29) இடைக்கால பாண்டிய பேரரசு
இடைக்கால பாண்டியர்கள் (கி.பி.575-919) :
கி.பி. 3ம் நூற்றாண்டுகளில் களப்பிரர்களிடம் ஆட்சியை இழந்த பாண்டியர்கள் இடம் தெரியாமல் போயினர். சிலர் பாண்டியர்கள் இலங்கை சென்று அங்கே வாழ்ந்து வந்திருக்கலாம் என்கிறார்கள். இன்னும் சிலர் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று தங்கள் அரசை நிறுவினார்கள் என்றும் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக வியட்நாமில் கி.பி.3ம் நூற்றாண்டு கல்வெட்டில் ஶ்ரீமாறன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கே களப்பிரர்களின் கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்கள் சோழர்களும் கூட. அந்த நேரத்தில் பல்லவ பேரரசு நிலைபெற்றுக்கொண்டிருந்தது. கி.பி.575ல் பாண்டியனான "கடுங்கோன் பாண்டியன்" களப்பிரர்களை வென்று மதுரையை மீட்டெடுத்தார். சிலர் கி.பி.560ல் மீட்டெடுத்தார் என்றும் கூறுகிறார்கள். பின்னர் அபராஜித பல்லவரும் களப்பிரர்களை விரட்டியடிக்க சோழர்களும் எழுச்சி பெற்று ஆட்சியை மீட்டெடுத்தனர். களப்பிரர்கள் முத்தரையர்களாக தஞ்சாவூர் மற்றும் செந்தலையோடு தங்கள் ஆட்சியை நிறுத்திக்கொண்டனர்.
களப்பிரர்களை வென்று பாண்டிய ஆட்சியை மீட்டெடுத்த கடுங்கோன் பாண்டியனிலிருந்து இடைக்கால பாண்டியர்கள் ஆரம்பமாகிறார்கள். கி.பி. 10ம் நூற்றாண்டில் ஆரம்பம் வரை மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் வரை இடைக்கால பாண்டியர்கள் வரிசையும் பின்னர் கி.பி. 940ல் ஆட்சியில் அமர்ந்த வீரபாண்டியனில் ஆரம்பித்து இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1276-1293) வரை நீண்டாலும் இடையில் பத்தாம் நூற்றாண்டில் இறுதி முதல் பதினொன்றாம் நூற்றாண்டின் முக்கால்பகுதி வரை பாண்டிய நாடு சோழர்களிடம் அடிமைப்பட்டே இருந்தது. இதன் பின்னர் மாலிக் கபூர் படையெடுத்து வந்து மதுரையை சூறையாடியும் அவருக்கு பின்னர் முகமது பின் துக்ளக் தனது ஆட்சியில் மதுரையை பிடித்ததும் (கி.பி.1320) அதன்பின் 58 ஆண்டுகள் சுல்தான்கள் வசம் போனதும் பின்னர் விஜயநகர பேரரசின் எழுச்சியால் சுல்தான்கள் விரட்டப்பட்டு நாயக்கர் வம்சம் மதுரையில் அமர்ந்ததும் பாண்டியர்கள் தென்காசி, திருநெல்வேலி,தருவையை ஆண்ட தென்காசி பாண்டியர்களானதும் கடைசியில் கி.பி.17ம் நூற்றாண்டு ஆரம்பம் வரை கொல்லங்கொண்டன் ஆட்சிவரை தொடர்ந்து அழிந்தது.
கடுங்கோன் (கி.பி.575-600) :
களப்பிரர்களை வென்று மதுரையில் பாண்டிய அரசை ஏற்படுத்தி பாண்டிய நாடு முழுவதையும் மீட்டெடுத்தவர். இவர் கதிரவனை போன்றவர் என்றும் கதிர்வேல் தென்னவர் என்றும் சிறப்பு பெயர்களில் அழைக்கப்பட்டார். இவரின் ஆட்சி கி.பி.600வரை இருந்ததாக வேள்விக்குடி செப்பேடுகள் மூலம் அறியலாம். களப்பிரர்களின் ஆட்சியில் சீரழிந்திருந்த நாட்டை சீர்படுத்துவதிலையே இவரது கவனம் இருந்திருப்பதால் வேறு எதுவும் முக்கியமான நிகழ்வுகள் குறிப்பிடப்படவில்லை.
மாறவர்மன் அவனி சூளாமணி (கி.பி.600-625) :
கடுங்கோன் பாண்டியனுக்கு பின் பட்டத்திற்கு வந்த அவரின் மகன் இவர். இவர் காலத்தில் சிம்ம விஷ்ணு பல்லவருக்கும் இவருக்கு நடைபெற்ற போரில் சிம்ம விஷ்ணு வெற்றி பெற்றதாக இரண்டாம் நந்திவர்மன் காலத்து காசாக்குடி பட்டயத்தில் செய்திகள் உள்ளது. வேள்விக்குடி செப்பேடுகள் இவரை குறுநில மன்னர்களை அடக்கியவன், குறும்புகளை ஓடுக்கியவன், மானத்தை காத்த மரபிலே வந்தவன், வீரமும் ஈகையும் ஒருங்கே கொண்டவன் என்று குறிப்பிடுகிறது. இவரது ஆட்சியில் பாண்டிய பேரரசின் வட எல்லையாக காவிரி ஆறு இருந்தது. இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டின் மீது படையெடுத்து காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தமிழகத்து மன்னர்களை அடிபணிய வைத்ததாக குறிப்பிடப்படும் நிகழ்வு இவரது ஆட்சிகாலத்தில் தான் நடந்தது.
செழியன் சேந்தன் (கி.பி.625-640) :
அவனி சூளாமணிக்கு பின் ஆட்சி பொறுப்பை இவர் அவரது மகனாவார். சடையவர்மன் என்ற பட்டப்பெயரை பெற்ற முதல் அரசன் இவரே. சேர மன்னனை போரில் வென்றதால் வானவன் என்ற பட்டப்பெயரும் உண்டு. இவரது ஆட்சிகாலத்தில் கொங்கு நாடும் பாண்டியர்களின் கீழ் இருந்தது. சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சி பல்லவர்களின் அரசவைக்கு சென்று பின் பாண்டிய நாட்டிற்கு வரும்போது இவர் மரணமடைந்து விட்டார் (கி.பி.640ல்). இவரது மரண காலத்தில் பாண்டிய நாடு பெரும் பஞ்சத்தில் சிக்கிக்கொண்டு இருந்தது.இவரை வேள்விக்குடி செப்பேடுகள் " செங்கோற் சேந்தன்" என்றும் "மண்மகளை மறுக்கடித்த வேந்தர் வேந்தன்" என்றும் குறிப்பிடுகின்றது.
அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி.640-670) :
தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் போற்றிய நெல்வேலி வென்ற நெடுமாறன் இவரே. வடநாட்டு மன்னர் படையெடுத்து வரும்போது அவரை நெல்வேலி போர்களத்தில் தோற்கடித்ததால் "நெல்வேலி வென்ற நெடுமாறன்" என்று அழைக்கப்பட்டார். இவர் சேர நாட்டின் மீது படையெடுத்து சேரனையும் வென்றார். பாழி, செந்நிலம் போன்ற குறுநில மன்னர்களையும் வென்றார். இவர் சோழநாட்டின் மீது போர் தொடுத்து சோழ மன்னன் மணிமுடிச்சோழனை வென்றார். பின்னர் அவரின் மகளான மங்கையர்க்கரசியை மணந்து பட்டத்தரசியாக்கினார். இவராலையே சமணத்தை பின்பற்றிய அரிகேசரி திருநாவுக்கரசரால் சைவத்துக்கு மாறினார். பாடல் பாடி சூலை நோயை குணப்படுத்தியதால் மாறியதாக சொல்லுவார்கள். அந்த பாடல் இது தான்:
"கூற்றாயினவாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன
நானறியேன் ஏற்றா அடிக்கே
இரவும்பகலும் பிரியாது
வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின்
அகம்படியே குடரோடு துடக்கி
முடக்கியிட ஆற்றேன் அடியேன்அதி
கைக்கெடில வீரட்டானத்துறை
அம்மானே"
திருவிளையாடற் புராணத்தில் சொல்லப்பட்ட சுந்தரபாண்டியன், கூன் பாண்டியன் இவரே. இவரின் ஆட்சிகாலத்தில் பாண்டிய நாட்டுக்கு வந்த யுவான்சுவாங் முத்து குளிப்பதை பற்றியும் உப்பு விளைவிப்பதை பற்றியும் விவரித்துள்ளார். பாண்டிய மக்கள் நல்ல உடற் கட்டும் உடற் உழைப்பும் கொண்டவர்கள். கருத்த மேனி கொண்டவர்கள் என்றும் உறுதியும் போர் வலிமையும் கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரிகேசரி மன்னர் இரணிய கர்ப்பதானமும் துலாபார தானமும் செய்ததாக வேள்விக்குடி செப்பேடுகள் கூறுகின்றன. இவரும் இவர் மனைவி மங்கையர்கரசியும் இவரது அமைச்சர் குலச்சிறையாரும் 63 நாயன்மார்கள் வரிசையில் குறிப்பிடுகிறார்கள். இவரது ஆட்சியில் பாண்டிய நாடு வளமாக இருந்தது. இந்த மன்னர் பாழி, செந்நிலம், புலியூர் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் வென்றார் என்றும் சேரர்களையும் சிற்றரசர்கள் சிலரையும் போரில் வென்றதாகவும் சோழர்களை தோற்கடித்து உறையூரை வென்றதாகவும் அசமசமன் என்று இவரை வேள்விக்குடி செப்பேடுகள் கூறுகிறது. சோழர்களை தோற்கடித்த பின்னரே சோழ இளவரசி மங்கையர்கரசியை மணம் முடித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சுந்தரமூர்த்தி நாயனார் இவரது காலத்தில் நடைபெற்ற நெல்வேலி போரை பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்த போரில் இவரோடு போரிட்டு தோற்ற அரசன் சாளுக்கிய முதலாம் விக்கிரமாதித்தன் தான் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இந்த நெல்வேலி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த போரில் பாண்டிய சோழ படைகளோடு விக்கிரமாதித்தன் போர் புரிந்ததாக இரண்டாம் கீர்த்திவர்மனின் கேந்தூர்க் கல்வெட்டு கூறுகிறது.
கோச்சடையான் ரணதீரன் (கி.பி.670-710) :
சரித்திரத்தில் ரணதீரன் என்ற பெயரை பெற்ற மன்னன் இவர் தான். "இரணரசிகன்" பட்டம் பெற்ற சாளுக்கிய விக்ரமாதித்யனை வென்றவர் என்பதால் ரணதீரன் என்ற பட்டம் பெற்றார். இவர் சேரநாட்டை முதலில் வென்றார். பின்னர் சோழ நாடு, கொங்கு நாடு மற்றும் கன்னடநாடு ஆகியவற்றை வென்று தனக்கு கட்டுப்பட்ட அரசாக்கினார். சேரரை வென்றதால் வானவன் என்றும், சோழரை வென்றதால் செம்பியன் என்றும் கன்னடத்தவர்களை வென்றதால் மதுர கருநாடகத்தான் என்றும் கொங்கு நாட்டை வென்றதால் கொங்கர் கோமான் என்றும் பட்டப்பெயர் பெற்றான். கடலளவு படைபலம் கொண்டிருந்ததாகவும் வேள்விக்குடி செப்பேடுகள் கூறுகின்றன. கடல் போன்ற பெரும்படையுடைய ஆய்வேளை வென்றார். "மங்கலபுரத்தில் மாரதரை பொருதழிந்த புகழுடையோன்" என்று கூறுவதை தற்போதைய மங்களூரில் உள்ள கொங்கு தேசத்தவரை இவன் வென்றதாகவும் சதாசிவ பண்டாரத்தார் மங்கலபுரத்தில் இவர் வென்றது சாளுக்கிய விக்கிரமாதித்தனை என்றும் கூறுகிறார். அறிஞர் நாகசாமி இவர் வென்றது மங்களூர் அரசர்களை தான் குறிப்பிடுகிறார். ஆதாரமாக அந்த பகுதியை ஆளும் அலுபா அரச வம்சத்தினர் தங்களை பாண்டிய வம்சாவளிகள் என்றும் மீன் சின்னத்தை கொணாடிருப்பதையும் குறிப்பிடுகிறார். கோச்சடையான் என்று போற்றப்பட்ட இம்மன்னனின் பெயரில் மதுரையின் ஒரு பகுதி "கோச்சடை" என்று அழைக்கப்பட்டு வருகிறது.
முதலாம் ராஜசிம்ம பாண்டியன் (என்ற) பராங்குசன் (கி.பி.710-765) :
கோச்சடையான் ரணதீரனின் மகன் இவர். தேர்மாறன், பராங்குசன் என்ற பெயர்களில் இவர் அழைக்கப்பட்டார். இரண்டாம் நந்திவர்மன் சமகாலத்தவர். கொங்கு நாட்டை போரில் வென்றார். கங்க அரசன் மகளான பூத சுந்தரியை மணந்தவர். திருமங்கையாழ்வார் இவரின் சமகால புலவர். இவர் மாறவர்மன் என்ற சிறப்பு பெயரையும் பெற்றிருந்தார். காஞ்சியில் இரண்டாம் பரமேஸ்வரனோடு சிம்ம விஷ்ணுவின் பரம்பரை முடிந்து கிளை வம்சமான பீமவர்மனின் வழியில் வந்த பல்லவமல்லன் நந்திவர்மன் என்ற பெயரில் அரசு ஏறினார். பரமேஸ்வனின் புதல்வரான சித்திரமாயன் பாண்டிய மன்னனான இவரிடம் தஞ்சம் புகுந்தார். அவனது சார்பாகவும் கொங்கு நாட்டை கைப்பற்ற முயன்ற நந்திவர்மனை தடுக்கவும் ராஜசிம்ம பாண்டியன் பல்லவனோடு போர் தொடுத்தார்.குழும்பூர்,நெல்வயல், குறுமடை,மண்ணிக்குறிச்சி, திருமங்கை,பூவலூர், கொடும்பாளூர், பெரியலூர் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் இருதரப்பும் வெற்றி பெற்றது குறிப்பிடப்பட்டு இருப்பதலிருந்து சில இடங்களில் பாண்டியர் தரப்பும் சில இடங்களில் பல்லவர் தரப்பும் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கருதுகின்றனர். பாண்டிய நாட்டின் மீது போர்தெடுத்து வந்த இரண்டாம் நந்திவர்மனை தன் நாட்டு எல்லையில் வென்றார். பின்னர் நென்மேலி, மண்ணை ஆகிய இடங்களில் நடந்த போர்களில் இரண்டாம் நந்திவர்மன் வெற்றி பெற்றதாகவும் திருமங்கையாழ்வார் குறிப்பிட்டுள்ளார். மேலும் கச்சிப்பரமேஸ்வர விண்ணகர பதிகம் மற்றும் நந்திவர்மனின் உதயேந்திர செப்பேடுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. வேள்விக்குடி செப்பேடுகள் இவர் மழ நாட்டை வென்று தனக்கு திறை செலுத்தி வர பணித்ததாக கூறுகிறது. இவர் மாளவ நாட்டின் மீது போர் தொடுத்து அதை வெற்றி கொண்டார். வெற்றியின் விளைவாக மாளவ மன்னனின் மகளை திருமணம் செய்து கொண்டார். இவர் ஓரு சிவபக்தர். கொங்கு நாட்டிலுள்ள திருப்பாண்டிக்கொடுமுடி என்ற தலத்திற்கு சென்று அங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பொன்னையும் நவமணிகளையும் வழங்கியதாக செப்பேடுகள் கூறுகின்றன.
பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி.765-790) :
பராங்குசன்-கங்க மன்னரின் மகள் பூதசுந்தரிக்கு பிறந்தவர் தான் பராந்தகன். இவன் பராந்தகன் நெடுஞ்சடையன் மற்றும் சடையவர்மன் பட்டங்களை பெற்றவர். இவர் பொதிகை மலை தலைவன் ஆய்வேளையும் தகடூர் மன்னன் அதியமானையும் மற்றும் குரும்பரையும் கொங்கு நாட்டில் வென்றதாக வேள்விக்குடி செப்பேடுகள் கூறுகிறது. அரசனின் முன்னோர்களில் ஒருவரான பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி "பாகனூர்க்கூற்றம்" என்ற ஊரை அந்தணர்க்கு தானமாக அளித்தார். பின்னர் வந்த களப்பிரர்கள் அதை பிடுங்கி கொண்டனர். தானத்தை பெற்ற அந்தணர் பரம்பரையில் வந்த ஒருவர் இம்மன்னனின் மாளிகை முன்பு கூச்சலிட்டார். அதை கேட்ட நெடுஞ்சடையன் விஷயத்தை விசாரித்து அந்த நிலங்களை அந்தணர்களுக்கு அளிக்க உத்தரவிட்டதை வேள்விக்குடி செப்பேடுகள் பதிவு செய்துள்ளது. விழிஞத்தை கைப்பற்றி வேணாட்டு அரசனை சிறைபிடித்தான். விழிஞத்திலிருந்து யானைகள், குதிரைகள் மற்றும் செல்வங்கள் அனைத்தையும் திரட்டி வந்ததாகவும் பல்லவ மன்னனான நந்திவர்மனோடு தஞ்சைக்கு அருகில் பெண்ணாகடத்தில் போர் புரிந்து விரட்டியடித்ததாகவும் சீவரமங்கலச் செப்பேடுகள் குறிப்பிடுகிறது. தென் திசைக்கு அரணாக களக்குடி என்ற கரவந்தபுரத்தில் கோட்டை அமைத்து காவற்படையை நிறுத்தி வைத்திருந்தார். இந்த கரவந்தபுரம் தற்போது உக்கிரன்கோட்டை என்ற பெயரில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ளது. இவருடைய ஆட்சிக்காலத்தில் பாண்டிய நாடு முழுவதும் பல குடைவரைக் கோயில்கள் கட்டப்பட்டன. இவருடைய அமைச்சரான மாறன் காரியும் அவர் தம்பி மாறன் எயினனும் ஆனைமலையில் பெருமாளுக்கு கோயில் ஒன்றை அமைத்தனர். இவரது படைகளின் தளபதியான சாத்தன் கணபதி திருப்பரங்குன்றக் கோயிலை குடைந்து திருப்பணி செய்திருக்கிறார். இது தவிர பல கோயில்களுக்கு இவர் பல நிவந்தங்களை அளித்துள்ளார். இவன் காலத்தில் தென்னிந்தியா முழுவதும் பாண்டியரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இவர் காலத்தில் தான் பாண்டிய நாட்டில் பெரியாழ்வார் வாழ்ந்தார். அவரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவரின் செப்பேடுகளில் எல்லாம் வைஷ்ணவ சுலோகங்களும் சின்னங்களும் இடம்பெற்றிருப்பதை வைத்து பார்த்தால் இவர் வைணவத்தை பின்பற்றியிருக்கலாம் என தெரிகிறது. இவர் காலத்தில் நரசிம்ம சுவாமி குகைகோயில் குடையப்பட்டது.
இரண்டாம் இராசசிம்மன் (கி.பி.790-792)
பாண்டியன் வரகுணனின் தந்தை இரண்டு ஆண்டுகளே ஆட்சி புரிந்தார். இவரின் காலத்தில் எந்த போர்களும் நடைபெற்றதாக தெரியவில்லை. குறைந்த காலம் (2 ஆண்டுகள்) மட்டுமே ஆட்சிபுரிந்த தால் இவரை பற்றிய கல்வெட்டுகளோ செப்பேடுகளோ கிடைக்கவில்லை. சின்னமனூர்ச் செப்பேடுகளில் இவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததை தவிர வேறு எதுவும் செய்திகள் குறிப்பிடப்படவில்லை.
வரகுணன் (கி.பி.792-835)
இரண்டாம் ராஜசிம்ம பாண்டியன் மகனான இவர் அவருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவர் மாறன் சடையன் மற்றும் சடையவர்மன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டார். இவர் காலத்து கல்வெட்டுகளே சோழர் மற்றும் பல்லவர் அரசுகளிலும் பரவலாக உள்ளது. இதன்மூலம் இவர் சோழ மற்றும் தொண்டை நாட்டையும் தன் கீழ் கொண்டு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. வேம்பு ,நியமம் கோவிலுக்கு மான்யங்கள் வழங்கினான். திருச்சிலுள்ள கல்வெட்டு ஒன்றில் இவர் சிராப்பள்ளி இறைவனுக்கு திருவிளக்குகள் எரிப்பதற்கு 125 கழிஞ்சு பொன் அளித்ததை பற்றி குறிப்பிட்டுள்ளது.திருநெல்வேலி அம்பாசமுத்திரம் கோவிலுக்கு 290 பொற்காசுகள் வழங்கினான் என இவரின் ஆட்சிக்கால கல்வெட்டு கூறுகிறது. இவரது கல்வெட்டுகள் சோழ நாட்டில் ஆடுதுறை, செந்தலை, கும்பகோணம், திருநெய்த்தானம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருக்கோடிக்கா ஊர்களில் கிடைத்திருப்பதால் சோழ நாடு முழுவதும் இவரது ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது என்று அறியமுடிகிறது. நந்திவர்மன் சோழ நாட்டை ஆண்டபோது அவருடன் போர்புரிந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.தந்திவர்மன் இவரின் சமகாலத்தவர். தொண்டை மண்டலத்தின் தென் பகுதிகள் இவரது ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. மாணிக்கவாசகர் இவரது ஆட்சி காலத்தில் தான் இருந்தார். மாணிக்கவாசகர் தனது திருச்சிற்றம்பலக் கோவையில் இவ்வரசனை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீமாறன் ஶ்ரீவல்லபன் (கி.பி. 835-862)
இவருக்கு மாறவர்மன், ஏகசக்ரவீரன், பரசக்ரகோலாகலன் ஆகியவை இவரின் சிறப்பு பெயர்களாகும். இவருக்கு பின் அரசாண்ட இரண்டாம் வரகுண வர்மன் மற்றும் பராந்தக பாண்டியன் ஆகிய இருவரும் இவரின் மகன்களே. இவர் புதுக்கோட்டை சித்தன்னவாசலை கைப்பற்றினார். விழிஞம், சிங்களம், குண்ணூர் போர்களிலும் வெற்றி பெற்றுள்ளார். திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள விழிஞம் போரில் இவருடன் மோதி சேரமன்னன் மரணமடைந்தார். இவர் கங்கர், சோழர், பல்லவர், கலிங்கர், மாசுதர் என பல மன்னர்களின் மீது படையெடுத்தது வென்றுள்ளார். தன் முன்னோர்களை போலவே பல்லவர்களோடு தொடர்ந்து போரில் ஈடுபட்ட இவர் தந்தையின் காலத்தில் இழந்த பகுதிகளை மீட்க மூன்றாம் நந்திவர்மன் இவரோடு தெள்ளாறு என்ற இடத்தில் போரிட்டு பாண்டியனை வென்றார். அதனால் "தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன்" என்று நந்திவர்மனை பற்றிய குறிப்புகள் உள்ளது. இவருக்கும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்கவர்மனுக்கும் அரிசிலாற்றங்கரையில் நடந்த போர்களில் இவர் தோற்று போனதை பாகூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. கடல் கடந்து இலங்கையின் சிங்கள மன்னர் முதலாம் சேனனை வென்று அவர் சமாதானத்திற்கு வந்தபின் நாட்டை அவருக்கு திரும்ப வழங்கினார் என்று சின்னமனூர்ச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
சீவல்லபன் ஓயாத போர்களில் ஈடுபட்டிருந்த வேளையில் மாயப்பாண்டியன் என்பவன் சிங்களப்படையினர் உதவியால் மதுரையை கைப்பற்றிகொண்டான். பின்னர் மாயப்பாண்டியனையும் சிங்கள இரண்டாம் சேனனையும் போரில் தோற்கடித்து துரத்தினார். பெரியாழ்வார் இவரது காலத்தவர். அவரைப்போலவே இவரும் வைஷ்ணவனாக வாழ்ந்தார்.
இரண்டாம் வரகுண வர்மன் (கி.பி. 862-880)
தந்தை சீவல்லபன் இறக்கும்போது மதுரை மாயப்பாண்டியன் கையில் இருந்தது. பல்லவர் நிருபதுங்கவர்மனுடன் உடன்படிக்கை கொண்டு மாயப்பாண்டினை விரட்டி மதுரையில் ஆட்சியில் அமர்ந்தார். இவர் காலத்தில் பல்லவர்களுடன் எந்த போரும் நடக்கவில்லை. இந்த நேரத்தில் தஞ்சையை ஆண்ட முத்தரையர்கள் பாண்டியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தவர்களை விஜயாலயச்சோழன் விரட்டி சோழ சாம்ராஜ்யத்திற்கு ஆரம்பபுள்ளி வைத்தார். இது கண்ட மூன்றாம் நந்திவர்மனும் வரகுண வர்மனும் இணைந்து சோழரை முறியடிக்க இணைந்தனர். படையெடுப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே மூன்றாம் நந்திவர்மன் மரணமடைந்து விட்டார். காவிரி ஆற்றின் கரையில் இடவை என்னுமிடத்தில் வரகுண பாண்டியன் கட்டிய அரண்மனை இருந்தது. அதை கைப்பற்ற பாண்டிய படைகள் சோழ நாட்டின் மீது படையெடுத்து அதை கைப்பற்றின. அதை மீட்க சோழப்படைகள் மற்றும் பல்லவன் அபராஜித வர்மன் கங்க மன்னன் பிருதிவிபதியும் விஜயாலயச்சோழனும் திருப்புறம்பியம் போர்களத்தில் சந்தித்தனர். விஜயாலய சோழனுக்கு பதிலாக அவர் மகன் ஆதித்யசோழன் பாண்டியர் மற்றும் நிருபதுங்கவர்மனை வென்றார். வாரிசு போட்டியில் தம்பியின் மகனான அபராஜிதவர்மன் நிருபதுங்க வர்மனை தோற்கடிக்க சோழர்களுடன் இணைத்து தனது பெரிய தந்தையை தோற்கடித்தார். இந்த போரில் கங்க மன்னன் பிருதிவிபதி போரில் மரணமடைந்தார். இந்த திருப்புறம்பியம் போரே சோழப் பேரரசு சாம்ராஜ்யமாக மாற அடிகோலியது. இந்த போரில் தோற்ற பாண்டியன் சோழ நாட்டை இழந்து பாண்டிய நாட்டை மட்டும் ஆண்டு வந்தார்.
நிருபதுங்க வர்மன் மற்றும் கம்ப வர்மனே சகோதரர்கள் என்றும் கம்பவர்மன் ஓரு போரில் கால்களை இழந்ததால் அவருக்கு பதிலாக அவர் மகன் அபராஜிதவர்மனே வாரிசுகளை கோரினார் என்றும் கம்பவர்மனின் மகனே அபராஜிதவர்மன் என்றும் கூட சொல்லுவார்கள். மேலும் அவர்களின் காலத்தில் பல்லவ நாட்டின் வடபகுதியை கம்பவர்மன் ஆண்டதாகவும் தென்பகுதியை நிருபதுங்கவர்மன் ஆண்டாகவும் கூட சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சரித்திரத்தில் சில இடங்களில் தெளிவாக குறிப்பிடாத இடங்களும் உண்டு. இரண்டாம் வரகுண பாண்டியன் வருடந்தோறும் 1400 பொற்காசுகளை திருச்செந்தூர் முருகனுக்கு காணிக்கையாக கொடுத்தார். இவருக்கு வாரிசு இல்லாததால் இவருக்கு பின்னர் இவரது தம்பி பராந்தகன் பாண்டியன் ஆட்சியில் அமர்ந்தார்.
பராந்தக பாண்டியன் (கி.பி.880-900)
வரகுண வர்மனுக்கு பின் ஆட்சிக்கு வந்த இவர் அவரின் தம்பியாவார். திருப்புறம்பியம் போரில் தோற்றதால் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்தில் இவர் ஆட்சிக்கு வந்தார். இவரின் அண்ணனான வரகுண வர்மன் துறவறம் பூண்டார். இவருக்கு சடையவர்மன் மற்றும் வீர நாராயணன் என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார். இவர் சேர மன்னன் மகளான வானவன் மாதேவியை மணந்து கொண்டார். இவரது மனைவியின் பெயரிலையே தான் இன்றைய நெல்லை மாவட்டத்தில் சேரன் மாதேவி என்ற ஊர் உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு பிறந்த மகனே பின்னர் பட்டத்திற்கு வந்த மூன்றாம் இராசசிம்மன். கரவந்தபுரம் (இன்றைய உக்கிரன் கோட்டை) போரில் உக்கிரப்பாண்டியனை வென்றார். இது பற்றிய செய்திகள் சாண்டில்யன் எழுதிய "நீலவல்லி" புதினத்தில் அறியலாம். கொங்கர்களை போரில் வென்றான். பெண்ணடகத்தை தாக்கி கைப்பற்றினான். இவனது வெற்றிகளை தளவாய்புரம் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்
மூன்றாம் இராசசிம்மன் (கி.பி.900-919)
இவருக்கு இராசசிகாமணி, சீகாந்தன் என்ற விருது பெயர்கள் உண்டு. தன்னை எதிர்த்த பகைவர்களை வஞ்சியிலும் கொடும்பாளூரில் ஓட விட்டு வென்றார் என்று சின்னமனூர் பெரிய செப்பேடுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரியோடு போரில் இவன் வென்றிருக்க வேண்டும். தஞ்சை வேந்தனை வைப்பூரிலும் நாவற்பதியிலும் வென்றதாக கூறுவதால் அப்போது தஞ்சையை ஆண்ட முதலாம் பராந்தக சோழரோடு சில போர்களில் இவர் வெற்றி பெற்றிருக்கவேண்டும். கி.பி.910ல் முதலாம் பராந்தக சோழர் தன்னை "மதுரைகொண்ட கோப்பரகேசரி" என்று கூறுவதிலிருந்து பாண்டியனுக்கு எதிரான போரில் வென்றதாக தெரிகிறது. பராந்தக சோழன் கி.பி.919ல் மதுரை மீது படையெடுத்து வர மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் இலங்கை மன்னர் ஐந்தாம் காசிபன் உதவியை நாட அவர் சக்க சேனாதிபதி தலைமையில் படைகளை அனுப்ப இவ்விரண்டு படைகளையும் வெள்ளூர் என்ற இடத்தில் சோழ படைகள் விரட்டியடித்து முதலாம் பராந்தக சோழன் பாண்டிய நாட்டை கைப்பற்றி கொண்டார். தப்பியோடிய மூன்றாம் இராஜசிம்மன் இலங்கையில் சில நாட்கள் தங்கியிருந்தார். அவருக்கு மறுபடியும் உதவி கிடைக்காததால் பாண்டியர்களின் மணி முடியையும், பிற அரச சின்னங்களையும் இலங்கை மன்னரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டு சேர நாடு சென்று விட்டார். அதற்கு பின்னர் அவரை பற்றி செய்திகள் கிடைக்கவில்லை.
இதனால் முதலாம் பராந்தக சோழரிடம் கப்பம் கட்டும் சிற்றரசாக பாண்டியநாடு ஆகியது. ஆனால் இவர் கி.பி.945ல் மரணமடையும் வரை சோழருக்கு கட்டுப்பட்ட அரசாக மீண்டும் ஆட்சியை பெற்றதாக கூறுவது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் இவர் மறைந்தவுடன் சோழருக்கு கப்பம் செலுத்த மறுத்து இவரின் மகனான வீரபாண்டியன் மதுரை சுயாட்சியை மீட்டுக் கொண்டார் என்பது கூறுவதிலிருந்து அவ்வாறு நினைத்திருக்கலாம்.
உதவிய நூல்கள் :
பல்லவர் வரலாறு - மு.இராசமாணிக்கனார்
சேர சோழ பாண்டியர் வரலாறு - எஸ்.கிருஷ்ணன்
சோழர் வரலாறு - மு.இராசமாணிக்கனார்
விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல்கள்
Comments
Post a Comment