24) மேற்கு கங்கர்கள் அரசு

மேற்கு கங்கர்கள் அரசு (கி.பி.350-1000) :



பழங்கால தமிழகத்தில் இன்றைய கர்நாடகத்தில் இருந்த சிறப்பு வாய்ந்த அரச மரபாகும். பல்லவ மன்னர்களின் அரசாட்சியின் கீழ் மைசூர், கோலார் பகுதிகளில் ஆட்சி புரிந்த இவர்கள் பல்லவர்கள் வலுகுன்றியபோது சிற்றரசர்கள் எல்லாம் புரட்சி செய்து வெளியேறியபோது இவர்களும் வந்திருக்கலாம்னு வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இவர்களது தாய்மொழி கன்னடம். முதலில் கோலார் இவர்களது தலைநகரமாக இருந்தது. பின்னர் தலைக்காடு இவர்களது தலைநகரமாயிற்று. முதல் அரசனாக கொங்கணி வர்மா மஹாதேவா அரசை தோற்றுவித்தார். கொங்கணி வர்மன் என்று களப்பிரர் மன்னன் வருவதால் கங்கர்களே களப்பிரர் என்ற கூற்றும் உண்டு. கள்வர் கள்வன் முத்தரசரு என்று கங்க மன்னர்களுக்கும் பெயர் உண்டு.

பாதாமி சாளுக்கியர்களின் எழுச்சிக்குப்பின் அவர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு பல்லவர்களுடன் மோதினர். இராஷ்டிரகூடர்கள் ஆதிக்கம் தக்காணத்தில் ஏற்பட்டவுடன் சுயாட்சிக்காக போராடி கடைசியில் இராஷ்டிரகூடர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக தஞ்சை சோழர்களை எதிர்த்தனர். கி.பி.10ம் நூற்றாண்டில் துங்கபத்ரா ஆற்றின் வடக்கே இராஷ்டிரகூடர்களை மேலை சாளுக்கியர்களும் சோழர்களும் சேர்த்து முறியடித்தனர்‌. பின்னர் சோழர்களால் தோற்கடிக்கப்பட்டவுடன் ஆயிரமாண்டு ஆட்சி புரிந்த மேலைகங்கர்கள் வம்சம் முடிவுக்கு வந்தது.

பரப்பளவில் சிறிய நாடாக இருந்த போதிலும் கர்நாடகத்துக்கு பண்பாடு இலக்கியம் சமயம் ஆகியவற்றில் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் உண்டு. மேலை கங்கர்கள் எல்லா மதங்களையும் ஆதரித்தார்கள். இந்து மதமும் சமண மதமும் பெரும்பாலும் பின்பற்றப்பட்டது. சரவணபெலகுளா, பஞ்சகுட்ட பாசதி இவர்களின் காலத்தே உருவானதாகும். மேலை கங்கர்களின் முதல் அரசன் கொங்கணிவர்மா மஹாதேவா இஷ்வாகு (சூரிய குலம்) கண்ணுவ பரம்பரையில் பிறந்தவர் என்று மாதவவர்மன் தன் செப்பேடுகளில் குறித்துள்ளார்.

மேற்கு கங்க அரசர்கள் வரிசை

கொங்கணிவர்மன் மஹாதேவா (கி.பி.350-370) :

குப்த அரசர் சமுத்திர குப்தர் பல்லவர் விஷ்ணுகோபரை தோற்கடித்து தன் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்தார். அந்த நேரத்தில் பல்லவர்களின் கீழ் சிற்றரசராக இருந்த இவர் பல்லவ அரசிலிருந்து விடுபட்டு சுயாட்சியாக இவர் கோலாரை தலைநகராக கொண்டு தனது அரசை தோற்றுவித்தார். இந்த காலகட்டத்தில் தான் வனவாசியில் கதம்பர்களும் ஆட்சியை ஆரம்பித்தனர்.20 ஆண்டுகள் ஆண்ட இவருக்கு பின்னர் இவரது மகனான மாதவ வர்மன் தனது செப்பேடுகளில் இவர் சூரிய குலம் (இஷ்வாகு) கண்ணுவ பரம்பரையில் பிறந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். இவரை ஆரம்பத்தில் களப்பிரர் வம்சத்தை சேர்ந்தவர் என்று கூட சந்தேகித்தாலும் இவரின் மகனின் செப்பேடுகள் மூலம் களப்பிரர் வம்சத்தை சேர்ந்தவரில்லை என்று உறுதியாயிற்று. இவர் தர்மமஹாதிராஜா என்று அழைக்கப்பட்டார்.

இரண்டாம் மாதவா (கி.பி.370-390) :

இவரது காலத்தில் தான் கங்கர்கள் வலிமையான அரசை ஆரம்பித்தனர். பல்லவர்களுக்கு கட்டுபட்டாலும் தங்களது அரசை விரிவுபடுத்தி பலப்படுத்த ஆரம்பித்தனர்.

ஹரிவர்மன் (கி.பி.390-410) :

இவரது காலத்தில் தான் கோலாரிலிருந்து தலைநகரம் மைசூர் அருகிலுள்ள தலக்காடுக்கு மாற்றப்பட்டது.  அது முதல் தான் இவர்கள் தலக்காடு கங்கர்கள் என்று அழைக்கப்பட்டனர். தலைநகர் மாற்றமே கதம்பர்களின் வலிமையை குறைப்பதற்காக தான் செய்யப்பட்டது. 

விஷ்ணு கோபா (கி.பி.410-430) :

மூன்றாம் மாதவா தண்டங்கலா (கி.பி.430-469) :

கி.பி.430 வாக்கில் இவர்கள் இன்றைய பெங்களூர்,கோலார் மற்றும் தும்கூர் மாவட்டங்களை தங்கள் ஆட்சியில் வைத்திருந்தனர். மேலும் தமிழ்நாட்டில் கொங்கு பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.

அவனிதா (கி.பி.469-529) :

இவர் மூன்றாம் மாதவாவுக்கு பின்னர் ஆட்சியேறினார். இவருக்கு சமணரான ஆச்சார்யா விஜய் கீர்த்தி என்பவர் குருவாகவும் ஆலோசகராகவும் இருந்தார். இவரது காலத்தில் தான் கங்கர்கள் மற்ற சிற்றரசர்கள் உடன்‌ இணைந்து கலிங்கத்தின் மீது படையெடுத்து விஷ்ணுகுந்தின அரசர் இந்திரபட்டாரிகாவை தோற்கடித்து தெற்கு கலிங்கத்தை கைப்பற்றினர். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மகனான துர்வீனிதாவை விட இளைய மகனுக்கே அடுத்த அரியணை என்று உறுதியளித்தார். ஆனாலும் இவரின் மறைவுக்கு பின்னர் இவரது மூத்த மகனே ஆட்சிக்கு வந்தார்.

துர்வீனிதா (கி.பி.529-579) :

தந்தை அவனிதாவுக்கு பிறகு ஆட்சியில் ஏறினார். மேற்கு கங்க அரசர்களுள் புகழ்பெற்ற அரசர் இவரே. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சியில் பல்லவர்களுக்கும் இவருக்கும் அதிக மோதல்கள் நடந்தது. அந்தேரி என்னுமிடத்தில் இவர் பல்லவர்களை தோற்கடிக்க பல்லவர்கள் கதம்பர்களின் உதவியோடு இவரோடு போர்தொடுத்து ஆலத்தூர், பொறலாரே மற்றும் பெர்நாக்ரா போர்களில் தோற்றனர். இந்த போரில் சாளுக்கிய அரசனான விஜயாதித்யா தனது மாமனாரான இவருக்கு ஆதரவு அளித்தார். இதனால் இவர் தனது செல்வாக்கை தொண்டை மண்டலம் மற்றும் கொங்கு மண்டலங்களில் அதிகரித்து கொண்டார். பல்லவர்களுடன் உள்ள மோதலால் இவர் சாளுக்கியர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார். தனது மகளை சாளுக்கிய விஜயாதித்தா அல்லது இரண்டாம் புலிகேசிக்கு திருமணம் செய்து கொடுத்தார் என்று குறிப்பிட்டாலும் இவரின் காலத்தோடு அவர்கள் இருவரும் வேறுபட்டு நிற்கின்றனர். ஆதலால் சாளுக்கியர்களின் அரச வம்சத்தில் திருமணம் செய்து கொடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. இவரது அவையில் சமண குரு பூஜ்யபாதா மற்றும் நிறைய சமண அறிஞர்கள் இருந்தனர். சமஸ்கிருத அறிஞர் பாரவி இவரின் காலத்தில் இவரது அவைக்கு வந்திருந்தார். இவர் சப்தவதாரா என்ற நூலை எழுதியுள்ளார். இவருக்கு  2 நூற்றாண்டுகளுக்கு பின் வந்த இராஷ்டிரகூட அரசர் அமோகவர்ஷர் தனது நூலில் இவரை கன்னடத்தின் சிறந்த இலக்கியவாதி என்று குறிப்பிட்டுள்ளார். இவர் இசை,நடனம்,ஆயுர்வேத மருத்துவம் மற்றும் யானைகளை பழக்கப்படுத்துதல் ஆகிய கலைகளிலும் சிறந்து விளங்கினார்.

முஷ்கரா (கி.பி.579-604) :

துர்வீனிதாவுக்கு பின்னர் ஆட்சியேறிய இவர் அவரின் சகோதரர். 

பொலவிரா (கி.பி.604-629) :

ஶ்ரீவிக்கிரமா (கி.பி.629-654) :

புவிகர்மா (கி.பி.654-679) :

புவிகர்மா மறைவுக்கு பின்னர் நவகாமா, கோவிந்தா என்று இருவரை அடுத்த அரசராக குறிப்பிட்டாலும் அவர்கள் சிறு பகுதிக்கு பொறுப்பாளர்களாகவோ அல்லது ஆளுநர்களாகவோ இருந்திருக்கலாம் என்று நினைக்கின்றனர்.

முதலாம் சிவமாறா (கி.பி.679-726) :

புவிகர்மாவுக்கு பின்னர் ஆட்சியேறிய இவர் அவரின் மகன்.


ஶ்ரீபுருஷா (கி.பி.726-788) :

முதலாம் சிவமாறாவுக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்தார். இவருக்கு காஞ்சி பல்லவர்கள், பாண்டியர்கள் மற்றும் இராஷ்டிரகூடர்களுடன் மோதல்கள் ஏற்பட்டது. இவர் மேலை சாளுக்கியர்களுடன் மண உறவு கொண்டிருந்ததால் அவர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார். இவர் பல்லவர் இரண்டாம் பரமேஸ்வரவர்மனை வென்றதால் "பெருமாநாடி" என்ற பட்டத்தை பெற்றார். சாளுக்கிய அரசர் இரண்டாம் விக்ரமாதித்யாவுடன் இணைந்து பல்லவர்களை எதிர்த்து போரிட்டுள்ளார். சாளுக்கிய இரண்டாம் கீர்த்தி வர்மன் இராஷ்டிரகூடர்களுடன் மோதி சாளுக்கிய அரசின் வீழ்ச்சிக்கு காரணமான போரில் இவரும் சாளுக்கியர்களுடன் உடனிருந்தார். பின்னர் முதலாம் கிருஷ்ணா ஆட்சியில் நிறைய இராஷ்டிரகூடர்களின் பகுதிகளை ஆக்கிரமித்தார். பின்னாளில் இராஷ்டிரகூடர்களுடன் திருமண உறவு கொண்டு நட்புறவு பேணினார்.  இவர் கன்னடத்தில் "கஜசாஸ்திரா" என்னும் நூலை எழுதியுள்ளார்.  இவரது தலைநகர் தலக்காடு. இவரது அரசை "கங்கவாடி 96000 " என்று அழைத்ததிலிருந்து இவரது கங்கவாடி நாட்டில் 96000 கிராமங்கள் இருந்ததை அறிய முடிகிறது. நுளம்பம்பாடி நாட்டை சேர்ந்தவர்கள் இவரது ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். பாண்டியர்கள் இவரது ஆதிக்கத்திலிருந்து கொங்கு நாட்டை விடுவித்தனர். போரில் தோற்கடிக்கப்பட்ட இவர் தனது மகளை ராஜசிம்ம பாண்டியனின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து பாண்டியருடன் நட்புறவு கொண்டு கொங்கு பிரதேசத்தில் தன் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.

இரண்டாம் சிவமாறா (கி.பி.788-816) :

இவர் ஶ்ரீபுருஷாவின் மகன். இவரும் கன்னடம், சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளில் அறிஞராக திகழ்ந்தார். இவர் இராஷ்டிரகூட அரசனான துருவ தரவர்ஷனுடன் மோதி தோல்வியடைந்தார். சிறைபிடிக்கப்பட்ட இவர் பின்னாளில் விடுதலை செய்யப்படும் வரை துருவ தரவர்ஷனின் மகனான கம்பராசா கங்கவாடிக்கு ஆளுநராக இருந்தார். பின்னர் இராஷ்டிரகூட மேலாண்மையை ஏற்றுக்கொள்ள இவர் விடுவிக்கப்பட்டார். பின்னர் மூன்றாம் கோவிந்தா காலத்தில் மீண்டும் போர்க்கொடி தூக்க மீண்டும் போரில் சிறைபிடிக்கப்பட்டு வரிப்பணம் செலுத்த ஒப்புக்கொண்டு விடுவிக்கப்பட்டார். ஆனாலும் கி.பி.816ல் இராஷ்டிரகூடர்களுக்கு எதிராக  பெங்களூருக்கு அருகில் நடந்த போரில் இறந்த போனார். தொடர்ச்சியான போர்களில் ஈடுபட்டாலும் இலக்கிய உலகிற்கு சமஸ்கிருதத்தில் "கஜமதகல்பனா", கன்னடத்தில் "கஜஸ்டகா" மற்றும் பிராகிருதத்தில் "சேதுபந்தா" ஆகிய நூல்களை தனது பங்களிப்பாக தந்தார்.

முதலாம் ரச்சமல்லா (கி.பி.816-843) :

இவர் ஆட்சிக்கு வந்தவுடன் இராஷ்டிரகூடர்கள் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதாக அறிவித்தார். இவரது ஆட்சியிலும் இராஷ்டிரகூடர்களுடனான மோதல்கள் தொடர்ந்தது. 

இரகங்கா நீதிமார்கா (கி.பி.843-870) :

இவரது ஆட்சியிலும் இராஷ்டிரகூடர்களுடனான மோதல்கள் தொடர்ந்தாலும் இராஷ்டிரகூட அரசர் முதலாம் அமோகவர்ஷர் தனது மகளான சந்திரபாலாப்பேவை இவரது மகனான  புட்டகாவுக்கு திருமணம்  செய்து வைத்தார். அது முதல் இராஷ்டிரகூடர்களுடனான நட்புறவு இராஷ்டிரகூடர்களின் கடைசி ஆட்சிக்காலம் வரை தொடர்ந்தது. ஆனால் இந்த புட்டகா இராஷ்டிரகூட இளவரசியை மணக்கவில்லை என்றும் அது பின்னால் வந்த இரண்டாம் புட்டகா என்றும் கூறுகின்றனர். முதலாம் புட்டகா தந்தைக்கு பின்னர் ஆட்சியேறவில்லை. நீதிமார்காவே முதலாம் பிருதிவீபதியாக இருக்கலாம் என்று நினைக்கின்றனர். ஏனெனில் மேலை கங்கர்கள் இளவரசியான விஜயா என்பவரை பல்லவ நிருபதுங்கவர்மனின் சகோதரரான கம்பவர்மன் மணம் முடித்தார். அவர்களுக்கு பிறந்த மகனான அபராஜிதவர்மனுக்கும் பாண்டிய மற்றும் நிருபதுங்கவர்மனின் படைகளுக்கும் நடந்த திருப்பிறம்பியம் போரில் அபராஜிதவர்மன் மற்றும் விஜயாலய சோழனினின் படைகளுடன் மேற்கு கங்க மன்னர் தன் பேரனான அபராஜிதவர்மனுக்காக களம் இறங்கி போரில் முடிவில் முதலாம் பிருதிவீபதி மறைந்தார் என்று சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.‌ அதன் படி பார்த்தால் திருப்புறம்பியம் போர் நடைபெற்றது கி.பி.880ல் . அதனால் இவர் மறைந்தது கி.பி.870 அல்ல கி.பி.880ம் ஆண்டு என்றும் நினைக்கலாம்.

இரண்டாம் ரச்சமல்லா (கி.பி.870-907) :

இவரது ஆட்சியில் கங்கர்கள் ஒரிஸாவிலும் தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்தனர்.

இரண்டாம் இரகங்கா நீதிமார்கா (கி.பி.907-921) :

நரசிம்மா (கி.பி.921-933) :

மூன்றாம் ரச்சமல்லா (கி.பி.933-938) : நரசிம்மாவுக்கு பின்னர் ஆட்சியேறிய இவரை இவரது சகோதரனான இரண்டாம் புட்டகா இராஷ்டிரகூட மூன்றாம் அமோகவர்ஷரின் உதவி கொண்டு தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினார்.

இரண்டாம் புட்டகா (கி.பி.938-961) :

சகோதரனான மூன்றாம் ரச்சமல்லாவுக்கு பின்னர் ஆட்சியேறினார். இவர் இராஷ்டிரகூட அரசனான மூன்றாம் அமோகவர்ஷரின் உதவியால் தனது சகோதரனை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினார். இந்த நட்பினால் மூன்றாம் அமோகவர்ஷரின் மகளான ரேவகனிமம்மடியை திருமணம் செய்து கொண்டு அவருக்கு மருமகனானார். கி.பி.949ல் இராஷ்டிரகூடர்கள் தக்கோலம் போரில் சோழர்களை வெற்றி கொள்ளுவதற்கு உதவி புரிந்தார். தக்கோலம் போரில் முதலாம் பராந்தக சோழரின் மகனான இராஜாதித்யர் யானையின் மீது இருந்த போது அவர் மீது இவர் விட்ட அம்பே அவரின் உயிர் பிரிய காரணமாயிற்று. அதனால் தான் இராஜாதித்யர் "யானை மேல் துஞ்சிய தேவர்" என்றழைக்கப்பட்டார். இராஷ்டிரகூட சிற்றரசாக இருந்தாலும் இவர் கங்கவாடி மட்டுமல்ல மலப்பிரபா சமவெளி மற்றும் கிருஷ்ணா-துங்கபத்திரா சமவெளிகளிலும் இவர் ஆட்சி இருந்தது. சோழர்களை வெற்றி கொண்ட சந்தோஷத்தில் இராஷ்டிரகூட மூன்றாம் கிருஷ்ணா வனவாசி (இன்றைய பனவாசி) வரி வசூலிக்கும் உரிமையை கொடுத்தார். இவர் போர் வீரர் மட்டுமல்ல சிறந்த அறிஞரும் கூட. தர்க்க விவாதங்களில் நிறைய புத்த மத அறிஞர்களை தன் வாதங்களால் தோற்கடித்து உள்ளார். 

மாருலகங்கா நீதிமார்கா (கி.பி.961-963)

இரண்டாம் மாறசிம்மா சத்யவாக்யா (கி.பி.963-975) :

இவர் மாருலகங்கா நீதிமார்க்காவுக்கு பின்னர் 23வது அரசராக ஆட்சியேறினார். இவர் இராஷ்டிரகூடர்களின் சிற்றரசராய் இருந்தார். இராஷ்டிரகூட இரண்டாம் கர்கனுக்காக காஞ்சி பல்லவ குறுநில மன்னரை போரில் தோற்கடித்தார். இராஷ்டிரகூடர்களுக்காக குர்ஜர பிரதிஹர அரசனையும் மாள்வாவின் பரமர வம்சத்து அரசனையும் தோற்கடிக்க உதவி புரிந்தார். சாமுந்தரராயா என்பவர் இவரது அமைச்சராக பணியாற்றினார். இவர் ஜெயின் மத வழக்கப்படி சல்லகானா என்ற நீர் மற்றும் உணவு அருந்தாமல் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார்.

நான்காம் ரச்சமல்ல சத்யவாக்யா (கி.பி.975-986) :

தந்தை இரண்டாம் மாறசிம்ஹா சத்யவாக்கா உண்ணாநோன்பிருந்து மறைந்தவுடன் சகோதரர்களுக்குள் வாரிசுப்போட்டி ஏற்பட்டது. மூத்த மகனான இவர் முதலமைச்சர் சாமுந்தராயா துணையுடன் ஆட்சியை கைப்பற்றினார். இவரது ஆட்சியில் தான் கி.பி.982ல் பாகுபலி, கோமேட்டேஸ்வரா சிலைகள் இவரது முதலமைச்சர் சாமுந்தராயா முயற்சியால் சரவணபெலகுலாவில் கட்டப்பட்டது.


ஜந்தாம் ரச்சமல்லா (கி.பி.986-999) :

நீதிமார்க பெருமாநாடி (கி.பி.999-1000) :
இவரே மேற்கு கங்கர்களின் கடைசி  போரில் இவர் கொல்லப்பட்டதுடன் மேலை கங்கர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.


உதவிய நூல்கள் :

சோழ சேர பாண்டியர் வரலாறு - எஸ்.கிருஷ்ணன்

விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு