13) பல்லவ பேரரசு

பல்லவப்பேரரசு (கி.பி.250-900) :



பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? தமிழகத்தில் வடபகுதியை சுமார் 650 ஆண்டுகாலம் ஆண்ட இவர்களின் தாய்மொழி எது? இன்று பல்லன் என்று கேலி சொல்லாக அழைக்கப்படும் நீண்ட பற்கள் கொண்டவர்களாக பல்லவர்களின் மூதாதையர்கள் இருந்து இருக்கலாம். அதனால் பல்லன் என்று அழைக்கப்பட்டு மருவி பல்லவன் என்று அழைக்கப்பட்டு இருக்கலாம். 

பஹலவர்கள் என்ற இன்றைய பெர்ஷியா (பாரசீகம்) விலிருந்து வந்தவர்கள் என்பதால் பல்லவர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்ற வில்லியம் ஸ்மித்தின் வாதத்தை அவரே பின்னர் மறுத்து தென்னிந்தியாவை ஆண்ட சாதவாகனர்களின் பேரரசில் சிற்றரசர்களாக இருந்து பேரரசு மறைந்தவுடன் பல்லவர்கள் எழுச்சி பெற்று இருக்கலாம் என்றும் கூறுகிறார்.

தொண்டை நாட்டு பழங்குடிகள் ஆடு மாடுகளை மேய்த்து கொண்டிருந்த குறும்பர்கள். அவர்கள் பால் வியாபாரம் செய்து வந்ததால் பாலவர் (பால்+அவர்) என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி பல்லவர் என்று அழைக்கப்பட்டு இருக்கலாம். அதனால் இவர்கள் தொண்டை நாட்டு குறும்பர் இனத்தவரே என்று ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

யாழ்ப்பாணம் தான் அவர்களின் பூர்விகம் என்றும் அதை பார்த்தால் போத்து வடிவில் (முளை கட்டிய பயிறு-அரும்பு) வடிவத்தில் இருப்பதால் போத்து என்று கூறப்படும். அங்கிருந்து வந்தவர்களாததால் போத்தரசர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்று கூறுவர்.

இன்றைய காரைத் தீவு(மணிபல்லவத்தீவு) தான் பூர்விகம் என்றும் பீலிவளையை மணந்த சோழ இளவரசனுக்கு பிறந்த மகன் தொண்டைக்கொடி சூழ கடலில் இருந்து வந்ததால் தொண்டைமான் என்றும் திரையன் என்றும் பெயர்களில் அழைப்பார்கள். மணி பல்லவ தீவில் இருந்து அனுப்பப்பட்டதால் பல்லவன் எனப்பெயர் பெற்றார். அவர்களின் அடையாள மாலை தொண்டைமாலை. அவ்வாறு வந்த "தொண்டைமான் இளந்திரையன்" தான் பல்லவ வம்சத்தின் மூலம் என்று பொருணாணாற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு சத்ரபதிகள் பேரரசில் கி.பி.2ம் நூற்றாண்டில் ஆண்ட அரசர் முதலாம் ருத்திரவர்மனின் அமைச்சரான சுவிசாக பஹ்லவன் என்ற அமைச்சர் பதவியில் இருந்தார். அவர் தோற்றுவித்த அரசே பல்லவர்கள் அரசு என்றும் அவரே பல்லவர்களின் முதல் அரசரான வீரகூர்ச்சவர்மன் என்றும் சிலர் கூறுகின்றனர். அவரது வழியில் பின் வந்தவர்களே முற்கால பல்லவர்கள் என்றும் கூறுகிறார்கள்.

வடபெண்ணை ஆற்றுக்கு அப்பாற்பட்ட நாட்டை ஆந்திர பேரரசரான சாதவாகன அரசர்கள் ஆண்டு வந்தனர். அவர்கள் கங்கை வரை பரவி இருந்ததால் தங்கள் அரசை பல மாகாணங்களாக பிரித்து அதிகாரியாக பலரை நியமிக்க அம்முறையில் வடபெண்ணை ஆற்றுக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்ட மரபினர் தான் பல்லவர்கள். அவர்கள் சாதவாகன அரசு வீழ்ந்தவுடன் கி.பி.3ம் நூற்றாண்டில் அவர்கள் சுயாட்சி பெற்ற அரசர்களாக ஆனார்கள். அவர்கள் தெற்கே தங்கள் அரசை விரிவாக்க விரும்பி கி.பி.300ல் சோழர்களுக்கு சொந்தமான தொண்டை நாட்டை கைப்பற்றினர். அவர்கள் வழிவந்தவர்களே பிற்கால பல்லவர்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பல்லவர்கள் தமிழர்களே. பல்லவர்கள் காடவர் என்ற பட்டத்தை பெற்றிருந்தனர். இன்றைய கார்வேட் நகரத்தின் பழைய பெயர் காடு வெட்டி நகரம். இது பழைய தமிழ் பெயர்களே. காடுகளை திருத்தி நாட்டை உருவாக்கியவர்கள் என்று கூறப்படுவதால் பல்லவர்கள் இன்றைய வன்னியர்களே என்றும் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பல்லவ முதல் அரசனான சிவஸ்கந்தவர்மன் வைத்துக்கொண்ட மஹாராஜாதிராஜன் பட்டம் தென்னாட்டிற்கு புதியது. அதனால் அவர்கள் ஆரியர்கள் வழி வந்தவர்கள் என்று சிலர் கூறுகின்றனர்.

பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம். மொழியாக தமிழம் பிராகிருதமும் பேச்சு வழக்கில் இருந்தது. சைவம், சமணம், பெளத்தம் மதங்கள் வழங்கப்பட்டு வந்தது. பல்லவர்களுக்கு முன்பு மண்கோயில்களாக இருந்தவை எல்லாம் கற்றழி கோயில்களாக (கல் கோயில்கள்) மாறின. கோயில்கள் கற்களால் கட்டுவதற்கு முன்னோடியே பல்லவர்கள் தான். சமணத்துறவிகளுக்காக குடவரை கோயில்கள் கட்டப்பட்டது. பல்லவர்களின் பட்டயங்களை வைத்து தான் வகைப்படுத்தினார்கள். பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டவர்கள் முற்கால பல்லவர்கள் என்றும் சமஸ்கிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டவர்கள் இடைக்கால பல்லவர்கள் என்றும் கிரந்த தமிழில் பட்டயங்களை வெளியிட்டவர்கள் பிற்கால பல்லவர்கள் என்று வகைப்படுத்தியுள்ளனர்.  பல்லவர்களை முற்காலப் பல்லவர்கள் (கி.பி.250-340), இடைக்கால பல்லவர்கள் (கி.பி.340-575) மற்றும் பிற்கால பல்லவர்கள் (கி.பி.575-900) என்று மூன்று வகையினராக பிரிப்பர்.

முற்கால பல்லவர்களின் அரசில் ஆந்திரமும், தொண்டை நாட்டின் வட பகுதிகளும் இருந்தது. 

முற்கால பல்லவர்கள் :

பப்பதேவன் ( காலம் கி.பி.250-340க்குள் இருக்கலாம்) :

இவரே சிவஸ்கந்த வர்மனின் தந்தை.  இவரே பல்லவர்களின் கிருஷ்ணா நதிக்கும் வடபெண்ணை நதிக்கும் இடைப்பட்ட அரசை ஆண்டு வந்தார். பின்னர் தொண்டை நாடான காஞ்சியை சோழர்களிடமிருந்து கைப்பற்றி தன் மகன் சிவ ஸ்கந்தவர்மனை காஞ்சியில் இளவரசனாக பட்டம் சூட்டினார்.  இவரது காலம் தொண்டை மண்டலத்து வீர கூர்ச்சன் காலத்தை ஒத்துள்ளதால் சில ஆராய்ச்சியாளர்கள் வீர கூர்ச்சனே பப்பதேவன் என்று கருதுகின்றனர்.

சிவஸ்கந்தவர்மன் (கி.பி.300-325) :

தந்தைக்கு பின்னர் ஆட்சியேறினார். காஞ்சியில் இருந்து பல்லாரி ஜில்லாவில் உள்ள "விரிபரம்" கிராமத்தை மறையவர் இருவருக்கு தானமாக கொடுத்த விவரத்தை பிராகிருத மொழியில் எழுதப்பட்ட "மயிதவோலுப் பட்டயம்" கூறுகிறது. இவரது நாடு வடக்கே துங்கபத்திரை ஆறு வரை பரவியிருந்தது.  இவரது ஆட்சியின் எட்டாம் ஆண்டில் "ஹிரஹதகல்லிப் பட்டயம்" பல்லாரி ஜில்லாவில் உள்ள சிற்றூர். சாதவாகனர் ஆட்சியில் இருந்த ஊரில் பல்லவர் தானமாக கொடுத்தார் என்பதிலிருந்து சாதவாகனர்கள் ஆட்சியை தான் இவர்கள் எடுத்து கொண்டார்கள் என்று அறியமுடிகிறது. இந்த பட்டயத்தில் தன்னை "தர்ம மஹாராஜாதிராஜன்" என்று குறித்திருக்கிறார். இவர் அக்நிஷ் டோமம், வாஜபேயம், அஸ்வமேதம் என்ற பெரு வேள்விகளை செய்தவன் என்று இந்த பட்டயம் கூறுகிறது. இவரது ஆட்சியில் நாடு பல மாகாணங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

விஜயஸ்கந்தவர்மன் :

இவர் முற்கால பல்லவ மன்னர்கள் வரிசையில் குறிப்பிடப்படும் மூன்றாவது மன்னர். இவருக்கு முன்னர் ஆட்சி புரிந்த சிவஸ்கந்த வர்மனுக்கும் இவருக்கும் உள்ள உறவுமுறை தெரியவில்லை. இவர் காலத்தில் இளவரசனாக இருந்த  புத்ததேவனின் மனைவியான சாருமதி கொடுத்த பட்டயம் மூலமே இவரின் பெயர் அறியப்படுகிறது. இவர் காலத்தில்  மனைவி சாருமதி தாலூரா என்னுமிடத்தில் உள்ள நாராயண் கோயிலுக்கு நிலத்தை தானமாக அளித்த செய்தி பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தவர்மன் :

 இவரின் விவரம் இவரது மனைவி சாருமதி வெளியிட்ட பட்டயத்தின் மூலமே அறியப்படுகிறது.

புத்யங்குமரன் :

இவர் தாயான சாருமதி வெளியிட்ட பட்டயத்தின் மூலமே இவர் புத்தவர்மனின் மகன் என்று அறியப்படுகிறது.

இடைக்கால பல்லவர்கள் (தமிழ்நாடு) :

முதலாம் குமார விஷ்ணு : 

இவர் காஞ்சியை தலைநகராக கொண்டு ஆண்டவர் என்று தெரிகிறது. இவரது காலத்தில் தான் காஞ்சியை சோழர்களிடமிருந்து  பல்லவர் கைகளுக்கு மாறியது. இவரின் காலம் கி.பி.250-350க்குள் அடங்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தெளிவான கால வரையறை கிடைக்கவில்லை. ஆனாலும் இவரது கொள்ளுபேரன் இரண்டாம் கந்தவர்மனின் காலம் கி.பி.400ல் ஆரம்பிப்பதால் இவரின் காலம் கி.பி.4ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

முதலாம் விஷ்ணு கோபன்: 

காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவ மன்னர். இவரது காலத்தில் தான் மயூரவர்மன் பல்லவருக்கு எதிராக புரட்சி செய்து கடம்பர்கள் அரசை கி.பி.350ல் நிறுவினார். இதனை பயன்படுத்தி கொண்ட கங்கர்கள் கி.பி.355ல் பல்லவர்களிடமிருந்து தன்னாட்சி அடைந்தனர். இவர் குப்த பேரரசர் சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டு அவருக்கு அடங்கிய திறை செலுத்துவராக இருந்தார். இதிலிருந்து இவரின் காலம் நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்று அறியலாம்.

முதலாம் கந்தவர்மன் :

இவர் தந்தை முதலாம் சிம்ம விஷ்ணுவுக்கு பின்னர் அரியணை ஏறினார். இவரது பேரன் இரண்டாம் கந்தவர்மன் கி.பி.400ல் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து தோராயமாக இவரின் ஆட்சிக்காலம் கி.பி.350-375 என்று மதிப்பிடப்படுகிறது.

வீரவர்மன் :

முதலாம் கந்த வர்மனுக்கு பிறகு ஆட்சியேறிய அவரின் மகன். இவரது மகனான இரண்டாம் கந்தவர்மன் கி.பி.400ல் ஆட்சி பொறுப்பை ஏற்றார் என்பதிலிருந்தே தோராயமாக இவரின் காலம் கி.பி.375-400 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இண்டாம் கந்தவர்மன் : (கி.பி.400-436) :

தந்தை வீரவர்மனுக்கு பின்னர் ஆட்சியேறினார். இவரது மகன் முதலாம் சிம்ம வர்மன் கி.பி.436ல் ஆட்சியேறியதாகவும் இவர் 36 ஆண்டுகள் ஆண்டதாகவும் குறிப்புகளின் படியே கி.பி.400-436 இவரது ஆட்சியாண்டாக வரையறுக்கப்பட்டுள்ளது.

முதலாம் சிம்மவர்மன்  (கி.பி.436-460) :

இவரது 22ம் ஆட்சியாண்டில் பாடலி என்னும் சிற்றூரில் சர்வநந்தி என்ற சமண துறவி லோக விலாபம் என்ற சமண நூல் திருத்தி அமைக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த நூல் திருத்தி அமைக்கப்பட்ட வருடம் கி.பி.458 என்பதிலிருந்து இவரின் ஆட்சிக்காலம் கி.பி.436-460 என்று தெரிகிறது. வரலாற்று ஆவணமும் அதையே சொல்லுகிறது. அதன் பிறகு 2 ஆண்டுகள் இவர் ஆட்சி புரிந்ததாகவும் வரலாற்று ஆவணம் கூறுகிறது.

இரண்டாம் விஷ்ணு கோபன் :

இவர் இரண்டாம் கந்தவர்மனின் இன்னொரு மகன். இவரும் முதலாம் சிம்ம வர்மனும் இன்னொரு தம்பியான இரண்டாம் குமார விஷ்ணுவும் என்று 3 மகன்கள். இவரது தந்தை வாகாடக அரசன் சத்தியசேனனிடமிருந்து காஞ்சி அருகிலுள்ள பெரியகடிகாவை மீட்டார். இவரது தம்பி இரண்டாம் குமார விஷ்ணு காஞ்சியை மீட்டார். இதிலிருந்து இவரின் காலம் கி.பி.436-460க்குள் இருக்கும் என்று தோராயமாக குறிப்பிடுகின்றனர். இவர் ஆந்திரத்தை அரசாண்டு கொண்டு இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இரண்டாம் குமார விஷ்ணு :

இரண்டாம் கந்தவர்மனின் கடைசி மகனான இவர் புத்த சமயத்தை தழுவி துறவியாகி போதி தர்மர் என்ற பெயருடன் சீனா சென்று அங்கு மகாயான புத்த மதத்தை பரப்பினார். சீனர்களுக்கு களரியையும் மருத்துவத்தையும் கற்று கொடுத்தார். இவர் கற்று கொடுத்த தற்காப்பு கலைகளே இன்று குங்ஃபூ என்றும் கராத்தே என்றும் வழங்கப்பட்டு வருகிறது. சீனா மக்களால் தாமோ என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர் சீனாவிலையே விஷம் வைத்து மரணம் அடைந்தார்.

மூன்றாம் கந்தவர்மன் (கி.பி.460-475) :

முதலாம் சிம்ம வர்மனின் மகனான இவர் அவருக்கு பின்னர் அரசு ஏறினார். 5ம் நூற்றாண்டு மத்தியில் கங்க நாட்டை ஆண்ட கங்கர் அரசனான இரண்டாம் மாதவன் கந்தவர்மன் மற்றும் அவரின் தந்தை சிம்ம வர்மன் உதவியால் தான் அரசை கைப்பற்றியதாக கூறுவதிலிருந்து தந்தைக்கு அடுத்து இவரே அரசு புரிந்தார் என்று தெரிகிறது.

இரண்டாம் சிம்மவர்மன் :

4ம் பல்லவர்-கதம்பர்கள் போரில் திருப்பர்வதத்தை ஆண்ட முதலாம் கிருஷ்ணவர்மன் காஞ்சிஅரசனிடம் தோற்றார் என்பதிலிருந்து அது இரண்டாம் சிம்ம வர்மனாக இருக்கலாம் என்றும் இவரின் காலம் கி.பி‌475க்கு மேல் இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

புத்த வர்மன் :

இரண்டாம் குமார விஷ்ணு (என்ற) போதி தர்மரின் மகன் இவர். அவரின் காலம் கி.பி.436-458 என்பதிலிருந்து இவர் 5ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆண்டிருக்தலாம் என்று அறியமுடிகிறது. இவர் களப்பிரர் கீழ் இருந்த சோழர்களை வென்றார் என்று பட்டயம் கூறுகிறது.

முதலாம் நந்திவர்மன் :

இவர் மூன்றாம் கந்தவர்மனின் மகன். இவரது காலம் கி.பி.5ம் நூற்றாண்டில் மத்தியில் என்று கருதுகின்றனர்.

மூன்றாம் விஷ்ணுகோபன் :

கதம்ப அரசன் இரவிவர்மன் தன் பட்டயத்தில் காஞ்சி அரசனான சண்டதண்டனை அழித்தான் கூறுவதிலிருந்தும் மூன்றாம் விஷ்ணு கோபன் தன்னை உக்கிர தண்டன் என்று அழைத்துக்கொண்டதால் இவரே சண்டதண்டன் என்று முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வருகின்றனர்.

மூன்றாம் குமார விஷ்ணு :

இவரது காலம் கி.பி.6ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் என்று கணிக்கின்றனர்.

மூன்றாம் சிம்ம வர்மன் :

இவரே பிற்கால பல்லவர்கள் என்று வரிசையை ஆரம்பித்த முதலாம் சிம்ம விஷ்ணுவின் தந்தை. இவரது காலம் கி.பி.575ல் முடிந்ததாக தோராயமாக குறிப்பிடுகின்றனர். இவருக்கு சிம்ம விஷ்ணு மற்றும் பீம வர்மன் என்று இரு மகன்கள் இருந்தனர். சிம்மவிஷ்ணு பல்லவ அரியணை ஏறவே பீமவர்மன் காம்போஜ நாட்டு இளவரசியை மணந்தார். மற்றொரு நாட்டுடன் ஏற்பட்ட போரில் காம்போஜ மன்னரின் வாரிசுகள் இறக்கவே பீம வர்மன் அடுத்து காம்போஜ மன்னரானார். இவரின் வாரிசுகள் சென்லா வம்சத்தை தொடங்க அதன் வழியில் வந்த இரண்டாம் நந்திவர்மன் 150 ஆண்டுகள் கழித்து கி.பி.731ல் பல்லவ அரியணையில் ஏறினார்.

பிற்கால பல்லவர்கள் :

பிற்கால பல்லவர்கள் காலம் தான் சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலைக்கு பொற்காலம். மாமல்லபுரம் குகைக் கோயில்கள் மற்றும் காஞ்சி கைலாசநாதர் கோயில்கள் கட்டியதும் பிற்கால பல்லவர்களின் காலத்தே. பிற்கால பல்லவர்கள் களப்பிரர்களையும், சோழர்களையும் வென்று ஆட்சியை விரிவுபடுத்தினார்கள். கடைசியில் நிருபதுங்கவர்மனின் தம்பியான கம்ப வர்மனின் மகனான அபராஜிதவர்மன், நிருபதுங்கவர்மன் வாரிசின்றி மறைந்ததால் அவரது ராஜ்ஜியமும் சேர்ந்து ஆண்டார். அபராஜிதவர்மன் விஜயாலயச்சோழன் மகன் ஆதித்யனிடம் தோற்றத்துடன் பல்லவர்கள் பேரரசு வீழ்ந்து சோழப் பேரரசு எழுந்தது.

முதலாம் சிம்மவிஷ்ணு (கி.பி.575-600) :


மூன்றாம் சிம்ம வர்மனின் மகனான இவர் பிற்கால பல்லவ மன்னர்களுள் முதல் மன்னனாக குறிப்பிடப்படுகிறார். இவர் அவனி சிம்மன் என்று பெயரில் அறியப்படுகிறார். இவர் பாண்டியன் கடுங்கோன் மதுரையில் களப்பிரர் ஆட்சியை வீழ்த்தி மதுரையை கைப்பற்றியவுடன் தொண்டை மண்டலத்தில் களப்பிரர்களை வீழ்த்தி தொண்டை மண்டலத்தில் பல்லவ ஆட்சியை மலர செய்தார். காஞ்சிக்கு தெற்கிலும் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய முதல் பல்லவ மன்னன் இவரே. இவரை பற்றிய இவர் காலத்திய கல்வெட்டுக்கள் செப்பேடுகள் கிடைக்காவிட்டாலும் இவரது மகனான முதலாம் மகேந்திர வர்மன் தான் இயற்றிய மத்த விலாச பிரஹசனம் நூலில் இவர் பல வெற்றிகளை அடைந்த அரசனாக குறிப்பிட்டுள்ளார். வீழ்ந்து கொண்டிருந்த பல்லவ அரசை மீட்டு அதை ஒரு சாம்ராஜ்ஜியமாக ஆக்கிய பெருமை இவரையே சேரும். பலம் குன்றியிருந்த பல்லவர்கள் சேரர் சோழ பாண்டியர்களை அடக்கி தென்னிந்தியாவில் ஒரு பலமான சாம்ராஜ்யமாக ஆனதே இவரின் காலத்தில் தான்.

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி.600-630) :

பிற்கால பல்லவர்களில் முதலாம் மகேந்திர வர்மன் குறிப்பிடத்தகுந்தவர். களப்பிரர்களை தோற்கடித்து அவர்களை விரட்டியடித்த சிம்மவிஷ்ணு பல்லவரின் மகன். இவருக்கு மகேந்திர விக்ரமன் என்ற பெயரும் உண்டு. இவரின் காலத்தில் தான் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி காஞ்சியை முற்றுகையிட்டு கைப்பற்றினான். இவர் முதலில் சமணராக இருந்து பின்னர் சைவ சமயத்திற்கு மாறினார். நாயன்மார்களுள் ஒருவரான அப்பரால் இவரின் நோய் தீர்க்கப்பட்டதால் சைவ சமயத்திற்கு மாறியதாக தெரிகிறது. இவர் இயற்றிய மத்தவிலாசம் என்ற சமஸ்கிருத நாடகம் புத்தமதத்தை கிண்டலடித்து இயற்றப்பட்டது. இவர் வீணை வாசிப்பதில் வல்லவர். அவரே பரிவாதினி என்ற வீணையை உருவாக்கியவர். சிற்பக்கலையிலும் வல்லவர். மாறுவேடங்கள் புனைவதிலும் வல்லவர். இவரின் காலத்திலையே திருச்சி, சித்தன்னவாசல், மாமண்டூர், மகேந்திர வாடி, திரு வல்லம், மண்டகப்பட்டு ஆகிய ஊர்களில் குகைக் கோயில்கள் கட்டப்பட்டது. இவர் ஓவியம் வரைவதில் வல்லவர் என்பதால் சித்திரகாரப்புலி என்றும் அழைத்தனர். விசித்திரசித்தன் என்ற பெயரிலும் இவரை அழைத்தனர். இவருக்கு மட்டும் 23 பட்டப்பெயர்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இவரே குடைவரை கோயிலின் முன்னோடி. இவர் விழுப்புரம் மாவட்டத்தில் மண்டகப்பட்டு என்னும் ஊரில் "இலக்சிதன் கோயில்" என்ற முதல் குடைவரை கோயிலை கட்டினார். இந்த கோயிலை மரம், செங்கல், சுண்ணாம்பு கவலையின்றி கட்டியதாக தெரிகிறது. இது போக மாமல்லபுரத்தில் நிறைய குடைவரை கோயில்களையும் கட்டியுள்ளார். கட்டிடக்கலை சிற்பக்கலை இவற்றில் இவரது பங்கு அளப்பரியது. தென்னிந்திய வரலாற்றில் கலையும் கல்வியும் சிறப்புற விளங்க ஆரம்பித்ததே பல்லவர்கள் ஆட்சியில் தான். இவற்றை துவக்கி வைத்த பெருமைக்குரியவர் இவரே. இவரது காலத்தில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியால் இவரது படைகள் தோற்கடிக்கப்பட்டது. இந்த போரில் இவர் இறந்து போனார்.



முதலாம் நரசிம்மபல்லவன் (மாமல்லன்)  (கி.பி.630-668) :

 மல்யுத்தத்தில் சிறந்து விளங்கியதால் மாமல்லன் என்ற பட்டப்பெயர் வந்ததாகவும்இரண்டாம் புலிகேசியை  போரில் கொன்று (கி.பி.642) அவன் தலைநகரான வாதாபியை (இன்றைய பெயர் கர்நாடகத்திலுள்ள பாதாமி) தீக்கிரையாக்கியதால் அவரின் பட்டப்பெயரான வாதாபிகொண்டான் பெயர் வந்ததாகவும் கூறுவர். அந்த போரில் பங்கெடுத்த இவரின் தளபதியான பரஞ்சோதி பின்னாளில் சிறுத்தொண்ட நாயனாராக (63 நாயன்மார்களுள் ஒருவராக) புகழ்பெற்றார்.இவரின் பெயராலையே இரண்டாம் புலிகேசியை வென்ற நினைவாக தான் மாமல்லபுரம் என்ற ஊரே உருவாகிற்று. அங்கே உள்ள ஜந்து ரதங்கள் இவர் காலத்தில்  உருவாகிற்று. கல்கி எழுதிய "சிவகாமியின் சபதம்" நாவலின் நாயகன் இவரே. ஆனால் அதில் வரும் சிவகாமி உண்மையான கதாபாத்திரமல்ல. இவரின் ஆட்சிகாலத்தில் தான் சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்திருந்து காஞ்சியின் அழகையும் அதன் பல்கலைகழகத்தின் சிறப்பையும் எழுதியுள்ளார். சாளுக்கியரை வென்றதோடு இல்லாமல் பாண்டியர்களையும் கங்கர்களையும் இலங்கையையும் வெற்றி கொண்டார். இவர் காலத்தில் பல்லவ நாட்டில் மலையை குடைந்து பல குகைக் கோயில்கள் அமைக்கப்பட்டது. நாமக்கல் நரசிங்கபெருமாள் குகைக்கோயில், மாமல்லபுரம் மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், பஞ்சபாண்டவர்கள் ரதம் ஆகியவையும் இவர் காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது. இவரது ஆட்சியில் மாமல்லபுரம் ஒரு சிறந்த துறைமுக நகரமாக உருவாகியது. 




இரண்டாம் மகேந்திரவர்மன் (கி.பி.668-670)

நரசிம்மவர்மருக்கு பின் அவரின் மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் ஆட்சியில் ஏறினார். சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியின் மகன் முதலாம் விக்ரமாதித்யன்  பல்லவ நாட்டின் மீது படையெடுத்து வந்தார். அந்த போரில் இரண்டாம் மகேந்திரவர்மன் மாண்டார். இரண்டு ஆண்டுகளே ஆட்சி புரிந்த இவரின் காலம் கி.பி. 668-670.

முதலாம் பரமேஸ்வரன் (கி.பி.670-695) :

அவருக்கு பின் அவரின் மகன் முதலாம் பரமேஸ்வரன் பட்டத்திற்கு வந்தார். காஞ்சிபுரம் அருகே தூரம் என்னுமிடத்தில் கற்கோவிலை கட்டினார். சாளுக்கிய விக்ரமாதித்யனை (இரண ரசிகன்) நல்லூர் அருகே வென்றார். அதனால் இரண ஜெயன் என்ற பட்டத்தை பெற்றார். பின்னர் முதலாம் விக்கிரமாதித்தன் மேற்கு கங்க அரசன் பூவிக்கிரமன் துணையோடு பல்லவ நாட்டின் மீது போர்தொடுத்து இவரை தோற்கடித்தார். இவர் சிவன் மீது மிகுந்த பற்றுடையவராக விளங்கினார்.

இரண்டாம் நரசிம்மன் (இராஜசிம்மன்) (கி.பி.695-725) :


இவருக்கு பின் இவரின் மகன் இரண்டாம் நரசிம்மன், இராஜசிம்மன் என்ற பெயரில் ஆட்சியில் அமர்ந்தார். இலட்சத்தீவுகளை வென்றதாக குறிப்புகள் உள்ளது. தந்தையின் காலத்தில் முதலாம் விக்ரமாதித்யனை வென்றது இவர் தான் என்று குறிப்புகளும் உண்டு. சிற்பககலையில் வித்தகர். மாமல்லரின் பெயர் விட்டதால் என்னவோ இவரும் மாமல்லபுரத்தில் இன்றும் விளங்கும் கடற்கரை கோயிலை எழுப்பினார். காஞ்சியில் கைலாசநாதர் கோயிலை கட்டியதும் இவரே. மேலும் நாகப்பட்டினத்தில் பெளத்த கோயிலும் கட்டியதாகவும் செய்திகள் உள்ளது. 30 ஆண்டுகள் ஆண்ட இவரின் காலம் பெரும்பாலும் போர்கள் இல்லாமல் அமைதியாகவும் சிற்பங்களுடன் கோயில்களுமாக சிறப்புற விளங்கியது. வடமொழி புலவரான தண்டியும் 63 நாயன்மார்களில் ஒருவரான பூசனாரும் இவரின் காலத்தே வாழ்ந்தவர்கள்.

இரண்டாம் பரமேஸ்வரன் (கி.பி.725-730)

இரண்டாம் நரசிம்மன் என்ற ராஜசிம்மனுக்கு பின் அவரின் மகனான இரண்டாம் பரமேஸ்வரன் ஆட்சிக்கு வந்தார். ராஜசிம்மனை போலவே இவரும் சிவன் கோயில்கள் கட்ட உதவி புரிந்தார். இவரது காலத்தில் பல்லவர்-சாளுக்கியர் பகைமை உச்சத்தை தொடடது. சாளுக்கிய இரண்டாம் விக்ரமாதித்யன் கங்க மன்னனுடன் சேர்ந்து படையெடுத்து வந்த போரில் 5 ஆண்டுகள் ஆண்ட இவர் போர் களத்திலையே மாண்டார். இவருடன் சிம்ம விஷ்ணு பரம்பரையின் ஆட்சி முடிந்தது. இதன் பின்னர் அடுத்து பிற்கால பல்லவர் ஆட்சியை ஆரம்பித்த சிம்ம விஷ்ணு தம்பியான பீமவர்மனின் பரம்பரையின் ஆட்சி தொடங்கியது.

இரண்டாம் நந்திவர்மன் (பல்லவமல்லன்) கி.பி.731-796 :

சிம்ம விஷ்ணு பரம்பரையில் வந்த இரண்டாம் பரமேஸ்வரனுக்கு சித்திர மாயன் என்ற மகன் இருந்தார். அவர் வயதில் சிறுவனாக இருந்ததால் பெரியவர்கள்/அமைச்சர்கள் விரும்பவில்லை. என்ன காரணம் என்று குறிப்பிடப்படவில்லை. இந்த சித்திரமாயன் முறையான மனைவிக்கு பிறந்தவராக இல்லாததா என்ற விவரமும் குறிப்பிடப்படவில்லை. இந்த நேரத்தில் அமைச்சர்கள் சிம்ம விஷ்ணுவின் தம்பியான பீமவர்மன் அந்த காலத்தில் காம்போஜ (தற்போதைய கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகள் இணைந்தது) நாட்டிற்கு சென்று அந்த மன்னரின் மகளை மணந்து சாம்பவ நாட்டுக்கு எதிரான போரில் காம்போஜ மன்னரின் வாரிசுகள் இறந்ததால் மருமகனான பீம வர்மனை அடுத்த அரசனாக்க அறிவித்து அவரின் வழியில் வந்த இரணியவர்மனை அரசராக்க முனைந்தனர். பீம வர்மன் துவக்கி வைத்த வம்சமே சென்லா வம்சம். அப்படியான பீமவர்மன் பாவவர்மன் துவக்கி வைத்த சென்லா வம்சத்தில் வந்த இரணியவர்மன் பல்லவ அமைச்சர்களின் வேண்டுகோளை மறுத்து தனது 4 மகன்களையும் வினவ கடைசி மகனான 12வது நந்திவர்மன் மட்டும் அரசராக சம்மதிக்க அமைச்சர்கள் இரண்டாம் நந்திவர்மன் என்று பெயர் சூட்டி அரசனாக்கினர். இதனால் சித்திரமாயன் பகைவனான சாளுக்கியருடன் இணைந்து இரண்டாம் நந்திவர்மனை விரட்டி விட்டு காஞ்சியை கைப்பற்ற இரண்டாம் நந்திவர்மன் இராஷ்டிரகூட மன்னரின் உதவி பெற்று சித்திர மாயனை வென்று காஞ்சியை மீண்டும் கைப்பற்றினார். இந்த உறவினால் இராஷ்டிரகூட இளவரசி ரேவா தேவியை மணந்தார். இதனால் சித்திரமாயன் பாண்டியர் உதவியை நாட பாண்டிய அரிகேசரி பராங்குச மன்னர் கொங்கு நாட்டை கைப்பற்ற இது தான் வழி என்று உணர்ந்து சித்திரமாயனுக்கு உதவ பல்லவ படைகளுடன் மோதினார். இரண்டாம் நந்திவர்மன் நந்திபுரம் (கும்பகோணத்திற்கு அருகிலுள்ளது) கோட்டையில் இருந்த போது சிறைபிடிக்கப்பட அவரின் தளபதியான உதயசந்திரன் பெரும்படையுடன் வந்து இரண்டாம் நந்திவர்மனை சிறைமீட்டு சித்திரமாயனை கொன்றார்.

இரண்டாம் பரமேஸ்வரவர்மனுடன் சிம்ம விஷ்ணு பரம்பரை ஆட்சியில் முடிய அவரின் தம்பி பீமவர்மனின் பரம்பரையில் வந்த இரண்டாம் நந்திவர்மன் 65 ஆண்டுகள் அரசாண்டார். இவரை காம்போஜ நாட்டிலிருந்து அழைத்து வந்து இவரின் 12 வயதில் அரியணை ஏற்றினர். இவருக்கு துணையாக காம்போஜ நாட்டிலிருந்து தளபதி உதயசந்திரன் இவருக்கு உறுதுணையாக நின்றார். இவரின் காலத்தில் இவரின் தளபதி உதயசந்திரன் என்பவர் பாண்டியர், சோழர்கள், இராஷ்டிரகூடர்கள் மற்றும் சாளுக்கியர்களை வென்று தொடர் வெற்றிகளை பெற்றவரலாறும் உண்டு. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலை கட்டியதும் இவரே. அது மட்டுமல்லாது காஞ்சியில் பரமேஸ்வர விண்ணகரம், முத்தீஸ்வரர் கோயில் ஆகியவற்றையும் இவர் கட்டினார். தற்போதைய நாகர்கோவில் மாவட்டத்திலுள்ள பகவதி அம்மன் கோயில் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது. திருமங்கையாழ்வார் இவரின் காலத்திலே வாழ்ந்தார். தீவிர வைஷ்ணவராக வாழ்ந்தவர்.

தந்திவர்மன் : (கி.பி.775-825)

இரண்டாம் நந்திவர்மனுக்கு பின் அவரின் மகன் தந்திவர்மன் ஆட்சிக்கு வந்தார். இராஷ்டிரகூடர்களின் வாரிசுரிமை போரில் ஓரு தரப்பான இரண்டாம் கோவிந்தனை ஆதரிக்க மற்றொரு தரப்பான துருவன் வெற்றியடைந்தார். இதனால் துருவன் பல்லவர்களை பழிவாங்க காஞ்சியை போரிட்டு கைப்பற்றியதும் வேறு வழியின்றி இராஷ்டிரகூடர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு கப்பம் கட்டினார். துருவன் மறைந்த பின்னர் இரண்டாம் கோவிந்தனின் மகனான மூன்றாம் கோவிந்தன் ஆட்சிக்கு வர இவர் கப்பம் கட்ட மறுத்து விட்டார். இதனால் மீண்டும் இராஷ்டரகூடர்கள் போரிட்டு பல்லவர்களை வீழ்த்தவே பல்லவர்கள் மீண்டும் சிற்றரசாக மாறினர். கி.பி.775-825 வரை 50 ஆண்டுகள் பல்லவ நாட்டை ஆண்ட பெருமைக்குரியவர்.

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850) :

தந்திவர்மனுக்கு பின் மூன்றாம் நந்திவர்மன் ஆட்சிக்கு வந்தார். இவரின் மனைவி இராஷ்டிரகூட இளவரசியாக இருந்ததால் அவர்கள் மற்றும் சோழர், கங்கர்களின் உதவியுடன் பாண்டியர்களை போரில் வென்றார். இதனால் இவர் "தென்னாறு எரிந்த நந்திவர்மன்" என்று புகழப்பட்டார். நந்திகலம்பகத்தில் பாடப்பட்ட நந்திவர்மன் இவரே. இவருக்கு நந்தி போத்தரசன், விஜய நந்தி, நந்தி விக்கிரமவர்மன் மற்றும் விக்கிரமவர்மன் என பல பெயர்கள் உண்டு. இராஷ்டிரகூடர்களை வென்றதோடு மட்டுமல்லாது பாண்டியர்கள் ஆதிக்கத்தில் இருந்த பல்லவ நாட்டின் பகுதிகளையும் மீட்டுக் கொண்டார். இவர் காலத்தில் மயிலை மற்றும் மாமல்லபுரத்திலும் துறைமுகங்கள் இருந்தது. இதன் மூலம் அயல் நாடுகளுடன் வாணிப தொடர்பும் இருந்தது. 

நிருபதுங்கவர்மன் (கி.பி.850-882) :

மூன்றாம் நந்திவர்மனுக்கு பிறகு அவரின் மகன் நிருபதுங்கவர்மன் தென்பகுதியையும் அவரின் தம்பி கம்பவர்மன் வடபகுதியையும் ஆண்டு வந்தனர். திருப்புறம்பியம் போரில் பாண்டியர்களுடன் இணைய இவரின் தம்பி மகனான அபராஜிதவர்மன் விஜயாலயச்சோழனுடன் சேர்ந்து பாண்டியனை வென்றார். இந்த போருக்கு பின் தான் சோழவம்சம் மறுபடியும் பொலிவுற ஆரம்பித்தது. இவருக்கு வாரிசு இல்லாததால் தம்பி கம்பவர்மனின் மகனாகிய அபராஜித வர்மன் அடுத்து பட்டத்துக்கு வந்தார். இவரின் காலத்தில் தான் பரமேஸ்வரமங்கலத்தில் சைலேஸ்வரம் கோயில் கட்டப்பட்டது. இவர் வைணவ மதத்தை பின்பற்றினார்.

கம்பவர்மன் (கி.பி.850-882) :

இவர் மூன்றாம் தந்திவர்மனுக்கும் பழுவேட்டரையரின் மகளான கந்தன் மாறம்பாவையருக்கும் பிறந்தவர். இவர் கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் மகளான விஜயா என்பவரை மணந்து கொண்டார். இவர் காலத்தில் வாலாஜாபாத்திற்கு அருகிலுள்ள ஊத்துகாட்டு சிவன் கோயில் திருபப்ணிகள் நடத்தினார்.

அபராஜித வர்மன் (கி.பி.882-897)

அபராஜித வர்மனும் விஜயாலயச்சோழன் மகன் ஆதித்யனும் சேர்ந்து வரகுண பாண்டியன் மற்றும் நிருபதுங்க வர்மன் படைகளை திருப்புறம்பியம் போரில் வென்றனர். இந்த போரில் பேரன் அபராஜித வர்மனுக்காக தள்ளாத வயதில் களம் இறங்கிய கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி மரணமடைந்தார்.ஆனால் சோழர்களுக்கு திரும்ப கொடுப்பதாக சொல்லப்பட்டிருந்த சோழநாட்டின் பகுதிகளை கொடுக்காததால் ஆதித்யசோழன் பல்லவருடன் போருக்கு வந்தான் என்று சொல்லப்பட்டாலும் ஆதித்ய சோழன் திறப்புறம்பிய போரின் வெற்றியை பயன்படுத்தி சோழ பேரரசை விரிவுபடுத்தவே அபராஜித வர்மனுடன் படையெடுத்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த போரில் யானையின் மீது அமர்ந்த போரிட்ட அபராஜித பல்லவனை ஆதித்யசோழன் வீழ்த்தி பல்லவர்களின் ஆட்சிக்கு (கி.பி.897)முடிவுரை எழுதினான். இவரது காலத்தில் திருத்தணி வீரட்டானேஸ்வரர் கோயில் கட்டப்பட்டது.

உதவிய நூல்கள் :

பல்லவர்கள் வரலாறு - மு.இராசமாணிக்கனார்

பல்லவ பேரரசர்கள் - மு.இராசமாணிக்கனார்

விக்கிபீடியா தகவல்கள்

பல்லவர்கள் தொன்மையியல் வரலாறு - கேப்ரியல் ஜூவே

பல்லவர் வரலாறு - இரா. மன்னர் மன்னன்

படங்கள்  :

கூகுள் படங்கள் & திருமுத்துகுமரன்


Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு