15) புஷ்யபூதி (அல்லது) வர்த்தனா பேரரசு

வர்ததனா (புஷ்யபூதி) அரசு (கி.பி.500-647) :



புஷ்யபூதி வம்சம் இதை சிலர் புஷ்பபூதி வம்சம் என்று கூட உச்சரிப்பில் சொல்லுவார்கள். இது என்னடா புது அரச வம்சமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீங்களா? ஹர்ஷ வர்த்தனா (ஹர்ஷர்) என்ற பேரை கேள்விப்படாதவர்கள் இருக்கமுடியாது. அவர் இந்த வம்சத்தில் வந்தவர் தான். ஆனால் அவரின் 40 ஆண்டுகால அரசுக்கு பின் அந்த அரசு அழிவுற்றது. இந்த வம்சத்தின் கடைசி அரசரே ஹர்ஷவர்த்தனர் தான். ஆரம்பம் என்று பார்த்தால் நரவரத்தனாவில் (கி.பி.500-525)ல் ஆரம்பித்து ஹர்ஷவர்த்தனா(கி.பி.606-647)வுடன் முடிவுற்றது.

ஆரம்பத்தில் இவர்களது குலத்தை நிறுவியவர் புஷ்யபூதி. குப்தர்களின் படைதளபதிகளாக புஷ்யபூதிகள் பணியாற்றி வந்தனர். தங்களை வர்த்தனர்கள் என்ற பெயரால் அழைத்துக் கொண்டனர். ஹூணர்களின் படையெடுப்புக்கு பின்னர் குப்தர்கள் அரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்த நேரத்தில் தங்களை சிற்றரசாக அறிவித்து கொண்டனர். இன்றைய அரியானா மாநிலத்தில் குருஷேத்திரா மாவட்டத்திலுள்ள தானேஷ்வர் நகரை தலைநகராக கொண்டு சிற்றரசாக (கி.பி.500-525) ஆட்சியை தொடங்கினார் நரவர்த்தனா. அவருக்கு பின்னர் முதலாம் ராஜ்யவர்த்தனா(கி.பி.525-555) அவருக்கு பின்னர் ஆதித்யவர்த்தனா (கி.பி.555-580). ஆதித்ய வர்த்தனாவுக்கு பின் வந்த பிரபாகர வர்த்தனா (கி.பி.580-605) காலத்தில் தான் அரசு விரிவடைய ஆரம்பித்தது. அதன் பின் இரண்டாம் ராஜ்யவர்த்தனா(கி.பி.605-606) பின் அரியணை ஏறிய ஹர்ஷ வர்த்தனா (கி.பி.606-647) காலத்தில் தான் பேரரசு மிகப் பரவலாக ஆயிற்று. 


நர வர்த்தனா (கி.பி.500-525) :

இன்றைய அரியானாவிலுள்ள தானேஷ்வரத்தை தலைநகராக கொண்டு சிற்றரசாக ஆள தொடங்கினார்.


முதலாம் ராஜ்ய வர்த்தனா (கி.பி.525-555) :

இவர் தன் தந்தை நர வர்த்தனாவுக்கு பின்னர் ஆட்சி பொறுப்பேற்றார். 

ஆதித்ய வர்த்தனா (கி.பி.555-580) :

இவர் தனது தந்தை முதலாம் ராஜ்ய வர்த்தனாவுக்கு பின்னர் 3வது அரசராக ஆட்சி ஏறினார். மகதத்தை ஆண்ட குப்த அரசர் தாமோதர குப்தரின் மகளான மஹாசேனா குப்தாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் தன் வலிமையை அதிகரித்து கொண்டார். இதனால் தன்னை மஹாராஜா என்று அறிவித்து கொண்டார். 

பிரபாகர வர்த்தனா (கி.பி.580-605) :

தந்தை ஆதித்ய வர்த்தனாவுக்கு பிறகு ஆட்சியேறினார். தந்தை மஹாராஜா என்று அறிவித்து கொண்டதால் இவர் மஹாராஜாதிராஜா என்று பட்டம் சூட்டி கொண்டார். மேலும் பரமபட்டாரகா போன்ற விருது பெயர்களையும் சூடிக்கொண்டார். இவரது தாய் குப்தர்கள் இளவரசி என்பதால் அவர்களுடன் நல்ல உறவு இருந்தது. இதை பயன்படுத்தி பஞ்சாப் மற்றும் மால்வா நாடுகளை வெற்றி கொண்டு தன்னுடன் இணைத்தார். குஜராத், காந்தாரம், சிந்து ஆட்சியாளர்களை வென்றார். இந்த நேரத்தில் படையெடுத்து வந்த ஹூணர்களை அவர்களோடு இணைந்து தடுத்து நிறுத்தினார். இவர் மால்வா நாட்டு மன்னனின் மகளான யசோமதியை (இவர் மால்வாவின் சிலாதித்யாவின் சகோதரி) திருமணம் செய்து கொண்டார். இவர் மறைந்த போது இவரின் மனைவியும் இவருடன் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தார். இவரது காலத்தில் தான் அரசு விரிவடைய ஆரம்பித்தது. இவருக்கு இரண்டாம் ராஜ்யவர்த்தனா ஹர்ஷ வர்த்தனா என இரண்டு மகன்களும் ராஜ்யஶ்ரீ என்ற மகளும் இருந்தனர்.

இரண்டாம் ராஜ்ய வர்த்தனா (கி.பி.605-606) :

ஹர்ஷரின் தந்தை பிரபாகர வர்த்தனாவுக்கு பின்னர் ஹர்ஷரின் அண்ணன் இரண்டாம் ராஜ்ய வர்த்தனா ஆட்சி ஏறினார். இவர் பழங்குடியினரான ஹூணர்களை அடக்கி விரட்டி தானேஷ்வரை கைப்பற்றினார். இவரது சகோதரியான ராஜ்யஶ்ரீயை கிழக்கில் மெளகாரி நாட்டை சேர்ந்த கிரஹவர்மன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். மெளகாரி நாட்டின் தலைநகரமான கன்னோசிக்கு வாழ சென்ற ராஜ்யஶ்ரீ கன்னோசியில் பரவியிருந்த புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டு அம்மதத்தை தழுவியதாக தெரிகிறது. மாளவ மன்னன் தேவ குப்தன், வங்காளத்தின் கெளடா வம்சத்து மன்னன் சசாங்கனின் துணையுடன் மெளகாரி நாட்டின் மீது படையெடுத்து இவரது சகோதரியின் கணவரை கொன்று சகோதரியை சிறைபிடித்தார். இதனால் ஆத்திரமுற்று மாளவ மன்னன் மீது படையெடுத்து வென்று சகோதரியை மீட்டு கொண்டு திரும்பினார். தலைநகர் திரும்பும் முன்னரே பேச்சு வார்த்தைக்கு அழைத்து சசாங்கனின் சதியால் கொல்லப்பட இவரது படைகள் சிதறி ஒடியது. சகோதரியும் காடுகளுக்கு தப்பி சென்றார்.பின்னர் வாரிசின்றி ராஜ்ஜியம் இருப்பதால் அமைச்சர்கள் இவரின் தம்பியான 16 வயது நிரம்பிய ஹர்ஷ வர்த்தனாவுக்கு முடி சூட்டினார்கள்.

ஹர்ஷ வர்த்தனா (கி.பி.606-647) :


இந்த ஹர்ஷ வர்த்தனா தான் இந்தியாவின் புகழ்பெற்ற புத்த அரசர்களின் அசோகர் மற்றும் கனிஷ்கருக்கு அடுத்த இடத்தில் வருபவர். சகோதரன் மறைவிற்கு பின்னர் 16 வயதில் ஆட்சிக்கு வந்த ஹர்ஷர் முதலில் கணவனோடு உடன்கட்டை ஏற தீக்குளிக்க முயற்சி செய்த சகோதரியை மீட்டார். பின்னர் சகோதரியின் நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க முடிவு செய்து கன்னோஜ்ஜின் மீது படையெடுத்து வங்காள மன்னன் சசாங்கனை வென்று அவரை விரட்டி அடித்தார். கன்னோசியின் அமைச்சர்கள் பெரியவர்கள் அவரை தானேஷ்வரோடு கன்னோசியின் ஆட்சி பொறுப்பையும் ஏற்று நடத்த கேட்க கன்னோசி ஆட்சி பொறுப்பை ஏற்று பின்னர் கன்னோசி நகரை தன் தலைநகராக அறிவித்தார். பின்னர் வல்லபி (இன்றைய வாலா, குஜராத்) துருவ சேனருக்கு எதிராக போரிட்டு வென்றார். அவரை தனக்கு கீழ் கப்பம் கட்டும் சிற்றரசராக்கினார். ஒரிஸ்ஸா, சிந்து, காஷ்மீர் என்று அவர் படையெடுத்த இடமெல்லாம் ரத்த ஆறு ஓடியது. பதவியேற்ற ஆறு வருடங்கள் வரை (கி.பி.612) இடைவிடாத போர்களால் வட இந்தியாவில் பேரரசராக அங்கீகரிக்கப்பட்டு இருந்தார். அதன் பிறகு கி.பி.618ல் இரண்டாம் புலிகேசியுடன் மோதி தோல்வியை தழுவினார். அதன் பின்னர் 30 ஆண்டுகள் அவரது ஆட்சியில் எந்த போர்களும் நடக்காமல் அமைதி வழியை கடைப்பிடித்தார். யுவான் சுவாங் குறிப்பின்படி விளைச்சலில் 6ல் 1 பங்கு வரியாக விவசாயி அளிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. கணவரை இழந்த துர்பாக்கியவதியாக ஆன சகோதரி ராஜ்யஶ்ரீ புத்ததை தழுவி துறவியானார். சகோதரியின் தூண்டுதலால் தான் ஹர்ஷரும் புத்த மதத்தை தழுவி பெளத்த மதத்தை பரப்ப ஆரம்பித்தார். அவரின் படையில் 60000 யானைகளும் 1‌ லட்சம் குதிரைகளும் இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளது. அசாம் (அன்றைய பெயர் காமரூபம்) நாட்டு மன்னன் பாஸ்கரவர்மனிடம் நல்ல நட்பு கொண்டிருந்தார். ஹர்ஷரின் மறைவுக்கு பிறகு பேரரசின் சில பகுதிகளை இவர் கைப்பற்றி கொண்டதாக தெரிகிறது. 

சீன பேரரசுடன் வர்த்தக உறவு கொண்டிருந்தார். பிரசித்தி பெற்ற சீனப் பயணி "யுவான் சுவாங்" இந்தியாவிற்கு வந்து புத்தரோடு தொடர்புடைய இடங்களை தரிசிக்க வந்தார். அவரின் குறிப்புகளில் ஹர்ஷரின் ஆட்சிமுறையும், போர் திறமையும் விவரித்து எழுதியுள்ளார். இந்தியாவில் புத்த மதத்தை பின்பற்றிய கடைசி அரசர் ஹர்ஷரே. இவர் காலத்தில் இரண்டு பெளத்த பேரவைகள் ஒன்று கன்னோசியிலும் மற்றொன்று பிரயாகையிலும் (அலகாபாத்) நடத்தப்பட்டது. ஹர்ஷர் மத சகிப்பு தன்மை கொண்டவர். ஒரே நேரத்தில் புத்தர் சிவன் ஆகியோரையும் வழிபட்டார். ஒரு பெளத்தராக இருந்தாலும் பிரயாகையில் நடந்த கும்பமேளா விழாவில் கலந்து கொண்டார் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். உணவுக்காக மிருகங்களை கொல்வதை தடை செய்தார். நாளந்தா பல்கலைகழகத்திற்கு வருடந்தோறும் மான்யம் கொடுத்து வந்தார். வருடந்தோறும் அலகாபாத்தில் (பிரயாகை) புனித நீராடாடும் சமயத்தில் பொன்னும் பொருளும் அங்குள்ளவர்களுக்கு வாரி வழங்கியதாகவும் குறிப்புகள் உள்ளது.

ஹர்ஷ சரிதம் மற்றும் காதம்பரி எழுதிய "பாணபட்டர்" ஹர்ஷரின் அவைக்களபுலவர் மட்டுமின்றி அவரின் நெருங்கிய நண்பரும் கூட. அவரது அவையில் பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் முதலிய அறிஞர்கள் இருந்தனர். இதை விட ஹர்ஷரே மிகச்சிறந்த நாடகாசிரியர். அவர் சமஸ்கிருதத்தில் நாகானந்தம், பிரியதர்ஷிகா,இரத்தினவல்லி நாடகங்களை எழுதினார்.

புத்த மதத்திற்கு மாறியவுடன் எல்லா இடங்களுக்கும் புத்த துறவிகளை அனுப்பி புத்த மதத்தை பரப்பினார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புத்தமத மாநாட்டை சிறப்புற தொடர்ச்சியாக நடத்தினார். நாளந்தாவில் நான்கு அடுக்குமாடி மடாலயம் பற்றியும் எட்டு அடி உயரமுள்ள செம்பினால் செய்யப்பட்ட புத்தர் சிலையை நிறுவியதை பற்றி யுவான் சுவாங் தன் குறிப்புகளில் கூறியுள்ளார். சிர்பூர் லட்சுமணர் கோவில் ஹர்ஷர் காலத்தில் கட்டப்பட்டது. ஹீனயானத்தை பின்பற்றிய ஹர்ஷர் யுவான் சுவாங்கினால் மகாயான புத்தபிரிவுக்கு மாறினார்.

ஹர்ஷரின் காலத்தில் சமூக நிலைமையை பற்றி பாணர் மற்றும் யுவான் சுவாங் இருவருமே குறிப்பிட்டுள்ளனர். பிராமணர்கள், சத்ரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என நான்கு பிரிவுகள் காணப்பட்டது எனவும் பிராமணர்களுக்கு அரசால் சலுகையாக நிலங்கள் மான்யங்களாக வழங்கப்பட்டது. சத்ரியர்கள் ஆளும் வர்க்கமாக அரசை நடத்தினர் என்றும் வைசியர்கள் பெரும்பாலும் வணிகத்திலும் சூத்திரர்கள் விவசாயமும் செய்தனர் என்றும் யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். வைசிய வகுப்பை சார்ந்தவர் ஹர்ஷர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் தங்கள் கண்வரை விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் காணாமல் போய்விட்டிருந்தது. வரதட்சணை முறை மற்றும் உடன்கட்டை ஏறும் முறையும் வழக்கத்தில் இருந்ததாகவும் மூன்று முறைகளில் சவ அடக்கம் செய்யப்பட்டதாகவும் புகைத்தல், எரித்தல், காட்டில் எறிந்துவிடுதல் என்ற முறைகளில் சவ அடக்கம் இருந்ததாக யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார்.

60000 யானைகள் மற்றும் 100000 குதிரைகள் கொண்ட படையை கொண்ட ஹர்ஷர் கி.பி.618ல் சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியுடன் நர்மதை ஆற்றங்கரையில் போருக்கு போனார். இரண்டாம் புலிகேசியின் திறமையான யானைப்படையினால் ஹர்ஷரின் படைகள் சிதருற்று அவருடன் உடன்படிக்கை கொண்டு போரை நிறுத்தினார். நேபாளம் ஹர்ஷரின் ஆட்சியை ஏற்றுக்கொண்டது. கலிங்கத்தை (ஒரிஸ்ஸா) வெற்றிகொண்டதே அவரின் இறுதி போராகும். இந்த நேரத்தில் யுவான் சுவாங் சீனாவுக்கு நாடு திரும்பி முடிவு செய்ய அசாம் மன்னர் அவரை சந்திக்க வர சொல்ல அங்கே சென்றிருந்தார். ஹர்ஷர் போர்களத்தில் இருந்து திரும்பியதும் என்னை சந்திக்காமல் நாடு திரும்ப மாட்டேன் என்று கூறினீர்களே நண்பரே. நான் நாடு திரும்பி விட்டேன் என்று அழைக்க ஹர்ஷரின் அழைப்பை மறுக்க முடியாமல் ஹர்ஷரை சந்தித்து பின்னர் ஒரு வழியாக கி.பி.643ல் யூவான் சுவாங் சீனாவுக்கு திரும்பும் வழியில் சிந்து ஆற்றில் இவரது குறிப்புகள் ஆற்றில் தொலைந்து விட அதை தேடியும் மீண்டும் நினைவு கூர்ந்து அந்த குறிப்புகளை திரும்ப எழுதியுமாக ஒரு வழியாக கி.பி.644 ஆம் ஆண்டு கடைசியில் சீனா சென்றடைந்தார். இவரின் குறிப்புகள் பாணர் எழுதிய ஹர்ஷ சரித்திரம் மூலமே ஹர்ஷரின் ஆட்சியை பற்றி அறிய முடிகிறது.

ஹர்ஷர் - துர்காவதி தம்பதியருக்கு இரு மகன்கள். அவருக்கு பிறந்த இரு மகன்களான வாக்கியவர்த்தனன் மற்றும் கல்யாணவர்த்தனன் ஆகியோரை ஹர்ஷரின் முதல் மந்திரி அருணாஷ்வா கொலை செய்துவிட்டார். இதனால் மனமுடிந்த ஹர்ஷர் கி.பி. 647ல் வாரிசின்றி மரணமடைந்தார். அதன் பின் ராஜ்யம் சிதைந்து போயிற்று.

உதவிய நூல்கள் :

ஹர்ஷர் - அ.கணேசன்

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - மருதன்

விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல்கள்

படங்கள்  :

கூகுள் படங்கள்


Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு