18) மேலை சாளுக்கிய பேரரசு (கல்யாணி சாளுக்கியர்கள்)

 கல்யாணி சாளுக்கியர்கள் ‌(கி.பி.973-1189) :

மேற்கு (மேலை) சாளுக்கியர்கள் அரசு மீண்டும் 220 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கல்யாணியை (இன்றைய பசவ கல்யாண்) தலைநகரமாக கொண்டு இரண்டாம் தைலபாவினால் கல்யாணி சாளுக்கியர்கள் அரசு என்ற பெயரில் உதயமாயிற்று. 


இரண்டாம் தைலபா (கி.பி.973-997) :

இவர் இரண்டாவது முறையாக மேலை சாளுக்கிய வம்சத்தை கல்யாணியை தலைநகராக கொண்டு ஆரம்பித்தார். இராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கிருஷ்ணாவை தோற்கடித்து மீண்டும் சாளுக்கிய சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டினார். இவருக்கு ஆகவமல்லா, நுர்மதி தைலபா, சத்யாஸ்ரய குலதிலகா என்ற பட்டப்பெயர்களினாலும் அழைக்கப்படுகிறார். இவர் ஐந்தாம் இந்திரனை தோற்கடித்து இராஷ்டிரகூடர்களின் வலிமையை குறைத்தார். மேலும் கோதாவரி கரையோரம் பாஞ்சலதேவனையும் வென்றார். கி.பி.980ல் உத்தமசோழரையும் வென்றார். 24 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இவர் கி.பி.997ல் மறைந்தார்.

சத்யாஸ்ரயா (கி.பி.997-1008) :

இரண்டாம் தைலப்பாவிற்கு பின் ஆட்சிக்கு வந்த அவர் மகன் சத்யாஸ்ரயாவை சட்டிகா என்றழைப்பர். சோழர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்ததால் கீழை சாளுக்கிய வேங்கி மீது கி.பி.1006ல் படையெடுத்தார். வடக்கு கொங்கணத்தை ஆண்ட சிலஹாரா வம்சத்து அரசன் அபராஜிதாவின் படையெடுப்புகளால் சோழர்களின் மீது படையெடுப்பை தள்ளி வைத்தார்.

ஐந்தாம் விக்ரமாதித்யா (கி.பி.1008-1015) :

சத்யாஸ்ரயாவின் உறவினரான இவர் அவருக்கு பின் அரியணை ஏறினார். 7 வருடங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்.

இரண்டாம் ஜெயசிம்ஹா (கி.பி.1015-1042) :

ஜந்தாம் விக்ரமாதித்யாவிற்கு பிறகு அரியணை ஏறிய அவரின் தம்பி இவர். இவருக்கு ஜெகதேகமல்லா மற்றும் மல்லிகாமோடா என்ற பட்டப்பெயர்களும் உண்டு. நிறைய போர்களை புரிந்து தனது ஆட்சியை காப்பாற்றியவர். இவர் வேங்கியை ஆண்ட விமலாதித்தன் மறைவுக்கு பின்னர் ஏழாம் விஜயாதித்தா சார்ப்பாக வாரிசு போட்டியில் இராஜேந்திர சோழனால் தோற்கடிக்கப்பட்டார்.

முதலாம் சோமேஸ்வரா (கி.பி. 1042-1068) :

இவர் ஆகவமல்லா அல்லது திரிலோகமல்லா என்ற பெயர்களில் அழைக்கப்படுபவர். பிற்கால சாளுக்கிய மன்னர்களுள் சிறந்த அரசராக கருதப்படுபவர். இவர் தான் இன்றைய பசவகல்யாண் (அன்றைய கல்யாணி) நகரை தோற்றுவித்து அதனை தலைநகராக்கினார். இவரது ஹெய்சால வம்சத்தை சேர்ந்த ஹெய்சாலதேவி என்பவர் இவரது மனைவிகளுள் ஓருவர்

இரண்டாம் சோமேஸ்வரா (கி.பி.1068-1076) :

தந்தை முதலாம் சோமேஸ்வராவிற்கு பின் அரியணை ஏறியவர். இவர் மூத்தமகன். தனது இளைய சகோதரன் ஆறாம் விக்கிரமாதித்யாவின் தொடர்ச்சியான தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. கி.பி.1076ல் அவரிடமே ஆட்சியை இழந்தார்.

ஆறாம் விக்ரமாதித்யா (கி.பி.1076-1126) :

சகோதரனை வீழ்த்தி அரியணைக்கு ஏறிய இவரே மேற்கு சாளுக்கியர்களில் நீண்டகாலம் அரசாண்ட சாதனைக்குரியவர். இவரின் காலத்திலிருந்தே சாளுக்ய-விக்ரம சகாப்தம் தொடங்குவதிலிருந்து இவரின் முக்கியத்துவம் அறியலாம். சம்ஸ்கிருத புலவர் பில்ஹனர் விக்கிரமன்தேவசரிதையை இவர் வைத்தே எழுதினார்.தனது பேரரசை காவிரி கரை முதல் நர்மதை நதிக்கரை வரை விரிவுபடுத்தினார்.

மூன்றாம் சோமேஸ்வரா (கி.பி.1126-1138) :

ஆறாம் விக்ரமாதித்யாவிற்கும் அவரது ராணி சந்தளதேவிக்கும் பிறந்த இவர் அவருக்கு பின் அரியணை ஏறினார். இவருக்கு திருபுவனமல்லா, பூலோகமல்லா என்ற பட்டப்பெயர்களும் உண்டு. இவரின் ஆட்சியில் படையெடுத்த ஹெய்சால விஷ்ணுவர்த்தனாவை தோற்கடித்தார். சில இடங்களை இவர்களின் மேலாதிக்கத்திலிருந்து வேங்கி சாளுக்கியர்கள் மீட்டனர். இவரின் தந்தையின் காலத்திலிருந்த இராஜ்யம் சுருங்க ஆரம்பித்தது. இவர் சமஸ்கிருதத்தில் பாடும் இயற்றும் வல்லமை கொண்டவர்.

ஜகத்தேக மல்லா (கி.பி.1138-1151) :

மூன்றாம் சோமேஸ்வராவிற்கு பின் அரியணை ஏறினார். இவரது ஆட்சிகாலத்திலும் பேரரசின் பரப்பு சுருங்க ஆரம்பித்தது. ஆனாலும் ஹெய்சாலர்களை கட்டுபடுத்தி வைத்திருந்தாலும் வேங்கி இவரின் கையை விட்டு முற்றிலுமாக விலகி விட்டது. இவரும் சம்ஸ்கிருதத்தில் நிபுணர். இவர் இசையை பற்றிய சமஸ்கிருதத்தில் எழுதிய சங்கீதசூடாமணி இவரின் புலமைக்கு தக்க சான்று.

மூன்றாம் தைலபா (கி.பி.1151-1162) :

சாளுக்கிய சாம்ராஜ்யத்தின் அழிவின் ஆரம்பம் இவரின் ஆட்சியில் ஆரம்பித்தது. காகதீய அரசர் இரண்டாம் போரெல்லா இவர் வெற்றிக்கொண்டார். கலாசூரி அரசர் இரண்டாம் பிஜ்ஜாலா இவரின் கல்யாணி நகரை கி.பி.1157ல் கைப்பற்றினார். கடைசியில் இவர் ஹெய்சால அரசர் வீரநரசிம்மாவுடன் நடந்த போரில் அனிகேரே (இன்றைய தார்வாடு மாவட்டத்தில் உள்ளது) என்னுமிடத்தில் கி.பி.1162ல் இறந்தார்.

மூன்றாம் ஜகதேமல்லா (கி.பி.1163-1189) :

இவரின் காலத்தில் காலச்சூரிகளின் கீழ் கல்யாணி நகரம் இருந்தது. அவர்களுக்கு சிற்றரசாகி போனார். இவரோடு கல்யாணி சாளுக்கியர்கள் வம்சம் அழிவுக்கு வந்தது.

தமிழ்நாட்டின் வடபகுதி, கேரளாவின் வடபகுதி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் சில பகுதிகள் மற்றும் குஜராத் வரை பரந்துபட்ட நிலப்பகுதியை ஆண்ட சாளுக்கிய வம்சம் காலச்சூரிகள், ஹெய்சாலா மற்றும் காகதியர்களின் எழுச்சியினால் வீழ்ந்து பட்டது.

உதவிய நூல்கள் :

The Early History of Deccan - G. Yazdani

விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல்கள்

பல்லவர்கள் வரலாறு - மு.இராசமாணிக்கனார்

சேர சோழ பாண்டியர் வரலாறு - எஸ். கிருஷ்ணன்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு