37) இராஜபுத்ரர்கள் - சிதோதயர்கள் வம்சம்

இராஜபத்ரர்கள் (சிதோதயர்கள் ) (கி.பி.1326 - 1947)

ராணா ஹமீர் சிங் (கி.பி.1326-1364) :

இவர் தான் சிதோதயர்களின் வம்சத்தை தொடக்கி வைத்தவர். அலாவூதின் கில்ஜி ரானா ரத்தன் சிங்கை வென்றவுடன் சித்தூர் நிர்வாகத்தை தன் மகனிடம் ஒப்படைத்து பின்னர் தனக்கு கட்டுப்பட்ட ஜாலோர் அரசனான மால்தோவிடம் ஒப்படைத்தார். மால்தோவின் பால்ய விவாகத்தினால் விதவையான மகளான சோன்காரியை ராணா ஹமீர் மணந்து மால்தியோவின் ஆதிக்கத்தை விரட்டியடித்து சித்தூரில் சிதோதயர்களின் வம்சத்தை ஆரம்பித்து வைத்தார். சித்தூர்கார்க் கோட்டையிலுள்ள அன்னபூர்ணா மாதா கோயிலை கட்டியவரும் இவரே. இவரது ஆட்சிகாலத்தில் ராவ் தேவா என்பவர் புண்டியில் இராஜபுத்ர கிளையாட்சியை தொடக்கினார்.

ராணா ஷேத்ரா சிங் (கி.பி.1364-1382) :

இவர் ராணா ஹமீரின் மகன். இவர் மீண்டும் மண்டல்கார்க், ஆஜ்மீர், மண்ட்சோர் மற்றும் சாப்பன் பகுதிகளை போரிட்டு வென்று தன்னரசுடன் இணைத்துக்கொண்டார். பக்ரோல் என்னுமிடத்தில் நடந்த போரில் டெல்லி சுல்தானை வென்றார். கும்பல்பர்க் கோட்டை கல்வெட்டுகள் இவர் குஜராத்தின் சுல்தானான சபர்கானை வென்றதை குறிக்கிறது. மேலும் இவர் மாள்வா சுல்தானுடன் நடந்த போரில் அவரின் தளபதியான அமீ ஷாவை கொன்று போரில் வெற்றி பெற்றார். இவர் கி.பி.1382ல் புண்டியை ஆண்ட ஹடாவுடன் நடந்த போரில் மாண்டார்.

ராணா லக்கா சிங் (கி.பி.1382-1421) :

இவருக்கு நிறைய மனைவிகள். எட்டு குழந்தைகள்.பட்னோரில் நடந்த போரில் டெல்லி படைகளை தலைமையேற்று வந்த ஃபெரோஸ் ஷா துக்ளக்கை தோற்கடித்தார். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் ராணா சுண்டா இளையவர் ராணா மோஹல் சிங். இவருக்கு ராணி ஹன்ஸா பாய்யுடன் (மண்டோர் - இன்றைய பெயர் ஜோத்பூர்) திருமணம் நடந்ததால் அவருக்கு பிறந்த மகனுக்கு தான் தந்தையின் அரியாசனம் என்பதை ஒப்புக்கொண்டு பதவியை வேண்டாம் என்று மூத்தவர் ராணா சுண்டா தூக்கி எறிந்தார். ஆனால் தந்தை இறக்கும்போது தம்பியான மோஹல்சிங் சிறுவனாக இருந்ததால் அவருக்கு பதிலாக நிர்வாகத்தை நடத்தினார். ஆனால் இவரை தந்தையின் இரண்டாவது மனைவியான ராணி ஹன்சா பாய் நம்பாமல் தனது சகோதரனான ராவ் ரண்மல் நிர்வாகத்தை நடத்த பணித்தார். அதனால் ராணா சுண்டா நகரை விட்டு வெளியேறினார். அங்கிருந்து சென்ற ராணா சுண்டா சித்தூர் மாவட்டத்திலுள்ள பெகு கோட்டையில் இருந்து அரசாண்டார். இவரின் வழிவந்தவர்கள் தான் சுண்டாவதர்கள் என்று அழைக்கப்பட்டனர். ராணியின் சகோதரன் மெல்ல மெல்ல நாட்டை விழுங்க முயற்சித்த போது ராணி தனது மூத்த மகனான ராணா சுண்டாவிடம் விவரத்தை சொல்லி சகோதரனை பதவியிலிருந்து அகற்றினார் என்பதும் வரலாறு. ராணா லக்காவின் ஆட்சியில் அலாவூதின் கில்ஜியினால் இடிக்கப்பட்ட கோயில்களை திரும்ப கட்டினார். அலுமினியம் மற்றும் வெள்ளி சுரங்கங்கள் இவரின் ஆட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. ராணா சுண்டா மார்வாரை பகுதிகளை வென்று தனது ராஜ்புத்ர அரசாட்சியை தொடங்கினார்.

ராணா மோஹல் சிங் (கி.பி.1421-1433) :

இவரின் தந்தை லக்கா சிங் கட்ட ஆரம்பித்த கட்டிடங்களை கட்டி முடித்தவர் இவரே. இவரின் ஆட்சியின் போது டெல்லியின் சையத் வம்ச சுல்தான்களின் படையெடுப்புகளை விரட்டியடித்தார். இவர் நாகோர் மற்றும் குஜராத் பகுதிகளை வென்றார். ஆனால் இவர் அவரது சகோதரர்களான சாச்சா மற்றும் மிரா வினால் கொல்லப்பட்டார்.

ராணா கும்பா (கி.பி.1433-1468) :


இவரது இயற்பெயர் கும்பகரண் என்ற கும்பா. தந்தை மோஹல் சிங் இறக்கும்போது ராணா கும்பாவிற்கு வெறும் 13 வயதே ஆகியிருந்தது. இந்த சூழ்நிலையே ராணா கும்பா பிற்காலத்தில் மிகப்பெரிய மேவாரின் அரசராக பதிவிடப்படியான காரியங்களை செய்யும் அரசராக மாற்றியது. இவர் மாண்டோர் (ஜோத்பூர்) ராணாமல்லாவுடன் இணைந்து மாள்வாவை ஆண்ட சுல்தானை வீழ்த்தினார். தனது ஆட்சியில் சாம்பார் ஏரி நகரம், ஆஜ்மீர் மற்றும் ரன்தோம்போர் நகரங்களை வென்று இணைத்துக்கொண்டார். மாள்வாவின் சுல்தானுக்கு அடங்கிய துங்கர்பூர், புண்டி மற்றும் கோட்டா சமஸ்தானங்களை தனக்கு கீழான சிற்றரசாக இணைத்துக்கொண்டார். நகோரை ஆண்ட ஃபெரோஸ் ஷா இறந்தவுடன் அவரது மகனான சம்ஸ் கான் ராணா கும்பாவின் உதவியை நாடி ஆட்சியில் அமர்ந்தார். பின்னர் அவரே அரசராக நிலைத்தவுடன் குஜராத்தின் இரண்டாம் அஹ்மத் ஷாவுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். இது ராணா கும்பாவிற்கு கோபத்தை மூட்டியது. இதனால் அவர் நகோர், கசிலி, கண்டேலா மற்றும் சாஹம்பரி பகுதிகளை கைப்பற்றினார். இதனால் இரண்டாம் அஹ்மத் ஷா சிரோஹியை கைப்பற்றினார். பின்னர் இரண்டாம் அஹ்மத் ஷா  கில்ஜி முகமதுவுடன் ஒப்பந்தம் செய்து மேவாரின் ஆதிக்கத்தை ஓழிக்க உறுதிபூண்டனர். பிறகு கும்பல்மீர் மீது படையெடுத்தார் ஆனால் அதை கைப்பற்றமுடியவில்லை. ஆனால் அபு மலை பகுதிகளை கைப்பற்றினார். நகோர் பகுதிகளை குஜராத் படைகளுக்கு வழிவிட்டு பின்னர் அவற்றை அடித்து நொறுக்கி சிறு படை மட்டுமே அஹமதாபாத்தில் உள்ள சுல்தானுக்கு செய்தியை தெரிவிக்க செய்தார். மஹ்மூத் கில்ஜி ஆஜ்மீரை கைப்பற்றிக்கொண்டார். பின்னர் மண்டல்கார்க் மீது படையெடுத்தார். இந்த நேரத்தில் ஜோதா ராவ் (ரண்மல் ராதோரின் மகன்) மண்டோரை கைப்பற்றிக் கொண்டார்.  இந்த நேரத்தில் பலவித திசைகளில் சுற்றி வந்த படையெடுப்புகளை திறம்பட சமாளித்தார். குஜராத் அரசர் இரண்டாம் அஹ்மத் ஷா கி.பி.1458ல் மறைநதவுடன் அவரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்டுக்கொண்டார். இவரின் ஆட்சியில் மேவாரின் எதிரிகளான மாள்வாவின் மஹ்மூத் கில்ஜி , குஜராத்தின் சுல்தானான இரண்டாம் குத்பூதின் அஹ்மத் ஷா, நகோரின் அரசனான சம்ஸ் கான் மற்றும் மார்வாரின் ஜோதா ராவ் ஆகியோர்களை சமாளித்து மேவாரை காப்பாற்றினார். "விஜய ஸ்தம்பா" என்ற 9 அடுக்குகள் 37 மீட்டர் உயரமுள்ள ஸ்தூபியை வெற்றியின் சின்னமாக சித்தூர் கோட்டையில் அமைத்தார்.


இது முகமது கில்ஜியின் தலைமையில் வந்த மாள்வா மற்றும் குஜராத் சுல்தான்களை வென்றதன் நினைவாக கட்டியதை விஷ்ணு கடவுளுக்கு அர்ப்பணித்தார். விஜய ஸ்தம்பா மட்டுமின்றி "த்ரிலோக தீபகா" என்ற ஜெயின் கோயிலையும் "சாந்திநாதா" என்ற ஜெயின் கோயிலும் இவர் கட்டியதே. சங்கீதா ரத்னகாரா மற்றும் சங்கீத ராம தீபகா என்று இசையை பற்றிய இரு நூல்களையும் எழுதியுள்ளார். இவரின் காலத்தில் ரதோர்களின் ராவ் பிகா என்பவரால் பிகானியர் என்ற நகரம் உருவாக்கப்பட்டு தனியான ராஜபுத்ர வம்சமாக வளர்ந்தது.

ராணா முதலாம் உதய் சிங் (கி.பி.1468-1473) :

இவர் தனது தந்தையான ராணா கும்பாவை கொன்றுவிட்டு ஆட்சியை பிடித்தார். உதய சிம்ஹா அல்லது ஓடா சிங் என்றும் அழைக்கப்படுபவர்.  தனது சகோதரன் ராணா ராய்மல்லினால் ஜாவர்,தாரிம்பூர் மற்றும் பன்கார்க் போர்க்களங்களில் தோற்கடிக்கப்பட்டார். சிலர் இவரது மரணம் தந்தையை கொன்றதற்காக சகோதரன் ராணா ராய்மல் இவரை பழிவாங்கியதாகவும் சிலர் மின்னல் தாக்கி இறந்ததாகவும் சொல்லுகிறார்கள். இவர் மாள்வாவை ஆண்ட கியாத் ஷாவுடன் நட்புறவு கொண்டு தனது மகளை மாள்வா சுல்தானுக்கு மணம் முடிக்க பேசியதாகவும் திரும்பும் வழியில் மின்னல் தாக்கி இறந்ததால் அந்த திருமண பேச்சு அப்படியே நின்று போனதாகவும் தெரிகிறது. இதற்கிடையில் ராணா ராய்மல் சித்தூரை கைப்பற்றியதால் உதய்சிங்கின் மகன்களான சூரஜ்மால் மற்றும் சாஹஸ்மால் இருவரும் மாள்வா சுல்தானின் உதவியை கோரினர். இந்த சண்டையில் ராணா ராய்மல் மாள்வா சுல்தானை தோற்கடித்து சித்தூரில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

ராணா ராய்மல் (கி.பி.1473-1508) :

இவர் ராணா கும்பாவின் மற்றொரு மகன். இவர் மண்டோர் (ஜோத்பூர்)ன் ராதோர்களின் வம்சத்து ஸ்ரிங்கார்தேவியை (ஜோதா ராவ் வின் மகள்) மணந்து கொண்டு ராதோர்களுக்கும் இவர்களுக்குமுள்ள சண்டையை முடித்து வைத்தார். இவர் ஆட்சிக்கு வந்த புதிதில் மாள்வாவின் கியாத் ஷாவை தோற்கடித்தார். இவர் சித்தூரிலுள்ள ஏக்லங்கி கோயிலை திரும்ப கட்டினார். இவருக்கு பிரித்விராஜ், ஜெய்மல் மற்றும் ராணா சங்கா என மூன்று மகன்கள். பதவிசண்டையில் பிரித்விராஜ் மற்றும் ஜெய்மல் இருவரும் மாண்டனர்‌. இந்த சண்டையில் தான் பிரித்விராஜ்ஜால் ராணா சங்காவின் ஓரு கண் போன நிகழ்வும் நடந்தது. பின்னர் ராணா ராய்மல் ராணா சங்காவை தன் மரணப்படுக்கையில் சித்தூருக்கு அழைத்தார். அவரிடம் அடுத்த ஆட்சியை ஒப்படைத்தார்.

ராணா சங்கா (கி.பி.1508-1528)‌‌ : 

இவரே பல இராஜபுத்ர கிளைகளை 300 வருடங்களுக்கு பிறகு ஒன்றிணைத்து இராஜபுதனம் (இன்றைய ராஜஸ்தான்) என்ற வலிமையான அரசை உருவாக்கியவர். மேவாரை அடுத்து ஆட்சி செய்வது யார் என்ற போட்டி இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் ஏற்பட்டது. இவரது மூத்த சகோதரரான பிரித்விராஜ்ஜீடன் நடந்த சண்டையில் ஓரு கண்ணை இழந்தார். மாள்வாவின் சுல்தானை தோற்கடித்தார். கட்டோலி மற்றும் தோல்பூர் போர்களில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார்.  குஜராத்தின் மீது படையெடுத்து அஹ்மத் நகர் (ஹிம்மத்நகர்) சுல்தானை தோற்கடித்தார். கி.பி.1527ல் கன்வா போரில் மொகாலய அரசர் பாபரால் தோற்கடிப்பட்டார். பின்னர் கி.பி.1528 ஜனவரி 30ல் பாபருக்கு எதிரான படைதிரட்டலின் போது கல்பி என்னுமிடத்தில் தனது சொந்த தளபதிகளால் விஷம் வைத்து கொல்லப்பட்டார். இவருக்கு 100 மனைவிகளுக்கு மேல் உண்டு என்றும் சொல்லுவார்கள். இவரது மகன்களில் ஒருவரை தான் மீரா பாய் மணந்தார். அவரது மறைவுக்கு பின்னர் சித்தூர் அரண்மனையில் இருந்து வந்தார். ராணா சங்கா மறைவுக்கு பின்னர் இவரது மகன்களுள் ஒருவரான விக்கிரமாதித்யா சிங் மீரா பாய்யை விஷமிட்டு கொல்ல முயல அவர் சித்தூரில் இருந்து தப்பித்து மதுரா சென்று அங்கிருந்து கடைசியில் துவாரகா சென்று அங்கேயே தன் வாழ்நாளை கழித்தார் என்றும் துவாரகா இறைவனை வழிபட்டு கோயிலில் இறைவனுடன் கலந்து மறைந்தார் என்றும் கூறுவது தனிக்கதை.

ராணா இரண்டாம் ரத்தன் சிங் (கி.பி.1528-1531)‌‌ :

ராணா சங்காவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அவர் மகன் இவர். இவர் கி.பி.1531ல் நடந்த போரில் இறந்து போனார். இவருக்கு வாரிசு இல்லாததால் இவரின் சகோதரர் இவருக்கு பின்னர் அரசுக்கு வந்தார். இவரது ஆட்சியில் தனக்கு சித்தூர் கோட்டையில் ரத்தன் சிங் மாளிகையை கட்டினார்.

ராணா விக்ரமாதித்யா சிங் (கி.பி.1531-1536) :

இவரது ஆட்சியில் கி.பி.1534ல் குஜராத்தின் பகதூர் ஷா சித்தூரை கைப்பற்றினார். அதனால் இரண்டாம் உதய் சிங்கை பாதுகாப்பாக புண்டிக்கு அனுப்பினார். இவரது ஆட்சியில் தான் இரண்டாவது முறையாக ஜோஹர் என்னும் தீக்குளிப்பு நடந்தது. குஜராத் முஸ்லீம்கள் சித்தூரை கைப்பற்றியதால் விக்ரமாதித்யாவின் தாயும் ராணா சங்காவின் மனைவியுமான ராணி கர்ணாவதி தன் பெருமையை இழக்க விரும்பாமல் தன்னை தானே ஜோஹர்  செய்து கொண்டார். விக்ரமாதித்யா தனது படைவீரர்களை திட்டியதால் அவர்கள் வன்வீர் சிங் தலைமையில் இவரை மாளிகை சிறையில் வைத்து பின்னர் கொலை செய்தார்கள். இவர் தனது மறைந்த அண்ணனின் மனைவியான மீரா பாய் கிருஷ்ண பக்தியால் தெருவெங்கும் அலைந்து பாடல் பாடியது பொறுக்காமல் அரச குடும்பத்தின் மரியாதை காற்றில் பறக்க விடுகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல முயற்சித்தார். இவரது கொலை முயற்சியில் இருந்து தப்பி மதுரா சென்று அங்கிருந்து துவாரகா சென்று கிருஷ்ணருள் மறைந்தார். மீரா பாய்யை விஷமிட்டு கொல்ல முயன்ற இவரின் வாழ்வும் கடைசியில் கொலையிலையே முடிந்தது. 

ராணா வன்வீர் சிங் (கி.பி.1536-1540) :

இவர் விக்ரமாதித்யா சிங்கை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார். இரண்டாம் உதய் சிங்கை கொல்ல முயற்சித்த போது பன்னா தாய் அவருக்கு பதிலாக தனது மகனை கைகாட்டி இரண்டாம் உதய் சிங்கை காப்பாற்றினார். இவர் ராணா சங்காவின் மூத்த சகோதரரான பிருத்விராஜ்ன் முறையற்ற உறவில் பிறந்த மகன். கி.பி.1540ல் இரண்டாம் உதய்சிங் ஜாலோர் அரசர்கள் மற்றும் பல நிலப்பிரபுக்களின் உதவியுடன் மால்வி (சித்தூரின் தெற்கு பகுதி)யில் நடந்த போரில் வன்வீர் சிங்கை தோற்கடித்தார். போரில் வன்வீர் சிங் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

ராணா‌ இரண்டாம் உதய் சிங் (கி.பி.1540-1572) :


இவர் கி.பி.1540ல் கும்பல்கார்க் கோட்டையிலிருந்து மேவார் அரசராக பொறுப்பேற்றார். அதே ஆண்டு வன்வீர் சிங்கை தோற்கடித்து சித்தூர்கார்க்கை மீட்டுக்கொண்டார். மேவாரின் 12வது ராணா இவர். கி.பி.1562ல் மாள்வாவின் பாஸ் பகதூருக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தால் அக்பர் கி.பி.1563ல் மேவாரின் மீது படையெடுத்தார். இவரின் தளபதிகளான ஜெய்மல் ராவ் மற்றும் பட்டா ஆகியோர்களின் வீரத்தை வியந்து போற்றிய அக்பர் பின்னாளில் அவர்களுக்கு பஃதேபூர்சிக்ரியில் சிலை வைத்து கெளரவித்தார். இவர்களை வென்ற பின்னர் தான் சித்தூர் வீழ்ந்தது. உதய்பூர் என்ற நகரை நிர்மாணித்தது இரண்டாம் உதய் சிங் தான். சித்தூர் வீழ்ந்தபின் உதய்பூர் மேவார் அரசர்களின் தலைநகரமாயிற்று. கி.பி.1568ல் சித்தூரில் மூன்றாவது முறையாக ஜோஹர் என்னும் தீக்குளிப்பு வைபவம் நடந்தது. கி.பி.1572ல் உதய்ப்பூரிலுள்ள கோகுண்டா அரண்மனையிலையே மரணமடைந்தார். இவருக்கு 18,20 மனைவிகளும் நிறைய குழந்தைகளும் உண்டு. சுகவாசி. அக்பரின் தளபதியான அஃப்சல்கான் சித்தூர் கோட்டையை தாக்கும்போது அதை ஜெய்மல், பட்டா என்ற தளபதிகளின் கையில் விட்டுட்டு உதய்ப்பூருக்கு குடும்பத்துடன் சென்று தங்கி கொண்டதால் இராஜபுத்திரர்களின் வீரத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியதாக இராஜபுத்திர மாவீரர்களின் வரிசையில் இவரது பெயரை நீக்கினார்கள். 

ராணா முதலாம் பிரதாப் சிங் (கி.பி.1572-1597) :

இவரே சரித்திரத்தில் புகழ்பெற்ற ராணா பிரதாப் சிங் என்றழைக்கப்பட்ட மாவீரர். மொகலாயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பலமுறை போரிட்டு இராஜஸ்தானை காத்தவர். இவரின் குதிரையான "சேதக்" போர்களத்தில் காயம்பட்டு இருந்த இவரை காப்பாற்றி வந்ததையும் அது போரின் காயத்தால் மரணமடைந்த பின் அதற்கு நினைவுச்சின்னம் எழுப்பிய வரலாறும் அனைவரும் அறிந்ததே. இன்றும் இராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் சேதக்கிற்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவர் கி.பி.1540 ல் மே 9ம் தேதி பிறந்தார். இவரின் ஜெயந்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஜெயேத்ஸ சுக்லா பண்டிக்கையின் மூன்றாவது நாளில் கொண்டாடப்படுகிறது.

அக்பர் இவருக்கு எதிராக முதலாம் மான்சிங் என்பவரை சுபேதாராக நியமித்தார். அவருடன் நடந்த ஹல்திகாட் போரில் ராணா பிரதாப் தோற்றுப் போனார். அந்த போரில் தான் இவரது குதிரையான சேதக் இவரது உயிரை காப்பாற்றி தன்னுயிரை இழந்தது. இவரின் வேடமிட்டு இவரது நண்பரான ஜாலா நாட்டு சிற்றரசர் மொகலாய படையை போக்கு காட்டிய நேரங்களில் மயங்கி விழுந்த இவரை இவரது குதிரையான சேதக் தான் படுகாயப்பட்டபோதும் போர்களத்திலிருந்து மீட்டு சென்றது. இந்த போர்களத்தில் இவருடன் மனஸ்தாபம் கொண்டு அக்பரின் அவையில் இருந்த இவரது சகோதரரான சக்தி சிங் படுகாயமடைந்த இவரை விரட்டி சென்று மொகலாய வீரர்களை வெட்டி சகோதரன் தப்பிக்க உதவினார். இந்த சக்தி சிங்கின் மகளான கிரண் தேவி ரத்தோர் தான் நவ்ரோஸா விழாவின் போது தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற அக்பரின் கழுத்தில் வாளை வைத்த வீரப்பெண்மணி. கிரண் தேவி தன் கணவரான பிரித்விராஜ் மற்றும் தந்தையான சக்தி சிங் ஆகியோர் மொகலாயர்களின் அரசவையில் பணி புரிவதை வெறுத்தவர். மொகலாயர்களை எதிர்த்து போரிடும் மற்றும் மொகலாயர்களுடன் சம்பந்தம் உறவு கொள்ளும் இராஜபுத்ரர்களை வெறுத்த இராணா பிரதாப் சிங்கின் மீது மிகப்பெரிய மரியாதை கொண்டவர்.  இராணா பிரதாப் சிங் ஹல்திகாட் போருக்கு பின்னர் மெதுவாக இழந்த பிரதேசங்களை திரும்ப மீட்டுக் கொண்டார். உதய்பூர் மாவட்டத்தில் சாவந்த் என்னும் நகரை நிர்மாணித்தார். தாட் என்ற பிரிட்டிஷ்காரர் இவரை கிரேக்கத்தின் சிறந்த போர் அரசனான லியோனிடாஸ்னுடன் ஒப்பிட்டு "இராஜஸ்தானின் லியோனிடாஸ்" என்ற பட்டததை அளித்தார்.



ராணா முதலாம் அமர் சிங் (கி.பி.1597-1620) :

உதய்பூர் நிர்மாணிக்கப்பட்ட கி.பி.1559ம் வருடத்தில் பிறந்தவர். இவர் மேவாரின் 14வது ராணா. ஜஹாங்கீருடன் நடந்த போருக்கு பின்னர் அவருடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஜஹாங்கீருக்கு பின்னர் வந்த ஹாஜஹானின் ஆட்சியில் இருவருக்கும் நல்ல சுமூக உடன்பாடு இல்லாததால் மொகாலய அரசவையிலிருந்து தனது பிரதிநிதியை திரும்ப பெற்றுக்கொண்டார்.

ராணா இரண்டாம் கரண் சிங் (கி.பி.1620-1628) :

இவர் இரண்டாம் அமர்சிங்கின் ஆட்சியில் மொகலாய அரசவைக்கு பலமுறை சென்று வந்துள்ளார். ரானக்பூர் கோயிலை திரும்ப கட்டினார். இளவரசர் குர்ரம் (ஹாஜஹான்) கி.பி. 1622ல் தந்தை மற்றும் நூர்ஜஹானுக்கு எதிராக கிளர்ச்சி செய்து மகபத் கான் உதவியுடன் போரிட்டார். ஆனால் மார்ச் 23ல் கி.பி.1623ல் பிலோச்பூரில் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் இரண்டாம் கரண் சிங் உதவியை நாடி நட்புறவுக்காக இருவரின் தலைப்பாகையை மாற்றிக் கொண்டனர். அந்த தலைப்பாகை இன்றும் உதய்ப்பூரில் உள்ள பிரதாப் மியூசியத்தில் உள்ளது. இவரின் காலத்தில் நிறைய கட்டிடங்கள் கட்டப்பட்டது. கோல் மஹால், ஜக்மந்திர் தீவு மாளிகையில் மேற்புறமுள்ள கூரையும், கிருஷ்ணா நிவாஸ்ஸிலுள்ள பீரங்கிகளையும் இவரே நிறுவினார்.

ராணா முதலாம் ஜெகத் சிங் (கி.பி.1628-1652) :

உதய்ப்பூரிலுள்ள பிச்சாலா ஏரியில் ஜக் மந்திரை கட்டியவர் இவரே. இவர் சித்தூர் கோட்டையில் தடுப்பு சுவரை கட்டினார். இதனால் ஹாஜஹான் இவர் ஓப்பந்தத்தை மீறியதாக வாஜீர் சாதுல்லாஹ் கான் தலைமையில் படைகளை அனுப்பினார். பின்னர் மேவார் வந்த படைகளிடம் தனது தூதுவர்களை அனுப்பி படைகளை திருப்பி அனுப்பினார். பின்னர் இவர் ஹாஜஹானிடம் புது ஒப்பந்தம் செய்துக்கொண்டு புது தடுப்பு சுவர் உடைத்தார்.

ராணா முதலாம் இராஜ் சிங் (கி.பி.1652-1680)‌‌‌ :

ராஜ்சமந்த் நகரிலுள்ள ராஜ்சமந்த் ஏரியை கட்டியவரும் இவரே. இவரின் ஆட்சியில் ஓளரங்கசீப்புடன் நிறைய முறை மோதினார். ஓருமுறை கிஷானார்க் இளவரசியான சாருமதியை மொகலாயர்களிடமிருந்து காப்பாற்றவும் மற்றொரு முறை இந்துக்களுக்கு விதித்த ஜிசியா வரியையும் எதிர்த்தார். இவர் மதுராவில் இருந்த ஶ்ரீநாத்ஜியின் சிலையை பாதுகாப்பாக நாதத்வாராவுக்கு மாற்றினார். மராட்டிய சிவாஜி கூட ஒளரங்கசீப்பிடம் உங்களது வீரம் இருந்தால் மேவார் ராணாவிடம் ஜிசியா வரியை வாங்கி பாருங்கள் என்று சவால் விட்டதாகவும் கூறுவர். இவர் ஓளரங்கசீப்புக்கு எதிராக ரதோர்களின் கிளர்ச்சியில் அவர்களின் தலைவனான துர்கா தாஸ் ரதோருக்கு நிறைய பொருளுதவிகள் செய்தார். இவரையும் மொகலாயர்களிடம் கையூட்டு (இலஞ்சம்) பெற்றுக்கொண்டு இவரின் தளபதிகளே விஷம் வைத்து கொன்றனர்.

ராணா ஜெய் சிங் (கி.பி.1680-1698) :

இவர் உதய்பூரிலுள்ள ஜெய்சமந்த் ஏரியை கட்டினார். இவர் கி.பி.1680-81களில் ஓளரஙகசீப்புடன் நிறைய முறை போர்களில் ஈடுபட்டார். இவரின் தளபதியான தயால்தாஸ் மாள்வா சென்று மண்டூ மற்றும் தார் பகுதிகளை வென்றார். இந்த போரில் ஓளரங்கசீப்பின் மூன்று மனைவிகளையும் சிறை பிடித்தார். அவர்களை கண்ணியமாக மொகலாயர் மாதிரியில்லாமல் விருந்தினர்கள் போல நடத்தினார். இதனால் ஓளரங்கசீப் வேறு வழியின்றி இவருடன் உடன்படிக்கை செய்து கொண்டார். தீபார் ஏரியை உதய்பூரில் கட்டினார்.

ராணா இரண்டாம் அமர் சிங் (கி.பி.1698-1710) :

இவர் மேவாருக்கு எதிரான மார்வார் மற்றும் அம்பர் இராஜபுத்ரர்களுடன் மேவாரையும் கூட்டணியால் இணைத்தார். ஜெய்ப்பூரின் சவாய் ஜெய்சிங்க்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்து அம்பர் (ஜெய்ப்பூர்) ராஜ்யத்துடன் உறவு வைத்துக்கொண்டார். இவரது ஆட்சிகாலத்தில் மொகலாயர் பலவீனமடையும் நேரத்தில் இவர்களின் கூட்டணி முக்கியத்துவம் பெற்றது. இவர் ஜிசியா வரியை எதிர்த்து போராடினார்.

ராணா இரண்டாம் சங்ராம் சிங் (கி.பி.1710-1734) :

இவரின் பதவிக்காலத்தில் மொகலாயப் பேரரசு பலப்பல சிறு துண்டுகளாக பலவீனமடைந்து பிரிந்து போயிற்று. இந்த நிலையில் மராத்தியர்கள் ஓருபுறமும் இராஜபுத்ரர்கள் மறுபுறமும் தங்களது சுதந்திர அரசை நிறுவி தங்களை வலிமைப்படுத்த முயன்றனர். இவரின் காலத்தில் இவரின் மூன்று மகன்களால் சிதோதய வம்சம் பிரிந்து தங்களது அரசை விரிவுபடுத்தினார்கள். மொகலாய அரசர் ப்ரூக்ஷியார் இவரது பெயரில் நாணயங்கள் அமைக்க அனுமதியளித்தார். மேவாரிலிருந்து முன்பு பிரிந்து சென்ற பிரதேசங்களை மேவாருடன் இணைத்தார்.

ராணா‌ இரண்டாம் ஜெகத் சிங் (கி.பி.1734-1751) :

ராணா சங்கராம்க்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அவரின் மகன். இவரின் ஆட்சியில் இவரது உறவினரான ஜெய்ப்பூரின் முதலாம் மாதோ சிங்கினால் நிறைய தொல்லைகளை சந்தித்தார். ராஜ்மஹால் போர்களத்தில் இவர் ஜெய்ப்பூரிடம் தோற்றுப்போய் அவர்களுக்கு கப்பம் செலுத்த நிர்பந்திக்கப்பட்டார்.

ராணா இரண்டாம் பிரதாப் சிங் (கி.பி.1751-1754) :

இவர் இரண்டாம் ஜெகத் சிங்கின் மூத்த மகன். இவர் தந்தை மறைந்தவுடன் தனது 27வயதில் பட்டத்திற்கு வந்தார். இவர் மராத்தியர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அவர்களுக்கு கப்பம் கட்டினார். இவர் அம்பர் அரசரான ராஜா ஜெய் சிங்கின் மகளை மணந்தார். இவரது ஆட்சியில் தொடர்ச்சியான படையெடுப்புகளால் மூன்று வருடங்களிலையே இவரது ஆட்சி முடிந்தது.

ராணா இரண்டாம் ராஜ் சிங் (கி.பி.1754-1762) :

தந்தை இரண்டாம் பிரதாப் சிங் இறக்கும்போது இவரது வயது வெறும் 11 மட்டுமே. அந்த வயதிலையே அரியணை ஏறினார். இந்த நேரத்தில் மராத்தியர்களின் எழுச்சியால் மேவார் அரசு கொஞ்சம் கொஞ்சமாக அதன் பகுதிகளையும் இழந்து மராத்தியர்களுக்கு கப்பம் கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டது. இவரது திருமணத்திற்கு கூட கடன் வாங்கி தான் நடத்த வேண்டிய நிலையில் அரசு இருந்தது. தனது 18வது வயதில் வாரிசின்றி மறைந்தார்.

ராணா‌இரண்டாம் அரி சிங் (கி.பி.1762-1772)‌:

இரண்டாம் ராஜ் சிங்க்கு வாரிசு இல்லாததால் அவருக்கு பின் அவரது மாமாவான அரி சிங் பட்டத்திற்கு வந்தார்.  இரண்டாம் ராஜ் சிங் 18 வயதிலையே இறந்ததால் பட்டத்திற்கு ஆசைப்பட்டு அரி சிங் தான் அவரை கொன்றதாக மேவாரின் மற்ற தலைவர்கள் அவரை விட்டு ஓதுங்கினர். இந்த நேரத்தில் மராத்தியர்களின் தொல்லைகளும் நிறைய சூழ்ந்திருந்தது. மற்ற தலைவர்கள் அரி சிங்கை வீழ்த்தி இரண்டாம் ராஜ் சிங்கின் மரணத்திற்கு பிறகு அவருக்கு பிறந்த மகனான ரத்னா சிங்கை பட்டத்திற்கு கொண்டு வர ஆசைப்பட்டனர். ரத்னா சிங் கும்பல்கர்க் கோட்டையை பிடித்து அரி சிங்கிற்கு எதிராக அங்கிருந்து ஆட்சி புரிய தொடங்கினார். பின்னாட்களில் ரத்னா சிங் முறியடிக்கப்பட்டார். மராத்தியர்கள், சிந்தியாக்கள் மற்றும் ஹோல்கர்களின் படையெடுப்புகளால் மேவாரின் எல்லைகள் மட்டுமல்ல செல்வங்களும் கரைந்து போயிற்று. தனது பதவியை காப்பாற்ற அரி சிங் ஹோல்கர்களிடம் நிம்பஹேரா மாவட்டத்தை கொடுத்தார். மஹாரானா அரி சிங் புண்டி அரசரால் கொல்லப்பட்டார்.

ராணா இரண்டாம் ஹமீர் சிங் (கி.பி.1772-1778) :

மஹாரானா அரி சிங் மரணத்திற்கு பின்பு அவரின் மகனான இரண்டாம் ஹமீர் சிங் தனது 11வயதில் அரசராக பதவியேற்றார். இளைய வயதில் பொறுப்பேற்றதால் அவருக்கு பதிலாக மஹாராஜ் பாக் சிங் மற்றும் மஹாராஜ் அர்ஜீன் சிங் ஆகியோர் நிர்வாகத்தை நடத்தினார்கள். பின்னர் இவரது தாயார் குன்வர் ஜீலி நிர்வாகத்தை கவனித்தார். இவரும் 16 வது வயதிலையே மரணமடைந்தார். அதனால் இவருக்கு பின்னர் இவரின் சகோதரரான பத்து வயது பீம்சிங் பட்டத்திற்கு வந்தார். இவரது 6 வருட ஆட்சியில் சித்தூரை மீட்டுக் கொண்டார். இவரது அமைச்சரான அமர்சந்த் பரூவா சிந்தியர்களின் உதவிகொண்டு உதய்ப்பூரிலிருந்து மராத்தியர்களை விரட்டியடித்தார். பின்னர் இவருக்கும் இரண்டாம் ஹமீர் சிங்கின் தாயாருக்கும் நடைபெற்ற மோதல்களால் அமர்சந்த் பரூவா விஷம் வைத்து கொல்லப்பட்டார்.

ராணா பீம் சிங் (கி.பி.1778-1828) :

இவரது அண்ணனான இரண்டாம் ஹமீர் சிங் மறைவுக்கு பின் அரசுக்கு வந்த இவரது நிர்வாகத்தை இவரின் தாயாரான குன்வர் ஜீலியே நடத்தினார். இவரின் 50 ஆண்டுகால ஆட்சியில் மேவாரில் நிலைபெற்றிருந்த மராத்தியர்கள் வசதி படைத்தவர்களிடமிருந்து கொள்ளையை ஆரம்பித்தனர். மஹாரானா பீம்சிங் தனது திருமணத்திற்கு கூட கோட்டா சமஸ்தானத்து அரசரிடம் கடன் பெற்று தான் நடத்தினார். இவருக்கு மொத்தம் 32 மகன்கள். மராத்தியர்களை முறியடிக்க பிரிட்டிஷாரின் உதவியை நாடினார். இதனால் உதய்பூரில் பிரிட்டிஷ் ஏஜென்ட் வந்து தங்கியிருந்து கவனிக்க ஆரம்பித்தார். வருமானத்தின் 1/4 பகுதியை பிரிட்டிஷாருக்கு கப்பமாக கட்டினார்.பிரிட்டிஷ் நிர்வாகத்தில் மேவாரின் நிதிநிலைமை நன்கு கூடியது. 50 வருடங்கள் ஆண்டு தனது 60வது வயதில் இறந்த பீம்சிங்கிற்கு பின் மேவார் பிரிட்டிஷ்காரர்களின் கைகளுக்கு போயிற்று.

ராணா‌ ஜவான் சிங் (கி.பி.1828-1838) :

மஹாரானா பீம்சிங்கிற்கு பின்னர் அவரது மகனான இவர் 26வது மேவார் அரசராக பொறுப்பேற்றார். இவர் பதவியேற்கும் போது மேவாரின் நிதிநிலைமை மோசமாகவும் குறைந்த சொத்துகளுமே இருந்தது. நிதிநிலையை சீராக்க இவரும் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. 10 வருடங்கள் ஆண்ட இவர் வாரிசில்லாமல் மறைந்தார்.

ராணா சர்தார் சிங் (கி.பி.1838-1842) :

ஜவான்சிங் வாரிசில்லாமல் இறந்ததால் சிதோதயர்களின் பாகுர் கிளையை சேர்ந்த சிவாதன் சிங்கின் மகனான சர்தார் சிங் அடுத்த அரசராக 3 ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்தார்.

ராணா ஸ்வரூப் சிங் (கி.பி.1842-1861) :

சர்தார் சிங் வாரிசில்லாமல் இறந்ததால் அவருக்கு பின் அவரது சகோதரரான ஸ்வரூப் சிங் அடுத்த அரசராக பதவியேற்றார். இவர் பதவிக்கு வந்து நிறைய நிர்வாக சீர்த்திருத்தங்களை பண்ணினார். நிறைய புதிய வடிவில் நாணயங்களை கொண்டுவந்தார். மேவாரில் சதி முறையை ஒழித்தார். இவர் பிரிட்டிஷாருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். பிரிட்டிஷ் அகதிகளை தனது ஜக் மந்திர் மாளிகையில் வைத்து பாதுகாப்பு கொடுத்தார். இதனால் இவர் பிரிட்டிஷ்ஷாரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். தனது முன்னோர்கள் ஆண்ட நிம்பஹேராவை படைகளை அனுப்பி மீட்டார். இவர் கி.பி.1861ல் மேவாரின் பாகுர் கிளையை சேர்ந்த மஹாரானா இரண்டாம் சங்க்ராம் சிங்கின் வழிதோன்றலான ஷர்துல் சிங்கின் மகனான சம்பூ சிங்கை தனது வாரிசாக ஏற்று சில மாதங்களில் இவர் மறைந்தார்.

ராணா சம்பூ சிங் (கி.பி.1861-1874)  :

இவர் மஹாராணா ஸ்வரூப் சிங்கின் வளர்ப்பு மகன்.இவர் சிறுவயதில் பதவியேற்றார் பிரிட்டிஷ்காரர்கள் அவருக்கு துணையாக ஏஜென்ட்டை நியமித்தனர். இவரது ஆட்சியில் நிதிநிலைமை சீராக இருந்தது. இவரது ஆட்சியில் இராணுவம் சீரமைக்கப்பட்டது.  புதிய சாலைகளும் மற்றும் புதிய இரயில்தடங்களும் அமைக்கப்பட்டது. இவர் தான் பெண்களுக்கான பள்ளிகூடத்தை ஆரம்பித்து வைத்தார். மேலும் எல்லோரும் கல்வி கற்கலாம் என்று அனைவரையும் படிப்பதற்கு ஊக்குவித்தார். இவரது ஆட்சியில் சதியை கட்டுபடுத்த அதற்கான தண்டனை தொகையை அதிகப்படுத்தினார். நல்ல சீர்த்திருங்களை கொண்டு வந்த இவர் தனது இளைய வயதில் 27வது வயதில் வாரிசில்லாமல் இறந்தார்.

ராணா சஜ்ஜன் சிங் (கி.பி.1874-1884) :

இவர் மஹாராணா சம்பூ சிங்கின் உறவினர். அவரால் தத்தெடுக்கப்பட்டவர். மைனராக இருந்ததால் ஏஜென்ட் மூலம் அரசை நடத்தினார். இவருடைய ஆட்சியில் நிறைய சாலைகள், கட்டிடங்கள், ரயில்பாதைகள் மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவை மேம்படுத்தப்பட்டது. இஜ்லாஸ்-இ-காஸ் என்னும் அப்பீல் கேட்கும் முறையை நீதித்துறையில் சிவில் சட்டங்களில் ஏற்படுத்தினார். கையூட்டு வாங்கும் மற்றும் நிதிமோசடி செய்யும் ஊழியர்களை பதவியிலிருந்து நீக்கினார். வெள்ளக் காலங்களில் பிச்சாலா ஏரியை மூழ்குவதிலிருந்து திட்டம் வகுத்து உதய்பூர் நகரை அழகுபடுத்தினார். இவரே கவிஞராக நிறைய பாடல்களை இயற்றியுள்ளார். நிறைய போக் இசை, காயல் மற்றும் கசல் இசையில் ஸ்வரங்களை வடிவமைத்துள்ளார். தனது 10 வருட ஆட்சியில் மேவாருக்கு நிறைய திட்டங்கள் தீட்டி முன்னேற்றினார்.

ராணா பதேஹ் சிங் (கி.பி.1884-1930)‌‌‌ :

சஜ்ஜன் சிங்கினால் தத்தெடுக்கப்பட்டவர். திவாளி ஏரியில் கன்னாட் அணையை கட்டினார். அது இன்று பஃதேசாகர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சித்தூர் கோட்டையில் பஃதே பிரகாஷ் அரண்மனையை கட்டியவர் இவரே.  இவர் விஜபிகளுக்கும் விருந்தின அரசர்கள் தங்குவதற்கும் "சிவ் நிவாஸ்" என்ற மாளிகையை கட்டினார். கி.பி.1903 &1911 ஆகிய வருடங்களில் பிரிட்டிஷ்ஷாரால் கூட்டப்பட்ட டெல்லி தர்பாரில் கலந்து கொள்ளாத ஓரே மன்னர் இவரே. ஏனென்றால் இவர் மஹாராணியால் தேர்தெடுக்கப்படவில்லை என்றும் தான் ஒரு சூர்யவம்ஸியை சேர்ந்த மன்னர் என்பதாலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் பிரிட்டிஷார் இவருக்கு நெருக்கடி கொடுத்து பதவி விலகச் சொன்னார்கள். ஆனாலும் இவர் பதவி விலகவில்லை. 9 வருடங்கள் நெருக்கடி கொடுத்து பின்னர் அவரது வாரிசான பூபால் சிங்கை நிர்வாகத்தை நடத்த வைத்தார்கள்.

ராணா பூபால் சிங் (கி.பி.1930-1955) :

கி.பி.1921ல் பஃதே சிங் ஆங்கிலேயர்களால் அதிகாரத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வெடுக்க அவருக்கு பின்னர் அவரின் மகனான பூபால்சிங் அவருக்கு பதிலாக ஆட்சியை நடத்தினார். இவருக்கு 16 வயதில் இடுப்புக்கீழ் பக்கவாதம் ஏற்பட்டு நடக்க முடியாதவர் ஆனாலும் தன்னுடைய நம்பிக்கையை இழக்கவில்லை. ஆரவல்லி மலைத்தொடரில் பூபால்சிங் டேம் கட்டினார். சுதந்திரத்திற்கு பிறகு தன்னுடைய சமஸ்தானத்தை இராஜஸ்தான் மாநிலத்துடன் இணைத்து ராஜ்பிரமுக் இராஜஸ்தான் என்று பட்டத்தையும் பின்னர் மஹாராஜ்பிரமுக் என்ற பட்டத்தையும் பெற்றார். 25 ஆண்டுகள் ஆண்ட இவர் 1955ல் வாரிசு இல்லாததால் பாஹ்வந்த் சிங்கை தன்னுடைய வாரிசாக அறிவித்து மறைந்தார்.

ராணா பாஹ்வந்த் சிங் (கி.பி.1955-1985) :

இவர் பதவிக்கு வந்த சமயத்தில் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தது. அந்த விதத்தில் இராஜஸ்தான் என்று தனி மாநிலம் உதயமாயிற்று. அரசர்களின் பதவிகள் பிடுங்கப்பட்டு அவர்களும் சாதாரண மனிதர்களாயினர். இவர் ஜக் நிவாஸ்ஸை லேக் பேலஸ் ஹோடடலாக மாற்றி வியாபாரம் செய்யவும் தன்னுடைய சொத்துகளை விற்று டிரஸ்ட் அமைப்பாகவும் ஆக்கிக் கொண்டு மக்கள் நலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மேவார் வம்சத்தின் கடைசி அரசர் இவரே. இவரோடு மேவார் பரம்பரை முடிவுக்கு வந்தது.

உதவிய நூல்கள்:

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

மொகலாயர்கள் - முகில்

மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா

எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்

ராணா ஹமீர் - சாண்டில்யன்

மொகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்

விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல்கள்

படங்கள் :

திருமுத்துகுமரன் 

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு