3) மெளரிய பேரரசு - அசோகர்
பிந்துசாரரின் மூத்த மனைவிக்கு பிறந்த மகனான சுசீமாவுக்கு பிறகு இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் தான் இந்த அசோகர். இயல்பிலையே கொடூர எண்ணம் கொண்டவர். 18 வயதிலையே உஜ்ஜைனியின் மீது படையெடுதது போகும்போது அங்கு தேவி என்ற பெண்ணை முதல் பார்வையிலையே காதலித்து மணம் புரிந்தவர். அவருக்கு மகேந்திரன் என்ற மகனும் சங்கமித்ரா என்ற மகளும் பிறந்தனர். இந்த மகேந்திரன் மற்றும் சங்கமித்ரா தான் பின்னாளில் பெளத்த சமயத்தை தழுவி தமிழகம் வந்து பெளத்தத்தை பரப்பி இலங்கை சென்று அங்கேயும் பரப்பி இன்று இலங்கையில் அரச மதமாக பெளத்தம் உள்ளது.
அதன் பின்னர் காரூவகி என்ற பெண்ணை மணந்தார். அவருக்கு பிறந்த மகன் தான் திவாலா. இந்த காரூவகியின் மீது கொண்ட காதலால் தான் புத்தமதத்தை பின்பற்றினார் என்றும் சொல்லுவார்கள். (அசோகனின் காதலி நூலில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது).
பின்னர் 3வது பத்மாவதி என்ற பெண்ணையும் மணந்தார்.
4வது மனைவியான அசந்தமித்திராவை அரசியல் காரணங்களுக்காக மணந்தார்.அவருக்கு பிறந்த குணாளா நற்குணங்கள் ஒருங்கே பெற்ற இரக்கமுள்ளவராக இருந்தார். அசோகரின் 5 வது மனைவியான திவ்யரக்ஸாவின் காதலை ஏற்றுக்கொள்ளாததால் இவரின் கண்பார்வையை பறித்ததாக கூட கதை உண்டு.
5வது மனைவியான திவ்யரக்ஸாவை மணமுடிக்கும் போது அவருக்கு வயது 60க்கு மேலாகிவிட்டது. அவள் முதலில் அசோகரின் மகனை காதலித்து முடியாமல் அசோகருக்கு மனைவியானார் என்று சொல்லுவார்கள். ஆனால் அசோகரின் தம்பிக்கு பார்த்த மணப்பெண்ணே இவர். இவரின் அழகை பார்த்து தம்பியை மிரட்டி அவரை சன்னியாசம் வாங்க வைத்து இவளை மணந்துகொண்டார் என்றும் கூறுவார்கள். இவளுக்கு வர்மக்கலை முதலிய எல்லா கலைகளும் அத்துப்படி. அதன்படியே குணாளரின் கண்பார்வையை வர்மக்கலையினால் பறித்தார்னு கூட செய்திகள் உண்டு.
சரி அசோகரின் மனைவிகளை விட்டுட்டு அவரின் அண்ணனிடம் வருவோம். அவரும் இவரை போல் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்தவர் தான். அசோகரை கொல்ல முயற்சித்து தோற்றவர். பட்டத்துக்காக அசோகர் அவரின் அண்ணன் சுசுமாவையும் மீதி இருந்த உடன்பிறந்தவர்களையும் கொன்று மீதியுள்ளவர்களை சிறைவைத்தே பட்டத்துக்கு வந்தார் என்று கூறுகிறார்கள் ஆனால் அண்ணன் சுசுமாவை கொன்றது மட்டுமே உண்மை. தன்னை கொல்ல முயன்ற அண்ணனை மட்டுமே கொன்றார். மற்றவை எல்லாம் புத்த மதத்தில் இணைந்த பிறகு அவரது கொடுங்கோல் தன்மையிருந்து மீண்டு புனிதராக ஆனார் என்பதற்காக கூறப்பட்ட உவமை கதை மட்டுமே. பிந்துசாரர் இறந்து 4 வருடங்கள் கழித்து பட்டத்துக்கு வந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த விவரங்கள் தான் மேலே சொன்னவை. இதுவும் ஊகங்களாக சொல்லப்பட்டவை தான். இந்த விஷயங்கள் இலங்கையை சேர்ந்த பெளத்தர்களால் அவர் பெளத்த மதத்திற்கு மாறியதும் பெளத்த மதத்தின் சிறப்பை உயர்த்துவதற்காக கட்டிவிடப்பட்ட கதைகளாகும். கிமு.273 பிந்துசாரர் இறந்ததும் ஆட்சிக்கு வந்தாலும் நான்கு ஆண்டுகள் கழித்தே கிமு.269ல் முடிசூட்டிக்கொண்டார். இதை தான் ஆராய்ச்சியாளர் வின்சென்ட் ஸ்மித் எழுதிய நூலில் அரியணை ஏறுவதற்கு முன்பு அரசை ஏற்று நடத்த பயிற்சி பெறும் பொருட்டே அவர் இதற்கு முன்பு அக்கால வழக்கப்படி தட்சசீலத்திலும், உஜ்ஜெயினியிலும் ஆளுனராக பணிபுரிந்தார் என்று சொல்லுகிறார். ஆனால் கலிங்க போருக்கு பின்னர் தான் அசோகர் பெளத்த மதத்தை ஏற்றுக்கொண்டார் என்பதும் தவறு. அதற்கு முன்பே பெளத்த மதத்திற்கு மாறினார். பிந்து சாரர் காலத்தில் தினமும் 60000 பிராமணர்களுக்கு உணவும் தானமும் வழங்கப்பட்டு வந்தது. கெளடில்ய சாணக்கியரின் உதவியோடு ஆட்சி அதிகாரத்தில் வந்தவர்கள் என்பதால் பிராமணர்களின் தலையீடு காரணமாக அரசாட்சியை விரும்பியபடி நடத்த முடியலைன்னு என்றே புத்த மதத்தை ஏற்றுக்கொண்டார் என்கிறார் ஜோசப் கித்ஹவா என்ற வரலாற்று ஆய்வாளர். ஒரே நேரத்தில் ஒரு பிட்சுவாகவும் மன்னராகவும் விளங்கினார் என்பதே சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மை. புத்த சங்கத்தின் தலைமை பொறுப்பையும் அதன் பாதுகாவலராகவும் இருந்துள்ளார். இந்திய சமயங்களில் காணப்படும் ஒற்றுமை சுயக்கட்டுபாடு உயிரின் மேன்மை போன்றவற்றை உணர்ந்த அசோகர் பிற மதங்களையும் மதித்தே நடந்தார். புத்த விஹாரைகளுக்கு அதிக நன்கொடை அளித்த சமயத்தில் அஜீவிக திகம்பரர்களுக்கும் இடங்களை அளிக்க நிறைய பணம் கொடுத்தார். இது போல சமணர்களுக்கும் பிராமணர்களுக்கும் நிறைய நன்கொடை அளித்தார். காஷ்மீரத்தில் அசோகரால் கட்டப்பட்ட நிறைய பிராமணர் கோயில்கள் உள்ளது.
அசோகரின் ஆரம்ப கால ஆட்சியில் அரண்மனை சமையலறையில் நூற்றுக் கணக்கான உயிரினங்கள் கறி சமைக்க கொல்லப்பட்டன என்பதையே அசோகர் தனது முதல் பாறை ஆணையில் (கல்வெட்டு) ஒப்புக்கொள்கிறார். பின்னர் பௌத்த சீடராக மாறிய பின்பு அதாவது அவரது 11 வது ஆட்சி ஆண்டில் இருந்து உணவுக்காக தினமும் இரு மயில்களும் ஒரு மானும் மட்டுமே கொல்லப்பட்டன. அவர் ஆட்சியேறிய 13வது ஆண்டிலிருந்து சமையலுக்காக உயிரினங்கள் கொல்லப்படுவது அறவே நிறுத்தப்பட்டது. தலைநகரில் உயிர் பலியும் மாமிசமும் தடை செய்யப்பட்டது. ஆனால் தலைநகர் தவிர மற்ற இடங்களில் உயிர்ப்பலி மாமிசம் ஆகியவை இருந்தது. அவர் ஆட்சியேறிய 15வது ஆண்டில் வேட்டையாடுவது நிறுத்தப்பட்டது. எருதுகள்,ஆட்டுக்கிடாக்கள், பன்றிகள் மற்றும் சேவல்கள் ஆண்மை நீக்கம் செய்வதோ மலடாக்குவதோ தடை செய்யப்பட்டிருந்தது. ஆண்டில் 56 நாட்களில் மீன்பிடிப்பதும் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டிருந்தது. குதிரைகளுக்கும் கால்நடைகளுக்கும் சூடு போடுவது தடை செய்யப்பட்டு இருந்தது. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முதியவர்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறினார். பித்த பிட்சுகள் சொல்லுவது போல மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்கவில்லை. கி.மு.243ல் ஒர் அவசர சட்டத்தின் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் முன்பு மூன்று நாட்கள் அவர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டது. அவர்கள் தங்களை மேலுலக வாழ்விற்கு தயார்படுத்தவே இந்த ஒய்வு. மற்ற அரசர்களிடமிருந்து அசோகர் காட்டிய தளர்வு இவ்வளவு மட்டுமே.
இவரது ஆட்சியில் மத ஒற்றுமையை கண்காணிக்க மகாமாத்ரர்கள் என்ற சிறப்பு அதிகாரிகள் இருந்தனர். உருட்டியோ மிரட்டியோ வன்முறையை பிரயோகித்தோ அரசாங்க அதிகாரிகள் நடந்துகொண்டால் கடுமையான தண்டனை உண்டு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவரின் கல்வெட்டுகள் பிராமி மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது.
அவரின் அண்ணன் சுசுமாவின் மறைவின் போது அவரின் மனைவி அந்த நேரத்தில் கருவுற்று இருந்தார். அவருக்கு பிறந்த மகள் வழியிலையே 400 வருடங்களுக்கு பிறகு குப்தர் வம்சம் தோன்றியதாக சொல்லுவார்கள்.
இப்படிப்பட்ட கொடூரமான அசோகர் எப்படி மனம் மாறி அமைதியை நாடினார். மகதத்திற்கு பக்கத்தில் உள்ள ராஜ்யம் தான் கலிங்கம்.கிமு.261ல் ஆட்சியில் ஏறிய 13 வருடத்தில் கலிங்கத்தின் மீது படையெடுத்தார். இது இன்றைய ஓரிஸா மாநிலம். அதன் மீது படையெடுதது சென்று வென்றார். இரு சம பலமுள்ள படைகள் மோதியதால் சேதம் பெருமளவு என்றும் யுத்தத்தின் காரணமாக தான் இனி போரே வேண்டாம். அமைதியே போதும்னு பெளத்த மதத்தை தழுவினார். படோபடமான ஆடை அலங்காரங்களை துறந்து சாதாரணமாக மனிதனாக துறவியை போல் அதன்பிறகு ஆட்சி நடத்தினார். தனது மகனையும் மகளையும் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் அனுப்பி பெளத்த மதத்தை பரப்பினார். 36 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் ஆண்ட அசோகர் கி.மு.232ல் மறைந்தார்.
அசோகரின் மறைவிற்குப் பின் ராஜ்யத்தின் மேற்கு பகுதியை அசோகரின் மகன் குணாளனும் கிழக்கு பகுதியை பேரன்களுள் ஒருவரான தசரத மெளரியரும் ஆட்சிபுரிந்தனர் என்று சொன்னாலும் அடுத்த ஆட்சியாளர் என்று தசரத மெளரியர் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. அசோகர் மறைந்து 50 வருடங்களில் கடைசி மெளரிய வம்ச அரசனான பிரகத்திர மெளரியனை (கிமு.185-180) இராணுவ புரட்சி மூலம் புஷ்யமித்திர சுங்கா என்ற தளபதி கொன்று ஆட்சியை பிடித்ததன் மூலம் மெளர்ய பேரரசு முடிவுக்கு வந்தது. இந்த கால கட்டத்தில் அரசு வெறும் மகதம் என்ற அளவில் மட்டுமே சுருங்கி இருந்தது.
மெளரிய பேரரசில் பாலி,பிராகிருதம், சமஸ்கிருதம் மற்றும் கிரேக்கம்( செலுக்கஸ் நிகேடர் மகளான ஹெலனாவை சந்திரகுப்த மெளரியர் மணந்ததன் விளைவாக கிரேக்கமும்) பேசப்படும் மொழிகளுள் ஒன்றாக இருந்தது.மக்கள் புத்தம், ஹிந்து மற்றும் சமணத்தை பின்பற்றினார்கள். வெள்ளி நாணயம் புழக்கத்தில் இருந்தது. அசோகர் ஒவ்வொரு மைலுக்கும் தூரத்தை கணக்கிட்டு மைல்கற்களை அமைத்தார். அதன் அருகில் கிணற்றை வெட்டினார். பயணிகளின் வசதிக்காக நிழல் தரும் மரங்களை சாலையின் ஓரங்களில் நட்டார். இது மட்டுமின்றி பயணிகளுக்காக இளைப்பாறும் விடுதிகளையும் குடிநீர் வசதியையும் உணவு வசதிகளையும் ஏற்படுத்தி தந்தார். இதனால் சாம்ராஜ்யத்தின் எல்லா பகுதிகளும் தலைநகரமான பாடலிபுத்திரத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. சிந்து நதிக்கு கிழக்கே பஞ்சாப்பில் பியாஸ் நதிவரையான பகுதிகள் சந்திரகுப்தரின் கைகளுக்கு மாறியதாலும் செலுக்கஸ் நிகேடரால் அரியா, அரகோசியா, ஜெட்ரோசியா, பாரபனிசடை பகுதிகளும் கொடுக்கப்பட்டதால் மெளரிய எல்லை இந்துகுஷ் நதிவரை பரவியிருந்தது. சிரியா மன்னர் ஆன்டியோகஸ் அசோகரை அண்டை நாட்டு மன்னர் என்று குறிப்பிடுவதால் சிரியா பேரரசு வரை மெளரியர்களின் பேரரசும் பரவியிருந்ததை அறியமுடியும். அசோகரின் அரண்மனையின் தூண்கள் இன்றைய பாட்னா இரயில் நிலையம் அருகிலுள்ள கும்ராஹார் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கும்ராஹார் அரண்மனை அசோகரின் பாட்டனாரின் அரண்மனையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். கும்ராஹார் கிராமத்தில் பாட்னாவையும் பங்கிப்பூரையும் இணைக்கும் ரயில் பாதைகளின் தெற்கே பழைய அரண்மனைகள் புதைந்துள்ளதாக வழிவழிச்செய்திகளாக உள்ளது. அசோகர் 84000 தர்மராஜிகாக்களை கட்டினார் என்று "திவ்யாவதனா" என்ற நூல் குறிப்பிடுகிறது. அஜாதசத்ரு நிறுவிய ஸ்தூபிகளிலிருந்து புத்தரை எரித்த சாம்பல்களை எடுத்து 84000 ஸ்தூபிகளிலும் வைத்ததாகவும் செய்திகள் கூறுகிறது. ஆனால் கல்வெட்டுகளை கொண்ட அசோகரின் பத்து பாறை ஆணைகள் அடங்கிய தூண்களை மட்டுமே கண்டுபிடித்துள்ளனர்.
1) டில்லி தோப்ரா:
தோப்ரா என்னுமிடத்திலிருந்து சுல்தான் ஃபெரோஸ் துக்ளக் ஃபிரோஸாபாத் நகருககு கொண்டு வந்து நிறுவினார்.
2) டில்லி மீரட் :
மீரட்டிலிருந்து எடுத்து வந்து ஃபொரோஸ் துக்ளக் தனது வேட்டை மாளிகையில் நிறுவினார்.
3) அலகாபாத் கெளசாம்பி :
சுல்தான் ஃபெரோஸ் இதை கெளசாம்பியிலிருந்து எடுத்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
4) லெளரியா அரராஜ் :
லெளரியா குக்கிராமம் அரராஜ் மஹாதேவ் ஆலயத்தின் தென்மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது.
5) லெளரியா நந்தன்கார் :
லெளரகயா என்ற பெரிய கிராமத்தில் நேபாள சாலையில் மாத்தியாவிலிருந்து வடக்கே 3 மைல் தொலைவில் உள்ளது.
6) ராம்பூர்வா :
ராம்பூர்வா கிராமத்தில் பிபாரியா கிராமத்தில் இருந்து வடகிழக்கே 1 மைல் தூரத்தில் அமைந்துள்ளது.
7) சாஞ்சி :
சாஞ்சி ஸ்தூபத்தின் தென் நுழைவாயில் அருகே அமைந்துள்ளது.
8)சார்நாத் :
சாரநாத்தில் காசியிலிருந்து வடக்கே 3 1/2 மைல் தூரத்தில் உடைந்து காணப்படுகிறது.
9) ரும்மின்டி :
நேபாளத்திலுள்ள ரும்மின்டியில் ஒரு ஆலயத்தினுள் உள்ளது.
10) நிக்லீவா :
நேபாளத்தில் நிக்லீவா கிராமத்தில் வடமேற்கே 13 மைல் தூரத்தில் உள்ளது.
கி.மு.262ல் வெளியிடப்பட்ட கல்வெட்டில் " இதற்கு முன்பு அரசாங்க வேலைகளை சரிவர கவனிக்க முடியாத நிலையிலும் தகவல்களை சரியான நேரத்திலும் பெற முடியாத இருந்த நிலையில் இந்த கல்வெட்டில் புதிய ஆணையை வெளியிட்டுள்ளார். நான் உணவு உண்டு கொண்டு இருந்தாலும் அந்தப்புரத்தில் ஓய்வாக இருந்தாலும் கேளிக்கைகளுக்காக பூங்காவில் இருந்தாலும், தேரிலையோ பல்லக்கிலோ பயணம் செய்து கொண்டு இருந்தாலும் அரசாங்க ஊழியர்கள் மூலம் மக்கள் பிரச்சினைகள் உடனடியாக அனுப்பப்படவேண்டும். வேலைகளை செய்வதிலும் கடுமையாக உழைப்பதிலும் நான் ஒருபோதும் போதும் என்ற மனநிலையில் இருந்ததில்லை. மக்கள் அனைவரது நலத்தையும் பேணுவதையே என்னுடைய கடமையாக நினைக்கிறேன். மக்களின் நலனை முன்னெடுப்பதை விட முக்கியமான வேலை எதுவும் இல்லை. இது எனது தர்ம ஆணை. இதை எனக்கு பின்னால் வரும் எனது மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததிகளும் இதன்படி நடப்பதற்கே இந்த கல்வெட்டு எழுதப்பட்டிருக்கிறது" என்று கல்வெட்டில் குறித்துள்ளார்.
அசோகரை பற்றிய இந்திய கதைகள்:
கதை : 01
பாடலிபுத்திரத்தை ஆண்ட அரசர் பிந்துசாரருக்கு ஏற்கனவே "சுசீமா" என்ற மகன் இருந்தான். இரண்டாவதாக பிராமணனின் மகளான சுபத்ராங்கியை இரண்டாவது ராணியாக மணந்துகொண்டதில் அவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். அவர்களின் மூத்த மகன் அசோகன் இளைய மகன் விகதாசோகன். இரு மைந்தர்களின் எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ள பிந்துசாரர் "பிங்களவத்சாஜிவா" என்பவரை கலந்து ஆலோசித்தார். அவர் அரசரிடம் உண்மையை சொல்லாமல் இராணி சுபத்ராங்கியிடம் உண்மையைச் கூறிவிட்டார். பிந்துசாரருக்கு பிறகு அசோகன் தான் அரியணை ஏறுவார் என்றும் மற்றொரு மைந்தன் விகதாசோகன் துறவறம் மேற்கொள்வார் என்றும் கூறினார். அசோகரை இழிவாக கருதிய பிந்துசாரர் தட்சசீலத்தில் முற்றுகையிட அவருக்கு போதிய தளவாடங்களை கொடுக்கவில்லை. குறைவான ஆயுதங்களுடன் மன்னரின் கட்டளைக்கு அடிபணிந்து முற்றுகைக்கு கிளம்பினார். அசோகர் படையுடன் தட்சசீலத்தில் நெருங்கியதும் அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து அமைச்சர்களுக்கும் தங்களுக்கும் தான் பிரச்சினையே தவிர உங்களிடம் எந்த சச்சரவும் இல்லை என்று கூற எந்தவித போரும் இன்றி தட்சசீலம் ஸ்வசஸ் நாடும் இளவரசரை பணிந்து ஏற்றுக் கொண்டதும் அவர் தலைநகர் திரும்பினார். இதற்கிடையில் அரசரின் மூத்தமகன் சுஷ்மா தோற்றத்தில் விளையாடிவிட்டு அரண்மனை வந்தான். அப்போது அவனது கையுறையை பிரதம அமைச்சர் "கல்லாதகர்" தலைமீது விளையாட்டாக எறிந்து விட்டான். இதனால் கோபமடைந்த கல்லாதகர் சுஷ்மாவை விலக்கிவிட்டு அரியணை ஏறவேண்டும் என்று முடிவு செய்தார். இந்த நேரத்தில் தட்சசீலத்தில் மக்கள் திரும்பவும் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை அடக்குவதற்காக இளவரசர் சுசீமா அனுப்பப்பட்டார். அவரால் முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை. அந்த நேரத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த பிந்துசாரர் அசோகர் தட்சசீலத்திற்கு அனுப்பிட்டு சுசீமாவை திரும்ப அழைத்துக் கொள்ள விருப்பப்பட்டார். இதனால் சுசீமாவை அரியணை ஏற்றிவிடலாம் என்று மன்னர் நினைத்தார். இருப்பினும் அமைச்சர்கள் சூழ்ச்சியின் மூலமாக சுசீமாவை விலக்கிவிட்டு மன்னர் மறைந்த அடுத்த கணமே அசோகருக்கு முடிசூட்டினார்கள். பாடலிபுத்திரம் நோக்கி விரைந்து வந்த சுசீமாவை கோட்டைக் கதவுகளை அடைத்து அசோகரும் அவரது அமைச்சர் ராமகுப்தரும் நுழையவிடாமல் காவல் காத்தனர். சுசீமா ஏமாற்றப்பட்டு ஒரு பள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய்யில் விழுந்து உயிர் இழக்க வேண்டும் என்ற அவர்களின் திட்டம் நிறைவேறியது.
கதை : 02
அசோகர் தனது ஆணையை எதிர்த்த 500 அமைச்சர்களை வெட்டி வீழ்த்தினார். மற்றொரு நாள் அசோகரை கேலி செய்த அரண்மனை பணிப்பெண்கள் 100 பேரை உயிருடன் கொளுத்த செய்தார். இதனால் அச்சமடைந்த அமைச்சர்கள் மன்னரை அணுகி அவரது கரங்களால் பாவச் செயல்கள் செய்ய வேண்டாம் என்றும் தண்டனை நிறைவேற்ற வேறு ஒருவரை நியமிக்குமாறு வேண்டிக்கொண்டனர். இதற்காக "சந்திரகிரிகன்" என்ற சிறைக்காவலனை நியமனம் செய்தார். இவன் விலங்குகளை கொடுமைப்படுத்துபவன். மேலும் அவன் தனது தாய் தந்தையை கொன்று போட்டவன். இவன் ஒரு கவர்ச்சிகரமான சிறைக் கூடம் அமைத்து அதன் உள்ளே நுழையும் மக்களை சித்திரவதை செய்து கொன்று குவித்தான். ஒரு நாள் "பால பண்டிதர்" என்ற துறவி தெரியாமல் சிறையின் வாயினுள் நுழைந்துவிட்டார். அவர் பிடித்து கழிவுகள் அடங்கிய கொப்பரையில் தள்ளப்பட்டார். கொப்பரையின் அடியில் தீ எரிந்துகொண்டிருந்தது. சிறைக்காவலன் கொப்பறையை குனிந்து பார்த்தபோது "பாலபண்டிதர்" தீயினால் பாதிக்கப்படாமல் ஒரு தாமரை மலர்மீது அமர்ந்திருப்பதைக் கண்டான். இச்செய்தி அரசருக்குத் அறிவிக்கப்பட்டவுடன் அசோகர் நேரில் வந்து அந்த காட்சியை பார்த்தார். அந்த காட்சியை கண்டதாலும் பாலபண்டிதரின் அறிவுரையினாலும் மனம் திருந்திய மன்னர் தீய வழியை விட்டு உண்மையான சமயத்தை தழுவினார். அந்த சிறைச்சாலை இடிக்கப்பட்டு சிறைக் காவலன் உயிருடன் எரிக்கப்பட்டான். இந்த கதை "அசோகாவதனா"வில் வருகிறது. பாலபண்டிதர் என்பவரே மகாகுப்தர் என்றும் கூறுகிறார்கள்.இதை நிகழ்வை பற்றி ஹூவான்சுவாங் விரிவாக குறிப்புகள் எழுதியுள்ளார். இந்தச் சிறைச்சாலை பாடலிபுத்திரத்தில் (இன்றைய பாட்னா) இருந்ததாகவும் அதை நரகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
கதை : 03
அசோகரின் ஐந்தாவது மனைவியான திவ்யரக்ஸா ஒழுக்கமற்ற கொள்கையை கொண்ட ஒரு பெண். இவர் கவர்ச்சியான கண்களை உடைய அசோகரின் நாலாவது மனைவியான அசந்தமித்ராவின் மகன் குணாளன் மீது மையல் கொண்டார். குணாளன் மாற்றான் தாயின் முறையற்ற செயலால் மிகவும் அச்சம் அடைந்தான். தனது காதலை ஏற்றுக்கொள்ளாத குணாளன் மீது திவ்யரக்ஸா கோபம் கொண்டாள். இதனால் மன்னரிடம் மெல்ல பேசி இளவரசர் குணாளரை தட்சசீலத்திற்கு பணி நிமித்தமாக அனுப்பி விட்டாள். குணாளரும் அசோகரின் ஆணைக்கு கட்டுப்பட்டார். தனது பல் முத்திரை மூலம் வரும் உத்தரவுகளுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும் என்று அசோகர் ஆணையிட்டார். சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அசோகர் தூங்கிக் கொண்டிருக்கும் போது இராணி திவ்யரக்ஸா குணாளரின் கண்களை பறிக்க வேண்டும் என்று கோரி அசோகரின் பல் முத்திரையை பதித்து தட்சசீலத்தில் அமைச்சர்களுக்கு ஓலை அனுப்பினார். இதனால் இளவரசர் குணாளரின் கண்கள் பறிக்கப்பட்டது. அவரும் அவர் மனைவியும் அரண்மனையை விட்டு வெளியேறி பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தினர். பாடலிபுத்திரம் வந்தவர்கள் அரண்மனை வெளியே இருந்து சோகப்பாடல் பாட அது தன் மகனின் குரல் என்று அறிந்த மன்னர் அசோகர் அனைத்திற்கும் காரணம் தனது 5வது மனைவி திவ்யரக்ஸா தான் என்று உணர்ந்து அவளை உயிருடன் எரிக்கச் செய்தார். அவருக்கு உதவிய அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். சிலர் நாடு கடத்தப்பட்டனர். மேலும் சிலர் மரண தண்டனை பெற்றனர் பின்னர் "கோஷா" என்ற மாமுனிவரை அழைத்து வந்து தனது மகன் பார்வையை திரும்ப பெற உதவிடுமாறு வேண்டிக்கொண்டார். அவ்வாறு முனிவரின் உத்தரவின்படி சேகரிக்கப்பட்ட நாட்டு மக்களின் கண்ணீரில் குணாளரின் கண்கள் கழுவப்பட்டு அவர் மீண்டும் பார்வை பெற்றார்.
கதை : 04
அசோகர் தீர்க்க முடியாத நோயினால் அவதிப்பட்டு வந்தார் இதன்பொருட்டு திவ்யரக்ஸா அசோகரை அணுகி அவரது நோயை நிபந்தனைக்கு உட்பட்டு தான் தீர்ப்பதாக கூறினார். அதன்படி அனைத்து மருத்துவர்களையும் அரண்மனைக்கு வருவதை தடை செய்ய வேண்டும். தான் சொல்லுவதை தடையில்லாமல் ஏற்று உண்ண வேண்டும். இந்த நிபந்தனைக்கு அசோகர் ஒப்புக் கொண்டால் தான் அரசரின் நோயைத் இருப்பதாக கூறினாள். அசோகரும் ஒத்துக்கொள்ளவே அரசருக்கு வந்துள்ள நோய் போன்ற ஒரு நோயால் வாடும் ஆண் பெண் யாராக இருந்தாலும் தன்னை வந்து பார்க்கலாம் என்று திவ்யரக்ஸா அறிவித்தார். ஒரு இடையன் அதுபோன்ற நோயினால் அவதிப்பட்டு வந்தான். அவனை மருத்துவரிடம் அனுப்பி அவனது உடல் நிலையை சோதனைக்கு உண்டாக்கினார். பின்னர் ராணி அவனை ஒரு ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று அவனை கொன்று விட்டாள். அவனது உடலை கிழித்து பார்த்ததில் மிகப்பெரிய புழு ஒன்று குடலில் இருப்பதைக் கண்டாள். அந்த புழுவின் மீது சுக்கு மிளகுதூள் தூவியும் இதனால் எந்த விளைவும் ஏற்படவில்லை. ஒரு வெங்காயத்தை கொண்டு அதனை தொட்ட போது அது மடிந்து உடலை விட்டு வெளியேறியது. உடனே ராணி திவ்யரக்ஸா மன்னரை அணுகி உடல்நிலை சரியாக ஒரு வெங்காயத்தை உண்ணுமாறு வேண்டினார். அசோகர் நான் ஒரு சத்ரியன் நான் எவ்வாறு வெங்காயத்தை என்பது விளங்கினார். அரசே தாங்கள் முழுமையாக அப்படியே விழுங்கி விடுங்கள் அப்போதுதான் உயிர் பிழைப்பீர்கள் என்று கூற அரசர் வெங்காயத்தை சாப்பிட்டார். வயிற்றில் உள்ள புழு இறந்து குடல் வெளியே வெளியே வந்துவிட்டது.
உதவிய நூல்கள் :
அசோகர் மெளரிய சிங்கம் - அசோக் கே.பேங்கர்
அசோகனின் காதலி - அரு.ராமநாதன்
அசோகர் - வின்ஸென்ட் ஸ்மித்
விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்




Comments
Post a Comment