31) தென்காசி பாண்டியர்கள் அரசு
தென்காசி பாண்டியர்கள் (கி.பி.1422- 17ம் நூற்றாண்டின் மத்தியில்)
முகமதிய சுல்தான்களினாலும் அடுத்து வந்த விஜயநகர நாயக்கர்களாலும் தொடர்ந்த படையெடுப்புகள் தொடர் தோல்விகளாலும் பாண்டியர்கள் வலிமை இழந்து பூர்வீக நிலங்கள் தலைநகர் மதுரையை இழந்து தென் தமிழகத்தின் கடைசிக்கே வந்தனர். அவர்களில் சிலர் திருநெல்வேலியை தலைநகராக கொண்டனர் சிலர் தென்காசியை தலைநகராக கொண்டு சிற்றரசர்களாக மாறிபோயினர்.அப்படி தென்காசியை தலைநகராக கொண்டு ஆண்ட முதல் மன்னன் தான் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி.1422-1463) :
தென்காசியை தலைநகராக கொண்டு ஆண்ட முதல் பாண்டியர். சிவபெருமான் காசியில் உள்ள தனது கோவில் அழியும் நிலையில் இருப்பதால் தென்காசியில் கோயில் கட்டுமாறு இவரின் கனவில் வந்து கூற அவ்வாறே தென்காசியில் பெரிய கோவிலை தன் செலவில் கட்ட ஆரம்பித்து தன்னால் முடியவில்லை என்றபோது உதவுபவர்களின் பாதம் வணங்குவேன் என்று சொல்லி தன் உருவத்தை கோயில் வாசலிலையே வரைந்தவர். பெரிய ராஜகோபுரம் ஒன்றையும் எழுப்பினார். கோயிலை விரிவு செய்பவர்கள் பாதத்தில் விழுந்து வணங்குவேன் என்றார். கோயிலை குறித்த வேண்டுகோளாக 13 பாடல்களை இயற்றியுள்ளார். தமிழ் புலமையும் சமஸ்கிருத அறிவையும் உடையவனாக குறிப்பிடப்படுகிறார். தன்னுடைய எதிரிகளை சங்கரன்கோவில், குற்றாலம், முதலைக்குளம், வீரகேரளம்புதூர் ஆகிய இடங்களில் தோற்கடித்தான் என்று மெய்க்கீர்த்தி கூறுகிறது. குற்றால போரில் இவர் சேரனை வென்றாக தளவாய் அக்கிரகாரச் செப்பேடுகள் கூறுகிறது. குடிமக்கள் நலனிற்காக "விஸ்வநாத் பேரேரி" என்ற ஏரியையும் இவர் வெட்டினார்.
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி.1429-1473) :
சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் தம்பியான இவர் பாண்டிய நாட்டிலிருந்து ஆட்சி புரிந்தார். தலைநகரம் எதுவென்ற விவரம் இல்லை. தன் அண்ணன் நிறைவேறாமல் விட்டுச்சென்ற தென்காசி பெரிய கோவிலின் ஒன்பது நிலைக்கோபுரத்தை கட்டி முடித்தார் என்று தென்காசி கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன.
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் (கி.பி.1473-1506) :
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மகன் இவர். பாண்டிய நாட்டில் ஆட்சிபுரிந்தார் என்று கூறப்படுகிறது ஆனால் தலைநகரம் குறிப்பிடப்படவில்லை. இவருக்கு அதிராமபராக்கிரம பாண்டியன் மற்றும் ஆகவராமன் என்று இரு தம்பியர்கள் இருந்ததாக புதுக்கோட்டை செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குலசேகர பாண்டியன் (கி.பி.1479-1499) :
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் ஆட்சிகாலத்திலையே இவரும் ஆட்சிபுரிந்ததாக தெரிகிறது. எந்த பகுதி என்ற விவரம் தெரியவில்லை.
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் (கி.பி.1534-1543) :
இவர் அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் தம்பி ஆகவராமனின் மகன். இவரின் காலத்தில் திருவாங்கூர் மன்னன் உதயமார்த்தாண்டவர்மன் பாண்டிய நாட்டை தாக்கி கைப்பற்றிக் கொண்டான். பின் இவர் விஜயநகர பேரரசரான அச்சுத தேவராயரிடம் உதவி பெற்று பாண்டிய நாட்டை மீட்டார். அச்சுத தேவராயருக்கு தன் மகள் திருமணம் செய்து கொடுத்தார்
பராக்கிரம குலசேகரன் (கி.பி.1543-1552) :
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் மகனான இவர் பாண்டிய நாட்டை அடுத்து ஆண்டார். தனது தந்தையின் காலத்திலையே அவருக்கு துணையாக இருந்ததாகவும் தெரிகிறது.
நெல்வேலி மாறன் சடையவர்மன் (கி.பி.1552-1564) :
பராக்கிரம குலசேகரனுக்கு பின் அவரின் தம்பியான இவர் அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் இரண்டாவது மகனாவார். இவரது கல்வெட்டுகள் இன்றும் தென்காசியில் உள்ளது. புலவர்கள் "வீரவெண்பாமாலை" என்ற நூலில் இவரை பற்றி பாடினார்கள் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் (கி.பி.1564-1604) :
நெல்வேலி மாறனின் மகன் இவர். 40 ஆண்டுகாலம் ஆண்ட இவர் தென்காசி பாண்டியர்களுள் முக்கியமானவர். இவரே சிறந்த தமிழ்ப்புலவர். வடமொழிகளிலும் தமிழிலும் உள்ள நளன் கதைகள் தழுவி நைடதம் என்னும் நூல் இயற்றினார். இவர் வடமொழியில் ஹர்ஷர் எழுதிய நூலை தமிழ்மொழியில் "நைடதம்" என்ற பெயரில் மொழிபெயரத்துள்ளார். சிறுவர்களுக்கு நீதிநெறி கதைகளை சொல்லும் வெற்றி கொற்கை நூலையும் காசி கண்டம், கூர்ம புராணம் மற்றும் இலிங்க புராணம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். கொக்கோ முனிவர் எழுதிய கொக்கோகம் நூலை தமிழில் இவரே இயற்றினார். இவர் நிறைய கோவில்களை கட்டியுள்ளார். தென்காசியில் உள்ள விஷ்ணு கோயிலும் சிவன் கோவிலும் இவர் கட்டியதே. இவருக்கு சீவலமாறன் என்ற பெயரும் உண்டு. 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிதம்பரநாத கவி என்பவர் இயற்றிய சீவலமாறன் கதை நூலின் மூலம் இவர் பற்றி அறியமுடிகிறது.
வரதுங்கராம பாண்டியன் (கி.பி.1588-1612) :
இவர் நெல்வேலி மாற சடையவர்மனின் இரண்டாவது மகனாவார். அதிவீரராம பாண்டியன் ஆட்சிக்காலத்தில் இவர் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வில்லவனை எறிந்தான் வல்லம் வென்றான் என்று இவர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளார். இதிலிருந்து சேரனை வெற்றிகொண்டார் என்பது புலனாகிறது. இவரும் அதிவீரராம பாண்டியரை போலவே தழிழ்புலமை கொண்டவர் தான். பிரமோத்தரா காண்டம், கலித்துறை அந்தாதி, கருவை பதிற்றுபத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி நூல்களை எழுதியுள்ளார்.
வரகுணராம பாண்டியன் (கி.பி.1613-1618) :
வேதவிதிப்படி வேள்விகளை செய்த காரணத்தினால் இவர் குலசேகர சோமாச்சாரியார் என்ற சிறப்பு பெயரை பெற்றவர். இவரும் விஜயநகர பேரரசுக்கு கப்பம் கட்டிய சிற்றரசராகவே இருந்தார்.
கொல்லங்கொண்டான் ( காலம் ???) :
சேர நாட்டின் மீது போர் தொடுத்து கொல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை வென்றதால் இவருக்கு "கொல்லங்கொண்டான்" என்று பெயர் பெற்றதாக சேரன்மா தேவி கல்வெட்டுகள் கூறுகின்றன. இவன் சோழ நாடு, மலை நாடு,கொங்கு நாடு மற்றும் ஈழ நாடுகளையும் வென்றான். போரில் வென்ற பொருட்களை கொண்டு நெல்லையப்பர் கோவிலின் திருசுற்று மாளிகையை கட்டினார். இவரது அரண்மனை இன்றும் இராஜபாளையத்தில் இடிந்த நிலையில் உள்ளது.
உதவிய நூல்கள்:
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா
எனது இந்தியா-எஸ்.ராமகிருஷ்ணன்
திருவரங்கன் உலா -
வேணுகோபாலன்
மதுரை சுல்தான்கள் - S.P.சொக்கலிங்கம்
மொகலாயர்கள் - முகில்
மொகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்
விக்கிபீடியா தகவல்கள்
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்
சேரர்,சோழர்,பாண்டியர் - எஸ்.கிருஷ்ணன்
படங்கள் :
முகில் சிவா

Comments
Post a Comment