103) இந்திய பிரிவினைக்கு யார் காரணம்?
இந்திய பிரிவினைக்கு யார் காரணம்?
இந்திய நாடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரிந்தது. இதற்கு யார் காரணம்? இந்து மதவாதமா? இல்லை முஸ்லீம் மதவாதமா? இல்லை தலைவர்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை இருந்தது தான் காரணமா? சிப்பாய் கலகத்தின் போது இரு சமுதாய மக்களும் இணைந்து போராடினார்கள் அப்புறம் ஏன் அவர்களுக்குள் இத்தனை ஆவேசம் கோபம்? சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திரத்திற்கு பின்பும் சுமார் 1 1/2 கோடி பேருக்கு மேல் இடம்பெயர்ந்த நிகழ்வுகளும் அதையொட்டிய வன்முறைகளும் கலவரங்களும் நடக்க காரணம் என்ன? ஒரு தாய் மக்களாக பழகி கொண்டிருந்த இரு சமுதாய மக்களை பிரித்தது யார்? அவர்களுக்குள் எழுந்த போட்டி பொறாமையை தூண்டி விட்டது யார்? சுதந்திரம் கிடைத்தது என்று சுதந்திர காற்றை முழுமையாக ஆனந்தமாக சுவாசிக்க முடியாமல் செய்த மதக்கலவரத்தை தூண்டியது யார்? அவர்களுக்குள் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த வெறுப்பு உணர்வா? அல்லது தலைவர்களின் சுயநலமா?
கி.பி.12ம் நூற்றாண்டிலிருந்து கி.பி.19ம் நூற்றாண்டு வரை முஸ்லீம்களின் ஆட்சியில் கீழ் இந்தியாவின் பெரும்பகுதி இருந்தாலும் அங்காங்கே மதமாற்றங்கள் நடந்தாலும் ஒரு பெரிய கலவரம் கூட ஏற்பட்டதில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் முஸ்ஸீம்கள் பலம் பெற்றிருந்த சமயத்தில் நாடெங்கும் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு மசூதிகளாக மாற்றப்பட்டன. ஆனாலும் இரு சமுதாய மக்களும் ஒருவருக்கொருவர் இணைந்தே இருந்தனர். ஆட்சியாளர்களின் பக்கம் இருந்த தவறால் அப்பாவிகள் ஒருவருக்கொருவர் தப்பிதம் கொண்டிருக்கவில்லை. கி.பி.1398ல் தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்த போது அவரை எதிர்த்த முஸ்லீம் மன்னர் முகமது ஷாவின் படையில் ராஜபுத்ரர்கள் இணைந்து போரிட்டனர். தைமூர் மற்றும் முகமது ஷா இருவருமே இஸ்லாமியர் என்றாலும் தைமூர் அன்னியன் முகமது ஷா இந்தியன் என்ற புரிதல் மக்களுக்கு இருந்தது. ஏன் பாபரை எதிர்த்து இப்ராஹிம் லோடியின் தம்பி இராஜபுத்ர ராணா சங்காவுக்கு கன்வா யுத்தத்தில் படையனுப்பினார். ஏனெனில் ஒரே சமுதாயமாக இருந்தாலும் பாபர் அன்னியர் என்ற புரிதல் இப்ராஹிம் லோடியின் தம்பிக்கு இருந்தது. பாபர் முதல் அக்பர் வரையிலான மொகலாயர்களை அந்நியர்கள் என்று கூறினாலும் ஜஹாங்கிர்,ஷாஜஹான் மற்றும் ஒளரங்கசீப் மற்றும் பின்னாலுள்ள மொகலாயர்களை அந்நியர்களாக பார்க்கவில்லை. ஏன் இந்த சிந்தனை? பாபர் ஹீமாயூன் ஆகியோர் ஆப்கானிஸ்தான் துருக்கி வம்சத்தை சேர்ந்தவர்கள். அக்பரும் அதே தான். அக்பர் அந்நியர் என்று மக்கள் அவரை நினைக்கக்கூடாது என்று இந்து பெண்களை திருமணம் செய்து கொண்டார். இந்து விழாக்களையும் கொண்டாடினார். தன்னை ஒரு முஸ்லீம் என்று கூறாமல் அனைவருக்கும் பொதுவானவன் என்று கூறிக்கொண்டார். அக்பருக்கு பிறந்த மகனான ஜஹாங்கீர் இந்து தாய்க்கு பிறந்தவர். ஜஹாங்கீருக்கு பின்னால் ஆட்சியேறிய ஷாஜஹான் இந்து தாய்க்கு பிறந்தவர் தான். அதனால் இந்து - முஸ்லீம் கலப்பு அவர்களை அந்நியர் என்ற சிந்தனையிலிருந்து மக்களை மனம் மாற்றியது. சிப்பாய் புரட்சியின் போது இரு சமுதாய மக்களும் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டே போரிட்டனர். சிப்பாய் புரட்சியை யார் தலைமை ஏற்று நடத்துவது என்ற விஷயத்தில் நானா சாகிப் திரும்பவும் முஸ்லீம் மன்னரான பகதூர் ஷாவை தலைவராக்குவதா? என்று கான்பூரில் இருந்து டெல்லி சென்றவர் திரும்பி வந்து தனியாக போரிட்டார். புரட்சியை எல்லாரும் ஒன்று சேர்ந்து நடத்தினாலும் பக்த் கான் என்ற தளபதி தன்னிச்சையாக பகதூர் ஷாவே இந்தியாவின் மன்னர் என்று அறிவித்தது போராட்டத்தை விரிசல் ஏற்படுத்தியது. அதனால் ஒவ்வொருவரும் ஒன்று சேராமல் அவரவர் இடத்திலிருந்து போராடி ஆங்கிலேயரிடம் தோற்று மாண்டு போனார்கள்.
இந்த புரட்சிக்கு பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தம் ஆதிக்கத்தை தொடர வேண்டுமானால் இரு பெரும் சமுதாய மக்களையும் பிரித்தாள்வதே சரி என்று பிரித்தாளும் கொள்கையை ஆரம்பித்து தங்களை வளப்படுத்தி கொண்டனர். அதற்கு 2 வழிகளை கையாண்டனர்.
- இந்துக்களின் மனதில் முஸ்லீம்களை பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்வுகளை திரித்தல்
- பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்கு இடையே ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கி இருவருக்கும் இடையே போட்டியையும், பொறாமையையும் குரோதத்தையும் ஏற்படுத்துதல்
இந்த இரு வழிகளில் அவர்கள் இரு இனங்களின் மத்தியில் விஷங்களை விதைத்து விட்டனர்.
எல்லா அலுவலகங்களிலும் முஸ்ஸீம்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர்களை அரசாங்க வேலையிலிருந்து புறக்கணித்து வைத்திருந்தனர். இதனால் அவர்கள் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். தங்களை இந்துக்கள் இவ்வாறு தரம் தாழ்த்தியதாக உள்ளுக்குள் குமுறி கொண்டு இருந்தனர். அதற்கேற்ப முஸ்லீம்களை சிப்பாய் புரட்சியில் பங்கு கொண்டதால் அவர்களை கடுமையாக கண்டிக்க இந்துக்கள் தங்களை காட்டி கொடுத்தது தான் காரணம் என்று அவர்கள் இந்துக்கள் மீது வெறுப்பு காட்ட ஆரம்பித்தனர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வேறு முஸ்லீம்களை விட நீங்கள் சக்தி வாய்ந்தவர்கள் மேலானவர்கள் என்று அவர்களையும் தூண்டி விட்டுக்கொண்டு இருந்தனர். இதன் விளைவாக கி.பி.1867ல் காசியில் இந்து தலைவர்கள் உருது மொழிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கி.பி.1875ல் "இந்தியா இந்துக்களுக்கே" என்ற கோஷத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆர்ய சமாஜத்தை ஆரம்பித்தார். இதன் முக்கிய நோக்கம் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை எதிர்ப்பதே ஆகும். இந்த இயக்கம் இந்துவாக இருந்து முஸ்ஸீமாக மாறியவர்களை தாய் மதத்தில் திருப்பும் வழியாக சுத்தி இயக்கம் தொடக்கி வைத்து மீண்டும் அவர்களை இந்துக்களாக மதம் மாற்றிய நிகழ்வுகளும் நடந்தது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே முஸ்லீம் மத சீர்திருத்த கருத்துகளுக்காக என்று கூறிக்கொண்டாலும் முஸ்லீம்களின் நலன்களுக்காக கி.பி.1873ல் சர் சையது அகமது கான் என்பவர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகாரில் 'முகமதிய ஆங்கிலோ ஒரியன்டல் கல்லூரி" யை தொடங்கினார். இந்த கல்லூரியின் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் அரசியல் பேசப்பட்டு கி.பி.1906ல் டிசம்பர் 30ம் தேதி கூடிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அதற்கு அடுத்த நாள் "அகில இந்திய முஸ்லீம் லீக்" பிறந்தது.
கி.பி.1882ல் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய "ஆனந்த மடம்" நாவலில் தான் வந்தே மாதரம் என்ற பாடல் இடம்பெற்றது. இந்த நாவலில் காளி துஷ்டர்களை அழிக்க புறப்பட்டு விட்டாள் என்று கூறியது தங்களை தான் முஸ்லீம்கள் தப்பிதமாக நினைத்து கொண்டனர். கி.பி.1880களில் முஸ்லீம்கள் அன்னியர்கள் என்று கூறிக்கொண்டிருந்த பாலகங்காதர திலகர் முஸ்லீம்கள் குர்பானி கொடுப்பதை எதிர்த்து கி.பி.1890ல் "பசுவதை பாதுகாப்பு இயக்கம்" நடத்தினார். இதுவும் முஸ்லீம்களை எரிச்சல் ஊட்டியது. ஆனால் கி.பி.1857ல் டெல்லியில் சிப்பாய் புரட்சி நடக்கும் சமயத்தில் ஈகை பெருநாள் சமயத்தில் பசுக்களை வெட்ட வேண்டாம் என்று டெல்லி சுல்தான் பகதூர் ஷா அறிவித்தார். ஏனெனில் புரட்சியில் இணைந்திருந்த இந்துக்களின் மனதுக்கு விரும்பாத செயல்களை செய்ய வேண்டாம் என்ற நல்லெண்ணத்தினால் மட்டுமே. கி.பி.1885ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதன் தலைவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்களின் எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் என்று கூறப்பட்டது. இவ்வாறாக ஒருவரையொருவர் சந்தேகம் கொண்டு குரோதத்தை வளர்க்கும் நிகழ்வுகள் தூண்டி விடப்பட்டது. ராஜ் நாராயண் பாசு (அரபிந்தோ கோஷ் அவர்களின் தாய்வழி பாட்டனார்) மற்றும் நபா கோபால் மித்ரா 1880களிலையே மகா இந்து சமிதி மற்றும் பாரத் தர்ம மகாமண்டல் அமைப்புகளை உருவாக்கி இந்துக்கள் ஆரிய தேசத்தை இந்தியாவில் தான் உருவாக்க முடியும். இந்த நபா கோபால் மித்ரா தான் மதங்கள் அடிப்படையில் இரு தேசங்கள் கோட்பாட்டை முதலில் முன்வைத்தார். இந்த இரு இயக்கங்களும் தான் பின்னர் இந்து மகாசபையாக உருவாகியது. ஆர்ய சமாஜத்தின் ஆரம்ப கால தலைவர்களுள் ஒருவரான பாய் பரமானந்த் கி.பி.1908ல் முஸ்லீம்கள் இந்திய மண்ணை சேர்ந்தவர்கள் அல்ல என்று கூறி "சிந்துவுக்கு அப்பாற்பட்ட நிலப்பரப்பையும் ஆப்கானிஸ்தானுடன் வடமேற்கு எல்லை மாகாணத்துடன் இணைத்தது முஸல்மான்களின் ஆட்சியை உருவாக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள இந்துக்கள் இங்கேயும் இங்கேயுள்ள முஸல்மான்கள் அங்கேயும் போய்விட வேண்டும்" என்று எழுதினார். கி.பி.1908ல் இந்து மகா சபை பிறந்தது.
உச்சகட்டமாக வங்காள பிரிவினையை கர்சன் பிரபு கொண்டு வந்தார். நிர்வாக வசதிக்கு என்று கூறிக்கொண்டு கிழக்கு வங்காளம் (முஸ்லீம்கள் பெரும்பான்மை பகுதி) மற்றும் மேற்கு வங்காளம் (இந்துக்கள் பெரும்பான்மை பகுதி) என்று பிரிக்கவே இரு இனங்களும் ஒன்றுபட்டு குரல் கொடுத்தனர். வகுப்புவாரியாக சலுகைகள் மற்றும் பிரதிநிதித்துவம் கோருகையில் முஸ்லீம் லீக்கை சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர்களாகிய நீங்கள் வருவதற்கு முன்பு இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகளை நாங்கள் ஆண்டு வந்தோம். அதன் அடிப்படையில் இந்துக்களை விட நாங்கள் உயர்ந்தவர்கள். அதனால் எங்களுக்கு அதன் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று வைஸ்ராயிடம் கோரிக்கை வைத்தனர். அவரும் ஆவன செய்வதாக கூறி அனுப்பி விட்டார். கி.பி.1905ல் ஜின்னா காங்கிரஸில் இருந்து பம்பாய் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவர் பம்பாயில் புகழ்பெற்ற பாரீஸ்டராக இருந்தார். அவர் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். அது தான் தேசத்திற்கு நல்லது. தனி பிரதிநிதித்துவம் பிரிவினையை பூசல்களை ஏற்படுத்தும் என்றார். ஆனால் அதே ஜின்னா 1930களில் பிரிவினை கோஷத்தை உரக்க எழுப்பினார். முஸ்லீம்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை முதன்முதலில் வைத்தவர் கவிஞர் இக்பால். இவர் கூடிய கூட்டத்தில் தான் ரஹ்மத் அலி என்ற கேம்பிரிட்ஜ் மாணவர் தான் முதலில் "பாகிஸ்தான்" என்ற பெயரை சொல்லியவர். "சாரான் ஜஹான்சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா" என்ற புகழ்பெற்ற வரிகளை பாடிய கவிஞர் இக்பாலே பின்னர் பிரிவினையை குரல்கொடுக்க ஆரம்பித்தார். இவரின் கோஷமான "பாகிஸ்தான்" பின்னாளில் ஜின்னாவின் கோஷமாக மாறி நாட்டை பிளவுபடுத்தவும் கலவர பூமியாக்கவும் ஆரம்பித்தது.
இந்த நேரத்தில் திலகரின் அணியிலிருந்து விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற இளைஞன் லண்டனிலிருந்து படிக்க சென்றிருந்த போது தனது தீவிரவாத நடவடிக்கையினால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பும் போது கப்பலில் இருந்து கழிவறை கண்ணாடி ஜன்னலை உடைத்து கொண்டு கடலில் குதித்து நம்பினாலும் பிரெஞ்ச் கடற்படையிடம் சிக்கியவரை மீண்டும் பிரிட்டிஷ் வசம் ஒப்படைத்தனர். அவரை விசாரணை முடிவில் அந்தமான் சிறைக்கு தீவாந்திர தண்டனையாக அனுப்பினர். தீவாந்திர தண்டணை பெற்ற சமயத்தில் அவர் கி.பி.1857ல் நடந்த இந்திய விடுதலை போராட்டத்தை பற்றி எழுதிய புத்தகத்தில் இந்துக்கள் மட்டுமல்ல முஸ்லீம்களும் இணைந்து ஒற்றுமையாக போரிட்டனர். அதில் போரிட்ட ஒவ்வொருவரின் பங்கையும் சிறப்பித்து கூறிய அவரே பின்னாளில் இந்தியாவில் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வாழ்வது முடியாது என்று கூறியுள்ளார். அந்த நேரத்தில் ஜின்னா இந்தியா இணைந்தே இருக்கவேண்டும் என்று கூறிய காலம். இதற்கிடையில் ஜாலியன்வாலா பாக் படுகொலை கி.பி.1919 ஏப்ரல் 13ல் நடந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து சுவாமி சிரத்தானந்தா டெல்லியில் ஜூம்மா மசூதியில் முஸ்ஸீம்களுடன் இணைந்து முழங்கினார். பின்னாளில் கி.பி.1926ல் அதே சுவாமி சிரத்தானந்தா அப்துல் ரஷீத் என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார். காரணம் என்னவெனில் அவர் தாய் மதம் திரும்புவதற்காக முஸ்லீம்களை சுத்தி இயக்கத்தின் மூலம் ஒன்று திரட்டினார். ஒத்துழையாமை இயக்கத்தில் அனைவரும் இணைந்து போராடினார். காந்தி காங்கிரஸ் பொதுக்குழுவில் பேசி "கிலாபத்" இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார். எங்கோ இருக்கும் துருக்கி சுல்தானுக்கு ஆதரவாக மதத்தை மட்டும் காரணமாக வைத்து பேசும் இவர்கள் உண்மையில் நம் சகோதரர்கள் தானா? என்று அதையும் இந்துத்துவவாதிகள் கேட்க ஆரம்பித்தனர். ஒற்றுமையை பற்றி பேசினாலும் ஆங்கிலேயர்கள் அதற்கு வேட்டு வைக்கும் விதமாக வரிவசூலை அதிகப்படுத்தினர். கேரளாவில் மாப்ளே என்ற அழைக்கப்படும் கி.பி.8ம் நூற்றாண்டுகளில் அரேபியாவில் இருந்து வந்த முஸ்ஸீம்கள் இருந்தனர். திப்புசுல்தான் திருவாங்கூர் சமஸ்தானம் மீது போர் தொடுத்த போது அவர்களுக்கு இந்துக்களிடம் இருந்து நிலத்தை பிடுங்கி கொடுத்தார். ஆங்கிலேயர்கள் திப்புவை வீழ்த்திய பின்னர் அந்த நிலங்களை இந்துக்களிடமே கொடுத்தனர். இந்துக்களிடம் நிலத்தை கிரயமாக பெற்று விவசாயம் செய்து வந்தனர். வரிவசூல் அதிகமானவுடன் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி ஆங்கிலேயர்களை தாக்க ஆரம்பித்தனர். பின்னர் இந்துக்களையும் தாக்கியும் மிரட்டி மதமாற்ற நடவடிக்கைகளிலும் இறங்கினர். பல நூறு இந்துக்கள் கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் மதமாற்றம் செய்யப்பட்டும் நூற்றுகணக்கான இந்து பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டும் இருந்து நிலையில் ஆங்கிலேயர்கள் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை சுட்டு வீழ்த்தியும் பின்னர் 45000 மேற்பட்டோரை கைது செய்தும் கி.பி.1922ல் நடந்த "மாப்பிள்ளை கலகத்தை" அடக்கினர். இது இந்துக்களுக்கு முஸ்லீம்களின் மேல் வெறுப்பு உணர்வை தூண்ட காரணமாயிற்று. இதை தொடர்ந்து நடந்த செளரி செளரா வன்முறையை அடுத்து காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். அதுவரை காங்கிரஸில் 9 1/2 ஆண்டுகள் அந்தமான் சிறையில் அடைபட்டு மன்னிப்பு கடிதம் எழுதி கி.பி.1920ல் விடுதலையாகி வந்தார் சாவர்க்கர். ஆரம்பத்திலையே திலகரின் நெருக்கமாக இருந்து வந்த வினாயக் தாமோதர் சாவர்க்கர் பின்னர் மாப்ளே கலகம் மற்றும் செளரி செளரா கலவரத்திற்கு பின்னர் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய பின்னர் இந்து மகா சபையின் கொள்கைகளுக்கும் தன் கொள்கைக்கும் பெரிதும் வேறுபாடு இல்லை என்று உணர்ந்து இந்து மகா சபையில் தன்னை இணைத்துக்கொண்டார். கிலாபத் இயக்கம் மற்றும் மாப்ளே கலவரத்திற்கு பின்னரே இந்து மகாசபை தலைவர்கள் முஸ்லீம்களை அந்நியர்கள் என்று பேச ஆரம்பித்தனர். சுவாமி சிரத்தானந்தா படுகொலையும் முஸ்லீம்கள் மேல் வெறுப்புணர்வு அதிகரிக்க ஆரம்பித்தது. மொத்தத்தில் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றியடைய ஆரம்பித்தது.
இந்து மகா சபைக்கு தலைவராக இருந்த டாக்டர் பி.எஸ்.முன்ஷி கி.பி.1923ல் "இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்கு சொந்தமோ, ஜெர்மனி எப்படி ஜெர்மனியர்களுக்கு சொந்தமோ பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுகாரர்களுக்கு சொந்தமோ அது போல் இந்தியா இந்துகளுக்கே சொந்தம். இந்துக்களாகிய நாம் ஒன்றுபட்டால் தான் ஆங்கிலேயரையும் அவர்களின் அடிவருடியான முஸ்ஸீம்களையும் விரட்ட முடியும். முஸ்ஸீம்களையும் கிறிஸ்தவர்களையும் சுத்தி இயக்கம் மூலம் மீண்டும் இந்துக்களாக மாற்றி இந்துக்கள் தமது புதிய உலகை படைக்க முடியும்" என்று இந்துமகா சபை கூட்டத்தில் பேசினார். விடுதலை போராட்டத்தில் பஞ்சாப்பில் போலீஸாரிடம் தலையில் அடிவாங்கி உயிர் துறந்த தேசபக்தர் லாலா லஜபத்ராய் கி.பி.1924ல் முஸ்லீம்கள் இல்லாத இந்தியா மற்றும் முஸ்லீம்கள் உள்ள இந்தியா என்று இரு பகுதியாக இருக்க வேண்டும் என்றார். அவரின் மரணத்திற்கான பழிவாங்கி தூக்குமேடையை முத்தமிட்ட அவரது சீடரான பகத் சிங் கூட அவரின் இந்த மதவாத கருத்தை எதிர்த்தார். குரு கோல்வால்கர் "இந்து அல்லாதவர்கள் இந்து கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளவிட்டால் இந்து தேசத்திற்கு அடிமையாக மட்டும் இருக்கலாம்.எந்த உரிமையையும் எதிர்பார்க்கக்கூடாது. இந்திய குடிமகனுக்கான உரிமையை கூட எதிர்பார்க்கக்கூடாது" என்று கூறினார். இவ்வாறெல்லாம் தனி நாடு கோரிக்கையை முஸ்லீம் லீக் எழுப்புவதற்கு முன்பே இந்துத்துவவாதிகள் பிரிவினையை பற்றி பேசினர். 1925ல் விஜயதசமியன்று ஹெட்கேவார் காக்கி சட்டை அரை நிஜார் சீருடையுடன் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பை நாக்பூரில் தோற்றுவித்தார். பொது எதிரியாக பிரிவினை கோரும் முஸ்லீம் லீக்கை பார்த்தார்கள். பிரச்சினை என்றால் ஒடி ஒளியாமல் இருப்பதற்கு உடலுறுதியுடன் மனத்திண்மை உடையவர்களாக இருக்கவேண்டும் என்று முடிவு பண்ணி பயிற்சி வகுப்புகளின் விளையாட்டு அத்தியாவசியத்தை உணர்ந்து ஷாகா என்ற பெயரில் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள்.தனது இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு ஸ்வயம் சேவக் என்று பெயரிட்டார். பயிற்சி பெற்ற ஸ்வயம் சேவக்குகளான "பிரச்சாரக்"குகளை நாடு முழுவதும் அனுப்பி கிளைகளை ஆரம்பித்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். எங்கெங்கெல்லாம் இந்துக்கள் குறைவாக இருந்தார்களோ அங்கே இந்துக்கள் அவர்களாகவே ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் பயிற்சி பெற ஆரம்பித்தனர். எதிர்தரப்பினர் தாக்கினால் பதில் தாக்குதல் நடத்த தயாராகினர்.
கி.பி.1928ல் சைமன் கமிஷனை புறக்கணித்து அனைத்து கட்சி மாநாடு கூட்டப்பட்டு அரசியலமைப்பு சட்டம் உருவாவதற்கான வழிமுறைகளின் படி ஆகஸ்ட் 14ல் நேருவால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதை பற்றி விவாதிக்க நடந்த கல்கத்தா மாநாட்டில் தாமதமாக வந்த ஜின்னா தனது 14 அம்ச திட்டத்தை சமர்ப்பித்தார். அதன் விவரம் பின்வருமாறு.
- இந்துக்களோடு ஒப்பிடும்போது முஸ்லீம்கள் அவர்களிலும் மேம்பட்ட இனத்தவர் என்று இந்துக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்
- இந்து முஸ்லீம் அதிகமாக உள்ள மாகாணங்களின் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும்.
- முஸ்லீம்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும்
- சட்டசபையில் நான்கில் மூன்று பங்கு முஸ்லீம் உறுப்பினர்கள் ஒரு சட்டத்தை எதிர்த்தால் அதை வீட்டோ அதிகாரமாக கருத வேண்டும்.
- தனியாக்கம் பெற்ற வாரியங்களிலும் பணிகளிலும் முஸ்லீம்களுக்கு போதுமான இடங்கள் அளிக்கப்படவேண்டும்.
- மத்திய மாநில மந்திரி சபைகளில் முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கப்பட வேண்டும்.
- மத்திய சட்டசபையில் மூன்றில் ஒரு பாகம் முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
- எல்லா மாகாணங்களும் ஒப்புக்கொண்டால் ஒழிய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற முடியாது.
- வகுப்புவாத குழுக்களின் பிரதிநிதித்துவம் தற்போது உள்ளது போலவே தொடர வேணடும்.
- முழு மத சுதந்திரம், நம்பிக்கை வழிபாடு மற்றும் கல்வி சுதந்திரம் அனைத்து சமூகங்களுக்கும் உத்திரவாதம் அளிக்கப்படவேண்டும்.
- பம்பாய் பிரசிடென்சியில் இருந்து சிந்துவை பிரிக்க வேண்டும்
- வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலும் பலுசிஸ்தானிலும் மற்ற மாகாணங்களில் உள்ள நிலைப்பாட்டில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
- அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் முஸ்லீம்களுக்கு போதுமான பங்கை வழங்கும் வகையில் அரசியலமைப்பில் வழிவகை செய்யப்பட வேண்டும்.
- முஸ்லீம் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காகவும், கல்வி மொழி மதம் தனிநபர் சட்டங்கள் மற்றும் முஸ்லீம் தொண்டு நிறுவனங்களை பாதுகாப்பதற்கான அரசு மற்றும் அதன் மானியங்களில் உரிய பங்கை வழங்க அரசியலமைப்பில் வழிவகை செய்யப்படவேண்டும்.
இவற்றிற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் தான் முஸ்லீம்கள் இந்துக்களோடு ஒத்துழைப்பார்கள் என்று மிரட்டல் விடுத்தார் ஜின்னா. இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த காங்கிரஸ் அதை திரும்ப அனுப்பியது. முஸ்லீம்களுக்கு தனியுரிமை கேட்டது நிராகரிக்க பட்டதால் கி.பி.1929 பிப்ரவரியில் பம்பாயில் கலவரம் நடந்து 149பேர் இறந்தனர். தனித்தொகுதிகள் பிரச்சினையை காந்தி எதிர்க்க அவர் எரவாடா சிறையில் இருந்த போது கி.பி.1932ல் முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதிகளை அரசு அறிவித்தது. கி.பி.1936-37ல் நடந்த தேர்தலில் 11 மாநிலங்களில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றது. முஸ்லீம் லீக்கிற்கு ஒரு இடத்தில் கூட பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜின்னா நேருவிடம் தனது கட்சிக்கும் பிரதிநிதித்துவம் கேட்க நேரு "இங்கே இரண்டு கட்சி தான். ஒன்று ஆங்கிலேயர்கள் மற்றொன்று காங்கிரஸ்" என்ற கூறிய பதிலால் அவமானத்தில் ஜின்னா முகம் சிவந்து கோபமுற்றார். இந்த பதிலால் அவர் நேரு, காந்தி மற்றும் காங்கிரஸ் இருந்தால் முஸ்லீம் லீக்கிற்கோ அல்லது முஸ்ஸீம்களுக்கோ நல்லது நடக்காது என்று முடிவு செய்து பிரிவினை கோஷத்தை உரக்க எழுப்பினார். தன்னாலும் அரசியலில் பிரகாசிக்க முடியாது என்று உணர்ந்து பிரிவினை கோஷத்தின் மூலம் முஸ்லீம்களின் தனிப்பெரும் தலைவராக உயரலாம் என்று நினைத்தார். இந்த காலகட்டத்தில் இந்துக்களுக்கு இறுதி புகலிடமாக ஆர்.எஸ்.எஸ் தான் அடையாளம் காணப்பட்டதால் வட இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. கி.பி.1934ல் வார்த்தாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு காந்திஜி வந்து பார்வையிட்டு வாழ்த்தினார். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தீண்டாமையை எதிர்த்தது. அதில் அனைத்து ஜாதி பிரிவினரும் இணையலாம். எந்த வித ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒன்றாக பயிற்சி மேற்கொள்ளலாம். தீண்டாமையை ஒழிக்க காந்திஜி போராடிக்கொண்டிருந்த வேளையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தீண்டாமையை அடித்து நொறுக்கியதே அவர் பயிற்சிக்கு வந்து வாழ்த்தியதற்கு காரணம். கி.பி.1936ல் அகமதாபாத்தில் கூடிய கூட்டத்தில் சாவர்க்கரும் கோல்வாக்கரும் "இந்தியாவில் இரண்டு முரண்பட்ட தேசங்கள் அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றை ஒன்று படுத்திவிட முடியும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம் என்று பேசினார்கள். கி.பி.1940ல் மார்ச் மாதம் முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கோரிக்கையை எழுப்பியது. அதற்கு அடுத்த ஏப்ரல் மாதத்திலையே 27-30 தேதிகளில் டெல்லியில் ஜின்னாவை எதிர்த்து தேசபக்த முஸ்லீம்களின் மாநாடு நடந்தது.
பிரிவினையை அறிவித்த மார்ச் 1940ல் அவரை எதிர்த்து மாநாடு நடத்த இதர முஸ்லீம் அமைப்புகள் முடிவு செய்து ஏப்ரல் மாதத்தில் டெல்லியில் 4 நாட்கள் மாநாடு நடத்தியது. அதில் கலந்து கொண்ட கட்சிகள் விவரம் :
- அகில இந்திய ஜமாத்துல் உலமா,
- அகில இந்திய மொமீன் மாநாடு,
- அகில இந்திய மஜ்லீஸ் அமைப்பு,
- அகில இந்திய ஷியா அரசியல் மாநாடு,
- குதாய் கிட்மடர்கள்,
- வங்காள கிரிஷக் புரோஜா கட்சி,
- அகில இந்திய முஸ்லீம் பார்லிமெண்டரி ஃபோர்டு,
- அஞ்சுமனே வட்டான்/பலுசிஸ்தான்,
- அகில இந்திய முஸ்லீம் மஜ்லிஸ்,
- ஜமாயத் அல் ஹதீஸ்
மொத்தம் 1400 பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் மாநாட்டின் தலைவராக அல்லாபக்ஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை வரவேற்க நடந்த பேரணியில் 50000 பேர் "இன்குலாப் ஜிந்தாபாத் " "இந்தியாவிற்கு விடுதலை" "பாகிஸ்தானுக்கு சாவுமணி" என்று முழக்கங்கள் எழுப்பினர். மாநாட்டில் பேசிய வரவேற்பு குழு தலைவர் முகமது ஜான் தனது பேச்சில் "முஸ்லீம்களுக்கு தனி வாக்குரிமை என்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தேச பிரிவினை என்பது முட்டாள்தனமான நடைமுறையில் சாத்தியமற்ற கோரிக்கை.அதை தவிர்க்க வேண்டும்" என்றார். பம்பாயின் முன்னாள் ஷெரிப் முகம்மது பாய் ரவுஜி " ஜின்னாவும் அவரது அடிப்பொடிகளும் மத அடிப்படையில் குறுகிய மனம் கொண்ட குரோதத்தை வளர்க்கின்றனர். இதை தடுக்காவிட்டால் தேசத்திற்கு மட்டுமல்ல இந்திய முஸ்லீம்களுக்கும் ஆபத்து ஏற்படும். முஸ்லீம்களுக்கு ஆபத்து என்று சொல்லியே ஒன்றுமறியா முஸ்லீம்களை ஜின்னா அணி திரட்டுகிறார்" என்று கூறினார். பின்னர் பேசிய மாநாட்டு தலைவர் அல்லாபக்ஷ் "ஜின்னா இந்தியாவின் பன்முக கலாச்சாரம் 1000 ஆண்டுகளாக இந்து மற்றும் முஸ்ஸீம்களால் உருவாக்கப்பட்டது. இரண்டு தேசம் என்பது தவறான புரிதல். முஸ்லீம்கள் ஆன்மீக பாதையில் இஸ்ஸாமையும் இந்திய குடிமக்கள் என்பதிலும் பெருமை கொள்கின்றனர். இந்திய நாட்டின் ஒவ்வொரு துகளையும் நேசிக்கின்றனர். தாய் மண்ணை வணங்குகின்றனர். முஸ்லீம் சாம்ராஜ்யங்களோ இந்து சாம்ராஜ்யங்களோ தம் மக்களுக்கு உதவவில்லை. அதனால் பாகிஸ்தான் என்று மத அடிப்படையில் ஒரு தேசம் உருவாக தேவையில்லை" என்று கூறினார். இந்த மாநாடு வரைக்கும் முஸ்லீம்களின் மொத்த பிரதிநிதி ஜின்னா என்ற மாயை உடைந்தது. இதனால் கோபமடைந்த ஜின்னா தனது வன்முறை வழிகளை தேர்ந்தெடுத்தார். டாக்கா, லாகூர் அகமதாபாத் மற்றும் பம்பாய் பகுதிகளில் கலவரத்தை வன்முறையை தூண்டி கலவரத்தை ஆரம்பித்தார். முஸ்லீம்கள் இந்துக்களை தாக்க ஆரம்பித்தனர்.இந்த இடத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முஸ்ஸீம் லீக்கின் துணைப்பிரிவான " Muslim National Guard" என்ற அமைப்பே இந்த வேலைகளை செய்தது. இந்த நேரத்தில் காந்தியும் அமைதியாக யாரையும் கண்டிக்காமல் இருந்து விட்டார். பதிலுக்கு தங்களை காத்துக்கொள்ள இந்துக்களும் தாக்கலாம் தங்களை காத்து கொள்ளலாம் என்று காந்தியை அறிக்கை விட வற்புறுத்திய கே.எம்.முன்ஷி இதனால் காந்தியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
சிந்து மாகாணத்தில் அல்லாபக்ஷ் மிகுந்த மக்கள் செல்வாக்குடையவர். அவர் இருக்கும்வரை அங்கு முஸ்லீம் லீக் செல்வாக்கு பெருகாது என்ற எண்ணத்தில் முஸ்லீம் லீக் கட்சியினரனால் கி.பி.1943 ஏப்ரல் 14ம் தேதி கொல்லப்பட்டார். அரசியல் படுகொலை ஜின்னாவின் தூண்டுதலால் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டி சிந்து மாகாண முஸ்லிம் லீக் தலைவர்கள் முகம்மது அயூப் குரோ மற்றும் அவரது சகோதரர் ஹாஜி நவாஸ் கைது செய்யப்பட்டு விசாரணையில் கொலையாளி இவர்களுக்கு எதிராக சாட்சியளித்தும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கபடவில்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். இதன் பின்னர் தன்னையும் முஸ்லீம் லீக்கையும் எதிர்த்த முஸ்லிம் தலைவர்களையும் மிரட்டியோ தாக்கியோ அரசியலிருந்து அப்புறப்படுத்தியோ அல்லது மிரட்டி முஸ்லீம் லீக்கில் இணைய வைக்கவோ அவருக்கு எளிதாயிற்று. அதற்காகவே கி.பி.1931ல் "Muslim national guard" என்ற அமைப்பு முஸ்லீம் லீக்கில் உருவாக்கப்பட்டு 3 லட்சம் பேர் அதன் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களின் வேலை சமூக சேவை என்று சொல்லப்பட்டாலும் பாகிஸ்தான் பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்வது மற்றும் ஜின்னா மற்றும் முஸ்லீம் லீக்கை விமர்சனம் செய்பவர்களை தாக்கி அவர்களின் வாயை அடைப்பதுமாக மட்டுமே தான் இருந்தது.
கி.பி.1945ல் முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கோரிக்கையை வலுவாக முன்வைக்க எதிர்ப்பு குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. அதனால் அந்த ஆண்டு மட்டும் முஸ்லீம் லீக் கட்சியினர் நடத்திய தாக்குதல்கள்:
- செத்பூரில் மவுலானா அகமது மதானி மீது கொலை தாக்குதல்.
- அலிகாரில் மெளலானா அபுல் கலாம் மீது கொலை தாக்குதல்.
- கல்கத்தாவில் மவுலானா அப்துல் ரசாக் மீது வீச்சரிவாள் தாக்குதல்.
- மவுலானா முகமது காசிம் மற்றும் மவுலானா இஸ்மாயில் ஆகிய இருவரும் தொழுகை முடிந்து வரும்போது தாக்கப்பட்டனர்.
- மவுலானா ஹிசபூர் ரஹ்மான் மீது லாகூரிலும் பின்னர் ஜலந்தர் ரயில் நிலையத்திலும் தாக்குதல்.
- மவுலானா சையத் முகம்மது நாசிர் வீச்சரிவாள் தாக்குதலில் ஒரு கையை இழந்தார்.
- பல முஸ்லீம் தலைவர்களின் உடைகளை கிழித்துப் தாடிகளை அறுத்தும் பொது இடங்களில் அவமானப்படுத்தினர்.
- வங்காளத்தில் பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிராக பிரச்சாரம் செய்த துணை சபாநாயகர் ஜலாலுதீன் ஹாஷ்மி காரில் சென்ற போது மறிக்கப்பட்டு தாக்கப்பட்டார்.
- 1946ல் டெல்லியில் ஜமாயத் உலமா கட்சி அலுவலகத்திற்கு ஜமாயத் தலைவர்கள் லீக்கில் இணையாவிட்டால் அவர்கள் கதை முடிக்கப்படும் என்று மிரட்டல் கடிதம் வந்த ஒரு வாரத்தில் அவர்களின் அலுவலகம் முஸ்லிம் லீக்கினரால் தாக்கப்பட்டது.
- சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்ட அல்லாபக்ஷ்ஷின் சகோதரர் மவுலா பக்ஷ் சட்டமன்ற வளாகத்திலையே தாக்கப்பட்டார்.
- முல்தானில் காங்கிரஸ் தலைவர் சஃபியூதின் கிச்சுலு 3வது முறையாக தாக்கப்பட்டதில் அதை தடுத்த அவர் நண்பர் கிருஷ்ணதாஸ் கொல்லப்பட்டார்.
- வடமேற்கு மாகாணத்தில் எல்லை காந்தி கான் அப்துல் கஃபார் கானின் உறவினர் அத்தாவுல்லா கான் மற்றும் அவரது நண்பர்கள் முஸ்லிம் லீக்கின் கிம்ரான் கானால் சுட்டு கொல்லப்பட்டனர். இவ்வாறு காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கை எதிர்க்கும் பிற முஸ்லீம் தலைவர்களை அச்சுறுத்தி தாக்குதலுக்கு உள்ளாக்கி முஸ்ஸீம் லீக்கை எதிர்த்தால் தாக்கப்படுவோம் என்ற பயத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.
கி.பி.1946ல் நடந்த தேர்தல்களில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த பகுதிகளில் காங்கிரஸும் முஸ்லீம்கள் பகுதிகளில் முஸ்லீம் லீக்கும் வெற்றி பெற்றது. இடைக்கால அரசை நியமிப்பதிலும் ஜின்னா நிபந்தனைகள் விதித்தார். பாதுகாப்பு துறை சரி சமமான இடங்கள் என்று கேட்க நேருவும் படேலும் ஜின்னா தன் தேவையை மிரட்டி பணிய வைக்க முயல்கிறார் என்று கூறி நிபந்தனையை ஏற்க மறுத்தனர். பின்னர் வேவல் பிரபு சமாதானப்படுத்தி காங்கிரஸ் 6 முஸ்லீம் லீக் 5 கிறிஸ்தவர் 1 பார்ஸி 1 சீக்கியர் 1 என்ற அடிப்படையில் இடைக்கால அரசு அமைத்தனர். இடைக்கால அரசில் முஸ்லீம் லீக்கின் லியாகத் அலிகான் (சுதந்திர பாகிஸ்தானில் முதல் பிரதமர்) நிதி இலாகாவை பெற்று எந்த துறைக்கும் நிதி ஒதுக்கிடு செய்வதில் மறுப்பு தெரிவித்தார். மற்ற இலாக்காக்களை செயல்பட விடாமல் தகராறு செய்ய காங்கிரஸ் உறுப்பினர்கள் 3 பேர் அரசிலிருந்து விலகினர். பிரிட்டிஷ் அரசின் ஆதரவு ஜாதி இந்துக்களே என்று கூறி 1946 ஆகஸ்ட் 16ல் நேரடி நடவடிக்கை நாள் என்று முஸ்லீம் லீக் அறிவித்தது. வங்காளத்தின் பிரதமராக இருந்த முஸ்லீம் லீக்கின் சுரா வர்த்தி கவர்னரை அணுகி அன்று போலீஸார் மற்றும் ராணுவத்திற்கு விடுமுறை அறிவித்தார். பின்னர் அன்று காலை நடந்த கூட்டத்தில் "வங்காள முஸ்லீம்கள் எல்லோரும் கிளர்ந்தெழுந்தால் கிழக்கு வங்காளத்தில் ஒரு இந்து கூட உயிரோடு இருக்க மாட்டார்கள்" என்று பேசி முஸ்லீம்களுக்கு மறைமுகமாக தூண்டி விட அன்று கடையெடுப்பு நடத்தி இந்துக்களின் கடைகளை உடைத்தும் கொலை கொள்ளைகளை நிகழ்த்த ஆரம்பித்தனர். கல்கத்தா நவகாளியில் இந்துக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டது. கோயில்கள் இடிக்கப்படுவதற்கு முன் கன்று குட்டிகளை கொன்று கோயிலில் வீசி புனிதத்தை கெடுத்தனர். இந்துக்கள் ஒன்றாக கட்டி வைத்து உயிரோடு கொளுத்தினர். பெண்களை கடத்தி சென்று கற்பழித்தனர். இந்துக்களும் இதே போல் அவர்கள் பெரும்பான்மை பகுதிகளில் முஸ்லிம்களுக்கு இதே கொடுமைகளை செய்ய ஆரம்பித்தனர். இந்த காலகட்டத்தில் இந்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் துணை நின்றதால் வங்காளம், பஞ்சாப், பீஹார், மஹாராஷ்டிரா மாகாணங்களில் உள்ள இந்துக்களிடையே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு நல்ல பெயர் இருந்தது. நவகாளி கலவரம் கொழுந்து விட்டு எரிந்து பீஹாரில் முஸ்லீம்களை இந்துக்கள் தாக்க தொடங்கினர். ஜின்னா கல்கத்தா நவகாளியை பற்றி பேசாமல் " பீஹார் சம்பவம் கூட்டு சதி" என்று கூறி இந்தியாவில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் பாகிஸ்தான் வேண்டும் என்று முழங்க ஆரம்பித்தார். பாகிஸ்தான் என்பது காலத்தின் கட்டாயம். காந்தி எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் ஜின்னா பிடிவாதமாக இருந்தார். 1947 பிறந்தவுடன் ஜனவரி 24ல் பஞ்சாப்பில் அதன் முதல்வர் முஸ்லீம் நேஷனல் கார்ட் அமைப்பை தடை செய்தார். அதே நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் தடை செய்தார். அதை தொடர்ந்து கலவரங்கள் அடிதடிகள் என்று வன்முறை வெறி பரவ ஆரம்பித்தது. மார்ச் 3ல் லாகூர் சட்டமன்றத்தில் சீக்கிய தலைவர் தாரா சிங் தன் இடுப்பில் இருந்த குறுவாளை உயர்த்தி "பாகிஸ்தான் முர்தாபாத்" என்று சொல்ல லாகூரில் கலவரம் கட்டுக்கடங்காமல் பரவி மொத்த பஞ்சாப் முழுவதும் முஸ்லீம்கள் இந்துக்களை தேடி தேடி கொல்ல தொடங்கினர். ஒருவரையொருவர் மாற்றி மாற்றி அடித்து கொல்ல ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் இந்துக்களை காக்கும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தானே எடுத்துக்கொண்டு பதிலுக்கு முஸ்லீம்களை தாக்க ஆரம்பித்தது. இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பையும் பாதுகாப்பாக ஊரை கடக்கும் வழிகளில் பாதுகாப்பு பொறுப்புகளை கையில் எடுத்துக்கொண்டது. முஸ்லீம்கள் அந்த நேரத்தில் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிய போது ஆர்.எஸ்.எஸ் அவர்களே நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கையெறி குண்டுகளை முஸ்லீம்களின் குடியிருப்பு பகுதிகளில் பதில் கலவரத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். கலவரம் வட இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. பாகிஸ்தான் என்ற தேசம் பிரித்து தரப்பட்டாலொழிய இந்த கலவரங்கள் அடங்காது என்று தேசம் முழுவதும் மக்கள் பேசத் தொடங்கினர். காந்தி முழு இந்துஸ்தானையும் முஸ்லீம் லீக்கே ஆளட்டும். இந்தியாவை பிரிக்க வேண்டாம் என்று மெளண்ட்பேட்டன் பிரபுவையும் பார்த்து சொன்னார். நேரு மற்றும் படேல் இதற்கு சம்மதிக்கவில்லை. கலவரங்களுக்கு தூண்டுதல் முஸ்லீம் லீக்கின் செயல் என்று வெளிப்படையாகவே தெரிந்ததால் நேருவும் படேலும் ஜின்னா பிரிந்து போவதே நல்லது. இவரை வைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக்க முடியாது. அப்படி சமாதானப்படுத்தினாலும் பின்னர் மிரட்டல் விடுத்தே கலவரத்தை ஏற்படுத்துவார் என்றே கடைசியில் காங்கிரஸ் பிரிவினைக்கு சம்மதித்தது. அந்த நேரத்தில் இந்தியாவில் 25% சதவீதம் பேர் முஸ்ஸீம்களாக இருந்தனர். இந்தியாவில் காங்கிரஸ், நீதிக்கட்சி,கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் என பல கட்சிகள் இருந்தன. முஸ்லீம் லீக் அதிக இடங்களை பிடித்து ஒன்றுபட்ட இந்தியாவில் ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் நடக்கும். இடைக்கால அரசில் பிரச்சினையை ஏற்படுத்தியது போல மீண்டும் நடக்க தயங்கமாட்டார்கள். மேலும் காங்கிரஸ் பதவி இழக்கும் என்ற நேருவின் மறைமுக பயத்தினால் கூட பிரிவினைக்கு சம்மதித்து இருக்கலாம்.
பிரிவினைக்கு யார் காரணம் என்று ஜின்னாவிடம் கேட்டபோது நானோ, நேருவோ,காங்கிரஸ்ஸோ முஸ்ஸீம்லீக்கோ காரணமில்லை. இதற்கு காரணம் காந்தி என்று சொன்னார். ஏன் அவ்வாறு கூறினார்? பிரிவினை கூடாது என்று கூறிய காந்தியை அவ்வாறு கூற காரணம் என்ன? - காந்திக்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஜின்னா. அங்கு அவருக்கு கிடைக்காத முக்கியத்துவம் காந்திக்கு கிடைத்தது. பொதுக்குழு செயற்குழு எதுவானாலும் காந்தியின் கருத்துக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். காந்தி நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து ஜெயித்த நேதாஜியே பதவி விலகும் அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. கி.பி.1930ல் முஸ்லீம்களுக்கும் தனித்தொகுதி தேவையில்லை என்று காந்தி குரல் எழுப்பினார். அது ஜின்னாவை கோபப்படுத்தி இருக்கலாம். அதனால் ஏற்பட்ட கோபத்தில் பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கையை எழுப்ப ஜின்னா முடிவு செய்திருக்க வாய்ப்புண்டு. அதனால் தான் சப்பைக்கட்டு வார்த்தையாக காந்தி தான் காரணம் என்று சொல்லி தான் தப்பிக்க நினைத்திருக்கலாம். மொத்தத்தில் பிரிவினைக்கு அனைவரும் தான் காரணம். ஒருவருக்கொருவர் மீது ஏற்பட்ட போட்டி பொறாமை சுயநலம் ஆகியவற்றால் இந்தியாவை பிரித்து 1 1/2 கோடி மக்களின் குடும்பங்களில் நீங்காத நிரந்தர வடுக்களை ஏற்படுத்தி விட்டனர். இந்த பிரிவினையினால் மற்றும் அதன் கொடுமையினாலும் காஷ்மீர் மீது போர் கொடுத்ததால் பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டிய 55 கோடி பணத்தை கொடுக்க இந்தியா மறுத்ததால் கொடுக்க கூறி காந்திஜி உண்ணாவிரதம் இருந்த காரணத்தாலும் கோபமுற்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த நாதுராம் கோட்சேவால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். கொலைச் சதியில் அப்ரூவராக மாறியவர் கோட்சே சாவர்க்கரை அவர் வீட்டிற்கு போய் நாராயண ஆப்தே மற்றும் கோட்சே அவரை சந்தித்து விட்டு வந்தபோது "காந்திஜியின் காலம் முடிகிறது. இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும் என்று சாவர்க்கர் நினைக்கிறார்" என்று சொல்லியதாக கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது. அவர் கூறியதற்கு சரியான சாட்சியங்கள் இல்லாததால் "சரியான சாட்சியங்கள் குற்றத்தை நிருபிப்பதற்கு இல்லாத காரணத்தால் சாவர்க்கர் காந்தியின் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். காந்தியின் கொலைக்கு தான் மட்டுமே காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததால் கோட்சே தூக்கிலிட்டு கொல்ல தீர்ப்பு எழுதவே அவ்வாறே தூக்கிலிடப்பட்டார். எது எப்படியோ பிரிவினை வேண்டாம் என்று மன்றாடிய காந்திஜியின் உயிர் பிரிவினையாலையே போயிற்று.
உதவிய நூல்கள் :
மாமனிதர் ஜின்னா - தங்கசாமி
ஜின்னா - மருதன்
இந்திய சுதந்திர போராட்டம் - இலந்தை சு.இராமசுவாமி
இந்திய பிரிவினைக்கு யார் காரணம் முஸ்லிம் மதவாதமா? இந்து மதவாதமா ? - பாரத் கபீர் தாஸன்
அந்தமான் சிறை அனுபவங்கள் - வீர் சாவர்க்கர்
அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - என்.சொக்கன்
ஆர்.எஸ்.எஸ் - பா.ராகவன்
படங்கள் :
கூகுள் படங்கள்

Comments
Post a Comment