12) களப்பிரர் அரசு
யார் இந்த களப்பிரர்கள்?
களப்பிரர்கள் என்ற குழு சேர,சோழ, பாண்டிய நாடுகளை ஆண்டதே நமக்கெல்லாம் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தான் தெரியவந்தது. தலையாலங்கானதது செறு வென்ற நெடுஞ்செழிய பாண்டியனும் , சிறையில் நீர் தர தாமதமானதால் உயிர்விட்ட சேரமான் கணுக்கால் இரும்பொறையும் அவரை வென்ற சோழன் கோட்செங்கணானுக்கு பிறகு சோழ,சேர, பாண்டியர்கள் வலுவிழந்தனர். அந்த நேரத்தில் வந்து ஆட்சியை பிடித்தவர்கள் தான் களப்பிரர்கள். இவர்களில் எந்த அரசனின் பெயரும் இதுவரை தெரியவில்லை. எல்லா அரசர்களின் பெயரும் அச்சுதன் என்ற பட்டபெயருடன் இருந்ததாக தெரிகிறது. வேள்விக்குடி செப்பேடுகளின் அச்சுத களப்பரையன் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறது
.
இவர்களின் காலம் கி.பி.250-575 என்றும் 275-575 என்றும் இல்லை கி.பி.300-575என்றும் விதவிதமாக சொல்லுகிறார்கள். பொதுவாகவே எல்லோரும் காலம் கி.பி.275-575 வரை 3 நூற்றாண்டுகள் இவர்களின் பிடியில் தமிழகம் இருந்ததை ஒப்புக் கொள்கிறார்கள். கடுங்கோண்பாண்டியன் கி.பி 575ல் பாண்டிய நாட்டிலிருந்து இவர்களை வென்ற விரட்டியடிக்க அதே ஆண்டே பல்லவர்களும் களப்பிரரை வென்று அவர்களின் ஆட்சியை முடித்து வைத்தனர். ஆனாலும் அவர்கள் முத்தரையர்கள் என்ற பெயரில் தஞ்சையையும், செந்தலையையும் மட்டுமே ஆட்சி புரிந்தனர். பின்னர் தஞ்சை மற்றும் செந்தலையும் சோழர் ஆட்சிக்கு வரவே அவர்களின் கீழே குறுநில மன்னர்களாக மாறிப்போயினர்.
களபரர்,களப்பரர்,களப்பிரர்,களப்பாளர்,களப்பாழர் என்று குறிப்பது எல்லாமே களப்பிரர்களை தான். இவர்கள் கண்டிப்பாக தமிழர் அல்ல. ஆரியர்கள் என்றால் ஆரியர்களும் அல்ல. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் என்று கருதுகிறார். அதுவும் சரி அல்ல. இவர்கள் பிராகிருதம்,பாலி மொழி பேசியதால் திராவிட மரபினர் தான் என்றும் பிராகிருதமும் தமிழும் கலந்தே கன்னட மொழி உருவாகிற்று என்பதால் திராவிடர்களே அதுவும் கர்நாடகத்தை பூர்விகமாக கொண்ட கன்னட வடுகர்களே திராவிடர்களே என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இவர்கள் கர்நாடக மாநிலத்தின் நந்தி மலையிலிருந்து வந்தவர்கள் என்றும் குறிப்புகள் உள்ளது. இவர்கள் சமண புத்த மதங்களை ஆதரித்தனர்.
ஏன் களப்பிரர்கள் காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்கிறார்கள்? 300 ஆண்டுகாலம் ஆண்ட களப்பிரர்களை பற்றி எந்தவித தகவல்களும் தெரியாததாலும் அவர்கள் எழுதி வைத்த செப்பேடுகளோ கல்வெட்டுகளோ ஓன்றும் கூட கிடைக்காததாலும் அக்காலத்தில் கட்டின கோயில்களோ சிற்பங்களோ இல்லாததாலும் அவர்களது வரலாற்றை பற்றி எதுவும் அறியமுடியலை. அங்கு இங்கு என்று ஒன்றிரண்டு இலக்கிய சான்றுகள் மட்டுமே கிடைக்கிறது. களப்பிரர் காலத்தில் தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் இல்லை என்றும் சொல்லுவார்கள். அது உண்மையில்லை. அவர்களின் காலத்திலும் சமண,பெளத்த,,சைவ சமயம் இலக்கிய நூல்களும் வந்திருக்கிறது. அவர்களின் ஊக்கம் குறைவாக இருந்திருக்கலாமே தவிர தமிழை முற்றிலும் அழிக்க முற்படவில்லை. அவர்களின் காலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூல்களின் விவரம் பின்வருமாறு
அவிநயம்,அவிநயப் புறநடை அல்லது நாலடி நாற்பது என்ற சமணநூல்களை அவிநயனார் எழுதினார்.இது கி.பி.10 ம்நூற்றாண்டு வரை இருந்து அழிந்து போனது.
காக்கைபாடினியம் என்ற நூலை எழுதியவர் காக்கைபாடினியார்.
நத்தத்தம் என்ற செய்யுள் இலக்கணநூலை எழுதியவர் நத்தத்தனார்.
பல்காப்பியனார் இயற்றிய பல்காப்பியம்,பல்காப்பியப் புறனடை என்ற யாப்பிணநூல்களும் பிற்காலத்தில் மறைந்து போயின.
இலக்கிய நூல்கள்:(சமணர் இயற்றியவை)
நரிவிருத்தம்:
திருதக்கத்தேவர் இயற்றிய நரிவிருத்தம். சோழர் அரச குடும்பத்தை சேர்ந்த இவர் சமண துறவியாகி சீவகசிந்தாமணியை எழுத விரும்ப அவரின் துறவு நிலையை சோதிக்க எண்ணி சமண துறவிகள் பணித்ததை அடுத்து எழுதிய நூல் தான் நரிவிருத்தம்.
சீவகசிந்தாமணி:
இது கி.பி 5 அல்லது 6ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
எலிவிருத்தம்,கிளிவிருத்தம்:
இவையும் சமண நூல்களே பின்னாளில் மறைந்து போயின.
பெருங்கதை:
இதனை எழுதியவர் கொங்குவேள். இதனால் இதை கொங்குவேள் மாக்கதை என்றும் உதயணன் கதை என்றும் சொல்லுவர்.
சைவ சமய நூல்கள்:
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்,திருவிரட்டை மணிமாலை மற்றும் அற்புதத் திருவந்தாதி நூல்களை எழுதியவர் காரைக்கால் அம்மையார்.
கயிலைபாதி காளத்திபாதி திருவந்தாதி
திரு ஈங்கோய்மலை எழுபது
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
திருவெழ கூற்றிருக்கை
பெருந்தேவபாணி
கோபப்பிரசாதம்
காரெட்டு
போற்றிக் கலிவெண்பா
திருக்கண்ணப்பத்தேவர் திருமயம்
மூத்த நாயனார் இரட்டை மணிமாலை
சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை
சிவபெருமான் திருவந்தாதி ஆகியவை.
பதிணெண் கீழ்கண்க்கு நூல்களான நாலடியார், நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, முதுமொழி காஞ்சி,ஐந்திணை ஜம்பது, திணைமாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, கைந்திலை ஆகியவற்றில் திருக்குறள், களவழி நாற்பது, முதுமொழிக் காஞ்சி ஆகியவை சங்க காலத்திலே எழுதப்பட்டது. நாலடியார் கி.பி.7ம் நூற்றாண்டில் களப்பிரர் காலத்திற்கு பின்பு எழுதப்பட்டது. மீதியுள்ள நூல்கள் களப்பிரர் காலத்தில் தான் எழுதப்பட்டது.
பிள்ளையார்பட்டி குகைகோயில் களப்பிரர் ஆட்சியில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் உண்டு. சிற்பக்கலைகளும்,ஓவியக் கலைக்களும் நன்கு வளர்ந்தன. ஆனால் எல்லாம் அழிந்து போயின. அதனை ஆதாரப்படுத்தி வைக்காத காரணத்தால் களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலம் என்று அழைப்பர்.
உதவிய நூல்கள் :
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி வேங்கடசாமி
களப்பிரர்கள் ஆட்சியில் தமிழகம் - சதாசிவ பண்டாரத்தார்.
விக்கிபீடியா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்


Comments
Post a Comment