40) கஜினி முகமது

கஜினி முகமது (கி.பி.998-1030) :

சரித்திரம் இவரை பற்றி பலவிதமாக பதிவு செய்திருக்கிறது. கி.பி.1001-1027 வரை இந்தியாவுக்கு 17 முறை படையெடுத்து 17வது முறை தான் வென்றார் என்றும் படிப்பவர்களின் தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காக சொல்லப்பட்டாலும்  17முறையும் இவர் இந்தியாவை கொள்ளையடித்து சென்று தனது நாடான கஜினியை வளமாக்கி கொண்டார் என்பதே வரலாறு. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இவரை மாபெரும் வெற்றியாளராக தான் கொண்டாடுகிறார்கள். பாகிஸ்தான் தான் தயாரித்த ஏவுகணைக்கு "கஜினி" என்றும் பெயர் சூட்டியது. பாகிஸ்தான் இராணுவத்தின் ஓரு பிரிவுக்கு கஜினி என்றும் பெயரிட்டார்கள். ஆனால் இந்தியாவிலுள்ள இந்துக்கள் அவரை மனிதாபமற்ற, கொடுமைக்கார கொள்ளைக்காரராகவே பார்த்தனர். ஏன் அவரின் படையெடுப்புகள் மத சகிப்புத் தன்மையற்ற வகையிலையே இருந்தது.  இந்துக்களின் உருவ வழிபாட்டை வெறுத்ததோடு  மட்டுமல்ல இந்துக்களையும் இதர பிரிவு முஸ்ஸீம்களான ஷியா முஸ்லிம்கள், பையில் ஷியா மற்றும் இஸ்மாயிலி ஷியா முஸ்ஸீம்களையும் கொன்று குவித்தார். பெளத்த சமணர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. இறைவழிபாடு உள்ள இடங்கள், கோயில்கள், பல்கலைகழகங்களை இடித்து தகர்த்தலும் செல்வங்களை கொள்ளையடித்தலுமான காரியங்களிலையே ஈடுபட்டார். இதற்கு தட்சசீலம் பல்கலைகழகத்தையே உதாரணமாக சொல்லலாம். இப்பேர்பட்ட கஜினி முகமதுவின் பிறப்பு எழுச்சி ஆகியவற்றை பார்ப்போம்.

கி.பி.971ல் இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள கஜினி என்னும் நகரில் பிறந்தார். பிறந்தது அக்டோபர் 2 அல்லது நவம்பர் 2ம் தேதியா என்ற குழப்பமும் உண்டு. இவரது முழுப்பெயர் யாமின் உத்-தெளலா வா-அமீன் அல்-மில்லா செபுக்தேசின். இயற்பெயர் மஹ்மூத் இப்னு செபுக்தேசின் என்பதே. இவர் கஜினி நகரிலிருந்து பிறந்ததாலும் அங்கிருந்து தான் அரசாண்டதாலும் இவர் கஜினி முஹம்மது என்ற பெயரால் சரித்திரத்தில் குறிப்பிடப்படுகிறார். இவரது தந்தையார் அபு மன்சூர் செபுக்தேசின் பாரசீகப் பேரரசின் கீழ் "புகாரா"என்னும் நாட்டை ஆண்ட இரண்டாம் சாம்மனித் மன்னருடைய அடிமை போரவீரர். சாம்மனித் அரசின் மன்னர் "இரண்டாம் ஷா" காலத்தில் கஜினி முகமது குராசான் பகுதியின் அமீராக "சைப்-உத்-தெளலா" என்ற பட்டப் பெயருடன் நியமிக்கப்பட்டார். பின்னர் கி.பி.997ல் குவாரகானித் அரசின் சுல்தானாக தன்னை அறிவித்துக் கொண்டார். சாம்மனித் அரசின் அமீர்கள் பலவீனமான நேரத்தில் தந்தையும் மகனும் அரசை கைப்பற்றிக்கொண்டனர். பின்னர் கந்தஹார் மற்றும் லச்கர்கா நகரங்களை கைப்பற்றி நாட்டை விரிவுபடுத்தினார்.

கஜினியின் படையெடுப்புகள்:

1) கி.பி.1000 - இந்தியாவின் எல்லைப்புற நகரமான லாகூர்

2) கி.பி.1001 - பெஷாவர்

புருஷபுரம் என்றழைக்கப்பட்ட இன்றைய பாகிஸ்தானின் பெஷாவரின் மீது படையெடுத்து அதனை ஆண்ட ஜெயபாலனை வென்றார். வெற்றிக்கு பின் ஜெயபாலனை தானே தன்னை தற்கொலை செய்யுமாறு பண்ணினார் என்று கூறுகின்றனர். ஆனால் சிலர் அவரின் மகன் ஆனந்தபாலா கப்பமாக யானைகள், குதிரைகள் பொன்னும் மணியும் கொடுத்து தந்தையை விடுவித்தார் என்றும் போரில் தோற்ற அவமானம் தாங்காமல் தீயில் தன்னை மாய்த்துக்கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.

3) கி.பி.1004 - சிந்துவின் மீது படையெடுத்து தனக்கு கப்பம் கட்ட மறுத்த பாட்டியா (Bhatia) நாட்டை கைப்பற்றி தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.

4) கி.பி.1005 - முல்தான்

ஜெயபாலனின் நண்பரான முல்தான் அரசர் பஃதே தாவூத்தையும் அவரின் பிரிவான இஸ்மாயிலி ஷியா பிரிவு மக்களையும் கொடூரமாக கொன்று குவித்தார்.

5) கி.பி. 1007 - பெஷாவர்

இந்தமுறை ஜெயபாலன் பேரனான சுகபாலனை வென்றார். இவருடன் குவாலியர், ஆஜ்மீர், கன்னோசி, உஜ்ஜையினி, தில்லி மற்றும் கலிங்க நாட்டு இந்து அரசர்களின் கூட்டு படையை பெஷாவரில் முறியடித்தார்.  இமாச்சலபிரதேசத்தை கொள்ளையடித்தார்.

6) கி.பி.1008 - காந்தாரத்தை வெற்றிக்கொண்டு தட்சசீலம் பல்கலைகழகத்தை அடியோடு தீயிட்டு கொளுத்தினார்.

7) கி.பி.1009 - சிந்துவுக்கு அருகில் நடந்த போரில் ஆனந்தபாலா தோல்வியடைந்தார். அவரது புதிய தலைநகரான நந்தனா (உப்புமலை தொடரிலுள்ள)வை தரைமட்டமாக்கிவிட்டு நாகர்கோட் (இமயமலையிலுள்ள நாகர்கோட் என்று தவறாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் இமயமலை பக்கமே அவர் செல்லவில்லை) என்ற கோட்டையை முற்றுகையிட்டு வீழ்த்தினார்

8) கி.பி.1010 - முல்தான்

9) கி.பி.1013 - காஷ்மீர்

ஆனந்தபாலனை வென்றார்.

10) கி.பி.1014 - கன்னோசி & தானேஷ்வர்

இந்த தாக்குதலில் தானேஷ்வர் நகரை (புஷ்யபூதி வம்சத்தை ஆண்ட ஹர்ஷவர்த்தனர் பிறந்த நகரம்) முற்றிலும் அழித்தார். கன்னோசியில் இருந்த இந்து சமண பெளத்த கோவில்களை தரைமட்டமாக்கினார்.

11) கி.பி.1015 - காஷ்மீர்

மோசமான பருவகால நிலையில் காஷ்மீரின் மீது படையெடுத்து முதல்முறையாக தோல்வியடைந்து திரும்பினார்.

12) கி.பி.1017-1018 -  கன்னோசி மற்றும் மதுரா‌ - வட மதுராவை தாக்கி மதுரா கிருஷ்ணன் கோயிலை இடித்து தரைமட்டமாக்கினார்.

13) கி.பி.1020 - பண்டல்கண்டில் இருந்த கலிஞ்சாரில் புகுந்து கொள்ளையடித்தார்.

14) கி.பி. 1021-1022 - லாகூரை வென்று தன்னுடைய ஆட்சியின் கீழ் இணைத்துக்கொண்டார்.

15) கி.பி.1023 - பஞ்சாப் & குவாலியர்

இந்தமுறை பஞ்சாப்பை வென்று தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டார். காஷ்மீரின் லொஹரா கோட்டையை முற்றுகையிட்டும் பிடிக்கமுடியாமல் திரும்பினார்.

16) கி.பி.1025-1026 - ஆஜ்மீர், கட்ச் மற்றும் சோம்நாத், துவாரகா.

கி.பி.1025 ஜனவரி மாதம் ஆஜ்மீரை வென்று யாருமே எதிர்க்க வராமல் (சிலர் இவரை எதிர்க்க அனைத்து அரசர்களும் தயார் நிலையில் சிந்து பகுதியில் காத்திருந்ததால் மக்கள் இவர் வருவது தெரிந்து அஜ்மீர் நகரத்தை காலி செய்து விட்டு போயினர். அதனால் கொள்ளையடிக்க எதுவுமில்லாமல் சோம்நாத் பக்கம் திரும்பினார் என்று கூறுகின்றனர்) ஜனவரி 30 ம் தேதி சோம்நாதர் ஆலயத்தை சூழ்ந்து கொண்டு அதன் செல்வ செழிப்பையும் வைர வைடூரியங்களையும் பார்த்து மலைத்து போய் முற்றிலும் தரைமட்டமாக்கி சிவன் சிலையை உடைத்து  கொள்ளையடித்து சென்றார். அந்த நேரத்தில் 50000 பேரை கொன்று குவித்ததோடு மட்டுமல்லாது அந்நகரின் தளபதியான கோகோ இராணா என்ற 90 வயது அரச குலத்தவரை ஈவுஈரக்கமின்றி கொன்றார். இதை அவருடன் இருந்த வரலாற்று ஆசிரியர் அல்பரூணி சோம்நாத்தில் மட்டும் கைப்பற்ற பொருட்களின் மதிப்பு இரண்டு பில்லியன் தினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சோம்நாத்தை அடுத்து கிருஷ்ணரின் நகரமான துவாரகா மீது படையெடுத்து "துவாரகா" கிருஷ்ணன் கோவிலை சூறையாடினார். கோவிலில் இருந்து 2 அடி வெள்ளியிலான கிருஷ்ணர் சிலை சுக்குநூறாக உடைக்கப்பட்டது. கொள்ளையடித்து திரும்பும் வழியில் சிந்துவின் இருந்த கொள்ளையர்கள் மற்றும் இராஜபுத்திரத்தின் தார் பாலைவன ஜாட் ஆட்சியாளர்களையும் எதிர்க்க வேண்டியதாகிவிட்டது.

இந்த நேரத்தில் தான் முதலாம் இராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து வந்தார். போரை தவிர்த்து ஐந்தாம் மகிபாலா சோழர்களின் நட்பு கரம் நீட்டி கங்கை கொண்ட சோழபுரத்தின் குடமுழக்குக்கு தேவையான கங்கை நீரை அனுப்பி வைத்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய ஏரி கட்டி கங்கை நீரும் காவிரி நீருமாக சேர்ந்து "சோழகங்கம்" என்ற ஏரி உருவாக்கப்பட்டது. இந்த நேரத்தில் வடமேற்கு மன்னர்கள் இராஜேந்திர சோழனின் உதவியை நாடினார்கள் என்றும் அவர் உதவ போவதற்கு முன்பே கஜினி முகமது கொள்ளையடித்து நாடு திரும்பிவிட்டதால் இவர் திரும்பி விட்டதாகவும் கூட சொல்லுவார்கள். ஆனால் இது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியலை. ஆனால் இப்படி ஒரு போர் இராஜேந்திர சோழன் - கஜினி முகமது இடையே நடைபெற்றிருந்தால் சரித்திரத்தில் மறக்கமுடியாத போராக இருந்திருக்கலாம்.

17) கி.பி.1027 - ஜாட் மன்னர்களான இவர்களை சோம்நாத்தை கொள்ளையடித்து திரும்பும் போது எதிர்த்ததால் மறுபடியும் இவர்களின் மீது படையெடுத்து வந்தார்.

கஜினி முகம்மது போர் வெறியராக மட்டுமல்லாது ஏன் திரும்ப திரும்ப படையெடுத்தார் என்ற கேள்விகள் வருகிறது? இஸ்லாத்திற்கு எதிரான இந்து, புத்த மற்றும் சமண மதங்களின் உருவ வழிபாட்டை வெறுத்ததால் காஃபிர்களின் பிரதேசங்களை வென்று அழித்து தரைமட்டமாக்கினார் என்றும் மட்டுமல்லாது சக ஷியா பிரிவு (கஜினி முகமது சன்னி முஸ்லிம்) முஸ்ஸீம்களையும் கொன்று குவித்தார். அடுத்தடுத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடந்தால் தான் இந்திய அரசர்கள் ஒற்றுமையாக சேர்ந்து இருக்கமாட்டார்கள். ஒன்றுபட்டால் அவர்களை எதிர்க்க அவகாசம் கொடுக்கக்கூடாது என்பதாலையே அடிக்கடி படையெடுப்பையும் நிகழ்த்தினார். இந்த கஜினி முகமதுவின் படையெடுப்பே பிற்கால அன்னியர்களின் படையெடுப்புகளுக்கு வழிகாட்டியாக இந்தியாவை வெல்லமுடியும் என்பதை மத்திய ஆசியாவிலுள்ளவர்களுக்கு உணர்த்திற்று.

ஏன் இந்திய அரசர்கள் கஜினி முகமதுவிடம் தோல்வியை தழுவினார்கள்? என்ற கேள்விக்கு ஒட்டுமொத்தமாக இந்திய அரசர்களின் ஒற்றுமையின்மை என்றே எல்லோரும் பதில் கூறுவார்கள். அதுவும் சரி தான். அது மட்டுமல்லாது அன்றைய காலகட்டத்தில் சாதிப்பிரிவுகளில் "சத்திரியர்கள்" மட்டுமே படைகளில் சேர்த்து கொள்ளப்பட்டார்கள். ஒரு சில பிராமண அரசர்கள் விதிவிலக்கு. அதனால் சாதாரண மற்ற பிரிவு மக்களை படைகளில் சேர்த்து பயிற்சி கொடுக்கவில்லை. பெரிய அளவில் எதிர்ப்பு வரும்போது குறைந்த அளவு சிறிய இராஜ்யங்களை ஆண்ட மன்னர்களின் படைப்பிரிவுகளால் தாக்கபிடிக்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அது மட்டுமல்லாது கஜினி முகமதுவிடம் அதிவேகமாக பாயும் உயர்ரக அரபு நாட்டு குதிரைகள் கொண்ட படை இருந்தது. இந்திய மன்னர்களிடம் குதிரைப்படை குறைவாகவே இருந்ததும் ஒரு காரணமாகும்.

கஜினி முகமதுக்கு இன்னொரு வித்தியாசமான கொடூர பழக்கம் இருந்ததாக "வந்தார்கள் வென்றார்கள்"ல் மதன் குறிப்பிடுகிறார். வெற்றி பெற்ற மன்னர்களின் கைவிரல்களை வெட்டி தபால்தலை போல சேகரித்தானாம். கொள்ளையடித்து பெரும் செல்வத்தை கொண்டு தனது நாட்டில் லைப்ரரியும் மியூஸியமும் அவர் நாட்டு மக்களுக்கு கட்டிக்கொடுத்தார். சோம்நாத் கோவிலின் உடைந்த சிவலிங்க கற்களை கஜினியில் உள்ள "ஜூம்மா மசூதி மற்றும் அவரின் அரண்மனை "வாசற்படிகளில் பதித்தாராம். கஜினி முகமதுவின் சமாதியில் சோம்நாத் கோவிலின் சந்தன கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாம். பிர்தெளஸி மற்றும் அல்பெரூனி போன்ற ஆராய்ச்சியாளர்கள் எழுத்தாளர்களை ஆதரித்தார். கஜினி முகம்மதுவின் புகழ்பாடி கவிஞர் பிர்தெளஸி எழுதிய "ஷாநாமா" நூலுக்காக 200 தினார்கள் பரிசாக கொடுத்ததாக செய்திகள் உள்ளது.


கி.பி.1017ல் கஜினியுடன் இந்தியா வந்த அல்பெரூனியை "இந்திய மக்களும் அவர் தம் நம்பிக்கைகளும் - "தாரிக்-அல்-இந்த்" என்ற நூலை எழுத தூண்டினார். 

இப்படியாக இந்தியாவை கொள்ளையடித்துக் கொண்டிருந்த கஜினி முகமது கி.பி.1030 ஏப்ரல் 30 ம் தேதி தனது 59வது வயதில் விஷக்காய்ச்சலில் இறந்து போனார்.


அதன்பிறகு இந்திய எல்லைப்புற பிரதேசங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டன. அதுவும் கொஞ்ச காலம் தான். கஜினிக்கு பிறகு கஜினியின் மகன்கள் மற்றும் வம்சாவளியினரின் ஆட்சியில் கஜினி பேரரசு குறுகிக் கொண்டே போயிற்று. அதன் எல்லைப்புற மன்னர்கள் அதன் பகுதிகளை கைப்பற்றிக் கொண்டனர். கடைசியாக இன்றைய ஆப்கானிஸ்தானில் உள்ள "கோரி" நகரத்திலுள்ள முகமது கி.பி.1159ல் கஜினி பேரரசை கைப்பற்றியதுடன் கஜினி வம்ச ஆட்சி அவரின் மறைவுக்கு பின் 129 ஆண்டுகளில் முடிந்தது.

உதவிய நூல்கள்:

மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

மொகலாயர்கள் - முகில்

எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்

மொகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்

விக்கிமீடியா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு