11) குப்த பேரரசு
குப்த பேரரசு (கி.பி.240-550) :
கி.பி. 240ல் ஶ்ரீகுப்தரால் ஆரம்பிக்கப்பட்ட குப்த அரசு அவருக்கு பின் அவரது மகன் கடோத்கஜனும் அவருக்கு பின் கி.பி. 320ல் பட்டத்திற்கு வந்த முதலாம் சந்திரகுப்தர் காலத்தில் தான் பேரரசாக பரந்து விரிந்தது. குப்தர்களின் காலம் இந்திய வரலாற்றின் பொற்காலம் என்று கூறுவார்கள். ஏனெனில் அறிவியல், கணிதம், வானியல், சமயம், தத்துவம் ஆகிய துறைகள் இவர்களின் ஆட்சியில் செழித்து வளர்ந்தது.கி.பி. 550 வரை இருந்த குப்த பேரரசு இடையில் கி.பி 475க்கு பிறகு வலுவிழக்க ஆரம்பித்தது.
குப்தர்களின் தாயகம் பற்றி இருவேறு கருத்துக்கள் உலாவருகிறது. சிலர் இன்றைய உத்திரபிரதேசத்தின் அலகாபாத் (பிரயாகை) என்றும் சிலர் வடக்கு மற்றும் மத்திய வங்காளமே என்றும் கூறுகிறார்கள். குப்தர்களின் தலைநகரம்: இன்றைய பாட்னா (அன்றைய பாடலிபுத்திரம்)
ஶ்ரீகுப்தர் (கி.பி.240-290) :
சிற்றரசாக மகதத்தில் (இன்றைய பீஹார்) கி.பி. 240 ல் ஆட்சிக்கு வந்து மகத நாட்டை விரிவுபடுத்தினார். இரண்டாம் சந்திரகுப்தரின் மகளான பிரபாவதியின் கல்வெட்டு குறிப்புகளின் படியே இவரே குப்தர்கள் வம்சத்தை நிறுவியதாக தெரிகிறது. இவர் காலத்தில் நாளந்தா பல்கலைகழகத்தில் பெளத்த சமய கல்வி கற்க சீனாவிலிருந்து வரும் பெளத்த துறவிகள் தங்குவதற்காக நாளாந்தா அருகில் "மிருகசிகாவனம்" என்னும் பெளத்த விகாரையை கட்டி தந்ததோடு அதன் செலவுகளுக்கு 40 கிராமங்களின் வருவாயையும் கொடுத்தார். இவர் அடிப்படையில் வைணவ சமயத்தை பின்பற்றினாலும் தனது ராஜ்ஜியத்தில் சமணம் மற்றும் பெளத்தம் ஆகியவற்றையும் ஆதரித்தார். இவருக்கு பின் இவர் மகன் கடோத்கஜனும் குப்த நாட்டை கி.பி.320 வரை ஆட்சி புரிந்தார்.
கடோத்கஜன் (கி.பி.290-320) :
ஶ்ரீகுப்தருக்கு பின்னர் அவரது மகனான இவர் அரியணை ஏறினார். பின்னாளில் குப்தர்கள் அரசை சாம்ராஜ்ஜியமாக்கிய முதலாம் சந்திர குப்தரின் தந்தை என்பதை தவிர வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
முதலாம் சந்திரகுப்தர் (கி.பி.320-335) :
குப்த வம்சத்தின் சிறந்த அரசர். 15 வருடங்கள் ஆட்சியில் இருந்தாலும் குப்த பேரரசை விரிவுப்படுத்தியதில் மிகப்பெரிய பங்கு உண்டு. இன்றைய உத்திரபிரதேசம், பீஹார், நேபாளம் வரை விரிவுபடுத்தினார். ஆரம்பகாலத்தில் பீஹாரில் ஆளுநராக இருந்தார். கி.பி.308ல் லிச்சாவி நாட்டின் இளவரசி குமாரதேவியை மணந்து தனது அரசியல் அதிகாரங்களை பெருக்கி கொண்டார். இதனால் நேபாளம் மற்றும் பீஹார் பகுதிகளில் இவர்களது அதிகாரங்கள் வலுப்பெற ஆரம்பித்தது. அரசராக பதவியேற்றதும் இவரது ஆட்சியை மேற்கில் அலகாபாத் வரைக்கும் நீட்டித்தார். மேலும் அயோத்தி மற்றும் தெற்கு பீஹார் பிரதேசங்களையும் சேர்த்து கொண்டார். மெஹ்ருளி இரும்புத் தூண் கல்வெட்டு இவரின் வெற்றிகளை பற்றி கூறுகிறது.சமுத்திர குப்தர் (கி.பி.335-375) :
முதலாம் சந்திரகுப்தரின் 3 மகன்களுள் இரண்டாவது பிறந்தவரான சமுத்திரகுப்தரே அவருக்கு பின் பட்டத்துக்கு வந்தார். சிறு வயதில் 3 சகோதரர்களும் கடற்கரையில் உலாவும்போது இவரே கடல் அலைகளுக்கு பயப்படாமல் தைரியமாக கடலுக்குள் இறங்கியதால் இவர் சமுத்திரங்களை ஆள்வதற்கு பிறந்தவர் என்று சமுத்திரகுப்தர் என்று அழைக்கப்பட்டதாக கூறுவார்கள்.
இவர் தனது முதல் படையெடுப்பில் அச்சுதன் என்ற நாக வம்சத்து அரசரையும் நாகபாணன் என்ற மேலை கங்கை சமவெளி பகுதியை ஆண்ட கோடா இனத்து சிற்றரசனையும் வென்று அவர்களது இராஜ்ஜியத்தை தனது இராஜ்ஜியத்துடன் இணைத்து கொண்டார். பின்னர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து கேரளாவின் மந்தராஜன், கோசல நாட்டு மகேந்திரன், கோட்டுராவை சேர்ந்த சுவாமி தத்தன், காஞ்சியை ஆண்ட விஷ்ணு கோபன், பலாக்காவின் உக்கிரசேனன், பிஸ்தபுரத்து மகேந்திரகிரி, அவமுத்த நாட்டு நீலராஜன், ரெண்டபள்ளாவின் தாமனன், மகா காந்தாரத்தின் வியாகராஜன், வெங்கி நாட்டு ஹஸ்திவர்மன், தேவராஷ்டிரத்து குபேரன், குஸ்தபுரத்து தனஞ்செயன் ஆகிய 12 தென்னிந்திய அரசர்களை தோற்கடித்து அவர்களின் நாட்டை தன்னுடன் இணைக்காமல் தனது மேலாதிக்கத்தை ஏற்று கொள்ள செய்தார். தோற்றாலும் எதிரிகளை பெருந்தன்மையாய் நடத்திய தன்மை, இவரது கூரிய அறிவு, இசையில் மேதைத்தனம் ஆகியவற்றை அலகாபாத் கல்வெட்டு கூறுகிறது. இவரது நாணயங்களில் இவர் வீணையுடன் அமர்ந்திருக்கும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. இவர் வீணை வாசிப்பதில் வல்லவராகவும் இருந்தார். பாடல்களை இயற்றும் திறமை பெற்றிருந்த அவரை "கவிராஜன்" என்றே கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவர் மால்வா (மத்தியப்பிரதேசம்), பத்மாவதி நாகர்கள், யெளதேவ நாடு (அரியானா), ஆபிர நாடு, அருச்சுனனை, காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தான் வரை வென்று 35 லட்சம் கி.மீ தூரத்திற்கு பரந்துபட்ட அளவில் குப்த பேரரசை விரிவாக்கினார். வடக்கே இமயமலை முதல் தெற்கே நர்மதை நதி வரையிலும், மேற்கே யமுனை நதி முதல் கிழக்கே பிரம்மபுத்திரா நதி வரையும் குப்த பேரரசு இருந்தது. இவரை வரலாற்று ஆய்வாளர் வின்செண்ட் ஸ்மித் "இந்தியாவின் நெப்போலியன்" என்று அழைத்தார்.
வீரராக மட்டும் இல்லாமல் சமயங்களுக்கும், கலைகளுக்கும், இலக்கியங்களுக்கும் ஆதரவு அளித்தார். தீவிர வைஷ்ணவராக இருந்தாலும் இலங்கை மன்னனுக்கு புத்த விகாரையை புத்தகயாவில் கட்டுவதற்கு அனுமதித்தார். புத்த அறிஞரான வசுபந்து என்பவரையும் ஆதரித்தார். இவரே கலைஞராக திகழ்ந்தாலும் ஹரிசேனன் முதலிய கலைஞர்களையும் ஆதரித்து போற்றினார்.
ராம குப்தர் (கி.பி.375-380) :
சந்திரகுப்தருக்கு பின்னர் ராம குப்தர் ஆட்சிக்கு வந்தார் என்று கூறினாலும் அதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் கி.பி.380ல் மேற்கு சத்ரபதிகள் அரசனான மூன்றாம் ருத்திரசிம்மனிடம் இவர் தோல்வியுற்ற விவரம் குறிக்கப்பட்டது இருப்பதிலிருந்து இவர் ஆட்சியேறி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சிலர் இவரை இவர் சகோதரர் இரண்டாம் சந்திரகுப்தர் வீழ்த்தி அரசுக்கு வந்தார் என்றும் கூறுகிறார்கள்.
இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி.380-415) :
மேற்கு சத்ரபதிகளின் கடைசி அரசர் சாகர்களின் மூன்றாம் ருத்ரசிம்மனை போரில் வீழ்த்தி மேற்கு சத்ரபதிகளின் ஆட்சிக்கு முடிவுரை எழுதினார். இராஜஸ்தான், குஜராத், மாள்வா மற்றும் கத்தியவாடி பிரதேசங்களான மேற்கு சத்ரபதிகளின் பேரரசும் குப்தர்கள் வசமாகவே ஒட்டுமொத்த வட இந்தியாவுமே குப்தர்கள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இதனால் இவருக்கு "விக்கிரமாதித்யன்" என்ற சிறப்புபெயர் வழங்கலாயிற்று. இதன் பின் அசுவமேத யாகத்தையும் நடத்தினார். சாகர்களை அழித்ததால் "சாகரி" என்று விருது பெயர் சூடிக்கொண்டார்.திருமண உறவுகள் மூலம் தனது அரசியல் வலிமையை அதிகரித்துக்கொண்டார். நாக இளவரசி குபேரநாகாவை இவர் திருமணம் செய்து கொண்டார். தனது மகள் பிரபாவதியை வாகடக அரசர் இரண்டாம் ருத்ரசேனருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவரின் காலத்தில் தான் பண்பாட்டு, நாகரீகம், கலை இலக்கியங்கள்,கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை ஆகியவை பெரும் வளர்ச்சி பெற்றது. புராணங்களான இராமாயாணம், மஹாபாரதம், இதிகாசங்கள் ஆகியவை ஓலைச்சுவடுகளில் எழுத்து வடிவத்தில் கொண்டு வரப்பட்டது. இந்து சமயம் மீண்டும் பொழிவுடன் எழுச்சி பெற தொடங்கியதால் இவரின் காலத்தை "இந்தியாவின் பொற்காலம்" என்றே வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர் உஜ்ஜையினி நகரத்தை இரண்டாவது தலைநகராக கொண்டு ஆண்டு வந்தார்.
இவரது அவையில் காளிதாசர் முதலான நவரத்தின கவிஞர்களும், பிறதுறை அறிஞர்களும் இருந்தனர். சமஸ்கிருதம் மொழி இலக்கணக்காரான அமரசிம்மரும், வானவியல்-கணித அறிஞரான வராகமிகிரரும் இந்த நவ ரத்தின அறிஞர்களுள் ஒருவர். இவரது ஆட்சி காலத்தில் தான் சீன புத்த மத அறிஞரான பாஹியான் இந்தியாவில் பயணம் செய்து இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின் பெருமைகளை பற்றி தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பயணம் செய்த 9 ஆண்டுகளில் 6 ஆண்டுகளை குப்த பேரரசில் தான் கழித்தார் பாஹியான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் 3 வருடங்கள் பாடலிபுத்திரத்தில் தங்கியிருந்தார். இந்த நேரத்தில் இந்தியாவின் குப்த பேரரசில் நிலவிய சமய,சமூக மற்றும் பொருளாதார நிலைகளை பற்றிய தகவல்களை எழுதியுள்ளார். கங்கை சமவெளியை "பிராமணர்கள் பூமி" என்று குறிப்பிட்டார். இந்தியா மட்டுமல்ல இலங்கையிலும் புத்த மத ஓலைச்சுவடி தகவல்களை திரட்டிக்கொண்டு சீனா திரும்பி போனார்.
இவர் இந்தியாவிற்கு வெளியே கிழக்கிலும் மேற்கிலும் 21 நாடுகளை (பாரசீகம், காம்போஜம், ஹூன மக்கள், கிராதர்கள், நேபாளம், பாக்டீரியா, யவனம், மிலேச்சர்கள், காஷ்மீரம்) வென்றதாக காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் குமார குப்தர் (கி.பி.415-455) :
இரண்டாம் சந்திர குப்தருக்கு பின்னர் அவர் மகன் குமார குப்தர் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு சக்ராதித்யா என்ற இன்னொரு பெயரும் உண்டு. குமார குப்தர் நாளந்தா பல்கலைகழகத்திற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். வலிமையான அரசராக இவர் வங்காளத்திலிருந்து கத்தியவார் வரையும் இமயத்திலிருந்து நர்மதை நதி வரையும் பரந்துபட்ட குப்த பேரரசை எதிரிகளிடமிருந்து பாதுகாத்தார். இவரது ஆட்சியின் இறுதி பகுதியில் வெள்ளை ஹூணர்களின் ஆக்கிரமிப்புகளை முறியடித்தார். இந்த வெற்றியை கொண்டாட இவர் அஸ்வமேத யாகம் நடத்தினார். தனது பெயரை கொண்ட குமரக் கடவுளின் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டார். இவரை பற்றிய குறிப்புகள் ஜூனாகத் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. தில்லியிலுள்ள குதூப்மினார் வளாகத்திலிலுள்ள துருப்பிடிக்காத இரும்பு தூண் இவரின் காலத்தில் தான் உருவாக்கப்பட்டது. இவரது ஆட்சியின் கடைசி காலத்தில் வலிமை வாய்ந்த புஷ்யமித்திரர்கள் என்ற பழங்குடியினரால் குப்த படைகள் தோற்கடிக்கப்பட்டது.
ஸ்கந்த குப்தர் (கி.பி.455-467):
முதலாம் குமார குப்தருக்கு பின் இவர் ஆட்சியேறினார். இவர் முதலாம் குமார குப்தரின் இளைய மனைவிக்கு பிறந்தவர். இவரது ஆட்சியில் படையெடுத்த ஹூணர்களின் படையெடுப்புகளை தடுத்து நிறுத்தி குப்த பேரரசை காப்பாற்றினாலும் அந்த போர்களின் விளைவாக குப்த பேரரசின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் இவர் வெளியிட்ட செப்பு நாணயங்கள் மதிப்பு இழந்தது. இவரே வலிமையான இறுதி குப்த பேரரசராக கருதப்படுகிறார்.
புரு குப்தர் (கி.பி.467-473) :
ஸ்கந்த குப்தருக்கு பின்னர் அவரது ஒன்றுவிட்ட சகோதரரும் முதலாம் குமார குப்தர்- ஆனந்தி தேவிக்கு பிறந்த இன்னொரு மகனான இவர் ஆட்சிக்கு வந்தார். சாரநாத்தில் உள்ள புத்தரின் சிற்பத்தில் உள்ள குறிப்புகளின் படி புரு குப்தருக்கு பின்னர் இவரது மகனான இரண்டாம் குமார குப்தர் ஆட்சி புரிந்த விவரம் தெரிகிறது. புரு குப்தரை பற்றிய கல்வெட்டு குறிப்புகள் எதுவும் கிடைக்காத போதும், இவரது பேரன் மூன்றாம் குமார குப்தர் வெளியிட்ட நாணயங்கள் மூலமும் நாளந்தாவில் கிடைத்த இவரது மகன்களான இரண்டாம் குமார குப்தர் மற்றும் நரசிம்ம குப்தர் காலத்திய களிமண் முத்திரைகளின் மூலம் இவரை பற்றிய செய்திகள் அறிய முடிகிறது.
இரண்டாம் குமார குப்தர் (கி.பி.473-476) :
தனது தந்தையான புரு குப்தரின் மறைவுக்கு பின்னர் 10வது குப்த பேரரசராக அரியணை ஏறினார். சாரநாத்தில் உள்ள புத்தரின் உருவ சிற்பத்தில் உள்ள குறிப்புகளின் படி இவர் அரியணை ஏறிய விவரம் தெரிய வருகிறது. 4 வருடங்களே மட்டும் இவர் அரசு புரிந்தார்.
புத்த குப்தர் (கி.பி.476-495) :
இரண்டாம் குமார குப்தரின் மறைவுக்கு பின்னர் புரு குப்தரின் இன்னொரு மகனான புத்த குப்தர் அடுத்த 11வது அரசராக பதவியேறினார். இவர் கன்னோசி மன்னருடன் கூட்டணி சேர்ந்து கொண்டு வட இந்தியாவுக்குள் நுழைந்த வெள்ளை ஹூணர்களை விரட்டியடித்தார். மதுராவில் கிடைக்கப்பெற்ற புத்தரின் சிற்பங்களில் உள்ள குறிப்புகளின்படி இவர் தனது ஆட்சி பரப்பை வடக்கு மதுரா வரை நீட்டித்ததாக தெரிகிறது.
நரசிம்ம குப்தர் பாலாதித்யர் (கி.பி.496-530) :
புத்த குப்தருக்கு பின்னர் அவரது மகனான நரசிம்ம குப்தர் 12வது குப்த பேரரசராக அரியணை ஏறினார். இவர் மால்வா மன்னர் யசோதருமனுடன் இணைந்து ஹெப்தலைட்டுகளின் வழி வந்த வெள்ளை ஹூணர்களின் தலைவனான மிகிரகுலனை வென்றார். நாளந்தாவில் கிடைக்க பெற்ற களிமண் முத்திரைகளின் மூலம் இவரது பட்டத்து ராணி ஶ்ரீமித்ரா தேவி என்று அறிய முடிகிறது.
மூன்றாம் குமார குப்தர் (கி.பி.530-540) :
தந்தை நரசிம்ம குப்தருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். தந்தையின் காலத்தில் கி.பி.528ல் இவர் மாள்வா மன்னருடன் இணைந்து வெள்ளை ஹூணர்களின் தலைவனான மிகிரகுலனை தோற்கடித்தார். இவரது ஆட்சியில் வெள்ளை ஹூணர்களின் தொடர் தாக்குதலால் குப்த பேரரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
விஷ்ணு குப்தர் சந்திராதித்யர் (கி.பி.540-550) :
மூன்றாம் குமார குப்தருக்கு பின்னர் அரியணை ஏறிய இவரே கடைசி குப்த அரசர். வட இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருந்த குப்தர்கள் பேரரசு இவரின் காலத்தில் ஹூணர்களின் தொடர் தாக்குதலால் பலவீனப்பட்டு மகதம் (பீஹார்) என்ற அளவில் சுருங்கியது.
பானு குப்தா (கி.பி.550 - ???) :
இவர் கி.பி.550ல் ஹெப்தலைட்டுகளின் மன்னரான தோரமணன்னை போரில் வென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்திலுள்ள ஏரணில் கிடைத்த கல்வெட்டு குறிப்புகளின் படியே இவரை பற்றிய செய்திகள் குறைவாக கிடைத்துள்ளது. இவரது காலத்தில் குப்த பேரரசின் மேற்கு பகுதிகள் ஹூணர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது.
குப்தர்களின் காலத்தில் தான் "சாகுந்தலம்" எழுதிய மகாகவி காளிதாஸ், கணிதவியல் நிபுணர்களான ஆர்யப்பட்டர், வராகமிஹிரர், பஞ்சதந்திரம் கதைகள் எழுதிய விஷ்ணு குப்தர், காமசூத்திரா எழுதிய வாத்சாயனர் முதலிய பல்துறை வித்தகர்கள் வாழ்ந்தனர். கி.பி. 505ல் உஜ்ஜையினில் பிறந்த வராகமிஹிரர் தான் கிரகணங்கள் வருப்போவதை அறிந்து கொள்ளும் முறையை கண்டுபிடித்தார். எண்ணெய் கிண்ணம் ஒன்றில் கீரையை மிதக்கவிட்டு கிரகணம் தோன்றும் காலத்தை விளக்கியுள்ளார்.கோள்களின் இணைப்பே கிரகணத்துக்கு காரணம் என்று அறிவியல்பூர்வமாக எழுதினார். குப்தர்கள் காலத்தில் பர்மா, மலேஷியா நாடுகளுடன் வணிக தொடர்புகள் மேம்பட்டு இருந்தது. இவ்வாறு செழித்து வளர்ந்த குப்த சாம்ராஜ்யம் விஷ்ணு குப்தரின் காலத்திலையே (கி.பி.540-551)தேய்ந்து போக ஆரம்பித்தது. ஹீணர்களின் இடைவிடாத படையெடுப்புகளாலும் அண்டை நாடுகளின் படையெடுப்புகளாலும் குப்த பேரரசு அழிந்து விஷ்ணு குப்தருக்கு பின் பிற குப்த அரசர்கள் மகதத்தின் ஆட்சியாளர்களாக சிற்றரசாக மட்டுமே ஆகிப்போயினர். குப்தர்களின் ஆட்சிகாலத்தில் காந்தாரக்கலை சிறப்புற்று இருந்தது என்றாலும் அவைகள் ஹூணர்களால் சிதைக்கப்பட்டது. ஜான்சிக்கு அருகிலுள்ள தியோகார் கோவில் குப்த கட்டிடக்கலைக்கு சிறந்த சான்று. மதுராவிலுள்ள நிற்கும் வடிவிலான புத்தரின் சிலையில் காந்தாரக்கலையின் சாயலை காணமுடியும். இவர்களின் காலத்தில் உலோகவியல் நன்கு வளர்ந்தது. உலோக சிலைகளையும் தூண்களையும் வார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். குப்தர்கள் கால ஓவியங்களை குவாலியருக்கு அருகிலுள்ள "பாக்" குகைகளில் காணலாம். இவர்களின் காலத்தில் வடமொழி வளர்ச்சியுற்றது. பிரம்மி வடிவத்திலிருந்து நாகரி வடிவமாக வளர்ச்சியுற்றது. உண்மையில் பல துறைகளிலும் சிறந்து விளங்கிய குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலமே.
உதவிய நூல்கள் :
மறைக்கப்பட்ட இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்
எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - மருதன்
விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்







Comments
Post a Comment