2) மெளரிய பேரரசு - சந்திரகுப்த மெளரியர் & பிந்துசாரர்
சந்திர குப்த மெளரியர் :
காலம் : (கி.மு.342 - கி.மு.297 )
ஆட்சி : (கி.மு.321 - கி.மு.298)
தனநந்தனின் அரசவையில் நேர்ந்த அவமானத்தினால் அரசவையில் இருந்து வெளியேறிய கெளடில்யர் பாடலிபுத்திரலிருந்து (பாட்னா) தட்சசீலத்திற்கு திரும்பிய வழியில் காட்டுப்பகுதியில் இளவயதில் சந்திரகுப்தனை கண்டு அவனிடம் தளபதிக்குரிய திறமையை கண்டு அவனை வைத்தே தனநந்தனை அழிக்க எண்ணம் கொண்டார். தெளிவான பிறப்பு ஆதாரங்கள் இல்லாததால் ராஜ வம்ச ஆணுக்கும் (சூரிய குப்த மெளரியர்) சூத்திர பெண்ணுக்கும் பிறந்தவர் (முரா) என்றும் பரம்பரையாகவே வேடர் பரம்பரையில் வந்தவர் என்றும் கூறுவர். கல்வி அரசியல் போர்த்தந்திரங்கள் அனைத்தையும் சாணக்கியரிடம் கற்றார். அவரது தந்தையை கொன்று கர்ப்பவதியாக இருந்த தாயை மகாநந்தன் (தனவந்தர்) விரட்டியடித்தான் என்றும் காட்டில் குழந்தையை (சந்திரன்) முரா பெற்றெடுத்தாள் என்றும் அதனால் தந்தை வழியில் மெளரிய வம்சம் வந்தது என்றும் தாயின் பெயரான முரா என்பதிலிருந்து "மெளர்ய" என்ற சொல் வந்தது என்றும் அவர்கள் வசித்த காட்டு பகுதியில் மயில்கள் (மோரா) அதிகம் என்பதாலும் மெளர்ய வம்சம் என்று வந்ததாகவும் கூறுவர்.
சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில் ஒரு நல்ல நாளில் சிறு படையை திரட்டி எல்லைப்புறங்களை கைப்பற்றினார். இதற்கு ஒரு கதை சொல்லுவார்கள். முதலில் பாடலிபுத்திரத்தை தாக்கி தோல்வியில் முடிந்து காட்டுக்குள் சந்திரகுப்தன் ஒடி வந்தாராம். அந்த நேரத்தில் ஒரு வயதான மூதாட்டியிடம் பசிக்கிறது என்று கேட்க அவர் சூடான சாதத்தை பரிமாற நடுப்பகுதியில் கைவைத்து சாப்பிட முயல அது கையை சுட்டு விட்டதாம். பாட்டி தம்பி என்ன சந்திரகுப்தர் மாதிரி நடுவில் எடுத்தவுடன் கைப்பற்ற முனைகிறாய்? சாதத்தின் ஓரங்களில் சூடு ஆறியிருக்கும். அதை மெல்ல மெல்ல சாப்பிட்டுவிட்டு வந்து மைய பகுதியை சாப்பிடு என்று கூற சந்திரகுப்தருக்கும் தன் தவறு புரிந்து மெல்ல மெல்ல எல்லைப்புறங்களை கைப்பற்றி நந்த பேரரசு வலு இழந்த சமயத்தில் பாடலிபுத்திரத்தை கைப்பற்றி தனது 20ம் வயதில் (கி.மு.322)ல் மகத நாட்டின் மன்னனாக அரியணை ஏறினார். இந்த கதையை மகத நாட்டை கைப்பற்றும் போது நடந்ததாகவும் கூறுவர்.
பேரரசர் அலெக்சாந்தர் படையெடுப்பில் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகள் அவர் வசம் போனதும் அவர் கி.மு.323ல் மரணமடைந்ததும் அவர் வென்ற பகுதிகளை எல்லாம் அவரது தளபதிகள் ஆண்டனர். அவ்வாறான இந்தியாவின் கிரேக்க காலனிகளை அவரின் தளபதி "செலுக்கஸ் நிகேடர்" ஆண்டு வந்தார். கி.மு.317ல் செலுக்கஸ் நிகேடரை தோற்கடிக்க அவர் வசமிருந்த ஆப்கானிஸ்தான் பலுசிஸ்தான் பகுதிகள் சந்திரகுப்தர் வசம் வந்தது. கூடவே தன் மகளான "ஹெலெனா"வை சந்திரகுப்தருக்கு மணம் முடித்து வைத்தார். பின்னர் விந்திய மலைச் சாரல் தாண்டி தக்காண பீடபூமி வரை அவரின் சாம்ராஜ்யம் விரிவடைந்தது. மேற்கே பெர்ஷியா வரை அவரின் ராஜ்யம் விரிந்து இருந்தது. அவரது படையில் 1 1/2 லட்சம் வீரர்கள், 30,000 குதிரைகள், 9000 யானைகள், 8000 தேர்கள் இருந்ததாம்.
சந்திரகுப்தருக்கு துர்தாரா என்ற மனைவி மூலம் பிந்து சாரர் பிறந்ததாகவும் எதிரிகள் சந்திரகுப்தருக்கு விஷம் வைத்து கொல்லக்கூடாது என்பதால் சாணக்கியர் ஏற்பாட்டின் படி அவர் உணவில் சிறிது சிறிதாக விஷம் ஏற்றப்பட்டதாகவும் அது தெரியாமல் அவரின் மனைவி துர்தாரா நிறைமாத கர்ப்பமாக இருக்கும் போது அந்த விஷ பானத்தை பருகியதால் மரணமடைந்ததாகவும் அவரின் வயிற்றை கிழித்து பிந்துசாரரை உயிர் பிழைக்க வைத்ததாகவும் கூறுவர். அவரின் இரண்டாவது மனைவி ஹெலெனாவுக்கு குழந்தையில்லை என்றும் கூறுவர். சிலர் ஹெலனாவுக்கு ஜஸ்டீன் என்ற மகன் இருந்ததாகவும் கூறுவர்.
இன்றைய ஆட்சிமுறையில் இருக்கும் துறைகள் போல் 6 முக்கிய துறைகள் இருந்தது. நீதியும் காவலும் தழைத்தோங்கியிருந்தது. சாணக்கியர் வழிகாட்டுதல்படி முறையான நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. தண்டனைகள் மிகவும் கடுமையாக இருந்தது. சாதாரண திருட்டு மற்றும் வரி ஏய்ப்புக்கு கூட மரண தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் தவறு செய்யவே பயந்தனர். திருட்டு குற்றங்கள் அறவே கிடையாது. சந்திர குப்தரின் எப்படி ஆண்டார் என்பதை சாணக்கியரின் "அர்த்தசாஸ்திரம்" மூலமும் அவர் ஆட்சியில் நாடு எப்படி இருந்தது என்பதை மெகஸ்தனிஸ்ஸின் "இண்டிகா" நூலின் மூலமும் அறியலாம். குப்தர்கள் ஆட்சியில் பஞ்சாயத்து ஆட்சி சிறப்பாக நடந்ததாக இண்டிகா நூலில் மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார். கி.மு.298 வரை அரசாண்ட சந்திரகுப்தர் கடைசி நாட்களில் சமண மதத்தை தழுவி அரசை தன் மகன் பிந்துசாரரிடம் கொடுத்து விட்டு இன்றைய கர்நாடகாவிலுள்ள "சரவணபெலகுலா"வில் வந்து பத்திரபாகு முனிவருடன் உண்ணாநோன்பு இருந்து உயிர் துறந்தார். இவரது நினைவாக கட்டப்பட்ட பழைமையான கோவில் தான் சந்திராபாஸ்டி ஆகும்.
பிந்து சாரர் : (கி.மு.320-273)
ஆட்சி : (கி.மு.298-273)
சந்திரகுப்த மெளரியர் சமண மதத்தை தழுவி சரவணபெலகுலாவுக்கு செல்லும் முன் தனது மகனான பிந்துசாரருக்கு முடிசூட்டி விட்டு சென்றார் . பிந்துசாரர் செலுக்கஸ் நிகேடரின் மகளான ஹெலனாவுக்கு பிறந்தவர் என்று கூட சொல்லுவார்கள். அது உண்மையில்லை. சந்திரகுப்தர்-ஹெலனா திருமணம் நடந்ததே கி.மு.317. அதற்கு 3 வருடங்களுக்கு முன்பே பிந்துசாரர் பிறந்துவிட்டார். இவர் சந்திரகுப்தர்-துர்தரா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர். பிந்துசாரருக்கு பிறந்த மகன்களே அசோகர், சுசீமா மற்றும் விதாசோகன் ஆகியோர். தந்தை உருவாக்கிய பேரரசை அப்படியே நிர்வாகம் செய்தார். துணைக்கு தந்தை விட்டு சென்ற சாணக்கியரின் ஆலோசனைப்படி. இவரது வாழ்க்கை வரலாறு சந்திரகுப்தரை போல அசோகரை போல விரிவாக குறிப்பிடப்படவில்லை. சரித்திரத்தில் ஆங்காங்கு புத்தமத கதைகளின் வரும் செய்திகளாக இவரின் பெயர் வருகிறது. மகாவம்ச செய்திகளின் படி பிந்துசாரருக்கு 101 மகன்களும் 16 மகள்களும் உண்டு. சுசீமா மூத்த மனைவிக்கும் அசோகர் விதாசோகன் ஆகியோர் பிராமண மனைவி சுபத்ராங்கிக்கும் பிறந்தவர்கள் என்று அசோகவர்த்தனா நூல் கூறுகிறது. இவரது காலத்தில் தான் மெளர்ய படைகள் தமிழகத்தை கைப்பற்ற கன்னட வடுகர்கள் படையின் துணையுடன் வந்தது. மெளரிய படைகள் சோழன் "செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி" தலைமையில் மூவேந்தர் படைகளால் துங்கபத்திரா நதிக்கரையில் தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டன. பிந்துசாரர் காலத்தில் கலிங்கமும் தமிழகமும் கேரளமும் இலங்கையை தவிர இந்தியாவின் அனைத்து பகுதிகளும் மெளரிய ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது.
உதவிய நூல்கள் :
அசோகர் - வின்ஸென்ட் ஸ்மித்
சாணக்ய நீதி - அபிஷேக்
விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்

Comments
Post a Comment