6) முற்கால சோழ பேரரசு
இந்திய சரித்திரத்தை எடுத்துக்கொண்டாலும் தமிழகத்து சரித்திரத்தை எடுத்துக்கொண்டாலும் சோழர்களின் பங்கு அதில் தனியே தெரியும். முதன்முதலில் கடல்கடந்து வேறு நாடுகளையும் தாய்லாந்து, மலேசியா, பர்மா , இலட்சத்திவூகள் வரை பரந்த பேரரசை உருவாக்கிய பெருமை கொண்டவர்கள். அதுவும் கிபி 10-11 நூற்றாண்டுகளில் அவர்களின் பேரரசு உச்சம் கொண்டிருந்தது. காலவரிசைப்படி பார்க்க இருப்பதால் இங்கே நாம் சங்ககால சோழ மன்னர்கள் மற்றும் அவர்களுக்கு முந்தையவர்களை பற்றி பார்ப்போம்.
சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தினர் என்று அடையாளப்படுத்தி கொள்கிறார்கள்.இவர்களின் சின்னமாக தங்களது கொடியில் புலியை கொண்டு இருந்தனர். அவர்களது செப்பேடுகளில் சூரியன், அவரது புதல்வரான மனு, அதன் பின் இஷ்வாகு, விருச்சி, மாந்தாதா போன்ற அரசர்கள் அந்த பரம்பரையில் ஆண்டார்கள்.
சங்க காலத்திற்கு முந்தைய மன்னர்களில் மிகவும் முக்கியமானவர்கள் என்றால் மனுநீதிச் சோழன், சிபிசக்கரவர்த்தி, முசுந்தன் மற்றும் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் ஆகியவர்கள்.
மனுச் சக்ரவர்த்தி ஆட்சியில் பசுங்கன்று இளவரசரின் தேர்காலில் சிக்கி மாண்டதால் தன் மகனையும் தேர்காலில் ஏற்றியவர் மனுச் சக்ரவர்த்தி. அச்சமயத்தில் இறைவன் தோன்றி பசுங்கன்றையும் இளவரசனையும் உயிர்ப்பித்ததாகவும் நீதிநெறி தவறாத ஆட்சியாளர் என்று மனுச் சக்கரவர்த்தியை புறநானூற்று பாடல்களில் இந்த சம்பவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
புறாவை இரையாக்க துடித்த பருந்துக்கு அதன் எடைக்கு ஏற்ப தன் தசையை அரிந்து கொடுத்த வள்ளல் சிபி சக்ரவர்த்தி பற்றியும் விக்கிரம சோழன் உலா புகழ்கிறது.
இந்த வம்சத்தில் வந்த இன்னொரு அரசனான முசுகுந்தன். சிறந்த சிவ பக்தன் இவர். இவர் காலயவனன் என்ற அரக்கனை அழித்து விஷ்ணுவின் அன்பை பெற்றவர். இந்திரன் இவருக்கு உதவியாக இருக்க பூதம் ஒன்றை அனுப்ப அது பூம்புகாரில் உள்ள நாளங்காடியின் சதுக்கத்தில் காவல் பணியை செய்தது. இந்திர விழா நடக்காவிட்டால் பூதம் கோபமடையும் என்பது நம்பிக்கை.
இவர்களின் வரிசையில் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்ற மன்னரும் உண்டு. இவர் தான் முதன்முதலில் அகத்திய முனிவரின் கட்டளையை ஏற்று பூம்புகார் நகரத்தில் இந்திர விழா கொண்டாட்டத்தை செய்தவன் என்று மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோப்பெருஞ்சோழன் தன் மக்களே தன் மீது படையெடுக்க வந்ததால் அவர்களிடமே தன் அரசை ஒப்படைத்து விட்டு வடக்கிருந்து உயிர் துறந்தவர். அப்போது என் நிலை அறிந்து என்னை இதுவரை காணாத நண்பர் பிசிராந்தையாரும் அருகே வருவார். அவருக்கும் இடம் விடுக என்று கூறியவர். கோப்பெருஞ்சோழன்-புலவர் பிசிராந்தையார் நட்பும் சங்ககாலப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி : (கி.மு.275)
இந்த பெயரில் பல சோழ அரசர்கள் இருந்திருக்கிறார்கள். இவரே அவர்களில் மூத்தவராக இருக்கலாம். புறநானூற்றில் இவரது போர் வெற்றிகளை பற்றி பாடல்கள் எழுதப்பட்டுள்ளது. சந்திரகுப்த மெளரியர் தோற்றுவித்த மெளரிய பேரரசில் அவருக்கு பின் வந்த அவர் மகன் பிந்துசாரரின் ஆட்சியில் தென்புல படையெடுப்பு நடந்ததாகவும் மெளரியர்கள் கன்னட வடுகர்களின் துணை கொண்டு வந்ததாகவும் அவர்களின் துளு நாட்டின் பாழி கோட்டையை பிடித்துக்கொண்டு தமிழகம் நுழைந்தவர்களை ஒடஒட விரட்டியடித்து சென்றதால் இவரை "வட வடுகர் வாள் ஒட்டிய" என்று மாமூனார் என்ற புலவர் குறிப்பிடுகிறார். பிந்துசாரரின் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்பதிலிருந்து இவரும் அதே காலத்தவர் என்று அறிய முடிகிறது.
உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி :
இவர் பலதரப்பட்ட தேர்களை செலுத்துவதில் வல்லவன் என்பதால் இந்த பெயர் பெற்றார். இவருடைய மகனே கரிகால் பெருவளத்தான். இளஞ்சேட்சென்னிக்கும் அழுந்தூர் வேளிர் மகளுக்கும் பிறந்தவர் தான் கரிகால் பெருவளத்தான். கரிகாலன் தாயின் வயிற்றில் தாயம் எய்தியவன் என்று பொருநராற்றுப்படை கூறுவதிலிருந்து கரிகாலன் கருவில் இருக்கும்போதே இளஞ்சேட்சென்னி அரசன் இறந்துவிட்டார் என்று தெரிய வருகிறது. இதற்கு அவனின் உறவினர்களே காரணம் என்று சொல்லப்படுகிறது.
கரிகால் பெருவளத்தான் :
சங்ககால சோழ மன்னர்களில் பெரும் புகழ் பெற்றவர் இவர். இந்த பெயரில் இரண்டு மூன்று பேர் இருந்தார்கள் என்று தெரிவித்தாலும் வர்ணனைகளிலும் அடிப்படை குணங்களிலும் ஒருவரே என்ற ஒற்றுமை நிலவுகிறது. இவரை பற்றி அகநானாறு, புறநானூறு நூல்களில் இவரை பற்றி பாடல்கள் உள்ளது. பத்து பாட்டு தொகுதியில் உள்ள பட்டினப்பாலையும் பெருநராற்றுப்படையும் கரிகாலனின் புகழை பாடுகின்றது. இவரது இயற்பெயர் திருமாவளவன் என்பதாகும். தாயின் வயிற்றில் இருக்கும்போதே தந்தை உறவினர்களால் கொல்லப்பட்டார். அடுத்த வாரிசான இவரை சிறுவனாக இருக்கும்போதே கொல்ல முயற்சி நடந்தது. அந்த கொலை முயற்சியில் இவரின் அரண்மனையில் தீவிபத்தை ஏற்படுத்த அதில் இருந்து இவர் தப்பினாலும் இவரின் கால் நெருப்பினால் சுடப்பட்டு கரியானதால் இவர் "கரிகாலன்" என்று அழைக்கப்ப்டடதாக பொருநராற்றுப்படை பாடல் கூறுகிறது. இதில் இருந்து தப்பிய கரிகாலன் தன் மாமனான இரும்பிடர்த்தலையர் உதவியால் மீண்டும் அரசை கைப்பற்றினார். சோழ அரியணையில் ஏறியவர் மேல் உறவினரான இளங்கோவேள் தலைமையில் 11 வேளிர்களும் சேர பாண்டியர்களும் போர் தெடுத்தனர். அவர்களை "வெண்ணிபரந்தலை" (தற்போதைய பெயர் கோவில் வெண்ணி, திருவாரூருக்கு அருகில் உள்ளது) என்னுமிடத்தில் அவர்களின் பெரும்படையை தோற்கடித்து விரட்டினார். மீண்டும் அவர்களில் 9 பேர் சேர்ந்து வர அவர்களை "வாகைப்பரந்தலை" என்னுமிடத்தில் தோற்கடித்து விரட்டியடித்தார். பகைவர்களை விரட்டியடித்த பின்னர் நாட்டை சீர்படுத்த ஆரம்பித்தார். குளங்கள் ஏரிகளை சீர்படுத்தினார். தலைநகர் உறையூரையும் காவிரிபூம்பட்டினத்தையும் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தார். காவிரியின் இருபுறமும் கரைகளை கட்டினார். பின்னர் இமயம் வரை படையெடுத்து புலிக்கொடியை பறக்க விட்டதாக பல்வேறு நூல்கள் கூறினாலும் அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆந்திர பிரதேசம் வரை படையெடுத்து சென்று வென்றிருக்கலாம் என்று கூறுகிறார்கள். இவரது காலம் கி.மு-கி.பி. முதலாம் நூற்றாண்டு என்று கருதுகிறார்கள். இவரே காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதியுறுவதை கண்டு ஆற்றின் நடுவே கட்டிய "கல்லணை" இன்றும் 2000 ஆண்டுகளை கடந்தும் தமிழனின் கட்டிடக்கலை வலிமையை பறை சாற்றுகிறது.
கிள்ளிவளவன் :
கரிகாலனுக்கு பிறகு சோழ நாட்டை ஆண்ட அரசன் கிள்ளிவளவன். இவனைத் தவிர நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆகிய அரசர்களும் கிட்டத்தட்ட சம காலத்தில் சோழ நாட்டில் ஆட்சி புரிந்தார்கள் என்பதற்கான சாட்சியாக மூவரையும் பாடிய புலவர்களின் பாடல்களால் புலப்படுகிறது. கிள்ளிவளவன் சிறந்த வீரனாக நல்லவனாகவும் சிறந்த ஆட்சியாளராக இருந்தார் என்று இவரைப் பற்றி பாடல்கள் கூறுகிறது. இவர் சேர நாட்டின் மீது போர் தொடுத்து கரூரை முற்றுகையிட முற்றுகையை பற்றி கவலைப்படாமல் சேரன் கோட்டைக்குள்ளேயே இருந்து வந்தான். இதைக்கண்டு வருந்திய ஆலந்தூர் கிழார் என்ற புலவர் போர்க்களத்தின் நடுவே வீரத்தை காட்டாமல் சேரன் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான். மானமுள்ள நீ மானமற்ற அவனை போரிட்டு வென்றால் தான் என்ன? போரில் அவனை கொன்றால் தான் என்ன பயன்? இதில் நீ என்ன செய்தாலும் உனக்கு பெருமை உண்டாகாது என்றும் பாட அதனால் கிள்ளிவளவன் அந்த அரணை அழித்து கோட்டைக்குச் சென்று சேரனை வெற்றி கொண்டார். அடுத்து திருக்கோவிலூரை ஆண்ட மலையமான் உடன் போர் புரிந்த அவரைத் தோற்கடித்து கொன்றார். அவர் மகன்கள் இருவரையும் சிறைபிடித்து அவர்களின் தலைகளை யானையின் கீழ் இடற உத்தரவிட்டார். இதை அறிந்த கோவூர் கிழார் என்ற புலவர் "புறாவுக்காக தன் உயிர் கொடுக்கத் துணிந்த சோழ மரபில் வந்த நீ அவர்களை கொள்ள முனைவது சரியான செயலா? யானை தன்னை கொல்ல வருகிறது என்பது கூட தெரியாமல் அதை வியப்போடு பார்க்கும் சிறுவர்களை கொல்வது முறையா?" என்று பாடல் பாட மனம் திருந்திய கிள்ளிவளவன் அவர்களை விடுவித்தான். கரிகாலன் காலத்தில் சோழ நாட்டுக்கு உட்பட்ட பாண்டிய நாட்டின் மீது கிள்ளிவளவன் போர் புரிந்த போரில் இவர் தோற்றார். இந்த செய்தி நக்கீரர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் சேர நாட்டின் மீது போர் புரிந்த கிள்ளிவளவன் குளமுற்றம் என்னும் இடத்தில் நடந்த போரில் தோற்று உயிர்துறந்தார். அதனால் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று அழைக்கப்பட்டார். இதிலிருந்து கரிகாலன் காலத்தில் பரந்து விரிந்த சோழப்பேரரசில் இடம் பெற்றிருந்த பல அரசுகள் கிள்ளிவளவன் காலத்தில் தன்னாட்சி பெற தலைப்பட்டு அதில் சில அரசுகள் வெற்றி பெற்றன என்றும் தெரிகிறது. ஆகவே கிள்ளிவளவன் காலத்தில் சோழநாடு சுருங்கிவிட்டது என்று தெளிவாகிறது.
நலங்கிள்ளி & நெடுங்கிள்ளி :
கிள்ளிவளவனின் ஆட்சியின் இறுதிக் காலத்தில் புகாரிலிருந்து ஆட்சி புரிந்தவன் நலங்கிள்ளி. அதனால் இவர் கிள்ளி வளவனின் மகனாகவோ அல்லது உறவினராகவோ இருந்திருக்கக் கூடும். குளமுற்றத்துத் போரில் கிள்ளிவளவன் இறந்தவுடன் உறையூரை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டி அதனை நோக்கி தன் படையுடன் சென்றார். அந்த நேரத்தில் ஆவூரை ஆட்சி செய்துகொண்டிருந்த சோழர்களின் கிளை மரபினரான நெடுங்கிள்ளி உறையூரை கைப்பற்றிக் கொள்ள முனைந்தான். ஆகவே இருவருக்கும் போர் மூண்டது. பெரும்படையுடன் ஆவூர் சென்ற நலங்கிள்ளி கோட்டையை முற்றுகையிட நெடுங்கிள்ளி கோட்டைக்குள் இருந்து வெளியே வந்து போரிட துணியவில்லை. நீண்ட நாட்கள் நடந்த இந்த முற்றுகையினால் ஆவூர் மக்கள் பெரும் துன்பத்தை அடைந்தனர். புலவர் கோவூர் கிழார் என்பவர் நெடுங்கிள்ளியிடம் சென்று "உனக்கு ஆற்றல் இருந்தால் வெளியே சென்று நலங்கிள்ளியுடன் போர்புரி.அறமிருந்தால் கோட்டையை அவனிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறு " என்று மக்கள் படும் இன்னல்களை காட்டி அறிவுரை கூறினார் .இதைக் கேட்ட நெடுங்கிள்ளி கோட்டையை ஒரு புறம் நலங்கிள்ளிக்கு திறந்து விட்டாலும் மற்றொரு புறம் படைகளுடன் வெளியே சென்று உறையூரை கைப்பற்றிக் கொண்டான். இந்தநிலையில் நலங்கிள்ளியைப் பாடி பரிசு பெற்ற இளந்தத்தன் என்ற புலவர் நெடுங்கிள்ளி இடம் பரிசு பெறுவதற்காக உறையூர் சென்றான். அவனை நலங்கிள்ளியின் ஒற்றன் என்று நினைத்து நெடுங்கிள்ளி சிறையிலடைத்து கொல்லத் துணிந்தான். இந்த செய்தியை கேட்டு அங்கே விரைந்த கோவூர் கிழார் நெடுங்கிள்ளியிடம் உண்மையை விளக்கி இளந்தத்தனை விடுவித்தார். இந்த விவரங்களை அறிந்த நலங்கிள்ளி உறையூரைத் தாக்கி முற்றுகையிட மீண்டும் நெடுங்கிள்ளி கோட்டையிலிருந்து வெளியே வராமல் உள்ளேயே காலம் கடத்தினார். கோவூர் கிழார் நலங்கிள்ளியிடம் " இருவரும் போரிட்டு இருவரும் வெல்வது என்பது நடவாத ஒன்று. இருவரில் யார் தோற்றாலும் சோழன் என்றே வரலாற்றில் பாதிக்கப்படும்.அது உங்களுக்கு மட்டுமல்ல குலத்துக்கு இழுக்கு "என்று கூற நலங்கிள்ளி முற்றுகையை கைவிட்டதாக தெரிகிறது. நெடுங்கிள்ளி காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற அழைக்கப்படுவதால் அங்கே நடந்த போரில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதலாம். அந்தப் போரில் நெடுங்கிள்ளியை கொன்றது நலங்கிள்ளியாக தான் இருக்க முடியுமென்று நீலகண்ட சாஸ்திரி தெரிவிக்கின்றார். தமிழகத்தில் மற்ற அரசர்கள் இவனுக்கு அடங்கியே இருந்தனர் என்றும் வீரம் மட்டுமல்லாது சிறந்த கொடைத்திறனும் கொண்டவனாக நலங்கிள்ளி இருந்தான்.
குராபள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் :
இம்மன்னன் உறையூரை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் பெரும்பாலும் அமைதியே நிலவியது . அந்த காலகட்டத்தில் ஆட்சி செய்த பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் நட்பு கொண்டிருந்தான் இதனால் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் "நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஒற்றுமையால் உங்களது பகைவர்கள் உங்களுக்கு பிரிவை ஏற்படுத்த முயல்வார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் இன்று போல் என்றும் இருப்பீர்களாக" என்று வாழ்த்தினார். அமைதியை விரும்பினாலும் இவர் ஆற்றல் மிகுந்தவராக இருந்தார். குராப்பள்ளி என்னுமிடத்தில் இவர் மறைந்து விட்டதாக தெரிகிறது.
கோப்பெருஞ்சோழன் :
உறையூரை தலைநகராக கொண்டு ஆண்டு மற்றொரு சிறந்த அரசர் இவர். புலவர்கள் பலர் இவரை புகழ்ந்து போற்றினாலும் இவரே சிறந்த புலவராகவும் இருந்துள்ளார். குறுந்தொகையில் 4 பாடல்களும் புறநானூற்றில் 7 பாடல்களும் இவர் இயற்றியவையே. கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் காணாமலையே ஏற்பட்ட நட்பு பெரும் புகழ் படைத்தது. இவரது மகன்கள் இவரது பேச்சை கேளாமல் சேர மன்னனுடன் போர் தொடுத்து தோல்வியுற்று திரும்பினர். தனது இறுதி காலத்தில் அரசுரிமை வேண்டி இவரது மகன்கள் இவரோடு போர்தொடுக்க முயல அற நெறியினால் தந்தையும் மகன்களும் போரிடுவது பெரும்பழியை கொடுக்கும் என்று புலவர்கள் கூறி தடுத்தனர். இதனால் உறையூருக்கு வடக்கே காவிரியாற்றங்கரையில் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்த போது பிசிராந்தையாருக்கும் இடம் ஒதுக்குங்கள் என்று கூற அனைவரும் எங்கோ பாண்டிய நாட்டில் இருக்கும் அவருக்கு எப்படி செய்தி தெரியும்? என்று வியப்படைந்தனர். பிசிராந்தையாரும் உறையூர் வந்து நண்பனுடன் வடக்கிருந்து உயிர் துறந்தார். இந்த நிகழ்வு நட்பின் வலிமையை பற்றி கூறப்படுகிறது.
நெடுமுடிக்கிள்ளி :
இவர் சேரன் செங்குட்டுவனின் சம காலத்தவர். புகாரை ஆண்டு வந்தார். இவரது தந்தை இறந்து விடவே இவனது தாயாதிகள் இவனுடன் போர் தொடுத்தனர். இந்த நேரத்தில் இவரது தந்தையின் சகோதரி மகனான சேரன் செங்குட்டுவன் தனது மைத்துனருக்காக "நேரிவாயில்" என்னுமிடத்தில் இவரது தாயாதிகளை தோற்கடித்து இவரை அரசனாக்கினார். இவர் பாணர் மரபில் வந்த சீர்த்தி என்பவரை மணந்து உதயகுமரன் என்ற மகனை பெற்றார். இந்த உதயகுமரனே மணிமேகலையில் குறிப்பிடப்படும் இளவரசன். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை மீது காதல் கொண்டார். அவர் இவரது காதலை ஏற்க மறுத்தார். காயசண்டிகை உருவமெடுத்து அன்னதானம் செய்தவரை வற்புறுத்த காயசண்டிகையின் கணவன் வித்தியாதரன் தன் மனைவியை ஒருவன் துன்புறுத்துகிறான் என்று எண்ணி உதயகுமரனை கொன்று விட்டார். மனம் வருந்திய வித்தியாதரனிடம் நெடுங்கிள்ளி தகுந்த தண்டனையை தான் தன் மகன் அடைந்து விட்டான் என்று கூறினார். ஆனால் அரசன் வழக்கமாக கொண்டாடும் இந்திர விழாவை கொண்டாட மறந்ததால் பூம்புகாரை கடல் கொண்டதாக மணிமேகலை காப்பியம் கூறுகிறது.
கோச்செங்கணான் :
சிறந்த சிவ பக்தனான இம்மன்னனின் காலம் குழப்பத்திற்குரியது. 70 சிவன் கோயில்களை கட்டினார். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக கருதப்படுகிறார். பிறப்பிலையே இவர் கண்கள் சிவந்து இருந்ததால் கோச்செங்கணான் என்று அழைக்கப்பட்டார். சேரமன்னன் கணுக்கால் இரும்பொறை கழுமலம் என்னுமிட்த்தில் தோற்கடித்து சிறை வைத்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட பொய்கையார் என்னும் புலவர் இவரிடம் களவழி நாற்பது நூலை பாடி பரிசாக சேரனின் விடுதலையை வேண்ட அவ்வாறே அவரை விடுவிக்க ஆணை பிறப்பித்தார். ஆனால் தாகம் அதிகமானதால் தண்ணீர் கேட்ட சேரனை சிறைக்காவலர்கள் அவமானப்படுத்த "குழுவி இறப்பினும்" என்ற புறநானாற்று பாடலை பாடி இரும்பொறை உயிர்துறந்தார் என்று பாடல் கூறுகிறது. ஆனால் கலிங்கத்துபரணியும் விக்கிரம சோழன் உலாவும் சேரனை விடுவித்ததாக கூறுகிறது.
தித்தன் :
இவர் உறையூரிலிருந்து அரசாண்டவர். பெரும் கொடையாளியாக விளங்கியதை பரணர் பாடல் கூறுகிறது. இவர் உறையூருக்கு பதில் அமைத்தார். வடுக அரசன் மற்றும் பாண அரசன் இருவரும் இணைந்து போர் புரிய வந்தவர்கள் சோழன் அவைகளத்தில் எழுந்த கிளை ஓசை கேட்டு பயந்து ஓடிவிட்டனர் என்று அகநானாற்று பாடல் கூறுகிறது. இவரே சிறந்த புலவராக விளங்கியதுடன் அகப்பாடல்கள் பலவற்றையும் பாடியுள்ளார். இவருக்கு போர்வை கோப்பெரு நற்கிள்ளி என்ற மகனும் ஐயை என்ற மகளும் உண்டு.
போர்வை கோப்பெரு நற்கிள்ளி :
தித்தன் மகனான இவருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாட்டால் உறையூரிலிருந்து தந்தையால் விரட்டப்பட்டார். ஆமூர் வந்த சேர்ந்த இவர் ஆமூர் மல்லனால் பெண் கேட்டு மறுத்து அதனால் மற்போருக்கு அழைக்கப்பட்டிருந்த பெருங்கோழி நாய்கனுக்கு பதிலாக மற்போரில் ஆமூர் மல்லனை வென்று பெருங்கோழி நாய்கன் மகளான நக்கண்ணையை திருமணம் செய்தார். இந்த நிகழ்வை சாத்தந்தையார் என்ற புலவர் புறநானூறு பாடலாக பாடியுள்ளார்.
ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி :
ராஜசூயம் என்ற வேள்வி பகை அரசர்களை வென்ற பின் நடத்தக்கூடிய ஒன்று. அதனால் இந்த அரசர் பல வெற்றிகளை அடைந்தவர் என்று அறியமுடிகிறது. உலோச்சனார் என்ற புலவர் புறநானாற்று பாடலில் இவரது நால்வகை படைகளின் திறன்களை பற்றி பாடியுள்ளார். வீரம் கொண்டிருந்தாலும் பண்பாளராகவும் இருந்ததாக பல புலவர்கள் பாராட்டியுள்ளனர். போர்களிலையே நாள்களை கடத்தாமல் சம காலத்து அரசர்களான சோழன் மாரிவெண்கோ மற்றும் பாண்டியன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதி ஆகியோருடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். இதனை கண்ட ஒளவையார் "நீங்கள் மறுவுலகிற்கு செல்லும்போது நீங்கள் செய்த நல்வினைகளை தவிர உங்களுக்கு வேறொதுவும் துணையாக வருவதில்லை" என்று வாழ்த்தினார். மூவேந்தர்கள் தங்களுக்குள் பூசல் கொண்டு போர் புரிந்து கொண்டிருந்தால் அந்நியரிடம் அடிமைப்பட நேரிடும் என்று காரணத்தால் கூட நல்ல நட்புறவுடன் இருந்திருக்கலாம். பாண்டியன் கானப்பெருவழுதியுடன் கடைச் சங்கம் மறைந்தது என்பதால் இவரே கடைச்சங்க கடைசி சோழ அரசனாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த நிகழ்வு நடந்த சிறிது காலத்திற்குள்ளாகவே தமிழகம் வட திசையிலிருந்து வந்த களப்பிரர்களின் (கர்நாடகா நந்திமலையை சேர்ந்தவர்கள்) ஆட்சிக்கு உள்ளாகியது.
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக 3 ம் நூற்றாண்டில் வந்த களப்பிரர்களிடம் ஆட்சியை இழந்து குறுநில மன்னர்களாக நீடித்தனர். இறுதியில் கிபி.575ல் கடுங்கோன் பாண்டியன் மற்றும் பல்லவன் அபராஜிதனும் இணைந்து களப்பிரர்களை வென்று தமிழகத்தை களப்பிரர்கள் ஆட்சியிலிருந்து மீட்டெடுத்தனர்.
இந்த நிகழ்வுக்கு பிறகு 6ம் நூற்றாண்டு இறுதியில் வலுவிழந்து உறையூரை மட்டும் ஆண்டு உறையூர் சோழர்கள் என்ற பெயரில் சிற்றரசர்களாக மாறினர். சோழப்புலி பதுங்கியது போதும் என்று விஜயாலயர் துளிர்தெழுந்து மீண்டும் சோழர்களின் பேரரசிற்கு அச்சாணி இட்டார். சோழ வம்சம் மீண்டும் 9ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் விஜயாலயர் சோழரின் வழியில் மீண்டும் பரந்துபட்ட பேரரசாக சுந்தரசோழர், மதுராந்தகன், இராஜாதிராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன் வரை நீண்டு கடைசியில் 3ம் குலோத்துங்கனை பாண்டியர்கள் வென்றவுடன் சோழப்பரம்பரை கி.பி.12ம் நூற்றாண்டின் இறுதியில் முடிவுற்றது. அதை பிறகு கால வரிசைப்படி பார்ப்போம்
உதவிய நூல்கள் :
சேரர் சோழர் பாண்டியர் - என்.கிருஷ்ணன்
சோழர் வரலாறு - மா. இராசமாணிக்கனார்
கரிகாற் வளவன் - கி.வா.ஜகந்நாதன்
விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்



Comments
Post a Comment