9) சாதவாகன பேரரசு
யார் இவர்கள் ? எப்படி வந்தார்கள்? எப்படி ஆந்திரத்தை பூர்விகமாக கொண்டு வடமேற்கு இந்தியா வரைக்கும் 3 நூற்றாண்டுகள் ஆண்டார்கள்? யார் தோற்றுவித்தது? இவர்களின் வீழ்ச்சி எவ்வாறு இருந்தது?
மெளரிய பேரரசை வீழ்த்திய புஷ்யமித்ரசுங்கர் அவருக்கு பின்னர் 2,3 அரசர்கள் அவர் பரம்பரையில் வந்தார்கள். அதிகபட்சம் 80 வருடங்களே நீடித்த சுங்க அரசை சாதவாகனர்களின் அரசர் சிமுகர் கி.மு.100ல் வீழ்த்தி சாதவாகனப்பேரரசை உருவாக்கினார். சாதவாகனர்களின் சம காலத்தவர்கள் தான் மேற்கு சத்ரபதிகள் மற்றும் குஷானர்கள். ஆந்திரத்தை பூர்விகமாக கொண்ட சாதவாகனர்கள் கி.மு 4 ம் நூற்றாண்டிலையே இருந்ததாக கூறுவர். ஆனால் எழச்சி பெற்றது கி.மு.1ம் நூற்றாண்டு தான். அதன் பிறகு கி.பி. 2ம் நூற்றாண்டு கடைசியில் வலிவிழந்து சிறு சிறு ராஜ்யங்களாகி அப்படியே 3-4ம் நூற்றாண்டில் குப்தர்களின் எழுச்சியினால் காணாமற்போயினர்.
இவர்கள் விசுவாமித்திரர் வழிதோன்றல்கள் என்றும் பிராமண குலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கி.மு. 8ம் நூற்றாண்டு நூலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்போது அவர்கள் பெரிய அளவிலெல்லாம் இல்லை. சாதவாகன பேரரசு இன்றைய தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரம் ஆகியவற்றை கொண்டிருந்தது. பல்வேறு காலகட்டங்களில் இன்றைய குஜராத்,மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடகத்தை ஆண்டனர். இவர்களின் தலைநகராக அமராவதியும் மற்றும் பிரதித்தானாவும் இருந்தது. இவர்களின் உச்சநிலை கெளமிபுத்ர சதகர்ணி மற்றும் அவருக்கு பின் வந்த வசித்திரபுத்திர புலாமவியின் ஆட்சியில் தான். பின்னர் 2 ம் நூற்றாண்டு கடைசியில் மேற்கு சத்ரபதிகளுடன் மோதலில் மேற்கு பகுதிகளை இழந்தும் அடுத்து குப்தர்களின் எழச்சியினால் அரசை இழந்த கி.பி.3-4ம் நூற்றாண்டுகளில் சிறுசிறு மாநிலங்களாக சிதறிபோயினர். இவர்கள் உலோக நாணயங்களில் ஆட்சியாளர்களின் உருவங்களை பொறித்தனர். சாதவாகனர்களின் அரச பரம்பரையை பற்றிய தொல்லியல் குறிப்புகள் மற்றும் வெளியிட்ட நாணயங்களின் அடிப்படையில் இவரது ஆட்சியாளர்களை குறித்துள்ளனர்.
சிமுகன் (கி.மு.100) :
இவர் ஆண்ட கண்வ பரம்பரையின் இறுதி மன்னனான சுசர்மனை போரில் கொன்று ஆட்சியேறினார். நானோகத் சாதவாகன கல்வெட்டுகளில் இவரின் பெயர் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் கி.மு.3ம் நூற்றாண்டில் அல்லது கி.மு.1 ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. கல்வெட்டு ஆதாரங்களின் படி இவர் கி.மு.1ம் நூற்றாண்டு என்று தெரிகிறது. இந்த கல்வெட்டுகள் இவர் முதலாம் சதகர்ணியின் தந்தை என்று குறிப்பிடுகின்றது. இவரை பற்றி பெரிய விவரங்கள் இல்லை. ஜைன மதத்தை இவர் ஏற்றுக் கொண்டதாக ஜைன மத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இவரது இறுதிக்காலத்தில் இவர் கொடுங்கோலனாக மாறியதாகவும் அதனால் இவர் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கண்கன் (கி.மு.100-70) :
இவர் சிமுகனுக்கு பின்னர் ஆட்சியேறிய அவரின் தம்பி. இவர் தனது பேரரசை மேற்கு பகுதியில் நாசிக் வரை விரிவாக்கினார். நாசிக் குகை எண் 19ல் உள்ள கல்வெட்டு இவரது ஆட்சியில் வெட்டப்பட்டது என்று தெரிகிறது. இவர் பெளத்த சமயத்தை ஆதரித்தார். பெளத்த துறவிகளின் நலனுக்காக நிர்வாக பிரிவை உருவாக்கியது அசோகரின் கல்வெட்டுகளில் காணப்படும் மகா-மாத்ர என்ற சொல்லை பயன்படுத்தியதிலிருந்து தெரிகிறது.
முதலாம் சதகர்ணி(கி.மு.70-50) :
கண்கனுக்கு பின்னர் ஆட்சியேறிய இவர் அவரின் அண்ணனான சிமுகனின் மகன். இவரது ஆட்சியில் நானோகத் கல்வெட்டுகளில் இவரது தந்தை சிமுகனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவருக்கு முன்னர் இருந்த கண்கன் பெயர் குறிப்பிடப்படவில்லை. கலிங்க அரசன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு இவரை பற்றி குறிப்பிட்டுள்ளது.
இரண்டாம் சதகர்ணி (கி.மு.50-கி.மு.25) :
இவர் முந்தைய அரசர் முதலாம் சதகர்ணியின் மகன்களான வேதஶ்ரீ மற்றும் சக்திஶ்ரீ ஆகியோர்களுள் மூத்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை மறைவின் போது சிறுவயதாக இவர் இருந்ததால் இவரது தாயான நாயனிகாவை அரச பிரதிநிதியாக கொண்டு ஆட்சியேறினார். முந்தைய அரசர்கள் மேற்கு மால்வா பகுதியை கைப்பற்றியதை தொடர்ந்து கிழக்கு மால்வா பகுதியை இவர் கைப்பற்றினார். இதனால் பெளத்த வழிபாட்டு தலமான சாஞ்சி இவரது ஆட்சியின் வசம் வந்தது. முன்னர் ஆண்ட மெளரியர்கள் மற்றும் சுங்கர்களால் அமைக்கப்பட்ட மூல ஸ்தூபிகளை சுற்றி அலங்கரிக்கப்பட்ட நுழைவாயில்களை இவர் அமைத்தார். சாஞ்சியில் தென்புற வாயிலின் மேல்விதானம் இவரால் நன்கொடையாக அளிக்கப்பட்டது. இவரது காலத்திற்கு பின்னர் சாதவாகனர்களின் பேரரசு வீழ்ச்சியடைந்தது. மேற்கு சத்ரபதி ஆட்சியாளரான நாகபாணன் இந்த பகுதிகளை வென்றார்.
இடையில் கி.மு.25- கிபி.53 வரை மேற்கு சத்ரபதிகளின் பிடியில் சாதவாகனர்களின் அரசு இருந்தது. இதனால் ஆட்சியாளர்கள் விவரம் அதிகமாக தெரியலை.
சிவஸ்வதி (கி.பி.78-106)
இவரது ஆட்சியில் மேற்கு சத்ரபதிகள் படையெடுத்து வந்து மஹாராஷ்டிரா மற்றும் விதர்பா பகுதிகளை பிடித்துக் கொண்டதால் தலைநகர் ஜூன்னாரை விட்டு விலகி அவுரங்காபாத் மாவட்டத்திலுள்ள பிரதித்தனா (இன்றைய பைத்தான்) நகருக்கு மாறினார். இவரது ராணியான கெளதமி பாலஶ்ரீ நாசிக் கல்வெட்டுகளில் தன் மகனான கெளதமிபுத்ர சதகர்ணியை பற்றி குறிப்பிடுவதிலிருந்து இவரே கெளமிபுத்ர சதகர்ணியின் தந்தை என்று அறியப்படுகிறார்.
கெளதமிபுத்ர சதகர்ணி (கி.பி.106-130) :
சாதவாகனர்களில் சிறந்த அரசர் என்று போற்றப்படுபவர் இவரே. தன் தாயின் பெயரை முதலில் சொல்லி தன் பெயரை பின்னால் கொண்டவர். தாயின் பெயரை தாங்கி தனது பெயரை கெளதமிபுத்ர சதகர்ணி என்று அழைத்துக் கொண்டார். சொல்லப்போனால் தாயை இனிஷியலாக தன் பெயருக்கு முன்னால் வைத்துக்கொண்டார். 24 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். தக்காணப்பகுதி முழுவதும் கைப்பற்றி சாதவாகனப்பேரரசை விரிவுபடுத்தினார். தன் பேரரசை விரிவடைய செய்து அஸ்வமேத யாகங்களை நடத்தினார். மாளவத்தின் அரசரையும் போரில் வென்றார். இவரது இந்த வெற்றிகள் இவரது அன்னை கெளதமியினால் வெளியிடப்பட்ட நாசிக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாசிக் நகரில் உள்ள த்ரிஹம்பேஸ்வரர் ஆலயம் இவரின் முயற்சியால் கட்டப்பட்டது என்றும் சொல்லுவார்கள். இவர் பிராமண சமயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சைவ ஆலயங்களுக்கும் உதவியுள்ளார். புத்த மடாலயங்களுக்கும் உதவி புரிந்துள்ளார். இவரது ஆட்சிகாலத்தில் சாகர்கள், கிரேக்கர்கள் மற்றும் பஹலவர்கள் (ஈரானிலிருந்து வந்தவர்கள்) ஆகியோரின் படையெடுப்புகளை முறியடித்து பேரரசை விரிவுபடுத்தினார். இவரது ஆட்சியில் தக்காண பீடபூமி, செளராஷ்டிரம் மற்றும் அவந்தி ஆகியவையும் அடங்கியிருந்தது. தென்னிந்தியாவின் காஞ்சியையும் இவர் வென்றுள்ளார்.
வசிஷ்டபுத்ர ஶ்ரீபுலமாவி (கி.பி.130-151) :
அடுத்து அவருக்கு பின் அவரது மகன் வசிஷ்டபுத்ர புலமாயி ஆட்சிக்கு வந்தார். அவர் கிருஷ்ணா நதி வரை ஆட்சியை விரிவுபடுத்தினார். மிகச்சிறந்த கடற்படையை உருவாக்கினார். அவரினால் வெளியிடப்பட்ட நாணயங்களில் கப்பல் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயங்கள் பிராகிருத மொழியில் பிராமி எழுத்துருவில் வெளியிடப்பட்டது. இவரது ஆட்சியின் தலைநகரமாக இன்றைய மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அவுரங்காபாத் மாவட்டத்திலுள்ள நகரமான "பைத்தான்" இருந்தது. இவரது ஆட்சிகாலத்தில் இவரது பாட்டியான கெளதமி பாலஶ்ரீ நாசிக்கில் பண்டவலெனி குகையில் 3வது குகையை அமைத்து கொடுத்த விவரம் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டுள்ளது.
வசிஷ்டபுத்ர சதகர்ணி (கி.பி.151-158) :
தனது சகோதரன் வசிஷ்டபுத்ர புலமாயிக்கு பின்னர் ஆட்சி ஏறினார். இவரது ஆட்சியில் மேற்கு சத்ரபதிகளுடன் போர்கள் நிகழ்ந்தாலும் பின்னர் மேற்கு சத்ரபதிகளின் அரசர் முதலாம் ருத்ரதாமன் மகளை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ருத்ரதாமனுடன் ஏற்பட்ட போர்களில் இரண்டு முறை தோற்று போனதாக ஜூனாகத் கல்வெட்டுகளில் ருத்ரதாமன் குறிப்பிட்டுள்ளார்.
சிவஶ்ரீ சதகர்ணி (கி.பி.158-165)
சிவ ஸ்கந்த சதகர்ணி (கி.பி.165-172) :
இவர் வசிஷ்டபுத்ர சதகர்ணிக்கு பின்னர் ஆட்சி ஏறியவர். இவர் மகனா அல்லது சகோதரனா என்ற விவரம் தெரியவில்லை. இவரது ஆட்சியில் இரண்டு முறை மேற்கு சத்ரபதி அரசனான ருத்ரதாமனால் தோற்கடிக்கப்பட்டார்.
யக்ஞ ஶ்ரீசதகர்ணி (கி.பி.172-201) :
இவர் வசிஷ்டபுத்ர சதகர்ணியின் சகோதரர்.இவரே கடைசி பலமான சாதவாகன அரசராக குறிப்பிடுகிறார். இவரது சகோதரர் வசிஷ்டபுத்ர சதகர்ணியின் ஆட்சியில் சாகர்களிடம் இழந்த பகுதிகளை இவர் மீட்டுக் கொண்டார். இவர் மேற்கு சத்ரபதிகளை வென்று மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் தெற்கு பகுதிகளை கைப்பற்றினார். நாசிக் கல்வெட்டுகளில் இவரது கல்வெட்டு 20வது குகையில் உள்ளது. இந்த கல்வெட்டில் கன்ஹேரி மற்றும் நாசிக் இவரது ஆட்சியில் இருந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய சதகர்ணி : (கி.பி.201-207)
சந்திர ஶ்ரீசதகர்ணி : (கி.பி.207-214)
நான்காம் புலமாயி (கி.பி.214-224)
ஆட்சியாளர்கள் வருடங்களில் சிறுசிறு குழப்பங்கள் உண்டு. ஏனெனில் இதற்கு பிறகு தான் சாலிவாகனா என்னும் சாதவாகன மன்னர் காலத்தில் தான் சாகா காலண்டர் முறை பின்பற்றப்பட்டது. அது 365 நாட்களும் 12 மாதங்களையும் கொண்டுள்ள இன்றைய கிரிகேரியன் காலண்டர் முறையை ஒத்திருந்தது. சாதவாகனர்களின் 17வது அரசன் ஹாலா. இவர் 5 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்தார். சத்தசாய் என்றழைக்கப்படும் கதசப்த சாய் என்னும் நூல் பிராகிருத மொழியில் எழுதினார். இதில் 700 பாடல்கள் உள்ளது. இதிலிருந்து சாதவாகன மன்னர்களுள் வீரர்கள் மட்டுமல்ல புலவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது. சாதவாகன பேரரசின் ஆட்சிக்காலம் எத்தனை என்பதில் மாத்ஸ்ய புராணம் மற்றும் வாயு புராணங்களுக்குள் வேறுபாடு உள்ளது. மாத்ஸ்ய புராணம் மொத்தம் 30 மன்னர்கள் 450 வருடங்கள் ஆண்டார்கள் என்றும் வாயு புராணம் 17 மன்னர்கள் 300 வருடங்கள் ஆண்டார்கள் என்றும் சொல்கிறது. இவர்கள் மேற்கு சத்ரபதிகளிடம் தங்கள் ஆட்சியை இழந்தனர்.
உதவிய நூல்கள் :
விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்


Comments
Post a Comment