70) மொகலாய பேரரசு - அக்பர்
ஜலாலுதீன் முகம்மது அக்பர் (கி.பி.1542-1605)
ஆட்சி: கி.பி.1556-1605
மொகலாய மன்னர்களுள் பேரரசர் என்று சொன்னால் எல்லோர் விரலும் அக்பரின் திசையை நோக்கியே சொல்லும். அக்பர் என்ற சொல்லுக்கு "மிகப்பெரியன்" என்று அர்த்தம். பிறந்தவுடன் இவர் ஜாதகத்தை குறித்த இவரின் தந்தை ஹீமாயூன் இவர் மிகப்பெரிய பேரரசராக வருவார் என்றதால் முதலில் வைத்த பெயரை மாற்றி அக்பர் என்று பெயரிட்டார். இவரின் தந்தை ஹீமாயூன் இறக்கும் போது இவருக்கு வயது 13 தான். அப்போது பதவியில் அமர்ந்த அக்பர் 49 ஆண்டுகள் டெல்லியை ஆண்டு மொகலாய பேரரசின் பலமான அஸ்திவாரத்தை இட்டு சென்றார். இவரின் சிந்தனைகள் தான் இந்து-முஸ்ஸீம் மத நல்லிணக்கத்துக்கு ஆரம்பப்புள்ளியாக இருந்தது. மதுராவுக்கு சென்ற சமயத்தில் (அப்போது அவருக்கு வயது 18) இந்துக்களின் திருவிழாவுக்கு ஜிஸியா வரி விதிப்பதையும் கண்டு கொதித்து அவ்வரியை ரத்து செய்தார். வரியை ரத்து செய்த திருப்தியில் மதுராவிலிருந்து ஆக்ராவுக்கு நடந்தே வந்து சேர்ந்தார். இவருடன் நடக்க ஆரம்பித்தவர்கள் கடைசியில் மூன்று பேர் தான் 36 மைல் தூரத்தினை கடந்து ஆக்ராவுக்கு வந்து சேர்ந்தனர். வயதான இந்துக்களுக்கு இருந்த வரிகளையும் நீக்கினார். இந்தியாவை ஆள வேண்டுமானால் பயத்தால் ஆள்வதை விட அன்பால் தான் ஆளமுடியும் என்று உணர்ந்தவர். சிற்சில சம்பவங்கள் நெருடலாக இருந்தாலும் மொத்தத்தில் இவரின் ஆட்சி பொற்கால ஆட்சி தான். போரில் துரோகிகளை வென்ற பின் அவர்களின் தலையை வெட்டி கோரபுரம் அமைக்கும் செயலில் அவ்வப்போது தைமூரின் வம்சாவளி சாயல் தென்பட்டு விடும். இந்து - முஸ்ஸீம் கலப்பு திருமணங்களை அவர் ஆதரித்தது மட்டுமின்றி அவரே கலப்பு திருமணங்களும் புரிந்தார். இவருக்கு பின் பட்டமேறிய சலீம் (ஜஹாங்கீர்) கூட இந்து இராஜபுத்ர வம்சத்து மனைவியின் மகன் தான். இவரின் கதை தான் ஜோதா அக்பர் என்ற பெயரில் திரைப்படமாக வந்தது. நவ்ரோஸா (ஒவ்வொரு புத்தாண்டின் முதல் ஒன்பது நாட்கள்) அரண்மனையில் பெண்களுக்காக பெண்களே விற்பனையாளர்களாக வாடிக்கையாளர்களாக நடத்தும் விழா அது. இது எனக்கு குஷ்ரோஸா என்று அக்பரே கூறுவார். இந்த நிகழ்வுகளில் தனக்கு பிடித்தமான பெண்ணை தேர்ந்தெடுத்து மனைவியாக்கி கொள்வார். மேவாரின் ராணா பிரதாப் சிங்கின் சகோதரரான சக்தி சிங் அண்ணனுடன் ஏற்பட்ட அரியணை தகராறால் அக்பரிடம் வந்து அவரின் அரசவையில் இருந்தார். அவரது மகளான கிரண் தேவி ரத்தோர் என்பவர் பிகானீயர் இளவரசரன பிரித்விராஜ் ரத்தோர் என்பவரை மணந்தார். கிரண் தேவிக்கு மொகலாயர்களை பிடிக்கவில்லை என்றாலும் கணவர் அவரது அவையில் இருந்ததால் வேறு வழியில்லாமல் டெல்லியில் வாழ்ந்து வந்தார். புத்தாண்டின் போது நவ்ரோஸா விழாவின் போது இவரை கண்ட அக்பர் இவரை அடைய முயல அக்பரின் கழுத்தில் கத்தியை வைத்து "நான் இராஜபுத்ர பெண். உயிரை பற்றி கவலைப்பட மாட்டேன். என்னை நெருங்கினால் இந்துஸ்தான் அதன் சக்கரவர்த்தியை இழக்க நேரிடும்" என்று கூறி தப்பித்து சென்றார். பின்னர் கணவரும் மனைவியுமாக டெல்லியை விட்டு உடனே அகன்று பிகானீயர் சென்று விட்டனர். இது சரித்திரத்தில் மறைக்கப்பட்ட பக்கங்களுள் ஒன்றாக உள்ளது. அக்பர் அவரின் தந்தையை பற்றி குறிப்பிடும்போது ஏன் தான் என் தாத்தா பாபருக்கும் எனக்கும் இடையில் வந்து பிறந்தாரோ? நாட்டை இழந்ததால் தைமூரின் வம்ச பெருமையாக அரசை விரிவாக்கம் செய்ய தாமதமான காரணத்தால் அவ்வாறு குறிப்பிட்டுள்ளாரே தவிர வேறு காரணம் இல்லை. இவரது அவையில் தான் தான்சேன் என்ற பிரபல பாடகரும் "அக்பர்-பீர்பால் கதைகள்" என பின்னாளில் புகழுக்குரிய பீர்பால், அக்பர் நாமா அயினி அக்பரி எழுதிய அபுல் பாஸல் ஆகியோர் இருந்தனர்.
ஹீமாயூன் ஷெர்ஷா சூரியால் நாடிழந்து துரத்தப்பட்ட போது தம்பி ஆண்ட லாகூருக்கு வந்து சேர்ந்தார். அங்கு தான் அவர் தந்தை பாபரின் இன்னொரு மனைவியான தில்தார் பேகம் அளித்த விருந்தில் 14 வயதான ஹமீதா பானு பேகத்தை சந்தித்து காதல்வயப்பட்டார். ஹமீதா நாட்டை இழந்த அரசனை மணக்க பிரியப்படவில்லை. பலவித போராட்டத்திற்கு பின்னர் அவரின் மனதை மாற்றி அவரை திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் ஷெர்ஷா சூரி லாகூருக்கு விரட்டி வரும்போது சிந்து பகுதிக்கு ஓடினார். அங்குள்ள இந்து அரசர் ஆண்ட "அமர்கோட்"டில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த காதல் மனைவியுடன் அடைக்கலம் புகுந்தார். அமர்கோட்டில் கி.பி.1542ல் அக்டோபர் 15ம் தேதி ஜலாலுதீன் முகம்மது அக்பர் பிறந்தார். பின்னர் ஷெர்ஷா சூரி விரட்டி வர தம்பிகளின் உதவியால் அவர்களை வெல்லலாம் என்று கந்தஹார் செல்லும்போது அக்பர் 14 மாத குழந்தை. தனது அரசுக்கு ஹீமாயுனால் பிரச்சினை வரலாம் என்ற பயத்தில் அஸ்கார் மிர்ஸா இவரை பெரும்படையுடன் விரட்ட அக்பரை தனது வேலையாள் ஜவஹரின் பொறுப்பில் ஒப்படைத்து (கந்தஹாரில் அப்போது டிசம்பர் மாத கடுங்குளிர். பயணத்திற்கு 14 மாத குழந்தை அக்பர் குளிருக்கு தாங்க மாட்டான் என்ற காரணத்தினால்) பாரசீக மன்னரிடம் அடைக்கலம் தேடி போனார். குழந்தை அக்பரை கைப்பற்றிய அஸ்கார் மிர்ஸா அவரை கொல்லாமல் தன் மனைவியிடமும் பின்னர் அண்ணன் காம்ரான் மிர்ஸாவின் மனைவியான சுல்தான் பேகத்திடம் அவரை வளர்க்க ஒப்படைத்தார். பின்னர் பாரசீக மன்னரின் உதவியால் மீண்டும் கந்தஹார் மற்றும் காபூலை சகோதரர்களிடம் இருந்து கைப்பற்றி கி.பி.1545 முதல் அரசாள தொடங்கினார் ஹீமாயூன். இந்த நேரத்தில் பாரசீகத்திலிருந்து இரண்டு புகழ்பெற்ற ஒவியர்களை வரவழைத்து அவர்களை அரசவை ஒவியர்களாக்கி தானும் குழந்தை அக்பரும் பாரசீக பாணி ஓவியங்கள் வரைய பயிற்சி எடுத்துக்கொண்டார். அக்பருக்கு புத்தகம் படிப்பதை விட குதிரையேற்றம் வாள்வீச்சு மற்றும் அம்பெறிதல் ஆகிய போர் கலைகளில் தான் ஈடுபாடு இருந்தது. படிப்பு சுத்தமாக ஏறவில்லை என்றாலும் ஒருவர் சொன்னதை அப்படியே கிரகித்து சொல்லும் அளவுக்கு உலக ஞானமும் விஷய ஞானமும் அபாரமாக இருந்தது. அக்பரின் கையெழுத்து குழந்தை கிறுக்கலை போல தான் இருக்கும். பாபர் மற்றும் ஹீமாயூன் இருவரும் நல்ல படிப்பாளிகளாகவும் நன்கு துருக்கிய மொழியில் கவிதைகள் எழுத வாய்க்கப் பெற்றவராக இருந்தாலும் அக்பருக்கு ஏனோ படிப்பின் மீது காதல் வராமல் போனது தான் ஆச்சரியம்.
கி.பி.1556 பிப்ரவரி 6ம் தேதி ஹீமாயூன் முதல் மாடியிலிருந்து தொழுகைக்காக வரும்போது தவறி விழந்து இறந்து போனார். வேறொரு வரலாற்று ஆய்வாளர் ஹீமாயுனுக்கு வலிப்பு நோய் இருந்திருக்கலாம். படியிறங்கும் தருணத்தில் வலிப்பு ஏற்பட்டு மாடியிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என்கிறார். அந்த நேரத்தில் அக்பர் பஞ்சாப்பிலுள்ள கலசனார் பகுதியில் ஆப்கானிய கிளர்ச்சியாளர்களை அடக்கி கொண்டு இருந்தார். ஹீமாயூன் இறந்த தகவலை வெளியே தெரியாமல் பைராம்கான் மறைத்து அக்பருக்கு தகவல் தெரிவித்து ஆக்ராவில் வந்து பிப்ரவரி 14ல் முடிசூட்டிக் கொண்டார். அக்பருக்கு மொத்தம் 36 மனைவிகள் கணக்கில் இருந்தனர். அவர்களின் விவரம்:
1) ருக்கையா சுல்தான் பேகம் :
இவர் ஹீமாயூனின் தம்பியான ஹிண்டல் மிர்ஸாவின் மகள். இவர் அக்பருக்கு சகோதரி முறை.இவரை திருமணம் செய்யும்போது இவருக்கு வயது 10. அக்பரின் மூன்று முக்கியமான ராணிகளில் ஒருவர். 49 வருடங்கள் மஹாராணியாக இருந்தார். கி.பி.1542ல் பிறந்த இவர் மறைந்தது கி.பி.1626 பிப்ரவரி 5ம்தேதி. அக்பருக்கும் இவருக்கும் கஜினியில் கி.பி.1552ல் திருமணம் நடந்தது.
2) சலீமா சுல்தான் பேகம் :
இவர் அக்பரின் பாதுகாவலராக இருந்த பைராம்கானின் விதவை மனைவி. மெக்கா பயணத்திற்கு போகும் வழியில் பைராம்கான் கொல்லப்பட்டபோது விதவையான இவரை மணந்துகொண்டார். இவருக்கு அப்போது 4 வயதில் ஒரு மகன் உண்டு. பின்னாளில் அவர் அக்பருக்கு மந்திரியாக ஆனார். இவர் அக்பரை விட 3 வயது மூத்தவர். கி.பி.1539ல் பிறந்த இவர் மறைந்தது டிசம்பர் 27,1612. அக்பருக்கும் இவருக்கும் செப்டம்பர் 1561ல் திருமணம் நடந்தது. இவரும் மூன்று முக்கியமான ராணிகளில் ஒருவர்
3) மரியம் உல் ஜர்மானி :
இவர் தான் பட்டத்து இளவரசர் ஜஹாங்கீரின் தாயார். இராஜஸ்தானின் அம்பர் பிரதேசத்து மன்னர் ராஜா பார்மல்-சந்திராவதி தம்பதிகளின் மகள். இவரை கதாபாத்திரமாக வைத்துதான் ஜோதா அக்பர் என்று படம் கூட வெளிவந்தது. இவர் சரித்திரத்தில் ஹிரா குன்வாரி, ஹர்கா பாய், ஜோதா பாய் என்று பலவித பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். அக்பருக்கும் இவருக்கும் பிப்ரவரி 5,1562ல் இன்றைய சாம்பார் ஏரி உள்ள சாம்பார் நகரில் திருமணம் நடந்தது. இவர் மறைந்தது டிசம்பர்27,1612. அக்பரின் மூன்று முக்கியமான ராணிகளில் இவரும் ஒருவர்.
4) பீவி சலீமா சுல்தானா :
இவர் பணிப்பெண்ணாக இருந்து அவருடைய ராணியாக இருந்தவர். இவருக்கும் அக்பருக்கும் ஸேஸாதி காணும் என்ற மகள் உண்டு. இவர் மே23, கி.பி.1599ல் லாகூரில் மறைந்தார்.
5) பீவி கிய்ரா பேகம் :
இவரும் பணிப்பெண்ணாக இருந்து அவருடைய மனைவியாக ஆனவர். இவருக்கும் அக்பருக்கும் பிறந்த மகன் தான் முராத் மிர்ஸா (ஜஹாங்கீர் நாமாவில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது) என்பவர். இவர் கி.பி.1599ல் லாகூரில் மறைந்தார்.
6) பீவி மரியம் பேகம் :
இவரும் பணிப்பெண்ணாக இருந்து அவருடைய மனைவியாக ஆனவர் தான். அக்பரின் மகனான தானியேல் (இந்த தகவல் அக்பர்நாமாவில் குறிப்பிடப்பட்டுள்ளது) என்பவரின் தாய். கி.பி.1596ல் லாகூரில் மறைந்தார்.
7) அப்துல்லா கானின் மகள்.(பெயர் தெரியவில்லை):
முகலாய கவர்னர்களில் ஒருவரான அப்துல்லா கான்னின் மகள். அக்பர் இவரை கி.பி.1557ல் மன்கட்டில் மணந்தார்.
8) மஹாராணி ஶ்ரீநிதிபாய்:
இவர் ஜெய்சால்மர் மஹாராஜாவான ஹயிராஜ் சிங் தேவ் பஹதூரின் மகள். இவரை நாகோர் என்னுமிடத்தில் கி.பி.1562ல் அக்பர் மணந்தார். இவர்களுக்கு பிறந்த ஒரு மகள் (மஹேம் பேகம்) கி.பி.1577ல் 5,6 வயதிலையே மரணமடைந்து விட்டார்.
9) பீவி தெளலத் ஸாத்:
இவரை கி.பி.1563 ஆகஸ்ட்டில் மணந்தார். இவர் அப்துல் வாஸீ என்பவரின் முன்னாள் மனைவி. அக்பருக்கும் இவருக்கும் இரண்டு மகள்கள் பிறந்தனர். அந்த மகள்களின் ஒருவர் ஸாக்ருன்னிச்சா பானு மற்றொருவர் அரம் பானு பேகம்.
10) கந்தேஷ் இளவரசி (பெயர் தெரியவில்லை):
மண்டூ நகருக்கு அருகில் செப்டம்பர் 1564ல் அக்பர் இவரை மணந்துக்கொண்டார். இவர் கந்தேஷ் மன்னரான இரண்டாம் மிரான் முபாரக் ஷா ஃப்ரூக்கியின் மகள்.
11) பதான் கானின் மகள்(பெயர் தெரியவில்லை):
12) காஷ்மீரின் இளவரசி (பெயர் தெரியவில்லை):
காஷ்மீரின் சுல்தானான முகம்மது நஸீருத்தின் ஹீசைன் ஷா காஸியின் மகள். அக்பரின் சகோதரி முறையிலான இவரை கி.பி.1569ல் மணந்தார்.
13) சிந்த் பேஹீம் சாஹிபா:
இவர் சிந்த்தை ஆண்ட மிர்ஸா முகம்மது பாஹி தார்கான் என்பவரின் மகள். இவரை கி.பி.1570ல் அக்பர் மணந்துகொண்டார்.
14) பாஜிலால் ராஜ் குன்வாரி சாஹிபா:
பிஹானீயர் மன்னரான குன்வார் ஶ்ரீ கன்ஹோ மகளான இவரை நாகோரில் நவம்பர்16, கி.பி.1570ல் மணந்தார். அதே நாளில் இவரது சகோதரியையும் மணந்தார்.
15) பாஜிலால் பானுமதி கன்வாரி சாஹிபா:
பிஹானீயரின் கன்வார் ஶ்ரீபீம் ராஜ்ஜி என்பவரின் மகளான இவரை நாகோரில் நவம்பர் 16, கி.பி.1570ல் அக்பர் மணந்தார். இவருக்கு ராஜ் குன்வாரி, ருக்மாவதி மற்றும் ஹிரா குன்வாரி ஆகியோர் சகோதரி முறையினர்.
16) நஹார் தாஸ் மகள் (பெயர் தெரியவில்லை):
இவரை கி.பி.1572ல் அக்பர் திருமணம் செய்து கொண்டார்.
17) நகோர் இளவரசி (பெயர் தெரியவில்லை):
நகோரின் ராஜாவான ஶ்ரீஜெய் சந்த் என்பவரின் மகளான இவரை கி.பி.1573ல் மணந்தார்.
18) கரீஷ்மா பானு பேகம்:
இவரை கி.பி.1575ல் பதேஃபூர் சிக்ரியில் மணந்தார்.
19) துங்காபூர் இளவரசி (பெயர் தெரியவில்லை):
துங்காபூர் மன்னரான மஹாராவல் ஶ்ரீ அஸ்கரன் சாஹிப் பகதூர் என்பவரின் மகளான இவரை கி.பி.1577ல் மணந்தார்.
20) ருக்மாவதி பாஜிலால் சாஹிபா:
இவரை கி.பி.1581ல் அக்பர் மணந்தார். இவர் மார்வாரின் ராவ் ஶ்ரீமால் த்யோஜி என்பவரின் மகள். ஏற்கனவே இவரின் சகோதரி முறையிலான மூவரை அக்பர் ஏற்கனவே மணந்திருந்தார். இவரின் மேற்பார்வையில் டெல்லி மற்றும் ஆக்ராவில் நிறைய கட்டிடங்கள் மற்றும் தோட்டங்கள் கட்டப்பட்டது. இவர் ஃபூல் குன்வாரியின் இளைய சகோதரி (இந்த ஃபூல் குன்வாரி என்பவர் மேவார் மஹாராணாவான ராணா பிரதாப் சிங்கின் மனைவி). இவரை மணம் செய்த முறையில் அக்பருக்கு அவரின் பரம எதிரியான மேவார் ராணா பிரதாப் சிங் சகலை முறையில் சொந்தமாகிறார். இந்த ராணி மே 30, கி.பி.1623ல் ஆக்ராவில் மறைந்தார்.
21)மெர்டா இளவரசி (பெயர் தெரியவில்லை):
மெர்டா மன்னரான ராஜா ஶ்ரீகேஸோ தாஸ் ரதோரின் மகளான இவரை கி.பி.1581ல் மணந்தார்.
22) க்வாஸி இஸாவின் மகள்(பெயர் தெரியவில்லை):
இவரை லாகூரில் கி.பி.1594ல் மணந்தார்.
23) நிஸிர் கான் மகள் (பெயர் தெரியவில்லை):
இவரை கி.பி.1597ல் மணந்தார்.
24) கூச் பிஹார் இளவரசி (பெயர் தெரியவில்லை)
கூச்பிஹார் ராஜாவான ஶ்ரீலக்ஷ்மி நாராயண் பூஃப் பகதூரின் மகள். இவரை கி.பி.1597ல் அக்பர் மணந்தார்.
25) இளவரசி கெளஹர் காணும்:
இவர் ஷேக் ஜமால் பக்த் பகதூரியார் என்பவரின் சகோதரி
26) தாரா பேகம் சாஹிபா:
இவர் தான் ஆக்ராவிலுள்ள "தாரா பாக்"கை கட்டியவர்.
27) தெளதி பேஹம் சாஹிபா:
இவர் தான் "டோடா பாக்" மற்றும் "டோடா கா டால்" கட்டியவர்.
28) மெர்டாவின் ஹஸன் கான் மகள் (பெயர் தெரியவில்லை)
29) நவாநகர் இளவரசி:(பெயர் தெரியவில்லை)
30) மன்போதி சாஹிபா:
இவர் ஆக்ராவில் பூங்கா ஒன்று அமைத்தார்.
31) அப்தர் பேஹம் சாஹிபா:
பணிப்பெண்ணாக இருந்து ராணியாக ஆனவர்.
32) அச்சன்கா பேஹம்:
இவரும் பணிப்பெண்ணாக இருந்து ராணியாக ஆனவர். இவர் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் "அச்சனக் பாக்" என்ற தோட்டத்தை கட்டினார்.
33) பீவி புன்க்ராய்:
இவரும் பணிப்பெண்ணாக இருந்து ராணியாக ஆனவர் தான்.
34) பீவி ஆரம் பக்ஃஷ்:
இவர் பணிப்பெண்ணாக இருந்து ராணியாக ஆனவர். இவரை கி.பி.1563ல் அக்பர் மணந்தார். இவருக்கு இரு இரட்டையர்கள் (ஹஸன் மற்றும் ஹீசைன்) மகன்கள் உண்டு அவர்கள் பிறந்த கொஞ்ச நாள்களிலையே இறந்ததாகவும் தெரிகிறது. இந்த தகவல் ஜஹாங்கீர்நாமாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
35) பீவி நெளவுன்:
பணிப்பெண்ணாக இருந்து இவரையும் அக்பர் மணந்தார்
36) காஷ்மீரின் ஷாம்ஸ் சாக் மகள் (பெயர் தெரியவில்லை):
இவரை ஶ்ரீநகரில் அக்டோபர் 1592ல் மணந்தார்.
அக்பர் மணந்த 36 பெண்களுள் 12 பெண்கள் இராஜபுத்ர வம்சத்து இளவரசிகளாவார்கள். 36 திருமணங்கள் முடிந்ததால் அக்பரை பெண்பித்து பிடித்தவர் என்று சித்தரிக்கப்பட்டாலும் அந்த திருமணங்கள் பெரும்பாலும் நட்புறவு, இராஜ்ஜிய விரிவாக்கம், குடும்ப உறவுகள் மற்றும் இந்து-முஸ்ஸீம் ஒற்றுமைக்காக நடத்தப்பட்டது.
அக்பரின் மகன் மகள்கள்:
1) சலீம் என்ற ஜஹாங்கீர்:
அக்பருக்கு பின்னர் அரியணை ஏறினார். மரியம் உல் ஜர்மானி என்ற ஹிரா குன்வாரியின் மகன்.
2) முராத் மிர்ஸா:
அக்பரின் மனைவியான பீவி சலீமா பேகத்திற்கு கி.பி.1570ல் பிறந்தவர். மிதமிஞ்சிய குடி போதையினால் லாகூர் கோட்டையில் கி.பி.1599 ஆண்டு மே.12ல் இறந்தார்.
3) தானியேல் மிர்ஸா:
இவர் அக்பர் குஜராத் படையெடுப்பில் இருந்த போது கி.பி.1572ல் பிறந்தார். இவர் மிதமிஞ்சிய குடி போதையினால் கி.பி.1605ல் இறந்து போனார்.
இந்த 3 மகன்கள் போக இளம் வயதிலையே இறந்து போன ஹஸன், ஹீசைன் என்ற இரட்டையர்களும் அக்பருக்கு உண்டு.
4) அரம் பானு பேகம்:
அக்பருக்கும் பீவி தெளலத் ஸாத் என்ற மனைவிக்கும் பிறந்தவர். இவர் அக்பரின் இளைய மகள். கி.பி.1584ல் பிறந்த இவர் கி.பி.1624ல் ஆக்ராவில் மறைந்தார். தந்தை அக்பரின் சமாதியருகில் புதைக்கப்பட்டார்.
5) ஸாக்கருன்னிஸா பேகம்:
அக்பருக்கும் பீவி தெளலத் ஸாத் என்ற மனைவிக்கும் பிறந்தவர். இவர் அரம் பானு பேகத்திற்கு மூத்தவர். படக்ஸான்னை சேர்ந்த ஷாரூக் மிர்ஸாவை கி.பி.1594ல் மணந்தார். கி.பி.1607ல் ஷாரூக் மிர்ஸா மறைவுக்கு பின் விதவையானார். இவர் மறைந்தது கி.பி.1653 ஜனவரி 1ல் ஆக்ராவில் மறைந்தார். தந்தை அக்பரின் சமாதி அருகே புதைக்கப்பட்டார்.
6) மெஹருன்னிஸ்ஸா:
இவர் அக்பரின் மகள். தான்சேன்னின் மனைவி.
7) காணும் சுல்தான் பேகம்:
கி.பி.1569ல் பிறந்த இவர் கி.பி.1603ல் மறைந்தார். ஆக்ராவில் அக்பரின் சமாதியருகிலையே புதைக்கப்பட்டார். ஆனால் இவர் அக்பருக்கு முன்பே மரணமடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்பரின் மூத்த மகள் இவரே. இவர் மூத்த மகன் ஜஹாங்கீருக்கு 3 மாதங்கள் கழித்து பிறந்தார். பீவி சலீமா என்பவருக்கும் அக்பருக்கும் பிறந்தவர்.
8) மஹி பேகம்:
இவர் அக்பருக்கும் நிதிபாய்க்கும் பிறந்தவர். கி.பி.1571ல் பிறந்த இவர் கி.பி.1577ல் குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்தார்.
அக்பர் சிறுவயதில் தன் பாட்டனார் பாபரை போல் அரசுரிமை பெற்றபோதும் அவரை போலவே சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் இதில் அக்பர் ஒருவிதத்தில் அதிர்ஷ்டசாலி. பாபருக்கு வாய்ந்த தளபதிகள் போல இவரது தளபதியான பைராம்கான் இவரை விட்டு விலகவில்லை. பின்னால் வந்த அக்பரின் வளர்ப்பு தாயான மஹம் அகங்காவின் பேச்சினால் பைராம்கானை சந்தேகப்பட அவர் போர்க்கொடி தூக்கினார். அதெல்லாம் அக்பர் அரசை நிலைநிறுத்திக்கொண்ட பின் நடந்தது (கி.பி.1560ல்). டெல்லியில் கி.பி.1556ல் ஷெர்ஷா சூரியின் சகோதரர் மகனான சிக்கந்தர் ஷா சூரி டெல்லியை கைப்பற்ற முயற்சியில் அவனது தளபதியான ஹெமு ( ஹேமச்சந்திரா புருஷோத்தமன்) டெல்லியை கைப்பற்றி தன்னையே அரசராக அறிவித்துக் கொண்டு 29 நாட்கள் அரசாண்டார். இவர் 22 தொடர்ச்சியான போர்களில் வெற்றிவாகை சூடியவர். இவருடன் நடந்த இரண்டாம் பானிபட் போரில் கி.பி.1556 நவம்பர் மாதம் நடந்த போரில் பைராம்கான் வெற்றி பெற்று இவரின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் ஊசலாடிய மொகலாயர் ஆட்சி நிலைபெற்றது.
கி.பி.1556ல் ஹெமுவின் வீழ்ச்சிக்கு பின் பேரரசை நிலை நிறுத்திய பின் அக்பரின் தாயார் ஹமீதா பானு பேகம் காபூலில் இருந்து டெல்லிக்கு வந்தார். அவருடன் அவரது பணிப்பெண்ணான அக்பரின் செவிலித்தாய் மஹம் அகங்காவும் அவரது மகன் ஆதம் கானும் வந்தனர். செவிலித்தாயார் என்பதால் அக்பரிடம் நிறைய உரிமைகளை எடுத்துக்கொண்டார். மேலும் அந்த நேரத்தில் அக்பருக்கு வயது 14 மட்டுமே. அக்பரின் பாதுகாவலர் என்ற முறையில் பைராம்கான் நிறைய அதிகாரங்களை கொண்டிருந்தது இவருக்கு உறுத்தலாக இருந்தது. பைராம்கானின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் என்று சொல்லி கி.பி.1560ல் பைராம்கானை தாம் சுயமாக ஆட்சி புரிய வேண்டும் என்றும் அதற்காக அவரை மெக்கா புனித பயணம் செல்ல அக்பரால் கடிதம் எழுத தூண்டினார். இதனால் பைராம்கான் வெகுண்டு கிளர்ச்சியில் ஈடுபட அவர் கிளர்ச்சியில் தோற்கடித்து கைதியாக அக்பர் முன் கொண்டு வரப்பட்டார். அக்பர் அவரின் முந்தைய விசுவாசத்தை நினைத்து அவரை மன்னித்து புனித பயணம் செய்ய கட்டளையிட்டார். மெக்காவுக்கு புனித பயணம் செல்லும் வழியில் "பத்தான்" என்னுமிடத்தில் ஆப்கானியர்களால் பைராம்கான் கொல்லப்பட்டார். அப்போது அவரது 4 வயது மகனான "அப்துல் ரஹீம்" என்பவர் அக்பர் பொறுப்பில் வளர்க்கப்பட்டார். பின்னாளில் அக்பரின் அரசவையில் அவரும் ஒரு பிரபுவாக திகழ்ந்தார். பைராம்கானின் இளவயது மனைவியான சலீமா சுல்தான் பேகத்தை அக்பர் கி.பி.1561 செப்டம்பரில் மணந்துகொண்டார். பைராம்கானின் மறைவுக்கு பின்னால் மஹம் அகங்காவின் செயல்கள் எல்லை மீறி இருந்தது. அந்த நேரத்தில் அக்பர் அவரின் சொற்படி கேட்டு நடப்பவராக இருந்தார்.
பின்னர் இராஜ்ய விரிவாக்கத்தில் ஈடுபட போர்களில் இறங்கினார். குவாலியரை வென்று பின்னர் ஜான்பூரையும் கைப்பற்றினார். அந்த நேரத்தில் மாள்வா (இன்றைய மத்திய பிரதேசம்) பகுதியை ஆண்ட பாஜ் பகதூர் மதுவிலும் இசையிலும் பெரு ரசிகன். அவரது மனைவி பேரழகி "ரூப்மதி". இந்த மாள்வா போருக்கு மஹம் அகங்காவின் மகனான ஆதம் கான் தளபதியாக சென்றார். மாள்வாவை கைப்பற்றிய பின்னர் அங்குள்ளவர்களை கொன்று குவித்தார். பாஜ் பகதூர் தப்பி சென்று மொகாலய அவையில் அக்பரிடம் அடைக்கலம் புகுந்தார். பின்னர் மொகலாய அரசவையில் மன்சப்த்தாராக ஆனார். இவ்வாறு மாள்வாவும் அக்பரின் கீழ் வந்தது. ரூப்மதியை கைப்பற்ற நினைக்கும்முன் அவர் விஷம் குடித்து மரணமடைந்தார். பாஜ் பகதூர் மரணமடைந்தவுடன் உஜ்ஜையினியில் ரூப்மதி அடக்கம் செய்யப்பட்ட குளத்தின் அருகிலையே அவரும் அடக்கம் செய்யப்பட்டார். கொள்ளையடித்த பொருட்களை அக்பரிடம் அனுப்பாமல் தன் வசம் வைத்துக்கொண்டான். இதனால் கோபமடைந்த அக்பரை அவன் தாய் சமாதானப்படுத்தி அக்பரிடம் மன்னிப்பு கேட்க வைத்தாள். பின்னர் 2 அழகிகளை அக்பருக்கு தெரியாமல் தன் அந்தப்புரத்தில் வைக்க அது அக்பருக்கு தெரிந்து அவர்களை அனுப்பி வைக்க உத்தரவிட அவன் தாய் தங்கள் குட்டு வெளிப்படும் என்று பயந்து அந்த அழகிகளை கொன்று புதைத்ததும் அக்பருக்கு தெரிந்து அவர்களை மன்னித்தார். இந்த காலகட்டத்தில் தன்னை தலைமை அமைச்சராக மஹம் அகங்கா நினைத்துக் கொண்டிருந்த வேளையில் காபூலில் இருந்து ஷாம்ஸ்-உட்-தின்கான் என்பவரை வரவழைத்து அரசியல் நிதி மற்றும் படையின் பொறுப்புகளை கொடுத்தார். கி.பி.1561 மே மாதத்தில் அக்பர் தூங்கிக்கொண்டிருந்த அடுத்த அறையில் விவாதத்தில் இருந்த தலைமை அமைச்சரை ஆதம்கான் வெட்டி கொன்றான். சத்தம் கேட்டு எழுந்து வந்து அக்பர் அமைச்சரின் உடலை சடலமாக கண்டு வாளை உருவ அவரிடமிருந்து வாளை பிடுங்க ஆதம் கான் முயற்சித்தான். அவனை தன் கையினால் முட்டி தள்ளி விழச்செய்த அக்பர் அவனை மேல் மாடியிலிருந்து தலைகுப்புற வீசச்செய்து மரண தண்டனையை உடனே வழங்கினார். இந்த நிகழ்வை கேட்ட ஆதம் கானின் தாயார் மஹம் அகங்கா தனது அறையில் அடைபட்டு அழுதுகொண்டே இருந்தார். இந்த நிகழ்வினால் மனநலம் பாதிக்கப்பட்டு அறையினிலையே கூச்சல் எழப்பிக்கொண்டேயிருந்து அவர் மகன் இறந்த 6 வாரங்களில் அவளும் மரணமடைந்தார். முதலில் பைராம்கான் பின்னர் மஹம் அகங்கா ஆகியோரின் கைப்பாவையாக ஆண்ட அக்பர் இந்த நிகழ்வுக்கு பிறகு யாருடைய பிடியையும் தன்னுடைய ஆட்சியில் தொட விடவில்லை. அபுல் பாஸலின் வார்த்தையின் படி அக்பர் இதன் பிறகு தான் திரையில் இருந்து தோன்றுகிறார்.
கி.பி.1562ல் ஜெய்ப்பூர் இளவரசியை மணந்த பின்னர் தான் அந்நிய நாட்டு படையெடுப்பாளர் என்ற முத்திரை மறைந்தது. இந்த நேரத்தில் தான் குவாலியரை சேர்ந்த ராம்தானு பாண்டே என்ற "தான்சேன்" என்ற இசைமேதை அக்பரின் அவைக்கு வந்து சேர்ந்தார். இவர் இசை பாடி மழையை வரவழைத்ததாகவும் ராகங்களினால் தீபத்தை ஏற்றியதாகவும் செய்திகள் உள்ளது. ஏப்ரல் 26, 1586ல் மனமுருகி பாடி தீபம் ஏற்றியதில் கட்டுக்கடங்காமல் தீ பரவிய விபத்தில் இவர் மரணமடைந்ததாக குறிப்புகள் உள்ளது. மற்றொரு இந்து பாடகரான மகேஷ் தாஸ் என்ற "பீர்பால்" அக்பரின் நெருங்கிய நண்பராக மாறினார். அக்பர்-பீர்பால் கதைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. கி.பி.1563ல் மதுராவில் கூடாரமிட்டு வேட்டையாடி வந்த நேரத்தில் இந்துக்களின் பண்டிக்கைகள் மீது விதிக்கப்பட்ட வரியையும் ஜிசியா வரியையும் நீக்கி உத்தரவிட்டு அந்த உத்தரவு தந்த நிம்மதியால் மதுராவிலிருந்து ஆக்ராவுக்கு 36 மைல்கள் ஓரே நாளில் நடந்தே வந்து சேர்ந்தார்.
கோண்டூகளின் அரசியாக இருந்த துர்க்காவதி புலியையே ஒரே அடியினால் வீழ்த்தியவள். மக்களால் நேசிக்கப்பட்டு நல்லாட்சி நடத்திய இவளுக்கு எதிரான போரில் அக்பர் அஸப்கானை அனுப்ப போரில் துர்க்காவதி தோற்கடிக்கப்பட்டார். எதிரிகளின் கையில் பிடிபடாமலிருக்க வீரப்போர் புரிந்து அம்புகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அஸப்கான் பெரும் சொத்துகளை கொள்ளையடித்து தானே வைத்துக்கொண்டான்.
கி.பி.1567ல் இராஜபுத்திரர்களின் மேவாரின் தலைநகர் சித்தூர் மீது படையெடுத்தார். அந்த நேரத்தில் ராணா உதய்சிங் தளபதி ஜெய்மல் ரத்தோர் தலைமையில் படைகளை விட்டுவிட்டு உதய்ப்பூருக்கு தப்பிவிட்டார். கோட்டையின் சுவர் மீது ஏற முயன்ற மொகலாய வீரர்களை வெட்டி வீழ்த்தி கோட்டையை காத்தார். பல மாத முற்றுகைக்கு பின்னர் ஒரு நாள் அக்பர் துப்பாக்கியால் ஒரு வீரனை சுட்டு வீழ்த்திய பின்னர் தான் தெரிந்தது அது தளபதி ஜெய்மல் ரத்தோர் என்று. கோட்டையில் பல இடங்களில் தீப்பற்றி எரிந்தது. கூச்சல் குழப்பம் எழுந்தது. அப்போது அக்பர் முகலாயர்களின் படையில் இணைந்திருந்த "பகவான் தாஸ்" என்ற இராஜபுத்ர இளவரசனை வினவ அவர் தளபதி இறந்துவிட்டால் வீரர்கள் அவர் தம் குடும்பங்களை கொன்றுவிட்டு வீரப்போர் புரிவார்கள் என்று சொல்லியபின் கோட்டை கதவுகளை திறந்து 8000 இராஜபுத்ரர்கள் வீரப்போர் புரிந்து மாண்டனர். இந்த போரில் வீரம் காட்டிய ஜெய்மல் ரத்தோர் மற்றும் அவரது 16 வயது மகனான பட்டா மற்றும் வீரப்போர் புரிந்து வீராங்கனையான அவனின் இளம் மனைவிக்கும் அவர்களின் வீரத்திற்காக டெல்லியில் சிலை வைத்து கெளரவித்தார் அக்பர். சித்தூருக்கு அடுத்து ரன்தாம்பூர், கலிஞ்சர் கோட்டைகளை அக்பர் கைப்பற்றினாலும் மேவார் வீழ்ந்து விடவில்லை. உதய்ப்பூரிலிருந்து ராணா உதய்சிங் அரசாண்டார். அவர் கி.பி.1572ல் மறையவே இன்னொரு சிங்கம் மேவாரின் அரியணையில் அமர்ந்தது. மாவீரனான ராணா பிரதாப் சிங் என்ற அந்த சிங்கம் கடைசி வரை போர்தொடுத்து கொண்டு இருந்தார். அக்பர் ராணா பிரதாப் சிங்கின் வீரத்தை மதித்து அவருடன் சமாதானமாக போக விரும்பினார். அதற்காக தன் தளபதியான இராஜபுத்ர வம்சத்தை சேர்ந்த இராஜா மான் சிங்கை பேச்சுவார்த்தைக்கு விருந்து என்ற பெயரில் அனுப்பினார். மொகலாயர்களுடன் சம்பந்தம் கொண்ட எவருடனும் சேர்ந்து சாப்பிடுவதில்லை என்ற கொள்கை கொண்ட ராணா பிரதாப் சிங் விருந்துக்கு தன் மகன் அமர் சிங்கை அனுப்பிவைத்தார். இப்படிக்கு இராஜா மான் சிங் ராணா பிரதாப் சிங்கிற்கு உறவினரும் கூட. தன்னை அவமானப்படுத்தியதாக நினைத்த இராஜா மான் சிங் அக்பரின் படைகளுடன் ராணா பிரதாப் சிங்கை ஹல்திகாட் என்ற போர்களத்தில் சந்தித்தார். ராணா பிரதாப் சிங்கினால் மான் சிங் தலைமையிலான முகலாயப்படையை சமாளிக்க முடியவில்லை. யானை மீது இருந்து போரிட்ட மான் சிங்கின் மீது பிரதாப் சிங் எறிந்த ஈட்டியில் மயிரிழையில் உயிர்தப்பிய மான் சிங் ஆக்ரோஷமாக பிரதாப் சிங்கை குறிவைத்து தாக்க இடையில் புகுந்த பிரதாப்பின் சகோதரர் சக்தி சிங் தன் உயிரை கொடுத்து பிரதாப் சிங்கை காப்பாற்ற சேதக்குடன் போர்களத்திலிருந்து படுகாயமுற்று சுயநினைவின்றி வெளியேறினார். படுகாயமுற்ற பிரதாப் சிங்கை பத்திரமான இடத்தில் சேர்த்த பின் சேதக் தனது காயங்களால் உயிரை விட்டது. இன்றும் உதய்ப்பூரில் ராணா பிரதாப் சிங்கின் அருங்காட்சியகத்தில் சேதக்கிற்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஹல்திகாட் போரில் தோல்வியுற்றாலும் பிரதாப் சிங் விரைவில் சித்தூரை தவிர மற்ற பகுதிகளை எல்லாம் மீட்டார்.
பல திருமணங்கள் புரிந்தாலும் அக்பருக்கு வாரிசுக்கு மகன் இல்லை என்ற ஏக்கம் இருந்தது. இரட்டை குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டது. மேலும் பல குழந்தைகள் பிறந்து இறந்தன. ஆக்ராவுக்கு அருகிலுள்ள சிக்ரி என்ற கிராமத்தில் வசித்த ஷேக் சலீம் சிஷ்டி என்ற துறவி உனக்கு 3 மகன்கள் பிறப்பார்கள். கருவுற்ற பின்னர் குழந்தை பிறக்கும் வரை இந்த கிராமத்தில் அவர்கள் தங்கி குழந்தை பிறப்பை ஏற்கவேண்டும் என்று கூற முதலில் மரியம் உல்-ஜர்மானி கருவுற்று கி.பி.1569 ஆகஸ்டில் மகன் பிறந்தார். அவருக்கு துறவியின் பெயரான சலீம் (பின்னாளில் இவர் ஜஹாங்கீர் என்ற பெயரில் அரியணை ஏறினார்) பெயரை வைத்தார். அடுத்தது மூன்று மாதங்களில் காணும் சுல்தான் பேகம் என்ற மகள் பிறந்தார்.அடுத்த வருடம் கி.பி.1570 மே மாதத்தில் பீவி கெய்ரா என்ற ராணிக்கு முராட் மிர்ஸாவும் அடுத்து கி.பி.1572ல் பீவி மரியம் என்ற ராணிக்கு தானியேல் மிர்ஸாவும் பிறந்தனர். மூத்த மகன் பிறந்த சந்தோஷத்தில் சிக்ரி கிராமத்தை முன்னேற்ற கட்டிடங்கள் அரண்மனைகள் மற்றும் வீடுகள் கட்டி "பதேஃபூர் சிக்ரி" என்ற புது நகராக கி.பி.1569ல் ஆரம்பித்த வேலைகள் கி.பி.1571ல் முடிந்து பதேஃபூர் சிக்ரி அக்பரின் ஆட்சியில் தலைநகராக செயல்பட தொடங்கியது. இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட வேண்டும். கி.பி.1577ல் லாகூரில் முகாமிட்டு இருந்த நேரத்தில் தான் துருக்கியரான "கியாஸ்சுதீன் பெக்" இவரிடம் வேலை கேட்டு சந்தித்தார். இவரின் மகள் தான் பின்னாளில் ஜஹாங்கீரின் 20வது மனைவியாகி மொகலாய பேரரசை தன் கண்ணசைவில் நடத்தி காட்டி நூர்ஜஹான் என்ற மெஹருன்னிஸா. கியாஸ்சுதீன் பெக்கின் மகனின் மகள் தான் பின்னாளில் உலகம் இன்றும் நினைவில் வைத்திருக்கும் ஷாஜஹானின் மனைவியான பேகம் மும்தாஜ் மஹால். இவரின் நினைவாக தான் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் "தாஜ்மஹால்" கட்டப்பட்டது. மும்தாஜ்க்கு நூர்ஜஹான் அத்தை முறை.
கி.பி.1572ல் கடல் வாணிகம் சிறந்த குஜராத் பகுதிகளை வெல்ல படைகளை அனுப்பினார். அகமதாபாத்தை ஆண்ட முசாபர் ஷா ஒடி ஓளிந்து கொண்டார். பின்னர் அக்பரிடம் பணிந்த இவரின் அரசை நிர்வாக ரீதியில் அவரே ஆள பணித்தார். காம்பே வளைகுடாவில் தான் முதன்முதலில் கடற்பயணம் செய்ததாக கூறப்பட்டாலும் கடற்பயணத்தின் அனுபவங்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. இந்த சமயத்தில் பீரங்கிகள் பொருத்தப்பட்ட 200 போர்த்துகீசிய கப்பல்களை கண்டது தான் அவருக்கு ஆர்வத்தை உண்டாக்கியிருக்கலாம். பின்னர் அடுத்த ஆண்டில் கி.பி.1573ல் சூர்த்தை முற்றுகையிட்டார். 4 மாதத்தில் பேச்சுவார்த்தையில் சூரத் சரணடைந்த பின் அங்கிருந்து கிளம்பி தலைநகருக்கு வந்தார்.
கி.பி.1574ல் ஷேக் முபாரக் என்பவரின் இளைய மகனான "அபுல் பாஸல்" அரசவைக்கு வந்தார். அது முதல் அவர் அக்பரின் நெருங்கிய நண்பராகவும் அவரின் மனசாட்சியாகவும் அவரது சுயசரிதையான "அக்பர்நாமா"வை எழுதிய ஆசிரியராகவும் அவரின் கடைசி காலம் வரை இருந்தார். ஷேக் முபாரக்கின் மூத்த மகனான பைய்சி ஒரு கவிஞராகவும் இளைய மகன் அபுல் பாஸல் அறிஞராகவும் விளங்கினார். இந்த ஷேக் முபாரக் தான் அக்பருக்குள் இருந்த இறை தேடல் உணர்வை தூண்டி விட்டவர். எல்லா மதங்களிலும் இருந்த நல்ல கருத்துகளை கொண்ட "தீன் இலாஹி" என்ற புதிய மதத்தை பின்னாளில் அக்பர் ஆரம்பித்தார். அபுல் பாஸலும் அக்பருடன் இணைந்து தீன் இலாஹியை பின்பற்றினார். பதேஃபூர் சிக்ரி அரண்மனையில் அபுல் பாஸலுக்கு தனி வீடு ஒதுக்கி தந்தார். ஏசு சபையினரால் கிறிஸ்தவத்தின் புனித நூலான பைபிளையும் அதன் தத்துவங்களையும் கற்று தேர்ந்தார். ஜொராஷ்டிரியர்களின் போலவே சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தையும் மேற்கொண்டார். கி.பி.1578ல் சீனாவிலிருந்து புத்த மத ஆசிரியர்கள் அக்பரின் அவைக்கு விஜயம் செய்தனர். சீக்கிய மதம் அக்பரிடத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் சீக்கியர்களை நல்ல முறையில் நடத்தினார். சீக்கியர்கள் குருவான "குரு அர்ஜீன் தாஸ்" இறை தூதரையும் இந்து கடவுளையும் பழித்துரைப்பதாக குற்றம் சாட்டப்பட்டபோது அவர் எந்தவித தவறாகவும் பேசவில்லை எழுதவில்லை என்று அவருக்கு துணைநின்றார். சமண புத்த மதங்கள் இஸ்லாம் ஜொராஷ்டிரியம் இந்து மதம் மற்றும் கிறிஸ்தவத்தின் அனைத்து தத்துவங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது தான் அக்பரின் புதிய மதமான தீன் இலாஹி. அக்பரின் காலத்தில் அபுல் பாஸல் முதற்கொண்டு 50 நபர்களால் பின்பற்றப்பட்ட இம்மதம் அக்பரின் மரணத்துடன் மரணித்தது. கிறிஸ்தவத்தை ஆர்வமாக கற்றதனால் அக்பரை எளிதாக கிறிஸ்தவராக மதம் மாற்றி விடலாம் என்று நினைத்த ஏசு சபையினருக்கு பின்னால் அது மிகவும் கஷ்டம் என்பதும் காலப்போக்கில் அவரே புதிய மதத்தை ஆரம்பித்தது ஏமாற்றத்தையும் தந்தது. ஜரோப்பாவுக்கு தூதுக்குழு அனுப்பும் திட்டம் கி.பி.1583ல் தோல்வியுற்றாலும் பிரிட்டிஷ் மகாராணி இவருக்கு "ஜான் நியுபெரி" என்ற வணிகரை தூதனுப்பினார். பின்னர் 17 வருடங்கள் கழித்து கி.பி.1600ல் "ஜான் மில்டன் ஹால்" என்பவரை தன் தூதுவராக எலிசபெத் மகாராணி அனுப்பினார்.
பேரரசை விரிவுபடுத்தும் முயற்சியில் சிந்துவும் காஷ்மீரையும் தன் பேரரசுடன் இணைக்க ஆசைப்பட்டார். இந்த காஷ்மீர் போரில் பெரிய இழப்புடன் தனது நெருங்கிய நண்பரான பீர்பாலையும் மற்றும் 8000 வீரர்களையும் இழந்து கி.பி. 1589ல் காஷ்மீர் பணிய வைக்கப்பட்டது. அக்பரின் மதமான தீன் இலாஹியை பின்பற்றிய ஒரே இந்து பீர்பால் மட்டுமே. இந்த காலகட்டத்தில் அக்பரின் அக்பரின் நண்பர்கள் ஒவ்வொருவராக மரணித்தது அவருக்கு துன்பத்தை விளைவித்தது. கி.பி.1589ல் லாகூரில் இருந்து காஷ்மீர் வந்து பின்னர் காபூல் சென்றடைந்தார். இந்த நேரத்தில் முதன்முதலில் அக்பருக்கு ஆதரவு கரம் நீட்டிய இராஜபுத்ர இளவரசான "பகவான் தாஸ்" மரணமடைந்தார். இவர் குஜராத் போரிலும் சித்தூர் போரிலும் அக்பருடன் இணைந்து போரிட்டவர். அடுத்தது சாதாரண எழுத்தராக இருந்து பின்னர் பிரதம மந்திரியான "இராஜா தோடர் மால்"லின் இறப்பும் அக்பரை காயப்படுத்தியது. கி.பி.1591ல் பைராம் கானின் மகனான அப்துல் ரஹீம் தலைமையில் சிந்து கைப்பற்றப்பட்டது. அடுத்த ஆண்டு கி.பி.1592ல் ஒரிசா கைப்பற்றப்பட்டது. கி.பி.1595-96ல் பலுசிஸ்தானும் கந்தஹாரும் அக்பரது பேரரசுடன் இணைக்கப்பட்டது. இந்த காலத்தில் அக்பரின் இரண்டாவது மகனான முராட் மிதமிஞ்சிய குடியிலும் போதைப்பழக்கத்திலும் விழந்தார். இவர் மற்றும் அப்துல் ரஹீம் தலைமையில் அகமது நகர் மீது 1595-96ல் படையெடுப்பு நடந்தது. பின்னர் அகமது நகரின் அரசியான "சந்த் பீவி" அக்பரின் படைகளை எதிர்த்து போரிட்டார். பின்னர் முராட் இவருடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டார். இந்த நேரத்தில் அக்பர் லாகூரில் இருந்தார். கடும் பஞ்சமும் ப்ளேக் நோயும் வட இந்திய பகுதிகளை ஒரு வழி ஆக்கியது.
கி.பி. 1599ல் முராட் மிதமிஞ்சிய போதையினால் வெறிபிடித்து இறந்து போனார். அக்பர் சலீம் (ஜஹாங்கீர்) பொறுப்பில் ஆக்ராவை ஒப்படைத்துவிட்டு தெற்கே வந்து பர்ஹான்பூரை கைப்பற்றினார். பின்னர் அகமது நகர் கைப்பற்றப்பட்டது. இதில் சந்த் பீவி கொல்லப்பட்டார். தனது மூன்றாவது மகன் தானியேல் மிர்ஸா பொறுப்பில் அகமது நகரை ஒப்படைத்தார். தானியேலும் முராட் பாதையிலையே பயணித்து குடித்தே இறந்து போனார். சலீம் கூட மிதமிஞ்சிய அளவுக்கு குடித்தாலும் தன்னை கட்டுப்படுத்தி கொள்ளும் தன்மை இருந்ததால் அவர் மட்டுமே அக்பரின் வாரிசாக மிஞ்சி இருந்தார்.பின்னர் கி.பி.1600ல் மத்திய பிரதேசத்திலுள்ள அசிர்கார் கோட்டையை கைப்பற்ற அபுல் பாஸலின் தலைமையில் தொடங்கிய முற்றுகை பலமாதங்கள் நீடித்தது. ஒரு வழியாக அக்பரே களத்தில் இறங்கிய பின் கோட்டையிலுள்ளவர்களுக்கு கையூட்டு கொடுத்து கோட்டை கதவுகளை திறக்க செய்து அசிர்கார் கோட்டையை கைப்பற்றியது அக்பரின் புகழில் ஒரு கரும்புள்ளியாக மாறிற்று.
கி.பி.1599லிருந்தே சலீமின் அரியணை ஆசை அதிகமாகிக்கொண்டே இருந்தது. கி.பி.1600ல் மேவாரை கைப்பற்ற சலீம்க்கு கட்டளையிட அந்த நேரத்தில் அக்பர் தக்காணத்தில் இருந்தார். இந்த நேரத்தில் ஆக்ராவை கைப்பற்றி அரசனாகலாம் அல்லது கஜானாவை கைப்பற்றி வளப்படுத்திக் கொள்ளலாம் என்ற ஆசையினால் ஆக்ரா வந்து கொள்ளையிட்டு சென்றார். பின்னர் அலகாபாத் சென்று அங்கும் கஜானாவை கைப்பற்றினார். அக்பர் பேச்சுவார்த்தைக்கு அனுப்பிய குவாஜா முகம்மத் ஷெரிஃப் என்ற அமீர் (இவர் சலீமின் பால்ய சிநேகிதன்) சலீமுடன் சேர்ந்து கொண்டார். கி.பி.1601ல் ஆக்ரா மீது 30000 வீரர்களுடன் படையெடுத்து வர அக்பர் தன் மகனுக்கு தந்தையை பார்க்க என்றால் தனியாக வா. படையெடுத்து வருகிறாய் என்றால் உன்னால் வெற்றி கொள்ளமுடியுமா என்று யோசித்து முடிவெடு என்ற பதில் அனுப்ப சலீம் பயந்து போய் திரும்பினார். அக்பர் அவரை உடனே வங்காளம், ஒரிஸாவுக்கு ஆளுநராக நியமித்தாலும் அலகாபாத்திலையே இருந்து கொண்டு தன் பெயரில் நாணயங்கள் வெளியிட்டு அக்பருக்கு அனுப்பி வைக்க அக்பர் கோபப்படாமல் உன் கலைநயத்தை பாராட்டுகிறேன் என்று செய்தி அனுப்பினார். கி.பி.1602ல் அபுல் பாஸலை அலகாபாத்க்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார். அபுல் பாஸலுக்கும் சலீம்க்கும் சுமூகமான உறவுகள் இல்லை. ஆக்ராவுக்கு திரும்பிய வழியில் சலீமின் கட்டளைப்படி மத்திய பிரதேசத்தின் பீர் சிங் பண்டேலாவால் அபுல் பாஸல் கொல்லப்பட்டார். அபுல்பாஸனின் தலை தனியே எடுத்து சலீம்மிடம் காட்டப்பட்டது. அக்பர் மனதளவில் நொறுங்கி போனார். சலீம் அதற்கு பதிலாக என்னை கொன்று போட்டிருக்கலாமே என்று உற்ற நண்பனின் பிரிவினால் புலம்பியபடி இருந்தார். அந்த கொள்ளைகாரனை பிடிக்க படையனுப்ப அவன் மாள்வாவுக்கு (மத்தியப்பிரதேசம்) தப்பி ஓடி தன்னை காத்துக் கொண்டான். அக்பர் நாமாவில் அபுல் பாஸலுக்கு பிறகு 1602-1605 வரையுள்ள குறிப்புகள் "முகம்மது சலீஹ்" என்பவரால் எழுதப்பட்டு இணைக்கப்பட்டது. பின்னர் அக்பரின் இரண்டாவது மனைவியான சலீமா சுல்தான் பேகம் (பைராம்கானின் விதவை மனைவி) அலகாபாத்தில் சலீமை சென்று சந்தித்து சமாதானப்படுத்தி பதேஃபூர் சிக்ரிக்கு அழைத்து வந்து அக்பரிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். அக்பர் தனது தலைப்பாகையை கழட்டி சலீம்முக்கு அணிவித்து அவர் தான் அடுத்த அரசர் என்று சொல்லாமல் சொன்னார். பிறகு பதேஃபூர் சிக்ரியில்
சிலநாள் தங்கியிருந்த சலீம்மை மேவாரை அடக்க அனுப்ப அவர் அலகாபாத் சென்று தங்கிக்கொண்டு குடி கூத்து என்று கும்மாளமிட அக்பர் வெறுத்து போனார். இதற்கிடையில் அக்பரின் தாயாரான ஹமீதா பானு பேகம் இறந்தார். தாயின் பிரிவால் தலை, மீசை, தாடி மற்றும் புருவங்களை அக்பர் மழித்துக் கொண்டு அன்னைக்கு அஞ்சலி செலுத்தினார். ஆக்ராவிலுள்ள ஹீமாயூன் சமாதியில் அன்னை தன் தந்தைக்காக அமைத்த கல்லறையின் அருகிலையே அவருக்கும் நினைவிடம் அமைத்தார்.பாட்டியின் மீது மிகுந்த அன்பு கொண்ட சலீம்மை ஆக்ராவுக்கு வரவழைத்த அக்பர் தனியறையில் மகனை வெளுத்து வாங்கியதாகவும் அரண்மனை வைத்தியர் சாலிவாஹனின் கட்டளைப்படி போதை பொருட்கள் சலீம் பக்கமே வரவிடாமல் செய்தார். இதன் பிறகே சலீமின் ஆட்டம் அடங்கியதற்கு எனக்கு பின் இந்த இராஜ்யத்தை பார்க்க எனக்கு மகனான நீ மட்டுமே இருக்கிறாய் என்ற அக்பரின் பேச்சு உருக்கமான மட்டுமே காரணமாக இருந்திருக்கலாம். இந்த நிகழ்வு உண்மையில் நடந்ததா என்று தெரியவில்லை? ஆனால் இதற்கு பின் சலீம் அக்பர் மரணமடையும் வரை அதே வருடம் கி.பி.1605 அக்டோபர் 27வரை ஒழுங்காக இருந்தார். மூன்று வாரங்கள் வயிற்றுப்போக்கு கடும் காய்ச்சல் என்று ஆளே சேர்ந்து போயிருந்த நேரத்தில் அரசவையினர் எல்லாம் சலீம்மின் மகன் குஷ்ரூவை அரசனாக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தனர். அக்டோபர் 21ல் தந்தையை சந்திக்க வந்த சலீமிடம் தனது தலைப்பாகையை கழட்டி அவர் தலையில் வைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். அக்டோபர் 27ல் தனது 63 வயதில் மறைந்த அக்பருக்காக ஆக்ரா அருகிலுள்ள சிக்கந்தராவில் கல்லறை எழுப்பப்பட்டது. அதன் வேலைகள் 6 ஆண்டுகள் நீடித்து 1611ல் முடிந்தது. அக்பர் இருக்கும் வரை புகழுடன் இருந்த தீன்-இலாஹியும் அவரின் தலைநகரமாக பதேஃபூர் சிக்ரியும் அவருக்கு பின் கேட்பாரற்று போயின. தீன் இலாஹி யாரும் பின்பற்றாமலையே அழிந்து போனது. பதேஃபூர் சிக்ரியை அடுத்த வந்தவர்கள் காலி செய்ததால் மக்கள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிற்று. குடி நீர் பிரச்சினை காரணமாக பதேஃபூர் சிக்ரியை காலி செய்திருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் சொன்னாலும் இன்றும் பதேஃபூர் சிக்ரியில் நிலத்தடி நீர்மட்டம் நல்ல அளவிலையே உள்ளது என்று சிலர் மறுக்கிறார்கள்.
7 வகையான மாம்பழ வகைகளுடன் பீஹார் மாநிலத்தில் தார்பங்கா என்ற இடத்தில் ஒரு லட்சம் மாமரங்களை அக்பர் வளர்த்தார். இந்த தோட்டத்திற்கு "லக்கி-பாக்" என்று பெயர். அதற்கு அர்த்தம் ஒரு லட்சம் மரங்களை கொண்ட தோட்டம் என்று அர்த்தம். பூக்கள் மலர்களுக்காக "ஷாலிமார் தோட்டம்" என்ற பெயரில் பூங்கா அமைத்தார்.
அக்பர் அவையை அலங்கரித்த 9 அறிஞர்களை "நவரத்னா" என்று அழைத்தார்கள். அவர்களாவது
1) அபுல் பாஸல் (அக்பர் நாமா, அயினி அக்பரி எழுதியவர்)
2) அப்துல் ரஹீம் (பைராம் கானின் மகன்)
3) பீர்பால் (நகைச்சுவை கதைகளில் பேர் பெற்றவர். இயற்பெயர் மகேஷ்தாஸ்)
4) முல்லா தோ-பியாஸா
5) ராஜா மான் சிங்
6) ராஜா தோடர் மால்
7) பக்கீர் அஸோதீன்
8) தான்சேன் ( ராகம் பாடி மழையை வரவழைத்த இசை மேதை)
9) ஃபைய்ஸி
உதவிய நூல்கள்:
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
மொகலாயர்கள் - முகில்
மொகலாயர் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்
மத்திய கால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா
பாபர் - ஸ்டேன்லி லேன் ஃபூல்
அக்பர் - லாரன்ஸ் பின்யான்
அக்பர் - என்.சொக்கன்
எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்
விக்கிபீடியா தகவல்கள்
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்
இதய ரோஜா - இந்து சுந்தரேஷன்



Comments
Post a Comment