100) இந்திய சுதந்திர போராட்டம் (காந்தியின் வருகைக்கு பின்னர் முதல் இரண்டாம் உலகப்போர் முடிவு வரை)
இந்திய சுதந்திர போராட்டம் : (காந்தியின் இந்திய வருகைக்கு பின்னர் முதல் இரண்டாம் உலகப்போர் முடிவு வரை)
முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கி.பி.1915ல் தென்னாப்பிரிக்காவில் இந்தியா திரும்பினார் காந்தி. தென்னாப்பிரிக்கா போராட்டங்களில் தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த கோபாலகிருஷ்ண கோகலே யின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை பாரீஸில் சந்திக்க முதலில் லண்டன் சென்றவர் முதல் உலகப்போர் ஆரம்பித்த காரணத்தால் லண்டனிலையே இருக்க வேண்டியதாயிற்று. பின்னர் பம்பாய் திரும்பியவுடன் பம்பாய்யின் கவர்னர் சர் வெல்லிங்டன் காந்தியை சந்திக்க விருப்பப்படவே அவரை சந்தித்தார். பின்னர் பூனாவுக்கு சென்று கோகலேவை சந்தித்தார். குஜராத்தில் ஒரு ஆஸ்ரமம் அமைக்க விருப்பப்படுவதாக அவரிடம் கூற அவர் இந்தியா முழுவதும் ஒரு ஆண்டு சுற்றுப்பயணம் செய்து வரும்படி கூற அவ்வாறே பயணப்பட்ட அவர் கல்கத்தாவில் தாகூரை சாந்தி நிகேதனில் சந்தித்த போது கோகலேவின் மரணச் செய்தி அறிந்து பூனா திரும்பினார்.
கி.பி.1916 ஏப்ரலில் சென்னை வந்த அவர் தென்னாப்பிரிக்காவில் உயிர் தியாகம் செய்த வள்ளியம்மையின் ஊரான தில்லையாடிக்கு சென்று தமிழர்கள் நாகப்பன், நாராயணசாமி மற்றும் வள்ளியம்மையின் தியாகம் தான் தனக்கு போராடும் துணிவை தந்தது என்று குறிப்பிட்டார். கி.பி.1916ல் லாகூர் மாநாடு சமயத்தில் வந்த பிஹாரி ராஜ்குமார் சுக்லா என்பவர் காந்தியை சந்தித்து சம்ப்ரானில் கடைபிடிக்கப்படும் "தீன் கதியா" முறையை கூறி விவசாயிகள் போராட்டத்திற்கு உதவுமாறு வேண்ட அவர் ஆச்சார்ய கிருபாளினியையும் அழைத்து கொண்டு சம்ப்ரான் வந்து அரசையும் தோட்ட முதலாளிகளையும் சந்தித்து பேசி சாத்வீக முறையில் போராடி அவர்களின் பிரச்சினையை தீர்த்தார்.
குஜராத்தில் கேடா (Kheda) பகுதியில் மழையின்மையால் விவசாயம் பாதிக்கப்பட்ட மக்களை வரி செலுத்தவில்லை என்றால் நிலம் ஜப்தி என்று பயமுறுத்திய அரசை எதிர்த்து வல்லபாய் படேலுடன் இணைந்து சாத்வீக முறையில் போராடி அந்த வருடமும் அதற்கடுத்த வருடமும் வரிவசூலை நிறுத்த வைத்தார். ஜப்தி செய்யப்பட்ட நிலங்களை மீட்டு கொடுத்தார்.
அகமதாபாத் மில் தொழிலாளர்களுக்கும் முதலாளிக்கும் ஏற்பட்ட அநியாய வேலை, குறைந்த கூலி, குறைந்த வசதிகள் பிரச்சினையில் 21 நாட்கள் வேலை நிறுத்தம் செய்து பின்னர் உண்ணாவிரதம் இருந்தும் பிரச்சினையை முடித்து வைத்தார். இதற்கிடையில் சபர்மதி நதியை ஒட்டிய திறந்த வெளியில் ஆசிரமம் அமைத்து கி.பி.1917 ஜூன் 17ல் குடிபுகுந்தார். அந்த ஆண்டு அவருக்கு அறிமுகமான மகாதேவ் தேசாய் அதன்பின் அவரது செயலாளராக அவரது ஆயுட்காலம் வரை இருந்தார். இந்த ஆஸ்ரமத்தில் வல்லபாய் படேலின் பெண் மணிபென் படேலும் வந்து காந்தியை கவனித்து கொண்டும் ஆசிரியப்பணியும் செய்து வந்தார். 1925ல் ஆஸ்ரமத்தில் வந்து சேர்ந்த ஆங்கில பெண்ணான மேடலின் ஸ்லேட் பின்னாளில் "மீரா பென்" என்று பெயர் மாற்றப்பட்டு காந்தியின் கடைசி நிமிடம் வரை உடனிருந்து சேவையாற்றினார்.
ரத்தன் பாய் பெட்டிட் என்ற 16 வயது பெண்ணை கி.பி.1919ல் முகமது அலி ஜின்னா 2வது திருமணம் செய்தார்.
பம்பாய்யின் மிகப்பிரபலமான குடும்பத்தை சேர்ந்த ரத்தன் பாய் பெட்டிட்டின் தந்தையும் ஜின்னாவும் நண்பர்கள். ரத்தன் பாய் பெட்டிட்டின் தந்தையை விட 3 வயது மூத்தவரான ஜின்னாவை (ஜின்னா ரத்தன் பாயை விட 24 வயது மூத்தவர்) காதல் திருமணம் செய்தது மிகப்பெரிய அதிர்வலைகளை எழுப்பியது. ரத்தன் பாய் குடும்பத்தில் எழுந்த எதிர்ப்பையும் மீறி கி.பி.1919ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு முஸ்லீமாக மாறியவர் பின்னாளில் ரூட்டி ஜின்னா, மரியம் ஜின்னா என்ற பெயர்களில் அழைக்கப்பட்டார். நோய்வாய்ப்பட்டு கி.பி.1929ல் மரணமடைந்த இவரின் இழப்பு ஜின்னாவை மிகவும் பாதித்தது. இவரது மறைவுக்கு பின்னரே ஜின்னா ஆக்ரோஷமானவராக பிடிவாதக்காரராக மாறியதாகவும் சொல்லுவது எந்தளவுக்கு உண்மை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
கி.பி.1919ம் ஆண்டு மாண்டேகு-செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை. சட்டசபையில் பங்கேற்க மறுத்துவிட்டது. முதல் உலக யுத்தத்தில் இந்தியர்களின் பங்களிப்பை பெற்றுக்கொண்டு அது முடிந்தவுடன் மாண்டேகு சீர்திருத்தம் அறிவித்த 3 மாதத்திலையே "ரெளலட் சட்டம்" அறிவிக்கப்பட்டது. அதன்படி விசாரணையின்றி சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்யலாம். சிறையில் அடைக்கலாம். மேல் முறையீடு எதுவும் கிடையாது. இந்த நேரத்தில் காந்திஜி சென்னையில் தங்கியிருந்தார். இதனை எதிர்த்து மார்ச் 30ம் தேதி ஹர்த்தால் அனுஷ்டிப்பது என்று முடிவெடுத்து ஏப்ரல் 6க்கு தள்ளி போடப்பட்டது. டெல்லியில் தேதி மாறியதை அறியாத சுவாமி சிரத்தானந்தரும் ஹக்கீம் அஜ்மல்கான் சாகிப்பும் இணைத்து ஹர்த்தாலை ஆரம்பித்து வைத்தனர். இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து ஜூம்மா மசூதியில் ஒற்றுமையாக இணைந்ததை கண்ட ஆங்கிலேயர்கள் ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கலைத்தனர். காந்திஜி பொது உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்தார். ஏப்ரல் 10ம் தேதி பம்பாயிலிருந்து பஞ்சாப் செல்ல முயன்றவரை கைது செய்ய திரும்பவும் பம்பாய் அழைத்து வந்தனர். பம்பாயில் காந்தி கைதினால் ஏற்பட்ட கலவரம் காந்தி வந்து சமாதானப்படுத்தியதும் அடங்கியது. ஏப்ரல் 13ம் தேதி பஞ்சாப்பில் ஜாலியன்வாலா பாக் திடலில் ரெளலட் சட்டத்தை எதிர்த்து நடந்த கூட்டத்தை பஞ்சாப்பின் லெப்டினன்ட் ஜெனரல் டயர் கண்மூடித்தனமாக சுட்டு கொன்றான்.
துப்பாக்கிகளின் தோட்டாக்கள் தீரும்வரை ராணுவத்தை வைத்து மக்களை வெளியேற விடாமல் சுட்டுகொன்றதில் 1500க்கு மேற்பட்டோர் இறந்தனர். இந்த படுகொலை நடந்த அடுத்த நாள் இந்த மைதானத்துக்கு வந்த 12 வயது சிறுவனான பகத்சிங் இந்த மைதானத்தின் ரத்தம் தேய்ந்த மண்ணை எடுத்துக்கொண்டு போனார். அதுவே பின்னாளில் அவர் சுதந்திர போராட்டத்தில் துணிவுடன் இறங்க உரமாக மாறியது. இந்த ஜெனரல் டயர் அதன் பின்னர் இங்கிலாந்து சென்று விட்டார். பின்னர் பக்கவாத நோயினால் கி.பி.1926ல் இறந்தார். ஜாலியன் வாலா பாக் அராஜகத்தை அறிந்த ரவீந்திரநாத் தாகூர் தனது சர் பட்டத்தை துறந்தார். அந்த ஆண்டு நடந்த அமிர்தசரஸ் மாநாட்டிற்கு நேருவின் தந்தையான மோதிலால் நேரு தான் அந்த மாநாட்டின் தலைவராக இருந்தார்.
இந்த மாநாட்டிற்கு முன்பு தான் தாகூர் "மகாத்மா" என்ற பட்டத்தை காந்திஜிக்கு அளித்தார். இந்த மாநாட்டில் "பூரண சுயாட்சி" பிரகடனம் அறிவிக்கப்பட்டது. முதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மனிக்கு ஆதரவாக இருந்த துருக்கி சுல்தானின் பதவியை பறித்து பிரிட்டன் ஆக்ரமிக்க உலக முஸ்லீம்களின் தலைவரான துருக்கி கஃலீபாவை பதவியில் இருந்து இறக்கியதால் இந்திய முஸ்லீம்கள் கொதித்து எழுந்து "கிலாபத்" இயக்கம் தொடங்கினார். அந்த இயக்கத்தை தொடங்கிய முகமது அலி, செளகத் அலியை ஆங்கில அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. காந்திஜி கிலாபத் இயக்கத்தை ஆதரித்து அவர்களுக்கு ஆதரவாக போராடினார். காந்திஜியின் முயற்சியால் அலி சகோதரர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஒரு மதவாத சிக்கலுக்காக ஏன் மதம் சாராத காங்கிரஸ் போராட வேண்டும் ? என்று உள்ளுக்குள் வெறுத்த சி.ஆர்.தாஸ் காந்திக்காக "ஒத்துழையாமை இயக்கத்தை" ஆதரித்தார்.
திலகரும் காந்திஜியின் குரலுக்காக ஆதரித்தாலும் அடுத்த சில நாட்களில் அவர் மறைந்து விட்டார். அடுத்த ஆண்டு கி.பி.1920ல் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காந்தியின் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட ஜின்னாவும் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் இன்னும் சிலரும் காங்கிரஸில் இருந்து விலகினார்கள். இந்த கூட்டத்தில் "ஒத்துழையாமை இயக்கம்" ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்து முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்தாலும் அந்த கிலாபத் இயக்கத்தின் தோல்வி பின்னாளில் ஒரு புரட்சிக்கு வித்திட்டது. மலபார் பகுதியில் அரேபியாவில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் "மாப்ளா" என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தனர். இவர்கள் பெரும்பாலும் நிலத்தில் பயிரிடும் விவசாயிகளாக இருந்தனர். திப்பு சுல்தான் காலத்தில் இந்துக்களிடம் இருந்து நிலங்களை பிடுங்கி இவர்களிடம் ஒப்படைக்க பிரிட்டிஷ் அரசு திப்புவின் வீழ்ச்சிக்கு பின் மீண்டும் இந்துக்கள் வசம் நிலங்களை ஒப்படைக்க சில்லறை சிக்கல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. பிரிட்டிஷாரின் அதிக வரி விதிப்பால் மாப்ளாக்களுக்கு கிடைத்த மகசூல் குறையவே கிலாபத் இயக்க தோல்வி வேறு சேர்ந்து கொள்ள பிரிட்டிஷாரை தாக்க தொடங்கினார்கள். போலீஸ் நிலையங்களையும் அரசு அலுவலகங்களையும் தாக்க தொடங்கிய அவர்கள் பின்னர் இந்துக்களையும் தாக்க தொடங்கி பின்னர் இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் கட்டாய மத மாற்றம் செய்ய தொடங்கினர். ஏற்றுக்கொள்ளாதவர்களை கொன்று குவித்தும் பெண்களை சீரழித்தும் நடந்த கலவரத்தை ஆங்கிலேயர்கள் அடக்கினார்கள். 2500க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 45 ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டும் "மாப்ளா கலகம்" அடக்கப்பட்டது. அதுவரை இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து நடத்திய போராட்டம் மெல்ல மெல்ல அவர்களின் நட்புறவில் விரிசல் விட ஆரம்பித்தது. எங்கோ இருக்கும் துருக்கி சுல்தானுக்கு ஆதரவாக தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளுபவர்கள் உண்மையிலையே நம் சகோதரர்கள் தானா? இந்த நாட்டு குடிமக்கள் தானா என்ற எண்ணம் எழ காரணமாயிற்று. இந்த கேள்வியை பின்னாளில் இந்து மகா சபையும் வீர சாவர்க்காரும் கேட்க முகமதலி ஜின்னாவும் முஸ்லீம்களுக்கு தனி தொகுதி கேட்டு வந்தவர் கவிஞர் இக்பால் அவர்களின் கோரிக்கையான "பாகிஸ்தான்" என்ற தனிநாடு கோரிக்கையை எழுப்ப ஆரம்பித்தார்.
கி.பி1921 செப்டம்பர் 21ம் தேதி மதுரையில் சேத்கல்யாண்ஜி வீட்டின் மாடியில் தங்கியிருந்த போது விவசாயிகள் மேலாடையின்றி நடந்து செல்வதை கண்டவர் அன்று முதல் தானும் தலைப்பாகை,சட்டை ஆகியவற்றை துறந்து அரை வேஷ்டியும் மேல் துண்டும் மட்டுமே அணிய ஆரம்பித்தார். அந்த வீட்டை அரசு வாங்கி தற்போது காதி போர்டின் அலுவலகம் இயங்கி வருகிறது. கி.பி.1921 டிசம்பர் மாதத்தில் நடந்த அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில்" அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் மற்றும் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இந்த கோரிக்கைகளை ஒரு வாரத்திற்குள் வைஸ்ராய் ஏற்க வேண்டும் . இல்லாவிட்டால் தான் சட்ட மறுப்பு இயக்கத்தை துவக்க போவதாகவும்" அறிவித்தார். வைஸ்ராய் இறங்கி வராததால் நாடெங்கிலும் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கியது. மதுக்கடை மறியல், அன்னிய துணிக்கடை மறியல் நடந்து மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கி.பி.1922 பிப்ரவரி 5ம் தேதி "செளரி செளரா" என்ற இடத்தில் நடந்த ஊர்வலத்தை போலீசார் தாக்க மக்கள் திரும்ப எதிர்த்து போராடி போலீஸ் ஸ்டேசனோடு 22 போலீஸ்காரர்களும் சப்-இன்ஸ்பெக்டரும் கொளுத்தப்பட்டனர். இதனால் காந்தி சட்டமறுப்பை கைவிட நைனிடால் சிறையில் இருந்த நேருவுக்கு இந்த முடிவு பிடிக்கவில்லை.
முஸ்ஸீம்களுடன் இயல்பாக பழகி வந்தவர் சுவாமி சிரத்தாநந்தா. இவர் ஏற்கனவே ரெளலட் சட்டத்தை எதிர்த்து ஜூம்மா மசூதியில் இணைந்து போராடியவர். துறவு வாழ்க்கை பூண்டாலும் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக போராடியவர். இந்துக்கள் பலவந்தமாக முஸ்ஸீம்களாக மதம் மாற்றப்பட்ட போது "சுத்தி கர்மா" இயக்கத்தின் மூலம் அவர்களை மீண்டும் மதம் மாற்றியது காந்திக்கும் பிடிக்கவில்லை முஸ்லீம்களுக்கும் பிடிக்க வில்லை என்று கூறப்படுகிறது. உடல் நலமுற்று இருந்த அவர் கி.பி.1926 டிசம்பர் 23ம் தேதி தேடி வந்த "அப்துல் ரஷீத்" என்ற இளைஞனால் சுட்டு கொல்லப்பட்டார். அதையொட்டி கல்கத்தா மாநாட்டில் இரங்கல் தீர்மானம் வாசித்த காந்தி "எனது சகோதரர் அப்துல் ரஷீத்தை குற்றம் சொல்லமாட்டேன். ஒருவருக்கொருவர் வெறுப்பை உருவாக்கி வளர்த்தவர்களே குற்றவாளிகள்" என்றார்.
கி.பி.1927 நவம்பரில் சர் ஜான் சைமன் தலைமையில் கொண்ட குழு அப்போது இந்தியா இருக்கும் நிலைமையை அறிக்கையாக விட்டது. அந்த குழுவில் ஒரு இந்தியர் கூட இல்லை. இந்த குழுவில் இடம்பெற தகுதியான இந்தியர்களே இல்லை. இந்தியர்கள் எவராலாவது ஒரு உருப்படியான அரசியலைமைப்பு சட்டத்தை உருவாக்கமுடியுமா? என்ற கேட்க இந்திய தேசிய காங்கிரஸ் கி.பி.1927 டிசம்பரில் சென்னையில் கூடிய மாநாட்டில் சைமன் கமிஷனை புறக்கணித்து. எல்லா கட்சிகளையும் கொண்ட மாநாடு கூட்டப்பட்டு அரசியல் அமைப்பு சட்டம் வரைவதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்பட்டது. அதன்படி கி.பி.1928 ஆகஸ்ட் 14ல் நேரு ஆவணம் வெளியிடப்பட்டது. கல்கத்தாவில் நடந்த சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட அறிக்கையை தாமதமாக வந்த ஜின்னா அறிக்கையில் குறைகள் உள்ளது என்று கூற மெளலானா அபுல்கலாம் ஆசாத் "தங்களுக்கு தனி பாதுகாப்பு கேட்கும் முஸ்லீம்கள் முட்டாள்கள் என்றும் அப்படி பாதுகாப்பு கொடுக்க மறுக்கிற இந்துக்கள் அவர்களிலும் அதிக முட்டாள்கள்" என்று சொன்னார். ஜின்னா 14 அம்ச திட்டத்தை நேரு அறிக்கை வாசிக்கும் போதே அளித்தார். நேரு அறிக்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டு அரசுக்கு அனுப்பி "கி.பி.1929 டிசம்பருக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அப்படி இல்லையென்றால் பூர்ண சுதந்திரமே லட்சியம் " என்று அறிவிக்கப்படும் என்று அறிவித்தது. ஜின்னா அறிக்கையை ஏற்றுக்கொள்ளாததால் கி.பி.1929 பிப்ரவரி மாதம் பம்பாயில் இந்து-முஸ்ஸீம் கலவரம் நடந்து 149 பேர் உயிரிழந்தனர். கி.பி.1929ல் "எல்லா அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வட்ட மேஜை மாநாட்டுக்கு முன் வழங்கப்பட வேண்டும். காங்கிரஸ் மட்டுமே தேசத்தின் பிரதிநிதியாக ஏற்கப்பட வேண்டும்" என்று காந்தி தீர்மானம் போட நேருவும் சுபாஸூம் காந்தியின் வற்புறுத்தலால் கையெழுத்திட்டு விட்டு காரிய கமிட்டி உறுப்பினர் பதவியை விட்டு விலகினர்.
டொமினியன் அந்தஸ்து பற்றிய அரசின் அறிவிப்பு வராததால் "பூரண சுதந்திரம் ஒன்றே குறிக்கோள்" என்று முழங்கி கி.பி.1930 ஜனவரி 1ல் நேரு மூவர்ண கொடியை ஏற்றி வைக்க காந்தி சுதந்திர பிரகடனத்தை அறிவித்தார். ஜனவரி 26ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
கி.பி.1803ல் உப்பினால் நிரம்ப வரி கிடைப்பதால் கிழக்கிந்திய கம்பெனி அதற்காக உப்பு வேலிகளை சுமார் 2500 கி.மீ. தூரத்திற்கு உயிருள்ள முள்வேலிகளாக அமைத்து சுங்க வரி வசூலித்தது. கி.பி.1841ல் உப்பு வேலி முழுமை பெற்று அதனால் உப்பு கடத்தல்கள் தடுக்கப்பட்டு சுங்க வரியாக கம்பெனியின் வருமானத்தில் 10ல் 1 பங்கு உப்பின் மூலமே கிடைத்தது. மெல்ல மெல்ல 19ம் நூற்றாண்டின் இறுதியில் உப்பு வேலியை பராமரிப்பை நிறுத்தினாலும் உப்பின் மீதான வரிவிதிப்பு தொடர்ந்து நடந்தது. 1 மணங்கு உப்பு 2 ரூபாய்க்கும் அதில் 1 ரூபாய் 25 பைசா வாரியாகவும் மட்டுமே இருந்தது. வரி விதிப்பு அதிகமாக அதிகமாக அரசின் உப்பு வருவாயில் கை வைத்தால் தான் அவர்கள் வழிக்கு வருவார்கள் என்று உணர்ந்து உப்பு சத்தியாகிரகம் நடத்த போவதாக இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதி சபர்மதி ஆசிரமத்திலிருந்து ஆரம்பித்து தண்டியில் கி.பி.1930 ஏப்ரல் 5ம் தேதி உப்பு காய்ச்சினார்.
அடுத்து மே 4 ம் தேதி இர்வின் பிரபுக்கு கடிதம் எழுதி தர்சானா என்னுமிடத்தில் உப்பு காய்ச்ச போவதாக கூற காந்தியை கைது செய்தனர்.
காந்தியின் போராட்டத்தை பல முக்கிய தலைவர்கள் முன்னெடுத்து போராடினர். காந்தியின் சார்பாக அவரின் மனைவி கஸ்தூர்பா சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டார். உப்பு எடுக்க முயன்றவர்களை போலீசார் தாக்கியும் திருப்பி தாக்கவோ தடுக்கவோ முயலாமல் அடியை வாங்கி கொண்டு போராட்டம் நடத்திய நிகழ்வை கண்டு நாடே அதிர்ந்தது. உலகமே மூக்கில் விரல் வைத்து அஹிம்சை போராட்டத்தின் வலிமையை கண்டு வியந்தது. நாடெங்கும் மக்கள் உப்பு காய்ச்சி கைதானார்கள். வேதாரண்யத்தில் ராஜாஜி உப்பு காய்ச்சி கைதானார்.
சைமன் குழு லாகூர் வரும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாலா லஜபதி ராய், மதன் மோகன் மாளவியா தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் மீது லாகூர் துணை கண்காணிப்பாளர் ஸ்காட் தாக்குதல் நடத்த உத்தரவிட நடந்த தடியடியில் லாலா லஜபதி ராயின் மண்டை உடைத்து அடுத்த சில நாட்களில் இறந்து போனார்.
இதனால் ஸ்காட்டை கொல்ல முடிவெடுத்த பகத்சிங் மற்றும் ராஜகுரு முயன்றதில் ராஜகுரு சாண்டர்ஸ் என்பவரை தவறாக அடையாளம் காட்ட பகத்சிங் தவறை உணர்ந்தாலும் ராஜகுரு சாண்டர்ஸ்ஸை சுட்டதால் வேறு வழியின்றி பகத்சிங்கும் சுட்டு விட்டு காவலர்களிடம் பிடிபடாமல் தப்பித்தனர். நாடு முழுவதும் ஆங்கிலேயர்க்கு எதிர்ப்பை பதிவு பண்ண கி.பி.1929 ஏப்ரல் 8ம் தேதி சட்டசபையில் குண்டு வீசி தப்பிக்க நினைக்காமல் சரணடைந்து நீதிமன்றத்தில் நமது எதிர்ப்பை வாக்குமூலமாக பதிவு செய்து தண்டனை பெறவேண்டும் என்று முடிவு செய்து பகத்சிங், சுக்தேவ் மற்றும் இராஜகுரு ஆகியோர் குண்டுவீசி தப்பிக்க நினைக்காமல் சரணடைந்து நீதிமன்றத்தில் எதிர்ப்பை பதிவு பண்ணினர். மூவருக்கும் கி.பி.1931 மார்ச் 23ம் தேதி தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.
வைஸ்ராய்யை சந்தித்து தண்டனையை நிறுத்த காந்திஜி கோரியும் அடுத்து பகத்சிங் உள்ளிட்டோர் தூக்கு தண்டனை வேண்டாம் தங்களை சுட்டு கொல்லப்பட வேண்டும் எங்களின் சாம்பல் இந்திய நாட்டில் தூவப்பட வேண்டும் என்று கோரினர். காந்தியின் வேண்டுகோள்கள் அடுத்தடுத்து வந்ததால் வழியில்லாமல் அவர்களை விடுவிக்க வந்து விடவேண்டி வரும் என்பதால் இர்வின் உடனடியாக தூக்கிலிட உத்தரவிட்டு யாருக்கும் அறிவிக்காமல் தூக்கிலிட்டனர். காந்திஜி சரியாக குறுக்கீடு செய்திருந்தால் அந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்திருக்க முடியும் என்று பலரும் கருதினார்கள். அதனால் கராச்சியில் காந்திக்கு கறுப்பு கொடி காட்டினார்கள். பகத்சிங் முதலியோர்களுக்கு "காங்கிரஸ் பகத்சிங் முதலியோர்களின் செய்கையை ஆதரிக்காவிட்டாலும் அவர்களும் தேசபக்தர்கள் தான் " என்ற காந்தியின் நிர்பந்தத்தால் வாசிக்கப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் என்ற வரிகள் சுபாஷ்க்கு பிடிக்கவில்லை. காந்தி தூக்கு தண்டனை நிறுத்தியிருந்தாலும் பகத் சிங் உள்ளிட்டோர் அதை ஏற்றுக்கொண்டு இருப்பார்களா என்பது சந்தேகமே? கடைசியில் காந்தி - இர்வின் ஒப்பந்தம் நிறைவேறி லண்டனில் கி.பி.1931 ஏப்ரலில் நடந்த வட்டமேசை மாநாட்டில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை. லண்டனில் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்ஜை சந்தித்து பேசினார். லண்டனில் இருந்து திரும்பியவுடன் பம்பாயில் காந்தி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட நாடெங்கும் வன்முறைகள் நடந்தது. கி.பி.1932ல் காங்கிரஸ் செயற்குழுவில் அவசர சட்டத்தை வாபஸ் பெறவில்லை என்றால் ஒத்துழையாமை இயக்கம் மீண்டும் உயிர்பெறும் என அறிவித்தார். அதையடுத்து கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சமயத்தில் கி.பி.1932 ஆகஸ்ட் மாதம் சீக்கியர், முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதிகளை அரசு அறிவிக்க தாழ்த்தப்பட்டவர்கள் இந்து மதத்தின் அங்கம் அதனால் தனித்தொகுதி தேவையில்லை என்று அறிவித்து செப்டம்பர் 20ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். பின்னர் அம்பேத்கார் பூனா வந்து சிறையில் இருந்த காந்தியுடன் ஒப்பந்தம் (பூனா ஒப்பந்தம்) செய்துக்கொண்டு உண்ணாவிரதத்தை நிறுத்த வேண்டினார். பிரிட்டிஷ் அரசும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது.
கி.பி.1933 டிசம்பரில் சுதேச மித்திரன் ஆசிரியர் ரங்கசாமி அய்யங்காரும் கே.என்.முன்ஷியும் சுயராஜ்ய கட்சியை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினர்.
ஒரு திட்ட வரைவு எடுத்துக்கொண்டு காந்தியை சந்திக்க அவரும் அதுபற்றி கி.பி.1934 செப்டம்பரில் சர்தாருக்கு கடிதம் எழுதினார். இதற்கிடையில் ரங்கசாமி அய்யங்கார் மறையவே சிறிது காலதாமதம் ஆனது. காந்தியின் ஒப்புதலுக்காக காத்திருந்தாலும் சத்தியமூர்த்தி காந்தி ஏற்றுக்கொள்ளவிட்டாலும் சட்டசபைக்கு போட்டியிட வேண்டும் என்ற முடிவை சொன்னார். முடிவில் காந்தி ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் செயற்குழ சட்டசபைக்கு போட்டியிடுவதற்கு அனுமதி அளித்தது. சுயராஜ்ஜிய கட்சி காங்கிரஸின் சட்டசபை பிரிவாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் தேர்தலில் போட்டியிடுவதை ஏற்றுக்கொண்ட காந்தி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் கி.பி.1936ல் தீவிர அரசியலுக்கு வந்தார். புதிய அரசியலமைப்பு சட்டம் கி.பி.1935 ஆகஸ்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்பட்டது. இது காங்கிரஸ்க்கு பிடிக்கவில்லை. முஸ்லிம் லீக்கும் பிற்போக்கான திட்டம் என்றது. புதிய சட்டத்தின் படி பொதுத் தேர்தல்கள் 1936-37ல் நடந்தது. சென்னை,ஐக்கிய மாகாணம், மத்திய பிரதேசம், பீஹார், ஒரிஸ்ஸா ஆகியவற்றில் பெரும்பான்மையை காங்கிரஸ் கைப்பற்றியது. பம்பாய், வங்காளம், அஸ்ஸாம், வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. சிந்துவிலும் பஞ்சாப்பிலும் சிறுபான்மை கட்சியாக திகழ்ந்தது. வெற்றி பெற்றாலும் ஆளுநர்கள் காங்கிரஸை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. கடைசியில் தலைமை ஆளுநரின் உறுதிமொழிக்கு பிறகே பெரும்பான்மை பெற்ற மாநிலங்களில் காங்கிரஸ் அரசு அமைந்தது. 11 மாநிலங்களில் 6ல் பெரும்பான்மை பெற்றது காங்கிரஸ். முஸ்லீம் லீக் ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஜின்னா தமது கட்சிக்கும் ஆட்சியில் இடம் கொடுக்க கேட்க நேரு அதை மறுத்து "இங்கே மொத்தம் இரு கட்சிகள் தான். ஒன்று காங்கிரஸ் இன்னொன்று பிரிட்டிஷ்" என்று பெருமிதத்தோடு கூறிய பதில் ஜின்னாவின் கோபத்தை கிளறியது.
கி.பி.1938ல் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆனார். பிரிட்டனுக்கு காலக்கெடு விதித்து எல்லோரும் எல்லோரும் ஒற்றுமையாக போராடினால் சுதந்திரம் வந்துவிடும் என்றார். சுதந்திரத்திற்கு பிறகு நாட்டை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரை கொண்டு திட்டக்குழக்களை அமைத்து நேருவை அதற்கு தலைவராக்கினார். பின்னாட்களில் நேரு கொண்டு வந்த ஐந்தாண்டு திட்டத்திற்கு இதுவே அடிகோலியது. அடுத்த ஆண்டு கி.பி.1939 தேர்தலில் நேதாஜிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பட்டாபி சீதாராமையா என்பவரை காந்தி நிறுத்தினாலும் நேதாஜியே வெற்றி பெற்றார். சர்தார் வல்லபாய் படேலுக்கும் போஸ் மீண்டும் தலைவரானது பிடிக்கவில்லை. இதனால் கட்சியிலிருந்த காந்தி ஆதரவாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய நேதாஜி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். பின்னர் "பார்வர்டு ப்ளாக்" என்னும் புதிய கட்சியை ஆரம்பித்தார்.
பார்வர்டு ப்ளாக் தனது போராட்டங்களை அறிவித்தது. போஸ் காங்கிரஸ் பதவியை துறந்தாலும் வங்காள காங்கிரஸ் போஸ் தான் எங்கள் தலைவர் என்று சொல்லி வங்காள காங்கிரஸ் தலைவராக தேர்தெடுத்தது.
கி.பி.1939 செப்டம்பரில் 2ம் உலகப்போர் ஆரம்பித்தது. வைஸ்ராய் லின்லித்கோ பிரபு சட்டசபைகளை கலந்து ஆலோசிக்காமல் இந்தியா ஜெர்மனியுடன் போர் கொடுப்பதாக அறிவிக்க காங்கிரஸ் செயற்குழுவில் காந்தி போரில் ஒத்துழைப்பது என்று முடிவெடுக்க நேரு அதற்கு ஒத்துழைக்கவில்லை. காந்தியின் அழைப்பின் போரில் வந்திருந்த நேதாஜியும் நேருவின் கொள்கைப்படியே இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதாக பிரிட்டன் ஒப்புக்கொண்டால் மட்டுமே போரில் ஒத்துழைக்க வேண்டும் என்று கூற காந்தியும் அதை ஒப்புக்கொண்டார். சட்டசபையிலிருந்து காங்கிரஸ் விலகியது. இந்த நேரத்தில் ஜின்னா இந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விடுதலை என்று கூறி போருக்கு ஆதரவு அளித்தார். இந்த நேரத்தில் 10 ஆண்டுகள் லண்டனில் வேலை செய்தும் லாலா லஜபதி ராய்யை அடித்து கொன்ற கர்னல் ஸ்காட்டை தேடி அலைந்து பழி தீர்க்க காத்திருந்த உத்தம் சிங் கி.பி. 1940 மார்ச் 13ல் லண்டனில் கர்னல் ஸ்காட்டை சுட்டு கொன்றார்.
பிறகு அடுத்த நான்கு வாரங்களில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னாளில் அவரின் தியாகத்தை போற்றி அவருக்கு அமிர்தசரஸ் நகரில் சிலை வைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் தொடங்கின சில மாதங்களில் முஸ்லிம் லீக்கின் குறிக்கோள் தனி தேசமாக பாகிஸ்தானை பெறுவது தான் என்று முழங்கினார். கி.பி.1940 மார்ச் 23ல் முஸ்ஸீம் லீக்கின் லாகூர் மாநாட்டில் "பாகிஸ்தான்" தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை இணைத்து சுதந்திரமாக இயங்கும் தனி நாடாக அங்கீகரித்தாலன்றி பிரிட்டன் இந்தியாவுக்காக கொண்டு வரும் வேறு எந்த அரசியல் தீர்வையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முழங்கினார். தான் பாகிஸ்தான் கோரிக்கையை எழுப்ப காரணம் பிரிட்டனோ, ஹிந்துவோ, முஸ்ஸீம்மோ அல்லது தானோ அல்ல என்றும் அதற்கு காரணம் காந்தி தான் என்றார். இந்த போர் காலத்தில் பிரிட்டிஷ் வீரர்களை இந்தியாவிலிருந்து போருக்கு அனுப்பினால் மீண்டும் ஒரு சிப்பாய் புரட்சி மாதிரி கலகம் ஏற்பட்டால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று கருதி இந்திய வீரர்களை உலக போர்முனைக்கு அனுப்பிவிட்டு பிரிட்டிஷ் வீரர்களை இந்தியாவிலையே இருக்க வைத்தனர்.
கி.பி.1940 ஆகஸ்டில் லார்ட் லின்லித்கோ "ஆகஸ்ட் அறிக்கை"யை அறிவித்தார். இதன்படி போர் முடிந்ததும் முக்கியமான இனங்களின் அடிப்படையில் பிரதிநிதிகளை கொண்ட அமைப்பு புதிய அரசலமைப்பு சட்டத்தை உருவாக்கும். தன்னால் முடிய கூடிய உதவிகளை செய்வதாகவும் கூறிய அறிக்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வில்லை. காந்திஜி ஆகஸ்ட் அறிக்கையை நம்பி பயனில்லை என்று அக்டோபர் மாதம் "தனிநபர் சட்ட மறுப்பு தீர்மானம்" காங்கிரஸ் செயற்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வினோபா பாவே தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முழங்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். டிசம்பர் மாதத்தில் லாகூர் முஸ்லீம் லீக் மாநாட்டில் ஜின்னா "பாகிஸ்தான் அடைவதே லட்சியம்" என்ற தீர்மானம் நிறைவேற அதன் தலைவர்கள் நாடெங்கும் வன்முறையை தூண்டி இந்துக்களை தாக்க ஆரம்பித்தனர். டாக்கா, அகமதாபாத், பம்பாய் ஆகிய இடங்களில் கலவரம் அதிகமாக நடந்தது. இந்த நேரத்தில் கே.எம்.முன்ஷி காந்தியை சந்தித்து "பாபுஜி இந்துக்கள் தாக்கப்படும் போது கையை கட்டி கொண்டிருக்க சொல்கிறீர்களா? தங்களை காக்க திருப்பி தாக்க அனுமதிக்க வேண்டும்" என்று கூற காந்திஜி "முன்ஷி அப்படி ஒரு கருத்து இருந்தால் காங்கிரஸ்ஸை விட்டு வெளியேறி உங்கள் யோசனையை சொல்லுங்கள். வெளியே போக தைரியம் இல்லையென்றால் எங்காவது வெளியூர் போய்விட்டு வாருங்கள். அதற்குள் நிலைமை சரியாகிடும்" என்று கூற கே.எம்.முன்ஷி காங்கிரஸிலிருந்து வெளியேறினார். கி.பி.1941ல் ஆகஸ்டில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டை சந்தித்தார். அடக்கப்பட்ட நாடுகளை விடுவிக்கிறோம் என்று கூறிக்கொண்டு நாம் போர் கொடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பிரிட்டன் இந்தியாவை தொடர்ந்து அடக்கி வைத்து கொண்டு இருப்பது எப்படி சரியாகும் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் "அட்லாண்டிக் சார்ட்டர்" என்ற பெயரில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி மக்கள் தங்களுக்கு தேவையான அரசை தேர்ந்தெடுத்து கொள்ளுவதற்கும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட அரசுரிமை அவர்களுக்கே திரும்ப அளிக்கப்படும் என்று வலியுறுத்தப்பட்டது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு பிரிட்டன் பார்லிமென்ட்டில் " அது ஆக்ஸிஸ் நாடுகள் போரில் பிடிக்கும் நாடுகளுக்கு தான் பொருந்துமே தவிர ஏற்கனவே பிடித்து வைத்திருக்கும் காலனி நாடுகளுக்கு அல்ல" என்று சர்ச்சில் முழங்கினர். அமெரிக்கா போரில் ஒதுங்கியே இருந்தாலும் (அப்படி சொல்லி கொண்டாலும் நேச நாட்டு போர் விமானங்களுக்கு எரி பொருள்களை தங்களது விமான நிலையங்களில் நிரப்பி கொடுத்தது) கி.பி.1941 டிசம்பர் 7ம் தேதி ஜப்பான் ஹவாயில் உள்ள "பெர்ல் ஹார்பர்" துறைமுகத்தை தாக்கவே அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஜப்பான் சிங்கப்பூரை கைப்பற்றியது. பின்னர் பர்மாவும் ஜப்பானால் கைப்பற்றப்பட்ட போது 6 லட்சம் இந்தியர்கள் பலத்த இன்னல்களுக்கிடையே இந்தியா திரும்பினார். ஜப்பான் அடுத்து இந்திய எல்லையை நெருங்கவே கிழக்கு வங்காளத்தில் துறைமுக பகுதியை சுற்றியுள்ள 20 கி.மீ தூரத்திலுள்ள பகுதிகளில் உணவுப்பொருட்கள் தண்ணீர் ஆகியவற்றை சர்ச்சிலின் உத்தரவுப்படி பிரிட்டிஷார் அழித்தனர். இதனால் வங்காளத்தில் மீண்டும் பஞ்சம் கி.பி.1943ல் தலைதூக்கியது. ஏற்கனவே அவுரி சாகுபடி, பருத்தி சாகுபடி என்று உணவுப்பொருட்கள் உற்பத்தியை குறைத்து பணப்பயிர்களை பயிரிட வலியுறுத்தியவர்களால் உணவுப்பொருளும் அழிக்கப்பட வங்காளத்தில் பஞ்சம் தலைதூக்கியது. ஒருவேளை பாலுக்கும் கோதுமைக்கும் கூட வழியில்லை. ஆனால் வங்காளத்திலிருந்து அரிசி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி நடந்து கொண்டு தான் இருந்தது. அந்த நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து இந்திய விடுதலைக்காக போராடி வந்த நேதாஜி வங்காள பஞ்சத்திற்கு அரிசி அனுப்புவதாகவும் எங்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுத ஆங்கிலேயர்கள் அந்த விவரத்தை யாருக்கும் சொல்லாமல் மறைத்து விட்டது. வங்காள பஞ்சத்தில் 15 லட்சம் மக்கள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மற்ற உயர் அதிகாரிகளும் வெளிநாட்டினரும் எவ்வளவு தான் போராடினாலும் சர்ச்சில் யாரும் உதவி செய்யும் வாய்ப்பையும் தடுத்து அனுப்பினார். போர்க்காலத்தில் 6 லட்சம் மைல் நீளத்திற்கு துணிகளை உற்பத்தி செய்தாலும் அனைத்தும் ராணுவத்திற்கு அனுப்பப்பட்டதால் ஆண்களும் பெண்களும் உடுத்த ஆடையின்றி கந்தல் கோலத்தில் குறைந்த ஆடையில் வீட்டிற்குள்ளே அடைபட்டு கிடந்தனர்.
கி.பி.1871ல் கொண்டு வரப்பட்ட குற்ற பரம்பரை சட்டத்தின் படி இவர்களால் தீங்கு நேரும் செயல்கள் நடக்க வாய்ப்புண்டு என்று கருதப்பட்ட சாதி மக்களை (மராட்டியர்கள், இராஜபுத்திரர்கள், தமிழ்நாட்டில் கள்ளர்கள், மறவர்கள் ) இரவு காவல் நிலையத்தில் தான் தங்கிவிட்டு பகலில் தான் வீட்டுக்கு போகணும் என்று உத்தரவும் அவர்களின் கைரேகைகளை பதிவு செய்யும் வழக்கம் இருந்ததால் "கைரேகை சட்டம்"
என்று அழைக்கப்பட்ட இச்சட்டத்தை எதிர்த்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முழங்கினார். அதனால் அவரை பேசவிடாமல் "வாய்ப்பூட்டு" சட்டம் போட்டு தடை செய்தனர். "கைரேகையை பதிவு பண்ணுவதற்கு பதில் கை விலங்கை எதிர்க்கொள்ள தயாராகு" என்று முழங்கிய அவரை கி.பி.1940ல் கைது செய்து கி.பி1946ல் விடுதலை செய்தனர். தேவர் நேதாஜியின் "பார்வர்டு பிளாக்" கட்சியின் தமிழக தலைவராக இருந்தார்.
இவரின் பலகட்ட போராடட்ங்களினால் கி.பி.1947 ஜூன் மாதத்தில் குற்றப்பரம்பரை சட்டம் முற்றிலுமாக விலக்கி கொள்ளப்பட்டது.
கி.பி.1942 மார்ச் 22ல் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் இந்திய தலைவர்களுடன் விவாதிப்பதற்காக புதிய திட்ட வரைவுடன் கராச்சியில் வந்து இறங்கி அங்கிருந்து ஜோத்பூர் செல்ல விரும்பினார். பாதுகாப்பு ஏற்பாடுகளினால் மறுநாள் புறப்பட்ட சமயத்தில் "பாகிஸ்தான்" வேண்டும் என்ற லாகூர் தீர்மானத்தின் இரண்டாம் ஆண்டு ஊர்வலம் நடந்தது. வைஸ்ராய்யுடன் நடந்த கூட்டத்தில் "விரும்பும் மாநிலங்கள் வெளியே செல்லலாம்" என்ற திட்டம் விவாதிக்கப்பட்டது. இது பெருங்குழப்பம் விளைவிக்கும். சீக்கியர்களும் முஸ்லீம்களும் போர்க்குணம் கொண்டவர்கள். முஸ்லீம்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள் தனியாக பிரித்தால் பெருங்கலவரம் ஏற்படும் என்று போர்த்தளபதி பதிலளித்தார். அந்த நேரத்தில் ஜின்னா முஸ்லீம் லீக் தலைவராகவும் மெளலானா அபுல்கலாம் ஆசாத் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தனர். ஜின்னா ஆசாத்தை "ஷோகேஸ் முஸ்லிம்" என்று கேவலமாக பேசினார். முதலில் ஆசாத்தை சந்தித்து கிரிப்ஸ் திட்டத்தை விளக்கியபோது ஒரே ஒரு வேண்டுகோளாக பாதுகாப்பு துறையை இந்தியர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்க உலக அளவில் போர் நடைபெற்று வரும் நேரத்தில் படைகளின் இயக்கத்தை போர் மந்திரி சபை தான் முடிவு செய்யும் என்று கூற ஆசாத் வேண்டுமானால் திட்டங்களை வகுக்கும் தளபதி பொறுப்பில் தலைமை தளபதியே இருக்கட்டும் ஆனால் இந்தியர்கள் வசம் பாதுகாப்பு துறை இருந்தால் தான் போருக்கு ஆட்களை திரட்ட முடியும் என்று கூறினார். அடுத்து ஜின்னாவை கிரிப்ஸ் சந்திக்க அவர் இரண்டாவது டொமினியன் அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கூறியதால் அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். பின்னர் காந்தியை சந்தித்து விளக்கியபோது இது வெட்டப்பட்டு உலர்ந்த திட்டம் என்று கூறினார். பாகிஸ்தானை உருவாக்கும் இத்திட்டத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது என்று கூறி முடிவெடுக்கும் வரை வரைவு திட்டத்தை வெளியிட வேண்டாம் என்று காந்தி கூறினார். பின்னர் மாஸ்டர் தாரா சிங் தலைமையில் சீக்கியர்கள் கிரிப்ஸ்ஸை சந்தித்து காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பினார்கள். அடுத்து வீர் சாவர்க்காரை கிரிப்ஸ் சந்தித்து வரைவு திட்டத்தை கூற "அரசில் இணைய ராஜ்யங்களுக்கு சுய நிர்ணய உரிமை கொடுக்கப்பட வேண்டும் குறிப்பிட்டுள்ளதால் இந்திய நாட்டை துண்டு போட ஆங்கில அரசின் சதி என்று அறிந்து திட்டத்தை எதிர்த்தார். கிரிப்ஸ் பாரத நாடு என்று ஒன்றென்று சொல்லப்பட இல்லையே என்று கூற "பாரத நாடு என்று இல்லாமலையா பிரிட்டிஷ் அரசு இந்தியன் கவர்மெண்ட் இந்தியன் ராணுவம் என்று கூறுகிறது " என்று பதிலுரைக்க கிரிப்ஸ் பதில் பேச முடியவில்லை. இந்த நிகழ்வை அறிந்த நேரு "நியூ ஹெரால்டு" பத்திரிக்கையில் சாவர்க்காரை பாராட்டி எழுதினார். அரவிந்தர் கிரிப்ஸ் திட்டத்தை பாராட்டி காந்தியை ஆதரிக்க சொல்லிய கடிதம் அனுப்ப காந்தி அவர் தான் அரசியலில் இருந்து விலகி விட்டாரே? பிறகு எதுக்கு தலையிடுகிறார் என்று கடிதம் அனுப்பியவரிடம் பதிலனுப்பினார். காந்தி இத்திட்டத்தை ஏற்கவில்லை. ஜின்னா பாகிஸ்தான் பெறுவதற்கு குறைந்து எதையும் ஏற்கமாட்டோம் என்று திட்டத்தை எதிர்க்க ஒரு முறை கிரிப்ஸ் சொன்ன செய்தியான "9 கோடி முஸ்லீம்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக 25 கோடி இந்துக்களின் கோரிக்கையான ஐக்கிய இந்தியாவை நாங்கள் மறுக்க முடியாது" கொண்டு ஜின்னா காங்கிரஸ் சார்பு திட்டம் என்று கூறி எதிர்த்தார். அமெரிக்க பிரதிநிதி ஜான்சன் கொடுத்த திட்டத்தை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றாலும் பிரிட்டிஷ் அரசு ஏற்கவில்லை.
கிரிப்ஸ் திட்டம் தோல்விக்கு பின்னர் கி.பி.1942 ஆகஸ்ட் 8ல் காந்தி "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார். காந்தியையும் மற்ற தலைவர்களையும் அன்றிரவே கைது செய்ய "செய் அல்லது செத்து மடி" என்று சிறைக்கு செல்லுமுன் காந்தி கூறியதால் மக்கள் தாங்களாகவே போராட்டத்தை எடுத்துக்கொண்டு பெருங்கிளர்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தனர். அடுத்த நாள் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை அருணா அஸாப் அலி என்ற இளம் தலைவர் தலைமை தாங்கி நடத்தி வைக்க பிரிட்டிஷ் அரசு காங்கிரஸ் கட்சியை சட்டவிரோதம் கட்சி என அறிவித்தது தடை செய்தது. இந்தியா முழுவதும் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் இயங்க வில்லை. பம்பாயில் தபால் நிலையங்கள் சூறையாடப்பட்டன. தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டது. காந்தியையும் மற்ற தலைவர்களையும் நாடு கடத்தி விடலாம் என்று யோசித்து பின்னர் அதனால் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டது. சிறையில் அடைத்த ஒரு வாரத்திற்குள் காந்தியின் செயலாளர் "மகாதேவ் தேசாய்" சிறையிலையே மாரடைப்பால் காலமாக காந்தியே அவரது உடலை குளிப்பாட்டி ஆகாகான் மாளிகையிலையே அவரை தகனம் செய்தனர். வைஸ்ராய்க்கு காந்தி கடிதம் எழுத அரசிடமிருந்து எதுவும் சாதகமான பதில் வராததால் ஆறு மாதங்கள் வீட்டு சிறையில் இருந்த காந்தி பிப்ரவரி 9ம் தேதி "உண்ணாவிரதம்" ஆரம்பிக்க ராஜாஜி அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஜின்னா மறுத்துவிட்டார். அமெரிக்க ஜனாதிபதி காந்தி இறந்தால் நிலைமை மோசமாகி விடும் என்று கவலைப்பட வைஸ்ராய் "என்ன ஆகும்? ஆறு மாதங்கள் கொந்தளிப்பாக இருக்கும். பின்னர் அடங்கி விடும். என்று பதிலளித்தார். வீட்டு சிறையிலையே பூனா அருகிலுள்ள ஆகாகான் மாளிகையில் 1 1/2 வருடங்களாக இருந்த நேரத்தில் கி.பி.1944 பிப்ரவரி 22 ம் தேதி கஸ்தூர்பா காந்தி மறைந்தார். அவர் மறைந்த ஆறு வாரங்களுக்கு பிறகு காந்திக்கு மலேரியா காய்ச்சல் வந்ததால் வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்ததால் மக்களுடன் அவர்களுக்கு தொடர்பே இல்லை. அதனால் அவர்களாகவே போராட்டத்தில் இறங்கினார்கள். வன்முறையில் இறங்கியதும் பிரிட்டிஷ் அரசு போலீசாரை வைத்து இந்த போராட்டங்களை ஒடுக்கிவிட்டது.இந்த வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தில் சிலர் நடத்திய போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. மேற்கு வங்காளத்தில் தும்லுக் பகுதியில் தேசிய அரசை ஏற்படுத்திய சுசில் தாராவும், குஜராத்தில் போராட்ட செய்திகளை வழங்க ரகசிய தனி வானொலி நிலையம் அமைத்து சிறையில் அடைக்கப்பட்ட உஷா மேத்தாவும்,
குலசேகரப்பட்டினம் சதி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற "தூக்குமேடை ராஜகோபாலன்" மற்றும் "தூக்குமேடை காசிராஜனும்" பகத் சிங்கை போல வீரம் காட்டிய தூக்கிலிடப்பட்ட 18 வயது இளைஞன் "ஹேமு கலானியும்"
மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் கொடியை மார்போடு அணைத்து துப்பாக்கி குண்டு வாங்கி மடிந்த 76 வயது வீரப்பெண்மணி "மாதங்கனி ஹஸ்ராவும்"
அதே போல் கொடியை விட மறுத்ததால் மார்பில் சுடப்பட்டு இறந்த அஸ்ஸாமின் "கனகலதா பரூவாவும்" ஆச்சார்யா கிருபாளினி லால் பகதூர் சாஸ்திரியும் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் முக்கியமானவர்கள்.
1939ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நேதாஜி பார்வர்ட் ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார். பிரிட்டன் இந்தியாவை கலந்து ஆலோசிக்காமல் இந்தியாவை போரில் ஈடுபடுத்தியது தவறு என்று கூறினார். இதனால் அவரை கைது செய்து வீட்டு சிறையில் அடைத்தது. வீட்டு சிறையிலிருந்து கி.பி.1941 ஜனவரி 17ம் தேதி தன் அண்ணன் மகன் சிசிர் குமாருடன் பதான் வேடத்தில் வீட்டின் பின்பிறமாக ஒரு காரில் தப்பித்து கோமோ என்ற ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து டெல்லிக்கு ரயிலில் சென்று டெல்லியிலிருந்து பெஷாவருக்கு ரயில் பயணப்பட்டு ஆப்கானிஸ்தானை ஜனவரி 26ம் தேதி சென்று சேர்ந்தார். அப்போது அவர் தப்பிய சேதி வெளியுலகுக்கு தெரிந்தது. பின்னர் ரஷ்யாவில் தனது செயல்பாடுகளை துவங்க நினைத்ததை அங்குள்ள தூதரக அதிகாரிகள் ஏற்காததால் இத்தாலிய ஜெர்மானிய தூதரக அதிகாரிகளின் ஏற்பாட்டால் ரஷ்யாவிலிருந்து ஒருவழியாக ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை தப்பித்த 71 நாட்களுக்கு பிறகு அடைந்தார். அங்கு ஹிட்லரை ஒரு வருடம் காத்திருந்து சந்தித்த செய்தி வெளியிட்ட பிறகு தான் பிரிட்டிஷ் அரசுக்கு கிலி பிடித்தது. போரில் பிடிபட்டு இருந்த இந்திய வீரர்களை விடுவித்து அவர்களை கொண்டு "ஆசாத் ஹிந்த்" என்ற சுதந்திர இந்திய லீக் ராணுவத்தை அமைத்தார். ஆசாத் ஹிந்த் என்ற பெயரில் வானொலியையும் பின்னர் அதே பெயரில் பத்திரிக்கையையும் வெளியிட்டு இந்திய சுதந்திரத்தை பற்றி எழுதி வந்தார். அந்த அமைப்புக்கு தனி கொடி, தேசீய கீதம் அமைக்கப்பட்டது. மூவர்ண கொடிக்கு நடுவில் புலி பாய்வது போல் கொடியும் ஜனகனமன பாடல் தேசிய கீதமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட ஹிட்லரை சம்மதிக்க வைக்க முனைந்தார். ஆனாலும் அவர் ஒரு முடிவு எடுக்க முடியாமல் போகவே ஜெர்மனியிலிருந்து ஜப்பான் சென்று அவர்களின் உதவியை நாடினார். பின்னர் ஜப்பான் சிங்கப்பூரை கைப்பற்றியவுடன் இந்திய கைதிகளை ஒருங்கிணைத்து மோகன் சிங் தலைமையில் ஒரு ராணுவம் அமைக்கப்பட்டது. ஜப்பானியருடன் மோகன் சிங் கருத்து வேறுபாட்டால் விலக முன்பு கி.பி.1912ல் லார்டு ஹார்டிஞ்ச் மீது குண்டு வீசி ஜப்பானுக்குள் வந்து தலைமறைவாக இருந்து ஜப்பானிய பெண்ணை திருமணம் முடித்து ஜப்பான் பிரஜையாக மாறிய ராவ் பீஹாரி போஸ் வசம் தலைமை பொறுப்பு வந்தது. மோகன் சிங் காலத்தில் மலேஷியாவை பிடித்தவுடன் கோலாம்பூரில் இருந்த இந்திய கைதிகளையும் படையில் இணைக்க 30,000 பேர் கொண்ட இந்திய தேசிய ராணுவமாக செயல்பட ஆரம்பித்தது. ராவ் பீஹாரி போஸ் ஏற்கனவே வயதான நிலையில் இருந்ததால் நேதாஜியை தலைமை பொறுப்பு ஏற்க அழைக்கவே சிங்கப்பூர் வந்த நேதாஜி கி.பி.1943 ஜீலை 4ம் முதல் செயல்பட ஆரம்பித்தார். அதற்கு அடுத்த நாள் அவரது புகழ்பெற்ற கோஷமான "சலோ டெல்லி சலோ டெல்லி" யை வெளியிட்டு வீரர்களுக்கு உணர்ச்சியூட்டினார். கி.பி.1943 அக்டோபர் 21ம் தேதி சிங்கப்பூரில் உள்ள "கேத்தே" சினிமா ஹாலில் முதல் சுதந்திர இந்திய அரசு தொடங்கப்பட்டதாக அறிவித்தார். கேப்டன் லக்ஷ்மி தலைமையில் "ராணி ஆஃப் ஜான்சி ரெஜிமெண்ட்" என்ற படைப்பிரிவை அமைத்தார். அடுத்த 7 நாட்களில் ஜப்பானில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட நேதாஜியிடம் ஜப்பான் பிரதமர் வெற்றி கொண்டு கிடைத்த அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஒப்படைக்க அதுவே சுதந்திர இந்தியாவுக்கு கிடைத்த முதல் பூமியாக மாறியது. கி.பி.1943 டிசம்பர் 31ல் அந்தமானுக்கு வந்து அந்த மண்ணில் புனிதர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார். அந்த நேரத்தில் ஜப்பானிய படைகளால் இந்தியர்கள் வதைப்பட்டதை சொல்லியும் ஜப்பானியர்கள் தயவில் போராட்டம் நடப்பதால் அவர்களை பகைத்து கொள்ள வேண்டாம் என்ற மனநிலையில் அதை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்தமானை விட்டு போவதற்கு முன் அந்த தீவுகளுக்கு நேதாஜி "தியாகிகள் தீவு" என்றும் "சுயராஜ்யத் தீவுகள்" என்றும் பெயரிட்டார். ஐஎன்ஏ தளபதி ஜெனரல் லோகநாதன் என்பவரை அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஆளுநராக நியமித்து விட்டு அங்கிருந்து பர்மா சென்றார். அங்கிருந்து இந்திய தேசிய லீக்கின் தலைமை அலுவலகம் செயல்பட்டால் இந்தியாவுக்கு நுழைய நல்ல வாய்ப்பு என்று கருதி பர்மாவை மையமாக கொண்டு செயலாற்ற முனைந்தார். இந்திய தேசிய ராணுவம் கி.பி.1944 மார்ச் 18ல் மணிப்பூரில் நுழைந்தது. கர்னல் மாலிக் மூவர்ண கொடியை ஏப்ரல் 14ல் ஏற்றினார். இம்பாலை கைப்பற்ற அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மூன்று மாதங்கள் பிரிட்டிஷ் தரப்பினருடன் முற்றுகை போரில் ஈடுபட்டும் தாக்குதல் நடத்தியும் ஜூன் 1ம் தேதி ஆரம்பித்த பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஐ.என்.ஏ க்கு தேவையான உணவு பொருட்களும் ஆயுதங்களும் கொண்டு வர தடை ஏற்படவே முற்றுகை விலக்கி கொண்டு பின்வாங்கினார். ஆகஸ்ட் 14,1944 ல் ரங்கூன் வானொலியில் நேதாஜி போர் நிலவரங்களை விரிவாக எடுத்து கூறினார். அப்போது காந்திக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கும் போது "இந்தியாவின் கடைசி சுதந்திர போராட்டம் தொடங்கி விட்டது. இதற்கு தேசத்தந்தை காந்தியின் நல்லாசி வேண்டும்" கூறவே அப்போது முதலே காந்தியை "தேசத்தந்தை" என்று அழைக்கும் முறை வழக்கத்தில் வந்தது. பின்னர் மக்களிடம் "இன்னும் பணம் திரட்டுங்கள். எனக்கு ரத்தத்தை கொடுங்கள். உங்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கிறேன்" என்று வானொலியில் உரையாற்றினார். மக்கள் மேலும் மேலும் நிதியுதவி அளிக்கவே தயாராக இருந்தனர். பிரிட்டிஷ் படைகள் ரங்கூனை நோக்கி வர தொடங்க ஜப்பான் படைகள் ரங்கூனை விட்டு விலக தொடங்கின. நேதாஜியை தாய்லாந்துக்கோ அல்லது ஜப்பானுக்கோ வெளியேறி போரை தொடர்ந்து நடத்த சொல்ல அவர் இக்கட்டான நிலையில் தன்னை நம்பியவர்களை விட்டு தான் மட்டும் செல்லாமல் தமது அரசு அதிகாரிகளையும் ஜான்சி ராணி பெண்கள் படையினரையும் 12 லாரிகளிலும் சில கார்களிலும் அழைத்துக்கொண்டு ரங்கூனிலிருந்து பாங்காங் பயணத்தை கி.பி.1945 ஏப்ரல் 24ம் தேதி ஆரம்பித்து 21 நாட்களில் மே 4ல் பாங்காக் வந்தடைந்தார். இந்தியாவின் வைஸ்ராய் வேவல் பிரபு காங்கிரஸ் ஒத்துழைத்தால் வைஸ்ராய் கவுன்சிலில் சில இந்தியர்களையும் சேர்ப்பதாக கூற நேதாஜி "சர்ச்சிலின் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம். பிரிட்டனில் அடுத்த தேர்தலில் ஆட்சி மாறும்" என்று சிங்கப்பூரிலிருந்து வானொலியில் ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். கடைசியில் நேதாஜியின் விருப்பப்படியே சிம்லாவில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பின்னர் அங்கிருந்து மலேஷியா சென்றார். ரஷ்யாவின் உதவியை கேட்கலாம் என்றிருந்த சமயத்தில் ஜப்பான் ரஷ்யா மீது போர் தொடுத்தது. பின்னர் சிங்கப்பூர் திரும்பிய அங்கேயே தங்க நினைத்தார். இந்நிலையில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வெடித்ததால் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. ஜப்பான் அவரை ஆகஸ்ட் 15ல் தன் நாட்டிற்கு வர சொல்லவே ஆகஸ்ட் 16ம் நாள் நேதாஜி கர்னல் ப்ரீதம் சிங் எஸ்.ஏ.ஐயர் மற்றும் கலோனல் ஹபிபூர் ரஹ்மான் ஆகியோர் விமானம் மூலம் பாங்காக் அடைந்தனர். அடுத்த நாள் அங்கிருந்து சைகோன் சென்றனர். போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராததால் ஒரு ஆள் உள்ள விமானத்தில் நேதாஜி மற்றும் ஹபிபூர் ரஹ்மானுடன் சென்ற விமானம் பற்றி இரண்டு நாட்களுக்கு தகவலே கிடைக்கவில்லை. ஆகஸ்ட் 19ம் தேதி விமான விபத்தில் நேதாஜி மறைந்தாக ஜப்பான் வானொலி செய்தி வாசித்தது. எஸ்.ஏ.ஐயர் நம்பவில்லை. இன்னமும் நேதாஜி அதன் பிறகு சீனாவில் வாழ்ந்தார் ஒரு சன்னியாசியாக இந்தியாவில் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்தார் ரஷ்யாவிடம் போர் கைதியாக சிக்கியவரிடம் ஸ்டாலினால் சித்திரவதை செய்து சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே மறைந்தார் என பல கருத்துக்கள் இன்றும் உள்ளது. போரின் முடிவுக்கு பின்னர் இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று பல தரப்பிலிருந்து குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது.
மணிப்பூரின் "ராணி கைடின்லியூவும்" 14 ஆண்டுகள் சிறையில் அடைப்பட்டார்.
கி.பி.1932 ல் தேசிய கொடியை விட மறுத்ததால் தடியால் அடித்தே கொல்லப்பட்ட திருப்பூர் குமரனும்
முக்கியமானவர்கள்.
உதவிய நூல்கள் :
தண்டி யாத்திரை - பா.முருகானந்தம்
இந்திய சுதந்திர போராட்டம் - இலந்தை சு.இராமசாமி
இந்தியா உருவான கதை - க.சிவஞானம்
அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - என்.சொக்கன்
இந்திய பிரிவினை - மருதன்
டெல்லியை நோக்கி செல் - சுபாஸ் சந்திர போஸ் உரைகள்
மாமனிதர் ஜின்னா - தங்கசாமி
ஜின்னா - மருதன்
மர்மங்களின் பரம பிதா சுபாஷ் - மருதன்
உப்புவேலி - ராய் மக்ஸம்
படங்கள் :
கூகுள் படங்கள் & திருமுத்துகுமரன்





















Comments
Post a Comment