20) விஷ்ணுகுந்தின பேரரசு (அல்லது) வினுகொண்டா
விஷ்ணுகுந்தினர் அரசு (கி.பி.420-621) :
கி.பி. 420ல் இந்திரவர்மன் உருவாக்கிய பேரரசு கி.பி.621ல் இரண்டாம் கோவிந்தவர்மனுடன் முடிந்தது. விஷ்ணு குந்தினர்களின் பேரரசை முடித்து வைத்த சாளுக்கியர்களின் இரண்டாம் புலிகேசி அதற்கு தன் தம்பி குப்ஜா விஷ்ணுவர்த்தனாவை அப்பகுதிகளுக்கு ஆளுநராக்கினார். அந்த தம்பி குப்ஜா விஷ்ணுவர்த்தனா தான் கி.பி.624ல் கீழை சாளுக்கியர்கள் வம்சாவளியை (வேங்கி சாளுக்கியர்கள்) தொடங்கி வைத்தது வரலாறு.
இந்திரவர்மன் ( நான்காம் நூற்றாண்டு இறுதி - கி.பி.420(உறுதியில்லை))
வாகதகர்களின் ஆட்சியின் கீழ் சிற்றரசாக இருந்த இவர் இன்றைய தெலுங்கானா மாவட்டத்திலுள்ள நல்கொண்டா மாவட்டத்திலுள்ள இந்திரபாலபுரம் ஊரை தலைநகராக கொண்டு ஆட்சியை தொடங்கினார். இவருக்கு பிரியபுத்ரா என்று பட்டப்பெயரும் உண்டு.
முதலாம் கோவிந்த வர்மன் :
இவர் தான் முதன்முதலில் மஹாராஜா என்ற பட்டத்தை சூடிக்கொண்டார்.
முதலாம் மாதவ வர்மன் (கி.பி.420-440) :
இவர் காலத்தில் விஷ்ணுகுந்தினர்கள் அதிக அதிகாரம் பெற ஆரம்பித்தனர். இந்த விவரங்களை ஶ்ரீபர்வத மற்றும் இந்திரபாலகுட்டா செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் மாதவ வர்மன் (கி.பி.440-460) : இவரின் காலம் தான் விஷ்ணுகுந்தினர்களின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சிறிய அரசாக இருந்த இவர்கள் பேரரசாக உருவானது இவரின் காலத்தில் தான். இவர் வாகதகர்கள் அரசனான இரண்டாம் பிருத்விசேனாவை போரில் வென்று அவர் மகளான வாகதக மஹாதேவியை திருமணம் செய்து கொண்டார். வாகதகர்களுடன் திருமண உறவை ஏற்படுத்தியதன் காரணமாக இவரின் அரசை கிழக்கு கடற்கரை வரை விரிவாகியது. இவர் காஞ்சி பல்லவர்களின் கீழ் இருந்த அனந்த கோட்ரிக்கர்கள் ஆண்ட குண்டூர், தெனாலி, ஓங்கோல் பகுதிகளை தன் இராஜ்யத்துடன் இணைத்தார். இவர் அமரபுரம் (இன்றைய அமராவதி) என்ற நகரை உருவாக்கி அதனை தலைநகராக்கினார். பல்லவ நாட்டின் எல்லைகளை கவனிக்க தன் மகன் தேவவர்மனையும் அதற்கு பின் அவரது பேரன் மூன்றாம் மாதவ வர்மனையும் நியமித்தார் என்ற செய்திகள் மட்டுமே இருக்கிறது. இதன் மூலம் இவரின் காலத்தே இவரின் மகன் தேவ வர்மன் மரணமடைந்ததாகவும் அவருக்கு பின் மூன்றாம் மாதவ வர்மன் அரியணை ஏறினார் என்றும் அறியலாம். அந்த காலம் குறிப்பிடவில்லை. வேங்கியை வென்று அதனையும் அரசுடன் இணைத்தார். கோதாவரி நதி வரை இவரின் அரசு பரவியிருந்தது. இந்த வெற்றிகளுக்கு பிறகு இவரது தலைநகரம் பெஸ்வாடா (இன்றைய விஜயவாடா)க்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். அதன் விவரம் இல்லை. இந்த வெற்றிகளுக்கு பிறகு லார்ட் ஆஃப் தக்ஷிணபாதா என்ற பட்டத்தை பெற்றார். இதன் பின் அசுவமேத யாகம் மற்றும் இராஜ்யசுய யாகம் ஆகியவற்றை நடத்தினார். இவர் ராஜசுயம், அஸ்வமேதம் என்ற யாகங்களை நடத்தியதன் மூலம் வைஷ்ணவத்தை கடைபிடித்து இருக்கலாம் என்று தெரிகிறது.
மூன்றாம் மாதவ வர்மன் (கி.பி. -508) :
இவர் இரண்டாம் மாதவ வர்மனின் பேரன். தாத்தாவுக்கு முன்பே இவரது தந்தை மரணமடைந்ததால் தாத்தாவுக்கு பின்னர் பேரன் ஆட்சியேறினார். இவர் தனது ஆட்சியில் ராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களை வைசிஸ்ராய்யாக நியமித்தார்.
முதலாம் விக்கிரமேந்திரவர்மன் (கி.பி.508-528) :
இரண்டாவது தும்மலாகுதம் கல்வெட்டுகள் இவரை பற்றி குறிப்பிடுகின்றது. இதில் விஷ்ணுகுந்தினர்கள் ஶ்ரீபார்வதஸ்வாமியை வழிபட்டனர் என்றும் பிரம்ம சத்திரியர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதில் முதலாம் கோவிந்தவர்மன் தனது குலத்தின் பெருமைக்கு காரணமானவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் புத்த மதத்தை பின்பற்றியதாக இவரது பேரன் இரண்டாம் விக்கிரமேந்திர வர்மன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திரா பட்டரிக வர்மன் (கி.பி.528-555) :
இவர் மிகச்சிறந்த போர்வீரர் என்று இவருக்கு பின்னால் வந்த இவரது மகன் குறிப்பிட்டுள்ளார். போட்டியாளர்களுடனும் உறவினர்களுடன் இடைவிடாத உரசல்கள் இருந்தாலும் தனது அரசை காப்பாற்றிக்கொண்டார் என்று கூறுகிறார். இவரின் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அரசு ஸ்திரத்தன்மை இழக்க ஆரம்பித்தது. இவரின் கீழ் இருந்த சிற்றரசான கலிங்கத்துடன் நடந்த போரில் இவர் மாண்டு போனார். இந்தப்போருடன் கலிங்கபகுதிகள் பேரரசை விட்டு பிரிந்தது
இரண்டாம் விக்கிரமேந்திரவர்மன் (கி.பி.555-569) :
கலிங்கத்தை தங்களுடன் வைத்திருக்க தலைநகரை பெஸ்வாடா (விஜயவாடா)விலிருந்து லெண்டூலுரு (இன்றைய டெண்டூலுரு-மேற்கு கோதாவரி மாவட்டம்)க்கு மாற்றினார். கலிங்கத்தை திரும்பவும் பேரரசுடன் இணைத்தார். பல்லவ மன்னன் சிம்ஹவர்மனின் படையெடுப்பை தடுத்து நிறுத்தினார். பல்லவ மன்னனின் படையெடுப்பை தடுத்து விரட்டியதன் காரணமாக இவர் இந்திரபுரா என்ற கிராமத்தை பரம பட்டாரிகா மஹாதேவி புத்த விகாரம் அமைக்க தானமாக கொடுத்தார்.
இரண்டாம் கோவிந்த வர்மன் (கி.பி.569-573) :
இரண்டாம் விக்கிமேந்திர வர்மனின் மகனான இவர் வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்.
நான்காம் மாதவ வர்மன் (கி.பி.573-621) :
இவர் தனது ஆட்சியின் ஆரம்பகாலங்களில் வேங்கியில் இருந்து ஆட்சி புரிந்தார். ஆட்சியின் கடைசி காலங்களில் போர்களாக இருந்தது. கி.பி.610ல் கிழக்கு கோதாவரியை இன்றைய இராமச்சந்திரபுரத்தை ஆண்ட துர்விஜய ப்ரித்வி மஹாராஜா இவரின் ஆளுமையை எதிர்த்ததை அடக்கினார். கி.பி.616ல் சாளுக்கிய இரண்டாம் புலிகேசி மற்றும் அவரின் தம்பி குப்ஜா விஷ்ணுவர்த்தனாவுடன் நடந்த போரில் வேங்கியை இழந்து தோற்றோடினார். இதன் மூலம் இரண்டாம் புலிகேசி தன் தம்பி குப்ஜா விஷ்ணுவர்த்தனாவை வேங்கி யின் ஆளுநராக்கினார். பின்னர் கி.பி.621ல் கோதாவரி ஆற்றங்கரையில் நடந்த போரில் தோற்று மாண்டதுடன் இவரின் மகனான மஞ்சனா பட்டரிகாவையும் வீழ்த்தி கி.பி.624ல் விஷ்ணுகுந்தினர்களிடன் ஆட்சியை முடித்து வைத்தனர் சாளுக்கியர்கள். அதன் பிறகு குப்ஜா விஷ்ணுவர்த்தனாவின் கீழ் வேங்கி சாளுக்கியர்களாக புது வம்சம் உருவாகிற்று.
உதவிய நூல்கள் :
விக்கிபீடியா தகவல்கள்
படங்கள் உதவி :
கூகுள் படங்கள்





Comments
Post a Comment