1) மெளரிய பேரரசு - சாணக்யர்
சாணக்கியர் : (கி.மு.350 - கி.மு.275)
இந்திய சரித்திரத்தை பற்றி பேசினாலே சாணக்யரை தவிர்த்துவிட்டு பேசமுடியாது. அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதிய இராஜதந்திரங்களை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தவர் அல்லவா? சாணக்யர் என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவரின் இயற்பெயர் விஷ்ணு குப்தர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்னு என்று தெரியவில்லை. கெளடில்யர் என்றும் அழைப்பார்கள். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளத்தை சேர்ந்த விஷ்ணு குப்தர் நாளந்தா பல்கலைகழகத்தில் படிப்பை படிக்க வந்து பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா) வந்து சேர்ந்தார். நந்தர்கள் வம்சத்தின் கடைசி அரசனான தனநந்தன் அரசவையில் சேர்ந்தார்.நந்தர்கள் அதாவது தனநந்தனின் தந்தை எப்படி ஆட்சியை பிடித்தார் என்பது கேவலமான ஒன்று. மகாராணியின் கள்ளக்காதலனாக இருந்து மகாராஜாவை கொன்று ஆட்சியில் அமர்ந்தவர் தனநந்தனின் தந்தை. தனநந்தனின் ஆட்சியும் கொடுங்கோல் ஆட்சியே. மக்களை வாட்டி வைக்கவும் வரிகளை அதிகப்படுத்தினார். இந்த சமயத்தில் அவரிடம் வந்து வேலைக்கு அமர்ந்த விஷ்ணுகுப்த கெளடில்யரை விருந்துக்கு அழைத்து குடுமியை பிடித்து இழுத்து வெளியே தள்ளி அவமானப்படுத்தினார். அவையில் இருந்து அவமானப்படுத்தியதற்கு காரணமாக தனநந்தர் அதிகப்படியான அன்னிய முதலீட்டை நாட்டில் அதிகரிக்க முடிவு செய்ததும் அது நாட்டை வீழ்ச்சிக்கு கொண்டு செல்லும் என்று விஷ்ணுகுப்தர் எதிர்ப்பு தெரிவித்ததும் தான் காரணம். அன்று உன்னை ஒழிக்காமல் அவிழ்ந்த குடுமியை முடியமாட்டேன் என்ற விஷ்ணுகுப்தரின் சபதமும் அதை நிறைவேற்றிய விதமும் பயங்கரமானது. இதன் பிறகிலிருந்து அவரை சாணக்யர் என்று அழைப்போம்.
காட்டிற்கு வந்த சாணக்யரை காட்டுவாசி வளர்த்த குழந்தையான சந்திரகுப்தன் மற்ற குழந்தைகளுடன் ராஜாவாக நடித்ததை பார்த்து இவர் ராஜாவாக இருக்க தகுந்தவர் என்று முடிவு செய்து அவரை வளர்த்த காட்டுவாசியிடம் இருந்து கூட்டி வந்து பயிற்சிகள் கொடுத்து தனநந்தனை போரிட்டு வீழ்த்த முயன்று ஒருமுறை தோற்றும் போனார். பின்னர் நாட்டை பிடிக்க எல்லையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தான் பிடித்து வரவேண்டும் என்று யோசனை உதிர்க்க அப்படியே செய்து தனநந்தனின் குடும்பத்தையே அழித்து சந்திரனை (விஷ்ணு குப்தர் என்ற தன் பெயரிலிருந்து குப்தர் சேர்த்து) சந்திரகுப்தராக மன்னனாக ஆட்சியில் அமர்த்தினார். மயில்கள் நிறைய உள்ள பகுதியில் இருந்து வந்ததால் மோர்ய ( மெளர்யா) வம்சம் என்ற பெயராக மாறியது.
கி.மு. 321ல் ஆட்சியில் அமர்ந்த சந்திரகுப்தர் கி.மு. 301ல் ஆட்சியில் இருந்து விலகி சமணத்தை தழுவி தற்போதைய கர்நாடகத்திலுள்ள சரவணபெலகுலாவில் துறவறம் இருந்து கி.மு.297ல் மறைந்தார். அவருக்கு பின் முடி சூடிய அவருக்கும் செல்லுக்கஸ் நிகேடர் மகளான அவரின் மனைவி ஹெலனாவுக்கும் பிறந்த மகனான பிந்துசாரன் அவருக்கு பின்னர் அவரின் மகன் சக்ரவர்த்தி அசோகர் முதலாக தொடர்ந்து கி.மு.180ல் மெளர்ய வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது. உண்மையில் பிந்துசாரன் சந்திரகுப்த மெளரியருக்கும் அவரது இன்னொரு மனைவியான துர்தராவுக்கும் பிறந்தவர்.
நிறைய பேருக்கு சாணக்யரை இராஜதந்திரி என்று தான் அறிந்திருப்பார்கள் ஆனால் அவர் மிகச்சிறந்த ஜோதிட நிபுணர் என்று அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே? சந்திரகுப்தனின் ஜாதகத்தை கணித்தவர் அவருக்கு ஓரே மகன் தான் என்றும் ஆனால் அவர் மனைவியின் மரணத்திற்கு பின்பு தான் பிம்பிசாரர் பிறப்பார் என்றும் கணித்தவர் என்றும் சொல்லுவார்கள். 7 மாத குழந்தையாக கருவில் இருக்கும் போது மரணமடைந்த சந்திரகுப்தரின் மனைவியின் வயிற்றை கிழித்து பிந்துசாரரை எடுத்து இளம்கன்றின் வயிற்றில் சூடாகவே இருக்குமாறு (இன்குபேட்டராக) வைத்தும் காப்பாற்றியதாக சற்று மிகைப்படுத்தி சொல்லப்பட்ட கதையும் உண்டு. பிந்துசாரர் பிறக்கும்போது அவரின் தாயான துர்தரா பிரசவத்தில் இறந்து போனார் என்பதே உண்மை. அதற்கு காரணமாக சந்திரகுப்தரை யாரும் விஷமிட்டு கொல்லக்கூடாது என்று தினமும் அவர் உணவில் விஷத்தை கலந்து கொடுத்து வந்தார். அதை அறியாமல் துர்தரா அவரது உணவை சாப்பிட விஷம் அவருக்கு சென்று மரணமடைந்தார். அதன் பின்னர் துர்தரா வயிற்றை கிழித்து பிந்துசாரரை வெளியே கொண்டு வந்தனர் என்று கூறுவர்.
சந்திரகுப்தரின் காலத்தில் தான் அலெக்சாண்டரின் தளபதியான செலுக்கஸ் நிகேடர் படையெடுத்து வந்ததும் அவரை தோற்கடித்ததும் நடந்தது. செலுக்கஸ் நிகேடரின் மகளை சந்திரகுப்தருக்கு மணம் முடித்த வரலாறும் உலகம் அறிந்தது.
சந்திர குப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்த அவர் மகன் பிந்துசாரனுக்கும் உதவினார். பின்னர் தான் அரசியல் உலகும் நினைக்கும் "அர்த்தசாஸ்திரம்" என்னும் நூலை எழுதினார். இது அவரின் கருத்துகள் மட்டுமன்று அவரின் முன்னோர்கள் அறிஞர்களின் கருத்துகளை ஒட்டுமொத்தமாக திரட்டி எழுதப்பட்டது. பிருஹஸ்பதி, மனு, பராசரர், அம்பி, உஷாணர்கள் போன்றவர்களின் கருத்துகளையும் விஷாலாக்ஷா,பரத்வாஜா போன்றவர்களின் கருத்துகளையும் திரட்டி தன்னுடைய கருத்துகளையும் சேர்த்து எழுதப்பட்ட நூல் தான் அரத்தசாஸ்திரம் என்று சொல்லிருக்கிறார்.
பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு நதிக்கரையோரமாக தன் குடிலை அமைத்துக்கொண்டு வாழ்ந்து மறைந்ததாகவும் சொல்லுகிறார்கள். கடைசிக் காலத்தில் அவர் கொடூரமாக கொல்லப்பட்டதாகவும் செய்திகள் உண்டு. சிலர் அவர் 200 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று கூட சொல்லுவார்கள். ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்பதே நிஜம். சிலர் கடைசி காலத்தில் தனது சொந்த ஊரான கேரளத்தில் வந்து வாழ்ந்து மறைந்ததாக கூட சொல்லுவர்.

👌👌
ReplyDeleteVery informative & authentic.
ReplyDelete