10) மேற்கு சத்ரபதிகள் பேரரசு

மேற்கு சத்ரபதிகள் அரசு (கி.பி.30-415): 


மேற்கு சத்ரபதிகள் குஷானர்கள் மற்றும் சாதவாகனர்களின் சம காலத்தவர். இந்தியாவின் வடமேற்கு பகுதியான இன்றைய செளராஷ்டிரம், குஜராத், இராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சிந்து பகுதிகளை ஆண்டவர்கள். இதனால் இவர்களுக்கு மேற்கு சத்ரபதிகள் (Western Satraps) என்று பெயர் வந்தது. மத்திய ஆசியாவை சேர்ந்த சிதியர்கள் இனத்தை சேர்ந்த அவர்களின் வழிகலப்பில் இந்தோ-சிதியர்களின் வழியில் வந்தவர்கள் தான் மேற்கு சத்ரபதிகள். கி.பி.35-கி.பி 405வரை மேற்கு சத்ரபதிகளின் ஆட்சி இருந்தது. குப்தர் வம்சத்தின் ஸ்தாபகர் சமுத்திர குப்தர் மேற்கு சத்ரபதிகளின் அரசன் மூன்றாம் ருத்திரசிம்மனை தோற்கடித்தவுடன் அரசு சுருங்கி கி.பி.405ல் முழுவதுமாக வீழ்ச்சியுற்றது. கி.பி.35ல் அரகாமாவில் ஆரம்பித்து மூன்றாம் ருத்திரசிம்மனின் வீழ்ச்சியுடன் கி.பி.405ல் வீழ்ச்சியுறறது.

உஜ்ஜையினியை தலைநகராக கொண்டு ஆண்டவர்கள். இந்த பேரரசில் பாலி, சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதம் ஆகிய மொழிகள் பேசப்பட்டன. இந்து மதம் மற்றும் புத்தமதம் மேற்கு சத்ரபதிகளின் ஆட்சியில் பரவியிருந்தது. சத்ரப் என்ற சொல்லுக்கு ஆளுநர் என்று பொருள்.350 ஆண்டுகளில் மொத்தம் தன்னாட்சி பெற்ற 27 சத்ரபதிகள் மேற்கு இந்தியாவையும் மத்திய இந்தியாவையும் ஆண்டு இருக்கிறார்கள். பாரசீக மொழியில் சத்ரப் என்பதற்கு "மாகாண ஆளுநர்" என்று பொருள்படும். 

சத்ரபதிகளில் வரிசையில்

யபிரஜெயா :

ஹோஸ்பிஸ்சஸ் :

ஹிகாரகா :

அபிரகா : (க.பி.30-- ?)

இவர் நாஹபானரின் தாத்தா. இவரது நாணயங்கள் இன்றைய வடக்கு பாகிஸ்தானிலுள்ள சாக்ஸா என்னுமிடத்தில் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாது ஆப்கானிஸ்தான் மற்றும் பெர்ஷிய பகுதிகளிலும் கிடைத்துள்ளன.

பூமகா ( ஆரம்பம் தெரியலை - கி.பி.119) :

தந்தை அபிரகாவுக்கு பின்னர் ஆட்சியேறினார். இவரே நாஹபானரின் தந்தை. இவரது நாணயங்களில் புத்த மத சின்னமான தர்மசக்கரா இடம்பெற்றுள்ளது. இவரது நாணயங்கள் குஜராத், கத்தியவாடி மற்றும் மால்வா பிரதேசங்களில் கிடைத்துள்ளது.


நாஹபானர்(கி.பி.119- முடிவு தெரியவில்லை) :


மேற்கு இந்தியாவை ஆண்ட இந்தோ-சிதிய குல மன்னர். காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு ஆரம்பம் என்பதை இவர் வெளியிட்ட வெள்ளி நாணயங்களின் மூலம் அறியப்படுகிறது. இவர் வெளியிட்ட வெள்ளி நாணயங்களில் பிராமி மற்றும் கரோஷ்டி எழுத்துமுறையில் சத்ரபதி நாஹபானர் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.இவர் மன்னர் பூமகாவின் புதல்வர். புத்த மதத்தில் மிகுந்த பற்று கொண்டவர். மஹாராஷ்டிர மாநிலத்தில் புத்த துறவிகளுக்காக புத்த விகாரைகளை கர்லா குகைகள்


, மன்மோடி குகைகள், நாசிக் குகைகள் மற்றும் பாஜா குகைகளை நிறுவினார். இந்த குகைகள் எல்லாம் கிரேக்க-காந்தார கலை அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதவாகன கெளதமிபுத்ர சதகர்ணியால் இவர் ஒருமுறை தோற்கடிக்கப்பட்டார். 

பத்ரமுக குல அரசர்கள் வரிசையில்

சாஸ்தனா (கி.பி.78-130) :

இவர் உஜ்ஜையினியை தனது தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தார். மதுராவில் இவரது சிலை குஷான அரசர் கனிஷ்கர் மற்றும் வீமா தக்தோ ஆகியோர் சிலைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் கிரேக்க தாலமியின் குறிப்புகளில் பெரிய பரப்பளவை உஜ்ஜையினியில் இருந்து ஆண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெயதாமன் (கி.பி.130-150) :

இவர் தனது தந்தை சாஸ்தனாவுக்கு பின் ஆட்சி ஏறினார். தந்தையின் காலத்தில் அவருடன் இணைந்து ஆட்சி புரிந்ததாகவும் தெரிகிறது. இவரது ஆட்சியில் வெளியிடப்பட்ட தாமிர நாணயங்கள் ஒழுங்கற்ற வடிவத்துடன் நாற்புற வடிவமாக வெளியிடப்பட்டது.

முதலாம் ருத்ரதாமன் (கி.பி.150-170) :

இவர் மகாசத்ரபதி என்று அறியப்படுகிறார். இவர் முன்னாள் ஆட்சியாளர் சாஸ்தனாவின் பேரன். சாதவாகன பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமானவர். இவர் இந்துமத பெண்ணை திருமணம் செய்து இந்துவாக மாறியவர் என்றும் கூட சொல்லுகிறார்கள். சாதவாகனர்களின் அரசனான "வசிஷ்டபுத்ர சதகர்ணி (கெளமிபுத்ர சதகர்ணியின் பேரன்) க்கு தமது மகளை திருமணம் செய்து கொடுத்து திருமணபரிசாக "அபராந்தா" நிலப்பகுதியை கொடுத்ததாகவும் குறிப்புகள் உள்ளது. இன்றைய அரியானா மாநிலத்தில் அன்றைய யெளதேயர்களை வென்றதாக குஜராத் மாநிலத்திலுள்ள கிர்நார் மலைகல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாம் தாமஜதஶ்ரீ (கி.பி.170-175) :

இவர் முதலாம் ருத்ரதாமனுக்கு பிறகு ஆட்சியேறிய அவரின் மகன். இவரது ஆட்சியில் சாதவாகனர்கள், அப்ஹிராக்கள் மற்றும் மாளவர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி பேரரசின் பகுதிகளை கைப்பற்றி கொண்டனர்.

ஜீவதாமன் (கி.பி.178-181 & 197-198) :

இவர் முன்னவர் முதலாம் தாமஜதஶ்ரீ யின் மகன். இவர் இருமுறை ஆட்சியில் இருந்துள்ளார். இவருக்கு வாரிசு இல்லாததால் இவருக்கு பின்னர் இவர் ஒன்றுவிட்ட சகோதரர் முதலாம் ருத்திரசேனன் ஆட்சிக்கு வந்தார்.

முதலாம் ருத்திரசிம்மன் (கி.பி.175-188,191-197) :

இவர் ருத்ரதாமனின் மகன். முந்தைய ஆட்சியாளர் முதலாம் தாமஜதஶ்ரீயின் சகோதரர். அப்ஹிராக்கள் இவரது ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். அவர்களில் பலர் தளபதிகளாகவும் பணியாற்றினர். அப்ஹிரா அரசன் ஈஸ்வர்தத்தா இவரை பதவியில் இருந்து கி.பி.188ல் இறக்கியதாகவும் பின்னர் கி.பி.191ல் மீண்டும் அவரை வென்று பதவியை மீட்டதாகவும் தெரிகிறது.

சத்யதாமன் (கி.பி.197-198)

இவர் முதலாம் தாமஜதஶ்ரீயின் மகன் மற்றும் ஜீவதாமனின் சகோதரன். ஜீவதாமனுக்கு பிறகு சில காலம் ஆட்சியில் இருந்தார்.

முதலாம் ருத்திரசேனன் (கி.பி.200-222) :

இவரது ஆட்சியில் மேற்கு சத்ரபதிகள் மிகவும் வலிமை பெற்றனர். இவர் மால்வாயை கைப்பற்றி தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட அரசாக்கினார். இவரது மறைவுக்கு பின்னர் மாளவர்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்து தங்கள் விடுதலையை பெற்றனர். இவரை பற்றி இவர் வெளியிட்ட நாணயங்களின் மூலமே அறிய முடிகிறது. 

பிருத்விசேனா (கி.பி.222) :

ருத்திரசேனனுக்கு பிறகு ஆட்சியேறியவர். கொஞ்ச காலமே ஆண்டதால் இவரை பற்றிய விவரம் கிடைக்கவில்லை.

சம்காதமன் (கி.பி.222-223) :

பிருத்விசேனாவுக்கு பிறகு ஆட்சியேறிய இவரும் சில மாதங்களே ஆண்டார்.

தாமசேனன் (கி.பி.223-232) :

இவர் ருத்திரசிம்மனின் மகன். ருத்தரசிம்மனின் காலத்திலிருந்து நாணயங்களில் சாகா வருடங்கள் குறிக்கப்பட்டது. இதன் மூலம் இவரது நாணயங்களிலிருந்து இவரது ஆட்சிக்காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் தாமஜதஶ்ரீ (கி.பி.232-239) :

விருதாமன் (கி.பி.234-238) :

ஈஸ்வர தத்தா (கி.பி.236-239) :

முதலாம் யசோதாமன் (கி.பி.239) :

விஜயசேனன் (கி.பி.239-250) :

இவர் தாம சேனாவின் 4 மகன்களுள் ஒருவர். இரண்டாம் தாமஜதஶ்ரீக்கு பிறகு ஆட்சியேறினார். கி.பி.242 ல் ஈஸ்வர தத்தா இவரை விரட்டியடித்து ஆட்சியை கைப்பற்றினார். ஆனாலும் அடுத்த 1 1/2 வருடங்களில் இவர் அவரிடம் இருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார்.

மூன்றாம் தாமஜாதஶ்ரீ (கி.பி.251-256) :

இவரும் தாம சேனனின் இளைய மகன் தான். சகோதரன் விஜய சேனனுக்கு பிறகு ஆட்சியேறினார். இவருக்கு மஹாசத்ரபா என்ற பட்டம் இவரது நாணயங்களில் காணப்படுகிறது. 

இரண்டாம் ருத்திரசேனன் (கி.பி.255-277) : 

இவர் மூன்றாம் தாமஜதஶ்ரீ யின் உறவினர். முன்னாள் ஆட்சியாளர் விருதாமனின் மகனும் கூட. இவர் சாதவாகனர்கள் வீழ்ச்சியுறும் நேரத்தில் மேற்கு சத்ரபதிகள் முன்பு இழந்த சாஞ்சி மற்றும் விதிஷா பகுதிகளை திரும்ப கைப்பற்றினார். இவரது ஆட்சியில் மேற்கு சத்ரபதிகள் ஆட்சி பரப்பளவில் விரிந்து இருந்தது. இவர் புத்த மதத்தை ஆதரித்தார். இவரது ஆட்சியில் ஆந்திர இஷ்வாகு மரபினருடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தனர்.

விஸ்வசிம்மன்(கி.பி.277-282) :

இவர் இரண்டாம் ருத்ர சேனின் மகன். தந்தைக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். பெரிய அளவில் இவரை பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

பத்ரு தாமன்(கி.பி.278-295) :

இவர் இரண்டாம் ருத்ர சேனனின் இன்னொரு மகன். சகோதரன் விஸ்வசிம்மனுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவரது நாணயங்கள் முதல் நான்கு ஆண்டுகள் சத்ரபா என்றும் அதற்கு பின்னர் மஹாசத்ரபா என்றும் குறிப்பிடுகின்றன. சகோதரனுக்கு பிறகு ஆட்சியில் ஏறிய பின்னர் மஹாசத்ரபா பட்டத்தை இவர் பெற்றிருக்கலாம் என்றும் இதன் மூலம் அறியமுடிகிறது. 

விஸ்வசேனன் (கி.பி.293-304) :

சாஸ்தனா குடும்பத்தில் இருந்து வந்த கடைசி சத்ரபதி ஆட்சியாளர் இவரே. இவர் இரண்டாம் ருத்ர சேனனின் கடைசி மகன். அண்ணன் பத்ரு தாமனுக்கு பிறகு ஆட்சியேறினார். இவரது நாணயங்கள் அஜந்தா குகைகளில் கிடைத்துள்ளன.

இரண்டாம் ருத்ரசிம்மன் (கி.பி.304-348) :

இவர் வெளியிட்ட நாணயங்களின் மூலம் தன்னை ஜீவதாமனின் மகன் என்று அறிவித்து கொண்டுள்ளார். இவரது ஆட்சி மேற்கே அரபிக்கடல் முதல் மத்திய இந்தியாவின் விதிஷா, சாஞ்சி, ஏரண் வரை விரிவுபடுத்தப்பட்டது. இவர் புத்த மதத்தை ஆதரித்தார். மத்திய இந்தியாவில் விதிஷா, சாஞ்சி, இரான் மற்றும் தேவ்னி மோரி பகுதிகளில் பல புத்த விகாரைகளையும் ஸ்தூபிகளையும் கட்டினார். இவரது அடங்கிய சிற்றரசர்களாக இரண்டாம் யசோதாமனும் மூன்றாம் ருத்ரதாமனும் இருந்தனர்.

இரண்டாம் யசோதாமன் (கி.பி.317-332) :

இவர் இரண்டாம் ருத்ர சிம்மனின் மகன் மட்டுமல்லாது அவருடைய ஆட்சியில் துணை அரசராகவும் இருந்தார். இவருடைய நாணயங்களில் தன்னை ருத்ர சிம்மனின் மகன் என்று அறிவித்துக் கொண்டுள்ளார். 

இரண்டாம் ருத்ரதாமன் (கி.பி.332-348) :

இரண்டாம் யசோதமனுக்கு பிறகு அவரது சகோதரரான இவர் அடுத்த அரசனானார். இவரது நாணயங்கள் எதுவும் கிடைக்காததால் இவரை பற்றி அறிய முடியவில்லை.

ஶ்ரீதரவர்மன் (கி.பி.339-368) :

இவர் மத்திய இந்திய பகுதிகளான விதிஷா, சாஞ்சி மற்றும் இரான் (இது இன்றைய மத்திய பிரதேசத்தில உள்ள சாகர் மாவட்டத்தில் ஒரு நகரம்) பகுதிகளை ஆண்டார். இவர் தன்னை தளபதி என்றும் பின்னர் மகாசத்ரபா என்று அழைத்து கொண்டதிலிருந்து முதலில் தளபதியாக இருந்து அரசராக ஆனவர் என்று அறியமுடிகிறது. இவர் சாஸ்தனா கிளையை சேர்ந்தவர் அல்லாமல் வேறொரு சாகா கிளையை சேர்ந்தவர். கி.பி.365ல் குப்த பேரரசர் சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இரான் பகுதிக்கு குடியேறினார் என்று தெரிகிறது. குப்தர்களின் அலகாபாத் கல்வெட்டுகளில் இவர் அவருக்கு அடி பணிந்து அவருக்கு மரியாதை செலுத்தி தன் மகள்களை அவருக்கு திருமணம் செய்து கொடுத்து இழந்த ராஜ்ஜியங்களை (கிழக்கு மால்வா) ஆட்சி செய்யும் உரிமையை பெற்றதாக தெரிகிறது. 

மூன்றாம் ருத்ரசேனன் (கி.பி.348-380) :

சிம்ம சேனன் (கி.பி.380-384) :

நாலாம் ருத்ரசேனன் (கி.பி.382-388) :

மூன்றாம் ருத்ரசிம்மன் (கி.பி.388-415) :


இவர் கி.பி.380ல் குப்த வம்சத்து அரசர் இராமகுப்தரை போரில் வென்றார். ஆனால் கி.பி.395ல் இரண்டாம் சந்திரகுப்தரிடம் தோற்றுப் போனார். கி.பி.412-413 இரண்டாம் சந்திர குப்தரால் முழுமையாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் அடுத்த 2 ஆண்டுகள் சிறு பிராந்தியமாக நீடித்து கி.பி.415ல் மேற்கு சத்ரபதிகளின் ஆட்சி இவருடன் முடிவுற்றது.

இன்றைய குஜராத் மாநிலத்தில் ஆராவல்லி மலைதொடரிலுள்ள தேவ்னி மோரி என்னுமிடத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் 1960-63 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளில் புத்த மத விகாரைகளும் குகைக்கோவில்களும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நாஹபானர், முதலாம் ருத்திரசேனன், மூன்றாம் ருத்ரசிம்மன் காலத்து வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அமைந்த மெலுவா அணைகட்டினால் நிறைய பகுதிகள் அழிந்துவிட்டன. மீதம் இருப்பவற்றை தொல்பொருள் ஆய்வகம் பராமரித்து வருகிறது. இந்த இடம் பரோடாவில் இருந்து 220 கி.மீ தொலைவில் ஆரவல்லி மலைதொடரில் அமைந்துள்ளது.

உதவிய நூல்கள் :

விக்கிபீடியா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள்



Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு