28) வர்மன் அரசு

வர்மன் வம்சம் (அல்லது) காமரூபா அரசர்கள் (கி.பி.350-655)

வர்மன் வம்சம் தான் காமரூபா (இன்றைய அஸ்ஸாம்)வின் முதல் அரசர்கள். இந்த அரசை தோற்றுவித்தவர் புஷ்யவர்மன். இவர் குப்த வம்ச அரசர் சமுத்திரகுப்தரின் சமகாலத்தவர். ஆரம்பத்தில் இவர்கள் குப்தர்களின் அரசில் சிற்றரசர்களாக இருந்து கி.பி.470-494 வரை ஆண்ட மகேந்திரவர்மன் ஆட்சியில் சுயாட்சி பெற்றனர். இந்த அரசு இன்றைய அஸ்ஸாம், பெங்கால் மற்றும் பிஹாரின் சிலபகுதிகள் மற்றும் பூட்டானின் சில பகுதிகள் மற்றும் வங்காளதேசத்தின் சில பகுதிகளை கொண்டிருந்தது. தலைநகராக பிரக்யோதிஸ்புரா (இன்றைய கெளஹாத்தி) இருந்தது. இங்கு சமஸ்கிருதம், பிராகிருதம் மற்றும் காமரூபி மொழிகள் பேசப்பட்டது.

புஷ்ய வர்மன் (கி.பி. 350-374) :

இவரின் தலைமையில் தான் வர்மன்கள் ஆட்சி குப்தர்களின் கீழ் ஆரம்பித்தது. கி.பி.7ம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த பாஸ்கரவர்மனின் ஸ்தூபி மற்றும் நிதான்பூர் செப்பு தகடுகளின் மூலமே இவரே வர்மன் வம்சத்தின் பிதாமகர் என்று அறியலாயிற்று. குப்தர்களின் கீழ் சிற்றரசராக அவர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். இவரது மகன் தத்தா தேவி என்பவரை மணந்தார். குப்தர்களின் சமுத்திர குப்தரின் மனைவியின் பெயரும் அதுவே. அதனால் இருவரும் ஒரே குடும்பத்தில் பெண் எடுத்திருக்கலாம் என்று நினைக்கின்றனர்.

சமுத்திர வர்மன் (கி.பி.374-398) :

இவர் புஷ்ய வர்மனின் மகன். இவரின் மனைவியின் பெயர் தத்தா தேவி. இவர் தனது ஆட்சியை பசிபிக் கடலை ஒட்டிய கிழக்கு தீபகற்ப பகுதி வரை நீட்டித்தார்.

பால வர்மன் (கி.பி.398-422) :

சமுத்திர வர்மனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அவரின் மகன் இவர். இவரின் பட்டத்தரசி ரத்னாவதி. சமுத்திர குப்தரிடம் நல்ல நட்புறவு இருந்தாலும், அவருடன் போரிட்டார். அஸ்வமேத யாகத்திற்காக சமுத்திர குப்தர் இவரை போரில் தோற்கடித்ததை அலகாபாத் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவர் போரில் நாட்டமுடையவராக இருந்தார். இவருக்கு கல்யாண வர்மன் என்ற மகனும் அமிர்த பிரபா என்ற மகளும் இருந்தனர். இவர் தனது மகளின் திருமணத்திற்காக சுயம்வரம் ஏற்பாடு செய்ததை கல்ஹணரின் "இராஜதரங்கிணி" நூல் குறிப்பிடுகிறது. சுயம்வரத்தில் இவரது மகள் காஷ்மீரின் இளவரசரான "மேகவாஹனா" என்பவரை மணந்து எண்ணற்ற புத்த மடாலயங்களை காஷ்மீரில் கட்டுவதற்கு காரணமாக இருந்தார்.

கல்யாண வர்மன் (கி.பி.422-446) :

பால வர்மனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அவரின் மகன். இவரின் பட்டத்தரசியின் பெயர் காந்தாரவதி. இவரது ஆட்சியில் மத்திய அஸ்ஸாம்மை ஆண்ட தேவகா அரசு காமரூநபத்தை கைப்பற்றியதாக கூறுகின்றனர்.

கணபதி வர்மன் (கி.பி.446-470) :

இவர் முந்தைய அரசர் கல்யாண வர்மனின் மகன். அவருக்கு பின் ஆட்சிக்கு வந்தார். இவரின் அரசியின் பெயர் யக்னவதி. 

மகேந்திர வர்மன் (கி.பி.470-494) :

இவர் கணபதி வர்மனின் மகன். இவருடைய ஆட்சிகாலத்தில் தான் குப்தர்களின் ஆட்சியில் இருந்து சுயாட்சி பெற்றனர். இவரது மனைவியின் பெயர் சுவரதா. இவரால் கட்டப்பட்ட குகைகோயிலில் இவரின் பெயருக்கு ராஜாதிராஜா (அரசர்களுகெல்லாம் அரசர்) என்று பட்டப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நாராயண வர்மன் (கி.பி.494-518) :

மகேந்திர வர்மனின் மகனான இவர் அவருக்கு பின் ஆட்சிக்கு வந்தார். இவரின் பட்டத்தரசி தேவவதி. நிதான்பூர் கல்வெட்டுகளிலிருந்து இவர் தாராள குணம் உடையவராக இருந்தார் என தெரிகிறது.

மஹாபூத வர்மன் (பூதி வர்மன்) (கி.பி.518-542) :

நாராயண வர்மனுக்கு பின் ஆட்சிக்கு வந்த அவர் மகன் இவர். இவரின் பட்டத்தரசி விஜ்யனயவதி. மஹாபூத வர்மன் ஹர்ஷ சரிதத்தில் பூதி வர்மன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். நிதான்பூர் கல்வெட்டுகளும் அதை உறுதிப்படுத்துகின்றன. இவருடைய ஆட்சியில் காமரூபம் (அஸ்ஸாம்) வலிமையுடையதாக மாறியது.

சந்திரமுஹ வர்மன் (கி.பி.542-566) :

பூதி வர்மனின் மகனான இவர் அவருக்கு பின் ஆட்சி பொறுப்பை ஏற்றவர். இவரின் பட்டத்தரசியின் பெயர் போகவதி.

ஸ்தித்த வர்மன் (கி.பி.566-590) :

சந்திரமுஹ வர்மனின் மகனான இவர் அவருக்கு பின் பட்டமேற்றார். இவரின பட்டத்தரசி நயனதேவி.

சுஸ்தித வர்மன் (கி.பி.590-595) :

இவர் அவருடைய தந்தையான ஸ்த்தித வர்மனுக்கு பின் ஆட்சிக்கு வந்தார். இவரின் பட்டத்தரசி ஸ்யாமாதேவி. இவரின் ஆட்சியில் மஹாசேனகுப்தா சசாங்கனின் உதவியால் வடக்கு மற்றும் மத்திய வங்காளத்தை வென்றார். மஹாசேனகுப்தாவின் மறைவுக்கு பின் அந்த பகுதிகளை சசாங்கன் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார்.

சுப்ரஸ்தித வர்மன் (கி.பி.595-600)

சுஸ்தித வர்மனுக்கு பின் வந்த அவரின் மகன் இவர். இவருக்கு திருமணமாகாததால் இவருக்கு பின் இவரது சகோதரர் ஆட்சி பொறுப்பை ஏற்றார். இவரே காமரூப படைப்பிரிவுகளில் யானைப்படையை ஆரம்பித்து பயிற்றுவித்தவர்.

பாஸ்கர வர்மன் (கி.பி.600-650)

முந்தைய அரசர் சுப்ரஸ்தித வர்மனின் சகோதரர். இவரும் அண்ணனை போலவே பிரம்மச்சாரி. இவரும் ஹர்ஷவர்த்தனரும் சமகாலத்தவர்கள். ஹர்ஷரின் சகோதரி ராஜ்யஶ்ரீ யை மாளவ அரசன்  அவரின் கணவரை கொன்றுவிட்டு கடத்திக்கொண்டு போய்விட்ட சமயத்தில் அவரின் அண்ணன் ராஜ்யவர்த்தனா அரசனாக இருந்தார். அவர் மாளவ மன்னனை போரில் வென்றார். ஆனால் சூழ்ச்சியினால் சசாங்கனால் கொல்லப்பட்டார். இந்த நேரத்தில் ஆட்சிக்கு வந்த 16 வயதான ஹர்ஷருக்கு பாஸ்கர வர்மன் தன் தூதுவராக ஹங்சேவகாவை அனுப்பி ஹர்ஷருக்கு ஆதரவுகரம் நீட்டினார். பின்னர் இருவரும் இணைந்து சசாங்கனை வென்று  சகோதரியை மீட்க உதவினார். இந்த நிகழ்வை பாணர் எழுதிய "ஹர்ஷசரித்திரம்"நூலிலும் மற்றும் யுவான் சுவாங்  தம் குறிப்புகளிலும் குறிப்பிட்டுள்ளனர். பாஸ்கர வர்மனின் காலத்தில் அவரது நாட்டிற்கும் யுவான் சுவாங் அரசமுறை பயணமாக வந்தார்.


ஹர்ஷர் கி.பி.647ல் மரணமடைந்த பிறகு வாரிசின்றி புஷ்யபூதி வம்ச ஆட்சி சிதறும்போது தனது எல்லைப்புறம் இருந்த பகுதிகளை தன் ஆட்சியுடன் இணைத்துக்கொண்டார்.

பாஸ்கர வர்மனுக்கு பின்னால் வந்த ஆட்சியாளர்கள் விவரம் தெரியவில்லை.  (காலம் கி.பி.650-655) .அவரோடு வர்மன் வம்ச ஆட்சி காமரூபாவில் முடிந்தது. இவர்களுக்கு பின் லோச்சசா வம்சமும் அதன் பின் பாலர்களும் காமரூபாவை ஆண்டனர். காமரூபாவை ஆண்ட மூன்று வம்சங்களாவது வர்மன், லோச்சசா மற்றும் பாலர்கள் வம்சம் மட்டுமே.

உதவிய நூல்கள் :

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - மருதன்

விக்கிபீடியா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள்


Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு