104) சுதேச சமஸ்தானத்தின் இணைப்பு

இந்திய சுதேச சமஸ்தானங்கள் இணைப்பு

இந்திய சுதந்திரம் பெற்ற சமயத்தில் இரண்டு விதமான சமஸ்தானங்கள் இருந்தது. ஒன்று பிரிட்டிஷ் இந்தியாவின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த சமஸ்தானங்கள். இவை ஆட்சி மாறும்போது இந்தியாவின் பகுதிகளாகி விட்டது. இன்னொன்று சுதேசி சமஸ்தானங்கள். இவர்கள் உள்நாட்டு முடிவுகளை தாங்களே எடுக்கும் அதிகாரம் பெற்று இருந்தாலும் பாதுகாப்புக்காக மற்றும் வெளி விவகாரங்களில் பிரிட்டிஷாரின் உதவியை எதிர்பார்த்து இருந்தனர். இவர்கள் இந்தியாவில் சேரலாமா? இல்லை பாகிஸ்தானில் சேரலாமா? அல்லது தனித்து சுதந்திர நாடாக தம்மை பிரகனப்படுத்திக் கொள்ளலாமா? என்ற யோசனையில் இருந்தன. இது போக பிரெஞ்ச் மற்றும் போர்ச்சுகல் அரசுகளின் குடியேற்றப் பகுதிகள் வேறு இருந்தது. இந்திய நிலப்பரப்புக்குள் இருக்கும் பகுதிகளை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் முடிவு செய்தது. இந்த பணியினை நிறைவேற்ற 10 ஆண்டுகள் காலக்கெடு விதித்து அதற்கு பொறுப்பாக உள்துறை மற்றும் துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேலும் அமைச்சரவை செயலாளராக இருந்த வி.பி.மேனனும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் நூற்றுக்கணக்கான சுதந்திர அரசர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவுடன் இணைந்தனர். இணைய மறுத்த அரசர்களை "இணையாவிட்டால் இந்தியா உங்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும்" என்று கூறி இணைத்தனர். மெளண்ட்பேட்டன் சுதேச அரசுகளுக்கு பிரிட்டிஷ் அரசு டொமினியன் அந்தஸ்து வழங்காது. பிரிட்டிஷ் காமன்வெல்த்தின் ஒரு பகுதியாகவும் கருதாது. இரு நாடுகளுடன் சேராமல் இருக்கும் சுதேச அரசுகளின் அனைத்து தொடர்புகளையும் பிரிட்டிஷ் அரசு துண்டித்து கொள்ளும் என்று அறிவித்தார். துணைகண்டத்தினுள் ஒரே மாதிரியான பொருளாதார அமைப்பு நிலவுகிறது. சுதேச அரசுகள் தனித்தனியாக இயங்கினால் ஒட்டுமொத்த பொருளாதாரமே முடங்கி விடும். சுதேச அரசுகளில் மத கலவரங்கள் ஏற்பட்டால் அவற்றால் அதை சமாளிக்க முடியாது. அதே போல் கம்யூனிஸ்ட் இயக்கங்களையும் கட்டுப்படுத்த முடியாது. அதனால் தான் இணைய வற்புறுத்துகிறேன் என்றும் அவ்வாறு இணையும் அரசுகளின் விருப்பங்களை நிறைவேற்றும் பொறுப்பு எனக்கு உண்டு என்றும் கூறினார்.இதனால் பெரும்பாலான சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைந்தன. ஒரு சில அரசுகள் பிரிட்டன் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக புலம்பினர். பிரிட்டனின் எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி கூட மெளண்ட்பேட்டனின் அறிவிப்பை கடுமையாக விமர்சனம் செய்தது.

சுதேச அரசுகள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி கொண்டு தனித்து இயங்கலாம் என்று ஆலோசனையில் இறங்கியது. போபால் அத்தகைய முயற்சியில் இறங்கியது. இந்த சுதேச அரசுகள் ஒன்றை ஒன்று சந்தேக கண்களுடன் பார்த்தது. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. இந்து ராஜாக்கள் முஸ்லீம் மன்னர்களை நம்பவில்லை. போபால் ராஜாவை இந்து மன்னர்கள் நம்பவில்லை. அவரை பாகிஸ்தானின் ஏஜெண்ட் என்று சந்தேகப்பட்டனர். கடைசியில் இந்திய அரசோடு நிபந்தனைகளை விதித்து சேரும் வாய்ப்பை இழந்து சொன்னதை கேட்டு இணையும் நிலைக்கு வந்தது.

சுதந்திரம் அடைந்து 10 நாட்களில் ஜின்னாவுக்கு ஏற்கனவே இருந்த நுரையீரல் பிரச்சினை (காசநோய்) அதிகமாயிற்று. ஜின்னா அதிகளவில் புகைபிடிக்கும் உள்ளவர் என்பதால் அந்த பாதிப்பு அவருக்கு இருந்தது. காஷ்மீருக்கு சென்று ஒய்வெடுக்கலாம் என்று அதற்கான ஏற்பாடு செய்ய தன் செயலாளரிடம் சொன்னார்.  பிரிவினையின் போது காஷ்மீர் எந்த பக்கமும் சேராமல் தனித்து இருந்தது. காஷ்மீர் ராஜா ஹரிசிங் இந்துவாக இருந்தாலும் மக்கள் பெரும்பான்மையாக முஸ்லீம்கள் தான். அதனால் ஜின்னா எப்படியும் நம் பக்கம் வந்துவிடுவார்கள் என்று நினைத்தார். ஓய்வெடுக்க ஏற்பாடு பண்ண சொன்ன ஜின்னாவுக்கு காஷ்மீரில் நுழைய கூட அனுமதியில்லை என்று பதில் வரவே அவமானத்தில் கொதித்து போனார். ஜின்னாவுக்கு நேர்ந்த அவமானத்தை துடைக்க பிரதமர் லியாகத் அலிகான் மற்றும் ராணுவ அதிகாரிகள் குழு மக்களே விரும்பினாலும் காஷ்மீர் ராஜா பாகிஸ்தானுடன் இணைய சம்மதிக்க மாட்டார் என்று புரிந்ததால் மறைமுக யுத்தம் துவங்க முடிவெடுத்து பதான் ஆதிவாசிகள் படையை அனுப்பி காஷ்மீரை தாக்கும்போது அங்குள்ள முஸ்லீம்கள் இயல்பாக உதவி புரிவார்கள் என்ற நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தனர். முஸஃபராபாத் என்ற எல்லைப்புற சிறு டவுனுக்கு புகுந்தவுடன் ஆதிவாசி படைகள் தலைவனின் உத்தரவை கூட மதிக்காமல் நகரை சூறையாட ஆரம்பித்தனர். இந்திய பிரிவினையின் போது நண்பர்களாக இருந்த இரு ஆங்கிலேய ஜெனரல்களுள் ஒருவரான டக்ளஸ் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரிலும் லாக் ஹர்ட் புதுடில்லியிலும் இருக்க வேண்டியதாயிற்று. ராவல்பிண்டியிலிருந்து புது டெல்லியில் நண்பருக்கு இந்த விவரத்தை கூற அவர் மெளண்ட்பேட்டன் பிரபு மற்றும் நேருவிடம் இந்த தகவலை கூறினார்.  நேரு உள்துறை செயலாளரான வி.பி.மேனனை ஶ்ரீநகருக்கு அனுப்பி ராஜா ஹரிசிங்கிடம் விவரம் தெரிவிக்க அவருக்கு வேறு வழியின்றி இந்தியாவுடன் இணைய கையெழுத்திடுவதை தவிர வேறு வழியில்லை. இதற்கிடையே பாரமுல்லாவை நெருங்கிய ஆதிவாசி படையினர் அங்கே கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். சர்ச்க்குள் நுழைந்து அங்கு ஜெபம் பண்ணிக்கொண்டிருந்த 14 கன்னியாஸ்தரிகளையும் கற்பழித்து கொன்றனர். தடுக்க வந்த மதர் சுப்பீரியர் அடித்து துன்புறுத்த தாங்கவே முடியாத வேதனையில் இறந்து போனார். இதற்கிடையில் ராஜாவிடம் கையெழுத்து வாங்கி மெளண்ட்பேட்டன் மற்றும் நேருவிடம் விவரங்களை சொல்லி முதலில் சீக்கியபடைபிரிவுடன் ஶ்ரீநகர் விமானநிலையத்துக்கு வி.பி.மேனன் வந்திறங்கினார். பதான் ஆதிவாசிகளை துரத்தியடித்து காஷ்மீர் பள்ளத்தாக்கு வரை விரட்டி அடித்தனர்.இது தன்னிச்சையான ஊடுருவல் அல்ல பாகிஸ்தானின் திட்டமிட்ட நடவடிக்கை என்று உலகுக்கு தெரிய ஜின்னா வேறு வழியின்றி காஷ்மீருக்காக பகிரங்க யுத்தத்தை கி.பி.1947 இறுதியில் துவங்கினார். இது பல மாதங்கள் நீடித்து இறுதியில் ஐ.நா. தலையீட்டால் போர் நின்றது. போர் நிறுத்தம் அறிவிப்பின் போது பாகிஸ்தான் கைப்பற்றியிருந்த கில்கிட்டை சுற்றியிருந்த வடபகுதிகள் காஷ்மீரின் பகுதிகள் POK (Pakistan occupied Kashmir) என்று காஷ்மீர் பாதி பாகிஸ்தானுக்கு போய்விட்டது. காஷ்மீரின் அக்சாசின் பகுதி இந்தியா-சீனா போரின் போது சீனாவுக்கு போய்விட்டது.

வி.பி.மேனன் மெளண்ட்பேட்டன் முன்னிலையில் தான் பல ராஜாக்கள் வந்து தங்களது நாட்டை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கொச்சின், பிகானீர், ஜவ்ஹார் அரசர்கள் இந்தியாவுடன் இணைய சந்தோஷமாக கையெழுத்திட்டனர். போபால், திருவாங்கூர் மற்றும் ஹைதராபாத் பகுதிகள் இந்தியாவுடன் இணைய விரும்பவில்லை. ஹைதராபாத் ஐரோப்பிய நாடுகளில் தனது வர்த்தக பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று அளவுக்கு சென்றது. போர்ச்சுகல் நாட்டுடன் கடல்வழி வாணிகம் நடத்தவும் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கோவாவை விலைக்கோ குத்தகைக்கோ வாங்க பேச்சுவார்த்தை நடத்தியது. கி.பி.1947 ஜூன் மாதத்தில் ஐதராபாத் ஒரு சுதந்திர தேசம் என்று அதன் நிஜாம் அறிவித்தார். ஐதராபாத்தில் அந்த நேரத்தில் 1.70 கோடி பேர் இருந்தனர். இதில் 85% சதவீதத்திற்கு மேல் இந்துக்கள். ஆனால் இதன் மன்னராக இருந்தவர் முஸ்ஸீமான நஸீம் உஸ்மான் அலிகான்.‌ இந்தியாவின் வடக்கு தெற்கு பகுதிகளுக்கு ஐதராபாத் வழியாக தான் போக்குவரத்து நடந்தாக வேண்டும். இந்தியாவுக்கு இடையில் இணையாமல் இருந்தால் அன்னியர்கள் ஊடுருவ வாய்ப்பு உண்டு இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் அதனால் ஐதராபாத் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று இந்தியா கூற நிஜாம் மறுத்துவிட்டார். கி.பி.1948ல் ஐதராபாத் இந்துக்கள் இந்தியாவுடன் இணைய கிளர்ச்சி நடத்த அதை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகளும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் ஐதராபாத் காங்கிரஸ் கட்சியினர் நிஜாமின் படையினரான ரஜாக்களால் தாக்கப்பட்டனர். சட்ட ஒழுங்கு சீர் குலைந்தது. இதனால் இந்தியா நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அனுப்பியது. கி.பி.1948ல் செப்டம்பர் 13ம் தேதி ஐதராபாத்தில் நுழைந்த ராணுவம் அடுத்த 5 நாட்களில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்தது. ஐதராபாத் நிஜாம் இந்திய படைகளிடம் சரணடைந்தார். இதற்கிடையில் பாகிஸ்தானுக்கான பிரிட்டிஷ் தூதரிடம் பாகிஸ்தானுக்கு கொடுப்பதற்காக பணத்தை நிஜாம் பணத்தை அனுப்ப அவர் அதை வங்கியில் போட்டு வைத்தார். அந்த பணத்திற்கு பாகிஸ்தானும் நவாப்பின் வாரிசுகளும் உரிமை கோரியது. கடைசியில் நவாப்பின் பேரன்களுக்கே தற்போதைய மதிப்பில் 300 கோடிக்கும் அதிகமான பணம் சொந்தம் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

லட்சத்தீவுகளில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள் இருந்தனர். அதனால் இந்த நாட்டை பாகிஸ்தான் தன்னோடு சேர்த்துக்கொள்ள முயற்சிக்கலாம் என்று கருதிய பட்டேல் உடனடியாக இந்திய கப்பல் படையை அனுப்பி வைத்து அங்கு இந்திய கொடியை ஏற்றி வைத்தார். லட்சத்தீவை ஆக்கிரமிக்க முயன்ற பாகிஸ்தான் கப்பல்கள் இந்திய கொடியினை பார்த்ததும் திரும்பி கராச்சிக்கு திரும்பி போய்விட்டது. 

மேற்கு ராஜஸ்தானிலுள்ள ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூர் அரசர் ஹன்வந்த் சிங்கும் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர். பாகிஸ்தானும் இதை விரும்பியது. இந்த அரசுகளை இணைத்துக்கொண்டால் அதனுடன் சில இராஜபுத்ர அரசுகளையும் இணைத்து கொண்டு பாகிஸ்தான் பஞ்சாப்பிலும் வங்காளத்திலும் இழந்த பகுதிகளுக்கு ஈடுகட்டலாம் என்று நினைத்து ஜின்னா இரு அரசர்களிடம் வெற்றுத்தாளை அனுப்பி "பாகிஸ்தானுடன் இணைய நீங்கள் விரும்பும் நிபந்தனைகளை எழுதிக்கொடுங்கள். மறுப்பே இல்லாமல் நான் கையெழுத்திட்டு தருகிறேன்" என்றார். இடையில் மெளண்ட்பேட்டன் இந்த இரு நாடுகளும் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு. முஸ்லீம்களுக்கு தனிநாடு என்ற அடிப்படையில் தானே பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் பாகிஸ்தானோடு இந்து நாடுகள் இணைவது பொருத்தமல்ல என்று கூறினார். இதனால் இரு அரசர்களும் அவரின் கருத்தை தங்களுக்குள் கலந்து ஆலோசித்து இந்து நாடுகளை பாகிஸ்தானுடன் இணைத்தால் மதக்கலவரம் வரும் வாய்ப்பு உள்ளதை உணர்ந்து கடைசியில் இந்தியாவுடன் இணைய கையெழுத்திட்டனர்.

இந்தியாவின் வடமேற்கு பகுதியான குஜராத்தின் கடைசி எல்லையில் இருந்த ஜூனாகத் சுதேச அரசாக இருந்தது. இந்தியாவுக்கு அருகில் உள்ளவை இந்தியாவுடன் பாகிஸ்தான் அருகிலுள்ள பாகிஸ்தானுடன் இணைவது நல்லது என்ற அடிப்படையில் ஜூனாகத் இந்தியாவுடன் இணைய மெளண்ட்பேட்டன் கூறினார். ஏனெனில் ஜூனாகத் பகுதிக்கு பாகிஸ்தானில் இருந்து வரவேண்டுமென்றால் கடல்வழியாக தான் வரமுடியும். அதனால் இந்தியாவுடன் இணையுங்கள் என்று கூறியும் நவாப் பாகிஸ்தானுடன் இணையும் முடிவில் பிடிவாதமாக இருந்தார். ஜூனாகத் நவாப்புக்கு கட்டுப்பட்ட இரு குட்டி அரசுகளான மாங்ரோல் மற்றும் பாப்ரிவாத் இனி நவாப் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூற நவாப் தன் ராணுவத்தை அனுப்பி இரண்டு பகுதிகளையும் சுற்றி வளைக்க அவை இந்தியாவின் உதவியை கேட்டது. இந்தியாவும் படைகளை அனுப்பி அந்த அரசுகளை நவாப்பின் பிடியிலிருந்து மீட்டது. ஜூனாகத் பாகிஸ்தானுடன் இணைந்தால் மத கலவரம் தீவிரமாக நடக்கும் என்று உணர்ந்து வாக்கெடுப்பு நடத்த இந்தியா கூற பாகிஸ்தானும் ஏற்றுக்கொண்டது. வாக்கெடுப்புக்கு முன்னர் இந்திய ராணுவம் வாபஸ் பெறவேண்டும் என்ற நிபந்தனையை இந்தியா ஏற்கவில்லை. நிலைமை மோசமாவதை உணர்ந்த நவாப் கி.பி.1947 அக்டோபர் 26ம் தேதி குடும்பத்தோடு பாகிஸ்தானுக்கு தப்பி போனார்.‌ கி.பி.1948 பிப்ரவரியில் நடந்த வாக்கெடுப்பில் மக்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தபடி கடைசியில் ஜூனாகத் இந்தியாவுடன் இணைந்தது.

திருவாங்கூர் ராஜா தனது பகுதியில் தோரியம் அதிகமாக இருப்பதை கூறி தனது நாட்டுக்கு மேற்கு நாடுகளிடம் அங்கீகாரம் கேட்டது. பின்னர் சுதந்திரமாக இருக்க விரும்பியது. அவரது திவான் ராமசுவாமி அய்யர் கொலை முயற்சியில் இருந்து தப்பித்த பிறகு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தை கைவிட்டு இந்தியாவோடு இணைய முடிவு செய்தனர்.

மத்தியபிரதேசத்தில் பிப்லோடா பகுதியின் குட்டி அரசு கி.பி.1948 மார்ச்சில் இந்தியாவுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மத்திய பாரத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது. இந்த மத்திய பாரத் பின்னர் கி.பி.1956 நவம்பர் 1ல் மத்திய பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

சுதேச அரசுகளை இந்தியாவுடன் இணைக்கும் வேலைகள் கி.பி.1947ல் இருந்து தொடங்கினாலும் இணைப்பு வேலைகள் இழுத்துக்கொண்டே தான் இருந்தது. இணைந்த சுதேச அரசுகள் அந்தந்த அருகிலுள்ள இந்திய மாகாணங்களுடன் இணைக்கப்பட்டது. கி.பி.1948ல் குஜராத் மற்றும் தக்காண பீடபூமி பகுதியிலிருந்த 66 சுதேச அரசுகள் பம்பாயுடனும் பஞ்சாப் மலைப்பகுதியில் இருந்த 30 சுதேச அரசுகள் இமாச்சலப் பிரதேசத்துடனும் குஜராத்தில் கத்தியவார் தீபகற்ப பகுதியிலிருந்த 222 குட்டி சுதேச அரசுகள் செளராஷ்டிரா யூனியனுடன் இணைக்கப்பட்டது. மே மாதத்தில் குவாலியர்,இந்தூர் மற்றும் 18 குட்டி அரசுகள் சேர்த்து மத்திய பாரத் பகுதி உருவாக்கப்பட்டது. ஜூலையில் பாட்டியாலா, கபூர்தாலா, ஜிந்து, நாலர்கோர் கல்சியா அரசுகள் இணைக்கப்பட்டு கிழக்கு பஞ்சாப் யூனியன் உருவாகியது. ராஜஸ்தானிலுள்ள சுதேச அரசுகளை ஒன்றிணைத்து ஐக்கிய ராஜஸ்தான் உருவாக்கும் பணி கி.பி.1949 மே 15ல் முடிவடைந்தது. திருவாங்கூர் கொச்சின் பகுதிகள் இணைக்கப்பட்டு திருவாங்கூர் கொச்சி யூனியன் உருவாகியது. இவ்வாறு உருவான மாகாணங்கள் கி.பி.1956ல் மாநில மறு ஒழுங்கமைப்பு சட்டத்தின் மூலம் மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அந்தமான் நிக்கோபார் பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது.

 மாஹி, ஏனாம், சந்தர்நாகூர், காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலும் கோவா, டையூ, டாமன், தாத்ரா ஹவேலி பகுதிகள் போர்ச்சுகல் ஆதிக்கத்திலும் இருந்தது. இவைகளையும் இந்தியாவோடு இணைக்க வேண்டியிருந்தது. கி.பி.1948ல் இந்தியாவும் பிரெஞ்ச் அரசும் பேச்சுவார்த்தை நடத்தியது. முடிவில் வாக்கெடுப்பு நடத்தி முடிவு இந்தியாவுக்கு சாதகமாக வந்தால் இந்தியாவுடன் இணைத்து கொள்வதில் பிரச்சினையில்லை என்று கூறியது. கி.பி.1949 ஜூனில் சந்தர்நாகூர் பகுதியில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைய விரும்பியதால் கி.பி.1950 மே-2ல் இந்தியாவுடன் இணைந்தது. மாஹே ஏனாம் ஆகியவற்றில் மக்கள் போராட்டங்கள் நடத்தினர். அக்டோபர் மாதம் பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் நடந்த வாக்கெடுப்பில் வென்று கி.பி.1954 நவம்பர் 1ல் ஏனாம், மாஹே, காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரி அதிகாரபூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது.

பிரெஞ்ச் அரசை போல் போர்ச்சுக்கல் அரசு தன் வசமிருந்த பகுதிகளை ஒப்படைக்க முன்வரவில்லை. கவுரவ பிரச்சினையாக கருதினாலும் மக்கள் இந்தியாவுடன் இணைய கி.பி.1955 ஆகஸ்ட் 15ல் பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 1954 ஜூலையில் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலியிலும் டாமன் பகுதியிலும் மக்கள் போராட்டங்கள் எழுந்தது. போர்ச்சுக்கல் அரசு போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அனுப்ப இந்திய அரசு தனது ராணுவத்தை அனுப்பி டாமன் பகுதியை கைப்பற்றியது. போர்ச்சுக்கல் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டும் இந்தியாவுக்கு சாதகமாக தான் தீர்ப்பு வந்தது. தீர்ப்பு  கி.பி.1960ல் வந்தவுடன் அடுத்த ஆண்டு தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியையும் தனது யூனியன் பிரதேசமாக்கும் சட்டத்தை கொண்டு வந்தது. மிச்சமிருந்த கோவா மற்றும் டையூ பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கள் வெடித்தது.   போர்ச்சுகல் இராணுவம் சுட்டதில் 22 பேர் இறந்தனர்.  நேரு போர்ச்சுகல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் வரை எடுத்து சென்று இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்று கி.பி‌.1964ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

இது போக நேபாளத்தை பிரிட்டன் ஏற்கனவே தனி நாடாக அங்கீகரித்தது. இந்தியாவும் அதை ஒப்புக்கொண்டது. பூடான் மன்னர் இந்தியாவுடன் நட்புறவுடன் வெளி விவகாரங்களில் இந்தியாவின் உதவியையும் எதிர்பார்ப்பதாகவும் இந்தியாவின் மேலாண்மையை ஏற்றுகொள்வதாகவும் கூற அவர்களையும் சுதந்திர நாடாக நட்பு நாடாக ஏற்றது. பின்னர் சிக்கிம் மாநிலமும் இதே போல் இருந்தது. ஆட்சிமாற்றத்தின் போது எதிர்கட்சிகள் வெற்றி பெற்றது. மன்னரின் ஆதிக்கம் முடிந்து மக்கள் அரசு வந்தவுடன்  இந்தியாவுடன் மக்கள் இணைய வாக்கெடுப்பு நடத்தி கி.பி.1975ல் இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆனது. இவ்வாறாக பல்வேறு சமஸ்தானங்களாக குட்டி குட்டி அரசுகளாக இருந்தவற்றை எல்லாம் ஒன்றிணைத்து  ஒன்றுபட்ட இந்தியா உருவாகியது.

உதவிய நூல்கள்:

இந்தியா உருவான கதை (ஆங்கிலேயர் வருகைக்கு பின்) - க.சிவஞானம்

இந்திய சுதந்திர போராட்டம் - இலந்தை சு.இராமசாமி

பாக். ஒரு புதிரின் கதை - பா.ராகவன்

காஷ்மீர் - பா.ராகவன்

காஷ்மீர் முதல் யுத்தம் - பி.ஆர்.மகாதேவன்

எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்

மறைக்கப்பட்ட இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்

இந்திய பிரிவினை (உதிரத்தால் ஒரு கோடு) - மருதன்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு