33) பிற்கால சோழர்கள் பேரரசு (சாளுக்கிய சோழர் முதலாம் குலோத்துங்கனின் தொடர்ச்சி)
பிற்கால சோழர்கள் (சாளுக்கிய சோழர்கள்) (கி.பி.1070-1279) :
முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) :
முதலாம் இராஜேந்திர சோழனின் தங்கையான குந்தவை கீழை சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும் பிறந்த இராஜ நரேந்திரனுக்கும் தனது மகளான அம்மங்கை தேவியை கி.பி.1022ல் இராஜேந்திர சோழன் மணமுடித்து வைத்தார். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுடைய வாரிசுகளின் ஒருவரே இளவரசனாக இருந்தவர் தான் முதலாம் குலோத்துங்க சோழன். இவர் வீரராஜேந்திரனுடன் கடாரத்திற்கு சென்ற படையில் போரிட்டு வென்ற அனுபவம் கொண்டவரும் கூட. இவரிலிருந்து தான் விஜயாலய சோழனின் நேரிடை வாரிசுகளிடமிருந்த அரசாட்சி சாளுக்கியர் சோழர்கள் என கலப்பு வம்சம் சோழ அரியணையில் அமர்ந்தது.
இவரது ஆட்சிகாலத்தில் உள்நாட்டு குழப்பங்களே மிகுந்திருந்தது. அதை திறமையாக சமாளித்து பூசலின்றி 50 ஆண்டுகாலம் ஆண்டார். இந்த நேரத்தில் தான் 70 ஆண்டுகாலம் சோழர்களின் கையில் இருந்த சிங்களத்தை அதன் மன்னன் விஜயபாகு மீட்டார். உள்நாட்டில் குழப்பங்கள் மிகுந்திருந்ததால் சிங்களத்தை மீட்க படைகளை அனுப்பவில்லை. இவரின் ஆட்சியில் கடைசிகாலங்களில் சேர பாண்டிய நாடுகளில் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியதாகவே இருந்தது. இவர் பெரிய போர்களை இராஜேந்திர சோழன் அளவுக்கு பண்ணாமல் அமைதிக்கொள்கையையே கடைபிடித்ததால் ஆட்சியில் இறுதியில் சோழர்களின் நிறைய பகுதிகள் பேரரசை விட்டு நீங்கின. கங்கபாடி நாட்டை ஹொய்சால அரசனான விஷ்ணுவர்தன் கைப்பற்றி சோழர் பிடியிலிருந்து தன்னாட்சி பெற்றார். கி.பி.1118ல் தனது மகனான வேங்கி பிரதிநிதியான விக்கிரம சோழனை அழைத்து இளவரசு பட்டம் கட்ட அந்த நேரத்தில் சாளுக்கிய விக்கிரமாதித்தன் வேங்கியை கைப்பற்றி கொண்டார். இவர் சீனாவுக்கு வணிக தொடர்புகளுக்காக தூதுவர்களை அனுப்பிவைத்தார். காம்போஜ நாட்டிற்கும் இவரது ஆட்சியில் நல்ல உறவு இருந்தது. தனது நாட்டிலிருந்த சுங்க வரியை நீக்கி உத்தரவு பிறப்பித்ததால் "சுங்கம் தவிர்த்த சோழன்" என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
உள்நாட்டு குழப்பங்களை சரி செய்த பின் சோழர்களின் மீது சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தன் தனது ஆளுகைக்குட்பட்ட சிற்றரசர்கள் உடன் கர்நாடகாவிலுள்ள கோலார் அருகிலுள்ள நங்கிலி என்னுமிடத்தில் நடந்த போரில் சாளுக்கிய படைகளை வென்று துரத்தியடித்தார். பின்னர் பாண்டிய நாட்டில் மீண்டும் எழ முயற்சித்த ஜந்து பாண்டிய அரசர்களை வென்று பாண்டிய நாட்டின் சிற்றரசனாக சடையவர்மன் பராந்தக பாண்டியனுக்கு ஆளுகையை கொடுத்து அவரை தனக்கு அடங்கிய சிற்றரசாக தக்கவைத்து கொண்டார். தெற்கே சேரர்களை தோற்கடித்து விழிஞத்தையும் காந்தளூர்சாலையையும் வென்றார். கி.பி.1096ல் வேங்கியில் இருந்த இவரது மகனான விக்கிரமச்சோழன் தென் கலிங்க மன்னனான பீமன் தன்னாட்சி பெற தலைப்பட்டதால் அவரை வென்று அடக்கினார்.
முதலாம் குலோத்துங்க சோழனுக்கு கி.பி.1112ல் வட கலிங்கத்தை ஆண்ட அனந்தவர்மன் சோழர்களுக்கு திறை செலுத்த மறுத்ததால் இரண்டாம் கலிங்கப்போர் நடந்தது. இந்த நிகழ்வை தான் கலிங்கத்து பரணியாக ஜெயங்கொண்டார் பாடினார். இதே போல் ஒட்டக்கூத்தர் என்ற புலவர் இவரை பாட்டுடைத் தலைவனாக கொண்டு "குலோத்துங்கன் உலா" நூலை இயற்றினார். தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் நல்ல தமிழ் புலமை கொண்டிருந்தார். இசைத்தமிழ் நூல் ஒன்றை இயற்றினார். இது "சோழ குலசேகரன் வகுத்த இசை" என்று ஜெயங்கொண்டார் கலிங்கத்துபரணியில் குறிப்பிட்டுள்ளார். இவரது மனைவிகளுள் ஒருவரான ஏழிசை வல்லபி என்பவர் அந்த இசை நூலை பாடும் திறமை கொண்டவர் என்பதை கலிங்கத்துப்பரணி மூலம் அறியமுடிகிறது. 50 ஆண்டுகால அரசாட்சியுடன் கி.பி.1120ல் இவர் மரணமடைந்தார்.
விக்கிரமச்சோழன் (கி.பி.1120-1133) :
முதலாம் குலோத்துங்க சோழனுக்கு பின் அவரின் நான்காவது மகன் விக்கிரமச்சோழன் ஆட்சிக்கு வந்தார். குலோத்துங்க சோழன் காலத்திலையே வேங்கிககு பொறுப்பாக அரசுபுரிந்தார். பின்னர் வயது முதிர்ந்த காரணத்தால் குலோத்துங்க சோழன் அழைக்கவே அவருடன் கங்கைகொண்ட சோழபுரத்தில் தங்கியிருந்து துணையாக ஆட்சிபுரிந்தார். அந்த நேரத்தில் சாளுக்கிய விக்ரமாதித்தன் கி.பி.1118ல் வேங்கியை கைப்பற்றினார்.பின் கி.பி.1126ல் விக்கிரமாதித்தன் மரணமடைந்த பின் மீண்டும் வேங்கியை கைப்பற்றிக் கொண்டார். அதற்கு பொறுப்பாக தன் மகன் இரண்டாம் குலோத்துங்கனை நியமித்தார். அதே போல் ஹொய்சாளர்களிடம் இழந்த கங்கபாடி நாட்டின் ஒருபகுதியை மீண்டும் கைப்பற்றினார். சிதம்பரம் கோயிலுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறான். கி.பி.1128ல் சோழ சாம்ராஜ்ய வருமானம் அனைத்தையுமே சிதம்பரம் கோயில் விரிவாக்கத்துக்கு செலவிட்டார். சிதம்பரம் கோயிலின் விமானம் மற்றும் நடைபாதை கூரைகளுக்கும் பொன்வேய்ந்து கொடுத்தார். இவர் மக்களால் "தியாகசமுத்திரன்" என்று அழைக்கப்பட்டார். இவருக்கு முக்கோகிலினடிகள் மற்றும் தியாகபாதா என்ற இருமனைவியர்கள் உண்டு. இவனுடைய ஆட்சிகாலத்தில் கி.பி.1125ல் பெருவெள்ளம் ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட பஞ்சத்தை திறம்பட சமாளித்து நாட்டு மக்களை காப்பாற்றினார் என்று இவரது அவையில் புலவராக இருந்த ஒட்டக்கூத்தர் "மூவருலா" வில் இவரை பற்றி புகழ்ந்து எழுதியுள்ளார். கி.பி.1133ல் தனது மகனான இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு இளவரசு பட்டம் கட்டிய இவர் கி.பி.1135ல் மரணமடைந்தார்.
இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி.1133-1150) :
63 நாயன்மார்களின் வரலாற்றை கூறும் பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்) எழுதிய சேக்கிழார் இவரின் தலைமையமைச்சராக இருந்தார். இவரின் காலத்தில் மக்கள் சுகபோக வாழ்வு வாழ்ந்தனர். இவரது நாட்டுமக்கள் புலவர்களுக்கு பொற்காசுகள் கொடுத்து "சீவகசிந்தாமணி"யை ரசித்து கேட்டதால் மனம் வருந்தி தன் அமைச்சரான சேக்கிழாரை பெரியபுராணம் இயற்ற வேண்டியதாலையே பெரியபுராணம் உதயமாயிற்று. இவர் காலத்தில் வாழ்ந்த இராமானுஜரின் வைஷ்ணவ பிரச்சாரங்கள் பிடிக்காததால் இராமானுஜரின் சீடர்களை துன்புறுத்தியதாகவும் இராமானுஜருக்கு பதில் கூரத்தாழ்வார் தன் கண்கள் இழந்த நிகழ்வும் நடந்தது. இதனால் இவரை தான் "கிருமி கண்ட சோழன்" என்று குறிப்பிடுபவர்களும் உண்டு.ஆனால் இவரது காலமும் இராமானுஜரின் காலத்திற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளது.எல்லா அரசர்களை போலவே கங்கை கொண்ட புரத்தில் வாழாமல் சிதம்பரத்திலையே வாழ்ந்தார். இவருக்கு 2 இராணிகள். ஓருவர் தியாகவல்லி மற்றொருவர் மலையமான் வம்சத்து இளவரசி முக்கோக்கிழானடிகள். கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள "அநபாய சோழன்" இவரே. கி.பி.1146ல் தன் மகன் இரண்டாம் ராஜராஜனுக்கு இளவரசு சூட்டிய இவர் கி.பி.1150ல் மறைந்தார்.
இரண்டாம் இராஜராஜன் (கி.பி.1150-1163) :
இரண்டாம் குலோத்துங்கனின் மறைவுக்கு பின் ஆட்சிக்கு வந்தாலும் கி.பி.1146 முதலே இளவரசாக ஆட்சி நடத்தினார். இவருக்கு அவனிமுழுதுடையாள்,புவனமுழுதுடையாள் மற்றும் உலகுடை முக்கோகிலம் என்று மூன்று அரசிகள் இருந்தனர். இராஜேந்திரன் கட்டியாண்ட சோழ சாம்ராஜ்யம் பலவீனமடைய ஆரம்பித்தது. சேர பாண்டிய வேங்கி நாடுகள் சோழர்களின் வசமிருந்தாலும் ஸ்திரதன்மையின்றி பலமின்றி இருந்தது. இவர் "திரிபுவன சக்கரவர்த்தி"என்று அழைக்கப்பட்டதிலிருந்து சாம்ராஜ்ய அரசராக இருந்தார் என்பதை அறியமுடிகின்றது. ஆனாலும் இவரது ஆட்சியில் போர்கள் எதுவுமில்லாமல் அமைதியாகவே காலம் கழிந்தது. தன்னுடைய தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து பழையாறைக்கே திரும்ப மாற்றினார். அந்நகரை புதுப்பித்து "ராஜராஜபுரம்" என்று பெயர் சூட்டினார். பழையாறைக்கு பக்கத்தில் உள்ள தாராசுரம் என்ற சிற்ப வேலைப்பாடு அமைந்த கோயிலை இவர் ஆட்சியில் தான் கட்டினார். இவர் சிவ பக்தியுடையவராக இருந்தாலும் தனது தந்தையின் காலத்தில் வைணவர்களுக்கு நேர்ந்த துன்பத்திற்கு பரிகாரமாக அவர்களுக்கு ஆதரவு அளித்தார் என்பதால் "விழுந்த அரி சமயத்தை மீளவெடுத்தனன்" என்று இவரது மெய்க்கீர்த்தி மூலம் அறியமுடிகிறது. இவரது ஆட்சிகாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட அடைப்பால் காவிரியில் நீர் தடைப்பட்டதை அடுத்து மலையை வெட்டி காவிரிக்கு வழி கண்டார். கி.பி.1163 மறையும் நேரத்தில் இவரது மகன்களுக்கு 1,2 வயதே இருந்ததால் உறவினரான எதிரிலிப்பெருமாள் என்பவருக்கு முடிசூட்டி விட்டு மறைந்தார்.
இரண்டாம் இராஜாதிராஜன் (கி.பி.1163-1178) :
இரண்டாம் இராஜராஜன் உயிருடன் இருந்த காலத்திலையே பொறுப்புக்கு வந்ததால் அரசுக்கு உரிமையுடையவர்கள் கலகங்கள் செய்தனர். இதனால் தலைமை அமைச்சர் பெருமாள் நம்பி பல்லவராயன் இரண்டாம் ராஜராஜனுடைய சிறு குழந்தைகளை தம் பொறுப்பில் வைத்து காப்பாற்றினார். இவரது ஆட்சிகாலத்தில் மதுரையை ஆண்ட பராக்கிரம பாண்டியனின் தாயாதியான குலசேகர பாண்டியன் மதுரையை தாக்கி கைப்பற்றி பராக்கிரம பாண்டியனை கொன்றார். பராக்கிரம பாண்டியனின் மகனான வீர பாண்டியன் தப்பி இலங்கைக்கு ஒடி இலங்கை மன்னன் பராக்கிரம பாகுவிடம் உதவி கேட்க அவரது படைகள் மதுரையை தாக்கியும் ராமேஸ்வரம் கோயிலை அழித்தும் பூஜைகளை நிறுத்தியும் பல அழிவுகள் செய்து குலசேகர பாண்டியனை நாட்டிலிருந்து விரட்ட அவர் இரண்டாம் ராஜாதிராஜ சோழனிடம் அடைக்கலம் புகுந்தார். மதுரையில் வீரபாண்டியன் முடிசூட சோழர் அனுப்பிய படைகள் இலங்கையின் படைகளை தோற்கடித்து அதன் தளபதிகள் இருவரை கொன்று அரசை குலசேகரனுக்கு மீண்டும் அளித்தன. இதனால் பராக்கிரம பாகு மீண்டும் படை அனுப்ப முனைய அவரை அடக்க ஈழநாட்டிற்கு சோழ படைகள் சென்று அவர்களை வென்று பெரும் செல்வத்துடன் ஊர் திரும்பியது. இதன் பின்னர் பராக்கிரம பாகுவுடன் குலசேகரன் நட்பு கொண்டு சோழர்களுக்கு ஆதரவானவர்களை பாண்டிய நாட்டிலிருந்து வெளியேற்ற கோபம் அடைந்த இவர் மதுரையை தாக்கி கைப்பற்றி பாண்டிய அரசை மீண்டும் வீரபாண்டியனுக்கே அளித்தார். அதிலிருந்து வீரபாண்டியன் சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசாகவே இருந்தார். இதனால் "மதுரையும் ஈழமும் கொண்ட கோ ராஜகேசரி வர்மன்" என்ற பெயரை இவர் சூடிக் கொண்டார். இவர் அரசுக்கு உரிமையில்லாதவராக இருந்ததால் இரண்டாம் ராஜராஜன் மகனான மூன்றாம் குலோத்துங்கனிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திரத்தில் தன் இறுதி நாட்களை கழித்தார்.
மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178-1218) :
இவரை இரண்டாம் ராஜாதிராஜன் தம்பி என்றும் வேறொரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறினாலும் அது உண்மையில்லை. இவர் இரண்டாம் ராஜராஜன் கட்டிய தாராசுரம் கோயில் தன் தந்தையால் அமைக்கப்பட்டது என்று குடுமியான் மலை கல்வெட்டு ஒன்றில் குறிப்பிட்டதிலிருந்து இவர் இரண்டாம் ராஜராஜனின் மகனே என்று அறிய முடிகிறது.
இவர் காலத்தில் வாழ்ந்த கம்பர் வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழ்பண்பாட்டுக்கு ஏற்றவாறு தமிழில் கம்பராமாயணம் எழுதினார். பவனந்தியின் நன்னூல் மற்றும் பலர் இயற்றிய களிப்பொருபது நூலும் இவரின் காலத்தே இயற்றப்பட்டது. ஆனால் இவர் இரண்டாம் இராஜாதி ராஜனுக்கு பின் அரியணை ஏறினார். இவர் திருவிடைமருதூர்க்கு அருகில் திரிபுவன வீரேச்சுரம் என்ற கோயிலை கட்டினார். இதை தவிர தில்லை, திருவாரூர், காஞ்சி மற்றும் திருவிடைமருதூர் கோவில்களில் திருப்பணிகள் செய்தார்.
இவரின் காலத்தில் மீண்டும் வீரபாண்டியன் இலங்கை மன்னன் பராக்கிரமபாகுவுடன் நட்பு கொண்டு சோழர்களை எதிர்க்க முனைந்தார். இதனால் மூன்றாம் குலோத்துங்கன் படையுடன் சென்று மதுரையிலிருந்து வீரபாண்டியனை துரத்தி குலசேகர பாண்டியன் மகனான விக்கிரமபாண்டியனுக்கு அரசை அளித்தார். வீரபாண்டியன் சேரர் உதவி கொண்டு மதுரை நோக்கி வர அவரை எதிர்கொண்டு வெற்றி பெற்று வீரபாண்டியன் மனைவியை தனது அந்தப்புரத்திற்கு கொண்டு சென்றார். இது வீரபாண்டியனை கேவலப்படுத்தும் செயலாக இருக்கும் என்ற எண்ணத்தில் செய்யவே சேரனும் வீரபாண்டியனும் மூன்றாம் குலோத்துங்கனிடம் மன்னிப்பு கேட்கவே மன்னித்து அவர்களுக்கு உடைமையானவற்றை திரும்ப அளித்தார். இலங்கையின் மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டார். காகதீய அரசு காஞ்சிபுரத்தை ஆண்ட சிற்றரசருக்கு தூண்டிவிட்டு கப்பம் கட்டாமல் செய்தது. அதனால் காஞ்சியின் சிற்றரசர் மேல் போர்தெடுத்து காகதீய அரசை காஞ்சியிலிருந்து விரட்டினார். பாண்டிய நாட்டில் குழப்பங்கள் மீண்டும் தோன்றின. விக்கிரம பாண்டியன் மகனான சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி.1190ல் ஆட்சி பொறுப்பேற்றதும் தன்னாட்சியை விரும்பி சோழர்களுக்கு திறைப்பணம் செலுத்த மறுக்கவே மீண்டும் சோழ பாண்டிய படைகள் மோதின. இதில் மூன்றாம் குலோத்துங்கன் வெற்றி பெற்று குலசேகர பாண்டியன் மற்றும் அவன் தம்பியை விரட்டியடித்து மதுரையில் நுழைந்து அந்நகரை சூறையாடினர். அரண்மணை இடிக்கப்பட்டது. மதுரையில் விஜயாபிஷேகம் செய்து "சோழ பாண்டியன்" என்ற பட்டத்தை சூடிக் கொண்டார். பின்னர் சிலகாலம் கழித்து பாண்டிய நாட்டை குலசேகரனுக்கே கொடுத்து சோழர்களுக்கு அடங்கி ஆட்சி புரிய செய்தார். இதே போல் கொங்கர்களும் கப்பம் கட்டாமல் தவிர்த்தை அறிந்து பாண்டியர்களுக்கு பின் அவர்களுடன் போரிட்டு அடிபணிய வைத்தார். கி.பி.1216ல் தன் மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டி விட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கி.பி.1218ல் மறைந்தார்.
மூன்றாம் இராஜராஜன் (கி.பி.1218-1256) :
இவர் ஆட்சியேறிய சமயம் வடகிழக்கில் போசளர்களும் (ஹெய்சாளர்கள்) வடக்கில் தெலுங்கு சோழர்களும் வலுப்பெற்றிருந்தனர்.பாண்டிய மன்னனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திலையே சுயாட்சிக்காக கிளர்ச்சிகளை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தாலும் வெற்றி பெறமுடியவில்லை. மூன்றாம் குலோத்துங்கனின் மறைவுக்கு பின் மதுரையை இவரின் ஆட்சியில் மீட்டுக் கொண்டார். இவர் திருச்சி தஞ்சாவூர் சிதம்பரம் வரை வந்து போரிட்டு வென்று சோழர்களை தனக்கு அடங்கிய சிற்றரசாக மாற்றினார். பின்னர் போசளர்களின் உதவி கொண்டதால் பாண்டியனுக்கு திறைப்பணம் செலுத்த மறுக்கவே மீண்டும் கி.பி.1231ல் மீண்டும் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து பெருத்த அழிவுகளை ஏற்படுத்தினார். பாண்டியர்களை சமாளிக்க முடியாமல் சோழன் தப்பியோட சோழர்களின் தலைநகருக்கு சென்ற சுந்தர பாண்டியன் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் செய்து கொண்டார். வட திசை நோக்கி தப்பியோடிய மூன்றாம் ராஜராஜ சோழனை பல்லவ மன்னர் கோப்பெருஞ்சிங்கன் சிறைப்பிடிக்க போசள மன்னர் வீர நரசிம்மன் படைகளுடன் வந்து சோழ மன்னனை சிறை மீட்டு திரும்பவும் சோழ அரசை அவருக்கு மீட்டுக் கொடுத்தார். மூன்றாம் குலோத்துங்கனின் திறமை அவ்வளவாக இல்லை. தோல்விகள் மேல் தோல்விகள் நெருக்கியதால் நாட்டில் உள்நாட்டு பிரச்சினைகள் மலிந்தன. நாட்டில் துரோகங்களும் குழப்பங்களும் அதிகரிக்கவே தனது மகனான மூன்றாம் இராஜேந்திரனிடம் கி.பி.1242ல் இளவரசாக ஆக்கியும் பின்னர் கி.பி.1246லையே ஆட்சியை ஒப்படைத்து ஒய்வெடுத்தார். கி.பி.1256 வரை வாழ்ந்து மறைந்தார்.
மூன்றாம் இராஜேந்திரன் (கி.பி.1246-1279) :
மூன்றாம் இராஜராஜனுக்கு பின் அரியணை ஏறிய அவரின் மகன் இவர். தந்தையை போலல்லாது மிகுந்த திறமை படைத்தவர். தந்தை இழந்திருந்த பாண்டிய நாட்டை மீண்டும் மீட்டெடுத்தார். தன் பாட்டனார் மூன்றாம் குலோத்துங்கனை போலவே போர்களில் விருப்பப்பட்டு நாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டவர். அதனாலையே குலோத்துங்கன் இராஜேந்திரன் என்று அழைக்கப்பட்டவர். ஆனாலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனை எதிர்த்து வெற்றி பெறமுடியவில்லை ஆனாலும் அவருக்கு பின் வந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியரை வென்று தன் அதிகாரத்தை நிலைநாட்டினார். தனக்கு கப்பம் கட்டும் சிற்றரசாக்கினார். போசளர்களின் நட்பை இழந்த பின்னர் வீர நரசிம்மனுக்கு பின்னர் வந்த வீர சோமேஸ்வரனோடு நிறைய போர்கள் நடந்தது. வீர சோமேஸ்வரன் பாண்டியர் நாட்டை இரண்டாம் மாறவர்மன் சுந்தபாண்டியனுக்கே திரும்ப கொடுத்ததால் அவரை "மாமடி" என்று இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தனது கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் மூன்றாம் ராஜேந்திரன் தொண்டை நாடு சென்று மாவிலங்கை என்ற பகுதியை வென்றார். இதன் பின்னர் மாவீரனான சடையவர்மன் சுந்தரபாண்டியன் மதுரை அரசனாக பொறுப்பேற்க போசளர்கள் சோழர்களுடன் மீண்டும் நட்பு பாராட்டினர். பின்னர் ஆட்சிக்கு வந்த முதலாம் சடையவர்மன்
சுந்தரபாண்டியனுடன் கி.பி.1257ல் நடந்த போரில் தோற்று போனார். இவர் மட்டுமல்லாது இவர்களுக்கு உதவிக்கு வரும் போசள வீர சோமேஸ்வரனையும் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வென்று விரட்டியடித்தார். இதன் பின்னர் மூன்றாம் இராஜேந்திரன் சோழர்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்டும் சிற்றரசாக மாறினார். இவருக்கு புதல்வர்கள் யாரும் இருந்ததாக தெரியவில்லை. இதனால் சோழர்களின் ஆட்சி இவரது ஆட்சி பொறுப்பேற்ற 33ம் ஆண்டிலையே கி.பி. 1279ல் மறைந்தவுடன் சோழ நாடு பாண்டிய நாட்டோடு இணைந்தது. அத்துடன் சோழ பேரரசும் முடிவுக்கு வந்தது.400 ஆண்டுகால பிற்கால சோழர்கள் வரலாற்றை முடித்து வைத்து பாண்டிய சாம்ராஜ்யத்தின் எழுச்சியை சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆரம்பித்து வைத்தார்.
உதவிய நூல்கள்:
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்
ராஜராஜ சோழன் - ச.ந.கண்ணன்
உடையார் - பாலகுமாரன்
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா - காலச்சக்கரம் நரசிம்மா
விக்கிபீடியா தகவல்கள்
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்
சேரர் சோழர் பாண்டியர் - எஸ்.கிருஷ்ணன்
முதற் குலோத்துங்க சோழன் - சதாசிவ பண்டாரத்தார்
Comments
Post a Comment