5) முற்கால பாண்டிய பேரரசு

முற்கால பாண்டிய பேரரசு

இந்திய வரலாற்றில் குறிப்பாக வட இந்தியாவில் எப்படி முதல் பேரரசாக மெளரியப்பேரரசு இருந்ததே அதற்கு முன்பே தென்னிந்தியாவில் 3 பேரரசுகள் தோன்றிவிட்டது. இந்த 3 பேரரசுகள் எவையென்றால் சேர, சோழ மற்றும் பாண்டியர்கள் தான். அதிலும் எந்த இந்திய பேரரசுகளுக்கும் இல்லாத ஓரு பெரிய நீண்ட வரலாறு இந்த பாண்டியர்களுடையது. பாண்டியர்கள் சந்திர குலத்தவர்கள்.‌சந்திரனின் மகன் புதன். புதனின் மகனான புரூரவஸ் பல மன்னர்களை வென்று இரண்டு மீன்களை இமயத்தில் பொறித்ததாகவும் அதனால் தான் பாண்டியர்களின் சின்னம் மீன் என்றும் அகத்தியர் வழி வழியாக பாண்டிய மன்னர்களுக்கு புரோகிதம் செய்து வந்ததாகவும் ஒவ்வொரு பாண்டிய மன்னரின் பட்டாபிஷேகத்தில் கிரீடத்தை சூட்டுவது அகத்திய முனிவர் தான் கூறுகிறது. இந்திரனுடன் போர் செய்து சமாதானம் செய்து கொண்ட பின்னர் பாண்டிய மன்னர் ஒருவருக்கு இந்திர ஆரத்தை பரிசளித்தாகவும் செப்பேடுகள் கூறுகின்றன. இந்த பாண்டியர்களின் கிரீடத்தையும் இந்திர ஆரத்தையும்  தான் கி.பி.10ம் நூற்றாண்டில் சோழர்களிடம் அரசை இழந்த போது சிங்களவர்களிடம் பாதுகாப்பாக இலங்கையில் மறைத்து வைத்தனர். பின்னர் ராஜராஜ சோழன் காலத்தில் அது மீட்கப்பட்டு சோழர் வசம் வந்தது என்று கூறினாலும் என்றும் இராஜேந்திரர் காலத்தில் தான்  மீட்கப்பட்டது. அதன் பிறகே தன் மகன்களுள் ஒருவரை பாண்டிய மன்னன் அரியணையில் அமர்த்தினார் என்றும் கூறுவர். இராமாயணத்தில் சீதையை தேடி வானரங்கள் செல்லும்போது கபாடபுரத்தை (காவாடம்) பற்றி வரிகள் வருகிறது. மகாபாரதத்தில் திரெளபதியின் சுயம்வரத்தில் பாண்டியர் ஒருவர் கலந்து கொண்டதாகவும்  பாண்டவர்கள் சார்பாக மகாபாரதப் போரில் கலந்துகொண்டு துரோணரை எதிர்த்து போரிட்டதாகவும் அர்ஜூனன் தீர்த்த யாத்திரையின் போது பாண்டியர் மகளை மணந்து கொண்டதாகவும் குறிப்புகள் உள்ளது. சாணக்யர் தனது அர்த்தசாஸ்திரத்தில் இருப்பதிலையே சிறந்த முத்து பாண்டிய நாட்டு காவாட (கபாடபுரம்) முத்து தான் என்று கூறுகிறார்.காளிதாசரின் ரகுவம்சத்தில் கூட பாண்டியர்களை பற்றிய குறிப்புகள் உண்டு. அசோகரின் கல்வெட்டுகளிலும் பாண்டியர்களை பற்றி குறிப்புகள் உள்ளது. இலங்கையின் பழைய சரித்திரத்தை விளக்கும் "மகாவம்சம்" புத்தரின் நிர்வாண காலமாகிய கி.மு.478ல் இலங்கையை ஆட்சி செய்த விசயன் என்ற மன்னன் பாண்டியர் குல பெண்ணை மணந்த விவரத்தை குறிப்பிட்டுள்ளது. இருப்பதில்லையே மிகவும் பழுமையானவர்கள் தான் பாண்டியர்கள். பண்டையவர்கள் (பழமையானவர்கள்) என்ற பெயரே பாண்டியர்கள் என்று மருவியதாக கூட சொல்லுவார்கள். 

கி.பி. எட்டாம் நூற்றாண்டு நூலான "இறையனார் களவியல் உரை" 3 தமிழ்சங்கங்கள் இருந்து அதன் மூலம் தமிழை வளர்த்த நிகழ்வுகளை சொல்லிருக்கிறது. அதன்படி பார்த்தால் முதலாவது தமிழ்ச்சங்கம் கடல் கொண்ட தென்மதுரையில் நடைபெற்றது. இதில்  89 பாண்டிய மன்னர்களின் பெயர்களும் பின்னர்  கடல் கொண்ட கபாடபுரத்தில் நடந்த இரண்டாவது தமிழ் சங்கத்தில் 59 பாண்டிய மன்னர்களும்  தற்போதைய மதுரை மூதூரில் நடந்த மூன்றாவது தமிழ்ச்சங்கத்தில் 49 பாண்டிய மன்னர்களும் கலந்து கொண்டதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. 3வது தமிழ் சங்கத்தில் தான் தற்போதைய தமிழ்நூல்களில் பழமையான தொல்காப்பியம் மன்னர் நிலந்திரு திருவிற்பாண்டியன் அவையில் தமிழ் மன்னர்களின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டதாம்.இதிலிருந்து பாண்டிய மன்னர்களின் தொன்மையை அறிந்து கொள்ளலாம். உலகில் அதிக ஆண்டுகள் நிலைத்து நிலைபெற்ற அரசு பாண்டியர்களுடையது தான் என்பதிலிருந்து அவர்களின் சிறப்பை அறிந்து கொள்ள முடியும். தொடர்ந்து ஏற்பட்ட கடல் கோள்களால் தம் இடத்தை விட்டு நீங்கி தற்போது வட மதுரையை தலைநகராக (தென் மதுரை கடல் கொண்ட குமரி கண்டத்தில் கடற்கோளால் அழிந்துபோயிற்று) கொண்டு ஆண்டு வந்தனர். குமரி கண்டம் தற்போதையஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர் வரை பரவியிருந்ததாக கூறினாலும் அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுவதிலிருந்து குமரி கண்டம் என்று ஒன்று தற்போதைய தமிழகத்துக்கு அந்த பக்கம் இருந்திருக்கலாம் என்றும் அது கடலால் கொள்ளப்பட்டது என்று உறுதியாக கூறலாமே தவிர‌ பெரிய நிலப்பரப்பு அளவில் உறுதியில்லை. ஏனெனில் குமரி கண்டத்தில் 48 நாடுகள் இருந்ததாக கூறுவர். நம்முடைய தமிழகத்திலையே அப்போது சேர, சோழ, பாண்டிய, தொண்டை,கொங்கு நாடுகள் என பலவகைப்பட்ட நாடுகள் இருந்ததால் அந்த 48 நாடுகளும் இருந்திருக்கலாமே தவிர அளவில் சிறியதாக தான் இருந்திருக்க கூடும் என்றே நினைக்க தோன்றுகிறது. ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா வரையில் அவ்வளவு பெரிய நிலப்பரப்பு இருந்திருக்க கூடும் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. சங்ககாலம் ஆரம்பம் எது என்று தற்சமயம் வரையறுக்கப்படவில்லை. ஆனால் சங்ககாலம் முடிவு கி.பி.300 என்று வரையறுத்திருக்கிறார்கள். ஆரம்பம் கி.மு.300 என்று சொல்லுவது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. பாண்டியர்களுடைய சின்னம் மீன். அவர்களின் பூ - வேம்பூ. தலைநகர் கொற்கை (தூத்துக்குடி), மதுரை என்றும் பிற்கால பாண்டியர்கள் மிகவும் சுருங்கி தென்காசியை தலைமையிடமாக வைத்து ஆண்டதால் அவர்கள் "தென்காசி பாண்டியர்கள்" என்றும் அழைக்கப்பட்டார்கள்.


முற்கால பாண்டிய மன்னர்கள் : 

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்:

இவர் சங்க காலத்திற்கு முன்பு ஆண்ட மன்னன். இவரை நெடியோன் என்றும் அழைப்பர். இவர் நீண்ட ஆண்டுகள் 24 ஆண்டுகள் ஆண்டதாக தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். கடலால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர் கடல் தெய்வத்திற்கு இவர் விழா எடுத்ததாக அறியப்படுகிறது. திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்ட "கடல்சுவற வேல்விட்ட படலத்தில்" குறிப்பிடப்பட்ட உக்கிர பாண்டியன் இவரே என்று சிலர் கூறுகின்றனர். அதன்படி கடல் நீர் பொங்கி எழுந்த போது அதன் மேல் இந்த பாண்டியன் வேலை எறிந்ததால் வற்றி போய் இவர் கால்களை கழுவியதாம். அதனால் தான் இவர் "கடல் வடிவலம்ப நின்ற பாண்டியன்" என்று அழைக்கப்பட்டார். இதனால் கடல் கோபம் கொண்டு இவனது நாட்டின் பல பகுதிகளை அழித்து விட்டதால் அதற்கு ஈடாக சேர சோழ நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி கொண்டாராம். இவர் காடுகளையும் மலைகளையும் திருத்தி நிலத்தை மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு அளித்ததால் "நிலந்தரு திருவின் நெடியோன்" என்று அழைக்கப்பட்டார். சாவகத் தீவுகளை (தற்போதைய ஜாவா) வென்று தன் காலடியை பொறித்து வைத்ததால் "சயமா கீர்த்தி" என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி:


இவர் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவர். கடைச்சங்க காலத்திற்கு முன்பே வாழ்ந்தவர். மூத்த குடும்பன் என்பதால் முதுகுடுமி என்ற பெயராலும் பல யாகங்களை நடத்தியதால் "பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி" என்ற பட்டத்தினையும் பெற்றார். இவர் ஆயிரம் வேள்விகளை செய்தவனாக சின்னமனூர் செப்பேடு கூறுகிறது. புறநானூற்று பாடலில் இவர் அரசர்கள் அனைவரின் புறமுதுகு கண்டவர் என்றும் கேட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லாது கொடுக்கும் ஈகை குணம் உள்ளவர் என்றும் சிவ பக்தன் என்றும் கூறப்பட்டுள்ளது. போரிடுவதிலும் அற வழியை கடைப்பிடித்தவர் என்றும் மக்களிடையே கடுமையான வரிகளை விதிக்காமல் நல்லாட்சி செய்த மன்னர் என்று புலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடைச்சங்க கால பாண்டிய மன்னர்கள்:

முடத்திருமாறன்:

இவர் இரண்டாம் கடற்கோளுக்கு முன்பு வாழ்ந்தவர். கடல் கொண்ட கபாடபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டவர். கபாடபுரத்தில் ஆட்சி புரிந்த கடைசி மன்னர் இவரே. கடற்கோளுக்கு பின்னர் தமிழகத்தின் வடக்கே மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையை தலைநகராக கொண்டு ஆண்டவர். இம்மன்னனின் பாடல்களில் இரண்டு சங்க இலக்கியமான நற்றிணையில் உள்ளதாக அறியப்படுகிறது. இவர் பாடலில் கொல்லிமலை குட்டுவனை சுட்டி காட்டுவதால் இருவரும் சம காலத்தவர் என்று அறியமுடிகிறது. இவர் இறையனார் களவியல் காட்டும் முடத்திருமாறன் அல்ல. அவருக்கு பிந்தையர் தான். மதுரையில் கடைச்சங்கத்தை நிறுவியவர் இவரே. மதுரையில் கடைச்சங்கத்தை நிறுவியதால் பற்பல புலவர்கள் தமிழ் ஆராய்ச்சி செய்ய தொடங்கி அரிய செந்தமிழ் நூல்களை இயற்றினர். இசை இயல் நாடகம் ஆகிய முத்தமிழும் வளர்ந்தது. இந்த மன்னர் சிறந்த கவி பாடும் வல்லமை கொண்டவர். இவர் பாடிய பாடல்கள் இரண்டு சங்க நூல்களில் ஒன்றான நற்றிணையில் உள்ளது. பாலை திணையையும் குறிஞ்சி திணையையும் பாடுவதில் இவர் வல்லவர் என்று புகழப்படுகிறார்.

மதிவாணன்:

இவர் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தவர். மதுரை தமிழ் சங்கத்தினை விரிவுபடுத்தி தமிழ் ஆராய்ச்சியை தனது சேவை என்று செய்தவர். இவர் புலவர்களை ஆதரித்து சிறந்த தமிழ் நூல்களை இயற்ற வைத்தார். இவர் நாடக தமிழில் ஈடுபாடு உடையவர் என்பதால் நாடகத் தமிழ் ஒன்றினை இயற்றி "மதிவாணன் நாடகத்தமிழ்" என்று பெயரிட்டார். இந்த நூல் மறைந்து போன நூல்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. 

அறிவுடை நம்பி :

இவர் பாண்டிய குடியில் தோன்றியவர். அரிய கல்வியும் செல்வமும் கொடையும் ஒருங்கே அமைந்த வாழ்வு வாழ்ந்தவர். கோப்பெருஞ்சோழன் காலத்தில் பாண்டியர் நாட்டில் வாழ்ந்த புலவரான பிசிராந்தையார் இவரை பற்றி பொருண்மொழிக் காஞ்சி பாடியிருக்கிறார். தனக்கு நரை,திரை,மூப்பு இல்லாததற்கு காரணமாக பிசிராந்தையார் பல காரணங்களை கூறியவர் "நீதி நெறிமுறை தவறாமல் நடக்கும் அரசனின் ஆட்சியில் இருப்பதுவும் ஒரு காரணம்" என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட நீதிநெறி முறை தவறாத மன்னர் இவரே.பிசிராந்தையார் என்பதன் மூலம் இவ்வரசர் கோப்பெருஞ் சோழனின் சம காலத்தவர் என்று அறியமுடிகிறது.இந்த மன்னர் பாடிய பாடல் நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் ஒன்றும், அகநானாறில் ஒன்றும் புறநானாறில் ஒன்றும் உள்ளது.

பொற்கை பாண்டியன் :

இவர் கடைச்சங்க கால பாண்டிய மன்னன். கீரந்தை என்ற வேதியன் வெளியூருக்கு செல்லும்போது தன் மனைவியிடம் அரசனின் செங்கோல் உன்னை காக்கும் என்று கூறி புறப்பட்டார். இன்னொரு நாள் அவன் தன் இல்லாளுடன் இருக்கும்போது யாரோ ஒருவன் அந்த பெண்மணிக்கு தொல்லை கொடுப்பதாக நினைத்து மன்னன் கதவை புடைத்தனன். வேதியன் மனைவியை சந்தேகமாக பார்க்க அவள் "முன்னொரு நாள் அரசனது செங்கோல் என்னை காக்கும் என்று கூறி சென்றீர்களே. இன்று அந்த செங்கோல் என்னை காவாதோ?" என்று வினவ அரசன் தன் செய்கைக்கு மிகவும் வருந்தி வாளால் தன் கையை வெட்டிக் கொண்டான். பின்னாள் பொன்னால் ஆள பொற்கையை அமைத்துக்கொண்டு ஆட்சி புரிந்தார். சிலப்பதிகாரம் மற்றும் பழமொழி நூல்களில் இந்த செய்கையானது பாண்டியர்கள் நீதி தவறாது ஆட்சி புரிந்தனர் என்று காட்டுகிறது.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்:

இவர் சங்க காலத்து பாண்டிய மன்னர்களுள் ஒருவர். குறுநில மன்னர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற அடைமொழி இவருக்கு உண்டு என்பதினால் ஒல்லையூர் என்ற ஊரை வென்றோ அல்லது அவ்வூரை தானமாகவோ கொடுத்திருக்கலாம் என்று கருதுகின்றனர். புறநானூற்றிலும் அகநானூற்றிலும் இவர் பாடிய பாடல்கள் உள்ளது.இம்மன்னன் மரணமடைந்தவுடன் இவரது மனைவி கோப்பெருங்கோப்பெண்டு "தாய் தந்தை முதலானோரை இழந்தவர்க்கு அம்முறை சொல்லி பிறரை காட்டி அவர் துயரை ஆற்றலாம். கணவரை இழந்தவர்க்கு அங்ஙனம் காட்டுவது இல்லையன்றோ" என்று கூறி "பல்சான்றீரே பல்சான்றீரே" என்னும் பாடலை பாடி சிதையில் ஏறி உடன்கட்டையாக உயிர் துறந்தார். கற்பிற் சிறந்த பெண்மணி என்று இவரை பற்றி புறநானூற்றில் அரிசில் கிழார் மற்றும் பெருஞ்குன்றூர் கிழார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.

இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறன் :

இந்த மன்னனை பற்றி நக்கீரர் புகழ்ந்து பாடியுள்ளார். இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் யவன (கிரேக்கம்) நாட்டிலிருந்து உயர்ரக மது இறக்குமதி செய்யப்பட்டது. பெண் மக்கள் அந்த மதுவை கோப்பையில் ஊற்றி கொடுக்க அரசர் அதை அருந்துவார் என்றும் குறிப்புகள் உள்ளது. அந்த காலகட்டத்தில் மன்னர்கள் ஓய்வெடுக்க வசதியாக பூங்கா பந்தல்கள் நிறைந்த ஊர்கள் இலவந்திகை என்று அழைக்கப்பட்டது. இந்த ஊர்களில் மன்னர்கள் தங்களின் முதுமை காலத்தை கழிப்பார்கள். பாண்டிய நாட்டின் பிரபலமான இலவந்திகை உத்திர கோசமங்கையில் தன் கடைசி காலத்தில் உயிர் நீத்ததால் "இலவந்திகை துஞ்சிய நன்மாறன்" என்று அழைக்கப்பட்டார்.

கடலில் மாய்ந்த இளம் பெருவழுதி :

இவர் இளம் வயதிலையே பேரறிஞ்சராக இருந்ததால் "இளம் பெருவழுதி" என்று பெயர் பெற்றார். கடலில் மாய்ந்த என்ற அடைமொழி வருவதிலிருந்து இவர் கடலில் பயணம் செய்யும்போது கலம் மூழ்கி மரணமடைந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவர் இயற்றிய 2 பாடல்கள் புறநானூற்றிலும் பரிபாடலிலும் உள்ளது. இவர் திருமாலிடத்தில் பேரன்பு கொண்ட மன்னனாக வாழ்ந்தார்.

மாறன் வழுதி:

இவர் கூடகாரத்து துஞ்சிய மாறன் வழுதி என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு அனைவருக்கும் உரியது என்று கூறிய மன்னர்களுடன் அது தனக்கே உரியது என்று போருக்கு அழைத்தவர். போரில் வென்று கொண்டு வந்த செல்வத்தை தன் நாட்டு மக்கள் எல்லோருக்கும் கூவி கூவி கொடுத்து சிவந்தவன் . வடநாட்டு போரினை நடத்தி வடவர்களை நடுங்க வைத்தவன் என்று புறநானாற்று பாடல் 51ல் இவரை பற்றி குறிப்புகள் உள்ளது.

ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்:

இவர் கோவலன் கண்ணகி காலத்தவர் . மிகச்சிறந்த வீரர், இமயம் வரை சென்று ஆரியப் படைகளை முறியடித்ததால் இவருக்கு ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்று பெயர் வந்தது. மிகச்சிறந்த புலவரும் கூட. நீதி நேர்மை தவறாத ஆட்சியாளர். இவரது மனைவி கோப்பெருந்தேவியார். சிலப்பதிகாரம் காட்டும் நெடுஞ்செழியன் இவரே. நீதி தவறி தீர்ப்பு கூறியதால் "யானோ அரசன் யானே கள்வன்" என்று உயிர் விட்டவர். இவரது பட்டத்தரசியும் இவருடனே உயிர் விட்டவர். இப்படிப்பட்ட நீதி நெறி தவறாத ஆட்சியாளர்கள் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழிய பாண்டியனும் ஒருவர்.

சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் :

ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் மரணமடைந்த பின்னர் கொற்கையில் (தூத்துக்குடி) இளவரசனாக இருந்து ஆட்சி புரிந்த இவர் பாண்டிய மன்னனானார். இவரது இயற்பெயர் வெற்றிவேல் செழியன் என்பதாகும். இவரை நெடுஞ்செழியனுக்கு சகோதரன் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை வடிக்க இமயத்தில் கல் கொண்டு வர சென்றபோது இவருக்கு மதுரையில் முடிசூட்டு விழா நடந்தது. முடி சூட்டும் போது நன்மாறன் என்ற பெயரில் முடிசூட்டினார். பெயருக்கேற்பவே எது உண்மை எது பொய் என்று ஆராய்ந்து நீதி நெறி தவறாமல் ஆட்சி புரிந்த பண்பாளன்.இவரது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாடு மழையின்றி வறுமையில் வாடவே அந்த வறுமை நீங்கி மக்கள் இன்புற்று வாழ கண்ணகியின் பொருட்டு பெருவிழா ஒன்றை நடத்தினார். இதனால் கண்ணகியின் சினம் தணிந்து நாடு சுபிட்சம் அடைந்தது. இவரை பற்றி மதுரை கூலவாணிகர் சீத்தலை சாத்தனார் என்ற புலவர் பாடியுள்ளார். குறுகிய காலமே ஆட்சி செய்த இந்த மன்னன் சித்திரமாடம் என்ற மாளிகையில் இறந்த காரணத்தால் "சித்திரமாடத்து துஞ்சிய நன்மாறன்" என்று அழைக்கப்பட்டார்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் :

இவரும் அதே நெடுஞ்செழியன் என்ற பெயர் கொண்டவர் தான். மிகவும் சிறு வயதிலையே பட்டத்துக்கு ஏறியவர். மிகச்சிறந்த கல்விமான். புலவரும் கூட. தாய் தனக்கு எத்தனை மகன்கள் இருந்தாலும் அதிலும் கற்றறிந்த மகனை தான் மிகவும் விரும்புவார் என்ற பொருளடக்கத்துடன் வரும் புறநானாற்றுப்பாடலை எழுதியவர் இவரே. சிறு வயதில் பட்டத்திற்கு வந்ததால் தன்னை ஒழிக்க சேரர், சோழர், திதியன் மற்றும் எழினி முதலான 5 வேளிர்களின் மன்னர்களும் ஒன்று திரண்டு போருக்கு வந்த போது வெஞ்சினம் உரைத்தே சென்றார். "இப்பகையினை யான் வெல்லவில்லையென்றால் குடிமக்கள் தூற்றும் கொடுங்கோல் அரசனாவேன். மாங்குடி மருதரை தலைவராக கொண்ட இப்புவலர்கள் கூட்டம் இந்த நாட்டை பாடாது ஒழியட்டும்" என்று வெஞ்சினம் உரைத்து தலையானங்கானத்தில் அந்த கூட்டணி படையை எதிர்த்து நின்று போரிட்டு வென்றான். போருக்கு போகும்போது சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியை காலில் அணிந்து சென்றதிலிருந்து இளம் வயதிலையே போருக்கு சென்றவர் என்று அறியமுடிகிறது. யானை படையை பலமாக வைத்திருந்த சேரமன்னனை சிறைப்பிடித்து சகல மரியாதைகளுடன் சிறைவைத்தான். சாண்டில்யன் எழுதிய மூங்கில் கோட்டை நாவலில் இந்த நிகழ்வு விவரிக்கப்பட்டிருக்கும். அறங்கூறும் அவையம் வைத்து நீதி வழங்கினார். ஆட்சிக்கு உதவியாக "நாற்பெருங்குழு" வைத்திருந்தார். பழிக்கு அஞ்சுபவன். சிறந்த போர் வீரர்களை பொன்னால் ஆன தாமரைப்பூ சூட்டி பாராட்டினார். இளம் வயதிலையே தமிழகத்தின் பேரரசர்களையும் வேளிர்களையும் ஒற்றை ஆளாக எதிர்த்து நின்றது இவருக்கு போர் வெறியை அளித்து விடுமோ என்று இவரது ஆசானும் அவைக்கள புலவருமான மாங்குடி மருதனார் "மதுரை காஞ்சி" என்ற நூலை இயற்றினார். இது பத்துப்பாட்டு என்று தொகுக்கப்பட்ட நூல்களுள் ஒன்றாக உள்ளது. இந்த மன்னனை போற்றி மதுரை கண்காயர் மகன் நக்கீரர் "நெடுநல்வாடை" என்ற நூலை இயற்றியுள்ளார்.

கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி :

இரண்டாம் நெடுஞ்செழியனின் புதல்வர் தான் இந்த உக்கிரப் பெருவழுதி. அவருக்கு பின்னர் ஆட்சி ஏறினார். அப்போது கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார் கோவில்) பகுதியை ஆண்ட அரசனான வேங்கை மார்பனை அழித்து வெற்றி கண்டதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்று அழைக்கப்பட்டார். ஐயூர் மூலங்கிழார் என்ற புலவர் இந்த மன்னனை பற்றி பாடியுள்ளார். அகநானாறு இந்த மன்னனின் காலத்தில் தான் மதுரை உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திரசன்மனரால் தொகுக்கப்பட்டது என்று சொல்வதுண்டு. குறிஞ்சியையும் மருதத்தையும் புனைந்து பாடுவதில் வல்லவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையிலும் ஒன்று அகநானூறில் ஒன்றும் உள்ளது.இறையினார் களவியல் உரைப்படி கடைச்சங்க காலத்தில் கடைசியாக அரசாண்ட பாண்டிய மன்னனாக கருத்ப்படுகிறார். இவருடைய காலத்திற்கு பின்வந்த பாண்டிய மன்னர்களின் விவரங்கள் தெரியவில்லை. ஆகவே சங்ககால பாண்டிய மன்னர்களின் ஆட்சி இந்த மன்னனோடு முடிவுக்கு வந்ததாக கருதலாம்.

கருங்கையொள் வாட் பெயர்வழுதி :

இந்த மன்னர் கரிகாற் பெருவளத்தான் காலத்தை சேர்ந்தவர். கரிகாலனின் மாமனான இரும்பிடர்த்தலையார் என்ற புலவரால் பாடப்பட்டவர். வீரமும் கொடையும் உடையவர்.

பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி :

இந்த மன்னன் சிறந்த புலவராக விளங்கியவர். எட்டுத்தொகையுள் ஒன்றான நற்றிணை நூலை தொகுப்பித்தவர் இவரே.

இடையில் 6ம் நூற்றாண்டில் (கி.பி.575) கடுங்கோன் பாண்டியன் களப்பிரர்களை வென்று மீண்டும் பாண்டிய பேரரசை தோற்றுவித்ததும் இடையில் சோழப்பேரரசினால் (விஜயாலயச்சோழனால் மீண்டும் ஏற்பட்ட சோழப்போரரசு) பாண்டியர்கள் அரசை இழந்ததும் பின்னர் மூன்றாம் குலோத்துங்கனை வென்று 12ம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியர்கள் ஆட்சியும் அதுவும் சுல்தான்களினாலும் விஜயநகரப் பேரரசு எழுச்சியினால் அழிந்து தென்காசி பாண்டியர்களானதையும் கால வரிசைப்படி பின்னர் பார்க்கலாம்.

உதவிய நூல்கள் :

பாண்டியர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார்

சேரர், சோழர், பாண்டியர் - எஸ். கிருஷ்ணன்

பாண்டியன் நெடுஞ்செழியன் - கி.வா.ஜா.

சங்ககாலப் பாண்டியர் - ஐயன் பெருமாள் கோனார்.

விக்கிபீடியா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு