102) இந்திய பிரிவினையின் கோரங்கள்
இந்திய பிரிவினையின் கோரங்கள் :
பிரிவினையின் போது மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களது சொத்துக்களை விட்டுவிட்டும் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டும் கால்நடையாகவும் ரயில் மூலமாகவும் கராச்சி லாகூரிலிருந்து வந்து சேர்ந்தனர்.
சுதந்திரத்திற்கு முன்பே மக்கள் இடம்பெயர ஆரம்பித்து விட்டனர். லாகூரில் ராவல்பிண்டியில் சொத்து உள்ளவர்கள் கான்பூர் அல்லது டெல்லியில் இதே மதிப்பிற்கு சொத்துக்களை இடம் மாற்றி கொள்ளலாம் என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்தனர். சிலர் அவ்வாறு மாற்றியும் கொண்டனர். இவ்வாறு வசதி படைத்தவர்கள் சுதந்திரத்திற்கு முன்பே தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டனர். ஆனாலும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டுவிட்டு உயிரை காப்பாற்றிக்கொள்ள பூர்விக நிலங்களை ஊரை விட்டு வெளியேற தொடங்கினர். அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக ரயிலுக்காக நாட்கணக்காக காத்து கிடந்ததும் நடந்தது. இந்திய சுதந்திர தினத்தன்று அமிர்தசரஸ் வந்து இறங்கிய ரயிலின் 3ம் வகுப்பு பெட்டி கதவு திறக்க வில்லையே என்று ஸ்டேஷன் மாஸ்டர் பார்த்து ஒவ்வொரு பெட்டியாக பார்க்க எந்த பெட்டியும் திறக்கவில்லை. மனிதர்கள் யாரும் இறங்கவில்லை. திறந்திருந்த ஜன்னல் வழியே பார்த்தாலும் மனித உருவமே தெரியவில்லை. திறந்து பார்த்தால் பெட்டி முழுவதும் பிணக்காடு. ஆடைகளற்ற பெண்கள் சிதறி கிடந்தனர். ஆண்கள் கை வேறு கால் வேறு தலை வேறு கிடந்தனர். ஒவ்வொரு பெட்டியாக பார்க்க எல்லாவற்றிலும் இதே நிலை தான். ரயில் முழுவதும் பிணங்களாக வெட்டி அனுப்பியிருந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் நடந்த முதல் கொடூரமாக மதவெறியின் உச்சமாக இந்நிகழ்வு பதிவாகிற்று. அந்த ரயில் பெட்டியின் மீது சுண்ணாம்பால் "நேருவுக்கும் படேலுக்கும் எங்கள் சுதந்திர பரிசு" என்று எழுதப்பட்டிருந்தது. இதே நேரத்தில் டெல்லியிலும் அடுத்தடுத்து கலவரங்கள் நடக்க ஆரம்பித்தது. டெல்லி சாந்தினி செளக் பகுதியில் வன்முறை தலைவிரித்து ஆடியது.
குழந்தைகள் கூட கொல்லப்பட்டனர். காந்தி விஷயம் கேள்விப்பட்டு டெல்லிக்கு திரும்பினார். எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருக்கும் டெல்லி சுடுகாடு ஆகிவிட்டதே? இது நடக்கும் என்று எதிர்பார்த்து தான் பிரிவினை வேண்டாம் என்று கூறினேன்" என்றார்.
சுதந்திரத்திற்கு முன்பே அமிர்தசரஸில் சீக்கியர்களும் இந்துக்களும் முஸ்லீம்களை தாக்க அவர்களும் இவர்களை தாக்கி அழித்தனர். சீக்கியர்கள் பஞ்சாப்பிலிருந்து முஸ்லீம்களை துரத்திவிடலாம் என்ற எண்ணத்தில் குழுக்களாக சென்று முஸ்லீம்கள் குடியிருப்புகளில் தீ வைத்தனர். மறுபடி முஸ்லீம்கள் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் குடியிருப்புகளில் தீ வைத்தனர். இந்த நிகழ்வு சுதந்திரம் அடையும் வரையும் தொடர்ந்தே நடந்தது. இறந்து போன முஸ்லீம்களின் உடலை வெட்டி எடுத்து மசூதிகளில் வீசிவிட்டு சென்றனர். பதிலுக்கு அவர்கள் சீக்கிய பெண்களை தேடி பிடித்து பாலியல் பலாத்காரம் செய்தனர். அமிர்தசரஸ் முஸ்லீம்கள் மீது அமிலம் நிறைந்த குப்பிகளை வீசினர். நேரு, ஜின்னா, படேல் முதற்கொண்டு எந்த தலைவர்களும் இனக்கலவரத்தை எதிர்பார்க்கவில்லை என்பதே யதார்த்தம். ஒரு கிராமத்தில் திடிரென்று மாற்று மதத்தினர்கள் தாக்க வருவதாக வதந்தி பரவும். ஆண்கள் அனைவரும் ஒன்று கூடி பாதுகாப்பாக குழந்தைகளையும் பெண்களையும் ஒரு வீட்டில் வைத்துவிட்டு எதிர் தாக்குதலுக்கு தயாராகுவார்கள். இது போன்ற சம்பவங்கள் நடக்க நடக்க அனைவரும் ஊரை காலி செய்து விட்டு கால்நடைகளுடன் தட்டுமுட்டு சாமான்களுடன் தங்கள் இனத்தவர்கள் இருக்கும் இடத்திற்கு சேர்ந்து கொள்ள கிளம்புவர். வழியில் உள்ள கிராம மக்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்வர். சாலை வழி பயணம் நீள நீள மக்கள் எண்ணிக்கை 10,000-20000 என்ற அளவுக்கு பெருகும். இந்த உயிரை காப்பாற்ற ஒடும் மக்கள் கூட்டத்தை கஃபிலா (Kafila) என்று அழைத்தனர். சில நேரங்களில் 4 லட்சம் மக்கள் அளவுக்கு ஒரே கஃபிலாவில் இடம்பெயர்ந்தனர். இடையில் மத வெறியர்களின் தாக்குதலுக்கு கஃபிலா ஆளாகும் சமயத்தில் பெண்கள் கடத்தி செல்லப்படுவர். கதறி அழுதபடி பயணம் தொடரும். இதில் உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி செத்து விழுந்த மக்கள் ஏராளம். பின்னர் பல கிராமங்களில் தாக்குதலுக்கு படை வருகிறது என்ற வதந்தி பரவியதும் கற்பழிக்கப்படலாம் என்ற அச்சத்தினால் பெண்கள் விஷம் குடித்தும் தீக்குளித்தும் வீட்டு கிணறுகளில் விழுந்தும் தற்கொலை செய்து கொண்டனர். சிலர் வீட்டு ஆண்களால் கொலை செய்யப்பட்டனர். குறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி தோ ஆ கல்சா என்ற கிராமத்தில் 88 சீக்கிய பெண்கள் முஸ்லீம்கள் தாக்க வருகிறார்கள் என்று கேள்விப்பட்டு கிணற்றில் விழுந்து அந்த கிணறே பிணங்களால் மூடிவிட்டது. தன் 6 குழந்தைகளை கிணற்றில் போட்டுவிட்டு தானும் குதித்த தாயால் கிணறு நிரம்பியதால் சாக முடியவில்லை. திரும்ப திரும்ப பலமுறை குதித்தும் சாக முடியாமல் பைத்தியம் பிடித்து கடைசியில் குழந்தைகளை இழந்து மனநலம் பாதித்து டெல்லிக்கு வந்த சேர்ந்த நிகழ்வும் நடந்தது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளில் இதே போல் முஸ்லீம் பெண்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிறைய நடந்தன. பொற்கோயில் வளாகத்தில் ஒர் இரவு முழுவதும் 200 முஸ்லீம் பெண்கள் நிர்வாணமாக நடனமாட நிர்பந்திக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தது. லாகூரில் சீக்கியர்களின் குடியிருப்புகளில் தண்ணீர் வரவில்லை. முஸ்லீம்களின் குடியிருப்பு பகுதியை தாண்டி தண்ணீர் எடுக்க சென்றனர். ரொம்ப நேரம் ஆகியும் யாரையும் காணவில்லையே என்று சீக்கிய ஆண்கள் தேடி பார்த்தபோது வயல்வெளிகளில் அவர்களை நாசப்படுத்தி இரத்த காயங்களுடன் கிடந்தனர். தங்கள் தாயார் குழந்தைகள் சகோதரிகளை கண்டு அலற ஆரம்பித்தவர்கள் அழுது அரற்றியபடி அந்த கொடுமையை சகிக்க முடியாமல் உடைகளை கிழித்துக்கொண்டு கதறி அழுதபடி மனநலன் பாதிக்கப்பட்டு ஓடினார்கள். இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கமுடியாமல் 1 1/2 கோடி பேர் எல்லையை கடந்து சென்றனர். 75000 பெண்களுக்கு மேல் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகினர். கடத்தப்பட்ட தங்கள் பெண்கள் குழந்தைகள் பற்றி புகார் தந்தவர்கள் ஏராளம். புகார்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க 1949ல் இந்திய அரசு "கடத்தப்பட்டவர்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 1949" இயற்றியது. இதில் இரு நாட்டவர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாட்டிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. பலர் மீட்கப்பட்டு குடும்பத்துடன் சேர்ந்தனர். 1957வரை தேடுதல் பணி தொடர்ந்தது. 1957ல் இந்த சட்டம் காலாவதியானவுடன் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. தொலைந்து போனவர்கள் தொலைந்து போனவர்களாக ஆனார்கள். அவர்களை தொலைத்த குடும்பத்தினரின் மனதில் அவர்கள் நீங்காத நிரந்தர வடுக்களாக ஆனார்கள்.பின்னாளில் பிரிவினை கொடுமைகள் தினம் என்று ஆகஸ்ட் 14ஐ இந்தியா அறிவித்தது.
ஆகஸ்ட் 15 காலையில் இந்தியா கேட் அருகில் நேரு மூவர்ண கொடியை ஏற்றி வைத்த நேரத்தில் பூனாவில் ஆரஞ்சு நிற காவி கொடியை ஏற்றி வைத்து நாதுராம் கோட்சே "இந்தியாவை துண்டாக்கியவர்களை தண்டிக்க வேண்டும்" என்று உரையாற்றினார். கூட்டம் முடிந்ததும் கோட்சேவின் நண்பர் ஒருவரிடம் "காந்தி என் பிணத்தின் மீது தான் இந்தியாவை பிரிக்க முடியும் என்றார். ஆனால் அவர் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறார்" என்று நகைத்தார். சுதந்திர கொடியை ஏற்றி முடித்தவுடன் மெளண்ட்பேட்டன் பிரபு, நேரு மற்றும் லியாகத் அலிகான் இருவரையும் தனியே அழைத்து ராட்ஃகிளிப் கொடுத்த பிரிவினையை தனித்தனியாக கொடுத்தார்.
அது வரை யாருக்கும் எந்த பகுதிகள் யாருக்கு வரும் என்று தெரியாது. பஞ்சாப் பிரிக்கப்பட்டது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு பகுதி பாகிஸ்தானுக்கும் இந்துக்களும் சீக்கியர்களும் நிறைந்த கிழக்கு பகுதி இந்தியாவுக்கும் வந்தது. ஆனாலும் மேற்கிலும் சீக்கியர்கள் இருந்தார்கள் கிழக்கிலும் முஸ்லீம்கள் இருந்தனர். சீக்கியர்கள் சமூகம் முற்றிலும் சீரழிக்கப்பட்டது. மேற்கில் இருந்த இந்துக்களும் சீக்கியர்களும் கிழக்கே வருவதற்குள் படாதபாடு வந்தனர். அதே போல் மேற்கு வங்காளம் இந்தியாவுக்கும் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுக்கும் போனது. கிழக்கு வங்காளம் கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டு கி.பி.1971ல் பங்களாதேஷ் என்ற தனிநாடாக பாகிஸ்தானின் உள்நாட்டு கலவரத்தின் விளைவாக மாறியது. காஷ்மீர் இந்தியாவுக்கு வந்தது. ஒரு தேசத்தில் கால்வாய் தொடங்கும் அதை பாதுகாக்கும் அணைகள் அடுத்த தேசத்தில் முடியும். ஒட்டு மொத்த தேசத்தின் ஆன்மாவில் பிளவு விழுந்தது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என மூன்று மாதங்களில் நடைபெற்ற வன்முறைகள் பிரிந்த இரு நாட்டின் சகோதரத்துவத்தை காலி பண்ணி விட்டது. இந்து/சீக்கியராக இருந்தால் முஸ்ஸீமால் தாக்குப்படும் அபாயமும் முஸ்ஸீமாக இருந்தால் இந்து/சீக்கியர்களால் தாக்கப்படும் அபாயமும் தோன்றியது. அது வரை பக்கத்து வீட்டில் தாயாய் பிள்ளையாய் பழகி வந்த சமூகங்களுக்குள் மிகப்பெரிய விரிசல் விழுந்தது. இதில் அதிகம் பலியானவர்கள் பெண்களும் குழந்தைகளுமே. பெண்களை தேடிப்பிடித்து பாலியல் வன்புணர்ந்தார்கள். பெண் உடலின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை அவள் சார்ந்த மதத்தின் மீதும் சமுதாயத்தின் மீதும் ஏற்பட்ட வன்முறையாக கருதப்பட்டது. குழந்தைகளை தரையோடு அடித்து கொன்றனர். கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் அவர்களின் வயிற்றை கிழித்து வெளியே வீசி சிசுக்களை கொன்றனர். பெண்கள் கடத்தப்பட்டனர். ஆடைகளை களைந்து தெருக்களில் ஒடவிட்டும் கட்டாய திருமணம் செய்து கொண்டும் மதம் மாறும்படி நிர்பந்திக்கப்பட்டனர். இது நடப்பது தெரிந்து கூட்டமாக முஸ்லீம்கள் வருவது தெரிந்தால் வன்முறைக்கு பயந்து கிணற்றில் விழந்து மரணமடைந்தனர். ஒருமுறை பெண்கள் விழந்து கிணறே இடமில்லாமல் மூடி விட்ட நிலையும் நடந்தது. குழந்தைகளை மதம் மாற்றம் மற்றும் பெண் குழந்தைகளை சீரழிப்பதை தவிர்க்க பெற்ற தகப்பனே அவர்களை வாளால் கொன்ற கதைகளும் நடந்தது. ஒரு பக்கம் இந்து பெண்களின் வாயில் மாட்டுக்கறியையும் திணித்து சாப்பிட வைத்தனர். நெற்றியில் பொட்டை அழித்து பர்தா அணிய வைத்து அல்லா தான் உன் கடவுள் இனி நீ அவரை தான் வழிபட வேண்டும் என்று மதம் மாற்றினார்கள். மறுபக்கம் இஸ்லாமிய பெண்களின் பர்தாக்கள் தீயிலிட்டு கொளுத்தப்பட்டது. நெற்றியில் குங்குமமும் துளசி மாலையும் கை கால்கள் தொடைகளில் திரிசூலம் வேல் ஒம் ஆகிய இலட்சினைகள் பச்சை குத்தப்பட்டது. மசூதிகளில் பன்றியின் தலையை வெட்டி எறிந்தனர். மதம் மாறுவதை விட தங்கள் குழந்தைகளை மைதானத்தில் குழி தோண்டி நெருப்பில் தள்ளி கொன்றனர். மொத்தத்தில் ஒரு தேசத்தின் ஆன்மாவில் அழுத்தமான கோடு ரத்தத்தில் எழுதப்பட்டது. லாகூர் கராச்சியில் பெண்கள்/தாயார் தப்பித்து டெல்லி வந்தனர். சொத்தை காப்பாற்ற அங்கேயே இருந்த சகோதரர் முஸ்லீமாக மதம் மாறி அங்கேயே திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். சகோதரி 25 வருடங்கள் கழித்து சகோதரனின் மகள் திருமணத்திற்கு சென்ற நிகழ்வில் சகோதரியின் குடும்பத்தினரை மூன்றாம் நபராக அங்கே உள்ளவர்கள் ஏன் சகோதரரின் மனைவியே பார்த்த நிகழ்வும் விவரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 1.5 கோடி பேருக்கு மேல் இந்திய பிரிவினையில் உயிரையோ உடைமையையோ இழந்து இடம்பெயர்ந்தனர். "பாகிஸ்தானுக்கு போகும் ரயில்" என்னும் நூலில் குஷ்வந்த் சிங் "இரு பகுதியினரும் குத்திக்கொண்டனர். ஒருவரையொருவர் கொன்று குவித்தனர். இரு தரப்பினரும் எதிர் தரப்பு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். ஒருவரையொருவர் சித்திரவதை செய்து கொண்டனர். 1947 கோடைகாலத்தில் சுமார் ஒரு கோடி பேர் அங்கும் இங்குமாக இடம்பெயர்ந்து கொண்டு இருந்தனர். இவர்களில் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்" கோரத்தை பற்றி கூறுகிறார். சுதந்திரத்திற்கு பிறகு பிரிவினையின் கோரத்தினால் மருத்துவமனைகளில் கருகலைப்புக்காக பெரிய வரிசைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் காத்திருந்த அவலமும் நடந்தது. வரலாற்றில் மிக மோசமான பெரிய அளவில் மக்கள் இடம்பெயர்ந்த நிகழ்வாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லைப்பகுதியில் ஒருபுறம் பாகிஸ்தான் செல்லுவதற்கான அகதிகள் முகாமிலும் மறுபுறம் பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த சீக்கியர்கள்/இந்துக்கள் முகாம் என இருவகையான முகாம்கள் இயங்கின. சாதி இந்துக்களை சேர்த்த அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை முகாம்களில் சேர்க்க மறுத்தனர். முகாமில் இருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களும் துணிகளும் கொடுக்கப்பட்டது. அம்பேத்கார் கி.பி.1947 டிசம்பரில் இதை பற்றி நேருவுக்கு கடிதம் எழுதியும் ஒன்றும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நிலபுலன்கள் வைத்திருந்தவர்கள் அதற்கான சான்றுகளை காட்டினால் இந்தியாவில் முஸ்லீம்கள் விட்டு சென்ற நிலபுலன்கள் அதற்கு ஈடாக தரப்பட்டது. இதே நடைமுறை பாகிஸ்தானிலும் இந்துக்கள்/சீக்கியர்கள் விட்டு சென்ற நிலங்கள் இந்தியாவிலிருந்து வந்த முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களை வைத்திருக்கவில்லை. பாகிஸ்தானிலும் அவர்கள் நிலத்தில் பாடுபட்டார்களே தவிர நில உரிமை அவர்களிடம் இல்லாததால் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் விவசாயிகள் என்று நிரூபிக்க எந்த சான்றும் இல்லை. அதனால் அவர்களுக்கு ஈடாக நிலமும் கிடைக்கவில்லை. ரேஷன் பொருட்களும் கிட்டவில்லை. இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் காந்தியின் தீவிர பக்தராக விளங்கிய கான் அப்துல் கஃபார் கான் எல்லையை கடக்க உதவும் மக்களுக்கு பாதுகாப்பாகவும் அவர்களை பத்திரமாக எல்லைப்பகுதியில் சேர்ப்பித்த நிகழ்வுகளும் நடந்தது. அந்த மக்களுக்கு உணவும் வழங்கினார். அதனால் அவர் "எல்லை காந்தி" என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
இவரை இந்தியாவின் ஒற்றர் என சந்தேகப்பட்ட பாகிஸ்தான் அவரை பல முறை சிறையில் அடைத்தது. இந்தியா இவரின் சேவைகளை பாராட்டி இவருக்கு "பாரத் ரத்னா" பட்டம் வழங்கி கெளரவித்தது. பாரத் ரத்னா பட்டம் பெற்ற முதல் வெளிநாட்டவர் இவர் ஒருவரே.
நாடு முழுவதும் கலவரமாக தினமும் மரண ஓலங்கள் இவற்றை சகித்து கொள்ள முடியாமல் சுதந்திரம் அடைந்த மூன்று வாரங்களுக்குள் நேருவும் படேலும் மெளண்ட்பேட்டன் பிரபுவை சந்தித்து யோசித்து பார்த்து விட்டோம். நீங்களே ஏற்று நடத்துங்கள். நாங்கள் விலகி கொள்கிறோம். இந்த சுதந்திரம் எங்களுக்கு வேண்டாம் என்று கூறினர். அவர்களை சமாதானப்படுத்திய மெளண்ட்பேட்டன் தனது தளபதி பொறுப்பை திரும்ப எடுத்தார். நாடு முழுவதும் உளவு அமைப்புகளை தூண்டி விட்டு குற்றம் நடப்பதற்கு முன்பே தடுக்கும் அதிகாரத்தை வழங்கினார். அவர்களுக்கு தைரியமாக முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கினார். ரயில் நிலையம் பாதுகாக்கப்பட்டது. ஒவ்வொரு பொறுப்புக்கும் அதிகாரிகளை உடனடியாக நியமித்து பணிகளை முடக்கி விட்டார். மருத்துவ சேவைகளை அவரின் மனைவியான எட்வினா கண்காணித்துக்கொண்டார். அவரது 17வயது மகளான பமீலாவுக்கும் பொறுப்புகள் வழங்கி பணியை ஒதுங்கியிருந்தார். மீண்டும் பிரிட்டன் தன் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு தளபதியாக மெளண்ட்பேட்டன் மாறி இந்தியாவில் அமைதியை நிலைநிறுத்த முயன்றார். இந்த நேரத்தில் மெளண்ட்பேட்டன் பிரபு தான் ஒரு சிறந்த தளபதி என்பதை நிருபித்தார். பிரிவினையின் போது சிந்து பகுதியில் இருந்த 14 லட்சம் இந்துக்களில் பெரும்பாலானோர் பலவந்தமாகவோ மிரட்டப்பட்டோ இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முஸ்லீம்கள் சிந்து பகுதியிலுள்ள இந்துக்களின் இடங்களை ஆக்ரமித்து கொண்டனர். இந்த இடம்பெயர்வு கி.பி.1951 வரை நடந்தது. கலவரங்கள் எல்லைப்புற பகுதிகளில் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருந்த சமயத்தில் பாகிஸ்தான் காஷ்மீருக்காக கேவலமான வழியில் இறங்க காஷ்மீர் இந்தியாவுடன் இணையவே காஷ்மீருக்காக இந்தியாவுடன் டிசம்பரில் போர் அறிவிப்பு செய்தார் ஜின்னா. இந்த நிலையில் அவரும் கிட்டத்தட்ட மரண படுக்கையில் தான் இருந்தார் என்று சொல்ல வேண்டும். பிரிவினையின் போது இந்தியாவின் கையிருப்பாக இருந்த 400 கோடியில் பாகிஸ்தானுக்கு 20 கோடியை அப்போது பிரித்து கொடுத்து விட்டனர். மீதி 55 கோடியை கொடுப்பதற்குள் பாகிஸ்தான் போர் அறிவிப்பு செய்ததால் இந்த பணத்தை அதற்கு தான் உபயோகப்படுத்தும் என்று நேரு அதை கொடுக்க மறுத்தார். காந்தி அந்த பாக்கி பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்றும் வன்முறையை அனைத்து இயக்கங்களும் நிறுத்தும் என்று அதன் முக்கிய தலைவர்கள் உறுதி கொடுக்கும் வரை தான் உண்ணாவிரதம் இருக்க போவதாக கி.பி.1848 ஜனவரி 13ம் தேதி டெல்லியில் உள்ள பிர்லா மந்திரில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். காந்தியின் உண்ணாவிரதத்தால் நேரு 15ம் தேதி பாகிஸ்தானுக்கு மீதி பணத்தை தருவதாக அறிவித்தார். இந்து மகா சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் தயங்கினாலும் காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களும் கையெழுத்திட்டனர். அப்போது அகதிகளாக ஆனவர்கள் காந்தியை பார்க்க வந்தனர். அவர்களில் ஒருவர் காந்தியை பார்த்து உங்களால் தான் வீடு, வாசல், குடும்பம் என எல்லாவற்றையும் இழந்து கொண்டு நடுத்தெருவில் நிற்கிறோம். பேசாமல் நீங்கள் இமயமலைக்கு போய்விடுங்கள். நாங்களும் நிம்மதியாக இருப்போம் என்று கூற காந்திஜியும் மெல்லிய குரலில் "யார் பேச்சை கேட்பது என்று எனக்கு தெரியவில்லை. சிலர் என்னை மெச்சுகிறார்கள்.சிலர் என்னை தூற்றுகிறார்கள். என்னை என்ன செய்ய சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை" என்றார். ஜனவரி 30 பிற்பகல் படேல் காந்தியை சந்தித்தார். அவருடன் அதிகம் பேச முடியவில்லை. பிரார்த்தனை கூட்டத்திற்கு நேரமாகி விட்டது என்று கூறி காந்தி பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றார். அங்கு நாதுராம் கோட்சே அவரை சுட்டு கொன்றார். உயிர் பிரியும் தருவாயில் "ஹே ராம்" என்று முணுமுணுத்ததாக சொல்லுவார்கள். காந்தியை சுட்ட கோட்சே அங்கேயே துப்பாக்கியை போட்டு விட்டு சரணடைந்ததாகவும் கூறுவர். ஆனால் தோட்டத்தில் வேலை செய்த நபர் ஒருவர் அவரை மடக்கி பிடித்ததாகவும் அவரை தாக்க முயற்சித்த போது காந்திஜி அவர்களை தடுத்ததாகவும் கூறுவர். சரணடைந்த கோட்சே தனது வாக்குமூலமாக "நான் ஏன் காந்தியை கொன்றேன்" என்பதை விவரித்து தனது செயலுக்கு தான் மட்டுமே காரணம் என்று கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டார். கல்கத்தா நவகாளி சம்பவங்களும் பிரிவினையின் போது இந்துக்களை மட்டுமே குற்றம் சாட்டிய அவர் முஸ்லீம்களை பற்றி கடுகளவும் பேசவில்லை. எதற்கெடுத்தாலும் இந்துக்களை மட்டுமே குற்றம் சாட்டியதாலும் பிரச்சினையை ஆரம்பித்தவர் யார் என்று அறிந்தாலும் குற்றம் சாட்டியது இந்துக்களை மட்டுமே. காஷ்மீர் விவகாரத்தில் போர் தொடுத்த பாகிஸ்தானுக்காக 55 கோடி ரூபாய் பாக்கியை கொடுக்க காந்தி உண்ணாவிரதம் இருந்தது கோட்சேயின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியதாக குறிப்பிட்டார். இப்படிக்கும் ஆரம்பத்தில் நாதுராம் கோட்சே காந்தியை பின்பற்றும் சீடராக தான் இருந்தார். பின்னர் சாவர்க்காரின் ஆவேச பேச்சுகளாலும் அவரின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு அவருக்கு சீடராகவே மாறினார். இந்த காரணத்தாலையே காந்தியின் கொலையில் சாவர்க்காருக்கும் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கினார். கடைசியில் காந்தியின் கொலையில் தனக்கு மட்டுமே தொடர்பு என்று கோட்சே கூறியதால் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கார் முதலியானோர் விடுவிக்கப்பட்டனர். கோட்சே தூக்கிலிடப்பட்டார். இந்தியாவின் ஆன்மாவை கொன்ற கொலைச் செயலுக்கு நியாயம் கற்பித்தாலும் பிரிவினையை ஏற்க மறுத்த காந்தியை கொன்றது சுதந்திர இந்தியாவின் முதல் படுகொலையாக மாறிற்று. இருபக்க தவறையும் கண்டிக்காமல் ஒரு தரப்பாக இருந்தது தான் காரணம் என்று கோட்சே கூறியதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் கி.பி.1926ல் சுவாமி சிரத்தானந்தாவை அப்துல் ரஷீத் என்பவர் கொலை செய்த நிகழ்வில் "நான் அப்துல் ரஷீத்தை குற்றம் சொல்ல மாட்டேன். ஒருவருக்கொருவர் வெறுப்பை உருவாக்கி வளர்த்தவர்களே குற்றவாளிகள்" என்று இரங்கல் தீர்மானத்தில் காந்தி தெரிவித்தார். ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் பெற்றால் முக்கிய தலைவர்களின் மரணங்கள் சம்பவிக்கும் என்ற ஜோதிட கூற்று அடுத்த 5 மாதத்திலையே காந்தியின் படுகொலையால் உண்மையாயிற்று. அகிம்சையின் மூலமும் சாத்வீக முறையிலும் போராட்டம் நடத்தலாம் என்று உலகுக்கு உணர்த்திய மகாத்மா காந்தி வன்முறையினால் தன்னுயிரை இழந்தது வேதனையிலும் வேதனை. இந்தியாவின் ஆன்மா அணைந்தது.
உதவிய நூல்கள் :
இந்திய சுதந்திர போராட்டம் - இலந்தை சு.இராமசுவாமி
1947 - அ.தமிழ்செல்வன்
இந்திய பிரிவினை (உதிரத்தால் ஒரு கோடு) - மருதன்
மெளனத்தின் அலறல் - ஊர்வசி பட்டாலியா
இந்திய பிரிவினைக்கு யார் காரணம் முஸ்லீம் மதவாதமா? இந்து மதவாதமா? - பாரத் கபீர் தாஸன்
நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன் - இரா.சுப்புராயலு
படங்கள் :
கூகுள் படங்கள்





Comments
Post a Comment