில் (கி.பி.609) ஆகியவை இவர்களின் காலத்தில் கட்டப்பட்ட முக்கியமான இந்து கோவில்களாகும்.

பத்தர்கா-விஹாரா என்பது பத்தர்காவால் கட்டப்பட்ட புத்த விஹாரையாகும். முதலாம் துருவசேனாவின் சகோதரி துட்டா என்பவரால் துட்டா-விஹாரா கி.பி.6ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. முதலாம் சிலாதித்யாவால் சிலாதித்யா-விஹாரா வம்ஹகதா கட்டப்பட்டது. மிம்மா என்ற பெண்மணியால் அபயந்திரிகா-விஹாரா கட்டப்பட்டது.ஆனால் இவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. காக்கா மன்கிலா என்பவரால் காக்கா விஹாரா மற்றும் கோகஹா விஹாரா கட்டப்பட்டது. இளம் பெண் துறவிகளுக்காக யக்ஷசுரா விஹாரா கி.பி.6ம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டது. கி.பி.6ம் நூற்றாண்டில் மத்தியில் அஜிதா என்ற வணிகரால் அஜிதா விஹாரா கட்டப்பட்டது. பூர்ணபட்டா விஹாரா, சண்டபட்டா விஹாரா ஆகியவையும் பிற்காலத்தில் கட்டப்பட்ட புத்த விஹாரைகளாகும்.

அதே போல் சாந்தி நாதா ஆலயம் வல்லபியில் சமணர்களுக்காக கட்டப்பட்டது. வல்லபியின் அழிவின் சமயத்தில் அங்கிருந்த  சந்திரபிரபா, ஆதிநாதா, பாஸ்வநாதா மற்றும் மஹாவீர் சிலைகள் வேறொரு பத்திரமான இடங்களுக்கு மாற்றப்பட்டது. இவர்களின் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் எல்லாம் மரத்தாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டதால் கால ஓட்டத்தில் நிலைத்து நிற்க முடியாமல் அழிந்து அதன் நினைவுகளாக எச்சங்களாகவே உள்ளது.


மைத்தரகர்களின் நாணயங்கள் அவர்களது முந்தையவர்களான குப்தர்கள் மற்றும் மேற்கு சத்ரபதிகளின் வடிவத்திலையே இருந்தது. நிறைய செப்பு மற்றும் வெள்ளி நாணயங்கள் வல்லபி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கணடெடுக்கப்பட்டன. இரண்டு வடிவங்களில் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. 6 செ.மீ சுற்றளவுடன் 29 கிரெய்ன் எடையில் கண்டுபிடிக்கப்பட்டது மேற்கு சத்ரபதிகளின் வெள்ளி நாணயங்களை ஒத்திருந்தது. மற்றொன்று குப்தர்கள் நாணயங்களின் வடிவம், எடை அளவுகளை ஒத்திருந்தது.  அவர்களை போல இது வெள்ளி நாணயங்களாக இல்லாமல் வெள்ளி முலாம் பூசப்பட்ட நாணயங்களாக இருந்தது.

இவர்களின் நிர்வாகமுறை சிறந்த அளவில் இருந்ததாக யுவான் சுவாங் கூறியுள்ளார். நிர்வாகத்தின் உச்சநிலையாக விசயா என்பது ராஷ்டிரபதி அல்லது அமத்யா என்று அழைக்கப்பட்டது. கடைசி நிலை க்ராம என்பது கிராமகுதா என்று அழைக்கப்படுபவர்களால் நிர்வகிப்பட்டது. மொத்தத்தில் இவர்களின் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் ஆகியவை மத வேறுபாடின்றி வளர்க்கப்பட்டது.

உதவிய நூல்கள் :

விக்கிபீடியா தகவல்கள்

ஹர்ஷர் - அ.கணேசன்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்