22) பாலர்கள் பேரரசு
பாலர்கள் பேரரசு (கி.பி.750-1174) :
இன்றைய வங்காளத்தை பூர்வீகமாக கொண்டு கி.பி.750-1174 வரை ஆண்டவர்கள். இவர்களின் அரசு இன்றைய பங்காளதேஷம், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்தது. பாடலிபுத்திரா, கவுர், மூங்கர் ஆகிய தலைநகரங்களை கொண்டிருந்தனர். சமஸ்கிருதமும், வங்கமொழியும் இவர்கள் ஆட்சியில் இருந்தது. வங்காளத்தை பூர்வீகமாக கொண்டு ஆண்ட முதல் புத்தமத அரசர்கள் இவர்களே. இவர்கள் சத்ரியர்கள் என்று கருதப்படுகிறார்கள். பால என்ற சொல்லுக்கு வங்காள மொழியில் காப்பவர் என்று பொருள். இவர்கள் மஹாயான புத்த மதத்தையும், தாந்தீரீக புத்தமதத்தையும் பின்பற்றினர். இவர்களால் தான் திபெத்தில் புத்த மதம் பரவியது. சேனா பரம்பரை அரசர்கள் இவர்களை தோற்கடித்து கி.பி.12ம் நூற்றாண்டில் இவர்களது ஆட்சிக்கு முடிவுரை எழுதினர்.
கோபாலா (கி.பி.750-770) :
அடிப்படையில் இராணுவ தளபதியான இவரை மக்களே தேர்ந்தெடுத்து அரசராக ஆக்கினார்கள். இவரது தந்தை வாப்யதா என்பவர் கூட போர் வீரராகவே அறியப்பட்டவர். இவரது கடைசி காலத்தில் அரசு வங்காளம் மட்டுமல்ல பீஹாரிலும் இருந்தது. இவரே பாலர் வம்சத்தை தோற்றுவித்தவர். இவர் பீஹாரிலுள்ள ஓடன்ட்டபுரியில் புத்த மடாலயம் கட்டினார். இவரது ஆட்சியின் பரப்பு பற்றி முழுமையாக தெரியவில்லை.ஆனால் வங்காளம் முழுவதும் இவர் ஆட்சி புரிந்திருக்கலாம் என்று தெரிகிறது. இவர் புத்த மதத்தை பின்பற்றினார் என தெரிகிறது. தனது 80வது வயதில் மரணமடைந்தார்.
தர்மபாலா (கி.பி.770-810) :
கோவிந்தாவிற்கு பிறகு அரியணை ஏறிய அவரின் மகன் இவர். புத்த மதத்தில் மிகுந்த பற்று கொண்டவராக இருந்தார். பீஹாரிலுள்ள பாகவ்பூர் என்னுமிடத்தில் புத்த மதத்தின் கொள்கைகளை அறிய செய்ய விக்ரமசீலா பல்கலைகழகத்தை தோற்றுவித்தார். நாளந்தா பல்கலைக்கழகம் சிறப்புற நடைபெற 200 கிராமங்களின் வருவாயை அதற்கு ஒதுக்கினார். இவரின் காலத்தில் குர்ஜரா-பிரதிஹரர்கள் மற்றும் இராஷ்டிரகூடர்களுடன் தொடர்ச்சியான போர்களில் ஈடுபட்டு வடக்கு மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் வலிமையான பேரரசாக மாற்றினார். இவர் வங்காளம் மற்றும் பீஹாரை நேரிடையாக ஆண்ட இவர் கன்னோசியை ஆள ஒருவரை நியமித்தார். இவரை குர்ஜர-பிரிதிஹரர்கள் இருமுறை தோற்கடித்தனர். அந்த நேரத்தில் பிரதிஹரர்களை இராஷ்டிரகூடர்கள் தோற்கடித்ததால் இவரே வட இந்தியாவில் வலிமையான அரசராக திகழ்ந்தார். இன்றைய வங்காள தேசத்தில் நாகெளவுன் மாவட்டத்தில் சோமபுரா மஹாவிஹாரா என்ற புத்த விஹாரத்தை அமைத்தார்.
தேவபாலா (கி.பி.810-850) :
தர்மபாலாவிற்கும் இராஷ்டிரகூட இளவரசி ரன்னதேவிக்கும் பிறந்த இவர் அவருக்கு பின் அரியணை ஏறினார். பேரரசை பீகார், ஓரிஸா மற்றும் காமரூபம் (அஸ்ஸாம்) வரை விரிவுபடுத்தினார். தீவிரமான புத்தமதத்தில் ஈடுபாடு கொண்டவரான இவர் மகதத்தில் (பீஹார்) நிறைய மடாலயங்களையும் கோயில்களையும் எழுப்பினார். இவர் இராஷ்டிரகூட அரசர் அமோகவர்ஷரை போரில் தோற்கடித்தார். இவரது ஆட்சி விந்திய மலை, இமய மலை மற்றும் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா வரை இருந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தெற்கே பாண்டியரை வென்றதாக தெரிவித்தாலும் வலுவான ஆதாரங்கள் இல்லை. இவர் மகதத்தில் நிறைய புத்த மடாலயங்கள் கட்டினார்.
சுரபாலா/மகேந்திரபாலா (கி.பி.850-854) :
தேவ பாலாவுக்கு பின்னர் ஆட்சியேறிய சுர பாலா அவரது மகன். இவரது சகோதரனான மகேந்திர பாலாவும் இவருக்கு பின்னர் ஆட்சியேறினார் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தேவ பாலா - மஹாதா தேவி என்பவருக்கு பிறந்த மகன்களே. இவர்களை அப்புறப்படுத்தி விட்டு இரண்டாம் கோபாலா ஆட்சியை பிடித்தார் என்றும் மகேந்திர பாலா தான் முதலில் ஆட்சியேறினார் என்றும் பின்னரே தம்பியான சுர பாலா ஆட்சிக்கு வந்தார் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளது.
இரண்டாம் கோபாலா (கி.பி.854-858) :
இவர் சுரபாலாவுக்கு பின்னர் ஆட்சியில் 4 வருடங்கள் இருந்தார். இவர் சுரபாலாவின் மகன். இவரது தாயார் பெயர் மணிக்யாதேவி. இவரது ஆட்சியை பற்றிய கல்வெட்டுகள் கிடைக்காவிட்டாலும் புத்த மத கல்வெட்டுகளில் இவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தைக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த தந்தையின் சகோதரரை அகற்றிவிட்டு ஆட்சிக்கு வந்தார் என்று கூறப்படுகிறது.
முதலாம் விக்ரஹபாலா (கி.பி.858-859) :
தேவபாலாவுக்கு பிறகு அவரின் உறவினர் முதலாம் விக்ரஹபாலா பட்டத்திற்கு வந்தார். இவர் தர்ம பாலாவின் பேரனும் ஜெய பாலாவின் மகனும் ஆவார்.அவர் அளவுக்கு அதிகமான சிக்கனத்துடன் அரசை நடத்தினார். ஆரம்பத்தில் சுரபாலா மற்றும் விக்ரஹபாலா என்பவர் ஒருவரே என்றும் கருதினார்கள். பின்னர் மிர்ஸாபூரில் கிடைத்த கல்வெட்டுகளின் படி இருவரும் உறவினர்கள் என்று அறியமுடிந்தது. இவர் சுரபாலா அல்லது அவரது மகனான இரண்டாம் கோபாலாவை ஆட்சியிலிருந்து அகற்றி ஆட்சியை கைப்பற்றி இருக்கலாம் என்று நினைக்கின்றனர்.
நாராயணபாலா (கி.பி.859-908) :
முதலாம் விக்ரஹபாலாவின் மகனான இவர் அவருக்கும் காலச்சூரியின் இளவரசி லஜ்ஜாதேவிக்கும் பிறந்தவர். அவருக்கு பின் பட்டத்திற்கு வந்தார். இராஷ்டிரகூடர்களின் அரசன் அமோகஷர்ஷாவுடன் நடந்த போரில் தோற்றுப் போனார். மேலும் இவர் மிகிர போஜனுடன் நடந்த போரிலும் தோற்று போனார். 50 வருடங்கள் ஆட்சியில் இருந்தார்.
இராஜ்யபாலா (கி.பி.908-940) :
இவர் தந்தை நாராயண பாலாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்து 32 வருடங்கள் ஆட்சி புரிந்தார்.
மூன்றாம் கோபாலா (கி.பி.940-960) :
இராஜ்ய பாலாவுக்கு பின்னர் 9வது அரசராக ஆட்சிக்கு வந்த இவர் அவரின் மகன். 20 வருடங்கள் ஆட்சியில் இருந்தார். இவர் இராஜ்ய பாலாவுக்கும் இராஷ்டிரகூட இளவரசி பாக்யதேவிக்கும் பிறந்தவர். இவரது ஆட்சி காலத்தில் சந்தாளர்கள் மற்றும் காலச்சூரிகள் இணைந்து பிரதிஹரர்களின் பகுதிகளை கைப்பற்றினார்கள். காம்போஜா பழங்குடியினர் வடக்கு வங்காளத்தில் தங்களது அரசை ஏற்படுத்தவே இவர் மேற்கு வங்காளம் மற்றும் தெற்கு பீஹார் பக்கம் நகர வேண்டியதாகிட்டது. இவர் பலவீனமான அரசர் என்பதால் அரசின் பகுதிகளை இழக்க வேண்டியதாகிவிட்டது.
இரண்டாம் விக்ரஹபாலா (கி.பி.960-988) :
இவர் இரண்டாம் கோபாலாவின் மகன். இவரது ஆட்சியில் பாலர்கள் பீஹாரில் தங்களது ஆட்சி பகுதிகளை பெருமளவில் இழந்தனர். காலச்சூரி அரசர் கல்யாண சந்திரா என்பவர் காம்போஜா பழங்குடியினர் மீது மட்டுமல்ல இவர் மீதும் படையெடுத்து இவர் அரசை பலவீனப்படுத்தினார்.
முதலாம் மகிபாலா (கி.பி.988-1038) :
பாலர்களிடம் முன்பிருந்த வடக்கு மற்றும் கிழக்கு வங்காளத்தையும் பீஹாரையும் திரும்ப ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். தனது ஆட்சியை வாரணாசி வரைக்கும் நீட்டித்தார். அரியணை ஏறியது கி.பி.988. கங்கை கொண்ட சோழபுரம் நகர நிர்மாணத்திற்காக கங்கை நீரை எடுக்க முதலாம் இராஜேந்திர சோழன் செல்லும்போது தரம்பால், ரானாசூர், கோவிந்தசந்திரா என்ற பாலா வம்சத்தின் கீழ் இருந்த சிற்றரசர்களையும் முதலாம் மகிபாலாவையும் தோற்கடித்தார். இந்நிகழ்வு கி.பி.1023-1024 ஆண்டுகளில் நிகழ்ந்தது.
நாயபாலா (கி.பி.1038-1055) :
முதலாம் மகி பாலாவுக்கு பின்னர் ஆட்சிக்கு ஏறிய இவர் அவரின் மகன். இவரது ஆட்சி வங்காளம் மற்றும் பீஹார் பகுதிகளில் பரவியிருந்தது. பெரும் போராட்டத்திற்கு பின்னரே காலச்சூரி அரசர் கர்ணாவை போரில் தோற்கடித்தார். போருக்கு பின்னர் புத்த மத அறிஞர் அடிஸாவின் முயற்சியினால் இருவருக்கும் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.
மூன்றாம் விக்ரஹபாலா (கி.பி.1055-1070) :
நாய பாலாவுக்கு பின்னர் ஆட்சி ஏறிய இவர் அவரின் மகன். 15 ஆண்டுகள் ஆண்ட இவரின் ஆட்சி வங்காள பகுதிகளில் நீடித்தது. இவரது ஆட்சியில் மீண்டும் காலச்சூரி அரசர் கர்ணா படையெடுத்து வந்து இவரின் தோற்று பின்னர் உடன்படிக்கை மூலம் கர்ணாவின் மகளான யவனஶ்ரீயை மணந்தார். பின்னர் இவர் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்ரமாதித்யாவினால் பலமாக தோற்கடிக்கப்பட்டார். பின்னர் இவர் ஒரிஸ்ஸாவின் சோமவம்சி அரசர் மஹாசிவகுப்தாவினால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டார். இந்த தோல்விகள் அரசை மிகவும் பலவீனப்படுத்தி விட்டது. இவர்களது பலவீனத்தை பயன்படுத்தி சேனா வம்சத்தினர் இவரிடமிருந்து பல பகுதிகளை கைப்பற்றி வங்காளத்தில் எழுச்சி பெற ஆரம்பித்தனர்.
இரண்டாம் மஹிபாலா (கி.பி.1070-1075) :
இவர் மூன்றாம் விக்ரஹபாலாவின் மகன். இவர் தந்தைக்கு பின்னர் 5 வருடங்கள் ஆட்சி புரிந்தார்.
இரண்டாம் சுரபாலா (கி.பி.1075-1077) :
இவர் மூன்றாம் விக்ரபாலாவின் இன்னொரு மகன். சகோதரன் இரண்டாம் மஹாபாலாவுக்கு பின்னர் ஆட்சியேறி இரண்டு ஆண்டுகள் ஆண்டார்.
இராமபாலா (கி.பி.1077-1130) :
இவரும் மூன்றாம் விக்ரஹ பாலாவின் மகன் தான். சகோதரர்கள் இரண்டாம் மஹிபாலா மற்றும் இரண்டாம் சுரபாலாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவரே சற்று வலிமையான பாலர் குல அரசர். இவர் நேபாளத்தை பாலர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். மேலும் கிழக்கு வங்காளத்தில் இருந்த வர்மன் வம்சத்தை தனக்கு கீழ் இருந்த சிற்றரசாக மாற்றினார். இன்றைய ஓரிஸாவை ஆண்ட கங்கர்களை வென்று தன் அரசுடன் இணைத்தார். மேலும் தன் பொது எதிரிகளான சாளுக்கியர்களுக்கு எதிராக முதலாம் குலோத்துங்க சோழனுடன் நல்லுறவு கொண்டிருந்தார். இவருக்கு பின் இவரது மகன் குமார பாலா காலத்திலும் அவருக்கு பின் வந்தவர்கள் காலத்திலும் அரசு சுருங்க ஆரம்பித்தது. இவரது ஆட்சியில் தான் சந்தியாகர் நந்தி என்பவர் இராமசரித்திரம் நூலை எழுதினார்.
குமாரபாலா (கி.பி.1130-1140) :
இராம பாலருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இவர் அவரது மகன். இவரின் காலத்தில் அஸ்ஸாம் அரசை இழந்தனர். ஆளுநராக இருந்த திம்மையதேவ என்பவர் புரட்சியின் மூலம் பல பகுதிகளை கைப்பற்றிக் கொண்டார். அவரை பதவியிலிருந்து விலக்கி விட்டு வைதியதேவா என்பவரை ஆளுநராக நியமித்தார்.
நான்காம் கோபாலா (கி.பி. 1140-1144) :
குமாரபாலாவின் மகனான இவரை இவர் மாமாவான மதனபாலா கொன்று இவருக்கு பின் ஆட்சிக்கு வந்ததை இராமசரித்திரம் விவரித்துள்ளது. மொத்தம் 4 ஆண்டுகளே ஆட்சியில் இருந்தார்.
மதனபாலா (கி.பி.1144-1162) :
இவரின் காலத்தில் கிழக்கு வங்காளத்தில் சிற்றரசர்களாக இருந்த வர்மன் வம்ச அரசர்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்று அரசிலிருந்து தங்களை விடுவித்தனர். கங்கர்கள் தங்களது இராஜ்யமான ஓரிஸ்ஸாவை பாலர்களிடமிருந்து மீட்டுக் கொண்டனர். சேனா வம்சத்தினர் இவரிடமிருந்து பீஹார் பகுதிகளை கைப்பற்றி கொண்டனர்.இவரது காலத்திற்கு பின் சேனா வம்சத்தினர் பாலர்கள் வம்சத்தை ஆட்சியில் இருந்து அகற்றினர்.
கோவிந்தபாலா (கி.பி.1162-1174) :
இவர் மதனபாலாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவர் மதன பாலாவுக்கு என்ன உறவு முறை என்ற விவரமில்லை. 12 ஆண்டுகள் ஆண்ட தகவல்களை தவிர வேறு விவரங்கள் எதுவுமில்லை.
பால பாலா (?????) :
கோவிந்த பாலாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். எவ்வளவு காலம் ஆண்ட விவரம் தெரியவில்லை. இவரை சேனா வம்சத்தினர் வீழ்த்தி பாலா வம்ச ஆட்சியை முடித்து வைத்தனர்.
கோபாலாவில் ஆரம்பித்து பால பாலா வரை 22 அரசர்கள் பாலர்கள் வம்சத்தில் ஆண்டதாக செய்திகள் உள்ளது. மிகப்பெரிய இராணுவத்தை கொண்டிருந்த விவரங்களும் இவரை எதிர்த்து போரிட்ட அரசரின் செய்திகள் வழியாகவும் ஆட்சியில் சுற்றுப்பயணம் செய்த யாத்ரிகர் சுலைமான் என்பவரின் செய்திகள் மூலம் 50000 யானைகளை கொண்ட பெரிய படைகளை வைத்திருந்த விவரமும் தெரிய வருகிறது. இந்த வம்சத்தை வீழ்த்தி அடுத்து சேனா வம்சத்தினர் தங்களது ஆட்சியை வங்காள பகுதிகளில் ஆரம்பித்தனர்.
உதவிய நூல்கள் :
விக்கிபீடியா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்





Comments
Post a Comment