7) முற்கால சேர பேரரசு
முற்கால சேர பேரரசு :
சேர மன்னர்கள்:
வானவன் (அ) வானவரம்பன்
உதியன் சேரலாதனே வானவரம்பன் என்று பதிற்றுப்பத்து நூலில் குறிப்பிட்டு இருந்தாலும் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. கால வரிசையை பற்றிய குழப்பங்கள் இதில் தொடர்ந்து கொண்டு வருகிறது.
உதியஞ்சேரலாதன் (குட்டுவன்) (கி.மு.350-328) :
இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தை. காலம் குழுப்பமாக இருப்பதால் ஜந்து சகோதர மன்னர்களுக்கும் நூறு சகோதர மன்னர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் உணவு வழங்கியிருக்கலாம் அது மஹாபாரதம் போர் கிடையாது என்று சொல்லுபவர்கள் உண்டு. ஆனால் இவரது மகனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை பற்றி குறிப்பிடும் வரிகளில் இவரை "இன்னிசை முரசின் உதியஞ்சேரல்" என்று குறிப்பிடுவதால் இவர் பாரத போர் கண்ட "பெருஞ்சோற்று உதியன்" இல்லை என்பது தெரிகிறது. வஞ்சியை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த இவர் தென்பாண்டி நாட்டின் மீது படையெடுத்து சேர நாட்டுடன் இணைத்துக்கொண்டார். மேலை கடற்கரை முதல் கீழை கடற்கரை வரை இவரின் ஆட்சி இருந்ததால் "நாடு காண் அகற்றிய உதியஞ்சேரல்" என்ற பெயரில் அழைத்தனர். இவனுடைய நாட்டில் கடலில் கதிரவன் தோன்றி கடலிலையே மறைவதாக புலவர்கள் புகழ்ந்துரைத்தனர். கொங்கு நாட்டின் மீது படையெடுத்து சென்று அதையும் கைப்பற்றி சேர நாட்டுடன் இணைத்துக்கொண்டார். இவர் வேணாட்டை ஆட்சி செய்த ஆய் வேளிரின் தலைவன் மகளான "வேண்மாய் நல்லினி"யை திருமணம் செய்தார். இவருக்கு நெடுஞ்சேரலாதன், குட்டுவன் என்று இரு மகன்கள் உண்டு.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கி.மு.328-270)
இவர் இளவரசு பட்டம் சூட்டப்பட்ட பின்னர் மாந்தை என்னுமிடத்தில் இருந்து ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தார். தந்தை உதியஞ்சேரல் மறைந்தவுடன் அரசு பொறுப்பை ஏற்றாலும் மாந்தை நகரிலிருந்தே ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தார். இவரது தம்பி குட்டுவன் இளவரசு பொறுப்பை ஏற்று வஞ்சி நகரிலிருந்து ஆட்சியை கவனித்து வந்தார். தந்தை தமிழகத்தை வென்று விட்டதால் இவர் இமயம் வரை சென்று கொடி நட வேண்டும் என்று ஆசைப்பட்டு படைகளுடன் புறப்பட பாண்டியனும் சோழனும் இவரது உதவிக்கு படைகளை அனுப்பினர். வழியிலுள்ள அரசர்களை எல்லாம் வென்று இமயத்தில் சேரர்களின் விற்கொடியை பறக்க விட்டு திரும்பியதால் இவரை "இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்" என்று அழைக்கின்றனர்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள் அரசு புரிந்ததாகவும் அவர் ஆரியர்களை வென்றதாகவும், யவனர்களை தோற்கடித்து விரட்டியதாகவும் பதிற்றுப்பத்து நூலில் கூறப்பட்டுள்ளது. வட சேர நாட்டில் தற்போதைய கொங்கண பகுதியில் கூவகத்தீவு (கோவா) பகுதியில் இருந்து கொண்டு கப்பல்களை கொள்ளையடிப்பது கடற்கரை பகுதிகளில் புகுந்து அராஜகம் செய்து வந்த கடம்பர்களை போர் தொடுத்து வீழ்த்தினார். கடம்பர்கள் யவனர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு மீண்டும் சேர நாட்டின் மீது போர்தொடுத்தனர். யவனர்களின் கடற்படையை அழித்து அவர்களை வென்றார். இந்த நேரத்தில் சேர நாட்டின் சிற்றரசர்கள் இவருக்கு எதிராக கலகம் புரிய அவர்களை எதிர்த்து அடக்கி கைது செய்தார். மன்னிப்பு கேட்ட அவர்களை மன்னிக்காததை கண்ட புலவர் குமட்டூர் கண்ணனார் சிற்றரசர்கள் அறியாமையில் செய்த தவறால் குடிமக்களுக்கு துன்பம் அதிகரித்து விட்டது. உன் நாட்டு மக்களே உன்னை கண்டு பயப்படுகின்றனர். சேர நாடு முழுவதும் இன்பம் நிலவ வேண்டுமானால் மன்னிப்பதே நல்லது என்று கூற அவரின் கருத்தை ஏற்று மன்னித்து விடுவித்து அரசை திரும்பப் கொடுத்தார். 58 ஆண்டுகள் அரசாண்டு மறைந்த இவருடன் இரு மனைவியரான பதுமன் தேவி, நற்சோணை இருவரும் உடன்கட்டை ஏறினர்.
பல்யானை செல்கெழு குட்டுவன் (கி.மு.270-245)
இளவரசு பட்டம் சூட்டப்பட்டு வஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்த இவர் அண்ணன் நெடுஞ்சேரலாதன் மறைவுக்குப் பின்னர் ஆட்சியேறினார். பூமி நாட்டிலிருந்து பிடித்த காட்டு யானைகளை பழக்கி வைத்து மிகப்பெரிய யானைப்படை வைத்திருந்ததால் "பல்யானை செல்கெழு குட்டுவன்" என்ற பெயர் வழங்கலாயிற்று. நீலகிரி பகுதியில் அகப்பா என்னுமிடத்தை ஆண்ட சிற்றரசன் கலகம் செய்ததால் அவனை தன் யானைப்படை கொண்டு அடக்கினார். கொங்கு நாட்டில் வாழ்ந்த மறவர்கள் பாலக்காடு வழியாக புகுந்து சேர நாட்டிற்கு தொல்லை கொடுத்ததால் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து மறவர்களை வீழ்த்தினார். புலவர் கோதமனார் அறிவுரையால் வேள்விகள் பல செய்தான். அரண்மனையில் வேள்வி தீயும் விருந்தோம்பல் புகையும் தான் இதன் பின்னர் வந்ததாக பதிற்றுப்பத்து கூறுகிறது. வயது முதிர்ந்தவுடன் குமரிக்கு சென்று கொற்றவைக்கு பூஜைகள் செய்து திரும்பினார். கோதமனார் வேள்வி தீயில் தன் மனைவியுடன் மறைந்து விட்ட காரணத்தால் இவர் தன் மனைவியுடன் வானப்பிரஸ்தம் செய்ய முடிவெடுத்து காட்டிற்கு சென்று விட்டார்.
களங்காய்கண்ணி நார்முடிச்சேரல் (கி.மு.245-220)
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்- பதுமன் தேவிக்கு பிறந்த இவர் தனது சிறிய தந்தையான குட்டுவன் ஆட்சி காலத்தில் தென்பாண்டி நாட்டின் இருந்த குன்ற நாட்டில் இருந்து ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தார். சிறிய தந்தை வானப்பிரஸ்தம் சென்ற பின்னர் குட்ட நாட்டின் பொறுப்பையும் ஏற்று வஞ்சியில் ஆட்சி பொறுப்பை ஏற்றார். இவர் ஆட்சியில் நன்னன் என்ற வேளிர் மன்னன், கோசர்கள் துணையுடன் பூமி நாட்டையும் பாலக்காட்டு பகுதியையும் கைப்பற்ற நார்முடிச்சேரல் பெரும்படையுடன் அவர்களை வென்று துரத்தி இழந்த பகுதிகளை மீட்டார். பின்னர் கோசர் தலைவனின் மகள் நன்னனின் காவல் மரமான மாமரத்திலிருந்து ஒரு காய் ஒடையில் அடித்து வரப்பட்டதை அறியாமல் தின்றதால் நன்னனால் கொல்லப்பட கோசர்கள் நன்னனின் மீது தாக்குதல் நடத்தி அவரது காவல் மரத்தை வெட்டவே நன்னன் ஈரோடு அருகிலுள்ள புன்துறைக்கு (பெருந்துறை) ஒடவே நார்முடிச்சேரல் படைகளுடன் சென்று நன்னனின் பகுதிகளை கைப்பற்றியதுடன் பெருந்துறைக்கு வந்து நன்னனையும் விரட்டியடித்தார்.
சேரன் செங்குட்டுவன் (கி.மு.220-165)
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் நற்சோணைக்கும் பிறந்த மகனான சேரன் செங்குட்டுவன் அடுத்து அரியணை ஏறினார். சேரர்களில் புகழ்பெற்ற மன்னர் என்று பார்த்தால் அது சேரன் செங்குட்டுவன் தான்.சேரன் செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியை பற்றி பதிற்றுப்பத்து நூலில் பரணர் என்ற புலவர் பாடியிருக்கிறார். இவர் கடற்படையை நிறுவி இலட்சத்தீவுகள் வரை வென்றதாகவும் இமயம் வரை சென்று சேரர் கொடியை பறக்கவிட்டதாகவும் கனக விஜயரை வென்று அவரின் தலையில் கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு கோயில் கட்டியதாகவும் சிலப்பதிகாரம் பாடுகிறது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளின் மூத்த சகோதரர் தான் சேரன் செங்குட்டுவன் என்று கூறுவர். தம்பிக்கு தான் அரசுரிமை என்று குழப்பம் ஏற்படக்கூடாது என்று அண்ணனுக்கு விட்டு கொடுத்து தான் துறவறம் போனதாக இளங்கோவடிகளை பற்றிய செவிவழிகதைகளும் உண்டு. ஆனால் இது உண்மையில்லை. வேறொரு செங்குட்டுவனாக இருக்கலாம் என்றும் பிற்காலத்தில் பிறந்த இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். சோழ நாட்டில் பிறந்து பாண்டிய நாட்டில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியப்பாண்டியனால் தவறான தீர்ப்புக்கு ஆளாகி கோவலன் மாண்டதும் கண்ணகி பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையை எரித்ததும் சோழநாட்டில் வஞ்சியில் வந்து முக்தியடைந்ததாகவும் அதனால் கண்ணகிக்கு சேரநாட்டில் கோயில் எழுப்பியதாகவும் சொல்லுகிறார்கள். அதுவே கண்ணகி கோட்டம் அல்லது பத்தினிக்கோட்டம் என்று அழைக்கிறார்கள்.
கோவலனின் இன்னொரு மனைவி மாதவியின் மகள் மணிமேகலை துறவறம் பூண்டார் என்றும் அட்சய பாத்திரத்தின் மூலம் காயசண்டிகையின் பசிப்பிணியை போக்கினார் என்று கருத்தியலின் படி பார்த்தால் சிலப்பதிகார நிகழ்வு நடைபெற்ற காலம் சங்க காலமே புத்தரும் 2500 ஆண்டுகளுக்கு முன்பு தான் பிறந்தார் என்பதிலிருந்து அதன் பிறகு 200-300 வருடங்களில் நடந்திருக்கலாம் என்றும் அறியலாம். சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு.2ம் நூற்றாண்டின் நடுப்பகுதி ஆகும். ஆனால் பதிற்றுப்பத்து நூலில் 55 ஆண்டுகாலம் அரசு புரிந்ததாக செய்திகள் இருக்கிறது. ஒருவேளை கடுக்கோ இளஞ்சேரல் இரும்பொறையின் காலத்திலையே சேர்ந்து அரசாட்சி புரிந்திருக்கலாமே என்று எண்ணத்தோன்றுகிறது. குட்டுவன் கோதை என்பது இவரது இயற்பெயர். இவர் ஆட்சிக்கு வந்த புதிதில் தாயின் நினைவாக ஒரு பதுமம் செய்து கங்கையில் நீராட்ட சென்றபோது அங்குள்ள அரசர்கள் இவனை எதிர்க்க தனியொருவராக அவர்களை வீழ்த்தி வென்றார். சேர நாட்டின் வடபகுதி அரசர்கள் இவனது நாட்டின் பகுதியான குட்ட நாட்டை பிடித்துக்கொள்ள இவர் பெரும்படையுடன் சென்று அவர்களை இடும்பில் (உடுப்பி) மற்றும் வயலூர் என்னுமிடத்தில் தோற்கடித்து விரட்டினார். தோற்று ஓடியவர்கள் யவனர்களுடன் கூட்டு சேர்ந்து எதிர்க்க கடற்படையை அமைத்து யவனர்களின் கடற்படையை அழித்தார். பத்தினி தெய்வமான கண்ணகிக்கு சிலை வடிக்க இமயத்திலிருந்து கல் கொண்டு வருவதற்காக படையுடன் கிளம்ப வழியில் சாதவாகன அரசர் இவருக்கு இயன்ற உதவிகளைச் செய்தார். கங்கையாற்றை கடக்க முயலும்போது கனகன் மற்றும் விஜயன் என்ற இரு அரசர்கள் தலைமையில் பல அரசர்கள் கூடி நின்று எதிர்க்க அவர்களை தோற்கடித்து இமயத்தில் இருந்து கல் எடுத்து வந்து கண்ணகிக்கு சிலை வடித்தார். 55 ஆண்டுகள் ஆண்ட பின்னர் இவரது மறைவுக்குப் பின்னர் இவரது சகோதரரான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பதவிக்கு வந்தார்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (கி.மு.165-127)
இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் பதுமன் தேவிக்கும் பிறந்த மகன். அண்ணனான சேரன் செங்குட்டுவன் ஆட்சியில் இளவரசு பட்டம் கட்டி தொண்டியை ஆட்சி புரிந்து வந்தார். அவருக்கு பின்னர் வஞ்சியை தலைநகராக கொண்டு ஆண்டார். தொண்டை நாட்டிற்கும் சேர நாட்டிற்கும் இடைப்பட்ட தண்டகாரண்யத்தை ஆட்சி செய்த அரசர்களுடன் ஏற்பட்ட பகையினால் ஆநிரைகளை குறிப்பாக வரையாடுகளை கவர்ந்து தொண்டிக்கு கொண்டு வந்தார். இதனால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயர் வழங்கலாயிற்று. இவரது ஆட்சிக்காலத்தில் சாதவாகன அரசர் கொங்கு நாட்டு அரசன் நன்னன் உதியன் என்பவனோடு சேர்ந்து கொண்டு சேர நாட்டின் வட பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். இதனால் வெகுண்ட சேரலாதன் தமிழ் மன்னர்களின் கூட்டணிப் படை ஒன்றை அமைத்து கொங்கணத்தின் மீது படையெடுத்தான். இதனால் நன்னன் இவனோடு சமாதானம் செய்துகொண்டான். பின்னர் நன்னனோடு இணைந்து சாதவாகன மன்னரைத் தோற்கடித்து அவருடைய வனவாசி நாட்டையும் பிடித்து கொண்டார். இதனால் சேரனை வானவரம்பன் என்று புலவர்கள் புகழ்ந்தனர். கொங்கு நாட்டு பகுதியில் உள்நாட்டு கலகம் ஏற்பட தொடங்க தன் குடியில் பிறந்த ஒருவனை கொண்டு அதனை ஆள செய்தார். 38 ஆண்டுகள் ஆண்ட இவருக்கு மகப்பேறு இல்லாததால் இவரோடு உதியன் குடியில் பிறந்த அரச வம்சம் முடிந்தது.
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை :
இவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சிகாலத்தில் தன்னுடைய பொறை நாட்டை (பாலக்காடு,குறும்பர் நாடு மற்றும் பவனியாற்று பகுதி) தெற்கே சோழ நாடு வரை விரிவுபடுத்தினார். சோழர்களோடு போரிட்டு கொல்லி மலை வரை இருந்த மழநாட்டை மீட்டார். பிறகு சோழர்களோடு சமாதானம் கொண்டு அமராவதி ஆற்றங்கரையில் ஒரு நகரை (கரூவூர்) உருவாக்கினார். தலைநகர் வஞ்சியின் நினைவாக கருவூர் வஞ்சி என்றும் முசிறி துறைமுகம் நினைவாக மழநாட்டு பேரூரின் பெயரை முசிறி என்றும் தனக்கு சேரமான் என்ற பட்டத்தையும் சூடிக் கொண்டார்.
அந்துவஞ்சேரல் இரும்பொறை :
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மறைவுக்கு பின்னர் உதியன் குடும்பத்தில் வாரிசு இல்லாததால் சேர நாடு முழுவதும் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்கு வந்து அதற்கு அடுத்து அரியணை ஏறிய அந்துவஞ்சேரல் இரும்பொறை கீழ் வந்தது. இவர் திருப்பரங்குன்றம் முருகனின் மேல் பெரும் பக்தி கொண்டவர். சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி பெரும்பகை கொண்டிருந்தார். ஒரு நாள் சோழ அரசன் யானை மீது ஏறி வந்த போது அது மதம் கொண்டு கருவூரில் புகுந்தது. அதனால் சினம் கொண்ட இரும்பொறை யார் இவன்? என்று அருகிலிருந்த புலவரை கேட்க அதற்கு பதிலாக "இவர் யார் என்குவையாகின்" பாடலை பாடி மன்னனின் கோபத்தைத் தணித்தார். இவர் வேணாட்டின் வேளிர் மகளான பொறையன் பெருந்தேவி என்பவரை மணந்து செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற மகனைப் பெற்றார்.
செல்வக் கடுங்கோன் வாழியநாதன் (கி.மு.87-62)
அந்துவஞ்சேரலுக்கு பின்னர் அரியணை ஏறிய இவர் அவரின் மகன். இவர் பரம வைஷ்ணவராக திருமாலின் பக்தரான இவர் திருமாலின் கோயிலுக்காக ஒகத்தூர் என்ற ஊரை இறையிலியாக வழங்கினார். இவருக்கு இசையிலும் கூத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. சாதவாகனர்கள் இவருடைய ஆட்சியிலும் தொல்லை கொடுக்க வனவாசியை அடைந்து அவர்களை தோற்கடித்தார். வட அரசர்கள் ஒடிவிடவே அவர்களது செல்வங்களை எல்லாம் திரட்டி கொண்டு சேர நாடு வந்தார். பறம்பு நாட்டில் ஆட்சிபுரிந்த வேள்பாரி மறைவுக்கு பின்னர் அவருடைய மகள்களை தகுந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு வஞ்சி நகர் வந்த கபிலரின் தமிழ்திறனை கேள்விப்பட்ட வாழியாதன் அவரை தன்னுடன் இருத்திக் கொண்டார். குறிஞ்சிப்பாட்டு என்ற பாடலில் தமிழர் ஒழுக்கத்தை பற்றி பாடினார். 25 ஆண்டுகள் ஆண்டபின் பாண்டியனை எதிர்க்க சென்ற அரசனோடு சேர்ந்து பாண்டியனுடன் நடந்த போரில் உத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ள சிக்கல் என்னுமிடத்தில் படுகாயமுற்று உயிர் துறந்தார்.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (கி.மு.62-25)
செல்வங்கடுங்கோ வாழியாதனுக்கும் பதுமன் மகளான பெருந்தேவிக்கும் பிறந்த இவர் தந்தை சிக்கல் என்னுமிடத்தில் நடந்த போரில் மரணமடைந்த பிறகு அரியணை ஏறினார். அந்த நேரத்தில் தகடூர்(தர்மபுரி) அரசனான அதியமான் வம்சத்தில் வந்த அதியமான் எழினியும் அவனுக்கு துணையாக கழுவுள் என்ற ஆயர் தலைவனும் இன்னும் சில வேளிர்களும் சேரர்களுடைய அரசு விரிவடைவதை கண்டு கூட்டணியாய் எதிர்க்க முற்பட்டு கொல்லிகூற்றம் என்ற இடத்தை பிடிக்க பெருஞ்சேரல் இரும்பொறை படையுடன் வந்து கொல்லிகூற்றத்தை மீட்டார். கழுவுள் என்ற ஆயர் தலைவர் தாக்குபிடிக்க முடியாமல் சரணடைய அவனை மன்னித்து அவர் அரசை அவரிடமே கொடுத்தார். அதியமான் எழினி சில சிற்றரசர்களுடன் இணைந்து படை திரட்டவே இரும்பொறை படையுடன் தகடூரை தாக்கி கைப்பற்றினார். அதியமான் எழினி போரில் மரணமடையவே அரசை அதற்கு உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு வஞ்சி திரும்பினார். இந்த வெற்றியை கொண்டாட அயிரை மலை சென்று கொற்றவைக்கு விழா எடுத்தார். இவரை பற்றிய இன்னொரு நிகழ்வும் கூறப்பட்டுள்ளது. மோசி கீரனார் என்ற புலவர் அரண்மனைக்கு வந்தபோது இவர் இல்லாததால் களைப்பின் மிகுதியால் அரசனது முரசு கட்டில் மேல் தூங்கிவிட இரும்பொறை கவரி கொண்டு புலவருக்கு வீசினாராம். இதிலிருந்து இவர் தமிழை போற்றி வாழ்ந்துள்ளார் என்ற விவரம் சுவைபட விளக்கப்பட்டுள்ளது.
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை (கி.மு.25-9)
பெருஞ்சேரல் இரும்பொறைக்கு அடுத்து குடக்கோ சேரல் இரும்பொறையும் அவரது தம்பியான குட்டுவன் இரும்பொறையும் சிறிது காலத்திற்குள்ளாகவே இறந்து போனார்கள். அதனால் குட்டுவன் இரும்பொறையின் மகனான குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சியேறினார். ஆனால் குட்டுவன் இரும்பொறை என்பது பொதுப்பெயர். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையே இவரின் தந்தை என்று ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். இளவயதில் ஆட்சியேறிய இவரை வீழ்த்த சேர நாட்டின் வடபகுதி மன்னனும் சில அரசர்களும் முயற்சிக்க அவர்களை தனியொருவனாக வென்று திரும்பினார். அந்த வெற்றியை கொண்டாட விழா ஏற்பாடு செய்தார்.அப்போது பாண்டிய நாட்டில் அறிவுடை நம்பியும் சோழ நாட்டில் கோப்பெருஞ்சோழனும் ஆண்டு வந்தனர். பாண்டிய நாட்டில் மோகூர் பகுதி சிற்றரசனான இளம்பழையன் மாறன் என்பவர் இளஞ்சேரல் இரும்பொறை மீது படையெடுக்க ஆசைப்பட கோப்பெருஞ்சோழனின் மகன்கள் இருவரையும் துணைக்கு அழைக்க கோப்பெருஞ்சோழன் அது அறமல்ல என்று கூறியும் தந்தையின் பேச்சை கேளாமல் படைகளுடன் சென்று மோதி இளஞ்சேரல் இரும்பொறையின் ஆற்றல்மிக்க படையினரால் தோற்கடிக்கப்பட்டு திரும்பினர். பின்னர் இவரது மகன்கள் அரசுரிமை கோரி இவர் மீது படையெடுக்க முற்பட்டனர். இதனால் புலவர்களின் அறிவுரையால் மனமுடைந்த கோப்பெருஞ்சோழன் மானம் அழிந்த பின் வாழ்வது சரியல்ல என்று முடிவெடுத்து தன்னுடன் சேர்ந்த புலவர்களுடன் காவிரியாற்றின் கரையில் வடக்கிருந்து உயிர் துறந்தார். அதே போல் கோப்பெருஞ்சோழனை காணாமலையே அவருடன் நட்பு கொண்ட பிசிராந்தையாரும் வடக்கிருந்து உயிர் துறந்தார். இந்நிகழ்வு சங்க இலக்கியங்களில் சுவைபட விளக்கப்ப்ட்டுள்ளது.
யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை :
இவர் சிறிய கண்களை கொண்டதால் யானைக்கண் சேய் என்ற பெயர் வந்தது. தொண்டியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த இவருக்கு குறுங்கோழியூர் கிழார் என்பவர் அரசவை புலவராகவும் ஆலோசகராகவும் இருந்தார். இவனது ஆட்சிக்காலத்தில் கொங்கு நாட்டு அரசர்கள் போர்க்கொடி தூக்க படை கொண்டு அவர்களை அடக்கினார். அப்போது பாண்டிய நாட்டில் ஆட்சிக்கு வந்தவர் தான் நெடுஞ்செழியன். பாலகன் வயதில் ஆட்சி பொறுப்பை ஏறியதால் அவரை வீழ்த்தி விடலாம் என்று இவரும் ஏழு வேளிர்களும் கூட்டணியாய் படை நடத்த சின்னஞ்சிறுவனாக வெஞ்சினம் உரைத்து தலையானங்கானத்தில் இவர்களை நெடுஞ்செழியன் வென்று "தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன்" என்ற பட்டத்தை பெற்றார். போரில் தோற்ற இவரை கைது செய்து மூங்கில் கோட்டையில் சிறை வைத்தார். இந்த நிகழ்வு சாண்டில்யன் அவர்கள் எழுதிய "மூங்கில் கோட்டை" நூலில் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது. ரகசிய வழியை அறிந்த சேரன் அங்கிருந்து தப்பி தொண்டியை அடைந்து மீண்டும் தன் ஆட்சியை தொடர்ந்தார்.
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை :
இவரையும் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் இது தவறான வாதம். யானைக்கண் சேய் பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் வாழ்ந்தவர். இவர் சோழன் பெருநற்கிள்ளியும் பாண்டியன் கானப்பேர் கடந்த உக்கிரப்பெருவழுதியின் சம காலத்தவர் என்பதிலிருந்து யானைக்கண் சேய்க்கு பின் வந்தவராக தான் இருக்க முடியும். சோழன் பெருநற்கிள்ளி மலையமான் அரசனான தேர்வண் மலையனுடன் சேர்ந்து சேர படைகளை வீழ்த்தி வெற்றி வாகை சூட இவர் தென் சேர நாடான வேணாட்டில் புகுந்தார். அப்போது தென் பாண்டிய அரசர்கள் இவருக்கு தொல்லை கொடுக்க படை திரட்டி அவர்களை வென்றார். இளங்கீரனார் என்ற புலவர் இந்த நிகழ்வை பாடியிருக்கிறார்.
சேரமான் மாவண்கோ :
மாந்தரஞ்சேரல் இரும்பொறை வேணாட்டில் இருந்த போது கொங்கு நாட்டிலிருந்து அரசு புரிந்தவர் இவர். கானப்பேர் என்ற ஊரில் ஆண்ட அரசனான வேங்கை மார்பனை வென்ற பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வெற்றி விழாவை மதுரையில் கொண்டாடினார். அதற்கு சோழன் பெருநற்கிள்ளியும் சேரமான் மாவண்கோவும் சென்றிருந்தனர். கானப்பேர் கடந்த உக்கிரபெருவழதி காலத்தில் தான் கடைச் சங்கம் நிறைவுற்றதாக கூறப்படுவதால் சங்க கால கடைசி சேர அரசராக சேரமான் மாவண்கோவையும் கூறலாம்.
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ: (கி.பி.1-30)
சேர மன்னர்களுள் சிறந்த புலவராக கருதப்படுபவர் இவரே. அகப்பொருள் திணையாகிய பிரிவு பற்றி கூறும் பாலைத்திணையை பாட வல்லவன் என்பதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்று அழைக்கப்பட்டார். இவர் நற்றிணையில் 10 செய்யுள்களும், குறுந்தொகையில் 10, அகநானாற்றில் 12, கலித்தொகையில் பாலைக்கலி 36 செய்யுள்களும் பாடியுள்ளார். இவரை பேய்மகள் இளவெயினி என்ற பெண் புலவர் புகழ்ந்து பாடியுள்ளார்.
சேரமான் கோக்கோதை மார்பன் : (கி.பி.30-60)
இவர் தொண்டி என்ற துறைமுக நகரிலிருந்து ஆட்சி செய்தவர். வள்ளல்தன்மையும் வீரமும் உடையவர். சோழன் கிள்ளிவளவன் மதுரை மீது படையெடுத்து சென்ற போது பாண்டியர்கள் அவர்களை வென்றதை அறிந்து மிகவும் மனம் மகிழ்ந்தார். ஏனெனில் இவர் பாண்டிய மன்னர்களுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார். பொய்கையார் என்ற புலவர் இவரை பற்றி பாடியுள்ளார்.
சேரமான் கணைக்கால் இரும்பொறை (கி.பி.160-180)
கடைச்சங்க காலத்திற்கு அடுத்த காலகட்டத்தில் கரூவுர் வஞ்சியை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தவர். கொங்கு நாட்டு சிற்றரசனான மூவன் என்பவன் இவரை இகழ்ந்து பேசியதால் அவனை போரில் வென்று அவனது பல்லை பெயர்த்து தொண்டி நகர் வாயிற் கதவில் வைத்தார். விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பல கோயில் கட்டியவர் சோழர் கோச்செங்கணான்.
சோழன் கோச்செங்கணானுடன் கழுமலம் என்ற இடத்தில் நடந்த போரில் தோல்வியுற்று கோட்டத்தில் சிறைப்பட்டார். சேரமானிடம் அன்பு கொண்ட புலவர் பொய்கையார் சோழனிடம் விரைந்து சென்று அவரை புகழ்ந்து "களவழி நாற்பது" என்ற நூலை பாடினார். பரிசிலாக சேரமான் விடுதலையை கேட்க சோழன் அவ்வண்ணமே ஆணை பிறப்பித்தார். இதற்கிடையில் சேரமான் கணுக்கால் இரும்பொறை சிறையில் தண்ணீர் வர தாமதமானதால் அதை அருந்த மறுத்து "குழுவி இறப்பினும்" என்ற பாடலை பாடி உண்ணா நோன்பிருந்து உயிர்விட்டார். கவரிமா மயிர்நீப்பின் உயிர்வாழா என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் என்று கூறுவர். ஆனால் பிற்கால நூல்கள் சோழன் செங்கணான் இவரை உயிருடன் விடுவித்ததாக கூறுகின்றன.
நம்பி குட்டுவன் (கி.பி.200-220)
பூரிக் கோ (கி.பி.220-250)
சேரமான் குட்டுவன் கோதை (கி.பி.250-270)
கோதை என்ற சேரர் கிளையில் பிறந்தவர். இவர் குட்ட நாட்டிலிருந்து ஆட்சி செய்தவர் என்பது குட்டுவன் என்ற பெயரிலிருந்து அறிய முடிகிறது. இவர் பெரும் வீரனாக விளங்கியவர். மாடலன் மதுரை குமரனார் என்ற புலவர் "குட்டுவன் கோதையின் நாடு புலி உறங்கும் குகை போல உள்ளது" என்று பாடியிதிலிருந்து இவரை பெருவீரர் என்று அறியமுடிகிறது. கோசர்கள் சேரர்களுக்கு தொல்லை கொடுக்க பிட்டன் கொற்றன் என்ற குதிரை மலை பகுதியை ஆண்ட சிற்றரசனுடன் இணைந்து அவர்களை விரட்டியடித்தார். சேரன் செங்குட்டுவனின் தளபதியாக இருந்த வில்லவன் கோதை (தோல்வியே அறியாத தளபதி என்று புகழப்படுபவர்) இவரது கிளையை சேர்ந்தவர் தான்.
சேரமான் வஞ்சன் (கி.பி.270-300)
பாயல் என்ற மலைப்பகுதியில் இவர் ஆட்சி புரிந்திருக்கிறார். வேண்டியவர்களுக்கு வேண்டுவதை கொடுத்து உதவிய வள்ளல் என்று புகழ் பெற்றவர் இவர். திருத்தாமனார் என்ற புலவர் இவரை பற்றி பாடியுள்ளார்
ஆதன் அவினி :
ஜங்குறுநூறில் மருதத்திணையில் இந்த அரசரை பற்றிய குறிப்புகள் உள்ளது. "வேட்கைப்பத்து" என்ற பகுதியில் ஓரம்போகியார் என்ற புலவர் இவரை புகழ்ந்து பாடியுள்ளார். மிகச்சிறந்த ஆட்சியாளராகவும் நல்ல குணங்களும் கொண்டவராக சித்தரிக்கப்பட்டுள்ளார்.
உதியன் சேரலாதன் தோற்றுவித்த சேர வம்சம் கி.மு.430ல் (இவர் தான் வானவரம்பன் என்று பதிற்றுப்பத்து நூலில் குறிப்பிடப்பட்டுள்ளார். ) இன்றைய திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கோளூரை தலைமையாக கொண்டு வளர்ந்தது.இப்படி இடைக்காலத்திலும் வளர்ந்த சேர பேரரசை முதலாம் குலோத்துங்க சோழன் சேர அரசின் கடைசி அரசனான ராமவர்மா குலசேகராவை கி.பி.1102ல் முறியடித்ததார். கடைசி அரசர் கி.பி.1122ல் தனது அரசை 17 பாகங்களை பிரித்து கொடுத்து விட்டு மறைந்து விட்டார். மைய அரசு என்று ஒன்று இல்லாததால் சிற்றரசாக குறுநில மன்னர்கள் போல அதன் பகுதியை ஆண்டதால் பல ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரியம் கொண்ட சேர பேரரசு முடிந்தது. அதன்பிறகு 17 பகுதிகளை ஆண்டவர்கள் சிற்றரசர்களாக மாறிப்போயினர். இந்த சேரர்களின் பரம்பரையில் தான் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவிவர்மாவும் ஒருவர் என்று சொல்லுவார்கள். இன்று மஹாபலி மன்னரின் நினைவாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தான் கேரளத்தின் முக்கிய பண்டிகையாகும். ஆனால் மஹாபலி சங்க காலத்திற்கு முன்பு இருந்த மன்னர்களின் வரிசையில் கூட இல்லை. அதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்திருக்கலாம்.
உதவிய நூல்கள்:
சேர மன்னர் வரலாறு - ஒளவை.துரைசாமியா பிள்ளை
சேரர் சோழர் பாண்டியர் - எஸ். கிருஷ்ணன்
விக்கிபீடியா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்





Comments
Post a Comment