19) வாகதகர்கள் பேரரசு

வாகதகர்கள் அரசு (கி.பி.250-519) :


கி.பி. 3ம் நூற்றாண்டில் மத்தியில் சாதவாகனர்களின் வீழ்ச்சியுறும் நேரத்தில் எழுச்சி பெற்ற இவர்கள் கி.பி. 5 நூற்றாண்டு இறுதிவரை ஆட்சி புரிந்தனர். சுமார் 250 வருடங்கள் விந்தியசக்தியில் ஆரம்பித்து ஹரிசேனாவுடன் முடிவடைந்தது. இவர்கள் பிராமணர்கள் குலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தக்காண பீடபூமியில் ஆரம்பித்து தெற்கே மால்வா வரையும்,வடக்கே குஜராத் வரையும், தெற்கே துங்கபத்திரா நதி வரையும் மேற்கே இன்றைய சத்தீஸ்கர் மாநிலம் வரையும் இவர்களின் ஆட்சி இருந்தது. குப்தர்களின் சமகாலத்தை சேர்ந்தவர்கள் இவர்கள்.

இவர்களின் தலைநகரம் வாத்சாகுல்மா (தற்போதைய பெயர் வாசிம்). இவர்களின் அரசில் சமஸ்கிருதமும், பிராகிருதமும் பேசப்பட்டது. இவர்கள் இந்துக்களாக இருந்தாலும் புத்த,சமண மதங்களையும் ஆதரித்தனர். அஜந்தா குகைகோயில்கள் இவர்களின் அரசர் ஹரிசேனா காலத்தில் கட்டப்பட்டது. இவர்களின் காலத்தில் கலை, இலக்கியம் மற்றும் கட்டிடக்கலை நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. இரண்டாம் சந்திரகுப்தர் தன் மகளை வாகதக அரச குடும்பத்திலுள்ள இரண்டாம் ருத்ரசேனாவிற்கு மணம்முடித்து வைத்ததாகவும் குறிப்புகள் உள்ளது. குப்தர்களுடன் மட்டுமல்லாது பத்மாவதியை ஆண்ட நாகர்கள், கர்நாடகாவை ஆண்ட கதம்பர்கள் மற்றும் ஆந்திராவை ஆண்ட விஷ்ணு குந்தினர்களுடன் மணவினை தொடர்புகளும் அரசியல் தொடர்புகளும் கொண்டிருந்தனர். குப்தர்களும் இவர்களும் இணைந்தே குஜராத் மற்றும் செளராஷ்டிரா பகுதிகளில் மேற்கு சத்ரபதிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தினர்.

விந்தியசக்தி(கி.பி.250-270) :

 வாகதகர்களின் ஆட்சியின் பிதாமகர். பூரிகாவை தலைநகராக கொண்டு சாம்ராஜ்யத்தை தொடங்கினார். கடைசி அரசன் ஹரிசேனாவின் காலத்தில் அதாவது கிபி 5ம் நூற்றாண்டு இறுதியில் அமைக்கப்பட்ட அஜந்தா குகைகள் கோயில்களின் கல்வெட்டுகளில் இவருடைய போர்திறன் விவரிக்கப்பட்டுள்ளது. புராணங்களின் படி இவர் 96 ஆண்டுகள் ஆண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தெற்கு தக்காணம், மத்திய பிரதேசம், மால்வா ஆகிய பகுதிகளை வென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. த்விஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அவருக்கு பின் வந்தவர் தான் அவரின் மகன் பரவரசேனா 

பரவரசேனா (கி.பி.270-330) :

இவரது ஆட்சிக்காலத்தில் தான் இவர்களின் இராஜ்யம் பரவி பெருக ஆரம்பித்தது. இவர் சாம்ராட், ஹரிதிபுத்ரா மற்றும் தர்மமகாராஜா பட்டப்பெயர்களையும் பெற்றிருந்தார். முதன் முதலில் தன்னை சாம்ராட் என்று அழைத்துக்கொண்ட வாகதகர்கள் அரசர் இவரே.  இவரின் காலத்தில் வட இந்தியாவின் பெரும்பகுதிகளும் தக்காணமும் இவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. விதர்பாவையும் தனது இராஜ்யத்துடன் இணைத்தார். இவரது ஆட்சியின் தலைநகரம் காஞ்சனகா (தற்போதைய நாச்னா). இவரின் மகன் கெளதமிபுத்ரா நாகர்களின் அரசனான பாவநாகாவின் மகளை மணந்து கொண்டார். இவருக்கு முன்னரே ஆட்சிக்கு வராமலையே இவரது மகன் கெளதமிபுத்ரா இறந்ததால் இவருக்கு பின் இவரது பேரன் முதலாம் ருத்ரசேனா (கெளதமிபுத்ராவின் மகன்) நந்திவர்த்தனாவிலிருந்து ஆட்சி புரிந்தார்.

பரவரசேனாவின் காலத்திற்கு பின் இவர்களின் ஆட்சி 4 பிரிவுகளாக பிரிந்ததாகவும் சொல்லுகிறார்கள். அதில் 2 வம்சபிரிவுகளின் விவரங்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது.ஓன்று நந்திவர்த்தனாவிலிருந்து ஆட்சிபுரிந்த (முதலாம் ருத்ரசேனாவின் வம்சாவளியான) பரவரபுரா-நந்திவர்த்தனா மற்றொன்று வாத்சல்குலமா என்றழைக்கப்படும் பரவரசேனாவின் இன்னொரு மகனான சர்வசேனாவின் வம்சாவளியில் வந்தவர்கள்.

பரவரபுரா-நந்திவர்த்தனா கிளைவம்சம்:

முதலாம் ருத்திரசேனா (கி.பி.330-355) :

இவர் முதலாம் பரவரசேனாவின் பேரன். இவரிலிருந்து தான் நந்திவர்த்தனா வம்சம் தொடங்குகிறது. இவர் சிவனின் இன்னொரு வடிவமான மஹாபைரவரின் பக்தர். இவரது தலைநகரம் நந்திவர்த்தனா. இது தற்காலத்தில் நாகார்தன் என்று ராம்டெக் அருகில் நாக்பூருக்கு வடக்கே 20 கி.மீ தூரத்தில் அமைந்துளள்து. இவர் டியோடெக் நகரில் சிவன் கோயிலை கட்டினார்.

முதலாம் பிருத்விசேனா (கி.பி.355-380) :


இவர் மஹாபாரதத்தின் தருமருடன் ஒப்பிடப்படுகிறார். அவரை போலவே சத்தியநந்தன். தனது மகனுக்கு இரண்டாம் சந்திரகுப்தரின் மகளை திருமணம் செய்துகொடுத்தார். அதன்மூலம் குப்தர்களின் இராணுவத்துடன் இணைந்து மால்வா மற்றும் கத்தியவாரை சேர்ந்த சாஹா(மேற்கு) சத்ரபதிகளை வென்றார். இவரும் அவரின் தந்தையை போலவே சிவவழிபாடு செய்தவர். 

இரண்டாம் ருத்ரசேனா‌ (கி.பி.380-385) :

இவர் இரண்டாம் சந்திரகுப்தரின் மகளான பிரபாவதி குப்தாவை மணந்தார். 5 வருடங்கள் ஆட்சியில் இருந்த இவர் மரணமடைந்ததால் சிறுவயது பாலகர்களாக இருந்த தன் இரு மகன்களான திவாகரசேனா, தாமோதரசேனாவிற்கு பாதுகாப்பாக திவாகரசேனாவிற்காக (கி.பி.385-395) பிரபாவதிசேனாவே (கி.பி.385-405) ஆட்சி புரிந்தார். இந்த கால கட்டத்தில் வாகதகர்கள் ஆட்சி குப்தர்களின் ஆட்சியில் ஒரு அங்கமாகவே இருந்தது. திவாகரசேனாவிற்கு பின் அவரின் தம்பி தாமோதரசேனா ஆட்சிக்கு வந்தார்.

தாமோதரசேனா (கி.பி.395-440) :

இரண்டாம் ருத்ரசேனாவின் இரண்டாவது மகன். சகோதரன் திவாகரசேனாவின் மறைவுக்கு பின் ஆட்சிக்கு வந்தார். இவரின் காலத்தைய நிறைய தாமிரதகட்டில் பொறிக்கப்பட்ட பட்டயங்கள் மஹாராஷ்டிர மாநிலம் விதர்பாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவரை தன் தலைநகரை பரவரபுராவுக்கு (இன்றைய வார்தா மாவட்டத்திலுள்ள பைநார்) மாற்றினார். 

நரேந்திரசேனா (கி.பி.440-460) :


இவர் கர்நாடகாவிலுள்ள கதம்பர்களின் அரசன் காகுஸ்தவர்மனின் மகளாகிய அஜிஹதா பட்டரிகாவை மணந்துகொண்டார்.

இரண்டாம் பிருத்விசேனா (கி.பி.460-480) :

இந்த வம்சத்தின் கடைசி அரசன்.  இவர் விஷ்ணுகுந்தினர்கள் அரசனான இரண்டாம் மாதவ வர்மாவால் தோற்கடிக்கப்பட்டார். இவரது மறைவுக்கு பின் இந்த அரசு மற்றொரு பிரிவு (வாத்சாகுல்மா) அரசனான ஹரிசேனாவின் அரசாட்சியின் கீழ் வந்தது.

வாத்சாகுல்மா கிளைவம்சம்:

சர்வசேனா (கி.பி.330-355) :

முதலாம் பரவரசேனாவின் மகன்களுள் ஓருவர். இவர் தான் வாத்சாகுல்மா பிரிவை ஆரம்பித்து வைத்தது. இவர்கள் கோதாவரி நதிக்கும் சயாத்ரி மலைத்தொடருக்கும் இடைப்பட்ட பகுதிகளை ஆண்டவர்கள். இவரே வாத்சகுல்மா (இன்றைய வாஸிம் நகர்) நிர்மாணித்தார். கிருஷ்ணர் மேலுலகத்திலிருந்து பாரிஜாத மரத்தை கொண்டுவந்தார் என்று எழுதப்பட்ட "ஹரிவிஜயா" என்ற பிராகிருத நூலை எழுதியவர் இவரே. இவர் மேலும் பல பாடல்களை பிராகிருத மொழியில் எழுதியுள்ளார்.

விந்தியசேனா (கி.பி.355-400) :

கிட்டத்தட்ட 45 வருடங்கள் ஆட்சியில் இருந்த இவரின் ஆட்சிகாலத்தில் மரத்வாடா பகுதி(விதர்பாவின் தெற்கு பகுதி), வட ஹைதராபாத் ஆகியவை இவரின் ஆட்சியின் கீழ் வந்தது. இவர் இரண்டாம் விந்தியசக்தி என்றும் அழைக்கப்பட்டார். இவரது பட்டயங்கள் சமஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் இருந்தது. இவர் தன்னை தர்மமஹாராஜா என்ற பட்டத்துடன் அறிவித்துக் கொண்டார். இவர் ராஜ்ஜியத்தின் தெற்கு பகுதி எல்லையில் இருந்த குந்தள அரசரை தோற்கடித்தார். வனவாசியை தலைநகராக கொண்ட கதம்பர்களை தோற்கடித்தார்.

இரண்டாம் பரவரசேனா (கி.பி.400-415) :

அஜந்தாவின் 16வது குகை பட்டயங்கள் மூலம் இவரது பெயர் அறியப்பட்டது. புரட்சியின் போது கொல்லப்பட்ட இவருக்கு பின் இவரது 8வது மகன் சிறு வயதில் ஆட்சிக்கு வந்தார். அவரின் பெயர் எந்த கல்வெட்டிலும் குறிப்பிடப்படவில்லை.

பெயர் தெரியவில்லை (கி.பி.415-450) :

இரண்டாம் பரவரசேனாவின் புதல்வராக 8 வயதில் ஆட்சிக்கு வந்தவரின் பெயர் எந்தவொரு இடத்திலும் பதிவாகவில்லை. இவருக்கு பின் இவரது புதல்வர் தேவசேனா ஆட்சிக்கு வந்தார்.

தேவசேனா (கி.பி.450-475) :

இவர் இரண்டாம் பரவரசேனாவின் பேரன். இரண்டாம் பரவர சேனாவுக்கு பின்னர் 8 வயதில் ஆட்சிக்கு வந்த இவரின் தந்தையின் பெயர் அஜந்தா பட்டயங்களில் அழிந்து விட்டது. தந்தையின் 35 ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர் இவர் ஆட்சிக்கு வந்தார். தேவசேனாவின் ஆட்சியை அவரின் மந்திரி ஹஸ்திபோஜா தான் நடத்தினார் என்று சொல்லுவார்கள். 

ஹரிசேனா (கி.பி.475-500) :

தந்தை தேவசேனாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். அஜந்தாவின் 16வது குகை கல்வெட்டுகளில் அவந்தி (இன்றைய மத்தியபிரதேசம்), கோசலா (இன்றைய சட்டீஸ்கர்), கலிங்கம்(ஓரிஸா), ஆந்திரா, லத்தா (இன்றைய குஜராத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதி), திரிகூட (நாஸிக்), குந்தள (தெற்கு மஹாராஷ்டிரா) பகுதிகளின் மீது படையெடுத்ததை பற்றிய விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அஜந்தாவின் விகாரையான 16,17 குகைகளும் சைத்யாவான 19குகையும் இவரின் முயற்சியால் கட்டப்பட்டதாகும். அங்குள்ள ஓவியங்களும் இவரின் காலத்தில் தான் கட்டப்பட்டதாகும்.

ஹரிசேனாவிற்கு பிறகு இரண்டு அரசர்கள் ஆட்சியில் இருந்தனர். ஆனால் அவர்களின் பெயர் விவரங்கள் தெரியவில்லை. கடைசி அரசனை காலச்சூரிகளின் அரசனான மகிஸ்மதி வீழ்த்தி வாகதகர்களின் அரசுக்கு முடிவுரை எழுதினார். ஆனால் வேறொரு தகவல்களும் உள்ளது. கதம்பர்களின் அரசனான அஸ்மகா ஹரிசேனாவின் மகனை வார்தா நதிக்கரையில் நடந்த போரில் கொன்று வாகதகர்களின் ஆட்சிக்கு முடிவுரை எழுதினார் என்றும் கூறப்பட்டுள்ளது. கதம்பர்களின் தேவனகிரி தாமிர பட்டயத்தில் கி.பி.519ல் கதம்பர்களின் அரசனான ரவி வர்மா நர்மதா நதி முதல் காவிரி தலைக்காடு வரையிலான வாகதகர்களின் அரசு தன் பொறுப்பில் வந்தது என்று குறிப்பிட்டு இருப்பதிலிருந்து ஒட்டு மொத்தமாக இவரே வாதகர்களின் ஆட்சிக்கு முடிவுரை எழுதியிருக்கலாம் என்று தெரிகிறது. வாகதகர்களின் ஆட்சியில் தான் அஜந்தா குகைகள் குகை ஓவியங்கள் சிறப்புற ஆரம்பிக்கப்பட்டது. இன்றும் காலத்தை கடந்து அஜந்தாவின் ஓவியங்கள் பேசப்படுவது வாகதகர்களின் ஆட்சியின் கொடையேயாகும்.

உதவிய நூல்கள் :

விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல்கள்

படங்கள் உதவி :

கூகுள் படங்கள்


Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு