34) பிற்கால சேர பேரரசு

 பிற்கால சேரர்கள் (கி.பி.598-1122)

சங்ககால சேரர்களின் எல்லைகள் கொங்கணத்தின் எல்லைகளாகவே இருந்தது. ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளித்ததால் தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாக போயின. பக்தி கால சேரர்கள் ஆட்சி முடிந்தவுடன் கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தை தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.

கேரளம் சோழதேசத்திற்கு மேற்கிலும் அரபிக் கடலும் தென்கடலும் கூடுமிடத்திலுள்ள கன்னியாகுமரி முதல் வடபாகமாக நீண்டு கர்நாடகதேசத்திற்கு தெற்கிலும் அகன்று பரவியிருந்தது. கேரளம் வட கேரளம் தென் கேரளம் என இருபிரிவுகளாகவும் தென் கேரளத்திற்கு அனந்தபுரம் என்றும் வட கேரளத்திற்கு கொச்சி என்றும் பெயர் வழங்கி வருகிறது.

சேரமான் மாக்கோதையார் சேர நாட்டை 12 பிரிவுகளாக பிரித்து 12 குறுநில மன்னர்களுக்கு பிரித்து கொடுத்ததாகவும் செய்திகள் உள்ளது. அந்த 12 பிரிவுகள் பின்வருமாறு:

1) நெடியிருப்பு - கோழிக்கோடு

2) ஆரங்கோடு - வள்ளுவநாடு

3) பெரும்படப்பு - கொச்சி

4) திருப்பாப்பூர் - திருவிதாங்கூர்

5) குறும்பியாதிரி - குறும்ப நாடு

6) புறநாட்டுக்கரை - கோட்டயம்

7) கோளத்திரி - சிக்கல்

8) போர்ளாத்திரி - கடத்த நாடு

9) தரூர் - பாலக்காடு

10) பாப்புக்கோயில் - பெய்ப்பூர்

11) பரப்புக்கோயில் - பரப்ப நாடு

12) ஒன்றில் - பரப்ப நாட்டின் ஒரு பகுதி.

சேர மன்னர்களின் வரிசை:

சேரமான் மாக்கோதையார் (கி.பி.598-629) :

இடைப்பட்ட 95 வருடங்களின் விவரம் தெரியவில்லை. நாடுகளை பிரித்து கொடுத்ததால் அந்த விவரங்கள் தெரியவரவில்லை‌

சேரமான் பெருமாள் நாயனார் (கி.பி.724-756) :

சேரமான் பெருமாள் என்பவர் சைவ சமயத்தவர்களால் மிகவும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் சேர நாட்டை மகோதை என்னும் ஊரில் இருந்து கொண்டு 32 ஆண்டுகள் ஆண்டவர். இவர் சிவ பூசையின் போது தில்லை நடராஜ பெருமானின் மணியோசையை கேட்கும் பேறு பெற்றிருந்ததால் இவருக்கு கழறிற்று அறிவார் என்று போற்றப்பட்டார் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவர் சுந்தரரை காண திருவாரூர் சென்று அங்கிருந்து இருவரும் புறப்பட்டு பல சிவஸ்தலங்களுக்கு சென்றதாகவும் பாண்டிய நாட்டில் பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் இவர்களை வரவேற்றதாகவும் குறிப்புகள் உள்ளது. இவர் ராஜசிம்ம பல்லவனின் சம காலத்தவர். ஆதி சங்கரரும் இவரது சம காலத்தில் வாழ்ந்தவர் தான். சிவானந்த லஹரியில் ஆதிசங்கரர் "உலகத்தின் அரசர் இராஜசேகரர்" என்று குறிப்பிடுவது இவரை தான் என்றும் கூறுகிறார்கள். ஶ்ரீமத் சங்கர திக்விஜயம் நூலில் இவர் ஆதிசங்கரரை சந்தித்ததாகவும் அவரிடம் மூன்று நாடகங்களை படித்ததாகவும் கூறுகிறது. இவரது ஆட்சிகாலத்தில் கேரளத்தில் பல சிவன் கோயில்கள் கட்டப்பட்டன.

சேரமான் ஐயனாரிதனார்  (கி.பி.756-800) :

இவர் மன்னனாக இருந்தாலும் "புறப்பொருள் வெண்பாமாலை" என்னும் நூலையும் இயற்றியுள்ளார். இவரின் பெயருக்கு ஐயங்கள் தீர்க்கும் ஆசிரியர் என்று பொருள். இவர் சைவராக இருந்தாலும் திருமாலை பற்றியும் பாடியுள்ளார். தொல்காப்பியர் மற்றும் பலர் இயற்றிய "பன்னிரு படலம்" நூலை நன்கு அறிந்தவர். இவரது வெண்பாக்களின் மூலம் இவர் சகுனத்தில் நம்பிக்கை உள்ளவர். மறப்பண்பு உடையவர் மற்றும் அறநெறிகள் அறிந்தவர் என்பதை உணரலாம்.

குலசேகர வர்மன் (கி.பி.800-820) :

இவர் சேர நாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவர். இவர் 12 ஆழ்வார்களுள் ஒருவராக போற்றப்படுகிறார். இவர் கரூவூர் வஞ்சியில் (இன்றைய கரூர்) பிறந்தார். இவரும் இவரது மகளான சேரகுலவல்லி தாயாரும் இராமனையும் அரங்கனையும் போற்றி வணங்கினர். இவருக்கு இறைவன் காட்சியளித்ததால் இன்பமும் செல்வமும் அரசபதவியும் துறந்து துறவு நிலையை எய்தினார். இவர் தமிழில் "பெருமாள் திருமொழி" என்ற நூலையும் சமஸ்கிருதத்தில் "முகுந்த மாலை" நூலையும் இயற்றியவர். திருமலை திருப்பதியில் இவர் பெயரில் "குலசேகரப் படி" என்று கருவறையின் வாயிற்படிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ராஜசேகர வர்மன் (கி.பி.820-844) :

இந்த அரசனும் சேரமான் பெருமாளும் ஒருவரே என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் கல்வெட்டு ஆதாரங்களின் படி இவர் கி.பி.844 வரை ஆண்ட விவரங்கள் உள்ளதால் இவர் சேரமான் பெருமான் இல்லை என்று தெளிவாகிறது.

ஸ்தாணு ரவிவர்மன் குலசேகரன் (கி.பி.844-884) :

இராஜசேகர வர்மனுக்கு பிறகு ஆட்சியேறிய இவர் அவரின் புதல்வர். தந்தையை போலவே சிவ பக்தராக விளங்கினார்.இவர் சமய வேற்றுமை கருதாத மணமுடையவராக விளங்கினார். இவர் காலத்தில் தான் சிரியன் கிறிஸ்தவர்களுக்கு தேவாலயம் கட்டிக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. கொடுங்களூரில் உள்ள புனித தாமஸ் தேவாலயமும் இவரது ஆட்சியில் தான் கட்டப்பட்டது. தரிசப்பள்ளி சாசனம், தில்லை ஸ்தானம் கோவிலில் உள்ள கல்வெட்டு மற்றும் திருநந்திக்கரை கல்வெட்டு வாயிலாக இவரின் காலத்தை அறிய முடிகிறது. இவரது அவையில் இருந்த வானியலாளர் சங்கரநாராயணன் "லகுபாஸ்கரீயம்" என்று எழுதிய நூலின் உரையில் இவரது ஆட்சியாண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. தரிசப்பள்ளி என்னுமிடத்தில் சிரியன் கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களுக்கு தேவாலயம் அமைக்க அனுமதியும் மானியமும் கொடுத்த விவரம் கொல்லம் சிரியன் கிறிஸ்தவ செப்பேடுகளில் உள்ளது. வேணாட்டின் ஆட்சியாளரான ஐயேன் அடிகள் இவரின் முன்னிலையில் சாசனம் எழுதி கொடுத்திருக்கிறார். இவர் முதலாம் ஆதித்த சோழனின் சம காலத்தவர். பல்லவர்களுக்கு எதிரான போரில் ஆதித்ய சோழனுக்கு தன் யானை படைகளை அனுப்பி உதவியதாக தில்லை ஸ்தானத்தில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. வான சாஸ்திரம் உள்ளிட்ட பல சாஸ்திரங்களில் இவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார். மகோதையபுரத்தில் வானியல் ஆராய்ச்சி ஆய்வகம் அமைத்திருந்தார். மகோதயபுரத்தை சீரமைத்து சிறந்த கோட்டையாக ஆக்கினார். சிறந்த கல்வி நிலையங்கள் நிறைந்த இடமாகவும் சிறந்த வாணிக தலமாகவும் மகோதை (கொடுங்களூர்) இவர் காலத்தில் இருந்தது.

கோதை ரவி விஜயராகவன் (கி.பி.885-913) :

 ஸ்தாணு ரவிவர்மனுக்கு ராமவர்மன் என்ற மகன் உண்டு. அவருக்கு இள வயதிலையே இளவரசு பட்டம் கட்டப்பட்டது. ஆனால் அவர் இள வயதிலையே மறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால் ஸ்தாணு ரவிக்கு பிறகு அவரது மருமகனான இவரே ஆட்சியேறினார். விஜயராகவன் மகளான ரவி நீலி என்ற கோகிழான் அடிகள் என்பவரை தான் பராந்தக சோழர் மணம் முடித்தார்.

கோதை கேரள கேசரி (கி.பி.913-943) :

கோதை ரவியின் ஆட்சிக்கு பின்னர் ஆட்சியேறிய இவரை பற்றி திருக்காக்கரா என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டு மூலமே அறிய முடிகிறது. இவருடைய ஆட்சி காலத்தில் பராந்தக சோழன் மதுரையை வென்று குமரி வரை சோழர்களின் ஆட்சியை விரிவுபடுத்தினார். ஆய் குல அரசர்கள் மீது போர் தொடுத்து வெற்றி கொள்ளவே ஆய் வேளிர்களின் வட பகுதி சேரர்கள் வசம் வந்தது. இதனால் சேரர்களின் ஆட்சி பகுதி விரிவடைந்தது.

இந்து கோதை வர்மன் (கி.பி.943-962) :

அடுத்ததாக வந்த இவரின் ஆட்சிகாலத்தை பற்றி பலியம் செப்பேடுகள் மற்றும் தளி, திருவன்வந்தூர் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. இவரது ஆட்சியில் கோக்கண்டன் வீரநாராயணன், கோக்கொண்டன் ரவி என்ற இரு கொங்கு சிற்றரசர்களை பராந்தக சோழர் வென்று கொங்கு நாட்டை சோழ நாட்டுடன் இணைத்தார். இதனால் சேர-சோழர்கள் உறவில் விரிசல் விழுந்தது. இதை தொடர்ந்து சேரர்கள் பாண்டியர்களுடன் நட்புறவு கொள்ள ஆரம்பிக்க இதை எதிர்த்து சேரர்களுடன் போர் புரிய வந்த கண்டாராதித்த சோழர் இந்த போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதனால் தான் அவரை "மேற்கு எழுந்தருளிய தேவர்" என்று அழைக்கப்பட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் போரில் இறந்திருந்தால் துஞ்சிய தேவர் என்று தான் அழைக்கப்பட்டு இருப்பார். அதனால் அவர் போரில் இறக்கவில்லை என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார்.

முதலாம் பாஸ்கர ரவிவர்மன் (கி.பி.962-1018) :

இந்து கோதை வர்மனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த இவரின் முழு பெயர் பாஸ்கர ரவி வர்ம மனுகுலாதித்யா என்பதாகும். இவர் 60 ஆண்டுகள் ஆண்டாரா என்றும் இல்லையில்லை ஒரே பெயரில் அடுத்தடுத்து இரு மன்னர்கள் ஆண்டார்கள் என்று சர்ச்சை கருத்துகளும் உண்டு. கி.பி.1000ல் கேரளாவில் கால்பதித்து வணிகத்துறையில் முக்கியமான யூதர்களின் சமூகத்திற்கு இவர் ஜோசப் ரப்பான் என்பவருக்கு யூத சாசனம் எழுதி கொடுத்தார். இவரது காலத்தில் தான் ராஜராஜ சோழர் விழிஞம் துறைமுகத்தை தாக்கி அழித்தார். பின்னர் காந்தளூர்ச்சாலை போரில் ஆய் அரசர்களை ராஜராஜன் அழித்த பிறகு இவருக்கு தூது அனுப்ப அந்த தூதுவரை இவர் சிறை வைத்தார். தூதுவரை மீட்க ராஜராஜன் படையெடுத்து வந்து இவரை தோற்கடித்து மீட்டார். இந்நிகழ்வு கலிங்கத்துப்பரணி மற்றும் மூவருலாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தோல்வி சேர நாட்டிற்கு மிகுந்த பலவீனத்தை அளித்தது.

இரண்டாம் பாஸ்கர ரவிவர்மன் (கி.பி.1018-1021) :

முதலாம் பாஸ்கர ரவிவர்மன் காலத்திலையே கி.பி.978-79ல் இளவரசு பட்டம் சூட்டப்பட்ட இவர் அவருக்கு பின்னர் அரியணை ஏறினார். இவர் அரியணை ஏறியவுடன் இராஜேந்திர சோழன் சேர நாட்டின் மீது படையெடுத்து பெருத்த அழிவுகளை ஏற்படுத்தி சேர மன்னன் சூடும் பரம்பரை மணிமுடியையும் அவர்களின் செங்கதிர்மாலையையும் கைப்பற்றி கொண்டார். பின்னர் சாந்திம தீவில் உள்ள பரசுராமன் செம்பொன் முடியையும் கைப்பற்றி கொண்டார். இதனால் சிதறுண்ட சேர நாட்டை குறுநில மன்னர்கள் தலையெடுத்து ஆள முற்பட்டனர்.

வீர கேரளா (கி.பி.1021-1028) ;

இரண்டாம் பாஸ்கர ரவி வர்மனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் இவர். இவரது காலத்தில் பல்வேறு மன்னர்கள் அவர்களாகவே சுயாட்சியாக தங்களது பகுதிகளை ஆள தலைப்பட்டனர். சோழர்களுக்கு வரிப்பணம் செலுத்துவதை நிறுத்தி சுயாட்சியாக ஆள தலைப்பட்டதால் இராஜேந்திர சோழனின் மகனான ராஜாதிராஜன் சேர நாட்டில் புகுந்து வேணாட்டு அரசனோடு போரிட்டு அவனை கொன்றான். அதன்பின் கூபக நாட்டு அரசனையும் எலிமலைக்கு அருகிலுள்ள ராமகுட நாட்டு மன்னனையும் போரில் வென்று பின்னர் சேர நாட்டில் தலைப்பகுதியில் ஆட்சி செய்த வீரகேரளனுடன் போரிட்டு அவரை தோற்கடித்து சிறைபிடித்தான். பின்னர் வீர கேரளனை யானையில் காலில் இடறச் செய்து கொன்று விட்டான்.

இராஜசிம்மன் (கி.பி.1028-1043) :

வீரகேரளனுக்கு பின்னர் ஆட்சிக்கு சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசரனாகவே காலம் கழித்தார். நாட்டில் அவ்வப்போது உள்நாட்டு கலகங்கள் ஏற்பட்டாலும் மொத்தத்தில் இவர் ஆட்சிகாலம் அமைதியாகவே கழிந்தது.  அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவிலில் காணப்பட்ட இவரது கல்வெட்டு மூலம் ராஜேந்திர சோழ விண்ணகரம் என்ற கோயிலை ராஜசிம்மன் கட்டியதாக தெரிகின்றது. சமஸ்கிருதத்தில் கவிபாடும் வல்லமை கொண்ட இவர் சில சமஸ்கிருத நாடகங்களையும் எழுதியிருக்கிறார்.

மூன்றாம் பாஸ்கர ரவிவர்மன் (கி.பி.1043-1082) :

ராஜசிம்மனை தொடர்ந்து ஆட்சியேறிய மூன்றாம் பாஸ்கர வர்மன் தன் காலத்தில் படை வலிமையை உயர்த்தினார். களறி விளையாட்டும் "சாவேறு படை" என்ற தற்கொலை படையும் இவருடைய காலத்தில் தான் உருவாகியது. ராஜேந்திர சோழனின் மகனான வீரராஜேந்திரன் ஆண் வாரிசின்றி மறைவை தொடர்ந்து சோழ அரியணையில் யார் அமர்வார்கள்? என்ற குழப்பமான காலகட்டத்தில் இவர் சோழர்களின் பிடியிலிருந்து சுயாட்சியாய் நாட்டை ஆள முற்பட்டார். பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் அரியணையில் ஏறியவுடன் சேர நாட்டின் மீது படையெடுத்து விழிஞம் துறைமுகத்தை அழித்தார். காந்தளூர் சாலையில் இருந்த சேர நாட்டு கப்பல்களை கொளுத்தப்பட்டது. கோட்டாறு என்ற இடத்தில் நடந்த போரில் முக்கியமான சேர நாட்டு தளபதிகள் கொல்லப்பட்டனர். சேர அரசனான மூன்றாம் பாஸ்கர ரவி வர்மனும் இந்த போரில் மறைந்தார்.

ரவி ராம வர்மன் (கி.பி.1082-1090) :

மூன்றாம் பாஸ்கர ரவி வர்மன் மறைவுக்கு பின்னர்  குலோத்துங்க சோழன் கோட்டாற்றில் சோழ படைகளை நிறுத்தி வைத்து விட்டு சென்று விட்டார். சோழருக்கு அடங்கிய சிற்றரசராக ரவி ராம வர்மன் ஆட்சியில் அமர்ந்தார். சோழர்களின் வெறித்தனமாக தாக்குதலால் சேர நாடு நிலைகுலைந்து போனதால் இவரால் தன்னாட்சி செய்ய முயன்ற சிற்றரசர்களை இவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ராம வர்மா குலசேகரன் (கி.பி.1090-1122) :

ரவி ராம வர்மனுக்கு பிறகு ஆட்சியே யின் இவரே கடைசி சேர அரசர் ஆவார். போர்களால் சீர்கெட்டு போயிருந்த நாட்டின் நிர்வாகத்தை இவர் சரிப்படுத்தினார். நாட்டில் தனியரசு நடத்திய சிற்றரசர்களை சமாளித்து கோட்டாற்றில் நிலையாக நிறுத்தி வைக்கப்பட்ட சோழ படைகளை தற்கொலை படைகளை கொண்டு நாட்டை விட்டு துரத்தி அடித்தார். மகோதை நகரத்திலிருந்து தலைநகரை கொல்லத்திற்கு மாற்றினார். இவருக்கு தொல்லை கொடுத்து கொண்டிருந்த "நாலு தளி" நம்பூதிரிகள் சபையை திறம்பட சமாளித்து அவர்களின் தளி கோயிலில் இருந்தே பல உத்தரவுகளை பிறப்பித்தார்.  பிற்கால சேர அரசர்கள் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்த கடைசி அரசனான ராமவர்ம குலசேகரன் இஸ்லாம் மதத்தை தழுவி மெக்கா சென்று மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒளவை.துரைசாமி பிள்ளை உட்பட பல ஆய்வாளர்கள் இதை மறுத்துள்ளனர். கொல்லத்தில் உள்ள ராமேஸ்வரநாதர் கல்வெட்டிலிருந்து இவர் பக்திமானாக இருந்திருந்தார் என்று அறியமுடிகிறது. ஏதோ காரணத்தால் மனம் வருந்தி சேர அரசை 17 பிரிவுகளாக பிரித்து கொடுத்து விட்டு எங்கோ சென்று விட்டார் என்றும் இமயமலைக்கு தவம் செய்து வாழ்நாளை கழிக்க சென்று விட்டார் என்றும் இருவேறு கருத்துகள் உலாவுகின்றன. 17 சுயாட்சி பெற்ற அரசுகளும் தங்களுக்குள் எல்லைகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் தங்களுக்குள் சண்டையிட கூடாது என்றும் வரையறுக்கப்பட்டது. இப்படியாக மையமான ஒரு அரசு இல்லாமல் 17 சுயாட்சி பெற்ற அரசுகளாக சேர நாடு சிதறி போயிற்று. வேணாட்டை ஆண்ட அரசர்கள் தங்களை சேரர்கள் என்றும் பின்னர் அழைத்துக்கொண்டனர். வேணாடு பின்னர் திருவாங்கூர் சமஸ்தானமாக மாற்றம் பெற்றது. திருவாங்கூர் சமஸ்தானம் பின்னர் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் தனி நாடாக இருக்கலாம் என்று முடிவு பண்ணியதும் திவானின் மீது கொலை முயற்சி நடந்ததும் பின்னர் பாதுகாப்பு காரணங்களால் சுதந்திர இந்தியாவுடன் இணைந்தது.

உதவிய நூல்கள்:

சேர மன்னர் வரலாறு - ஒளவை. துரைசாமிப்பிள்ளை

சேரர்,சோழர்,பாண்டியர் - எஸ்.கிருஷ்ணன்

விக்கிபீடியா தகவல்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு