14) கதம்பர்கள் பேரரசு
கூப்பன்கள் அரசு (கி.பி.345-540) :
மயூரசர்மன் (கி.பி.345-365) :
வட கர்நாடகாவிலுள்ள தலகுந்தாவை பூர்வீகமாக கொண்ட வைதீக பிராமணர். இவர் தனது குருவும் தாத்தாவுமான வீரசர்மாவுடன் காஞ்சிக்கு படிக்க வந்தார். பல்லவ இளவரசி வருவதால் வழியை விட்டு விலகி செல்ல குதிரையில் இருந்த பல்லவ காவலாளியால் கீழே மிதித்து தள்ளி அவமானப்படுத்தப்பட்டார். தனக்கு நேர்ந்த அவமானத்திற்காக காஞ்சி கடிகையின் தலைவரை சந்தித்து முறையிட்டும் அவர் அரசரின் விஷயத்தில் தலையிட மறுக்கவே தனது அவமானத்திற்காக கடிகையின் படிப்பை துறந்து வாளை கையிலெடுத்தார். இந்த நிகழ்வை தலகுந்தா கல்வெட்டு தெளிவாக விவரிக்கிறது. மயூரசர்மாவின் கோபம் இன்றைய நவீன கர்நாடகத்தின் பகுதிகளை அடக்கிய முதல் இராஜ்ஜியமாக கதம்பர்கள் இராஜ்ஜியம் உருவானது. அந்தணனாக மயூரசர்மன் பின்னாளில் பல்லவர்களை எதிர்த்து போரிட்டு தனியரசை(கதம்பர்கள் வம்சத்தை) உருவாக்கியது தனிக்கதை. ஆனால் இந்த நேரத்தில் சமுத்திர குப்தரால் பல்லவ மன்னனான விஷ்ணுகோபன் மோசமாக தோற்கடிக்கப்பட்ட நிகழ்ச்சியால் நடந்திருக்கலாம் என்று சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல்லவர்களை தோற்கடித்தும் கோலார் பிரதேசத்தின் குறுநில மன்னர்களை அடிபணிய செய்தும் ஶ்ரீபர்வத காடுகளில் (ஆந்திராவின் ஶ்ரீசைலம் காடுகள்) உள்ளிடக்கிய பிரதேசத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். பின்னர் வந்த பல்லவன் கந்தவர்மனால் இவரது தடுத்து நிறுத்த முடியாமல் போகவே இவரை மேற்கு கடல் முதல் மலப்பிரபா நதிவரையிலான பகுதிகளில் இவரை அரசராக அங்கீகரித்தார். ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் இவரது கல்வெட்டுகளில் சேனானி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இவர் பல்லவர்களின் ராணுவத்தில் தளபதியாக நியமிக்கப்பட்டதாக கருதுகின்றனர். சமுத்திரகுப்தர் விஷ்ணுகோபனை தோற்கடித்த குழப்பத்தை பயன்படுத்தி பனவாசியில் ராஜ்ஜியம் அமைத்ததாக சிலர் கருதுகின்றனர். இவர் திரிகூடர்கள், அபிஹிராக்கள், சகஸ்தானர்கள், மெளகாரிகள் மற்றும் புன்னாதர்களை தோற்கடித்த விவரமும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. தனது வெற்றியை கொண்டாட பல குதிரைகளை பலியிட்டார். தலகுந்தாவின் பிராமணர்களுக்கு 144 கிராமங்களை பிரம்மதேயமாக வழங்கினார்.
கங்க வர்மன் (கி.பி.365-390) :
மயூர சர்மனுக்கு பின் அவரின் மகன் கங்கவர்மா வாகடகர்களுடன் போரிட்டு தோற்றதாகவும் ஆனால் அரசை நிலைநிறுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வரலாற்று ஆய்வாளர் மஜீம்தார் இந்த போர் எததரப்புக்கும் வெற்றி தோல்வியில்லாமல் முடிந்தது. அதனால் தான் அவரின் ஆட்சிக்கு ஆபத்தில்லாமல் தொடர முடிந்தது என்கிறார்.
பாகீரத் (கி.பி.390-415) :
இவர் தனது தந்தை கங்க வர்மனுக்கு பிறகு அடுத்து அரியணை ஏறினார். கல்வெட்டுகள் இவர் தனது ராஜ்ஜியத்தை பலப்படுத்தியதை தெரிவிக்கின்றன. இவரது அவைக்கு சந்திரகுப்த விக்கிரமாதித்யர் தனது ஆஸ்தான புலவரான காளிதாசரை அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வு இரு தரப்பு திருமண உறவுக்கு என்று சொல்லப்படுகிறது. இளைய மகன் காகுஸ்த வர்மன் குப்தர்கள் வம்சத்தில் திருமணம் முடித்தார். மூத்த மகனான ரகு சிறந்த போர் வீரராக நாட்டை விரிவுபடுத்துவதில் ஆர்வமுடையவராக இருந்தார். பாகீரத் மறைவுக்கு மூத்த மகன் ரகு பட்டமேற்க இளைய மகன் காகுஸ்த வர்மன் இளவரசராக பொறுப்பேற்றார்.
ரகு (கி.பி.415-435) :
தந்தை பாகீரத் மறைவுக்கு பின்னர் ஆட்சி ஏறினார். இவர் தந்தை மறைவுக்கு பின்னர் சிற்றரசர்கள் பலர் சுயாட்சி கொடி பிடிக்க துவங்கவே அவர்களை தனது ராணுவ பலத்தால் அடக்கினார். தலகுந்தா கல்வெட்டுகள் ரகு ஆட்சி ஏற்ற புதிதில் அரசை நிலைநிறுத்த நிறைய பாடுபட்டதாக கூறுகிறது. இவரது ஆட்சியில் சகோதரன் காகுஸ்தவர்மன் இளவரசராக இருந்து பலஷிகா ( ஹலசி ) நகரில் இருந்து பொறுப்புகளை பார்த்தார். ஹலசி கதம்பர்களின் இரண்டாவது தலைநகரமாகியது. ரகு பல்லவர்களுடனான போரில் மாண்டு போனதாக தெரிகிறது.
காகுஸ்த வர்மன் (கி.பி.435-455) :
இவர் கதம்பர்களின் 3வது அரசர் பாகீரத்தின் இளைய மகன். இவர் தனது சகோதரர் ரகுவுக்கு பின்னர் ஆட்சியேறினார். சகோதரனின் ஆட்சியில் இவர் இளவரசனாக பட்டம் ஏற்று இருந்தார். இவர் மற்ற அரச குடும்பங்களுடன் திருமண உறவு கொண்டிருந்தார். தனது மகள்களில் ஒருவரை குப்தர்கள் அரச குடும்பத்தில் திருமணம் செய்து வைத்தார். மற்றொரு மகளை வாகடக அரசர் நரேந்திர சேனாவுக்கு திருமணம் செய்து வைத்தார். காகுஸ்தவர்மனின் ஆட்சியில் கர்நாடகாவின் பெரும்பகுதிகள் கதம்பர்கள் வசம் இருந்தது. தலகுந்தா மற்றும் ஹால்மிடி கல்வெட்டுகள் இவரை தலைசிறந்த போர்வீரராக குறிப்பிடுகிறது. இவரது மரணத்திற்கு பிறகு இவரது மகன்களாக ராஜ்ஜியத்தை பிரித்து ஆள ஆரம்பித்தனர்.
சண்டி வர்மன் (கி.பி.455-460) :
தந்தை காகுஸ்தவர்மனின் மறைவுக்கு பின்னர் வனவாசியை மையமாக வைத்து வட பகுதிகளை இவர் ஆள ஆரம்பித்தார். இவரது சகோதரனான கிருஷ்ணவர்மன் திரிபர்வதத்தை மையமாக கொண்டு தெற்கு பகுதிகளை ஆள ஆரம்பித்தார். இவரது தலகுந்தா கல்வெட்டுகளின் மூலம் மயூர சர்மன் இவர்களது பரம்பரை தோற்றுவித்தார் என்றும் அவரது பூர்வீக வீட்டின் அருகில் கடம்ப மரம் வளர்ந்து வந்ததாகவும் அதனால் அவர் தோற்றுவித்த பரம்பரைக்கு கதம்பர்கள் என்று பெயர் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிவ மந்தாத்ரி (கி.பி.460-475) :
சண்டி வர்மனுக்கு பிறகு அவரது மகனான சிவ மந்தாத்ரி ஆட்சிக்கு வந்தார்.
மிருகேஷ வர்மன் (கி.பி.475-485) :
இவரை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. சிவ மந்தாத்ரிக்கு பின்னர் ஆட்சி ஏறினார் என்பது மட்டும் தெரிய வருகிறது.
ரவி வர்மன் (கி.பி.485-519) :
இவரது ஆட்சியில் கங்கர்களுடன் பல்லவர்களுடன் உரசல்கள் இருந்தது. இவர் வாகதகர்களை தோற்கடித்து வடக்கே நர்மதா நதி வரை தன் அரசை விரிவாக்கினார். இவரது அரசு கர்நாடகா, கோவா மற்றும் தெற்கு மஹாராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
ஹரி வர்மன் (கி.பி.519-525) :
திரிபர்வதா கிளை இவரது ஆட்சியில் வனவாசி கிளையுடன் இணைந்தது.
திரிபர்வதா கிளை :
காகுஸ்த வர்மனின் மறைவுக்கு பின்னர் அவரது மகன்களில் ஒருவரான முதலாம் கிருஷ்ண வர்மனால் தோற்றுவிக்கப்பட்ட மரபு இது. இவர்கள் திரிபர்வதத்தை சுற்றியுள்ள தெற்கு கதம்பர்கள் ராஜ்ஜியத்தை ஆண்டனர். இரண்டாம் புலிகேசியின் எழுச்சியினால் கதம்பர்களின் திரிபர்வத கிளையின் ஆட்சியும் முடிவுற்றது.
முதலாம் கிருஷ்ண வர்மன் (கி.பி.455-475) :
இவர் பெல்ஹாம் பகுதியிலுள்ள முராட் என்னுமிடத்தை தலைநகராக கொண்டு தந்தை காகுஸ்த வர்மனின் மறைவுக்கு பின்னர் கதம்பர்களின் திரிபர்வத கிளை ஆட்சியை தொடங்கினார்.
விஷ்ணு வர்மன் (கி.பி.475-485) :
சிம்ஹ வர்மன் (கி.பி.485-516) :
இரண்டாம் கிருஷ்ண வர்மன் (கி.பி.516-540) :
இவர் ஹரி வர்மனின் ஆட்சியில் வனவாசி கிளையுடன் தனது திரிபர்வத கிளையை இணைத்தார். ஆனாலும் சாளுக்கிய முதலாம் புலிகேசியின் எழுச்சியில் கதம்பர்களின் அரசு வீழ்ந்தது.
கன்னடத்தை தாய்மொழியாக கொண்டு கர்நாடகத்தை ஆண்ட முதல் மன்னர்கள் இவர்களே. தமிழிலிருந்து கன்னடம் ஓரு மொழியாக வளர்வதற்கு கதம்பர்களே முக்கிய காரணமானவர்கள். சமணமும், பெளத்த மும், இந்து மதமும் இவர்களின் ஆட்சியில் இருந்தது. ஆனாலும் இவர்கள் சமண மதத்தை ஆதரித்து பல சமண கோயில்களை கட்டினார்கள் வனவாசியில் அமைந்திருக்கும் மதுகேசுவரா ஆலயம் இவர்களது கட்டிடக்கலை திறனுக்கு சான்றாகும். மயூர சர்மனுக்கு பிறகு வந்த ஆட்சியாளர்கள் சர்மன் என்ற பெயரை சத்திரிய அடையாளத்திற்காக வர்மன் என்று மாற்றி பெயரிட்டு வர ஆரம்பித்தனர். கி.பி. 525ல் இராஷ்டிரகூடர்களின் படையெடுப்பால் அவர்களுக்கு அடங்கிய சிற்றரசாக ஆன கதம்பர்கள் வாதாபி (பாதாமி) முதலாம் சாளுக்கிய புலிகேசியின் எழுச்சியினாலும் கதம்ப குல ஆட்சி முடிவுற்றது.
உதவிய நூல்கள் :
பல்லவர் வரலாறு - மு.இராசமாணிக்கனார்
விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்


Comments
Post a Comment