23) இராஷ்டிரகூட பேரரசு

இராஷ்டிரகூட பேரரசு

கி.பி. 6ம் நூற்றாண்டிலிருந்து கி.பி.10ம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்டனர். 8ம் நூற்றாண்டு மத்தியில் தான் அவர்கள் பேரரசாக எழுந்தனர். மத்திய பிரதேசத்தில் உள்ள மான்பூர் என்னுமிடத்தில் கிடைத்த 7ம் நூற்றாண்டு செப்பு தகட்டின் மூலம் அறியமுடிகிறது. தற்போதைய மஹாராஷ்டிராவில் எலிச்சப்பூர் (பழைய பெயர் அச்சல்பூர்) கல்வெட்டுகளில் கனோன்னி அரசர்கள் பற்றிய விவரங்கள் உள்ளது. இராஷ்டிரகூடர்கள் எங்கிருந்து வந்தனர் அவர்களது மொழி எது?

இராஷ்டிரகூடர்களின் தோற்றம் பற்றி பெரும் சர்ச்சை உள்ளது. இவர்களின் மூதாதையர்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் அசோகர் சக்கரவர்த்தி ஆண்ட சமயம் வட இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும் பல இராஷ்டிரகூடர் மரபுகள் சிறு சிறு அரசுகளை ஆண்டதாகவும் தக்காணத்திலும் கி.பி.6ம் நூற்றாண்டு முதல் கி.பி.8ம் நூற்றாண்டு வரை சிறிய அரசுகளை ஆண்டதாகவும் கி.பி. 8 முதல் 10 நூற்றாண்டில் ஆண்ட மான்யகேடா இராஷ்டிரகூடர்களுடன் இவர்களுக்கு உள்ள தொடர்புகளும் இன்று வரை விவாதத்திற்குரியது. இவர்களை பற்றிய குறிப்புகள் பாலி மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்கள், கன்னட மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. இவர்கள் சந்திர குலமா சூரிய குலமா என்ற சந்தேகமும் இவர்களின் முத்திரை, நாணயங்கள் மூலம் கண்டறிய முடியவில்லை. இன்றும் அது விவாதத்தில் உள்ளது. இவர்கள் வடமேற்கு இனக்குழவாகவே கன்னடியர்களாகவோ ரெட்டி மராத்தியர்களாகவோ அல்லது பஞ்சாப்பின் பழங்குடி இனத்தவராகவோ இருக்கலாம் என்ற சந்தேகமும் தீரவில்லை. சமஸ்கிருதத்தை போற்றி வளர்த்தனர். கன்னடத்திற்கு அமோக ஆதரவு கொடுத்தனர் என்பதிலிருந்து இவர்களின் தாய்மொழி கன்னடம் என்று அறியப்படுகிறது.

எலிச்சப்பூர் அரசு பாதாமி சாளுக்கியர்களின் கீழ் சிற்றரசாக இருந்தது. அவர்களின் அரசன் தந்திதுர்கா சாளுக்கியர்கள் வலிமை குன்றிய சமயத்தில் கி.பி.753 ல் சாளுக்கியன் இரண்டாம் கீர்த்திவர்மனை தோற்கடித்து சாளுக்கிய ஆட்சிக்கு முடிவு கட்டி இராஷ்டிரகூடர்களின் ஆட்சியை தற்போதைய குல்பர்காவில் ஏற்படுத்தினார். அவரின் மரபில் வந்தவர்கள் மான்யகேடா இராஷ்டிரகூடர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் வடக்கே குர்ஜர-பிரதிஹர பேரரசும் வங்காளத்தில் பாலா பேரரசும் பெரிய பேரரசுகளாக இருந்தது. அரேபியர்களின் கி.பி.851ல் எழுதப்பட்ட சில்சிலாடுட்டுவாரிக் நூலில் அன்றைய உலகில் நான்கு பெரிய பேரரசுகளுள் இராஷ்டகூடப் பேரரசும் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரபுப்பயணிகள் சுலைமான்(851), அல் மசுடி (944), இபன் குர்தாபா (912) ஆகியோர் அன்றைய இந்தியாவில் இராஷ்டிரகூட அரசே மிகப்பெரிய பேரரசு என்று கூறியுள்ளனர்.

இராஷ்டிரகூடர்களின் மொழி கன்னடம் மற்றும் சமஸ்கிருதம். இவர்களின் ஆட்சியில் இந்துமதம், சமணம் மற்றும் பெளத்தம் ஆகியவை பரவியிருந்தது.  தலைநகரம் மான்யக்கேடா . இவர்களின் முதல் அரசன் தந்திதுர்கா (கி.பி.735ல் சிற்றரசாக இருந்து சாளுக்கியரை தோற்கடித்து கி.பி.753 ல்) அரசை நிறுவினார்.  கடைசி அரசன் நான்காம் இந்திரன். (கி.பி.982ல் மேற்கு சாளுக்கியர் இரண்டாம் தைலப்பா இவரை வென்று இராஷ்டிரகூடர்களுக்கு முடிவுரை எழுதி மேற்கு சாளுக்கிய வம்சத்தை தொடங்கி வைத்தார்.)

இராஷ்டிரகூடர்கள் ஆட்சியில் கலை, இலக்கியம் செழித்து வளர்ந்தது. இவர்களின் மன்னன் முதலாம் அமோகவர்ஷன் கன்னடத்தில் எழுதிய கவிராஜமார்க்கம் இலக்கியம் செழித்து வளர்ந்ததற்கு உதாரணமாக சொல்லலாம். கட்டிடக்கலைக்கும் பேருதவி புரிந்துள்ளனர். எல்லோராவிலுள்ள "கைலாசநாதர் ஆலயம்"


, மஹாராஷ்டிராவிலுள்ள "எலிபண்டா குகைகள்"

மற்றும் கர்நாடகத்திலுள்ள பட்டடக்கலிலுள்ள "காசி விஸ்வநாதர் ஆலயம்" மற்றும் "ஜைன நாராயண்" கோயிலை உதாரணமாக சொல்லலாம். இவையெல்லாம் திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.

இராஷ்டிரகூடர்கள் மன்னர்கள் (கி.பி.753-982)

தண்டிதுர்கன் (கி.பி.735-756) : மஹாராஷ்டிராவிலுள்ள எலிச்சப்பூரை கி.பி. 735 முதல் ஆண்டு வந்த சிற்றரசர் இவர். இவர் இரண்டாம் இந்திரா மற்றும் குஜராத் சாளுக்கிய இளவரசி பாவநாகாவுக்கும் பிறந்தவர். கி.பி. 753ல் பாதமி (வாதாபி) சாளுக்கிய மன்னரான இரண்டாம் கீர்த்திவர்மனை தோற்கடித்து சாளுக்கிய நாட்டின் வட பகுதியை கைப்பற்றிக் கொண்டார். சாளுக்கிய வம்சத்தை அழித்து இராஷ்டிரகூடர்கள் வம்சத்தை ஆரம்பித்து வைத்தார். பின்னர் தெற்கு குஜராத்தான லத்தா, மாளவம், கலிங்கம் மற்றும் மத்திய இந்தியாவின் நாகர்களான ஷெஷாஸ்களையும் வென்றார். தன் மகளை காஞ்சி பல்லவரான இரண்டாம் நந்திவர்மனுக்கு திருமணம் செய்து வைத்தார்.  தன் மருமகனான பல்லவ அரசன் நந்திவர்மனுக்கு சாளுக்கியர்களிடம்  காஞ்சியை மீட்க உதவினார். பின்னர் கோசலர்கள், ஶ்ரீசைலத்தை ஆண்ட அரசர்களையும் வெற்றி கொண்டார். இவர் ஆரம்பத்தில் சாளுக்கியர்களின் கீழ் சிற்றரசாக இருந்த போது குஜராத் நவசாரியின் ஆளுநரான அவநஞ்சஸ்ராய புலிகேசியுடன் இணைந்து அரபு படைகளை கி.பி.738ல் வெற்றி கொண்டு விரட்டியடித்தார்.

முதலாம் கிருஷ்ணன் (கி.பி.756-774) :

இவர் முந்தைய அரசர் தண்டிதுர்காவுக்கு மாமா முறையில் வந்தவர். சிலர் தண்டிதுர்காவை விரட்டியடித்து ஆட்சியை கைப்பற்றினார் என்றும் சொல்லுகிறார்கள். ஆனால் கவி மற்றும் நவ்சாரி தாமிர பட்டயங்கள்  இவர் தண்டிதுர்கா மரணத்திற்கு பின்னர் ஆட்சியேறினார் என்று கூறுகின்றன.  இவரே பாதாமி சாளுக்கிய கீர்த்திவர்மனை கி.பி.757ல் முழுமையாக தோற்கடித்து சாளுக்கியர்கள் அரசை முடித்து வைத்தவர். இவர் கன்னர மற்றும் கன்னேஷ்வர போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டார். தற்போதைய கர்நாடகத்தின் கங்கவாடி (தெற்கு கர்நாடகா) அரசர் ஶ்ரீபுருஷாவை வென்று கர்நாடக பகுதிகளையும் கொங்கண் பகுதிகளையும் இராஷ்டிரகூடர்களின் கீழ் கொண்டு வந்தார். இவர் 18 சிவன் கோயில்களை கட்டினார். எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலை கட்டியதும் இவரே. பாறையை குடைந்து கட்டப்பட்ட கோயிலான அதை பின்னர் ஒளரங்கசீப் படையெடுப்பில் கி.பி.1682ல் அதை உடைக்கமுடியாமல் உருவங்களை சிதைத்து விட்டு போக மட்டுமே முடிந்தது. இவருக்கு பின்னர் இவரது மூத்த மகன் இரண்டாம் கோவிந்தன் ஆட்சிக்கு வந்தார். 

இரண்டாம் கோவிந்தன் (கி.பி.774-780) :

இவர் முதலாம் கிருஷ்ணாவின் மகன். இவர் தந்தையின் ஆட்சியில் இளவரசாக இருந்த போது கீழை சாளுக்கிய அரசர் நான்காம் விஷ்ணுவர்த்தனை வென்றார். இவர் ஆட்சியில் ஏறியதும் சிற்றின்பத்தில் மூழ்கி அரசு பொறுப்புகளை சரி வர கவனிக்கவில்லை. இவரது சகோதரனான துருவ தரவர்ஷனே நாட்டின் நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில் தன்னை தன் சகோதரன் ஒதுக்கிவிடுவார் என்று பயந்து தானே நிர்வாக பொறுப்புகளை ஏற்று சகோதரனை விலக்கி வைக்க அவர் கோபமுற்று படை நடத்தி இவரை தோற்கடிதாதார். வேறு வழியின்றி இவர் தனது சகோதரனான துருவ தரவர்ஷனுக்கு ஆட்சியை ஒப்படைத்தார்.

துருவ தரவர்சன் (கி.பி.780-793) :

இவர் சகோதரன் இரண்டாம் கோவிந்தனிடம் இருந்து ஆட்சியை பறித்தார் என்று கூறுகின்றனர். சிலர் அமைதியான வழியிலையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். ஆனால் சகோதரனை போரில் வீழ்த்தியே ஆட்சியை கைப்பற்றினாலும் அமைதியான முறையிலையே ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இவரது ஆட்சியில் பேரரசு காவிரி முதல் மத்திய இந்தியா வரை பரவியிருந்தது. கன்னோசியை படையெடுத்து வங்கத்தின் பாலர்களையும் குர்ஜர-பிரதிஹர பேரரசையும் வென்று பெரும் செல்வத்தை ஈட்டினார். ஆனால் நிலப்பகுதிகளை அடையமுடியவில்லை. வங்காளத்து பாலர்கள் வம்சத்து தர்மபாலாவை கங்கை-யமுனை பீடபூமியில் வென்றார். கீழை(வேங்கி) சாளுக்கியர்களையும் மேற்கு கங்கர்களையும் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தார். இவரது ஆட்சி வடக்கே அயோத்தி முதல் தெற்கே இராமேஸ்வரம் வரை இருந்ததாக கூறுகின்றனர். இவர் இரண்டாம் நந்திவர்மனை தன் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்தார். இவரது ஆட்சியில் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகள் இராஷ்டிரகூடர்கள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது.

மூன்றாம் கோவிந்தன் (கி.பி.793-814) :

துருவ தரவர்மனுக்கு பின் ஆட்சிக்கு வந்தது அவரின் மூன்றாம் மகனான மூன்றாம் கோவிந்தன். ஆட்சிக்கு வந்த புதிதில் இவரை எதிர்த்து இவரின் அண்ணனான கம்பராசன் என்பவர் ஆட்சிக்கு உரிமை கோர இன்னொரு சகோதரனான இந்திரா என்பவருடன் இணைந்து அவரை தோற்கடித்து விரட்டினார். இரண்டாவது முறையும் போரிட்டு வர அவரை தோற்கடித்து பின்னர் மன்னித்து கங்கவாடியை ஆட்சி செய்யும் உரிமையை கொடுத்தார். இவரின் ஆட்சிக்காலத்தில் பேரரசு எல்லையற்று பரந்து விரிந்தது. இவரின் தலைநகரம் எது என்ற குழப்பம் ஆராய்ச்சியாளர்களுக்கு உள்ளது. இமயமலையின் குளிர்ந்த நீரோடைகளின் நீரை மூன்றாம் கோவிந்தனின் படை குதிரைகள் அருந்தின என்று சஞ்சன் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பின்னர் தெற்கே திரும்பி குஜராத், கோசலம் மற்றும் கங்கவாடியை வென்றதாகவும் தெரிகிறது. காஞ்சி பல்லவரான தண்டிவர்மனை கி.பி.803ல் இவர் தோற்கடிக்க பல்லவர்கள் இவரின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டனர். இலங்கை மன்னர்களும் இவனது ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.  வேங்கியின் 4ம் விஷ்ணுவர்த்தனா இவருக்கு தாய்வழி தாத்தா என்பதால் இவரை எதிர்க்கவில்லை என்பதால் தக்காணத்தை எளிதாக கைப்பற்றினார். சோழ, பாண்டியர்களும் இவனுக்கு மரியாதை செலுத்தினார்கள். கன்னோசியை கைப்பற்றும் பொருட்டு படைகளுடன் சென்ற இவர் பிரதிஹர அரசர் இரண்டாம் நாகபட்டாவை பண்டல்கண்ட் என்னுமிடத்தில் தோற்கடித்தார். கங்கை சமவெளியை ஆண்ட தரும பாலாவையும்  தோற்கடித்தார். கன்னோசியை ஆண்ட சக்ராயுதா இவரிடம் நிபந்தனையின்றி சரணடைந்தார். இதனால் இவனது அரசு கன்னியாகுமரியிலிருந்து கன்னோசி வரைக்கும் குஜராத்தின் ப்ரூச்சிலிருந்து  கங்கையின் வாரணாசி வரைக்கும் இருந்தது. வேங்கியில் இவரது தாத்தா நான்காம் விஷ்ணுவர்த்தனா கி.பி.799ல் மறைந்தவுடன் ஆட்சிக்கு வந்த அவர் மகனான 2ம் விஜயாதித்தர் இவரை எதிர்க்க அவரை தோற்கடித்து அவரின் இளைய சகோதரரை வேங்கியின் அரசராக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். வாரிசுரிமை போரில் தனக்கு ஆதரவாக இருந்த  தனது சகோதரனான இந்திரா என்பவனை தெற்கு குஜராத்தான லத்தா பகுதிக்கு பொறுப்பாக நியமித்தார். இதன் மூலம் குஜராத்தில் இராஷ்டிரகூடர்கள் கிளை வம்சம் ஒன்று உருவானது.

முதலாம் அமோகவர்ஷன் (கி.பி.814-878) :

மூன்றாம் கோவிந்தனுக்கு பின் வந்த முதலாம் அமோகவர்ஷாவின் ஆட்சியில் தான் தலைநகர் பீதர் மாவட்டத்திலுள்ள மயூர்கண்டிலிருந்து குல்பர்கா மாவட்டத்திலுள்ள மான்யகேடாவுக்கு மாற்றப்பட்டது. அது முதல் இராஷ்டிரகூடர்கள் ஆட்சி முடியும்வரை மான்யகேடா (தற்போதைய பெயர் மால்கெட்) தான் தலைநகராக இருந்தது. 64 ஆண்டுகள் இவரின் ஆட்சி இருந்தது. அரேபிய பயணியான சுலைமான் என்பவர் அந்த காலகட்டத்தில் உலகின் சிறந்த 4 வலிமையான அரசர்களுள் ஒருவராக இவரை குறிப்பிட்டுள்ளார். முஸ்லீம்களையும் மதித்து தனது ஆட்சியில் மசூதி கட்டவும் அனுமதியளித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். கி.பி.800ல் இவரின் தந்தையான மூன்றாம் கோவிந்தன் நர்மதை ஆற்று போரில் வென்ற போது பிறந்தவர் என்று மண்ணே கல்வெட்டும் தந்தை இறந்து 14வது வயதில் ஆட்சி பொறுப்பில் ஏறினார் என்று சஞ்சன் செப்புதகடுகளும் இவரது பிறந்த ஆண்டு கி.பி.800 என்று குறிப்பிட்டுள்ளது. இவர் ஆட்சிக்கு வந்த புதிதில் நிறைய உள்நாட்டு எதிர்ப்புகளை அடக்கினார். தனது உறவினர்களால் தொல்லைகள் ஏற்பட்டன. உறவினர்கள் மேலை கங்க அரசன் இரண்டாம் சிவமாறனுடன் சேர்த்து இவரை எதிர்க்க இவர் குஜராத் தாயாதிகள் வழியில் வந்த (அதாவது துருவ தரவர்மனின் சகோதரனான இந்திரா வழியில் வந்தவர்கள்) கருக சுவர்ணவர்ஷனுடன் இணைந்து கி.பி.816ல் நடந்த போரில் மேலை கங்க அரசன் இரண்டாம் சிவமாறன் கொல்லப்பட்டார். அவரை தொடர்ந்து அரியணை ஏறிய இராசமல்லனால் தொடர்ந்து தொல்லைகள் ஏற்படவே சமாதான உடன்படிக்கையாய் மேலை கங்கர்களுடன்  திருமண உறவு கொண்டார். இந்த குழப்பங்களை எல்லாம் களைந்து கி.பி.821ல் தன்னை ஆட்சியில் ஸ்திரமாய் நிலைநிறுத்திக் கொண்டார். கீழை சாளுக்கியர்களை விங்கவள்ளி என்னுமிடத்தில் தோற்கடித்தார். அதனால் அவர் வீரநாராயணா என்னும் பட்டத்தை வென்றார். இவர் மூன்றாம் கோவிந்தனை போல் போர்களில் ஈடுபடாமல் நட்புறவே காண விரும்பிய மேலை கங்கர்கள், கீழை சாளுக்கியர்கள் மற்றும் காட்சி பல்லவர்களுடன் நட்பு கொண்டிருந்தார். இவர் ஆட்சியில் கலைகளும் இலக்கியங்களும் சமயங்களும் நன்கு ஆதரிக்கப்பட்டது. இவரே கன்னடத்திலும் சமஸ்கிருதத்திலும் அறிஞராக விளங்கினார். இராஷ்டிரகூட அரசர்களுள் மிகப் புகழ் பெற்றவர் இவரே மட்டுமின்றி அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததும் இவரே. இவர் கன்னடத்தில் கவிராஜ மார்க்கம் என்னும் செய்யுள் வடிவ நூல் இயற்றினார்.‌ பிரசுநோட்ர ரத்னமாலிகா என்னும் சமஸ்கிருத நூலையும் இயற்றினார். அசோகரை போலவே ஆட்சி புரிந்தததால் "தென்னாட்டின் அசோகர்" என அழைக்கப்படுகிறார். இவர் சமண மதத்தை பின்பற்றினார். ஜுனசேனர் என்பவர் இவரது குருவாக விளங்கினார். இராஷ்டிரகூடர்களின் தலைநகரான மால்கெட் (மான்யகேடம்) நகரை நிர்மாணித்தவர் இவரே. 


இரண்டாம் கிருஷ்ணன் (கி.பி.878-914)

இவர் ஆட்சிக்காலத்தில் கீழ் சாளுக்கியர்கள் ஆட்சிக்கு எதிராக கலகம் புரிந்தனர். தந்தையை போலவே சமண மதத்தை பின்பற்றினார். மேற்கு தக்காணம் குஜராத் பகுதிகள் ஆட்சியிலிருந்து விலகியதால் பேரரசின் பரப்பு குறைந்தது. தந்தையின் காலத்தில் சுதந்திர நாடான வேங்கியின் மீது படையெடுத்து இரண்டாம் விஜயாதித்யாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த பீமாவை வெற்றி கொண்டார். பின்னர் சோழர்களுடன் திருமண உறவு கொண்டார். தனது மகளை ஆதித்ய சோழனுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆதித்த சோழனுக்கு பிறகு வந்த அவரின் மகனான பராந்தக சோழனுக்கும் இவரின் மகள் வழி பேரனான கன்னர தேவனுக்கும் ஏற்பட்ட வாரிசு போட்டியில் சோழர்களுக்கு எதிராக படையெடுத்து வந்தார். முதலாம் பராந்தக சோழர் இவரை வெற்றி கொண்டு தனது சோழ வாரிசுரிமையை தக்கவைத்து கொண்டார்.

மூன்றாம் இந்திரன் (கி.பி.914-929) :

இரண்டாம் கிருஷ்ணாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இவர் அவரின் பேரன். கனோச்சியில் பிரமரா ஆட்சியாளரான மகிபாலனை வென்று கைப்பற்றினான். மகிபாலன் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. வேங்கியுடன் நடந்த போரில் எந்த தரப்புக்கும் வெற்றி கிடைக்கவில்லை.

இரண்டாம் அமோகவர்ஷன் ‌(கி.பி.929-930) : 

மூன்றாம் இந்திரனுக்கு பிறகு அவரின் மகனான இரண்டாம் அமோகவர்ஷன் பதவிக்கு வந்தார். இவரை இவரது சகோதரரான நான்காம் கோவிந்தன் கொன்று ஆட்சியை கைப்பற்றினார். 

நான்காம் கோவிந்தன் (கி.பி.930-936) :

மூன்றாம் இந்திரனின் இன்னொரு மகனான இவர் சகோதரனை கொன்று ஆட்சியை கைப்பற்றினார். 23 வயதில் ஆட்சிக்கு வந்த இவர் சிற்றின்பத்தில் மூழ்கினார். மக்கள் இவரை கொடுங்கோலனாகவே மதித்தனர். இவரை இவரின் சித்தப்பாவான மூன்றாம் அமோகவர்ஷன் கொன்று ஆட்சியிலிருந்து அகற்றினார்.

மூன்றாம் அமோகவர்ஷன் (கி.பி.936-939) :

கொடுங்கோல் ஆட்சி புரிந்த தனது மூத்த சகோதரனின் மகனை அகற்றி ஆட்சியேறிய இவர் நல்லமுறையில் நேர்மையாக ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சியினை இவரது மகனான மூன்றாம் கிருஷ்ணன் கவனித்து வந்தார். கஙகாவதி அரசர் மீது போரிட்டு அவரை பதவியிலிருந்து அகற்றினார். அதன் பின்னர் பண்டல்கண்ட் மீது படையெடுத்து கலஞ்சார், சித்ரகூடா கோட்டைகளை கைப்பற்றினார்.

மூன்றாம் கிருஷ்ணன் (கி.பி.939-967) :

தந்தையின் காலத்தில் இளவரசனாக இருந்த இவர் அவருக்கு பின்னர் அரியணை ஏறினார். இவரது ஆட்சியில் பேரரசு நர்மதா ஆற்றிலிருந்து காவிரி ஆறு வரை பரவியிருந்தது. வட தமிழகமும் தொண்டை மண்டலமும் இவர் கட்டுப்பாட்டில் இருந்தது. இலங்கை மன்னனும் இவருக்கு கப்பம் கட்டினான். சோழர்களுக்கு எதிராக தக்கோலம் போரில் வென்று முன்னேறிய அவர் தஞ்சாவூரையும் கைப்பற்றினார். இராமேஸ்வரம் வரை சென்று அதையும் தன் கட்டுப்பாட்டில் சில காலம் வைத்திருந்தார். இராமேஸ்வரத்தில் உள்ள கிருஷ்ணேஸ்வரர் ஆலயம், கண்ட மார்த்தாண்டதித்யா ஆலயம் இவரால் கட்டப்பட்டது. மாளவ நாட்டின் மீது படையெடுத்து உஜ்ஜையினியை கைப்பற்றினார். வேங்கியின் மன்னரும் இவரின் சொற்படி கட்டுப்பட்டு ஆட்சி புரிந்தார். கி.பி.963ல் வட இந்தியாவின் மீது படையெடுத்து சென்று பண்டல்கண்ட் வரை சென்றாலும் எந்த பகுதிகளை வென்றார் என்ற விவரம் தெரியவில்லை. வட இந்தியாவில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறவில்லை என்றாலும் தக்காணம் முழுவதும் இவரது ஆட்சியின் கீழ் இருந்தது. இவரது ஆட்சியில் ஹெளயுதா என்பவர் கவிரஹஸ்யம் என்ற நூலை எழுதினார். 

கொத்திக அமோகவர்ஷன் (கி.பி.967-972) :

மூன்றாம் கிருஷ்ணாவுக்கு பின்னர் அவரது இளைய சகோதரனான இவர் ஆட்சிக்கு வந்தார். முதிர்ந்த வயதில் ஆட்சிக்கு வந்ததால் போர்களில் ஈடுபாடு காட்டவில்லை. கி.பி.972ல் இவரின் ஆட்சியில் பரமர அரசன் சியகா அர்சா மான்யகேடாவை தாக்கி சூறையாடினான். பெருத்த தோல்வியின் அவமானத்தினால் மனமுடைந்த இவர் இறந்து போனார். பரமரர்களுடான  போரின் தோல்வியே இராஷ்டிரகூடர்களின் வீழ்ச்சிக்கு காரணமாகியது.

இரண்டாம் கர்கன் (கி.பி.972-973) :

பிரமரர்களின் தோல்விக்கு பின்னர் மரணமடைந்த கொத்திக அமோகவர்ஷனுக்கு பிறகு இரண்டாம் கார்கன் ஆட்சியேறினார். நிர்வாக திறனற்ற இவரின் ஆட்சியில் உள்நாட்டு குழப்பங்கள் ஏற்ப்பட்டது. ஆட்சியேறிய 18 மாதங்களில் இவரிடம் சிற்றரசராக இருந்த இரண்டாம் தைலா என்பவர் இவரை போரில் வீழ்த்தி இவரை விரட்டியடித்தார். பலமுறை திரும்பவும் ஆட்சியை கைப்பற்ற முனைந்தது தோல்வியை தழுவி ஆட்சியை நிரந்தரமாக இழந்தார். 225 ஆண்டுகள் ஆண்ட இராஷ்டிரகூடர்களின் ஆட்சிக்கு முடிவுரை எழுதி கல்யாணி சாளுக்கியர்கள் எழுச்சி பெற ஆரம்பித்தனர்.

நான்காம் இந்திரன் (கி.பி.973-982) :

தற்போதைய பிஜப்பூர் பகுதியை ஆண்ட இரண்டாம் தைலப்பா தன்னை சுதந்திர அரசனாக அறிவித்து போரில் வென்றதும் இப்பேரரசு முடிவுக்கு வந்தது. ஆனாலும் இரண்டாம் கர்கனுக்கு பிறகு ஆட்சியேறிய நான்காம் இந்திரன் தனது உறவினரான மேற்கு கங்கர்களின் அரசனான மாறசிம்ஹாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற முனைந்தார். பலமுறை மோதி தோல்வியை தழுவினார். தோல்வியின் விரக்தியில் நான்காம் இந்திரன் சமண வழக்கப்படி சரவணபெலகுளாவில் உண்ணாநோன்பு இருந்து கி.பி.982ல் உயிர் துறந்தார். இவருடன் முற்றிலுமாக இராஷ்டிரகூடர்களின் பரம்பரை முடிவுக்கு வந்தது.

இராஷ்டிரகூடர்கள் ஆட்சியில் கலைகள் உச்சம் பெற்று விளங்கின. ஏன் அவர்களில் சிறந்த அரசரான முதலாம் அமோகவர்ஷரே சிறந்த கவிஞர் தான். அவர் கவிராஜமார்க்கம் என்ற நூலை எழுதினார். அவரது குருவான ஜுனசேனர் "பார்சவபூதயா" என்ற பெயரில் பார்கவநாதரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். நலிசம்பு என்ற நூலை திருவிக்ரமன் என்ற அறிஞர் எழுதினார். ஆதிபுராணம் என்ற தலைப்பில் பல்வேறு சமண முனிவர்களின் வரலாற்றை குணபத்ரர் எழுதினார். அமோக விருத்தி என்ற நூலை சாகதாயனா எழுதினார். வீராச்சாரியர் என்ற கணித மேதை "கணிதசாரம்" என்ற நூலை எழுதினார். இராஷ்டிரகூடர்களின் ஆட்சியில் கன்னட இலக்கியமும் உச்சம் கண்டது. பம்பா "விக்ரமசேனவிஜயம்" என்ற நூலையும் பொன்னா "சாந்திபூரணா" என்ற நூலையும் எழுதினார்கள். கலை மட்டுமல்ல கட்டிடக்கலையும் இவர்கள் ஆட்சியில் சிறந்து விளங்கியது. எண்ணற்ற கோயில்களை கட்டியுள்ளனர். பம்பாய்க்கு அருகிலுள்ள எலிபண்டா தீவு குகைக் கோயில்கள் இவர்களது காலத்தில் கட்டப்பட்டது தான். இன்று யுனெஸ்கோவினால் உலக பண்பாட்டு சின்னங்களுள் ஒன்றான மதிக்கப்படும் எல்லோராவின் கைலாசநாதர் கோயில் இவர்களது ஆட்சியில் தான் கட்டப்பட்டது.


ஒரே பாறையை குடைந்து கட்டப்பட்ட குகைகோயில். அதில் உள்ள இராவணன் கைலாச மலையை தூக்குவது போலுள்ள சிற்பம்


மட்டுமல்ல இராமாயண காட்சிகளும் சிற்பமாக வரையப்பட்டுள்ளது. மொத்தத்தில் கலை இலக்கியங்கள் இராஷ்டிரகூடர்கள் ஆட்சியில் உச்சம் பெற்றிருந்தது.

உதவிய நூல்கள் :

சேர சோழ பாண்டியர் வரலாறு - எஸ்.கிருஷ்ணன்

The Early history of Deccan - G. Yazdani

விக்கிபீடியா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள் & திருமுத்துகுமரன்


Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு