16) மேலை சாளுக்கிய (பாதாமி சாளுக்கியர்கள்) பேரரசு

பாதாமி சாளுக்கியர்கள் (கி.பி.543-753) :


சாளுக்கியர்கள் என்று சொல்லும்போதே எல்லாருக்கும் உடனே நினைவுக்கு வரும் பெயர் இரண்டாம் புலிகேசி. பொலே கேசி என்று கன்னடத்தில் கல்வெட்டுகளில் எழுதப்பட்ட பெயர் புலிகேசி என்றே வழங்கப்படலாயிற்று. அசகாயசூரர் போரில் வல்லவர் இவர். இவரின் வம்சம் எப்படி தோன்றியது? 

சாதவாகனர்களின் கீழே சிற்றரசர்களாக இருந்தவர்கள் சாதவாகனப்பேரரசின் வீழ்ச்சிக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக எழுச்சி பெறலாயினர். சரித்திரத்தை பார்த்தால் 3 வகையான சாளுக்கியர்கள் என்று வகைகளில் பிரிக்கலாம். பாதாமி (வாதாபி) சாளுக்கியர்கள், மேலை சாளுக்கியர்கள் (கல்யாணி), கீழை (வேங்கி) சாளுக்கியர்கள் என்று 3 வகையாக பிரிப்பர். இன்னொன்று வகை இருக்கிறது அது சாளுக்கிய சோழர்கள். இராஜராஜனின் மகளான குந்தவை-விமலாதித்தன் (வேங்கி) வம்சத்தில் வந்த முதலாம் குலோத்துங்கன் இராஜேந்திரனின் மகனான வீரராஜேந்திரனின் (கிபி.1069) மறைவுக்கு பின் கி.பி. 1070 ல் ஆட்சிக்கு ஏறி மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி.1257)ல் சடையவர்மன் சுந்தரபாண்டியனால் வீழ்த்தப்படும் வரை தொடர்ந்தது வேறு கணக்கு. ஆனால் குலோத்துங்கன் முதல் 3ம் ராஜேந்திரன் வகை வருவது சோழ வம்சம் என்ற கணக்கில் போய்விடுகிறது.

கி.பி.543 ல் முதலாம் புலிகேசியுடன் ஆரம்பிக்கும் வாதாபி (பாதாமி) சாளுக்கியர்கள் வம்சம் கி.பி.753ல் இரண்டாம் கீர்த்தி வர்மன் இராஷ்டிரகூடர்கள் அரசன் தண்டிதுர்காவுடன் வீழ்ந்ததால் முடிவுற்றது. 

அதே நேரத்தில் கி.பி.624ல் இன்றைய ஆந்திராவின் வேங்கியில் கீழை சாளுக்கியர்கள் (வேங்கி சாளுக்கியர்கள்) குப்ஜா விஷ்ணுவர்த்தனா தலைமையில் வாதாபி சாளுக்கியரின் ஆளுமையில் இருந்து பிரிந்து தனி அரசாக செயல்பட ஆரம்பித்தனர். அது ஏழாம் விஜயாதித்தாவின் மறைவுக்கு(கி.பி.1075) பின் கீழை சாளுக்கியரின் ஸ்திரத்தன்மை மறைந்து சோழர்களின் வம்சாவளியுடன் சாளுக்கிய சோழன் எனப்படும் முதலாம் குலோத்துங்க சோழனின் அரசுடன் இணைந்து விட்டது.

மீண்டும் மேற்கு சாளுக்கியர்கள் கி.பி.973ல் முதலாம் தைலபாவின் வழியில் துளிரிவிட்டு சத்யாஸ்ரயாவின் தலைமையில் மீண்டு கி.பி.1200ல் நான்காம் சோமேஸ்வராவுடன் முடிவுற்றது.


முதலாம் புலிகேசி (கி.பி.540-566) :

இவர் ரணராகா என்பவரின் மகன். இவரது தாத்தா ஜெயசிம்ஹா என்பவர். ஆரம்பத்தில் கதம்பர்களின் கீழ் சிற்றரசராக இருந்தவர் தன்னை தனியரசராக அறிவித்து ஆள ஆரம்பித்தார் என்று கூறுகின்றனர். சிலர் இராஷ்டிரகூடர்கள் கதம்பர்களை வீழ்த்தி தங்களுக்கு அடங்கிய சிற்றரசராக ஆக்கிய நேரத்தில் இவர் சுயாட்சியாய் ஆட்சி புரிய தலைபட்டார் என்று கூறுகின்றனர். இவர் கி.பி.543ல் வாதாபியில் (பாதாமி) கோட்டை கட்டி ஆள ஆரம்பித்தார் என்று தெரிவதிலிருந்து சாம்ராஜ்யத்திற்கு அச்சு அப்போது தான் போடப்பட்டது என்று புரிகிறது.சாளுக்கிய சாம்ராஜ்யத்தை தோற்றுவித்த பிதாமகர் என்று சொல்லலாம். குப்தர்/கதம்பர்களின் வீழ்ச்சிக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்த சாளுக்கிய வம்ச பெருமையை ஆரம்பித்தவர். இன்றைய வட கர்நாடகாவை சேர்ந்த பாதாமி (அன்றைய பெயர் வாதாபி)யை தலைநகரமாக கொண்டு மேற்கு தக்காணபிடபூமி முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். நர்மதை நதி வரை அவரது ஆட்சி இருந்தது. எல்லைகளை விரிவுபடுத்தியபின் அசுவமேத யாகம் நடத்தினார். இவரது ஆட்சியில் கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகள் அடங்கியிருந்தது. சமஸ்கிருதத்தில் இவரது பெயருக்கு சக்தி வாய்ந்த புலி என்று அர்த்தம். இவருக்கு சத்யாஸ்ரயா, ரண விக்கிரமா, ஶ்ரீபிரித்வி வல்லபா, ராஜசிம்ஹா, தர்ம மஹாராஜா என்ற பட்டங்களில் அழைக்கப்பட்டார். இவர் துர்லப தேவி என்பவரை மணந்தார். இவருக்கு முதலாம் கீர்த்தி வர்மன் மற்றும் மங்கலேஷா என்ற இரு மகன்கள் இருந்தனர்.

முதலாம் கீர்த்தி வர்மன்(கி.பி.566-597)

முதலாம் புலிகேசியின் மகனான இவர் அவருக்கு பின் அரியணை ஏறினார். கொங்கண் பகுதிகளையும் வட கேரளா பகுதிகளையும் வெற்றி கொண்டார். இவர் ஓரிஸ்ஸா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை ஆண்ட நாலா வம்சத்தினரையும், கடம்பர்களையும், தலக்காடு கங்கர்களையும் வென்று சாளுக்கிய அரசை விரிவாக்கினார். மேலும் இவர் வங்க, அங்க, கலிங்க, மகத, மத்ரக, மூஸாக, பாண்டிய, பல்லவ, சோழிய அரசர்களை வென்றதாகவும் மஹாகூட கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவர் சென்ரகா மன்னர் ஶ்ரீவல்லப சேனாநந்தா என்பவரின் தங்கையை மணந்து கொண்டார். இவருக்கு இரண்டாம் புலிகேசி, விஷ்ணுவர்த்தனா மற்றும் புத்த வர்ஷா என்று 3 மகன்கள் இருந்தனர்.

மங்கலேஷா (கி.பி.597-610) :

முதலாம் கீர்த்தி வர்மனுக்கு பின் அவரது தம்பியான இவர் அரியணை ஏறினார். இவரது மஹாகூட கல்வெட்டிலிருந்து இவர் முதலாம் புலிகேசியின் இன்னொரு மனைவிக்கு பிறந்தவர் என்று தெரிகிறது. இவர் கதம்பர்களையும் மற்றும் கங்கை சமவெளி பகுதிகளையும் வென்றார். இவர் தனது ஆட்சியில் காலச்சூரி அரசர் புத்தராஜாவை வென்று தனது ஆட்சியை இன்றைய குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா வரை நீட்டித்தார். இவர் அண்ணன் மறைவின் போது இரண்டாம் புலிகேசி குழந்தையாக இருந்ததால் அரசு ஏறியதாக தெரிகிறது. ஆனால் சிலர் அண்ணன் மகன்களை சிறைவைத்து ஆட்சியை பிடித்தார் என்றும் சிறையிலிருந்து தப்பிய அண்ணன் கீர்த்திவர்மனின் மகனான இரண்டாம் புலிகேசியினால் இவர் கொல்லப்பட்டார் என்று கூறுகின்றனர். உண்மையில் இவர் இரண்டாம் புலிகேசியினால் கொல்லப்பட்டார் என்பதால் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்புள்ளது. பின்னால் வந்த இரண்டாம் புலிகேசி பரம்பரையினர் இவரது பெயரை கல்வெட்டுகளில் இருட்டிப்பு செய்வதிலிருந்து அவ்வாறு நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் சிலர் மங்கலேஷா கீர்த்தி வர்மனின் மறைவினால் குழந்தையாக இருந்த இரண்டாம் புலிகேசி வளரும் வரை அவர் சார்பாக ஆட்சியில் இருந்தார் என்றும் இரண்டாம் புலிகேசி பின்னர் இவரை விரட்டியடித்து ஆட்சியை கைப்பற்றினார் என்றும் கூறுகின்றனர்.

இரண்டாம் புலிகேசி (கி.பி.610-642) :

சாளுக்கிய வம்சத்தின் புகழ்பெற்ற சாம்ராட் இவரே. இவரது இயற்பெயர் இரயா. இவரின் அவைக்களபுலவர் இரவிகீர்த்தி சமஸ்கிருதத்தில் எழுதிய நூலில் இருந்து தெரியவருகிறது. தக்காண பீடபூமி முழுவதும் தனது எல்லையை விரிவுபடுத்தினார். இன்றைய கர்நாடகா, ம‌ஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களும் இவரது ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இவர் கிளர்ச்சி புரிந்த கதம்பர்களை வென்று அடக்கினார். கொங்கண மெளரியர்கள், மால்வா, தெற்கு குஜராத் பகுதியான லத்தா மற்றும் வடக்கு குர்ஜரர்களை அடக்கி தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். இவர் விஷ்ணுகுந்தினர்களை வென்று கிழக்கு தக்காண பகுதிகளுக்கு தனது இளைய சகோதரனான விஷ்ணு வர்த்தனாவை பொறுப்பாக நியமித்தார். அவர் அங்கு சுயாட்சியை அறிவித்து கொண்டு ஆட்சி புரிய அவர் வழியில் வந்தவர்களே வேங்கி சாளுக்கியர்கள் என்ற கீழை சாளுக்கியர்கள். கி.பி.636ல் முதன்முதலில் வந்த அரபுக்களின் படையெடுப்பை தடுத்து நிறுத்தி விரட்டியடித்தார். இவர் இந்து மதத்தை பின்பற்றினாலும் புத்த,சமண மதங்களையும் ஆதரித்தார். இவரின் காலத்தில் தான் சீனப் பயணி யுவான் சுவாங் இந்தியா வந்திருந்தார். ஹர்ஷர் போரிட்டு வரும்போது நர்மதை ஆற்றங்கரையில் அவரை தோற்கடித்தார். இவருடன் நடந்த போரில் தான் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் தோற்று மாண்டு போனார். பின்னர் மகேந்திரவர்மரின் மகன் முதலாம் நரசிம்ம பல்லவனுடன் நடந்த போரில் கி.பி.642 தோற்று மாண்டார். அதன் பின் நரசிம்ம பல்லவர் வாதாபியை தீக்கிரையாக்கிய செய்திகளும் உண்டு. அதன் பின் 13 ஆண்டுகள் வாதாபி பல்லவர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அஜந்தா குகை ஓவியங்கள் வரைவதற்கு மிகுந்த உதவி புரிந்தார்.

முதலாம் விக்ரமாதித்யா (கி.பி.655-680) :

இரண்டாம் புலிகேசியின் 5 மைந்தர்களுள் இவர் மூன்றாவது மைந்தர். வாதாபியை கி.பி.655ல் பல்லவர்களிடமிருந்து மீட்டார்.பின் பிரிந்த சாம்ராஜ்யத்தை ஆண்ட தனது சகோதரர்களையும் மற்ற ஆக்ரமிப்பாளர்களையும் வென்று சாளுக்கிய சக்ரவர்த்தி என்று முடிசூட்டிக் கொண்டார். ஆனால் இரண்டாம் புலிகேசி மரணத்திற்கு பின்னர் அவரது இன்னொரு மகனான ஆதித்ய வர்மன் அரசனானான் என்றும் அவருக்கு பின்னர் இவர் அரசரானார் என்று கூறினாலும் தெளிவான ஆதாரங்கள் இல்லை. பல்லவ கல்வெட்டுகள் கி.பி.642 தோல்விக்கு பிறகு வாதாபி 13 ஆண்டுகாலம் பல்லவர்களின் ஆதிக்கத்தில் இருந்தது என்று கூறுகிறது. முதலாம் விக்கிரமாதித்யா தன்னிடம் பிரியமாக இருந்த இளைய சகோதரன் ஜெயசிம்ஹவர்மனை தெற்கு குஜராத்தின் பகுதியான லத்தாவின் ஆளுநராக்கினார். இவர் மைத்ரகா வம்ச அரசரை வென்று வல்லபியை கைப்பற்றினார். தந்தையின் மரணத்துக்கு பழிக்குப்பழி வாங்க காஞ்சி பல்லவர்களின் மற்றொரு எதிரியான அரிகேசரி பராங்குச மாறவர்ம பாண்டியனின் உதவியுடன் காஞ்சி மீது கி.பி.670ல் படையெடுத்து சென்று புல்லலூர் போரில் தோற்று திரும்பினார். பின்னர் கி.பி.674ல் பல்லவர்களை வீழ்த்த தனது மகன் விநயாதித்தா மற்றும் பேரன் விஜயாதித்தா இருவரையும் அனுப்பினார். புறவளநல்லூரில் நடந்த போரில் இரண்டாம் பரமேஸ்வரன் இவர்களை தோற்கடித்து விரட்டினார். இவர் மேற்கு கங்கர்களின் இளவரசி கங்கமஹாதேவியை மணந்தார்.

விநயாதித்தா(கி.பி.680-696) :

விக்ரமாதித்யா-மேற்கு கங்கை இளவரசியான கங்கமஹாதேவிக்கும் பிறந்த இவர் தந்தைக்கு பின் அரியணை ஏறினார். தந்தையின் ஆட்சியில் போது பல்லவர்கள்,களப்பிரர்கள், கேரளர்கள்,மத்திய இந்தியாவின் காலச்சூரிகளையும் எதிர்கொண்ட போர்களில் பங்குகொண்டார். காமரூபத்தையும் (அசாம்), இலங்கை மற்றும் பாரசீகத்தை வென்ற போரில் வென்றார். இவர் யுத்தமல்லா, சாஹசரஸிகா மற்றும் சத்யாஸ்ரயா பட்டங்களை பெற்றார். சீனாக்கு தன் அரசின் சார்பாக தூதுவரை அனுப்பியதாகவும் செய்திகள் உண்டு.

விஜயாதித்தா (கி.பி.696-733) :

தந்தையின் ஆட்சியில் வடக்கே பெர்ஷியாவில் படையெடுக்கும் போது கைதியாக பிடிபட்டு பின்னர் அங்கிருந்து தப்பித்து வந்த வரலாறும் இவருக்கு உண்டு. இவர் நிறைய கோவில்களை கட்டினார். இரண்டாம் பரமேஸ்வர பல்லவரிடம் போரிட்டு தனது நாட்டின் பகுதிகளை மீட்டுக் கொண்டார். கி.பி.705ல் மங்களூரை படையெடுத்து வந்த பாண்டியர்களை தோற்கடித்தார். கி.பி.730ல் இரண்டாம் பரமேஸ்வர பல்லவன் இவருடன் நடந்த போரில் தான் தோற்று இறந்து போனார். 

இரண்டாம் விக்ரமாதித்யா (கி.பி.733-746) :

தந்தை விஜயாதித்தா மறைவுக்கு பின் அரியணை ஏறினார். தந்தை 38 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்ததால் இவர் ஆட்சிக்கு வரும்போதே வயதாகியிருந்தார். இவரின் முக்கியமான சாதனை என்னவென்றால் பல்லவர்களை மூன்று முறை போரில் வென்றது தான். இளவரசனாக ஓருமுறையும், அரசனாக தனது தலைமையில் ஒருமுறையும், தனது மகன் இரண்டாம் கீர்த்தி வர்மன் தலைமையில் ஒருமுறையும் வென்றது தான். விருபாக்ஷா கோயில் கல்வெட்டுகளில் இந்த வெற்றிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டகல்லில் கட்டப்பட்ட விருபாக்ஷா கோயிலும், மல்லிகார்ஜீனா கோயிலையும் இவரின் இரு மனைவிகளான லோக மகாதேவி மற்றும் திரிலோக தேவி ஆகியோர்கள் கட்டினார்கள். இந்த இரண்டு கோவில்களும் யுனெஸ்கோவினால் பராம்பரிய பண்பாட்டு தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஆட்சியில் கி.பி.739ல் அரேபிய முஸ்லீம்கள் சிந்து வழியாக தக்காண பீடபூமியின் மீது படையெடுத்தனர். அவர்களை தெற்கு குஜராத் பகுதியான லத்தாவின் பொறுப்பில் இருந்த முதலாம் விக்கிரமாதித்தயாவின் சகோதரனான ஜெய சிம்ஹவர்மனின் மகனான அவனிஜனாஹ்ராய புலிகேசி விரட்டியடித்தார். இவருடன் இராஷ்டிரகூட அரசர் தண்டிதுர்காவும் இணைந்து அரேபிய முஸ்லீம்கள் படையெடுப்பை முறியடித்தனர்.

இரண்டாம் கீர்த்திவர்மன் (கி.பி.746-753) :

இரண்டாம் விக்ரமாதித்யாவிற்கு பின் அரியணை ஏறிய அவரின் மகன் தந்தையின் காலத்தில் பல்லவர்களை வென்றது தான் முக்கிய சாதனை. இவரது ஆட்சியில் பாண்டியர்கள் மற்றும் இராஷ்டிரகூடர்களுடன் மோதல்கள் தொடர்ந்து நடந்தது. கொங்கு பிரதேசத்தில் பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் ராஜசிம்மன் தனது அரசாட்சியை விரிவாக்கினார். கொங்கு பிரதேசத்திற்கு அடுத்த இடமாக சாளுக்கிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த கங்கர்களின் அரசு இருந்தது. இதனால் கங்க ஆட்சியாளர் ஶ்ரீபுருஷா மற்றும் இவரும் இணைந்து பாண்டியருடன் மோதல் போக்கை கடைப்பிடித்தனர். இதனால் பாண்டியன் ராஜசிம்மன் காவேரியை கடந்து வென்பாய் என்னுமிட்த்தில் நடந்த போரில் தோற்று போனார். பின்னர் இவரிடம் சிற்றரசாக எல்லோரா பகுதிகளை சுற்றியிருந்த பகுதிகளை ஆண்ட இராஷ்டிரகூட அரசர் தண்டிதுர்கா மெல்ல இவரின் ஆட்சிக்குட்பட்ட தெலுங்கு பிரதேசங்களையும், கலிங்கா மற்றும் கோசலா பகுதிகளையும் வளைத்தார். பின்னர் பல்லவர் இரண்டாம் நந்திவர்மனுடன் நட்பு கொண்டார். இதனால் சுற்றி வளைக்கப்பட்ட கீர்த்தி வர்மன் எந்த உதவியும் பெற முடியாமல் போகவே ஆட்சி ஏறிய 7ம் வருடத்தில் இராஷ்டிரகூட அரசர் தண்டிதுர்காவிடம் தோற்று மேலை சாளுக்கிய வம்சத்திற்கு முடிவு கட்டினார். இவருடன் 210 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட பாதாமி சாளுக்கியர்கள் ஆட்சி முடிந்தது. இதன் பின் சத்யரஸாவின் தலைமையில் திரும்பவும் கி.பி.997ல் மேலைசாளுக்கியர்கள் எழுச்சி பெற்றனர்.

உதவிய நூல்கள் :

பல்லவர்கள் - மு.இராசமாணிக்கனார்

படங்கள்  :

கூகுள் படங்கள்


Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு