35) இராஜபுத்ரர்கள் - சாஹம்பரி செளகான்கள்
இராஜபுத்ரர்கள் (சாஹம்பரி செளகான்கள்) (கி.பி.6ம் நூற்றாண்டு - கி.பி.1194) :
குர்ஜர-பிரதிஹரர்களும், மாள்வாவின் பரமரர்களும், குஜராத் சோலங்கிகளும் (குஜராத் சாளுக்கியர்கள்) வகேலா வம்சத்தவர்களும் மேலை, கீழை சாளுக்கியர்களும், செளகான்களும் மற்றும் மேவார் மற்றும் இன்றைய இராஜஸ்தானை ஆண்ட சிற்றரசர்கள் அனைவருமே இராஜபுத்ர கிளைகளில் வந்தவர்கள் தான். உண்மையிலையே இவர்கள் குப்த பேரரசு வலுவிழந்த நேரத்தில் மத்திய ஆசியாவிலிருந்து வந்து நாடோடிகளாக குழுவாக அமைந்து தங்களுக்குள் இணைந்து சிறுசிறு பகுதிகளை ஆட்சி செய்து பின்னர் வலுவாக மற்றவர்களுடன் இணைந்து ஆட்சியை பிடித்தவர்கள் தான். மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவை நோக்கி படையெடுத்து வந்த முஸ்லீம் ஆட்சியாளர்களும் கலிபாக்களும் ஏன் டெல்லியை ஆண்ட சுல்தான்களும் மொகலாயர்களுமே இந்தியாவில் நுழையும்போது இவர்களின் வலிமையான எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருந்தது. இராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், காஷ்மீர், மத்தியப்பிரதேசம், டெல்லி மற்றும் பீஹார் உத்திரகாண்ட் பகுதிகளில் இராஜபுத்ரர்கள் மற்றும் அவர்களின் கிளை வம்சத்தினர் ஆண்டார்கள்.
சாஹம்பரி (இன்றைய இராஜஸ்தான்) சாம்பார் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டவர்கள் என்பதால் சாம்பாரின் செளகான்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் இராஜஸ்தான் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கி.பி.6ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை ஆண்டார்கள். இவர்களின் கடைசி அரசர் மூன்றாம் பிரித்விராஜ் செளகானை (சம்யுக்தையை தூக்கி சென்று மணம் புரிந்ததாக கூறப்படுபவர்) கி.பி.1192ல் கோரி முகமது வென்று கொன்றதுடன் இவர்களின் ஆட்சி முடிந்தது. இவர்கள் அக்னிவன்ஷி இராஜபுத்ரர்கள் வகையை சேர்நதவர்கள். இன்றைய சாம்பார் ஏரி நகரை தலைநகராக கொண்டு ஆண்டார்கள். கி.பி.10ம் நூற்றாண்டு வரை பிரதிஹரர்களின் ஆட்சியின் கீழ் சிற்றரசாகவே இருந்தனர். பிரதிஹரர்கள் வீழ்ச்சியின் போது இவர்களின் அரசரான சிம்ஹராஜா தன்னை மஹாராஜாதிராஜாவாக அறிவித்து கொண்டு சுயாட்சியை நடத்தினார். கி.பி.12ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரண்டாம் அஜயராஜா தலைநகரை ஆஜ்மீருக்கு மாற்றினார். அதன்பிறகு இவர்களை ஆஜ்மீர் செளகான்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு சுற்றியிருந்த குஜராத் சாளுக்கியர்கள், டெல்லி தோமரர்கள், மாள்வாவின் பரமரர்கள் ஆகியவர்களை சமாளிக்க வேண்டியிருந்தது. கி.பி. 11ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லீம்களின் படையெடுப்புகளையும் முதலில் கஜினி பின்னர் கோரி ஆகியவர்களின் படையெடுப்புகளையும் சந்தித்தனர். நான்காம் விக்ரஹராஜாவின் ஆட்சியில் இவர்களின் அரசு மிகவும் பரந்து விரிந்திருந்தது. பின்னர் மூன்றாம் பிரித்விராஜ்ஜை கோரி முகமது கி.பி.1192ல் தோற்கடித்தவுடன் இவர்களின் ஆட்சி முடிவுற்றது.
செளகான்களின் ஆட்சியாளர்கள்:
வசுதேவா (கி.பி.6 ம் நூற்றாண்டு) :
இன்றைய சாம்பார் (அன்று சாஹம்பரி) தலைநகராக கொண்டு இன்றைய ராஜஸ்தான் பகுதிகளை ஆண்டார். இவரே முதலில் செளகான்களின் ஆட்சியை தோற்றுவித்தவராக கருதப்படுகிறார். சமண அறிஞர் இராஜசேகர சூரி என்பவர் இவர் கி.பி.551ல் அரியணை ஏறினார் என்று கூறினாலும் அதை உறுதிப்படுத்துவதற்கு சரியான தகவல்கள் இல்லை.
சமந்த ராஜா (கி.பி.684-709) :
இவர் மாணிக் ராய் என்ற பெயரில் அறியப்பட்டுள்ளார். வாசுதேவாவுக்கு பின்னர் அரியணை ஏறினார். அஹிசச்சபுத்ராவில் (நாகோர்) பிறந்தவர். இவர் முந்தைய அரசர் வாசுதேவாவுக்கு என்ன உறவுமுறை என்று தெரியவில்லை. ஆனால் வரலாற்று அறிஞர்கள் வாசுதேவாவுக்கு பின்னர் செளகான்களை வர்த்தனர்கள் அடக்கி ஆண்டதாகவும் சமந்த ராஜா சாஹம்பரியை கைப்பற்றி செளகான்களை மீட்டதாகவும் கூறுகின்றனர்.
நர தேவா (கி.பி.709-721) :
சமந்தராஜாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். குறைந்த காலமே ஆட்சியில் இருந்தார். பூர்ணதலா என்பவரே சமந்தராஜாவின் மகன் அவருக்கு பின்னர் அரசு ஏறினார் என்று கூறுவதால் இவரே பூர்ணதலா என்றும் கூறுவர். ஆனால் பூர்ணதலா என்பது நரதேவா ஆட்சிபுரிந்த இடத்தின் பெயர் என்றும் சிலர் கூறுகின்றனர்.
முதலாம் அஜய ராஜா (அல்லது) அஜயபாலா (அல்லது) ஜெயராஜா (கி.பி.721-734) :
நர தேவாவுக்கு பின்னர் அவரது சகோதரர் முதலாம் அஜயபாலா ஆட்சிக்கு வந்தார். இவர் சிறந்த போர்வீரராக இருந்து பல எதிரிகளை வென்றவர் என்று கூறப்படுகிறது. இவர் அஜயமேரு (அஜ்மீர்) நகரை உருவாக்கினார் என்றும் இந்தியாவில் முதல் மலைக்கோட்டை அஜ்மீரில் இவரால் உருவாக்கப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் அஜ்மீர் இவரின் வழித்தோன்றலான இரண்டாம் அஜயபாலா உருவாக்கினார் என்றும் கூறுகின்றனர். ஆனால் அஜ்மீர் மலைகோட்டையில் கி.பி.8ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இருப்பதால் இவர் தான் அஜ்மீரை உருவாக்கினார் என்றும் பின்னர் வந்தவர் அதை மேலும் விரிவுபடுத்தி சாஹம்பரியிலிருந்து அஜ்மீருக்கு தலைநகரை மாற்றம் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
முதலாம் விக்ரஹராஜா (கி.பி.734-759) :
முதலாம் அஜயபாலாவுக்கு பின்னர் அவர் மகனான இவர் அரியணை ஏறினார். இவர் இவரது போர் வெற்றிகளுக்காக பிரித்விராஜா விஜயம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள். இவருக்கு பின்னர் முதலில் மூத்த மகன் முதலாம் சந்திர ராஜாவும் பின்னர் இளைய மகன் கோபேந்திர ராஜாவும் ஆட்சிக்கு வந்தனர்.
முதலாம் சந்திரராஜா (கி.பி.759-771) :
இவர் முதலாம் விக்ரஹராஜாவின் மூத்த மகன். ஆனால் சிலர் இவரை நர ராஜாவின் வழியில் வந்தவர் என்று கூறுகின்றனர்.
கோபேந்திர ராஜா (கி.பி.771-784) :
சகோதரன் முதலாம் விக்ரஹராஜாவுக்கு பின்னர் ஆட்சி ஏறினார். இவரது ஆட்சியில் படையெடுத்து வந்த சுல்தான் பெக் வரிஸா என்பவரை தோற்கடித்து விரட்டினார். சுல்தான் பெக் வரிஸா அரபியான முஹம்மது பின் காஸிம்மின் படைதளபதியாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.
முதலாம் துர்லப ராஜா (கி.பி.784-809) :
கோபேந்திர ராஜாவுக்கு பின்னர் அவரது சகோதரரான சந்திர ராஜாவின் மகனான இவர் ஆட்சிக்கு வந்தார். இவர் குர்ஜர-பிரதிஹர அரசரான வத்ஸராஜாவின் கீழ் சிற்றரசராக இருந்தார். இவர் பாலர்களின் ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்து பாலர்களின் அரசனான தர்மபாலாவுக்கு எதிரான வெற்றியை குர்ஜர-பிரதிஹரர்களுக்கு சமர்ப்பித்தார். பின்னர் வத்ஸராஜா மற்றும் தர்மபாலா ஆகிய இருவரும் இராஷ்டிரகூட அரசரான துருவாவின் தலைமையில் கீழ் ஆட்சிக்கு வந்தனர்.
முதலாம் கோவிந்தராஜா (கி.பி.809-836) :
தந்தை துர்லபராஜாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இவருக்கு குவகா என்ற பெயரும் உண்டு. இவர் குர்ஜர அரசர் இரண்டாம் நாகபட்டாவின் கீழ் சிற்றரசராக இருந்தார். இவர் ஹர்ஷநாதா கோயிலை கட்டினார்.
இரண்டாம் சந்திர ராஜா (கி.பி.836-863) :
தந்தை கோவிந்த ராஜாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவருடைய அரசை பற்றி தகவல்கள் எதுவும் இல்லை.
இரண்டாம் கோவிந்தராஜா (கி.பி.863-890) :
தந்தை இரண்டாம் சந்திர ராஜாவுக்கு பின்னர் அரியணை ஏறிய இவருக்கு இரண்டாம் குவகா என்ற பெயரும் உண்டு. இவர் மிகச்சிறந்த வீரர். இவரது சகோதரியான கலாவதியை மணக்க 12 அரசர்கள் விருப்பப்பட்டனர். இவர் அவர்களை போரில் தோற்கடித்தார் என்றும் தன் சகோதரியை கன்யகுப்ஜா (கன்னோஜ்-கன்னோசி) அரசரான பிரதிஹர சக்கரவர்த்தி முதலாம் போஜா (மிகிர போஜா) வுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதன் மூலம் பிரதிஹரர்களுடன் திருமண உறவு கொண்டனர்.
சந்தன ராஜா (கி.பி.890-917) :
இரண்டாம் கோவிந்தராஜாவுக்கு பின்னர் அவரது மகனான சந்தன ராஜா ஆட்சிக்கு வந்தார்.
இவர் தோமரர்களின் வம்சத்தை சேர்ந்த ருத்ரா என்பவருடன் போரில் ஈடுபட்டு அவரை கொன்று குவித்தார். பின்னர் இவரது பேரனான சிம்ஸராஜாவும் அதே இனத்து அரசனை பின்னாளில் போரில் வீழ்த்தினார். இவர் ராணியான ருத்ரானி அவரது யோக சக்தியினால் "அத்மபிரபா" என்று அழைக்கப்பட்டார்.
வாக்பதி ராஜா (கி.பி.917-944) :
சந்தன ராஜாவுக்கு பின்னர் வந்த இவர் அவரின் மகன். முதலில் மஹாராஜா என்று அழைக்கப்பட்ட சாஹம்பரி அரசர் இவரே. இந்த நேரத்தில் குர்ஜர - பிரதிஹரர்கள் இராஷ்டிரகூடர்களால் பலவீனப்பட்டு இருந்தனர். இவர் 188 போர்களில் கலந்து கொண்டார் என்று சொல்லுவது மிக அதிகமாக தெரிந்தாலும் எண்ணற்ற போர்களில் ஈடுபட்டார் என்பதே உண்மை. இராஷ்டிரகூடர்களுக்கு எதிராக குர்ஜர-பிரதிஹரர்கள் சார்பாக போரிட்டார். இந்த போர்கள் குர்ஜர -பிரதிஹரர்களை மிகவும் பலவீனப்படுத்தி தங்களது சிற்றரசர்களை கூட கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போனது. இதனால் இவர் தனியாட்சி அறிவித்து தன்னை மஹாராஜா என்று அறிவித்து கொண்டார். இராஷ்டிரகூடர் சென்றவுடன் பிரதிஹர அரசர் தனது அரசை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பிரதிஹர அரசர் முதலாம் மஹிபாலா தனது தளபதி ஷாமாபாலா (மாதவா என்றும் சிலர் கூறுகின்றனர்) தலைமையில் வாக்பதியை எதிர்த்து தன் யானைப் படையுடன் போரிட வாக்பதி ராஜா தனது குதிரை படையால் அவரை விரட்டி வெற்றி கொண்டார். இவர் புஷ்கரில் வாமகேஷா என்ற சிவன் கோயிலை கட்டினார். இவருக்கு சிம்ஹராஜா, லக்ஷ்மணா மற்றும் வத்ஸராஜா என்ற மூன்று மகன்கள் உண்டு.இவரின் இரண்டாவது மகன் லக்ஷ்மணா தான் நெடுல்லா சாஹ்மனா பிரிவை ஆரம்பித்து வைத்தவர்.
சிம்ஹராஜா (கி.பி.944-971) :
இவர் தன்னை மஹாராஜாதிராஜா என்று அழைத்துக்கொண்டு தனியரசராக ஆட்சி புரிந்தார். இன்றைய இராஜஸ்தான் பகுதியில் இவரது அரசு இருந்தது. குர்ஜர பிரதிஹரர்களிடமிருந்து சுயாட்சியாக ஆண்டார். இவர் தோமரா ஆட்சியாளர் சாலவனா (லவனா) என்பவருடன் நடந்த போரில் அவரை கொன்று அவரின் வீரர்களை சிறை பிடித்தார். சிறை பிடித்த வீரர்களை மன்னித்து பின்னர் விடுதலை செய்து அவர்களின் நாட்டுக்கு அனுப்பினார். இந்த சால்வனா டெல்லியை ஆண்ட தோமரர்களின் வம்சத்தவராக இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர் மேலும் ஹேஜி-யூதீன் என்ற முஸ்லீம் தளபதியை போரில் வீழ்த்தி அவரது யானைகளை கைப்பற்றினார். இவர் முல்தானின் அமீர்களின் தளபதியாக இருக்கலாம். இவர் குஜ்ரதா, லத்தா, கர்நாடக, சோழா மற்றும் அங்க அரசர்களை வென்றார் என்று கூறப்பட்டாலும் இது அவரின் மேன்மையை கூற உயர்த்தி கூறப்பட்டதாகவே நம்பப்படுகிறது. ஆனாலும் இவர் பக்கத்து ராஜ்யங்களில் மீது படையெடுத்து தன்னுடைய மேலாண்மையை உருவாக்கினார். இவரும் இவரது தந்தையை போலவே சைவத்தை பின்பற்றினார். புஷ்கராவில் பெரிய சிவன் கோயிலை கட்டினார். இவர் ஹர்ஷதேவா கோயிலை விரிவாக்கம் செய்து அதன் செலவிற்காக நான்கு கிராமங்களை எழுதிக் கொடுத்தார். இவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். இரண்டாம் விக்ரஹராஜா மற்றும் இரண்டாம் துர்லபராஜா ஆகியோர் இவருக்கு பின்னர் அரசாண்டனர். அது மட்டுமல்லாது மேலும் சந்திரராஜா மற்றும் கோவிந்த ராஜா என்ற மகன்களும் உண்டு. இவரின் கடைசி காலத்தில் இவர் இவரது எதிரிகளான பிரதிஹரர்களுடன் நடந்த போரில் மோசமாக தோற்று போனார் என்றும் கூறுகின்றனர்.
இரண்டாம் விக்ரஹராஜா (கி.பி.971-998) :
தந்தை சிம்ஹராஜாவுக்கு பின்னர் ஆட்சியேறினார். இவரது ஆட்சியில் நிறைய போர்கள் நடந்தது. இவரிடம் பெரிய குதிரைப்படை இருந்தது. இவர் குஜராத் சாளுக்கிய சோலங்கி வம்சத்து அரசர் மூலராஜாவை தோற்கடித்தார். இந்த போரினால் மூலராஜா கண்ட்காட் ஒடி ஒளிந்ததாக கூறப்பட்டாலும் சிலர் இந்த போரினால் தான் இளைய வயதில் மூலராஜா மறைந்தார் என்றும் கூறுகின்றனர். பின்னர் இவர் தெற்கு குஜராத்தின் லத்தா பகுதியை ஆண்ட சந்திர வம்ச அரசரை வென்று அடக்கினார். இந்த வெற்றியினால் ஆஷாபுரி தெய்வத்திற்கு நர்மதையின் கரையில் பிருகுகச்சா (இன்றைய பரூச்) நகரில் கோயில் கட்டினார். ஆனால் அந்த நேரத்தில் லத்தா பகுதி கல்யாணி சாளுக்கியர் ஆட்சியில் இருந்ததால் இவர் அடக்கியது சாளுக்கிய அரசர் பாரப்பாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் அஜ்மீர் சிற்றரசருடன் இணைந்து கி.பி.997ல் சபுக்தேசின் என்றழைக்கப்படும் கஜினி முஹம்மதுவை விரட்டினார் என்று கூறப்பட்டாலும் அது உண்மையில்லை என்றே அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கஜினி முஹமது கி.பி.1001ஆண்டு முதலே இந்தியா மீது படையெடுக்க ஆரம்பித்தார் என்றும் இவர் அதற்கு முன்பே மறைந்து விட்டதாலும் எந்தவித குறிப்புகளும் இவர்களின் மோதலை பற்றி இல்லை என்பதாலும் இது தவறான செய்தி என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இவருக்கு பின்னர் இவரது சகோதரரான இரண்டாம் துர்லப ராஜா ஆட்சிக்கு வந்தார். சகோதரர்கள் இருவரையும் இராம-இலட்சுமண மற்றும் கிருஷ்ண-பலராம சகோதரர்களுக்கு ஒப்பானவர்கள் என்று கூறுவதிலிருந்து சகோதரர்கள் இருவரும் நல்ல நட்புணர்வுடன் இருந்தனர் என்று தெரிகிறது.
இரண்டாம் துர்லபராஜா (கி.பி.998-1012) :
சகோதரருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். இவர் மஹாராஜாதிராஜா பட்டத்தை சூடிக் கொண்டார். இவரது பட்டங்களிலிருந்து எதிரிகளும் இவருக்கு பணிந்து நடந்தனர் என்று தெரிகிறது. இவர் ரோதக் மாவட்டத்தை தோமரா அரசரிடமிருந்து கைப்பற்றினார். கி.பி.1008ல் அனந்தபாலாவுடன் இணைந்து கஜினி முகமதுவை எதிர்கொண்டாலும் அடுத்தடுத்து கஜினியின் படையெடுப்புகளை தடுக்க முடியவில்லை.
மூன்றாம் கோவிந்தராஜா (கி.பி.1012-1026) :
இவர் சகோதரரான இரண்டாம் துர்லபராஜாவுக்கு பின்னர் அரியணை ஏறினார். இவருக்கு வைரி- கரட்டா (எதிரிகளை நசுக்குபவர்) என்ற விருதுபெயர் உண்டு. கி.பி.1024ல் கஜினி முகமது இவரின் அஜ்மீர் நகரத்தின் மீது படையெடுத்த போது அவரை தோற்கடித்து விரட்டினார் என்று சொல்லப்படுகிறது. வரலாற்று அறிஞர் ஃபிரிஷ்டா கஜினி முகமது கி.பி.1024ல் டிசம்பரில் முல்தானை அடைந்து பின்னர் அஜ்மீர் வந்தார். அந்த நேரத்தில் ஊரிலுள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே காலி செய்து விட்டு போய்விட்டதால் கொள்ளையடிக்க ஒன்றுமில்லாமல் குஜராத் பக்கம் தன் பார்வையை திருப்பி சோம்நாத் கோயில் மற்றும் துவாரகா கோயில் ஆகியவற்றை கொள்ளையடித்து திரும்பினார் என்று கூறுகின்றார். இந்த நேரத்தில் இந்து அரசர்கள் அவரை எதிர்க்க கூட்டணி படையாக இருந்ததால் அவர் சிந்துவின் வழியாக முல்தானுக்கு திரும்பினார் என்றும் கூறுகிறார்.
இரண்டாம் வாக்பதி ராஜா (கி.பி.1026-1040) :
இரண்டாம் கோவிந்தராஜாவுக்கு பின்னர் ஆட்சியேறிய இவர் அவரின் மகன். இவர் வல்லபா என்ற படட்த்தினால் அழைக்கப்படுகிறார். இவர் அஹதாவை (இன்றைய அஹர்) ஆண்ட அம்பபிரசாதாவை போரில் வீழ்த்தினார். இவர் மாள்வாவை ஆண்ட பரமர அரசர் போஜாவை வெற்றி கொண்டார் என்று கூறுவது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
வீர்யராமா (கி.பி.1040) :
இரண்டாம் வாக்பதி ராஜாவுக்கு பின்னர் அவரது மகனான இவர் ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்த ஆரம்பத்திலையே மாள்வாவின் பரமரர்களின் அரசர் போஜா சாம்பார் ஏரி நகரான இவரது தலைநகரை கைப்பற்றினார். இந்த போரில் இவர் கொல்லப்பட்டார்.
சாமுண்டராஜா (கி.பி.1040-1065) :
சகோதரர் வீர்யராமா மறைவுக்கு பின்னர் தலைநகரை வீர்யராமாவின் ஆட்சியில் இழந்தவுடன் இவர் நெடுல்லா சாஹ்மனாக்களின் உதவியுடன் சாஹம்பரி (இன்றைய சாம்பார் ஏரி உள்ள நகரம்) யை மீட்டுக்கொள்ள போர்தொடுத்தார். இதில் போஜாவின் தளபதியான சதாவை கொன்று சாம்பார் நகரை கைப்பற்றினார். நிறைய புத்தகங்களின் குறிப்புகளில் இவர் முஸ்லீம் படையெடுப்பை வீழ்த்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது பக்கத்து இராஜ்யமான கஜினி இருந்ததால் அவர்களின் படையெடுப்புகளை அத்துமீறல்களை தடுத்து விரட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் நரபுரா (இன்றைய நார்வார் - அஜ்மீர் மாவட்டம்) நகரில் விஷ்ணு கோயிலை கட்டினார்.
மூன்றாம் துர்லபராஜா (கி.பி.1065-1070) :
இவர் சாமுண்ட ராஜாவின் மகன். இவர் துசாலா என்றும் அழைக்கப்பட்டவர். இவர் குஜராத்தின் சாளுக்கிய சோலங்கி அரசர் கர்ணாவை போரில் தோற்கடித்தார். இவர் முஸ்லீம்களின் படையெடுப்பில் இறந்து போனார். அது கஜினி முஹமதுவின் பேரனான இப்ராஹிம் என்பவரின் படையெடுப்பில் தான் என்று கூறுகின்றனர்.
மூன்றாம் விக்ரஹராஜா (கி.பி.1070-1090) என்ற விசாலா :
மூன்றாம் துர்லப ராஜாவின் சகோதரனான இவர் அவரின் மரணத்திற்கு பின்னர் ஆட்சி ஏறினார். இவர் மாளவத்தின் பரமர அரசரான போஜாவின் மகளை திருமணம் செய்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர் பதவியேற்றபோதே போஜா மறைந்து 25 வருடங்களுக்கு மேலாகிவிட்டதால் போஜாவின் சகோதரர் உதயாதித்யாவின் மகளாக இருக்கும் என்று கூறுகின்றனர். இருவரின் இணைப்பினால் உதயாதித்யா சோலங்கி அரசர் கர்ணாவை போரில் தோற்கடித்தார். இவர் மாளவத்தின் அமைதிக்கு உதவினார். உஜ்ஜையினி சிவனை வழிபட உஜ்ஜையினி சென்றார். இவரது ஆட்சியில் மாளவத்தின் முஸ்லீம் ஆட்சியாளரை வென்றார் கூறப்படுவது தவறு. மாளவத்தின் மீது படையெடுத்து வந்த கஜினியின் பேரன் இப்ராஹிம்மின் தளபதியான சகாப்பூதின் என்பவரை தான் வென்றார் என்று கூறுகின்றனர்.
முதலாம் பிரித்விராஜா (கி.பி.1090-1110) :
தந்தை விக்ரஹராஜாவுக்கு பின்னர் ஆட்சியேறிய இவர் அவரின் மகன். இவரது ஆட்சியில் புஷ்கர தீர்த்தத்தில் 700 சாளுக்கியர்கள் பிராமணர்களை கயிற்றினால் கட்டிவைத்தனர். சாளுக்கியர்களை வென்று கொன்று பிராமணர்களை மீட்டார். இந்த நிகழ்வு கர்ணா அல்லது சித்ராஜ் ஜெயசிம்ஹா ஆட்சியில் நடந்திருக்கலாம். இவர் சைவத்தை பின்பற்றினார். சோம்நாத்தின் யாத்தீரிகர்களுக்காக அங்கே அன்னசத்திரம் அமைத்து உணவு வழங்கினார். மேலும் ரன்தம்போர் சமண கோயிலுக்கு தங்க கலசத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
இரண்டாம் அஜயராஜா (கி.பி.1110-1135) :
முதலாம் பிரித்விராஜாவுக்கு பின்னர் அவர் மகனான இவர் ஆட்சி ஏறினார். இவரது ஆட்சியில் தான் தலைநகரம் சாம்பார் ஏரி நகரிலிருந்து அஜ்மீருக்கு மாற்றப்பட்டது. இவர் ஆட்சியில் அஜ்மீர் விரிவுபடுத்தப்பட்டு சிறந்த நகரமாக முன்னேற்றம் செய்யப்பட்டது. இவரின் ஆட்சியில் கஜினியர்களின் படையெடுப்புகளை தடுத்து நிறுத்தினார் என்றாலும் சில பகுதிகளை அவர்களிடம் இழந்தார். சோலங்கி வம்ச அரசர் சித்தராஜ் ஜெயசிம்ஹாவால் மாளவ அரசு பலவீனப்பட்டு இருந்த சமயத்தில் இவர் மாளவத்தின் பரமரா அரசர் நரவர்மனை தோற்கடித்தார். இதனால் இவரது அரசு உஜ்ஜையினி வரை பரவியது. இவர் கடைசி காலத்தில் தன் மகன் அர்னோ ராஜாவிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு புஷ்கர் ஏரியை ஒட்டிய காட்டு பகுதிக்கு வனவாசம் சென்று விட்டார். இவர் சைவத்தை பின்பற்றினாலும் அஜ்மீரில் சமணர்கள் கோயில் கட்டவும் அனுமதித்தார். பார்வதநாதர் கோயிலுக்கு தங்க கலசம் கொடுத்தார்.
அர்னோ ராஜா (கி.பி.1135-1150) என்ற அனா :
இரண்டாம் அஜயராஜாவுக்கு பின்னர் அவர் மகனான இவர் அரசு ஏற்றார். இவர் டெல்லியை ஆண்ட தோமரர்களை வெற்றிகொண்டார். மேலும் கஜினியர்களின் படையெடுப்பையும் தடுத்து நிறுத்தினார். அவர்களுடனான வெற்றிக்கு பின்னர் அஜ்மீரில் அனாசாகர் என்ற ஏரியை உருவாக்கினார். மேலும் குஜராத் சாளுக்கியர்களான சோலங்கிகளுடான போரில் உடன்பாடு கொண்டு சித்தராஜ் ஜெய்சிங்கின் மகளான காஞ்சனா தேவியை மணந்துக்கொண்டார். பரமரர்களையும் வெற்றி கொண்டார். இவருக்கு குஜராத் சாளுக்கிய இளவரசியான காஞ்சனா தேவியின் மூலம் சோமேஸ்வரா என்ற மகனும் மார்வார் இளவரசி சுதாவா மூலம் ஜக்கதேவா, நான்காம் விக்ரஹராஜா மற்றும் தேவதத்தா என்ற மூன்று மகன்களும் உண்டு. இதில் ஜக்கதேவா தந்தையான அர்னோ ராஜாவை கொன்று அடுத்த அரசராக பதவியில் அமர்ந்தார்.
ஜக்க தேவா (கி.பி.1150) :
மார்வார் இளவரசி சுதாவா மற்றும் அர்னோ ராஜாவுக்கு பிறந்த மூன்று மகன்களுள் மூத்தவரான இவர் தந்தையை கொன்று ஆட்சியை பிடித்தான். இவரை இவரது சகோதரரான நான்காம் விக்ரஹராஜா வீழ்த்தி ஆட்சியை பிடித்தார்.
நான்காம் விக்ரஹராஜா என்ற விசால தேவா (கி.பி.1150-1164) :
இவர் பிசால்டியோ கோயிலை கட்டினார். இவரது ஆட்சியில் தான் சாஹ்மனா அரசர்கள் தோமரர்களிடமிருந்து டெல்லியை கைப்பற்றிக் கொண்டார்கள். இவரின் அரசு இன்றைய இராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. மேலும் பஞ்சாப்பின் சில பகுதிகளும் வடக்கு கங்கை பீடபூமி பகுதிகளிலும் பரவியிருந்தது. இவரது ஆட்சி ஹிமாலயம் முதல் விந்தியம் வரை பரவியிருந்தது. இவரது ஆட்சியில் அஜ்மீரில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பின்னால் வந்த முஸ்லீம்களின் படையெடுப்புகளால் இடிக்கப்பட்டு முஸ்லீம் கட்டிடகலைக்கு மாற்றப்பட்டது. இவரது ஆட்சியில் கட்டப்பட்ட சமஸ்கிருத மையம் பின்னர் அதாய் தின் கா ஜான்புரா மசூதியாக மாற்றப்பட்டது.
அமரா காங்கேயா (கி.பி.1164-1165) :
விக்ரஹராஜாவுககு பின் அவரது மூத்தமகனான இவர் சிறு வயதிலையே பட்டத்திற்கு வந்தார். இவரை இரண்டாம் பிரித்விராஜா தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினார். சிறு வயதில் ஆட்சியேறிய இவர் மைனராக இருந்து சில மாதங்களே ஆண்டதால் திருமணம் ஆகாமல் வாரிசின்றி மறைந்தார்.
இரண்டாம் பிரித்விராஜா (கி.பி.1165-1169) :
அமரா காங்கேயாவுக்கு பின் வந்த இவர் அவரின் உறவினர். அர்னோராஜாவின் மகனா என்ற சந்தேகமும் உள்ளது. ஆனால் இவர் நான்காம் விக்ரஹராஜாவின் சகோதரரான ஜக்கதேவாவின் மகன். இவர் அமர காங்கேயாவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தார். இவர் லாகூரை ஆண்ட கஜினி வம்சத்து குஷ்ரூ மாலிக்கை தோற்கடித்து விரட்டினார். இவரிடம் பஞ்சபுரா நகரத்து அரசன் இவரின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டார். இவரது அரசி சுஹாவாதேவி. இவர் சைவத்தை பின்பற்றினார். இவர் பிராமணர்களுக்கு நிறைய கிராமங்களையும் பரிசுகளையும் கொடுத்தார். மேலும் பார்வதநாதர் சமண கோயிலுக்கு மோரஜ்ஹாரி கிராமத்தை தானமாக எழுதிக் கொடுத்தார். இவர் வாரிசின்றி மறைந்ததால் இவருக்கு பின் அர்னோராஜாவின் மூத்த மகனான குஜராத் இளவரசிக்கு பிறந்த சோமேஸ்வரா ஆட்சிக்கு வந்தார்.
சோமேஸ்வரா (கி.பி.1169-1177) :
இவர் அர்னோராஜாவின் மகன் .இரண்டாம் பிரித்விராஜாவுக்கு பின் ஆட்சிக்கு வாரிசு இல்லாததால் அவரது உறவினர்கள் அர்னோராஜா-சோலங்கி வம்சத்து இளவரசியின் மகனான சோமேஸ்வராவை குஜராத் சென்று அழைத்து வந்து அரியணையில் ஏற்றினர். இவரது மகன் தான் மாவீரர்களுள் ஒருவராக மதிக்கப்படும் புகழ்பெற்ற பிரித்விராஜ் செளகான். சோமேஸ்வரா ஆட்சியில் அஜ்மீரில் நிறைய சிவன் கோயில்கள் கட்டப்பட்டன. இவர் காலச்சூரிகளின் அரசர் நரசிம்ஹ தேவாவின் மகளான கற்பூர தேவியை மணந்தார். இவருக்கு பிரித்விராஜ் செளகான் மற்றும் ஹரிராஜா என்ற இரு மகன்கள் இவர் குஜராத்தில் இருக்கும்போது பிறந்தனர். இவர் சைவராக இருந்தாலும் சமணர்களையும் மதித்து பார்வதநாதர் கோயிலுக்கு ரேவனா கிராமத்தை எழுதி வைத்தார். இவர் சோலங்கி சாளுக்கியர் இரண்டாம் பீமாவுடன் நடந்த போரில் இறந்து போனார். சோலங்கி அரச குடும்பத்தை சேர்ந்தவர் அவர்களின் ஆதரவில் இருந்தவர் மேல் சோலங்கி அரசனுக்கு என்ன கோபம் இருக்க முடியும்? இந்த நிகழ்வு தவறாக குறிப்பிடப்பட்டு இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மூன்றாம் பிரித்விராஜா (கி.பி.1177-1192) :
தந்தை சோமேஸ்வராவுக்கு பின்னர் ஆட்சி ஏறினார்.இவர் தான் சரித்திரத்தில் மஹாவீரனாக அறியப்படுபவர். பிரித்விராஜ் செளகான் என்ற பெயரில் அறியப்படுபவர். இவர் தனது 13 வயதிலையே அரசராக பதவியேற்றார். இவர் ஆறு மொழிகளில் சிறந்த புலமை வாய்ந்தவராக இருந்தார். இவர் சந்தலர்களை வென்றார். கி.பி.1187ல் குஜராத் சோலங்கி அரசனான இரண்டாம் பீமராஜனுடன் நடந்த போரில் அவரின் தளபதியான ஜகதேவாவுடன் உடன்படிக்கை கொண்டார். டெல்லி சிம்மாசனத்தில் ஏறிய பின் அங்கே கிலா ராய் பித்தோராவைக் கட்டினார். இவரது ஆட்சி வடக்கே தானேஷ்வர் முதல் தெற்கே ஜகாஷ்பூர் (மேவார்) வரையும் பரவியிருந்தது. முதலாம் தரெய்ன் போரில் கி.பி.1191ல் முகமது கோரியை வென்றார். அவரை பிடித்து பின்னர் மன்னித்து விடுவித்தார். பின்னர் கி.பி.1192ல் இரண்டாம் தரெய்ன் போரில் முகமது கோரியை இவரை வென்று சிறைபிடித்து சித்திரவதை செய்து கொன்றார்.
ஒலியை வைத்து அதன் திசையை அம்பு கொண்டு தாக்கும் "சப்தேபி பான்" என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் கலையில் தேர்ந்தவர். இவர் பக்கத்து எதிரி மன்னனான ஜெயசந்திரனின் மகளான சமயுக்தாவை காதலித்து சுயம்வர மண்டபத்தில் அவரை குதிரையில் சென்று சம்யுக்தாவை கடத்தி சென்று மணந்தார் என்றும் சரித்திர நிகழ்வுகள் தெரிவித்தாலும் அப்படி ஒரு நிகழ்வு சரித்திரத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடை சொருகல் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
மேலும் இவரின் கண்களை குருடாக்கி கோரி முகம்மது ஆணையிட்டபடி அவருக்கு நெஞ்சுக்கு அம்பு விட்டு அவரை கொன்று இவரும் தன்னை தானே மாய்த்து கொண்டார் என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அப்பட்டமான கடைந்தெடுத்த பொய். பிரித்விராஜன் இறந்தது கி.பி.1192ல் கோரி முகமது இறந்தது கி.பி.1206ல். அதுவும் கோரி இறந்தது இன்றைய பாகிஸ்தானின் இராவல்பிண்டி அருகேயுள்ள தாமியாக் என்ற கிராமத்தில் தொழுகையின் போது வெட்டிக்கொல்லப்பட்டார். பிறகு எப்படி பிரித்விராஜன் கோரி முகமதுவை கொன்றிருக்கமுடியும்? இதெல்லாம் பிரித்விராஜ்ஜை உயர்த்தி கூறுவதற்காக சொல்லப்பட்ட கதைகளுள் ஒன்று.
நான்காம் கோவிந்தராஜா (கி.பி.1192) :
இவர் முஸ்லீம்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டதால் பிரித்விராஜாவின் சகோதரர் ஹரி ராஜா நாட்டைவிட்டு வெளியேறி தனது பூர்வ அரசை ஆரம்பித்தார்.பின்னர் கி.பி.1194ல் ஹரிராஜா கோரியால் வீழ்த்தப்பட்டு அவருடைய அரசையும் இவர்களுடன் இணைத்தார். இவ்வாறு "ரணஸ்தம்பபுரா சாஹ்மனா" என்ற கிளை பிரிவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஹரி ராஜா (கி.பி.1193-1194) :
பிரித்விராஜ்ன் சகோதரர். பிரித்விராஜ் மகன் கோரிக்கு கட்டுப்பட்டதை பொறுக்கமுடியாமல் நாட்டை விட்டு வெளியேறி பூர்வ அரசை தோற்றுவித்து பின்னர் கி.பி.1194ல் கோரியால் வீழ்த்தப்பட்டார்.
உதவிய நூல்கள் :
மத்தியகால இந்தியா - சதீஷ் சந்திரா
மொகலாயர்கள் - முகில்
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
விக்கிபீடியா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்


Comments
Post a Comment