30) பிற்கால பாண்டியர்கள் பேரரசு
பிற்கால பாண்டியர்கள் (கி.பி.945-1311)
பராந்தக சோழரின் ஆட்சியில் பாண்டிய நாட்டை சோழர்களிடம் இழந்த மூன்றாம் ராசசிம்ம பாண்டியன் சிங்களரின் உதவி பெற்றும் தோல்வியடைந்து மீண்டும் சிங்கள உதவியை நாடி இலங்கைக்கு சென்று பாண்டியரின் பரம்பரை பொக்கிஷங்களை இலங்கை அரசரிடம் ஒப்படைத்து சேர நாட்டுக்கு சென்று அவர்களின் உதவியை நாட முயற்சித்தும் பலனில்லை. அதனால் விரக்தியில் சேர நாட்டிலையே தங்கியதாகவும் அவருக்கு பின்னர் அவரது மகனான வீரபாண்டியன் மதுரையை சோழர்களிடமிருந்து மீட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் சிலர் இராசசிம்ம பாண்டியனும் அவர் மகன் வீரபாண்டியனும் சோழர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர் என்றும் வீரபாண்டியன் சோழர்களை எதிர்த்து சுயாட்சியாய் அரசை மீட்டுக் கொண்டார் என்றும் கூறுகின்றனர். அவரிடமிருந்து பிற்கால பாண்டியர்களின் வரிசை ஆரம்பிக்கிறது.
வீரபாண்டியன் (கி.பி.945-966) :
மூன்றாம் இராசசிம்மன் கி.பி.945ல் மறைந்ததை அடுத்து ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சோழருக்கு கப்பம் செலுத்தாமல் மதுரை ஆட்சியை மீட்டுக் கொண்டார். மதுரை நெல்லை இராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் இவர் சோழருக்கு கப்பம் கட்டாமல் ஆட்சி புரிந்ததை சொல்லுகிறது. பாண்டி மார்த்தாண்டன், சோழாந்தகன் என்ற விருதுபெயர்களை இவர் சூடிக் கொண்டார். தன்னுடைய கல்வெட்டுகளில் "சோழன் தலைகொண்ட கோ வீரபாண்டியன்" என்று குறிப்பிட்டுள்ளார். முதலாம் பராந்தக சோழனின் மகனான உத்தம சீலியை தான் போரில் வீரபாண்டியன் கொன்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது. சுந்தரசோழனின் மூத்த மகனான ஆதித்ய கரிகாலனுடன் சேவூர் என்ற இடத்தில் நடந்த போரில் மாண்டார். உத்தம சீலியின் தலையை வெட்டி கொன்றதால் ஆதித்த கரிகாலன் இவரது தலையை வெட்டி கொன்றார். இந்த நிகழ்வு கி.பி.966ல் நடந்த பிறகு மதுரை பாண்டிய மண்டலம் முற்றிலும் சோழர் வசமானது.
அமர புயங்கன் (காலம் சரியாக தெரியவில்லை) :
வீரபாண்டியனுக்கு பின் வந்தவர் இவர். பாண்டிய நாட்டின் சிற்றரசர்கள் இவரின் தலைமையின் கீழ் ஆட்சிபுரிந்தனர். முதலாம் ராஜராஜசோழன் சேரநாட்டின் மீது படையெடுத்து செல்லும்போது வழியில் பாண்டியன் அமரபுயங்கனை தோற்கடித்தார் என்று திருவாலங்காட்டு செப்பேடுகள் கூறுகின்றன. இவரை தோற்கடித்த பின்னர் தான் இராஜராஜ சோழர் விழிஞம் துறைமுகத்தை கைப்பற்றினார் என்பதிலிருந்து இவருக்கு ஆய் அரசர்களின் உதவி கிடைத்திருக்க கூடும். பின்னர் பாண்டிய நாட்டையும் சேர நாட்டின் தென்பகுதியையும் தன் நாட்டுடன் இணைந்து கொண்டார். அந்த பகுதிக்கு இராசராச சோழமண்டலம் என பெயர் வைத்தார். இதிலிருந்து இவர் காலம் (985-1014 -இராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம்) அதை ஓட்டி வரும் என தெரிகிறது
சீவல்லப பாண்டியன் (கி.பி.1045-1065) :
சோழ நாட்டுக்கு ஓழுங்காக கப்பம் கட்டி வந்ததால் இரண்டாம் இராஜேந்திர சோழன் காலத்தில் கப்பம் கட்டுவதிலிருந்து விடுதலை பெற்றான். இவரது பட்டத்தரசி கி.பி.1054ல் சோழநாட்டு திருவியலார்க்கோவிலுக்கு பல அணிகலன்கள் வழங்கியதாக குறிப்புகள் உள்ளதிலிருந்து இவர் கி.பி.1045-1065 காலத்தில் அரசாண்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் இவருக்கு பின் இவரது மகன் வீரகேசரி கி.பி.1065ல் அரியணை ஏறினார் என்பதிலிருந்து இவர் கி.பி.1065 வரை ஆட்சி புரிந்திருக்கலாம்.
வீரகேசரி (கி.பி. 1065-1070) :
இவர் கி.பி.1065-1070 வரை ஆண்டதாக தெரிகிறது. இவர் வீரராஜேந்திர சோழனோடு நடந்த போரில் மரணமடைந்தார். இவரின் காலத்தில் தான் பாண்டிய நாட்டுக்கு பொறுப்பாக இருந்த வீரராஜேந்திரனும் அவர் மகன் அதிராஜேந்திரனும் கி.பி.1065,1070களில் மரணமடைந்ததால் கி.பி.1081 வரை பாண்டிய ஆட்சிக்கு பொறுப்பில் இருந்தவர்கள் விவரங்கள் தெரியவில்லை. இவருக்கு பின் வந்த அரசர்கள் விவரமும் அறியமுடியவில்லை.
சடையவர்மன் பராந்தக பாண்டியன்:(காலம் உறுதியாக தெரியவில்லை. இறுதி காலம் கி.பி.1150 ஆக இருக்கலாம்)
இவரது காலத்தில் பாண்டிய நாட்டின் தென்பகுதியை மாறவர்மன் சீவல்லபன் ஆண்டு கொண்டிருந்தார். "திருவளரச் செயம்வளரத் தென்னவர் தன் குலம் வளர" என்று குறிக்கப்படும் இந்த மன்னர் முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் அவரது மகனான விக்கிரம சோழனின் ஆட்சி காலத்தில் வாழ்ந்தவர். இவர் சேரர்களை தோற்கடித்ததாகவும் காந்தளூர் சாலையை கலம் அறுத்ததாகவும், விழிஞத்தை கைப்பற்றியதாகவும் கூறுவதிலிருந்து சேர மன்னர் இவருக்கு திறை செலுத்தி கொண்டிருந்தார் என்று தெரிகிறது. தெலுங்கு வீமனையும் இவர் போரில் வென்று இருக்கிறார். இந்த செயல்களை எல்லாம் இவர் சோழர்களுக்காக செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆண்டுதோறும் பாண்டியர் குல தெய்வமான கன்னி பகவதிக்கு தைப்பூச திருவிழா நடத்துவதற்கு நிவந்தங்கள் அளித்தார்.
மாறவர்மன் சீவல்லபன் (கி.பி. 1132-1162) :
இவர் சேரமன்னன் வீரரவிவர்மனுக்கு கப்பம் கட்டி வந்தார். இவர் பற்றிய கல்வெட்டுகள் நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் கிடைத்திருக்கிறது.
சடையவர்மன் சீவல்லபன் (காலம் குறிப்பிடப்படவில்லை) :
ராபக்கிரம பாண்டியன் (கி.பி.1150-1162) :
இவர் மதுரையில் இருந்து ஆட்சி புரிந்தார். மாறவர்மன் சீவல்லபனின் மகனான சடையவர்மன் குலசேகர பாண்டியன் மதுரையை தன் ஆட்சியில் கொண்டு வர இவர் மீது படையெடுக்க இவர் இலங்கை அரசன் பராக்கிரம பாகு உதவியை நாட அவர் படைகள் வருவதற்குள் மதுரையை தாக்கி பராக்கிரம பாண்டியனை கொன்று மதுரையை கைப்பற்ற இலங்கை படைகள் மதுரையை சூறையாடி குலசேகரனை துரத்தியடித்தது.
சடையவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி.1162-1175) :
சடையவர்மன் சீவல்லப பாண்டியனின் மகனான இவரின் மெய்க்கீர்த்திகள் "பூதலமடந்தை" என்று தொடங்கும். இவர் திருநெல்வேலியிலிருந்து ஆட்சி புரிந்தார். அந்த நேரத்தில் பராக்கிரம பாண்டியன் மதுரையிலிருந்து ஆட்சி புரிந்தார். இருவருக்குமிடையே மிகுந்த போட்டிகள் இருந்தது.
சடையவர்மன் வீரபாண்டியன் : (கி.பி.1175-1180) :
சடையவர்மன் குலசேகரபாண்டியனுடன் நடந்த சண்டையில் இவரின் தந்தை பராக்கிரம பாண்டியன் தோற்று போரில் மாண்டார். இவர் கேரள நாட்டில் மறைந்து வாழ்ந்தான். பின்னர் இலங்கையின் அரசன் பராக்கிரமபாகுவின் தளபதி தண்டநாயகன் சடையவர்மன் குலசேகர பாண்டியனை வீழ்த்தி இவர் மதுரை அரியணையில் அமர வைத்தான். குலசேகரன் சோழர் உதவி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தான். ஆட்சி மீண்டும் வந்தவுடன் இலங்கை மன்னருடன் நட்பு கொண்டு சோழர்களை விரட்டி விட சோழன் வெகுண்டு எழுந்து குலசேகரை விரட்டி வீரபாண்டியனை திரும்பவும் ஆட்சியில் அமர்த்தினார். இதன் பின்னர் நடைபெற்ற ஶ்ரீவில்லிபுத்தூர் போரிலும் தோற்று சடையவர்மன் குலசேகர பாண்டியன் நெல்லை சென்று தங்கினார். வீரபாண்டியன் திரும்பவும் இலங்கை மன்னருடன் நட்பு பாராட்ட சோழன் அவரை விரட்டியடித்து குலசேகர பாண்டியனின் மகனான விக்கிரம பாண்டியனுக்கு முடி சூட்டினார்.
விக்கிரம பாண்டியன் (கி.பி.1180-1190) :
சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்கு பின் அவன் மகனான இவர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் உதவியால் ஆட்சியை மீட்டதால் அவருக்கு கடைசிவரை விசுவாசமாக இருந்தார். தோற்று ஓடிய வீரபாண்டியன் சேர மன்னனின் உதவி கேட்க சேர படைகளையும் மூன்றாம் குலோத்துங்கன் தோற்கடித்து விரட்டினார். 10 வருடங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்து மறைந்தார்.
முதலாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி.1190-1218) :
விக்கிரமப்பாண்டியனின் மறைவிற்குப் பின் அவர் மகனான இவர் ஆட்சிக்கு வந்தார். தற்போதைய மதுரை, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் பகுதிகளை ஆண்டார்.
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1238) :
மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்திலையே சுயாட்சிக்காக உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்தினாலும் தனி அரசனாக ஆகமுடியாமல் சிற்றரசாகவே வாழ்ந்தார். நல்ல புத்தி கூர்மையும் போர் திறமையையும் கொண்டிருந்தவர் இவர். மூன்றாம் குலோத்துங்கன் மறைவுக்கு பின் வந்த மூன்றாம் இராஜராஜன் மீது போர் தொடுத்து மதுரையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஏற்கனவே பல குலசேகர பாண்டியர்கள் ஆட்சி புரிந்தாலும் அவர்களின் வம்சாவளிகள் சரிவர தெரியாதததாலும் பாண்டிய நாடு இவரின் ஆட்சியில் இருந்து தான் சுயாட்சி முயற்சியில் ஈடுபட தலைபட்டது என்பதாலும் இவரையே முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். கொங்கு நாட்டை வென்ற மூன்றாம் குலோத்துங்கன் மதுரையில் வந்து வீராபிஷேகத்தை செய்து கொள்ள விரும்ப இவர் ஒப்புக்கொள்ளாததால் பெரும்படையுடன் வந்து மட்டியூர் கழக்கோட்டை என்ற இடங்களில் பாண்டிய படைகளை தோற்கடித்து மதுரை வந்து பேரழிவை ஏற்படுத்தினார். பின்னர் மதுரையில் வீராபிஷேகம் செய்து கொண்டு"சோழ பாண்டியன்" "திரிபுவன வீரதேவன்" என்று பட்டம் சூடிக் கொண்டார். பின்னர் குலசேகரனுக்கு நாட்டை திருப்பி அளித்து தனக்கு கீழ் ஆண்டுவர பணித்தார். இவரது இறுதி காலம் வரை சோழர்களுக்கு திறை செலுத்தும் நாடாகவே பாண்டிய நாடு இருந்தது.
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி.1238-1239) :
இவரின் ஆட்சி ஒருசில மாதங்களே ஆனதை திருத்தங்கல் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1239-1251) :
இவனது ஆட்சிகாலத்தில் மூன்றாம் இராஜராஜ சோழன் மதுரையை தாக்கி கைப்பற்றிக் கொண்டார். இவரது தாய் மாமனான ஹொய்சால மன்னன் வீரசோமேஸ்வரன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து மீட்டுக் குடுத்தார். இதன் காரணமாக வீரசோமேஸ்வரன் தன்னை "பாண்டியகுல சம்ரட்சகன்" என்று அழைத்துக் கொண்டார். அத்துடன் சுந்தர பாண்டியனுடன் மண உறவும் ஏற்படுத்தி கொண்டார். சுந்தர பாண்டியனுடன் இவனை மாமடி என்று கல்வெட்டுகளில் தன்னை குறிப்பிட்டுள்ளார். கொங்கு நாட்டு மன்னன் விக்கிரமச்சோழன் இவருக்கு மைத்துனன்.
சடையவர்மன் விக்கிரமன் (கி.பி.1241-1254) :
சடையவர்மன் சுந்தரபாண்டியனின் போர் வெற்றிகளில் இவரும் துணை நின்றவர். இவர் தொண்டை மண்டலத்தை சுந்தர பாண்டியனின் பிரதிநிதியாக சில காலம் ஆண்டார் என்பதை திருக்கோவிலூர் மற்றும் அச்சிறுபாக்கம் ஊர்களில் கிடைத்த கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. காகதீய அரசரை வெல்ல படையெடுக்க அப்போது காகதீய அரசர் கணபதியின் மகளான ருத்ராம்பா என்ற ருத்ரமாதேவி நாட்டை ஆண்டு கொண்டிருந்ததால் பெண்ணோடு போரிட்டு வெல்ல வேண்டாம் என்று போரை தவிர்த்ததாக ஒரு பாடல் தனிப்பாடல் திரட்டில் உள்ளது.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1251-1271) :
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு பின் வந்த அவரின் மகனான இவரே பிற்கால பாண்டிய மன்னர்களுள் மிகவும் புகழ்பெற்றவர். இவர் தான் மூன்றாம் இராஜேந்திர சோழனை போரில் வீழ்த்தி சோழப்பேரரசை முற்றிலும் அழித்தவர்.சேர நாட்டை ஆண்ட வீரரவி உதய மார்த்தாண்டவர்மனுடன் நடந்த பரலி போரில் சேரமன்னனை தன் தம்பி வீரபாண்டியனுடன் சேர்ந்து வீழ்த்தி சேரநாட்டை கைப்பற்றினார்.பின்னர் சோழனுடன் கூட்டு சேர்ந்து ஹொய்சால படைகளை கண்ணணூரில் (இன்றைய சமயபுரம்) முறியடித்து தன் ஆட்சியை விரிவுபடுத்தினார்.பின் பாண்டிய நாட்டின் கொற்கை (தூத்துக்குடி) முத்துக்களை சேரமன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மனுக்கு களவாட உதவி செய்த இன்றைய திரிகோணமலையை ஆண்ட தம்பர்லிங்கா (தாய்லாந்து) நாட்டு அரசன் சந்திரபானுவின் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றான். சிதம்பரத்தில் நடராஜரை வணங்கி துலாபாரம் செய்தார். சிதம்பரம் கோயிலுள்ள மேலைக் கோபுரத்தை இவர் கட்டியதால் அது சுந்தரபாண்டியன் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.இவர் தன்னுடைய ஆட்சி காலத்திலையே தன் மகனான முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியனிடம் கி.பி.1268ல் ஆட்சியை ஒப்படைத்தார். கி.பி.1271 ல் இவர் மறைந்தார்.
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1253-1281) :
இவர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் தம்பி. அவர் சார்பாக எல்லா போர்களையும் வழிநடத்தினார். அண்ணன் மகளை ஹொய்சாள தளபதி சிங்கண்ணன் மற்றும் சேரன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மனுடன் சேர்ந்து கடத்தியது தெரிந்து சேரனை பரலி நகரில் வீழ்த்தி கொற்கை முத்துக்களையும் அண்ணன் மகளையும் மீட்டவர். இலங்கை அரசன் சந்திரபானுவை வீழ்த்தியவர். சோழ நாடு, நடு நாடு, தொண்டை நாட்டு பகுதிகளை ஆட்சி புரிந்தார். தில்லை கோயில் நூற்றாங்கால் மண்டபத்தில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் செய்து கொண்டதால் அந்த மண்டபத்துக்கு "வீரபாண்டியன் திருமண்டபம்" என்ற பெயர் உண்டாயிற்று. இவர் தன் அண்ணனான சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்கு உதவியாக எல்லா போர்களிலும் துணை நின்றார். கி.பி.1281ல் மறைந்தார்.
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி.1268-1310) :
சோழர், சேரர் மற்றும் கொங்கர்களை வென்றார். கி.பி.1279ல் மூன்றாம் மூன்றாம் இராஜேந்திரனை தோற்கடித்து சோழப் பேரரசுக்கு முடிவுரை எழுதினான். மேலும் போசளர்கள் மற்றும் ஹொய்சாளர்களை வென்றார். சிங்கள நாட்டின் மீது கி.பி.1284ல் படையெடுத்து புத்தரின் சின்னமொன்றை கைப்பற்றினார். பின்னர் சிங்கள மன்னன் மதுரை வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து புத்தரின் பல்லை மீட்டு சென்றார்.
இவரின் ஆட்சிகாலத்தில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வசெழிப்புள்ள நகரமாக இருந்ததாக இத்தாலிய பயணி மார்க்கோபோலா குறிப்பிட்டுள்ளார். ஏடன் நாட்டினருக்கும் பாண்டியர்களுக்கும் குதிரை வணிகம் இருந்ததாக கி.பி.1289ல் இபின் படூடா குறிப்பிட்டுள்ளார். இவர் சேரநாட்டின் மீது படையெடுத்து கொல்லத்தை வென்று அதை கைப்பற்றியதால் "கொல்லங்கொண்ட பாண்டியன்" என்ற பெயரை பெற்றார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சோழன் சேரன் ஹெய்சாளன் ஆகியோரை வென்று கொண்டு வந்த பொருட்களை கொண்டு அக்கோயிலில் திருச்சுற்று மாளிகை ஒன்றை கட்டினார்.
கி.பி.1310ல் இவரின் மறைவுக்கு பின் இவரின் மூத்த மகனான சுந்தரபாண்டியன் அவனின் தம்பி இரண்டாம் வீர பாண்டியனை வீழ்த்த டெல்லியை ஆண்ட கில்ஜி வம்ச அலாவூதின் கில்ஜி யின் தளபதியான மாலிக்காபூரை துணைக்கு வரவழைத்தார். மாலிக்காபூர் வந்து இரண்டாம் வீர பாண்டியனை வெற்றி கொண்டு சுந்தரபாண்டியனையும் அடிமைப்படுத்தினான். பாராண்ட பாண்டிய வம்சம் சுல்தான்களின் ஆட்சியில் பொலிவிழந்தது. சுல்தான்களின் ஆட்சியில் உள்நாட்டு கலவரங்கள் நடந்தன. கோயில்கள் வழிபாடு திருவிழா எதுவுமின்றி சீர்குலைந்தது.
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் (கி.பி.1268-1281) :
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகனான இவர் தந்தைக்கு உதவியாக ஆட்சி புரிந்தார் என்று திருவெண்ணெய் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் சார்பாக நடுநாடு தொண்டை நாடு பகுதிகளை ஆட்சி புரிந்து வந்தார்.
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1276-1293) :
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் ஆட்சிக்கு துணையாயிருந்த இவர் கரூவூரை தலைநகராக கொண்டு கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தார்.
மாறவர்மன் வீரபாண்டியன் :
இவரும் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் ஆட்சிக்கு உதவியாக சோழ நாட்டின் வடபகுதியை ஆண்டு வந்தார்.
மாலிக்காபூர் மற்றும் சுல்தான்கள்:
பாண்டிய நாட்டில் பயணம் செய்த இஸ்லாமிய அறிஞரான வாஸப் பாண்டிய நாட்டு செல்வ குவியலை பற்றி கிட்டத்தட்ட இருநூறு கோடி பொன்னும் அதை தவிர முத்துகளும் நவமணிகளும் பாண்டிய நாட்டில் இருந்ததாக குறிப்பிட டெல்லியை ஆண்ட கில்ஜி அரசர்கள் காதுகளை எட்டியது. அந்த நேரத்தில் சுந்தர பாண்டியன் தென்னக பகுதிகளில் படையெடுப்பில் இருந்த மாலிக் காபூரை தன் உதவிக்கு அழைக்க முடிவு செய்தார்.முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி.1310ல் மறைந்தவுடன் அவரது மூத்த மகனான சுந்தரபாண்டியனுக்கும் தம்பி இரண்டாம் வீரபாண்டியனுக்கும் இடையே வாரிசுரிமை போட்டி நிலவியது. சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூரை உதவிக்கு அழைக்க அவர் வருவதற்குள் ஹொய்சால வீரவல்லாளத்தேவனின் சமாதான முயற்சியினால் சகோதரர்களுக்கிடையே உடன்பாடு ஏற்பட்டது. வீர பாண்டியன் சோழ நாட்டின் வீரதளவாய்புரத்தை தலைநகராக கொண்டும் சுந்தரபாண்டியன் மதுரையை தலைநகராக கொண்டு ஆள்வதற்கும் உடன்பாடு ஏற்பட்டது. முதலில் வீரதளவாய்புரததை தாக்கிய மாலிக் காபூரின் படைகளை எதிர்கொள்ள முடியாமல் வீரபாண்டியன் மதுரைக்கு தப்பி ஒடினார். மாலிக்காபூரின் படைகள் காஞ்சிபுரம் சுற்றியுள்ள கோயில்களை இடித்து தரைமட்டமாக்கியது. மேலும் சிதம்பரம், திருச்சி கோயில்களில் சிலைகளை சேதப்படுத்தி திருவரங்கம் அரங்கநாதர் மூலவர் சிலையை எடுத்துச்சென்றது. பின்னர் மதுரையை நோக்கி கவனத்தை திருப்பிய படையை வீரபாண்டியன் மதுரையில் இருந்து மதுரையை பாதுகாக்கவும் சுந்தரபாண்டியன் மாலிக்காபூரை எதிர்கொண்டு போரிடும் தங்களுக்குள் முடிவு செய்து எதிர்த்த சுந்தரபாண்டியனை படைகளை நிர்மூலமாக்கி அவனது தளபதிகளை பிடித்து கொன்றும் சுந்தரபாண்டியனை மட்டும் கைதியாக்கி மதுரையை நோக்கி திரும்பியது மாலிக்காபூரின் படைகள். மதுரையை முற்றுகையிட்ட மாலிக்காபூரை சுந்தரபாண்டியனின் மாமாவான விக்கிரபாண்டியன் தனது மறவர் படையுடன் திடீர் திடீரென்று தாக்கி சேதப்படுத்தினார். கடைசியில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை காக்க மாலிக்காபூருடன் உடன்பாடு கொண்டு சுந்தரபாண்டியனை விடுவித்து ஒப்பந்தப்படி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நகைகளையும் பொன்னும் மணியும் யானைகளும் டெல்லிக்கு எடுத்து சொல்லப்பட்டன. ஜியாவூதின் ஃபார்னி, அமீர்குஸ்ரு மற்றும் வாசப் ஆகியோரின் கருத்துப்படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் (அப்போது சோழ நாடும் பாண்டிய நாட்டின் கீழ் அடங்கியிருந்தது) அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த பொன் மற்றும் நகைகளை கொள்ளையடித்துசம் சிற்பங்களை சிதைத்துக் சேதப்படுத்தியதாகவும் , மதுரையின் உடன்பாட்டின்படி 612 யானைகள், 20000 குதிரைகள் மற்றும் 96000 மணங்கு பொன் முத்து மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளை டெல்லிக்கு எடுத்துச் சென்றான். அவன் தன் கீழே ஆட்சியாளர்களை நியமித்து விட்டு சென்றான். மாலிக் கபூர் டெல்லி சென்ற பிறகு வீரபாண்டியன் மீண்டும் மதுரையை கைப்பற்றி கொண்டார். சுந்தர பாண்டியன் பாண்டிய நாட்டின் வடபகுதியை ஆட்சி செய்தார். ஆனால் சேரமான் ரவிவர்மன் குலசேகரன் என்பவர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வீரபாண்டியனையும் சுந்தரபாண்டியனையும் வென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் சுந்தர பாண்டியன் காகதீய அரசர் பிரதாபருத்திரனிடம் உதவியை கேட்க அவர் முப்பிடி நாயக்கன் தலைமையில் படைகளை அனுப்பி சேரனை விரட்டியடித்தார். பின்னர் மதுரை சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் வசம் சென்றது. மீண்டும் குஸ்ரூகான் கி.பி.1316ல் டெல்லியிலிருந்து படையெடுத்து வந்து கைப்பற்ற ஒடிய பராக்கிரம பாண்டியன் மறைந்திருந்து தாக்குதல் தொடுக்க குஸ்ரூகான் கிடைத்தவற்றை எடுத்துக் கொண்டு டெல்லிக்கு ஒடினார். பின்னர் கி.பி.1323ல் படையெடுத்து வந்த உலாகான் (முகமது பின் துக்ளக்) மதுரையை கைப்பற்றியதும் தனது சார்பில் ஆளுநரை நியமித்தார்.முதலில் ஜலாலுதீன் அசன் கான்னை நியமிக்க பின்னர் கி.பி.1335ல் அவரே டெல்லி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனியரசாக மதுரையை ஆள அவருக்கு பின்னர் அலாவுதீன் உதான்ஷா, குத்புதீன், நஸ்ரூதீன், அதில் ஷா, ஃபக்ரூதீன் முபாரக் ஷா, அலாவூதின் சிக்கந்தர் ஷா போன்ற சுல்தான்கள் அடுத்து 60 வருடங்களுக்கு மதுரையை ஆட்டி படைத்தனர். திருவிழாக்கள் கோவில் வழிபாடு ஆகியவை நிறுத்தப்பட்டது. மாலிக்காபூர் மதுரையை சூறையாடும் போதே மதுரை மீனாட்சியம்மன் சிலையை காக்க அதை சுற்றி சுவர் எழுப்பப்பட்டது. அது அடுத்து விஜயநகர பேரரசின் புக்கராயரின் மகனான குமார கம்பன் கி.பி.1378ல் அப்போது ஆட்சியில் இருந்த சுல்தானாகிய அலாவூதின் சிக்கந்தர் ஷாவை போரில் வென்றும் கொன்றும் சுல்தான்களின் ஆட்சியை மதுரையில் முடிவுரை எழுதும் வரை அந்த சுவர் இருந்தது.
முகமதிய சுல்தான்களின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்:
மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி.1314-1346) :
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி.1315-1324) :
இவர் முந்தைய பாண்டிய மன்னனுக்கு எந்த வகையில் உறவினர் என்ற விவரம் தெரியவில்லை. மாலிக் காபூர் சென்ற பின்னர் மதுரையை சேரன் பிடிக்க அவனை விரட்டியடித்த பின்னர் இவர் ஆட்சியேறினார். மதுரையை சீர்படுத்தும் நோக்கில் மதுரை கோயில் கிழக்கு கோபுரத்திற்கு இணையாக மேற்கு வாயிலில் ஒர் ஒன்பது நிலைக்கோபுரத்தை எழுப்பினார். மீண்டும் கி.பி.1316ல் குஸ்ரூ கான் டெல்லியிலிருந்து படையெடுத்து வர இவர் மதுரையை விட்டு ஓடிவிட்டார். பின்னர் குஸ்ரூ கான் மீது மறைந்திருந்து தாக்குதல்களை தொடுத்தார். இதனால் மதுரையில் அப்போது பெய்த தொடர் மழையினாலும் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு டெல்லிக்கு குஸ்ரூ கான் ஓடிவிட்டார். இதற்கிடையில் டெல்லியில் கில்ஜி வம்ச ஆட்சி முடிந்து துக்ளக் வம்ச ஆட்சி ஆரம்பிக்க உலூ கான் (முகமது பின் துக்ளக்) மதுரை மீது படையெடுத்து கி.பி.1323ல் கைப்பற்றி மதுரையை சூறையாடினார். எதிர்த்த பராக்கிரம பாண்டியன் தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டதாக சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மாறவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1334-1380) :
மதுரை சுல்தான்கள் வசம் போன பின்னர் தென் தமிழகத்து பகுதியில் இவர் ஆட்சி புரிந்த விவரம் கல்வெட்டுகள் மூலம் புலப்பட்டாலும் எந்த பகுதியை ஆட்சி புரிந்தார் என்ற விவரம் தெரியவில்லை.
மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி.1335-1352) :
கல்வெட்டுகள் மூலம் இவர் ஆண்டது தெரிந்தாலும் எந்த பகுதியை ஆண்டார் என்ற விவரம் தெரியவில்லை.
உதவிய நூல்கள் :
சேர சோழ பாண்டியர் வரலாறு - எஸ். கிருஷ்ணன்
மாலிக் காபூர் - செ. திவான்
பாண்டியர் வரலாறு - மு. இராசமாணிக்கனார்
மத்திய கால இந்தியா - சதீஷ் சந்திரா
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
மொகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்
திருவரங்கன் உலா - வேணுகோபாலன்
மதுரை சுல்தான்கள் - ஆர். சொக்கலிங்கம்
எனது இந்தியா - ஆர். இராமகிருஷ்ணன்
விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்
படங்கள் :
கூகுள் படங்கள்


Comments
Post a Comment