101) இந்திய பிரிவினை மற்றும் இந்திய சுதந்திரம்

இடைக்கால அரசு, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை & இந்திய சுதந்திரம் :

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் பிரதமராக இருந்த சர்ச்சில் இந்தியர்களுக்கு தங்களை நிர்வாகம் பண்ண தெரியும் திறமை இல்லாதவர்கள் என்று பலமுறை வலியுறுத்தி வந்ததால் காங்கிரஸ் தலைவர்கள் அதை எதிர்த்து வந்தனர். போர் முடிந்தும் இந்தியாவிற்கு விடுதலை கொடுக்கும் மனநிலையில் பிரிட்டன் இல்லை. நல்ல வருவாய் தரும் பிரிட்டன் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் அளவுக்கு வருமானத்தை தந்து கொண்டிருக்கும் இந்தியாவை இழக்க சர்ச்சில் விரும்பவில்லை. போர் முடிந்து பிரிட்டன் தேர்தல்களில் உழைப்பாளர் கட்சி வெற்றி பெற்று சர்ச்சில் பிரதமர் பதவியிலிருந்து இறங்கி அட்லி பிரதமரானார். கி.பி.1945 ஆகஸ்ட் மத்தியில் உலகப்போர் முடிந்தாலும் இந்திய வீரர்கள் திரும்ப வரவில்லை. அவர்களது தியாகம் மதிக்கப்பட்ட மாதிரி தெரியவில்லை.  2 ஆண்டுகளுக்கு முன்பு வங்காள பஞ்சம் ஏற்படுத்திய காயமே தீரவில்லை. இந்த நிலையில் பிரிட்டன் படையில் பணியாற்றி போர் கைதியாகி பின்னர் நேதாஜியால் விடுதலை செய்யப்பட்டு ஐ.என்.ஏ.வில் இணைந்து நாட்டு சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர்களுக்கு தண்டனையா? என்று மக்கள் கொதித்தெழுந்தனர். ஆகஸ்ட் 20ல் ஜவஹர்லால் நேரு ஐ.என்.ஏ வீரர்கள் பலர் கைதிகளாகவும் கொல்லப்பட்டும் உள்ளனர். இந்த தேச பக்தர்களை சாதாரண கலகக்காரர்கள் போல தண்டிப்பது நாட்டில் கலகத்தை உண்டு பண்ணும். அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று முழங்கினார். பிரிட்டிஷ் அரசு அவர்கள் பலாத்காரத்திற்கும் தூண்டதலுக்கும் ஆட்பட்டு குற்றம் இழைத்தவர்கள் என்று கூறி குறைந்த தண்டனையே வழங்கப்படும் என்று கூறியது. ஆனால் அந்த வீரர்கள் அப்படிப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு வேண்டாம். தெரிந்தே கலந்து கொண்டோம். எங்களது நாட்டுபற்றையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கூறி எந்தவித தண்டனைக்கும் தயாராக இருந்தனர். வீரர்களை ஐ.என்.ஏ. வில் சேராதவர்கள் (வெள்ளை), தவறுதலாக வழிகாட்டப்பட்டு சேர்ந்தவர்கள் (சாம்பல்) மற்றும் வேண்டுமென்றே சேர்ந்து போரிட்டவர்கள் (கறுப்பு) என்று மூன்று வகையாக பிரித்தனர். மொத்தமுள்ள 17000க்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலோனோர் கறுப்பு பட்டியலில் தான் இருந்தனர். இவர்களின் விசாரணையை மக்கள் மட்டுமின்றி இந்திய ராணுவ வீரர்களும் கவனித்து வந்தனர். ஒருவித புரட்சி மனப்பாங்கு எல்லோரிடமும் ஓங்கி இருந்தது. மற்றவர்களை விடுவித்து விட்டு 3 ராணுவ அதிகாரிகளான ஷா நவாஸ், சேகல், தில்லான் ஆகியோர் மீது மட்டும் விசாரணை டெல்லி செங்கோட்டையில் நடந்தது. நேருவும் மற்றும் இந்தியாவின் தலைசிறந்த வக்கீல்களும் அவர்களுக்காக வாதாடினர். கி.பி.1945 நவம்பர் 5ம் தேதி தொடங்கிய விசாரணை 57 நாட்கள் நடந்தது. அரசு தரப்பு இவர்களை அரசுக்கு எதிராக போர் தொடுத்த குற்றவாளிகள் என்று கூற வீரர்கள் தரப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட அரசின் சார்பாக போரில் ஈடுபட்ட போர் கைதிகள் என்று வலியுறுத்தியது. முடிவில் கி.பி.1946 ஜனவரி 3ல் இவர்கள் மூவரும் அரசருக்கு எதிராக போர் தொடுத்த குற்றவாளிகளே என்று கூறி ஆயுள் தண்டனையும் நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களது சம்பளமும் படிகளும் பறிக்கப்படுவதாக தீர்ப்பு கொடுத்தது. பின்னர் ராணுவ தளபதி அவர்களை ஆயுள் தண்டனையிலிருந்து விடுவித்தார். அவர்களின் சம்பளமும் படிகளும் பறிக்கப்படும் என்ற தண்டனை நீடிக்கப்படும் என்று கூறினார். மூவரும் அன்றே விடுவிக்கப்பட நாடு முழுவதும் மகிழ்ச்சி அலை பெருகியது. இந்த விசாரணையின் போது மக்களின் எழுச்சியையும் ராணுவ வீரர்களின் நடவடிக்கையும் பார்த்த பிரிட்டிஷ் அரசு இனி இந்தியாவை ரொம்ப நாட்களுக்கு கையில் வைத்திருக்க முடியாது என்று நினைத்தது. அதற்கேற்ப அடுத்த இரு மாதங்களில் கப்பற்படை கலகமும் நடக்க தனது படையினரே கலகத்தில் இறங்கினால் இனி சமாளிக்க முடியாது என்ற நிலையில் இந்தியாவிற்கு சுதந்திரத்தை கொடுத்து விட்டு ஒதுங்கி விடலாம் என்றும்  முடிவு செய்தது.

கப்பற்படை கிளர்ச்சிக்கு முன்னரே வசதிகள் குறைவு அதிகாரிகள் அலட்சியம் போன்ற காரணத்தால் டெல்லியில் விமானப்படை கிளர்ச்சி செய்தது. நேதாஜியின் படைவீரர்கள் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விதத்தை வயர்லெஸ் செய்தி மூலம் அறிந்த கடற்படையினர் உள்ளுக்குள் கொதித்தனர். அதற்கேற்ப புதியதாக இணைந்தவர்களுக்கு முன்னமே தகவல் அளித்தும் பிப்ரவரி 17ல் உணவு தயாரிக்காததால் கடற்படையினர் கிளர்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தனர். பம்பாயில் ஆரம்பித்த கிளர்ச்சி வயர்லெஸ் கருவிகள் மூலம் கராச்சி,‌‌ கல்கத்தா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்கும் பரவியது. ஒரு வாரம் பம்பாயில் கதவடைப்பு நடந்தது. அதிகாரிகளுக்கு இடது கையில் சலாம் வைத்தனர். இந்த புரட்சியை காங்கிரஸ் மற்றும் முஸ்ஸீம் லீக் ஆதரிக்கவில்லை. கடலிலும் நாட்டிற்குள்ளும் சிப்பாய்கள் ஊர்வலம் சென்றனர். மக்களும் அவர்களுடன் கலந்து கொண்டனர். கப்பல்களில் இருந்து ஆயுதங்களை கைப்பற்றினர். பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருக்கும் கூர்க்கா படையினரும் சிப்பாய்களை சுட மறுத்தனர். கடைசியில் காந்தியின் வேண்டுகோளின்படி வந்த வல்லபாய் படேல் கிளர்ச்சி குழு தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிளர்ச்சியை முடித்து வைத்தார். போராட்டம் திரும்ப பெறப்பட்டாலும் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் பலரை பணிநீக்கம் செய்தனர்.

வேவல் பிரபு லண்டன் சென்று ஆலோசனைகள் நடத்தி இந்தியாவிற்கு திரும்பும் போது தேர்தல் நடத்தும் முடிவில் வந்தார். வந்தவுடன் கி.பி‌.1945 செப்டம்பர் 19ம் தேதி வானொலியில் உரையாற்றி "இந்தியாவை இந்தியர் எப்படி ஆள போகுறீர்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல்" என்று கூற ஜின்னா உடனே தனது பத்திரிக்கையில் "பாகிஸ்தான் உருவாகாமல் சுதந்திரம் இல்லை. முகமதியர்கள் மகிழ்ச்சியோடு வாழ அது தான் சிறந்த வழி" என்று எழுதினார். இந்தியாவில் ஒருவழியாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்துக்கள் பெரும்பான்மையான பகுதியில் காங்கிரஸூம் முஸ்லீம்கள் பெரும்பான்மையான பகுதியில் முஸ்லீம் லீக்கும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் கேபினட் குழு வைஸ்ராய் கவுன்சிலில் பிரச்சினைகள் ஆலோசிக்கப்பட்டது. கேபினட் உறுப்பினர்களை சந்தித்த காந்தி பின்னர் காந்தி ஜின்னாவுடன் பேசி நல்ல முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்தார். ஜின்னா இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள வேறுபாட்டை பற்றி விளக்கினார். கல்கத்தா பாகிஸ்தானுக்கு வேண்டும் என்றார். எந்த அரசின் கையில் ஆட்சியை ஒப்படைக்கிறோமோ அந்த அரசிடம் சமஸ்தான மன்னர்கள் தொடர்பு கொண்டு தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். கேபினட் குழுவை மன்னர்களின் பிரதிநிதிகள் சந்தித்தனர். சீக்கியர்கள் மாஸ்டர் தாரா சிங் தலைமையில் இந்தியாவை பிரிப்பதை விரும்பவில்லை என்றும் இந்தியாவை பிரித்தால் சீக்கியர்களுக்கு "காலிஸ்தான்" என்ற பெயரில் நாடு வேண்டும் என்று கூறினர். கடைசியில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் போகவே குழுவே ஒரு முடிவு எடுக்க தீர்மானித்தனர். அதன்படி குழுவினர் இந்தியாவை விட்டு வெளியேறும் முன்னர் " இந்திய மக்களுக்கு சுதந்திரம் பெறுவதில் ஆர்வமுள்ளது. மன்னரும் பிரிட்டிஷ் மக்களும் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க ஆவலாக உள்ளனர். இரு முக்கிய சமுதாயங்களுக்கும் ஏற்றாற்போல் ஏற்பாட்டை செய்ய முயன்றோம். இருதரப்பையும் ஒப்புக்கொள்ள செய்ய முடியவில்லை. அதனால் நாங்களாகவே ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறோம்" . எல்லா கட்சியினரும் இணைந்து இடைக்கால அரசை அமைக்கலாம். அது டொமினியன் அரசு போல செயல்படும். வைஸ்ராய்யின் தலையீடு இருக்காது என்று கூற ஜின்னா அதில் சில நிபந்தனைகளை விதித்தார். காங்கிரஸ் 5, முஸ்லீம் லீக் 5, மற்றவர்கள் 3 என்ற விதத்தில் பாதுகாப்பு துறை முஸ்ஸீம் லீக் வசமே இருக்கவேண்டும் என்று கூற வேவல் பிரபு நேருவை சம்மதிக்க வைக்க முயன்றார். நேருவும் படேலும் தன் தேவையை மிரட்டி பணிய வைக்க நினைக்கிறவர் எல்லா கட்டத்திலும் அதை செய்ய மாட்டார் என்பது என்ன நிச்சயம் என்று மறுத்துவிட்டனர். வைஸ்ராய் வேவல் இருவரையும் சம்மதிக்க முயன்றும் ஒப்புக்கொள்ளவில்லை. இங்கிலாந்து மன்னருக்கு "இடைக்கால அரசை இறந்து பிறந்த குழந்தை என்றும் சிறு மனிதர்களிடம் அரசை ஒப்படைக்க வேண்டியிருக்கிறது" என்று வருந்தி எழுதினார். இந்த நிலையில் காங்கிரஸ் நேருவை அதன் தலைவராக நியமித்தது. நேரு வேவல் பிரபுவுக்கு இடைக்கால அரசில் காங்கிரஸ் சேரும் முன் காங்கிரஸ் தனி அரசமைக்கும் அதிகாரம் வேண்டும் என்ற உறுதிமொழியை வேண்டினார். நேருவை வேவல் பிரபு சந்திக்க அழைப்பு அனுப்பினார். இதன்படி காங்கிரஸ் 6,சீக்கியர் 1, கிறிஸ்தவர் 1, பார்ஸி 1,  முஸ்லீம்கள் 5 என்ற அடிப்படையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. முஸ்ஸீம் லீக்கின் லியாகத் அலிகான் நிதி இலாகா பொறுப்பேற்று எந்த துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய தகராறு செய்தார். 


தகராறு செய்யும் முஸ்ஸீம் லீக் காரர்களை திரும்ப பெற ஜின்னாவை கேட்க அவர் மறுத்து விட்டார். இதனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து மூவர் விலகினர். 

இதற்கிடையில் பம்பாயில் கூடிய முஸ்லீம் லீக்கின் செயற்குழு " பிரிட்டிஷ் அரசின் ஆதரவோடு காங்கிரஸ் ஜாதி ஹிந்து அரசை அமைக்க முயல்வதால் பாகிஸ்தானை பெறுவதற்கு நேரடி செயலில் இறங்குவதை தவிர வேறு வழி இல்லை" என்று சொல்லி ஏற்கனவே செய்யப்பட்ட தீர்மானத்தின் படி நேரடி நடவடிக்கை நாளாக ஆகஸ்ட் 16ஐ அறிவித்து. வங்காள பிரதமராக இருந்த முஸ்லீம் லீக் தலைவர் சுரா வர்த்தி அந்த நாளில் விடுமுறை அறிவிக்க கவர்னரை வேண்டினார்.


அதன்படி போலீஸ்காரர்களுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது. ராணுவத்தின் தளவாடங்களும் பூட்டி வைக்கப்பட்டது. அன்று காலை நடந்த கல்கத்தா கூட்டத்தில் மறைமுகமாக போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூற முஸ்லீம்கள் கடைகளை அடைக்க கூறினர். மறுத்தவர்களையும் எல்லோரையும் தாக்கினார். போலீஸ்காரர்களையும் ராணுவத்தையும் பிரதமர் அழைக்கவில்லை. கலவரங்கள் தொடர்ந்தது. பின்னர் சுதாரித்து கொண்டு சீக்கியர்களும் இந்துக்களும் திருப்பி தாக்க தொடங்கினர். ஆயிரக்கணக்கான இந்துக்களும் முஸ்லீம்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். கல்கத்தாவில் நிகழ்ந்த வன்முறையின் எதிரொலியாக கிழக்கு வங்காளத்திலும் பீஹாரிலும் வன்முறை தலைதூக்கியது. இந்துக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டது. குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றாக கட்டி வைத்து கொளுத்தினர். பெண்களை கடத்தி சென்று கற்பழித்தனர். இந்து கோயில்களை இடிக்கும் முன்னர் கன்று குட்டிகளை கொன்று கோயிலில் வீசினர். கல்கத்தா நவகாளியில் வெறியாட்டம் உச்சத்தை தொட்டு இருந்தது. கொல்லப்பட்டவர் போக மற்றவர்களில் பெரும்பான்மையோர் மதம் மாற்றப்பட்டனர். கட்டாயப்படுத்தி தொழுகை செய்ய வைக்கப்பட்டனர். முஸ்லீம் பெயர்கள் அவர்களுக்கு சூட்டினர். எதிர்த்தவர்களை இழுத்து சென்று குடும்பத்தோடு எரித்தனர். மாதக்கணக்கில் நடந்த வன்முறையின் எதிர் விளைவாக பீஹாரில் இந்துக்கள் கொதித்து எழுந்து முஸ்லீம்களை அங்கு தாக்க தொடங்கினர். இந்துக்கள் நவகாளியில் திருப்பி தாக்க தொடங்கியவுடன் காந்தி அதை தடுப்பதற்காக யாத்திரையை தொடங்கினார்.

கிராமம் கிராமமாக சென்று பிரார்த்தனை செய்தார். ஒற்றுமையை இரு தரப்புக்கும் எடுத்து கூறினார். நவகாளியில் ஒரளவு அமைதியை நிலைநாட்டிவிட்டு பின்னர் காந்தி பீஹாருக்கு சென்றார்.

பஞ்சாப்பில் எந்நேரமும் கலவரம் வெடிக்கும் சூழல் இருந்தது. காங்கிரஸ் மற்றும் வைஸ்ராய் சேர்ந்து ஜின்னாவையும் முஸ்லீம்களையும் ஏமாற்றி விட்டதாக பேசினர். இனப்போராட்டம் நடக்கும் சூழல் இருப்பதாக பஞ்சாப் ஆளுநர் வைஸ்ராய்க்கு கடிதம் எழுதினார். வங்காள பிரதமர் சுரா வர்த்தி "வங்காள முஸ்லீம்கள் எல்லோரும் கிளர்ந்தெழுந்தால் கிழக்கு வங்காளத்தில் ஒரு இந்து கூட உயிரோடு இருக்கமாட்டான்" என்று பேசினார். வேவல் பிரபு அதை அவரிடம் கேட்க அவர் ஆமாம் அவ்வாறு தான் பேசினேன் என்று கூறினாலும் அவர் மீது வேவல் பிரபுவால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இனக்கலவரம் வெடித்தால் பிரிட்டிஷ்காரர்களை பாதுகாக்கும் பொறுப்பு இருப்பதால் விரைந்து இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்து வெளியேறி விடுவது நல்லது என்று எண்ணினார். இதற்கிடையில் பீகாரில் கடுமையான வன்முறை நடக்க ஆரம்பித்தது. பீகார் நடவடிக்கைகளுக்கு காரணம் கிழக்கு-மேற்கு வங்காளத்தில் நடந்த கலவரத்தின் விளைவு தான் என்பதை வசதியாக மறைத்து விட்டு "பீகார் சம்பவங்கள் கூட்டு சதி" என்று ஜின்னா கூறினார். பாகிஸ்தான் பிரிப்பதற்கு அதையே ஒரு காரணமாக எடுத்துகொண்டு ஜின்னா " பாகிஸ்தான் அமைந்தால் அங்கே ஜாதி மத வேறுபாடின்றி எல்லோரும் சம உரிமை பெறுவார்கள்" என்று பாகிஸ்தான் பிரிப்புக்கு மக்களை தூண்டி விட ஆரம்பித்தார். இரு கட்சிகளும் இணையாமல் அரசியல் சட்ட உருவாக்கத்தை ஏற்படுத்த இயலாது என்று வைஸ்ராய் கூறினார். சுதந்திரத்திற்கு முன்பே ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேறுவது நல்லது என்று கூறினார். வேவல் பிரபுவால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை.  வேவலின் இடத்தில் துடிப்புள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதம மந்திரி அட்லி நினைத்தார். நேரு மற்றும் ஜின்னா இருவரையும் லண்டனுக்கு அழைத்தார். நேரு சீக்கிய தலைவரான பல்தேவ் சிங்கையும் ஜின்னா லியாகத் அலிகானையும் அழைத்து கொண்டு சென்று அட்லியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எந்த முடிவும் எட்டப்பட வில்லை. இந்நிலையில் மரியாதையாக தான் விலகாவிட்டால் அவமதிப்பு வர நேரிடும் என்று உணர்ந்த பிரிட்டிஷ் அரசு சீக்கிரம் இந்திய விடுதலையை கொடுக்க வேவல் பிரபுவிற்கு மாற்றாக துடிப்பான ராயல் நேவி தலைவராக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபுவை நியமிக்க விரும்ப அவரின் நிபந்தனைகளை ஏற்று அவரை நியமிக்க முடிவு செய்தது. இதற்கிடையில் டிசம்பர் 9ம் தேதி அரசியல் நிர்ணய சபை கூடியது. பாபு இராஜேந்திர பிரசாத் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மெளண்ட்பேட்டன் பிரபுவை தேர்தெடுத்தற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அவருக்கு ஜவஹர்லால் நேருவுடன் நல்ல நட்புறவு இருந்தது. கி.பி.1932களில் கமலா நேருவுக்கு ஜரோப்பியாவில் சிகிச்சைக்கு சென்றிருந்த சமயங்களில் மவுண்ட் பேட்டன் பிரபுவின் குடும்பம் நேருவுக்கு உதவி புரிந்தது.


இதனால் நேருவுடன் உள்ள நட்பினால் பிரச்சினைகளை சுலபமாக தீர்த்து கொள்ளலாம் என்று நினைத்து மெளண்ட்பேட்டன் பிரபுவை தேர்தெடுத்தனர். பிப்ரவரி 20,1947ல் இங்கிலாந்து பிரதம மந்திரி அட்லி பிரபு இந்திய சுதந்திரத்தை பற்றி அறிவித்தார். ஒரு தனி மைய அரசிடமோ அல்லது பிராந்திய அரசுகளிடமோ 1948 ஜூன் மாதத்திற்குள் ஆட்சியும் அதிகாரப்பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும் என்றார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பஞ்சாப்பில் கலவரம் தொடங்கியது. லாகூர் முல்தான் அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் பரவிய கலவரம் இன கலவரமாக மாறிவிடக் கூடிய அபாயம் இருந்தது. இதற்கிடையில் மார்ச் 5ம் தேதி இங்கிலாந்து மக்களவையில் அரசு மாற்றும் திட்டம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியது. பஞ்சாப்பில் யூனியனிஸ்ட் கட்சி தலைவரான கிஸார் ஹியாட் ஆட்சியிலிருந்து விலக ஜின்னாவின் கரம் ஓங்கியது. எங்கு பார்த்தாலும் பிரிவினை கோஷம் ஒலிக்க ஆரம்பித்தது. இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லீம்கள் தங்களை தாக்கினால் எதிர்கொள்ள தயாராக இருந்தனர். ஊர்வலங்களில் கலவரம் நடந்து முஸ்ஸீம் அல்லாதவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தியாவுக்கு கி.பி‌.1947 மார்ச் மாதம் 22ல்  வந்து டெல்லியில் மெளண்ட்பேட்டன் பிரபு தன் மனைவி எட்வினா மற்றும் மகள் பமீலாவுடன் வந்து இறங்கினார். 2 நாட்களில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அணியினராக சந்திக்க தொடங்கினார்.பல சமஸ்தான அரசர்கள் காங்கிரஸ்ஸோடு சேர ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தனர். சிலர் மதில் மேல் பூனையாக எங்கு சாயலாம் என்று இருந்தனர். ஹைதராபாத்,‌‌ காஷ்மீர்,‌‌ மைசூர், திருவிதாங்கூர் சமஸ்தானங்கள் தனித்து இயங்கலாம் என்ற யோசனையில் அதற்கு பின்னர் தங்களின் பாதுகாப்பை பற்றி மெளண்ட்பேட்டன் பிரபுவிடம் கலந்து ஆலோசித்தனர். வேறு வழியில்லாமல் பஞ்சாப்பை பிரிந்தே ஆக வேண்டும் என்றார் நேரு. சீக்கியர்களும் முஸ்ஸீம்களோடு தங்களால் ஒத்து போகமுடியாது அதனால் பஞ்சாப்பை பிரித்தே ஆக வேண்டும் என்றனர். மவுண்ட் பேட்டன் பிரபு அதிகார பகிர்வு தேதியை தள்ளி போட விரும்பவில்லை. நேருவிடம் டொமினியன் அந்தஸ்து கொடுத்தால் ஏற்று கொள்வீர்களா? என்று வினவ 1930லையே பூரண சுதந்திரம் கேட்டிருக்கிறோம். அதனால் டொமினியனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இந்த நேரத்தில் பீகாரிலிருந்து திரும்பி வந்த காந்திஜி மவுண்ட் பேட்டன் பிரபுவை சந்தித்து உரையாடினார். அடுத்த நாள் மவுண்ட் பேட்டன் பிரபுவை சந்தித்து காந்திஜி "இடைக்கால சர்க்காரை முஸ்லீம்லீக்கே எடுத்து நடத்தட்டும். நான் காங்கிரஸாரை சமாளித்து கொள்கிறேன்" என்று கூறினார். மெளண்ட்பேட்டனை பின்னர் நேரு சந்தித்த போது காந்தி சொன்னதை கூற அவர் எங்களிடமும் அப்படி தான் சொன்னார். கொஞ்ச நாளாக அவர் இங்கே இல்லாததால் அவருக்கு நிலவரம் புரியவில்லை என்று கூறினார். இதற்கிடையில் மெளண்ட்பேட்டன் பிரபு வங்காளம் மற்றும் பீகார் ஆளுநர்களுக்கு கடிதம் எழுதி கலவரத்திற்கு விசாரணை கமிஷன் அமைக்குமாறு வலியுறுத்தினார். ஏப்ரல் 5ம் தேதி ஜின்னாவை மெளண்ட்பேட்டன் பிரபு சந்தித்தார். அவர் பாகிஸ்தான் உருவாக்கியே தீரவேண்டும் என்றார்.

அப்படி உருவாக்கினால் வங்காளமும் பஞ்சாப்பையும் பிரிக்க நேரிடும் என்றார் மவுண்ட் பேட்டன். பஞ்சாப்பும் வங்காளமும் முழுமையாக பாகிஸ்தானுக்கு வேண்டும். இரண்டு மாநிலத்திலும் ஒரே மொழி அடிப்படையில் பிணைந்திருப்பவர்களை பிரித்து செல்லரித்த பாகிஸ்தானை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றார். அதற்கு பதிலாக வைஸ்ராய் நீங்கள் சொல்லும் வாதம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும் தானே என்று கேட்டார். பஞ்சாப்பையும் வங்காளத்தையும் பிரித்து பாகிஸ்தானை ஜின்னாவுக்கு கொடுக்க நேருவும் ஒப்புக்கொண்டார். பீகாரில் சில நாட்கள் இருந்துவிட்டு கல்கத்தா நவகாளிக்கு காந்திஜி மீண்டும் சென்றார். இவ்வளவு கலவரங்களுக்கு மத்தியிலும் தனது அகிம்சை கொள்கையையே துணிவாக கொண்டு அங்கு ஒற்றுமையை போதித்த நேரத்தில் கலவரங்கள் குறைந்து போயிருந்தது.

இதற்கிடையில் வங்காள பிரதமர் சுராவர்த்திக்கு தான் தலைவன் ஆகவேண்டும் என்ற ஆசையில் கல்கத்தாவிலிருந்த காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் வங்காள கவர்னரிடம் சென்று "பங்களாதேஷ்" என்ற பெயரில் வங்காள மொழி பேசும் தனி டொமினியன் அமைக்கும்படி வேண்டினார். அதை ஜின்னாவிடம் சொன்னபோது அவர் வரவேற்றாலும் மவுண்ட் பேட்டன் அதை ஏற்கவில்லை. ஏப்ரல் மத்தியில் மவுண்ட் பேட்டன் பிரபு இந்தியாவுக்கான மந்திரி பெதிக் லாரென்ஸிடம் பிரிவினையை தவிர வேறு வழியில்லை என்றார். பெதிக் லாரென்ஸ் "அமைதியான மாற்றம் வேண்டும் என்றால் அவசரப்படக்கூடாது . வேகம் விவேகத்தை கெடுக்கும்" என்றார். மவுண்ட் பேட்டன் அதை கண்டு கொள்ளவில்லை. இதனால் அவர் பதவி விலகவே புதிய மந்திரியாக லிஸ்டோவெல் நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்டவரிடம் தனது திட்டத்தை எடுத்து சொல்ல லண்டனுக்கு ஒருவரை வைஸ்ராய் அனுப்பி வைத்தார். நடப்பவை அனைத்தும் காந்திஜிக்கு பிடிக்கவில்லை. தன்னுடைய திட்டத்திற்கு செவி சாய்க்க மறுக்கிறார்கள் என்ற வருத்தம் வேறு அவருக்கு. தனது எண்ணத்தை மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு கடிதம் எழுதினார். வங்காளத்தையும் பஞ்சாப்பையும் பிரிப்பது முஸ்லீம் லீக்கிற்க்கு எரிச்சலை உண்டுபண்ணும். நீங்கள் சென்ற பிறகும் இந்தியாவில் எந்த குழப்பமும் நேராமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு கட்சியின் கையில் ஆட்சி பொறுப்பை ஒப்படைப்பது அவசியம் என்று எழுதினார். லாகூரில் முஸ்லீம்கள் இந்துக்களை தாக்கினார்கள். இந்துக்களும் சீக்கியர்களும் இணைந்து முஸ்லீம்களை திருப்பி தாக்கினர். ஜூன் 2ம் தேதி நேரு மற்றும் ஜின்னாவை வைஸ்ராய் மெளண்ட்பேட்டன் பிரபு அழைத்து தனது திட்டத்தை விவரித்து ரகசியமாக வைத்திருக்கும்படியும் இரவு 12 மணிக்குள் ஒப்புதலை தருமாறும் கூற நேரு தனது ஒப்புதலை கூற ஜின்னா பலத்த யோசனைகளுக்கு பிறகே இரவு 11 மணிக்கு ஒப்புதலை தெரிவித்தார். ஜூன் 3ம் தேதி மெளண்ட்பேட்டன் லண்டனுக்கு தகவல் அனுப்பினார். காங்கிரஸ் செயற்குழுவில் காந்தி பிரிவினையை ஒப்புக்கொள்ளவில்லை. இன்னும் போராடும் ஆற்றல் உங்களுக்கு இல்லை. அதனால் தான் பிரிவினைக்கு ஒப்பு கொண்டீர்கள் . நான் இனி எனது வழியில் போகிறேன் என்று கூறிவிட்டார். கடைசியில் காந்தி செயற்குழுவை விட்டு வெளியேறிய பின்னர் ஜூன் 4ல் காங்கிரஸ் செயற்குழுவும் பிரிவினையை ஒப்புக்கொண்டது. முஸ்லீம்லீக்கின் செயற்குழுவும் டெல்லியில் கூடியது. அவர்களும் ஏற்றுக்கொண்டனர். திராவிடர் கழகத்தலைவர் பெரியார் மதக்கலவரங்கள் நடக்கும் அபாயத்தை உணர்ந்து சுதந்திரம் கிடைப்பதை "துக்கமான நிகழ்வு" என்று கூறினார்.  பஞ்சாப்  பகுதியில் இருந்த இந்துக்களும் சீக்கியர்களும் இந்திய பகுதிகளுக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் நாட்டில் தென்பகுதியில் மத்திய பகுதியில் இருந்த முஸ்லீம்கள் இந்தியா "மதசார்பற்ற தேசம்" என்ற அறிவிப்பால் அவ்வளவு பாதிப்பில்லை என்று இங்கேயே தங்கும் முடிவிற்கு வந்தனர். ஜூலை 4ம் தேதி பிரிட்டிஷ் மக்களவையில் பிரதமர் அட்லி கொண்டு வந்த இந்திய சுதந்திரம் பற்றிய தீர்மானம் நிறைவேறியது. அந்த மசோதா ஜூலை 18ம் தேதி மன்னரின் ஒப்புதலை பெற்றது.

இதற்கிடையில் ஜூலை மாதம் 8ம் தேதி  ராட்ஃகிளிப்  இந்தியா பாகிஸ்தான் என இரு நாடுகளை பிரிப்பதற்காக இந்தியா வந்திறங்கினார். அடிப்படையில் புள்ளியியல் நிபுணரான அவரிடம் இந்திய புவியியல் அமைப்பை பற்றிய புரிதல் எதுவும் இல்லை. காடுகள் நதிகள் கடல்கள் மக்கள்தொகை விவரங்கள் யார் எந்த இடத்தில் பெருன்பான்மை என்ற விவரமும் இல்லாமல் வெறும் 3 நாட்களில் தலைமை நிர்வாகியிடம் விவரத்தை  கொடுத்துவிட்டு ஜூலை 15ம் தேதி லண்டனுக்கு திரும்பி போய்விட்டார்.


எப்போது இந்தியாவுக்கு கொடுப்பீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டதில் திணறி போன மெளண்ட்பேட்டன் பிரபு ஆகஸ்ட் 15 என்று கூறினார். ஏனெனில் அந்த நாளில் தான் (ஆகஸ்ட் 15,1945) ஜப்பானிய மன்னர் கடற்படை தளபதியாக இருந்த மெளண்ட்பேட்டன் பிரபுவிடம் இரண்டாம் உலகப்போரில் சரணடைந்த நாள். அதனால் திடிரென்று கேட்டவுடன் அந்த நாளை கூறிவிட்டார். நேருவுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் ராஜேந்திர பிரசாத் உஜ்ஜையினியில் இருந்து 2 பிரபல ஜோதிடர்களை வரவழைத்து கேட்டதில் அன்று சுதந்திரம் கிடைத்தால் பிரிவு நிச்சயம் என்றும் எப்போதும் கலவரங்களாகவே இருக்கும் பிரபல தலைவர்களின் மரணங்கள் நடக்கும் என்று கூற மெளண்ட்பேட்டன் பிரபு ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆகஸ்ட் 15ம் தேதி (அதாவது 14ம் நள்ளிரவு) 00:45க்குள் சுதந்திரம் பெறுவதே நல்லது என்று ஜோதிடர்கள் கூற அவ்வாறே முடிவும் எடுக்கப்பட்டது. மெளண்ட்பேட்டன் பிரபு இந்திய சுதந்திரம் அடைவதை எப்படி அடையாளமாக பெற்றுக்கொள்ள போகிறீர்கள் என்று நேருவை  கேட்க அவர் ராஜாஜியை அழைத்து கேட்டார். அவர் திருவாடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு வினவ மன்னர்கள் ஆட்சி மாற்றம் நடக்கும்போது செங்கோலை ஒப்படைப்பது மாதிரியாக தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை தயார்செய்து கொடுக்க அவ்வாறே சுதந்திரம் அளிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 14 இரவு 11:57க்கு பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அடுத்த 5 நிமிடத்தில் நள்ளிரவு 12:02க்கு இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நேருவின் வேண்டுகோளின்படி மெளண்ட்பேட்டன் பிரபுவே தொடர்ந்தார். ஆனால் ஜின்னா பாகிஸ்தானுக்கு தானே கவர்னர் ஜெனரல் என்று அறிவித்தார். தனது அத்தியந்த சீடரான லியாகத் அலிகான்னை பிரதமராக்கினார்.

சுதந்திர கொடிக்கு பலவித யோசனைகள் பலவாறு நடந்தது. பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த கொடியில் நடுவில் கைராட்டை இருந்தது. கடைசியில் ஹைதராபாத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பத்ருதின் தியாப்ஜியின் மனைவியான சுரையா தியாப்ஜி வடிவமைத்த தேசிய கொடியே பல்வேறு விவாதங்களுக்கு பிறகு ஒப்புக்கொள்ளப்பட்டது. அதுவே காங்கிரஸ் கொடியாக கி.பி.1931ல் பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த கொடியில் கைராட்டைக்கு பதிலாக அசோக சக்கரம் இடம்பெற்றது. பாகிஸ்தான் கொடியாக பச்சை நிறத்தில் 5 நட்சத்திரங்கள் அதன் ஜந்து மாகாணங்களை குறிப்பதாக அமைந்தது. பாகிஸ்தான் என்பதற்கு பஞ்சாப், ஆப்கான் பிரதேசம் , இண்டஸ்,  காஷ்மீர் மற்றும் சிந்து என்பதே அதன் பொருள். இவ்வாறாக ஒன்றுபட்ட இந்தியா இருநாடுகளாக பிரிந்து தனித்தனி நாடுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்றானது. 

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கல்கத்தாவுக்கு வந்திருந்த பிரதமர் அட்லியிடம் அப்போது உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பி.வி.சக்ரவர்த்தி " கி.பி.1947க்கு முன்னரே காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் முடிந்து விட்டது. பிறகு ஏன் பிரிட்டிஷ்ஷார் இந்தியாவை விட்டு வேகமாக வெளியேற முடிவெடுக்க காரணம் என்ன?" என்று கேட்டபோது அட்லி பிரபு குறிப்பிட்ட சில காரணங்களுள் நேதாஜியின் ஐ.என்.ஏ ராணுவம் பிரிட்டிஷ் அரசின் அடித்தளத்தை பலவீனப்படுத்தி விட்டதாகவும் மேலும் அதை தொடர்ந்த கப்பற்படை கலகம் இனி இந்திய ஆயுதப் படைகள் பிரிட்டிஷாருக்கு நம்பிக்கைக்கு உரியதாக இருக்காது என்பதை தெள்ள தெளிவாக கோடிட்டு காட்டியதாகவும் குறிப்பிட்டார். அப்படியானால் வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற கேள்விக்கு "மிகவும் குறைவாக" என்றும் பதிலளித்தாராம். எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தாலும் தன்னமலமற்ற தியாக சீலர்களாலும்  தவிர்க்கவே முடியாத காரணங்களால் ஒன்றுபட்ட இந்தியா பிரிந்து சுதந்திரம் அடைந்தது. பின்னர் ஜனவரி 26,1950ல் இந்தியா குடியரசு நாடானது.

உதவிய நூல்கள் :

இந்திய சுதந்திர போராட்டம் - இலந்தை சு. இராமசாமி

இந்திய பிரிவினை - மருதன்

கடைசி வைஸ்ராயின் மனைவி - ரியனான் ஜென்கின்ஸ் ஸேங்

மெளனத்தின் அலறல் - ஊர்வசி புட்டாலியா

1947 - ச.தமிழ்செல்வன்

தேச பிரிவினைக்கு யார் காரணம்? முஸ்லீம் மதவாதமா? இந்து மதவாதமா? - பாரத் கபீர் தாசன்

இந்தியா உருவான கதை - க.சிவஞானம்

பாகிஸ்தான்-ஒரு புதிரின் சரித்திரம் - பா.ராகவன்

அந்தமான் சிறை (அல்லது) இருட்டு உலகம் - என்.சொக்கன்

படங்கள்:

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு