39) சோலங்கி (குஜராத் சாளுக்கியர்கள்) அரசு

 சோலாங்கி வம்சம் (கி.பி.940-1243)

இன்றைய குஜராத் மாநிலத்தின் பதான் நகரை தலைநகராக கொண்டு செளராஷ்டிரா பகுதி மற்றும் தற்போதைய குஜராத்தின் மேற்கு பகுதிகளை ஆண்டவர்கள். சோலங்கிகளை சாளுக்கிய வம்சத்தின் வழித்தோன்றல்கள் என்பார்கள். கி.பி.1025ல் இவர்களின் ஆட்சியில் தான் சோமநாதர் ஆலயம் கஜினி முகம்மதுவால் தரைமாக்கப்பட்டு கோயிலினின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. கி.பி.940ல் மூலராஜனில் ஆரம்பித்த வம்சம் கி.பி.1244ல் திரிபுவனபாலாவின் ஆட்சியுடன் முடிந்தது. இவர்களின் ஆட்சியில் தான் சோமநாதர் ஆலயம் திரும்ப கட்டப்பட்டது. பதானில் உள்ள ராணியின் கிணறு மோதராவில் உள்ள சூரியக்கோயில் மற்றும் தில்வாராவில் உள்ள சமணர்கள் கோயில்கள் இவர்களின் ஆட்சியில் தான் கட்டப்பட்டது. இவர்களின் ஆட்சியில் இந்து மதமும் சமண மதமும் புகழ்ந்து விளங்கியது.

மூலராஜன் (கி.பி.940 - 995) :

மூலராஜன் கடைசி சாவ்டா வம்சத்து அரசனை தோற்கடித்து தனது அரசை அனஹிலபடாகா(இன்றைய பதான் நகரம்)வை தலைநகரமாக கொண்டு சாளுக்கியர்களின் கிளை மரபு என்று சொல்லப்படும் சோலங்கி வம்சத்தை ஆரம்பித்து வைத்தார். இவர் மூலவாஸ்திகா என்ற கோயிலை திகம்பரர்களுக்காகலும் மூலநாதா-ஜினதேவா கோயிலை சுவேதம்பரர்களுக்காகவும் கட்டினார்.   மூல ராஜா மூல நட்சத்திரத்தில் பிறந்ததால் அவ்விதமே அழைக்கப்பட்டார். ராஜி(ராஜா), பிஜா மற்றும் தன்டகா என மூன்று சகோதரர்களுள் ராஜியின் குதிரையேற்ற திறமையை கண்டு வியந்த சாவ்டா வம்ச அரசர் சமந்தா சிம்ஹா அவரிடம் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். அரசரின் நட்பினால் அவரது சகோதரியான லீலா தேவியை மணந்தார். பிரசவ நேரத்தின் சிக்கலால் அவர் மரணமடைய வயிற்றின் இருந்த குழந்தை வயிற்றை கிழித்து எடுக்கப்பட்டது. மூல நட்சத்திரத்தில் எடுக்கப்பட்ட அந்த குழந்தை தான் மூல ராஜா. இவர் சிறந்த போர் வீரராக வளர்ந்தார். ஒரு நாள் குடிவெறியில் இவரது மாமா இவருக்கு அரச பட்டத்தை சூட மாமாவான சமந்த சிம்ஹாவை கொன்று நிரந்தர அரசராகினார். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு வரிகளை குறைத்தார். இவரது ஆட்சி மெஹ்சனா, ரதன்பூர் மற்றும் பாலன்பூர் வரை இருந்தது. இவரது ஆட்சியின் முடிவில் இவரது அரசு அபு மலையிலிருந்து தெற்கு குஜராத் பகுதியான லத்தா பகுதி (பரூச்) வரை பரவியிருந்தது. ஒரு நாள் மஹாதேவன் இவரது கனவில் தோன்றி செளராஷ்டிரா பகுதி மன்னனான கிரஹரிபு பிரபாஸா (பிரபாஸ் பதான், சோம்நாத்) வரும் யாத்திரீகர்களுக்கு தொல்லை கொடுப்பதால் அவரை அழிக்க உத்தரவிட இவர் படையெடுத்து சென்று அவரை அழித்தார். பின்னர் சோம்நாத்தில் சிவன் கோயிலை பெரிய அளவில் கட்டி கொடுத்தார்.


இவர் சைவத்தை பின்பற்றினாலும் சமணர்களுக்கும் நல்ல ஆதரவு அளித்தார். சமணத்தின் திகம்பரர்களுக்காக மூலவாஸ்திகா என்ற சமண கோயிலையும் சுவேதம்பரர்கள் பிரிவுக்காக மூலாந்த-ஜினதேவா என்ற சமண கோயிலையும் கட்டி கொடுத்தார். பதான் (Patan) நகரில் முஞ்சலதேவசுவாமி கோயிலையும் திரிபுரசபிரசாதா கோயிலையும் கட்டினார். சித்பூர் நகரில் மூல்நாராயாண பிரசாத என்ற கோயிலையும் கட்டினார். வட இந்தியாவிலிருந்து வந்த பிராமணர்களை வாத் நகரில் அடைக்கலம் கொடுத்து அவர்களுக்காக ஹடகேஷ்வரா கோயிலை கட்டி கொடுத்தார்.

சாமுண்டராஜா (கி.பி.995-1008) :

மூல ராஜாவின் மகனான இவர் அவர் ஆட்சியில் கி.பி.976ல் இளவரசனாக பொறுப்பேற்றாலும் தந்தையின் மறைவுக்கு பிறகே ஆட்சியில் அமர்ந்தார். இவரது ஆட்சியில் மாள்வாவின் பரமரா அரசரான சிந்துராஜா இவரின் மீது படையெடுத்தார். இவரது படைபலத்தை கண்டவுடன் போரிடாமல் தோற்று ஓடினார் என்று வாத் நகர் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆனால் சிந்துராஜாவின் அவைக்கள புலவர் பத்மகுப்தா என்பவர் சாமுண்டராஜாவின் எல்லைப்புற இராஜ்ஜியங்களான சிந்து ராஜா வாகத மற்றும் லத்தா ஆட்சியாளர்களை முறியடித்தார் என்று கூறியுள்ளார். இந்த ஆட்சியாளர்கள் சாமுண்ட ராஜாவின் சிற்றரசர்களாக இருக்கலாம். சாமுண்ட ராஜா சிந்துராஜாவுடன் நடத்திய போரில் சிந்துராஜா கொல்லப்பட்டதாக தெரிகிறது. பின்னர் கி.பி.1007ல் லத்தா பகுதி கல்யாணி சாளுக்கியரான சத்யாஸ்ரயாவினால் கைப்பற்றப்பட்டது. இது சாமுண்ட ராஜாவாக இருக்கலாம் அல்லது அவரின் சிற்றரசராக இருந்த பாரப்பா என்பவராக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இவருக்கு வல்லப ராஜா, துர்லப ராஜா மற்றும் நாக ராஜா என்று 3 மகன்கள் இருந்தனர். பின்னர் அரசை தன் மகன் வல்லபராஜாவிடம் கி.பி.1008ல் கொடுத்துவிட்டு வாரணாசிக்கு புனித பயணம் மேற்கொண்டார். வழியில் மாளவ அரசன் தொல்லை கொடுத்ததால் திரும்பி தன் மகனை படையெடுத்து செல்லுமாறு கூற  அவரும் படையெடுத்து சென்ற வழியிலையே சின்னம்மை பாதிப்பினால் மரணமடைந்தார். பின்னர் சாமுண்ட ராஜா நர்மதை நதிக்கரையில் சுக்லதீர்த் என்னுமிடத்தில் (இது பரூச் நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது) மரணமடைந்தார்.

வல்லபராஜா (கி.பி.1008) :

வாரணாசிக்கு புனித பயணம் மேற்கொண்ட இவரின் தந்தையான சாமுண்ட ராஜாவுக்கு வழியில் மாளவ அரசன் தொல்லை கொடுத்து அவரின் பொருட்களை பிடுங்கி கொண்டார். இதனால் திரும்பவும் தலைநகர் திரும்பிய சாமுண்ட ராஜா தன்னை அவமானப்படுத்திய மாளவ அரசின் மீது போர் தொடுக்க தன் மகனை பணித்தார். தந்தையின் அவமானத்திற்காக படையெடுத்து சென்ற இவருக்கு வழியில் சின்னம்மை பாதிப்பினால் இறந்ததால் இவருக்கு பின் இவரது சகோதரர் துர்லபராஜா பட்டத்திற்கு வந்தார். இது மாள்வாவின் பரமரா அரசுகளின் சில குறிப்புகளிலிருந்து தெரியவருகிறது.

துர்லபராஜா (கி.பி.1008-1022) :

சகோதரர் வல்லப ராஜா சின்னம்மையினால் இறந்ததால் அவருக்கு பின்னர் துர்லப ராஜா ஆட்சியேறினார். இவர் "லத்தா"வின் மீது படையெடுத்து சாளுக்கிய அரசர் கீர்த்தி ராஜா (கீர்த்தி பாலா)வை தோற்கடித்து அதை மீட்டுக் கொண்டார். இவர் லத்தாவை மீட்கும் நேரத்தில் கல்யாணி சாளுக்கியரான ஜெயசிம்ஹா சோழர்களுடன் போரிட்டு கொண்டிருந்த காலகட்டத்தில் இவர் லத்தாவை அவரின் சிற்றரசடமிருந்து மீட்டார்.பின்னர் இவரிடமிருந்து சிலகாலத்தில் பரமரா அரசர் போஜா கி.பி.1018ல் "லத்தா"வை மீட்டுககொண்டார்.  இன்றைய ராஜஸ்தானில் உள்ள நாடுலா (நடோல்) சாஹம்ன அரசர் மகேந்திரா தன் சகோதரி துர்லப தேவிக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தார். பல நாட்டு மன்னர்கள் கூடிய சுயம்வரத்தில் துர்லப ராஜாவுக்கு மாலையிட்டு மணம் முடித்தார். அவரது இன்னொரு சகோதரியான லக்ஷ்மியை துர்லப ராஜாவின் சகோதரரான நாக ராஜா மணமுடித்தார். இதனால் கோபம் கொண்ட பிற அரசர்கள் கூட்டணியாக வழியிலையே இவரை தாக்க அவர்களை முறியடித்து வெற்றியுடன் புது மனைவியுடன் குஜராத் திரும்பினார் என்று 12ம் நூற்றாண்டில் ஹேமசந்திரா என்பவர் எழுதியுள்ளார். இந்த நிகழ்வு உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர். ஏனெனில் அந்த நேரத்தில் தான் கஜினி முகம்மதுவை எதிர்க்க எல்லா அரசர்களும் இணைந்து படையெடுத்தனர். அதனால் இந்த நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். இவர் வாரிசின்றி மரணமடைந்தால் இவருக்கு பின்னர் இவரது சகோதரர் நாக ராஜாவின் மகனான முதலாம் பீம தேவன் ஆட்சியில் அமர்ந்தார்.

முதலாம் பீம ராஜன் (கி.பி.1022-1064) :

துர்லப ராஜாவுக்கு வாரிசில்லாதததால் அவரது சகோதரர் மகனான இவர் அடுத்து ஆட்சிக்கு வந்தார்.  அபு மலையிலுள்ள ஆரம்பகால தில்வாரா கோயில் இவரால் கட்டப்பட்டது.


மேலும் மோதராவிலுள்ள சூரியக்கோவிலும் இவரால் கட்டப்பட்டது.

பதானில் உள்ள ராணியின் கிணறு இவரின் நினைவாக இவரின் மனைவி உதயமதியால் இவரின் மகனான முதலாம் கர்ணதேவனின் ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கிணறு 64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது. எழு அடுக்குகளாக கட்டப்பட்டது. படிக்கட்டுகளுக்கு கீழே பல கி.மீ தூரமுள்ள சுரங்கப்பாதை போர் காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பி செல்லுவதற்கு சித்பூர் வரை கட்டப்பட்டுள்ளது. கி.பி.1304ல் வாழ்ந்த சமண மத துறவியான மெருங்க சூரி எழுதிய "பிரபந்த சிந்தாமணி" என்ற நூலில் ராணி உதயமதி கட்டிய இந்த படிகிணற்றை பற்றிய குறிப்புகள் உள்ளது. காலப்போக்கில் இந்த அழகிய கற்களாலும் மணற்களாலும் மூடப்பட்டது. கி.பி.1960ல் தொல்பொருள் துறையால் ஆகழ்வாய்வு செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. கிணற்றின் சுவர்களில் விஷ்ணு 10 அவதாரங்களும் மகிசாசூரனை வென்ற காளி, நாககன்னிகள், யோகினி மற்றும் 16 வகையான கலைநயத்துடன் கூடிய தேவலோக அபசரஸ்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. மேலும் கெளதமபுத்தர், சாதுக்கள் மற்றும் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள விஷ்ணுவின் சிற்பங்களும் உள்ளது.


இவரின் ஆட்சியில் தான் கஜினி முகம்மது இவரை கட்ச் பகுதியிலுள்ள கந்த்கோட் வாசலில் தோற்கடித்து சோம்நாத் கோயிலை கொள்ளையடித்தார். கஹினி முகம்மது சென்ற பிறகு தன்னுடைய ஆளுமையை அங்கே திரும்பவும் ஏற்படுத்திக் கொண்டார். பரமரா தளபதியான அற்புதா வை அடக்கினார். பின்மால் பகுதியை ஆண்ட பரமரா ஆட்சியாளர் கிருஷ்ணதேவாவை வென்று சிறைபிடித்தார். பின்னர் நெடுலாவை ஆண்ட அனஹில்லாவின் புதல்வர்களான பாலபிரசாதா மற்றும் ஜென்ந்திரராஜா இவரை வென்று கிருஷ்ணதேவாவை சிறைமீட்டனர். காலச்சூரிகளின் அரசர் லக்ஷமி-கர்ணாவுடன் இணைந்து பரமரா அரசரான போஜரை இரண்டு பக்கமிருந்தும் படையெடுத்து சென்று கி.பி.1055ல் வென்றனர். அந்த நேரத்தில் போஜர் நோயினால் இறந்து விட்டதாகவும் போஜாவின் தலைநகரான தாராவை கைப்பற்றும் போது போஜர் உயிருடன் இருந்ததாகவும் இருவேறு தகவல்கள் இருக்கின்றன. இந்த படையெடுப்புக்கு பின் பீம தேவனுக்கும் லக்ஷமி-கர்ணாவுக்கும் போஜரின் இராஜ்ஜியத்தை பிரிப்பதில் தகராறுகள் ஏற்ப்பட்டதாக தெரிகிறது.

முதலாம் கர்ணதேவன் ( கி.பி.1064-1092) :

தந்தைக்கு பின் ஆட்சிக்கு வந்த இவரிடமிருந்து போஜரின் சகோதரர் உதயாதித்யா மாள்வா பகுதிகளை மீட்டுக் கொண்டார். இந்த நேரத்தில் காலச்சூரிகள் இவரிடமிருந்து "லத்தா" பகுதிகளை கைப்பற்றி கொண்டனர். மீண்டும் கி.பி.1074ல் காலச்சூரிகளிடமிருந்து "லத்தா"வை மீட்டார். இவர் இராஜஸ்தானின் பில் பழங்குடியினரை தோற்கடித்து கர்ணாவதி (இன்றைய அகமதாபாத்) நகரை தோற்றுவித்தார். கஜினி முகம்மதுவால் இடிக்கப்பட்ட சோம்நாத் சிவன் கோயிலை மீண்டும் கட்டி எழுப்பினார். இன்றைய இராஜஸ்தானிலுள்ள அபு மலையிலிருந்த பிரமரா இராஜபுத்திரர்களை வென்றார். பேரரசிலிருந்த செளராஷ்டிரா பகுதி மக்களின் புரட்சியை அடக்கி அப்பகுதிக்கு தன் மகன் சோமவர்மனை ஆளுநராக்கினார். இவரின் ஆட்சியில் சோலங்கி பேரரசு கிழக்கே விதிஷாவையும் மேற்கே செளராஷ்டிரத்தையும் வடக்கே சித்தூர்கார்க்கையும் தெற்கே நர்மதா நதியையும் தன் எல்லைகளாக கொண்டிருந்தது. இவரது தந்தையின் நினைவாக இவரது தாயான உதயமதியினால் தான் இன்றைய பழங்கால நினைவு சின்னங்களுள் ஒன்றாக மதிக்கப்படும் "ராணி கி வாவ் (ராணியின் கிணறு) " பதான் நகரில் இவரது ஆட்சியில் கட்டப்பட்டது.


சித்தராஜ் ஜெய்சிங் (கி.பி.1092-1142) :

இவர் மூன்று வயதில் இருக்கும்போதே உயரமாக இருந்த அரியணையின் மீது ஏறி அதில் அமர்ந்தாராம். இதை கண்ட இவரது தந்தை முதலாம் கர்ணதேவன் இவரே அடுத்த அரசராக தகுதி வாய்ந்தவர் என்று இளவரசனாக அறிவித்தாராம். இவரின் குழந்தை பருவத்திலையே இவரது தந்தை இறந்ததால் அவரது சகோதரரான தேவபிரசாதா அடுத்து அரியணை ஏற முயற்சிக்க இவரின் தாயான மாயநல்லா அமைச்சர் சாந்து உதவியால் இவரின் பாதுகாவலராக நாட்டை ஆண்டார். தந்தைக்கு பின் ஆட்சிக்கு வந்த இவர் சாகம்பரி சாஹமானா வம்சத்து அரசர் அர்னோராஜனை வென்று உடன்படிக்கை கொண்டார். அவருக்கு தன் மகள் காஞ்சனா தேவியை திருமணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு பிறந்த மகனான சோமேஸ்வரா வளர்ந்ததும் பின்னர் சோமேஸ்வராவின் மகன்களான மூன்றாம் பிருதிவிராஜ் (பிரித்விராஜ் செளகான் என்று அழைக்கப்பட்டவர்) மற்றும் ஹரிராஜ் இருவரும் குஜராத்தில் தான் பிறந்து வளர்ந்தனர்.பின்னர் கி.பி.1135-36களில் மால்வாவின் (இன்றைய மத்தியப்பிரதேசம்) மீது படையெடுத்து பரமரர்களை வென்றார். பின்னர் சந்தல வம்சத்து அரசர் மதனவர்மனை தோற்கடித்தார். சிந்துவின் குறுநில அரசரான சோம்ராவையும் தோற்கடித்தார். இவருக்கு லீலாவதி தேவி பட்டத்தரசியாவார். இவருக்கு வாரிசு இல்லை. அதனால் இவருக்கு பிறகு இவரது சித்தப்பா தேவபிரசாதாவின் மகனான குமார பாலா அடுத்து அரியணை ஏறினார். இவரே சித்பூரிலுள்ள ருத்ர மஹாலயா ஆலயத்தை திரும்ப கட்டினார். கிர்நார் மலையில் நேமிநாத் கோயிலையும், அசோடாவில் ஜஸ்மால்நாத்ஜி மஹாதேவ் கோயிலையும் கட்டினார். சேஜக்பூரிலுள்ள சிவன் கோயிலும் நவலக்கா கோயிலும் இவரே கட்டினார். சிஹோரிலுள்ள பிரம்மகுண்ட் இவரால் கட்டப்பட்டது. சித்தராஜ் சைவராக இருந்தாலும் மற்ற மதத்தினரையும் மதித்து சகிப்பு தன்மையுடன் ஆண்டார்.

குமாரபாலன் (கி.பி.1142-1171) :

சித்தராஜ் ஜெய்சிங்கிற்கு பின்னர் 29 ஆண்டுகள் ஆண்ட இவரே சோலங்கி குல பேரரசராக விளங்கினார். இவர் சித்தராஜ் ஜெய்சிங்கின்  உறவினர். அவருக்கு எதிரான புரட்சியினால் சிறையில் அடைக்கப்பட்ட இவர் சித்தராஜ் ஜெய்சிங்கின் மறைவின் போது அவரது உறவினரால் சிறை மீட்கப்பட்டு பதான் நகருக்கு வந்து ஆட்சிப்பொறுப்பேற்றார். இதை பிடிக்காத சித்தராஜ் ஜெய்சிங்கின் மருமகனும் சாஹமானா வம்சத்து அரசரான அர்னோராஜ் படையெடுத்து வந்து தோற்றுப்போனார். பரமரா அரசனான முதலாம் ஜெயவர்மனிடமிருந்து பல்லாலா ஆட்சியை கைப்பற்றினார். அவரிடமிருந்து மாளவத்தை மீண்டும் குமாரபாலா கைப்பற்றிக் கொண்டார். கி.பி.1160ல் வடக்கு கொங்கணத்தை ஆண்ட சில்ஹாரா வம்சத்து அரசரான மல்லிகாஜூனாவை வென்றார். இவரது ஆட்சி வடக்கே சித்தூர் மற்றும் ஜெய்சால்மர் வரையும் தெற்கே விந்திய மலை மற்றும் தப்தி ஆறு வரையும் மேற்கே கட்ச் மற்றும் செளராஷ்டிரா வரையும் கிழக்கே விதிஷா (பில்ஷா) வரையும் பரவியிருந்தது. சமண சமய குருமார்களை ஆதரித்து தீர்த்தங்கரர்களுக்கு தில்வாரா கோயிலை எழுப்பினார். வாத் நகரிலுள்ள கோட்டையையும் இவர் கட்டினார். இவர் பத்ராவதி நதியில் பத்ரேஷ்வர் என்ற அணையை கட்டினார். பதான் அருகிலுள்ள வாயத் நகரில் கிணறு வெட்டினார். வாத்வான் நகரில் கங்கை உறைகிணறும் இவர் ஆட்சியில் கட்டப்பட்டது.  தாரங்கா சமண கோயிலையும் கட்டினார். இவர் பதானில் குமாரபாலேஷ்வரர் கோயிலை கட்டினார். மேலும் பதானில் கேதேரேஷ்வர் கோயிலையும் சோம்நாத் சிவன் கோயிலையும் புதுப்பித்து கட்டினார். இராஜஸ்தானிலுள்ள பாலி நகரில் சோம்நாத் கோயிலையும் கட்டினார்.

அஜயபாலா (கி.பி.1171-1175) :

குமார் பாலாவுக்கு பின் அரியணை ஏறிய அவரின் மகன் இவர். இவர் குமாரபாலாவின் உறவினர் என்றும் மகன் என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு. சமணர்களை குமாரபாலாவை போல ஆதரிக்காததால் இவரை பற்றி தவறாகவே பேசிவந்ததாக தெரிகிறது. குமாரபாலா தன் சமணகுரு ஹேமச்சந்திராவிடம் தனக்கு பின் யாரை நியமிக்க கேட்டதாகவும் அஜயபாலா தவறான நடத்தையுடையவர் அதனால் பேரனான பிரதாபமல்லாவை நியமிக்கசொல்லியதாகவும் இதை அறிந்த அஜய பாலா ஹேமசந்திராவின் மறைவிற்கு பின் குமாரபாலாவின் உணவில் விஷம் கலந்து கொன்று பின் அரியணை ஏறியதாகவும் சமணர்கள் சொல்லுகிறார்கள். அஜயபாலா வைஷ்ணவத்தை  கடைபிடித்ததால் சமணர்களுக்கு இவரை பிடிக்காததால் இவரை பற்றி தவறாக எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. இவர் குமாரபாலாவின் ஆட்சியில் இழந்த பகுதிகளை மீட்டார். மாளவத்தையும்  திரும்ப கைப்பற்றினார்.கி.பி.1175 மார்ச் 25 - ஏப்ரல் 7க்குள் பிரதிஹரரான வாயுஜலதேவாவால் குத்திக்கொல்லப்பட்டதாக தெரிகிறது. இவரது மனைவியான நைய்கி தேவியே தனது மகனான இரண்டாம் மூல ராஜனின் ஆட்சியில் முகமது கோரியை முதன்முதலில் தோற்கடித்து விரட்டியவர்.

இரண்டாம் மூலராஜன் (கி.பி.1175-1178) :

அஜயபாலாவுக்கு பின் அவருடைய மூத்தமகன் இரண்டாம் மூலராஜன் பட்டத்திற்கு வந்தார். இவர் சிறு வயதில் இருந்ததால் இவரது தாயான நைய்கி தேவியே இவரது சார்பில் ஆட்சியை நடத்தினார்.  இவர் தனது 13வயதில்  கோரி முகம்மது படையெடுப்பை எதிர்கொண்டு அவரை விரட்டியடித்து வெற்றி பெற்றார்.  இளம் வயதிலையே மரணமடைந்த இவருக்கு பின்னர் இவரது சகோதரர் இரண்டாம் பீமராஜன் பட்டத்திற்கு வந்தார்.

இரண்டாம் பீம ராஜன் (கி.பி.1178-1240) :

அ‌ஜயபாலா-நைய்கி தேவியின் மகனான இவர் தனது அண்ணனான இரண்டாம் மூலராஜனுக்கு பின் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சியில் குஜராத் சாளுக்கியரான சோலங்கி வம்ச ஆட்சி வீழ்ச்சியுற ஆரம்பித்தது. இவர் இள வயதில் ஆட்சி பொறுப்பை ஏற்றதால் சிற்றரசர்கள் சுயாட்சிக்காக கிளர்ச்சி புரிய இவரின் தளபதியான அர்னோராஜா இந்த புரட்சியாளர்களை அடக்கும் முயற்சியில் மரணமடைந்தார். பின்னர் அர்னோராஜாவின் வம்சாவளியில் லவனபிரசாதா மற்றும் விரதவாலா இவருக்கு உறுதுணையாக இருந்தனர். இவர்களின் வழியிலையே சோலாங்கி வம்ச ஆட்சிக்கு பின்னர் வகேலா வம்ச ஆட்சி தொடங்கியது.இவரின் ஆட்சியில் ஹொய்சாலா வம்சத்து அரசர் இரண்டாம் பல்லாலா "லத்தா"வை கைப்பற்றிக் கொண்டார். யாதவர்களின் அரசரான ஐந்தாம் பில்மோரா குஜராத்தின் மீது படையெடுத்து தோற்றுப்போய் திரும்பினார்.கி.பி.1187ல் சாஹம்பரி சாஹமானா வம்சத்து அரசர் மூன்றாம் பிருதிரிராஜ் (பிருத்விராஜ் செளகான்) னுடன் நடந்த போரில் இவரின் தளபதியான ஜகதேவா உடன்படிக்கை கொண்டார்.‌ கி.பி.1197ல் கோரி வம்சத்து தளபதியான குத்புதீன் ஐ-பெக் (பின்னர் இவரே டெல்லியில் அடிமை வம்ச சுல்தான் ஆட்சியை தொடங்கி வைத்தவர்) பதான் மீது படையெடுத்து வந்த இவரின் தளபதியான ராய் கிரணை போரில் தோற்கடித்து பதான் நகரை சூறையாடினார். பின்னர் குத்புதீன் ஒரு கவர்னரை நியமித்து விட்டு அஜ்மீர் செல்ல திரும்பவும் சோலங்கி வம்சத்தினர் பதானை கைப்பற்றி ஆள ஆரம்பித்தனர். இடையில் கி.பி.1205-10 வாக்கில் சாளுக்கிய பரம்பரையில் வந்த ஜெயந்த சிம்ஹா (ஜெயசிம்ஹா) இரண்டாம் பீம ராஜனை விரட்டியடித்து பதானை கைப்பற்றினார். பின்னர் பீம ராஜன் அவரை விரட்டியடித்து பதானை மீண்டும் கைப்பற்றி கொண்டார். நிலையற்ற ஆட்சியினால் இவரது காலத்தில் கோயில்கள் கட்டுவது குறைந்தது. கி.பி.1217ல் சோம்நாத்தில் ஒரு மண்டபம் கட்டினார். துவாரகாவிலுள்ள ருக்மிணி தேவி கோயில் இவர் கட்டியதே. பீமேஸ்வரா மற்றும் லீலேஷ்வரா கோயில்கள் இவரின் காலத்தில் இவர் மற்றும் இவரின் மனைவியின் பெயரால் கட்டப்பட்டது.

திரிபுவனபாலா (கி.பி.1240-1244) :

இரண்டாம் பீம ராஜனுக்கு பின் அரியணை ஏறினார். இவர்தான் சோலங்கி வம்சத்தின் கடைசி அரசர். இவரது காலத்தில் தலைமை தளபதியாக இவரின் தந்தையின் காலத்திலிருந்து இருந்த லவனபிரசாதா மற்றும் அவரது மகனான விரதவாலா "வகேலா" வம்சத்து ஆட்சியை தொடங்கினார்கள். இவர்கள் வாரிசில்லாமல் மறைந்த திரிபுவனபாலாவுக்கு பின்னர் வகேலா ஆட்சியை விரதவாலாவின் மகனான விசாலதேவா தலைமையில் தொடங்கினார்களா அல்லது திரிபுவனபாலாவை ஆட்சியிலிருந்து இறக்கி தங்களது வம்ச ஆட்சியை ஆரம்பித்து வைத்தார்களா என்று குறிப்பிடப்படவில்லை.

உதவிய நூல்கள் :

மத்திய கால இந்தியா - சதீஷ் சந்திரா

மொகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் - ரவீந்திரன்

விக்கிபீடியா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு