38) பரமரர்கள் பேரரசு
பரமரர்கள் (காலம் கி.பி.805-1305)
பரமரா அரசு இன்றைய மத்தியபிரதேசத்தை (மாள்வா) தலையிடமாக கொண்டு மேற்கு மற்றும் மத்திய இந்தியாவை ஆண்ட அரசர்கள். இவர்கள் 9ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலையே மான்யகேடாவை (Mankhed) ஆண்ட இராஷ்டிரகூடர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்தவர்கள். ஆரம்பகால பரமரா அரசர்களின் கல்வெட்டுகள் 10ம் நூற்றாண்டில் ஆண்ட சியாகா என்பவரால் ஏற்படுத்தப்பட்டவை குஜராத்தில் கிடைத்துள்ளது.
கி.பி.972ல் சியாகா மான்யகேடயத்தை தாக்கி இராஷ்டிரகூடர்களை வென்று பரமரா அரசை தனியாட்சியாக ஆரம்பித்து வைத்தார். அவருக்கு பின் வந்த முஞ்சா என்பவரின் ஆட்சியில் தான் இன்றைய மத்திய பிரதேசத்தின் தாரா (Dhar) வை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிய ஆரம்பித்தனர். பரமரா அரசு மிகப்பெரிய உச்சம் கண்டது முஞ்சாவுக்கு பின் வந்த அவரின் உறவினரான போஜா என்பவரின் ஆட்சியில் தான்.இவரது ஆட்சியில் பேரரசு வடக்கே இராஜஸ்தானின் சித்தூர்கார்க் வரையும் தெற்கே கொங்கண் பிரதேசம் வரையும் மேற்கே சபர்மதி ஆறு வரையும் கிழக்கே விதிஷா வரையும் பரவியிருந்தது.
பரமரா ஆட்சியாளர்கள் நிறைய முறை தங்களது அரசுகளை இழந்தும் பின்னர் மீண்டும் துளிர்த்து எழுந்து ஆட்சியை கைப்பற்றிக் கொண்டதும் நடந்துள்ளது. இவர்களது ஆட்சிக்கு கல்யாணியை ஆண்ட மேற்கு சாளுக்கியர்கள், குஜராத் சாளுக்கியர்களான சோலங்கி வம்ச அரசர்கள், திரிபுராயை ஆண்ட காலச்சூரிகள் மற்றும் சந்தல வம்ச அரசர்களுடன் நிறைய மோதல்களும் போர்களும் தொடர்ந்து இருந்தது. பின்னால் வந்த பரமரா அரசர்கள் தங்கள் தலைநகரை மண்டப துர்கா(இன்றைய Mandu) வுக்கு தலைநகரை மாற்றினர். மஹாலக்கதேவா என்பவரே பரமரா வம்சத்தில் கடைசி அரசராக பதிவாகியுள்ளார். கி.பி.1305ல் டெல்லியை ஆண்ட அலாவூதின் கில்ஜியினால் போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஆனாலும் அதற்கு பிறகும் அவரின் இறப்பிற்குப் பிறகும் பரமரா ஆட்சி சில வருடங்களுக்கு தொடர்ந்ததாக தெரிகிறது. மால்வா இவர்களின் காலத்தில் அரசியல் மற்றும் கலாச்சார பெருமையின் உச்சத்தில் இருந்தது. பரமரர்கள் சமஸ்கிருத புலவர்களையும் பண்டிதர்களையும் ஆதரித்தார்கள். ஏன் அவர்களின் அரசனான போஜா என்பவரே சிறந்த புலவராக விளங்கினார். பரமரர்கள் சைவத்தை கடைபிடித்தவர்கள் என்பதால் நிறைய சிவன் கோவில்களை கட்டினார்கள் மட்டுமல்லாது சமணர்களுக்கும் நிறைய உதவியுள்ளார்கள்.
பரமரா வம்சத்து அரச கிளைகள்:
சந்திராவதி பரமரா:
இவர்கள் அற்புத-மண்டலாவை (மவுண்ட் அபு) ஆட்சி செய்தவர்கள். குஜராத் சாளுக்கியர்களான சோலங்கி வம்ச அரசர்களின் கீழ் கி.பி.12ம் நூற்றாண்டில் சிற்றரசர்களாக மாறிப்போயினர்.
பின்மால்-கிரடு பரமரா:
இவர்கள் சந்திராவதி-பரமரா வம்சத்திலிருந்து பிரிந்தவர்கள். அவர்களைப் போல் கி.பி.12ம் நூற்றாண்டில் சாளுக்கிய சோலங்கி வம்சத்தின் கீழ் சிற்றரசாகினர்.
ஜாலோர் பரமரா:
இவர்களும் சந்திராவதி-பரமரா விலிருந்து பிரிந்தவர்கள் தான். ஜாலோர் சாஹ்மானாக்களின் கீழ் அடங்கிப்போயினர்.
வாகதா பரமரா:
இவர்கள் ஆர்த்துனாவை ஆண்டவர்கள். மாள்வாவை ஆண்ட பரமரர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்தவர்கள்.
இவர்களை தவிர மேலும் பல மாநிலங்களில் உள்ள பரமரர்களின் தொடர்புகளும் அவர்களின் கிளைகளும்
பாஹால்:
இதை ஆரம்பித்தவர் அஜப்தேவ் பார்மர். இது இன்றைய ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உஜ்ஜையினியில் கி.பி.14ம் நூற்றாண்டில் இருந்தவர்கள்
தண்டா:
இவர்களும் பரமரர்களின் கிளையில் வந்தவர்கள் தான். உஜ்ஜையினியின் விக்ரமாதித்யா காலத்தில் காணாமற்போயினர்.
திவாஸ் :
இவர் மராத்தியர்களின் ஆதிக்கத்தில் வீழ்ச்சியுற்றனர்.
தார்:
இதை தோற்றுவித்தவர் ஆனந்த் ராவ் பவுர். இவரும் பேஷ்வா முதலாம் பாஜி ராவ் கீழ் அடங்கிய சிற்றரசாக போயினர்.
காங்பூர்:
இவர்களும் பரமரர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் உறுதியான ஆதாரம் இல்லை.
முளி:
இவர்கள் பரமரர்களின் வீழ்ச்சிக்கு பின் வகேலா வம்சத்தின் கீழ் சிற்றரசர்களாக போயினர்.
நார்சிங்கார்க்:
ஜெகதீஷ்பூர் மற்றும் தும்ரான்:
இன்றைய பீகாரின் போஜ்பூர் மாவட்டத்திலுள்ள இராஜபுத்திரர்கள்
பிஜோலியா:
இன்றைய இராஜஸ்தான் மாநிலத்திலுள்ளது. இது தான் இராஜபுத்திர பரமரர்களின் தலைமையிடமாகும். இதை ஜக்நோரை (இன்றைய உத்திரபிரதேசம்) ஆண்ட ராவ் அசோக் பார்மரின் கீழ் வந்தது.
உபேந்திரா (கி.பி.9ம் நூற்றாண்டு)
இராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கோவிந்தா மாள்வாவை ஆண்ட குர்ஜர-பிரதிஹரர்களை வென்று அதை தனக்கு கீழ் ஆள ஓரு ஆளுநரை நியமித்தார். அவர் தான் உபேந்திரா என்று மூன்றாம் கோவிந்தாவின் மகனான முதலாம் அமோகவர்ஷா கி.பி.871ல் பொறிக்கப்பட்ட சஞ்சன் தாமிரதகட்டில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு கிருஷ்ணராஜா என்ற பெயரும் உண்டு. தாரா தான் பரமராக்களின் தலைநகராக இருந்தது.
வைரிசிம்ஹா (கி.பி.9ம் நூற்றாண்டு)
முதலாம் சியாகா (கி.பி.9ம் நூற்றாண்டு)
முதலாம் வாக்பதி (கி.பி.9-10 நூற்றாண்டு)
இரண்டாம் வைரிசிம்ஹா (கி.பி.10ம் நூற்றாண்டு) :
இவர் இராஷ்டிரகூடர்களின் கீழ் சிற்றரசராக இருந்தார். இவரது மகனான இரண்டாம் சியாகா என்பவரே பரமரர்களின் அரசை துவக்கி வைத்தார்.
இரண்டாம் சியாகா என்ற ஹர்ஷா (கி.பி.948-972) :
பரமரா வம்சத்தில் இரண்டாம் சியாகா தான் தனித்த சுதந்திர பரமரா வம்சத்து ஆட்சியை தொடங்கி வைத்தார். இவர் மான்யகேடா இராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக இருந்து இராஷ்டிரகூட மூன்றாம் கிருஷ்ணா மறைவுக்கு பின்னர் புதிய அரசர் கொட்டிகாவை எதிர்த்து தனியரசை தொடங்கி இராஷ்டிரகூட தலைநகரான மான்யகேதாவை கைப்பற்றி போரில் கொட்டிகாவை கொன்று பரமர ஆட்சியை தொடங்கி வைத்தார். ஹர்ஷ சிம்ஹா என்ற இயற்பெயருடைய இவர் இரண்டாம் சியாகா என்றே அழைக்கப்பட்டார். ஆனால் சிலர் சியாகா பிரதிஹரர்களின் சிறற்ரசராக இருந்து அவர்கள் வீழ்ச்சியுறும் நேரத்தில் இராஷ்டிரகூர சிற்றரசராக இருந்தவர் என்றும் கூறுகின்றனர். இவரது ஆட்சி வடக்கே இராஜஸ்தானின் பன்ஸ்வாரா முதல் தெற்கே நர்மதை நதி வரையும் மேற்கே குஜராத்தின் கேடா முதல் கிழக்கே மத்திய பிரதேசத்தின் விதிஷா வரையும் பரவியிருந்தது.
இரண்டாம் வாக்பதி என்ற முஞ்சா (கி.பி.972-994) :
இவர் இரண்டாம் சியாகாவின் மூத்தமகன். சிலர் சியாகாவுக்கு குழந்தை இல்லாத நேரத்தில் புல்வெளியில் கிடைத்த குழந்தையான இவரை தன் மூத்த மகனாக வளர்த்தார். அதன் பிறகே அவருக்கு சிந்துராஜா என்ற மகன் பிறந்ததாகவும் ஆனாலும் தனக்கு பிறகு முஞ்சாவே வாரிசு என்று அறிவித்ததாகவும் கூறுகின்றனர். ஆனாலும் மற்ற வரலாற்று அறிஞர்கள் இருவரும் சியாகாவுக்கு பிறந்தவர்கள் என்று மறுத்து கூறுகின்றனர். இவருக்கு அமோகவர்ஷா, ஶ்ரீவல்லபா மற்றும் பிருத்வி-வல்லபா என்ற பட்டங்களும் பெற்றிருந்தார். உதய்ப்பூர் கல்வெட்டுகளில் இவர் காலச்சூரிகளின் இரண்டாம் யுவராஜாவை வென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் தெற்கு குஜராத் பகுதியான "லத்தா", கர்நாடகா, கேரளா மற்றும் சோழ அரசர்களை தோற்கடித்ததாக தெரிகிறது. இவர் சாளுக்கிய அரசன் இரண்டாம் தைலப்பாவை 16முறை தோற்கடித்ததாகவும் 17வது இவர் தோற்று அந்த போரில் இறந்து போனதாகவும் தெரிகிறது. இவர் கி.பி.994-998க்குள் இறந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிந்துராஜா (கி.பி.994-1010) :
இவர் இரண்டாம் சியாகாவின் இரண்டாவது மகன். அண்ணனான முஞ்சாவுக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் இவர். நவசாகசங்கசரித்ராவை எழுதிய பத்மகுப்தா இவர் அண்ணனுக்கு பின் ஆட்சிக்கு வந்ததை குறிப்பிட்டுள்ளார். இவர் குந்தள அரசரை போரில் வென்றார். முஞ்சா ஆட்சியில் கல்யாணி சாளுக்கியர்களிடம் இழந்த பகுதிகளை இவர் மீட்டுக் கொண்டார். இவர் ஹூணர்கள்,வாகத,முரள, லத்தா, அபராந்தா மற்றும் கோசல அரசுகளை வென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் குஜராத் சாளுக்கிய சாமுண்டாராஜாவுடன் நடத்திய போரில் தோல்வியுற்று மரணமடைந்தார்.
போஜா (கி.பி.1010-1055) :
சிந்துராஜாவுக்கு பின் பட்டத்திற்கு ஏறிய இவர் சிந்துராஜாவின் மகனாவார். முஞ்சா அரசாண்ட காலத்தில் இவரை மகாமாயா கோயிலில் வைத்து கொல்ல உத்தரவிட்டும் அவரது ஆட்கள் இவரை கொல்லாமல் வேறு ஒருவரின் தலையை வெட்டி முஞ்சாவை ஏமாற்றினர். பின்னாளில் மனம் மாறி முஞ்சாவே போஜாவை இளவரசனாக அறிவித்தார். இவையெல்லாம் சற்று உயர்த்தி கூறப்பட்ட கட்டுகதைகளே என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். உதய்ப்பூர் கல்வெட்டுகளில் இவர் கைலாஷ் மலை மற்றும் மலாயா மலைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளை தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் கல்யாணியை ஆண்ட சாளுக்கியரான ஜந்தாம் விக்ரமாதித்யாவை வென்றார். இவர் திரிபுரி காலச்சூரிகளின் காங்கேயதேவாவை வென்று தன்னுடைய அரசாட்சியை கன்னோசி வரை நீட்டித்தார். மேலும் இவர் மேல் சாளுக்கிய அரசனான கீர்த்தி ராஜாவையும் குஜராத் சாளுக்கியரான சோலங்கி வம்ச பீமாவையும் தோற்கடித்தார். இவரின் ஆட்சியில் இடைவிடாத நடந்த போர்களால் இவர்களின் வலிமை குறைந்தது. முதலாம் சோமேஸ்வராவிடம் தோற்றுப்போய் அவரால் மாள்வா கொள்ளையடிக்கப்பட்டது.
இவருக்கு கவிராஜா மாளவசக்ரவர்த்தி என்று பட்டமும் உண்டு. தாரா வில் ஓரு பல்கலைகழகத்தை ஆரம்பித்தார். இவர் ஓரு பண்டிதர் மட்டுமின்றி கவிஞரும் கூட. அதனால் தான் தனபாலா, பிரபாசந்திரா சூரி மற்றும் விஜ்னேஷ்வரா போன்ற புலவர்களை ஆதரித்தார். இவர் "இராஜமிருங்கா","ஆயுர்வேத சர்வாஸ்வா""வ்யவரசமுசய","சப்தனுசாசன", நூல்கள் எழுதியுள்ளார். போஜ்பூரி நகரத்தை நிர்மாணித்தவரும் இவரே. போஜ்பூர் ஏரியையும் இவரே கட்டினார். தாரா வில் உள்ள சரஸ்வதி கோயிலும் இவரால் கட்டப்பட்டது. இவர் 55 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தார். இவர் குஜராத் சாளுக்கிய சோலங்கி வம்ச முதலாம் பீமா மற்றும் காலச்சூரி அரசர் லக்ஷ்மிகர்ணாவின் இணைந்த படைகளுடன் நடைபெற்ற போரில் தோற்கடிக்கப்பட்டு போரில் மாண்டு போனார் என்றும் இருவரும் இவர் மரணமடைந்த தருவாயில் போரிட்டு மாள்வாவை கைப்பற்றினர் என்றும் கூறுகின்றனர். இவர் போஜ்பூர் என்ற நகரை ஸ்தாபித்தார். அங்கு போஜஷ்வர் ஆலயத்தை கட்டினார்.
பெட்வா நதியில் முதல் அணையை கட்டினார். இரண்டாவது அணை மலைக்கும் இன்றைய மெண்டூவா கிராமத்திற்கும் இடையிலும் மூன்றாவது அணை இன்றைய போபாலிலும் கட்டினார்.
இவர் "போஜ் சாலா" என்ற பெயரில் தாரா நகரில் சரஸ்வதி கோயிலும் அதனுள்ளே சமஸ்கிருத படிப்புகளுக்கான பாடசாலைகளையும் அமைத்தார். போபால் நகரம் இவரது பெயரை தான் தாங்கி வருகிறது என்றும் இன்னொரு அரசரான பூபாலா என்பவரின் பெயரில் தான் வந்தது என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு. இவர் மொத்தம் 84 புத்தகங்களை எழுதியுள்ளார். போஜாவுக்கு பின்னர் பரமரர்களின் ஆட்சி விழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது.
முதலாம் ஜெயசிம்ஹா (கி.பி.1055-1070) :
போஜாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இவர் அவரது மகன் என்று கூறுகின்றனர். போஜாவின் மரணத்தின் போது சோலங்கி பீமா மற்றும் காலச்சூரி கர்ணாவால் மாளவம் தாக்குதலுக்கு உள்ளானதால் இவருக்கும் போஜாவின் சகோதரரான உதயாதித்யாவுக்கும் வாரிசு போட்டி ஏற்பட்ட போது கல்யாணி சாளுக்கியரான ஆறாம் விக்ரமாதித்யா உதவியால் ஆட்சியை தக்கவைத்து கொண்டதாக தெரிகிறது. பின்னர் முதலாம் சோமேஸ்வரா மறைவுக்கு பின்னர் சாளுக்கிய வம்சத்தில் அரியணை போட்டியில் இரண்டாம் சோமுஸ்வராவுக்கு எதிராக ஆறாம் விக்ரமாதித்யாவுக்கு துணையாக நடத்திய போரில் இவர் இறந்து போயிருக்கலாம் என்ற நம்பப்படுகிறது.
உதயாதித்யா (கி.பி.1070-1093) :
இவர் போஜாவின் இளைய சகோதரர். போஜாவின் மறைவுக்கு பின்னர் ஆட்சியேற அரியணை போட்டியில் இவரை தோற்கடித்து முதலாம் ஜெயசிம்ஹா அரியணை ஏறினார். பின்னர் கல்யாணி சாளுக்கியரின் அரியணை போட்டியிலான போரில் அவர் கொல்லப்பட இவர் அரியணை ஏறினார்.இவரின் மூத்த மகனான லக்ஷ்ம தேவா கி.பி.1080ல் அரியணை ஏறியதை பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனாலும் சில இடங்களில் இவரின் பெயர் இடம்பெற்றுள்ளதால் இளவரசாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இவருக்கு லக்ஷ்ம தேவா, நரவர்மன் மற்றும் ஜகதேவன் என்ற மூன்று மகன்களும் சியாமளா தேவி என்ற மகளும் உண்டு. மகளான சியாமளா தேவி மேவார் வம்சத்து அரசரை மணந்தார். சில குறிப்புகளின் படி இவரது மூத்த மகன் லக்ஷ்ம தேவா இவருக்கு பின்னர் அரியணை ஏறியதாகவும் அவருக்கு பின்னர் அவரது சகோதரர் நரவர்மன் அரியணை ஏறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உதயாதித்யாவுக்கு பிறகு அவரது இரண்டாவது மகன் நரவர்மனே அரியணை ஏறியதாக குறிப்புகளும் உள்ளது.
நரவர்மன் (கி.பி.1094-1130) :
இவர் உதயாதித்யாவின் இரண்டாவது மகன். அவருக்கு பின்னர் ஆட்சி ஏறினார். இவரது ஆட்சியில் பல போர்களின் தோல்வியால் பரமர ஆட்சி வீழ்ச்சியுற ஆரம்பித்தது. மாளவத்தின் வடகிழக்கு பகுதியை ஆண்ட சந்தளர்களால் இவர் தோற்கடிக்கப்பட்டார். சாகம்பரி சாஹமானக்களின் அரசனான இரண்டாம் அஜயராஜா போரில் இவரை தோற்கடித்து இவரது மூன்று தளபதிகளை வெட்டி கொன்றார். நாடுல்லா சாஹமானா கிளை அரசர் ஆஷாராஜா மாளவத்தின் மீது படையெடுக்கும் போது கோட்டையில் ஒளிந்து கொண்டு தூதனுப்பி அவரை படையை விலக்க வைத்தார். இவரது ஆட்சியில் உஜ்ஜையினி அரசர் தன்னை மஹாராஜாதிராஜா என்று அழைத்து கொண்டதிலிருந்து பரமர ஆட்சி முற்றிலுமாக பலவீனப்பட்டது வெளிப்படையாக தெரிகிறது.
யசோவர்மன் (கி.பி.1133-1142) :
நரவர்மனின் மகனான இவர் தந்தைக்கு பின்னர் அரியணை ஏறினார். அரியணை ஏறியவுடன் சந்தள அரசர் மதனவர்மன் இவரது ஆட்சியின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றி கொண்டார். அந்த நேரத்தில் குஜராத் சாளுக்கிய சோலங்கி வம்சத்து சித்தராஜ் ஜெயசிம்ஹாவுடன் நடந்த போரில் தோற்று அவரிடம் கைதியாகி பின்னர் அவருக்கு கட்டுப்பட்ட சிற்றரசராக ஆட்சி புரிந்தார். தாரா மற்றும் உஜ்ஜையினி மட்டுமே இவரின் ஆட்சியின் கீழ் கி.பி.1136-1143 வரை இருந்தது.
முதலாம் ஜெயவர்மன் (கி.பி.1142-1143) :
யசோவர்மனுக்கு பிறகு அவரது மகனான இவர் ஆட்சிக்கு வந்தார். இவர் சாளுக்கியரிடமிருந்து தாராவை கைப்பற்றி ஆட்சி புரிந்தாலும் பல்லாளா என்ற புரட்சியாளர் இவரை விரட்டியடித்து தாராவை கைப்பற்ற இவர் போபாலுக்கு நகர்ந்தார்.
(1143-1175) இந்த காலத்தில் பல்லாளா என்பவர் மால்வா வை கைப்பற்றினார். அவரிடமிருந்து குஜராத்தின் சாளுக்கியர்களான சோலாங்கி வம்ச அரசரான குமாரபாலாவின் கீழ் மால்வா வந்தது.
விந்திய வர்மன் (கி.பி.1175-1194) :
முதலாம் ஜெயவர்மனின் மகனான இவர் இரண்டாம் மூல ராஜாவின் ஆட்சியின் போது சாளுக்கிய சோலங்கி ஆட்சியிலிருந்து விடுபட்டு அவர்களை தோற்கடித்து மீண்டும் மாளவத்தை கைப்பற்றி ஆட்சி புரிந்தார் என்று சொல்லுகின்றனர். இவரது ஆட்சியில் தேவகிரி யாதவர்கள் மற்றும் ஹொய்சாலர்களின் படையெடுப்புகள் தொடர்ந்து நடந்தது. சாளுக்கிய தளபதியான குமாரா என்பவரிடம் இவர் தோற்றாலும் பரமரர்களின் ஆட்சி மாளவத்தில் தொடர்ந்து நடந்தது. கி.பி.1192ல் தனது தலைநகரான தாராவை கைப்பற்றினார். இவரது அவையில் இருந்த பில்ஹானா "விஷ்ணுஸ்தோத்திரா" எழுதினார். மேலும் இவர் சமண புலவர் ஆச்சார்ய மஹாவீரா என்பவரையும் ஆதரித்தார்.
சுபாதவர்மன் (கி.பி.1194-1209) :
விந்திய வர்மனுக்கு பிறகு ஆட்சியேறிய இவர் அவரின் மகன். இவரது காலத்தில் சோலங்கி வம்சம் கோரி முகமதுவின் தளபதியான குத்புதீன் ஐ-பெக்கால் சூறையாடப்பட்டதால் அவர்கள் வலுவிழந்து நின்ற சமயத்தில் தெற்கு குஜராத் பகுதியான லத்தாவை கைப்பற்றி கொண்டார். இவர் காம்பத் நகரில் அரபு வணிகர்களுக்காக கட்டப்பட்ட மசூதியை சூறையாடினார். ஶ்ரீதரா என்ற சாளுக்கிய தளபதி இவரது தாக்குதலிருந்து தனது கோட்டையை காப்பாற்றினார். பின்னர் தோல்காவின் லவனபிரசாதா இவரை விரட்டியடித்தார் என்று தெரிகிறது. பின்னர் இவர் யாதவர்களின் அரசர் ஜெய்துகியால் தோற்கடிக்கப்பட்டார் என்றும் ஜெய்துகி இவர் குஜராத் படையெடுப்பின் போது தாரா நகரை தாக்கி சூறையாடினார் என்றும் கூறப்படுகிறது. இவர் இரண்டு தோட்டங்களை விஷ்ணு கோயிலுக்கு தானமாக அளித்தார். இவருக்கு பின்னர் இவர் மகன் அர்ஜூனவர்மன் ஆட்சி ஏறினார்.
அர்ஜீனவர்மன் (கி.பி.1210-1215) :
தந்தைக்கு பின்னர் ஆட்சியேறிய இவர் குஜராத் மீது படையெடுத்து சோலங்கி வம்ச ஜெயந்த சிம்ஹாவை தோற்கடித்தார். பின்னர் சமாதான உடன்படிக்கை கொண்டு ஜெயந்த சிம்ஹாவின் மகளான ஜெயஶ்ரீயை மணந்து கொண்டார். யாதவர்களின் அரசனான சிம்ஹானா லத்தாவின் மீது படையெடுத்து வர இவரின் தளபதி அவரை விரட்டியடிக்க பின்னர் அவர் மீண்டும் படையெடுத்து வந்து லத்தாவை கைப்பற்றினார். அர்ஜூனவர்மன் ஹொய்சால இளவரசியான சர்வகலாவையும் மணந்தார். யாதவர்களின் சிம்ஹானா பரமர ராஜ்ஜியத்தின் மீது கி.பி.1215ல் போர்தொடுத்தார். இந்த போரில் அர்ஜூன வர்மன் இறந்தார்.
தேவபாலா (கி.பி.1218-1239) :
அர்ஜூனவர்மனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த இவர் அவரின் மகனல்ல. பரமர வம்சத்து தளபதியான மஹாகுமார ஹரீஷ் சந்திரா என்பவரின் மகன். சோலங்கிகள் மற்றும் தேவகிரி யாதவர்களுடன் இவருக்கு மோதல்கள் தொடர்ந்து நடந்தது. யாதவ அரசன் சிம்ஹானா லத்தாவின் மீது படையெடுத்து அதை கைப்பற்றி கொண்டார். கி.பி.1233-34ல் டெல்லி சுல்தானான இல்டூமிஷ் விதிஷாவை கைப்பற்றி பைலஷ்வாமின் கோயிலை இடித்து தரைமட்டமாக்கினார். இந்த போரில் இவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டாலும் திரும்பவும் இவர் விதிஷாவை கைப்பற்றிய செய்திகளால் அது உண்மையில்லை என்று தெரிகிறது. ரன்தம்போரின் வாகபட்டா இல்டூமிஷ்ஷால் தோற்கடிக்கப்பட்டு இவரிடம் அடைக்கலம் தேடி வந்தார். இவர் டெல்லி சுல்தானிடம் அவரை ஒப்படைப்பதாக கருதிக்கொண்டு சந்தேகத்தினால் வாகபட்டா இவரை கொலை செய்தார்.
ஜெய்துகி தேவா (கி.பி.1239-1255) :
இவர் தேவபாலாவின் மூத்தமகன். தந்தையின் மரணத்திற்கு பின்னர் ஆட்சி ஏறினார். இவரது காலத்தில் யாதவர்களின் அரசரான கிருஷ்ணா, டெல்லி சுல்தானான பால்பன் மற்றும் வகேலா வம்சத்து அரசர் விஷால் தேவா ஆகியோரின் படையெடுப்புகளை மாளவம் சந்திக்க நேர்ந்தது. இந்த படையெடுப்புகள் பரமர அரசை பலவீனப்படுத்தியது. வகேலா வம்சத்து விஷால் தேவா இவரது தலைநகர் தாராவை கைப்பற்றி கப்பம் வசூலித்ததாக வகேலா வம்ச கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் ஜெயவர்மன் (கி.பி.1255-1274) :
இவர் தேவபாலாவின் இளையமகன். அண்ணன் ஜெய்துகி தேவாவிற்கு பின் பட்டத்திற்கு வந்தார். இவரது காலத்தில் தாராவை விட்டு நீங்கி மண்டூ நகரை தலைநகராக்கினார். மண்டூ நகரம் சுற்றிலும் மலை மற்றும் நர்மதா பள்ளதாக்கினால் சூழப்பட்டு இருந்ததால் இயற்கை பாதுகாப்பாக அமைந்தது. டெல்லி சுல்தான் பால்பன், யாதவர்கள் மற்றும் வகேலா விஷால்தேவா ஆகியோரின் படையெடுப்புகளை சந்திக்க நேர்ந்தது.
இரண்டாம் அர்ஜீனவர்மன் (கி.பி.1275-1283) :
இரண்டாம் ஜெயவர்மனுக்கு பிறகு அவர் மகனான இவர் ஆட்சி ஏறினார். இவர் ஆட்சியேறியவுடன் இவரது மந்திரியான கோக தேவா கிளர்ச்சியில் ஈடுபட்டதாக முஸ்லீம் வரலாற்று அறிஞர் வாஸப் எழுதியுள்ளார். இவரது ஆட்சியில் யாதவ அரசர் ராமச்சந்திரா மாளவத்தின் மீது படையெடுத்து இவரின் யானைகளை கைப்பற்றி கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ரன்தோம்பூர் சாஹமான அரசர் ஹம்மீரா என்பவரும் மாளவத்தை தாக்கி சூறையாடினார். ஆனால் ஹம்மீரா இவரிடம் தோற்று போனதாகவும் குறிப்புகள் உள்ளது. ஹம்மீரா 3 முறை படையெடுத்து வந்ததால் அந்த நிகழ்வும் நடந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இரண்டாம் போஜா (கி.பி.13ம் நூற்றாண்டு) :
இரண்டாம் அர்ஜூனவர்மனுடன் மோதல் போக்கினால் அமைச்சரான கோக தேவா இவரை தாராவில் அரசராக்கினார். ரன்தோம்பூர் ஹம்மீராவை மாளவத்தின் மீது படையெடுக்கும் போது இவரும் அவரை தோற்கடித்து விரட்டினார். ஆனாலும் இவர் அர்ஜூனவர்மனின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மாலக்கதேவா ( 13ம்நூற்றாண்டு பிற்பகுதி -1305) :
இவரும் ஜெயவர்மனின் மகன் என்று நினைக்கின்றனர். இரண்டாம் போஜாவுக்கு பின்னர் கோக தேவா இவரை அடுத்த அரசராக்கினார். கி.பி.1305ல் அலாவூதின் கில்ஜியின் படையெடுப்பை சந்தித்து தோல்வியை தழுவினார். இந்த போரில் இவரின் அமைச்சரான கோக தேவா கொல்லப்பட்டு அவரின் தலை டெல்லி சுல்தானிடம் அனுப்பப்பட்டது. தப்பியோடிய இவர் மீண்டும் படையெடுத்து வந்து அந்த முயற்சியில் தோல்வியுற்று இறந்தார்.
மாலக்கதேவாவுடன் பரமர ஆட்சி முடிந்தது என்று கூறினாலும் உதய்ப்பூர் கல்வெட்டுகளில் பரமரா ஆட்சி கி.பி.1310 வடகிழக்கு மால்வாவில் மட்டுமே இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கடுத்த கல்வெட்டுகளில் அந்த பகுதியும் டெல்லி சுல்தானான முகமது பின் துக்ளக்கால் கி.பி.1338ல் கைப்பற்றப்பட்டதாக கூறுகிறது.
உதவிய நூல்கள் :
மத்திய கால இந்தியா - சதீஷ் சந்திரா
விக்கிபீடியா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்





Comments
Post a Comment