36) இராஜபுத்ரர்கள் - குஹிலா வம்சம்

இராஜபுத்ரர்கள் - குஹிலா வம்சம் (Guhilot Dynasty) (கி.பி.569-1303) :

இவர்கள் மேவார் அரசை தோற்றுவித்த இராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர்களாவர். ஆரம்பத்தில் இவர்கள் காஷ்மீரில் தங்களது சிற்றரசை ஆரம்பித்து பின்னர் கி.பி.6ம் நூற்றாண்டில் குஜராத்திற்கு இடம்பெயர்ந்து பின்னர் கி.பி.7ம் நூற்றாண்டில் மேவாருக்கு இடம்பெயர்ந்தனர். பின்னர் அங்கிருந்து மகதம் வரை விரிவுபடுத்தினர். இராஜ்புத்ரர்கள் என்பதற்கு "இராஜாவின் மகன்கள்" என்று அர்த்தமாகும். இவர்கள் மேவாரை சேர்ந்த சித்தூரை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தனர். கி.பி.6ம் நூற்றாண்டிலையே அரசு ஆரம்பித்திருந்தாலும் (குஹில்) அவர்களின் தனியரசை பப்பா ராவல் என்பவரே ஆரம்பித்தவராக கருதப்படுகிறார். அலாவூதின் கில்ஜியால் கி.பி.1303 ல் இந்த வம்சம் அழிக்கப்பட்டவுடன் மீண்டும் சிதோதயா வம்சமாக கி.பி.1327 ல் மீண்டும் இன்னொரு கிளை மேவாரை ஆண்டது. 

புஷ்பாவதி (கி.பி.550's) :

குஹில் (கி.பி.569-603) :

இவர் தான் குஹிலா வம்சத்தை ஆரம்பித்தவராக கருதப்படுகிறார். இவர் வல்லபி (குஜராத்) ஆண்ட அரசர் ஆறாம் சிலாதித்யாவின் வழி தோன்றலாக கருதப்படுகிறார். இவரது தாயாரான புஷ்பாவதி புனித யாத்திரையில் இருந்த சமயத்தில் வல்லபி நகரம் படையெடுப்புகளால் அழிந்தது. அந்த நேரத்தில் இவர் குழந்தையாக தாயின் அரவணைப்பில் புனித யாத்திரையாக வெளியூர் சென்றதால் தப்பித்தார் என்றும் பின்னர் தாயின் உதவியால் தனது அரசை நிர்மாணித்தார். இவர் இன்றைய குஜராத்தின் ஆனந்த் நகரில் பிறந்தவரானாலும் தன்னுடைய அரசை நக்டா (இன்றைய உதய்பூர் அருகில்) ஆரம்பித்தார். 

போஜ் (கி.பி.603-615) :

குஹிலாவுக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்தவர் இவரே. இவர் போஜாதித்யா என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். அபு மலை கல்வெட்டுகளில் இவர் விஷ்ணுவின் பக்தர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இவரது ஆட்சியின் தாமிரகாசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஏக்லஞ்சி கோயில் இருக்குமிடத்திற்கு அருகில் ஒரு அணையை கட்டினார்.

முதலாம் மஹேந்திரா (கி.பி.615-625) :

போஜ்க்கு பிறகு முதலாம் மகேந்திரா ஆட்சிக்கு வந்ததை அஹத்பூர் கல்வெட்டுகள் குறிப்பிட்டுள்ளன.

நாஹாதித்யா (கி.பி.625-646) :

முதலாம் மஹேந்திராவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்ததை அஹத்பூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவரே இன்றைய நக்டா (பழைய பெயர் நக்ரதிஹா) உருவாக்கினார் என்றும் இவர்கள் பில் பழங்குடியினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார். இவரது ஆட்சியில் நக்டா மேவாரின் தலைநகரமாகவும் வணிக மையமாகவும் விளங்கியது.

சிலாதித்யா (கி.பி.646-661) :

நாஹாதித்யாவுக்கு பின்னர் ஆட்சி ஏறினார். இவர் எதிரிகளை வீழ்த்தினர்,கடவுளிடம் பக்தி கொண்டவர் மற்றும் பிராமணர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மிகுந்த மரியாதை கொண்டவர் என்று சிமோலி கல்வெட்டு கூறுகிறது. இவர் ஆரண்யவாசினி (காட்டு தேவதை) கோயிலை கட்டினார். இவரது ஆட்சியில் தான் ஜாவாரில் தாமிரம் மற்றும் துத்தநாகம் சுரங்கங்கள் தோண்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இதனால் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்தது.

அபராஜி (அல்லது) அபராஜித் (கி.பி.661-688) :

சிலாதித்யாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். நக்டாவிலுள்ள குண்டேஷ்வர் கோயிலில் இவரை பற்றிய கல்வெட்டு செய்திகள் கிடைத்துள்ளது. இவர் எதிரிகளை எல்லாம் தோற்கடித்து தனக்கு அடிபணிய வைத்ததாக கூறப்பட்டுள்ளது.இவர் வராஹசிம்ஹா என்பவரை தோற்கடித்து தனக்கு தளபதியாக ஆக்கி கொண்டார் என்று வராஹசிம்ஹாவின் மனைவியான யசோமதி என்பவர் தான் கட்டிய விஷ்ணு கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் மஹேந்திரா (கி.பி.688-716) :

இவரே பப்பா ராவலின் தந்தை. அபராஜித்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். படையெடுப்புகளாலும் போர்களாலும் இவரை பற்றிய தகவல்கள் அழிந்து விட்டது. இவர் இடரின் (Idar) பில் பழங்குடியினரை எதிர்த்து நடத்திய போரில் கொல்லப்பட்டார் என்றும் இவரது மனைவியும் பச்சிளங்குழந்தை கல்போஜ் (பப்பா ராவல்) ஆகியோர் பிராமண பெண்ணின் பாதுகாப்பில் வளர்த்தனர்.

பப்பா ராவல் (கி.பி.728-753) :

இவரது இயற்பெயர் கல்போஜ் என்பதாகும். இவரது தந்தை இரண்டாம் மஹேந்திரா மற்றும் உறவினர்களை எல்லாம் இடரின் பில் வம்சத்தினர் போரில் கொன்றனர்.   இவர் மற்றும் இவரது தாய் ஆகியோர் இவரிடம் மாடுகளை பாதுகாத்து வந்த பிராமண பெண்ணின் பாதுகாப்பில் இருந்தனர். மஹரிஷி ஹரித் ராஷி இவருக்கு குருவாக இருந்தார். பின்னர் ஏக்லஞ்சிநாத்தின் அருள் பார்வை கிடைத்து இவரது தந்தையை கொன்றவர்களை பழி வாங்கினார்.  இவர் சித்தூரை ஆக்ரமித்திருந்த மான்மோர்ய (மெளரிய) வம்சத்தினரை கி.பி.728ல் விரட்டியடித்து சித்தூரை கைப்பற்றினார். சிலர் ஆரம்பத்தில் இவர் மான்மோர்ய அரசர் மனுராஜாவின் கீழ் சிற்றரசராக இருந்து அவரை வீழ்த்தி ஆட்சியை பிடித்தார் என்றும் சிலர் வாரிசின்றி மான்மோர்யா அரசர் இறக்கவும் இவர் சித்தூரின் ஆட்சியை கைப்பற்றினார் என்றும் கூறுகின்றனர். சிலர் பப்பா ராவல் காஷ்மீர் அரசர் லலிதாத்யாவின் சிற்றரசராக இருந்தார் என்றும் கூறுகின்றனர். இன்றைய சித்தூர் கோட்டையை (சித்ரகூடா) நிர்மாணித்தவர் இவரே. இந்த வெற்றியின் நினைவாக மேவாரின் ராஜ்ஜியத்தில் ஏக்லன்ஞி கோயிலை கட்டினார்.மேலும் தனது ஆட்சியில் நாகப்பட்டா மற்றும் ஜெயசிம்மா ஆகியோருடன் மூவர் கூட்டணியாக கி.பி.738ல் இன்றைய ஈரானிலிருந்து படையெடுத்து வந்த முகமது பின் காசிம்மின் படைத்தலைவர் இமிர் ஜூனைத் என்பவரை போரில் கொன்று  முஸ்லீம்களின் படையெடுப்புகளை இராஜஸ்தானிலிருந்து விரட்டியடித்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு தனது ஆட்சியில் ஒவ்வொரு 100 கி.மீ. தூரத்திற்கும் 1000 வீரர்களை எல்லை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தார்.  இன்றைய ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி நகரை 15 முறைக்கு மேல் படையெடுத்து சென்று தாக்கியுள்ளார்.  மேற்கு ராஜ்ஜியங்களான சிந்து, பலூசிஸ்தான், கஜினி, கந்தேர் இராஜ்ஜியங்களையும் வென்று தன் அரசில் இணைத்து கொண்டார். இன்று பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரம் இவர் பெயரிலிருந்து தான் உருவானது.

ராவல் குமான் (கி.பி.753-773) :

பப்பா ராவலுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இவர் அவரின் மகன். கி.பி.755ல் மாளவத்தை ஆண்ட அரசரான குகூடேஷ்வர் என்பவரை தோற்கடித்தார். பின்னர் இவர் இராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கோவிந்தனிடம் தோல்வியுற்று சித்தூர் மற்றும் தனோபா நகரங்களை இழந்தார்.

ராவல் மாதத் (கி.பி.773-793) :

குமானுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவர் இவரது வெற்றிகளால் குறிப்பிடப்படுகிறார். மாளவத்தை ஆண்ட பிரதிஹர அரசர் வத்ஸராஜாவுடன் நடத்திய போர்களில் வெற்றிகளை குவித்தார்.

ராவல் பார்த்ரி பட் (கி.பி.773-813) :

மாதத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். மேவாரில் கிடைத்த கல்வெட்டுகளின் படி இவரது பெயரை பார்த்பட், பாரத்பட் மற்றும் பார்தபாட் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனான சின்ஹா இவருக்கு பின்னர் மேவாரின் ஆட்சிக்கு வந்தார். இளைய மகனான இஷான் பாட் சத்சுவில் (இன்றைய ஜோத்பூர்) புது ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.


ராவல் சின்ஹா (கி.பி.813-828) :

இவர் தந்தை பார்த்ரி பாட்டிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த மூத்த மகன். இவரது காலத்தில் பிரதிஹரர்கள் மிகுந்த வலிமையுடன் இருந்தனர். பிரதிஹர அரசர் முதலாம் போஜா சித்தூரை கைப்பற்றி இவரிடம் திரும்ப அரசை ஒப்படைத்தார். இவர் அவருக்கு கட்டுப்பட்ட சிற்றரசராக இருந்தார்.

ராவல் இரண்டாம் குமான் (கி.பி.828-853) :

தியோராஜ் என்பவர் லோடர்வாவை தலைநகராக கொண்டு ஜெய்சால்மர் இராஜவம்சத்தை ஆரம்பித்து வைத்தார். இவர் இரண்டாம் குமானின் மகன்களில் ஒருவராக இருக்கலாம். இவரின் ஆட்சியில் 24 முஸ்லீம்களின் படையெடுப்புகளை முறியடித்து விரட்டினார். மேவாருக்கு பொற்காலம் என்று இவரின் ஆட்சியை கூறுவார்கள். இவரது ஆட்சியில் பிரதிஹரர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டார்.

ராவல் மஹாயக் (கி.பி.853-878) :

இரண்டாம் குமானுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சியில் மேவார் ராஜ்ஜியம் மிகவும் குறுகலாயிற்று. பிரிதிஹரர்கள் மற்றும் இராஷ்டிரகூடர்கள் மிகவும் வலிமையுடன் இருந்தனர். மேவாரை சுற்றியுள்ள பகுதிகளில் அவர்கள் வலிமையுடன் இருந்ததால் மேவார் ஒரு பாதுகாப்பற்ற நிலையிலையே இருந்தது.

ராவல் மூன்றாம் கும்மானா (கி.பி.878-926) :

மஹாயக்கிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்தவர் இவர். இவரது காலத்தில் மேவார் இராஜ்ஜியம் தனது எல்லைகளை வலிமைப்படுத்தியது. இவர் துலாபாரமாக தங்கத்தையும் கடவுளுக்கு வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.

ராவல் இரண்டாம் பத்ராபத் (கி.பி.926-951) :

இவர் மூன்றாம் கும்மானாவின் மகன். இவர் மஹாராஜ் தீரஜ் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார். தீரஜ் என்ற பெயர் இந்திராதித்ய தேவா கோயிலுக்கு நன்கொடை கொடுத்த விவரத்தில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.  இராஷ்டிரகூட இளவரசி மஹாலெக்ஷ்மியை மணந்தார். இவர் காலத்தில் இராஷ்டிரகூடர்கள் வலிமையுடன் இருந்தனர். மேலும் இவர் இராஷ்டிரகூட இளவரசியை மண்ந்ததால் தனது வலிமையை அதிகரித்துக் கொண்டார்.

ராவல் அல்லட்டா (கி.பி.951-963) :

இவர் இரண்டாம் பத்ராபத்தின் மகன். ஹீன இளவரசி ஹரியாதேவியை மணந்தார். இவர் அல்லு ராவல் என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் கன்னோசியை ஆண்ட பிரதிஹர அரசர் தேவ்பாலாவை போரில் கொன்றார். இவரின் ஆட்சியின் தொடக்கத்திலையே இவர் மால்வாவின் பரமரா அரசரான முஞ்சராஜாவால் சித்தூரிலிருந்து விரட்டப்பட்டார். பின்னர் அல்லத் ஆரம்பகால அஹர் நகரிலிருந்து ஆட்சிபுரிந்தார். முஞ்சராஜாவுககு பின்னர் போஜ ராஜா சித்தூரை ஆண்டார். பின்னர் கி.பி.961 ல் மாள்வாவின் வாக்பதி ராஜா மேவாரை ஆண்டார். கி.பி.963ல் அல்லத் மறைந்தவுடன் அரசை ஆள மன்னர் இல்லாததால் தொடர்ச்சியாக எட்டு வருடங்கள் அஹர் நகரம் பரமரர்களின் படையெடுப்புகளுக்கு உள்ளானது. பின்னர் ஒருவழியாக கி.பி.971ல் குஹிலா வமச்த்தின் ஆட்சி தொடங்கியது.

ராவல் நரவன் (அல்லது) நர்வாஹன் (கி.பி.971-973) :

அல்லத்துக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார்.இவரது ஆட்சியில் பாசுபதர்கள் சைவர்கள், சமணர்கள் மற்றும் புத்த மதத்தினர் இவரது முன்னிலையில் சமய விவாதத்தில் கலந்து கொண்டதை லக்குலீஷ் கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. நக்டாவில் உள்ள அலோக்-பார்ஷ்வநாத் கோயிலில் சமண துறவிகள் வாழ்ந்தனர். இவர் சாஹ்மானா வம்சத்து இளவரசியான ஜிஜெயா என்பவரை மணந்தார்.

ராவல் சாலிவாஹன் (கி.பி.973-977) :

நரவாஹனுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சியில் குஹிலாக்களின் பலம் குறைந்து தங்களது அரசை இழக்க ஆரம்பித்தனர். பாவ்நகர், பாலிடனா, ரேவகந்தா, ராஜ்பிப்லா மற்றும் வாலாவில் உள்ள குஹிலாக்கள் இவரது வழிவந்தவர்களே.

ராவல் சக்திகுமார் (கி.பி.977-993) :

 சாலிவாஹனுக்கு பிறகு இவர் ஆட்சிக்கு வந்ததை ஆத்பூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. அஹர் நகரம் இவரால் உருவாக்கப்பட்டதாகவும் இவரது ஆட்சியில் வணிக நகரமாக விளங்கி ஆட்சிக்கு வருவாய்யை அள்ளி தருவதாக இருந்தது. பரமர அரசர் முஞ்சா தனது யானைப் படையுடன் வந்து ஆத்பூரை கைப்பற்றியதால் திரும்பவும் நக்டாவுக்கு தலைநகரை மாற்றினார். பின்னர் இராஷ்டிரகூடர்கள் உதவியுடன் சித்தூரை மீண்டும் கைப்பற்றினார்.

ராவல் அம்பா பிரசாத் (கி.பி.993-1007)‌ :

 சக்திகுமாருக்கு பின்னர் ஆட்சியேறிய அவரது மூத்த மகனான இவர் அம்ரா பிரசாத் என்ற பெயரிலும் குறிக்கப்படுகிறார். இவரின் ஆட்சியின் போது படையெடுத்து வந்த கஜினி முகமதுவை எதிர்த்து போரிட்டார். சாஹம்பரி (சாம்பார்) சாஹ்மானா அரசர் இரண்டாம் வாக்பதியுடன் நடந்த போரில் மேவார் கடுமையாக பாதிக்கப்பட்டது. போரில் இவர் இறந்து போனார். மேவாரை விட்டு பெரும்பாலோனார் மேற்கு இராஜஸ்தானுக்கும் மால்வாவுக்கும் இடம்பெயர்ந்தனர்.

ராவல் சுச்சிவர்மா (கி.பி.1007-1021) :

சக்திகுமாரின் இளைய மகனான இவர் அண்ணன் அம்பா பிரசாத்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவர் ரோஹில்லேஷ்வரர் சுவாமி கோயிலை கட்டினார். இவர் சாளுக்கிய இளவரசியை மணந்தார். இவரது தந்தையின் காலத்தில் இருந்து மாளவ பரமரர்களுடன் மோதல்கள் தொடர்ந்து இருந்தது.

ராவல் நார்வர்மா (கி.பி.1021-1035) :

சுச்சிவர்மனுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சி காலத்தில் பரமரர்கள் மிகுந்த வலிவுடன் இருந்தனர். சித்தூரும் அவர்களது ஆதிக்கத்தில் இருந்தது. பரமர போஜா சித்தூரை தாக்கி கைப்பற்றினார்.

ராவல் கீர்த்தி வர்மா (கி.பி.1035-1051) :

நார்வர்மாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இவர் பரமர அரசர் போஜாவின் கட்டுப்பாட்டில் இருந்தார். இவர் யசோவர்மா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இவர் நார்வர்மாவின் இளைய சகோதரர்.

ராவல் யோக்ராஜ் (கி.பி.1051-1068) :

கீர்த்திவர்மாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். சித்தூரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பரமர அரசர் போஜா இறந்தவுடன் குஜராத் சாளுக்கிய அரசர் முதலாம் பீமா மற்றும் காலச்சூரி அரசர் கர்ணாவும் மால்வாவை தாக்கி கைப்பற்றியதால் பரமர ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சித்தூர் அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டது. இவர் ஆண் வாரிசு இல்லாமல் இறந்து போனார். 

ராவல் பைரத் (அல்லது) வைரத் (கி.பி.1068-1088) : 

யோக்ராஜ் வாரிசில்லாமல் மறைந்தால் அவருக்கு பின்னர் ராவல் அல்லத்தின் இரண்டாவது மகன் பரம்பரையில் வந்த இவர் ஆட்சிக்கு வந்தார்.

ராவல் ஹன்ஸ்பால் (கி.பி.1088-1103) :

வைரத்திற்கு பின்னர் ஆட்சியேறிய ஹன்ஸ்பால், வன்ஸ்பால் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.

ராவல் வைரி சிங் (கி.பி.1103-1107) :

ராவல் ஹன்ஸ்பாலுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார்.  இவர் வலிமையான மேவார் அரசராக கருதப்படுகிறார். இவர் அஹத்பூர் (அஹர்) நகரை திரும்பவும் கைப்பற்றினார். நகருக்கு நுழைவு வாயில் கதவுகள் மற்றும் செக் போஸ்டகள் என்று எல்லா பக்கமும் அமைத்து நகரின் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

ராவல் விஜய் சிங் (கி.பி.1107-1127) :

ராவல் வைரி சிங்கிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவர் மாளவத்தின் பரமர அரசர் உதயாதித்யாவின் மகளான சியாமளா தேவியை மணந்தார். இவரது மகளான அல்லஹான் தேவி சேடி வம்சத்து காயகர்ணதேவ்வை மணந்தார். இவர் சைவ துறவி உனலாச்சார்யாவுக்கு ஒரு கிராமத்தை தானமாக கொடுத்தார்.

ராவல் முதலாம் அரி சிங் (கி.பி.1127-1138) : 

விஜய் சிங்கிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சியில் சித்தூர் மாளவத்தின் பரமர அரசரால் கைப்பற்றப்பட்டது. இவர் சைவர்களின் ஒரு பிரிவான லக்குலிசா பகுதிக்கு (பாசுபதம்) மிகுந்த ஆதரவு கொடுத்தார். அவர்களுக்கு கோயில் கட்டி கொடுத்து அதன் நிகழ்வுகளில் கலந்து கொண்டார் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ராவல் சவுத் சிங் (கி.பி.1138-1148) :

இவரது ஆட்சியில் கல்யாணி சாளுக்கியர்கள் சித்தூரை கைப்பற்றிய பரமரர்களால் மீது போர்தொடுத்தனர். இவர்கள் முதலாம் போஜா காலத்தில் சித்தூரை பரமரர்கள் கைப்பற்றியதிலிருந்து பரமரர்களின் கீழ் சிற்றரசர்களாகவே இருந்தனர். இவர் மேற்கு மேவார் பகுதிகளை ஆண்டார்.

ராவல் விக்ரம் சிங் (முதலாம் விக்கிரமாதித்யா) (கி.பி.1148-1158) :

ராவல் சவுத் சிங்கிற்கு பின்னர் ஆட்சியேறிய இவர் அவரின் மகன். இவரது ஆட்சியில் சோலங்கி சாளுக்கியர்கள் சித்தராஜ் ஜெயசிங் சித்தூரை பரமரர்களிடமிருந்து கைப்பற்றினார். பின்னர் சாஹம்பரி நான்காம் விக்ரஹராஜா சித்தூரை கைப்பற்ற அவரிடமிருந்து மீண்டும் சோலங்கி குமாரபாலா கைப்பற்றி போசாரி என்பவரை சித்தூருக்கு தனது ஆளுநராக நியமித்தார். இவர் சோலங்கி சாளுக்கியரின் கீழ் சிற்றரசராகவே தொடர்ந்தார்.

ராவல் ரான் சிங் (கி.பி.1158-1168) :

இவரின் ஆட்சியின் முடிவில் இந்த அரசு பிளவுபட்டு இவரின் மகன்களில் ஒருவரான ரஹாப் என்பவர் சிதோதய வம்ச கிளையை ஆரம்பித்து வைத்தார். பின்னர் குஹிலாக்கள் வீழ்ச்சிக்கு பின்னர் சிதோதயர்கள் மேவாரின் அரியணையில் அமர்ந்தனர்..  மற்றொரு மகனான மஹான் வம்சாவளியினர் துங்கர்பூர் அரசை தோற்றுவித்தார். ரான்சிங்கின் ஆட்சியில் அஹோர் நகரில் கோட்டை அமைக்கப்பட்டது. 

ராவல் ஸேம்சிங் (கி.பி.1168-1172) :

தந்தை ரான் சிங்கிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார்.  இவர் ராவல் ரான் சிங்கின் இரண்டாவது மகன். மூத்த மகனான மஹான் தந்தையின் ஆட்சி காலத்திலையே அவருக்கு முன்பே மரணமடைந்தால் இவர் அடுத்து ஆட்சிக்கு வந்தார். இவருடைய காலத்திலும் சாளுக்கிய சோலங்கிகள் மேலாதிக்கம் சித்தூரில் தொடர்ந்தது.

ராவல் சமந்த் சிங் (கி.பி.1172-1179) :

இவர் தந்தை ராவல் ஸேம் சிங்கிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவர் குஜராத் சோலங்கி சாளுக்கியரான அஜய்பாலாவை வென்று கிழக்கு மேவார் பிரதேசங்களை திரும்ப மேவார் ராஜ்ஜியத்தில் சேர்த்து கொண்டார். துங்கர்பூர் ஏரியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டார். பின்னர் 7 வருட ஆட்சிக்கு பின்னர் செளகான் வம்சத்தின் கிட்டு சோனகரா என்பவரால் வீழ்த்தப்பட்டார். இதனால் மேவாரை விட்டு வாகடாவுக்கு இடம் பெயர்ந்தார்.

ராவல் குமார் சிங் (கி.பி.1179-1191) :

இவர் முந்தைய அரசர் சமந்த் சிங்கின் தம்பி. அண்ணனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். இவர் குஜராத் சோலங்கி அரசர் உதவியுடன் செளகான் கிட்டு சோனகராவை வீழ்த்தி மேவாரின் ஆட்சியை கைப்பற்றினார். அஹர் மீண்டும் தலைநகரமாயிற்று.

ராவல் மதன் சிங் (கி.பி.1191-1211) :

இவர் மூன்றாம் பிரித்விராஜ்னுடன் சேர்ந்து இரண்டாம் தரெய்ன் போரில் முகமது கோரியை எதிர்த்தார். ஆனால் கோரி முகமது வென்றபின் இவரது இராஜ்யமும் பிற இராஜபுத்ர அரசுகளான அமர் மற்றும் காஹ்தாவாலாவும் டெல்லியின் கீழ் அடங்கியது. பின்னர் கி.பி.1207ல் சித்தூர் மேற்கு சாளுக்கியர்களின் கீழ் வந்தது.

ராவல் பாதம் சிங் (கி.பி.1211-1213) :

மதன் சிங்கிற்கு பிறகு அவரது மகனான இவர் ஆட்சிக்கு வந்தார். இவர் நரசிங்க்பூர் என்னும் கிராமத்தில் வல்குலேஷ்வர் கோயிலை கட்டினார்.இவர் இவரது தந்தை மகன் சிங் காலத்தில் மேவாரின் காவல் தலைவனாக இருந்த உத்ரான் என்பவரின் மகனான யோக்ராஜ் என்பவரை நக்டாவின் தலைவராக நியமித்து பின்னர் மேவாரின் காவல் தலைவராக்கினார். 

ராவல் ஜெய்த் சிங் (அல்லது) ஜெய்த்ரதா சிங் (கி.பி.1213-1253) :

இவர் மாள்வா இராஜபுத்ரர்களை வென்று சித்தூரை மீட்டார். சித்தூர் கோட்டையை மீண்டும் கட்டி மேவார் இராஜ்யத்தின் தலைநகராக்கினார். ஆனால் குறுகிய காலத்திலையே நட்கா நகரை டெல்லி சுல்தான் இல்டுமிஷ் கைப்பற்றி அழித்தார். காஹதாவாலாவின் அரசரான ஜெய்சந்திராவின் பேரனான சியாஜி ராவ் என்பவர் மார்வார் இராஜ்யத்தை கி.பி.1226ல் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இல்டுமிஷ் படையெடுப்பில் நக்டா நகரம் சூறையாடப்பட்டது. கி.பி.1234ல் திரும்பவும் மேவாரின் மீது படையெடுத்த டெல்லி சுல்தான் இல்டுமிஷ்யை ஜெய்த் சிங் தோற்கடித்தார். இதனால் பாதுகாப்பு கருதி தலைநகரை சித்தூருக்கு நிரந்தரமாக மாற்றினார். இவர் மேவாரை ஆக்ரமிக்க காத்திருந்த குஜராத், மார்வார், சாஹம்பரி மற்றும் டெல்லி அரசுகளிடமிருந்து மேவாரை காத்தார். இவர் ஜாலோரின் உதய் சிங் செளகான் மற்றும் நாடல் அரசனையும் தோற்கடித்தார். இவர் குஜராத் சாளுக்கிய அரசர் திரிபுவனபாலாவை தோற்கடித்து விரட்டினார்.

ராவல் தேஜ் சிங் (கி.பி.1252-1273) :

தந்தை ஜெய்த்ரா சிங்கிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு குஜராத் சாளுக்கிய விஷால்தேவ் உடன் மோதல்கள் இருந்தது. கி.பி‌.1253-54ல் டெல்லி சுல்தான் பால்பன் இந்து ராஜ்யங்களான சித்தூர், புண்டி மற்றும் ரன்தோம்பூர் மீது படையெடுத்தார். ஆனாலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இவர் டெல்லி சுல்தான் பால்பனிடம் இருந்து குத்லுக் கான் என்பவருக்கு அடைக்கலம் கொடுக்க டெல்லி படைகள் மீண்டும் கி.பி.1255-56ல் சித்தூர்கார்க் கோட்டை மீது போர்தொடுத்தன. இந்த போரில் இரண்டு மேவார் தளபதிகள் கொல்லப்பட்டாலும் மேவார் வெற்றி பெற்றது. இவர் சிர்வாவுக்கு அருகிலுள்ள திரிபுருஷதேவ் கோயிலை செப்பனிட்டு கொடுத்து அதற்கு நிலங்களையும் எழுதி கொடுத்தார். இவரது ஆட்சியில் சித்தூரில் சமணம் நன்கு பரவியது. இவரின் அரசி சித்தூரில் பார்ஷ்வநாத் கோயிலை கட்டினார். இவரது இன்னொரு அரசியான ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ஜாலோரின் ரூபாதேவி மார்வார் அருகில் பாதுதாரா என்னுமிடத்தில் இவரது மறைவுக்கு பின்னர் இவரது நினைவாக ஆழ் உறைகிணறு கட்டினார்.

ராவல் சமர் சிங் (கி.பி.1273-1302) :

தந்தை தேஜ் சிங்கிற்கு பிறகு அவர் மகனான இவர் ஆட்சிக்கு வந்தார். இவர் குஜராத் அரசர் சாரங்கதேவ் பஹேலா மற்றும் அபு மலையின் ராவல் பட்டா பார்மர் ஆகியோருக்கு உதவியாக முஸ்லீம் படையெடுப்பை தடுக்க உதவினார்.  இவர் அபு மலையில் சமண மடம் கட்டி அதற்கு பொன்னால் ஆன மேற்பூச்சு அமைத்தார். இவர் மஹாசதி நிகழ்வுக்கு சித்தூரில் தனிச்சுவர் எழுப்பினார். இவரின் மகன்களில் ஒருவரான கும்பகர்ணன் என்பவர் நேபாளத்திற்கு சென்று பின்னர் அவரின் வழித்தோன்றல்கள் நேபாள அரச வம்சத்தினர்கள் ஆனார்கள். இவர் அலாவூதின் கில்ஜி குஜராத் மீது படையெடுத்து செல்லும்போது இவர் வழியே போவதற்கு அவரிடம் வரி வசூலித்தார். அந்த கோபத்தில் அலாவூதின் கில்ஜி போகும் வழியில்  எட்டு கோயில்களை இடித்து தள்ளி விட்டு சென்றார். 

ரத்தன் சிங் (கி.பி.1302-1303) :


தந்தை சமர் சிங்கிற்கு பின்னர் அவரது மூத்த மகனான இவர் ஆட்சிக்கு வந்தார். இளைய சகோதரர் கும்பகர்ணன் நேபாளம் சென்று அங்குள்ள இளவரசியை மணந்து அவர் வழியில் பின்னால் வந்தவர்கள் ராணா பட்டத்தை சூடிக்கொண்டனர். இவரே பத்மாவத் திரைபடத்தில் வரும் '"ராணி பத்மினி"யின் கணவனாக அறியப்படுபவர். இவரின் ஆட்சியின் போது தான் அலாவூதின் கில்ஜி சித்தூரின் மீது படையெடுத்து வந்து இருபுறமும் கோட்டை கதவுகளை தாக்கி கி.பி.1303 ஆகஸ்ட் 26ல் சித்தூரை கைப்பற்றினார். சித்தூர் கோட்டை வீழ்ந்தவுடன் இராஜபுத்ர பெண்கள் "ஜோஹர்" என்னும் தீக்குளிப்பு வைபவத்தை நடத்தி எதிரிகளிடம் இருந்து தங்கள் கற்பை காப்பாற்றி கொள்ள தீக்குளித்தனர். இந்த நிகழ்வில் இராணி பத்மினி தீக்குளித்தார் என்று காட்டப்படுகிறது. ஆனால் இந்த "இராணி பத்மினி" என்ற பெயரே கி.பி.16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பத்மாவத் என்னும் நூலில் தான் முதன்முதலில் அறிமுகமாயிற்று என்பதே உண்மை. அதன்படி சிங்கள இளவரசியான பத்மினியை ரத்தன் சிங் திருமணம் செய்கிறார்.


அலாவூதின் இவரது அழகை பற்றி கேள்விப்பட்டு இவரை அடைய சித்தூர் மீது படையெடுத்து ரத்தன் சிங்கை தந்திரமாக சிறைபிடிக்கிறார். ராணியின் திட்டப்படி மேவார் வீரர்கள் ரத்தன் சிங்கை விடுவிக்கின்றனர். இந்த நேரத்தில் சக ராஜபுத்ர அரசரான கும்பல்னீரை சேர்ந்த தேவபாலா பத்மினியை திருமணம் செய்ய அழைப்பு விடுக்கிறார். இதனால் ஆத்திரப்பட்ட ரத்தன் சிங் தேவபாலாவுடன் நேருக்குநேர் போரில் மோதி இருவரும் இறந்து விடுகின்றனர். இந்த நேரத்தில் அலாவூதின் மீண்டும் சித்தூர் மீது படையெடுக்க சித்தூரை கைப்பற்றும் முன்னர் ராணி பத்மினி மற்றும் இதர ராஜபுத்திர பெண்கள் ஜோஹர் செய்து கொண்டு உயிர் துறக்கின்றனர். சிலர் பத்மினி ரத்தன் சிங்கின் மகள் என்றும் சிலர் ரத்தன் சிங்கின் அண்ணன் லக்ஷ்மாசிங் என்பவரின் மனைவி என்றும் சிலர் லக்ஷ்மா சிங்கின் மாமாவான பீமசிம்ஹாவின் மனைவி என்றும் கூறுகின்றனர். அலாவூதினுடம் கோட்டைக்குள் நுழைந்த அமீர் குஸ்ரூ தனது நூலில் கோட்டைக்குள் நுழைந்தவுடன் கோட்டையின் தலைவர் சரணடைந்தார். அவருடன் 30000 இந்துக்களை படுகொலை செய்ய கில்ஜி உத்தரவிட்டார் என்று கூறுகிறார். பின்னர் தனது இளைய மகனான கிஸிர் கான் மற்றும் மாலிக் ஷாகின் பொறுப்பில் சித்தூரை "கிஸிராபாத்" என்று பெயர் மாற்றம் செய்து டெல்லிக்கு திரும்பினார் என்று கூறுகிறார். 

உதவிய நூல்கள் :

மத்தியகால இந்தியா - சதீஷ் சந்திரா

மாலிக் காபூர் - செ.திவான்

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

விக்கிபீடியா தகவல்கள் 

படங்கள் :

கூகுள் படங்கள் & திருமுத்துகுமரன்


Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு