41) ஹொய்சாளர்கள் அரசு

ஹொய்சாலர்கள் (அல்லது) போசளர்கள் அரசு (கி.பி.1026-1343) :


போசள பேரரசு அல்லது ஹெய்சாலப்பேரரசு கி.பி.11ம் நூற்றாண்டு ஆரம்பம் முதல் கி.பி.14ம் நூற்றாண்டு பாதி வரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்த அரசாகும். இவர்களின் அரசு முதலில் கி.பி.1187 வரை மேலை சாளுக்கியத்தின் கீழ் சிற்றரசாக இருந்து அவர்களின் வீழ்ச்சிக்கு பின் சுதந்திர அரசாயினர். முதலில் பேளூரையும் பின்னர் ஹளபேடையும் தலைநகராக கொண்டு ஆண்டு வந்தனர். கன்னட மொழியை பேசி வந்தனர். இரண்டாம் நிருபகாமாவில் (கி.பி.1026) ஆரம்பித்து மூன்றாம் வீர பல்லாலாவில் (கி.பி.1343) முடிந்து போயிற்று. ஆனாலும் முற்கால போசள அரசர்களின் பதிவுகள் கி.பி.950களில் கூட காணப்படுகிறது.  மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதியான மலைநாடு பகுதிவாழ் மக்களின் வழிவந்தவர்கள். கி.பி‌ 12ம் நூற்றாண்டில் மேற்கு சாளுக்கியர்களுக்கும் காலச்சூரிகளும் நடைபெற்ற உள்நாட்டு போரை சாதகமாக்கிக்கொண்டு தங்களது எல்லைகளை இன்றைய கர்நாடகா பகுதிகளுக்கும் தமிழகத்தின் காவிரியாற்றின் வடக்கு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினார்கள்.ஆந்திராவின் ஒருசில பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.

தென்னிந்தியாவில் கலை, கட்டிடக்கலை, சமயம் வளர்ச்சிக்கு ஹெய்சாளர்களின் பங்கு மறக்கமுடியாதது.ஹெய்சாளர்கள் கட்டிய நூற்றுக்கணக்கான கோயில்கள் இன்று கர்நாடகா முழுவதும் காணப்படுகின்றன. அவற்றுள் பேளூரில் உள்ள சென்னகேசவ கோயில்,



ஹளபேடிலுள்ள ஹொய்சாலசஸ்வேரா கோயில் மற்றும் சோமநாதபுரத்திலுள்ள கேசவ கோயில் முக்கியமானவை‌. இவர்கள் இலக்கியங்கள் கன்னடம் மற்றும் சமஸ்கிருதத்தில் வருவதற்கு உதவி புரிந்தனர். 

இரண்டாம் நிருபகாமா (கி.பி.1026-1047) :

ஆரம்பகால ஹொய்சால அரசன் இவராக பதிவு செய்யப்பட்டுள்ளார். மலேநாட்டு பகுதியிலிருந்து ஆண்டு வந்ததாக தெரிகிறது. தெற்கு கர்நாடகப் பகுதிகளில் சோழர்களின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியாவிட்டாலும் இவரும் சில பகுதிகளில் ஆட்சி செலுத்தினார்.

ஹொய்சாள வினயாதித்யன் (கி.பி.1047-1098) :

இவரது காலத்தில் தான் ஹொய்சாளர்கள் சமண மதத்தை ஏற்றனர். இவர் தன்னருகிலுள்ள சிற்றரசுகளை இணைத்து நாட்டின் எல்லையை விரிவுபடுத்தினார். சோழர்கள் மேலைகங்கர்களை வென்றபோது (அதாவது முதலாம் குலோத்துங்கன் அனந்தவர்மன் சோடகங்கனை வென்று அதனால் அனந்தவர்மன் கங்கபாடியை விட்டு கலிங்கம் (இன்றைய கட்டாக்) சென்று கீழை கங்கர்கள் வம்சத்தை ஆரம்பித்த வரலாறு) கங்கபாடியின் சில பகுதிகளை தன் வசப்படுத்தினார். இவருக்கு சாளுக்கிய சோமேஸ்வர மன்னருடன் திருமண உறவு இருந்தது. மைசூரையும் வென்று ஆட்சி செய்தார். 

இரியங்கா (கி.பி.1098-1102) :

ஹொய்சாள வினையாதித்யனுக்கு பிறகு பட்டமேறிய அவரின் மகன் இவர். இவர் குறைந்த காலமே ஆட்சி புரிந்தாலும் தனது தந்தையுடன் இளவரசனாக ஆட்சி புரிந்தவர். இவர் சமண மதத்தை பின்பற்றினார். கி.பி.1062ல் இளவரசனாக நியமிக்கப்பட்டவர் 36 ஆண்டுகள் இளவரசனாக இருந்து தந்தையின் மறைவுக்குப் பின்னர் அரியணை ஏறினார். சாளுக்கிய இரண்டாம் சோமேஸ்வரரின் நல்ல நண்பராக அவருக்கு உதவியாக இருந்தார். சாளுக்கிய படையின் தளபதியாக இருந்து மாளவ மன்னனின் தாரா நகரை கைப்பற்றி சூறையாடினார். இவர் சக்ரகோட்டத்தை சூறையாடி கலிங்க மன்னனை போரில் தோற்கடித்து விரட்டினார். குறைந்த காலமே ஆண்ட இவருக்கு பின்னர் இவரது மகனான வீர பல்லாளா (அ) வீர வல்லாளா ஆட்சிக்கு வந்தார்.

முதலாம் வீர பல்லாளா (அல்லது) வீர வல்லாளா (கி.பி.1102-1108) :

இரியங்காவிற்கு பின்வந்த இவரும் சில காலமே ஆட்சிபுரிந்தாலும் மேலை சாளுக்கியத்திற்கு அடங்கிய சிற்றரசாகவே ஹொய்சாலர்கள் இருந்தனர்.  இவர் சமண மதத்தை பின்பற்றினார். இவர் சாளுக்கியர்களிடமிருந்து சுயாட்சி பெற போராடினாலும் சாளுக்கிய ஆறாம் விக்ரமாதித்தன் அதை முறியடித்து தனது ஆட்சியின் கீழாகவே இருக்குமாறு பார்த்துக் கொண்டார். இவரது ஆட்சியில் பேளூர் தலைநகராகவும் ஹளபேடு (துவாரசமுத்திரம்) இன்னொரு தலைநகராகவும் இருந்தது.

விஷ்ணுவர்தனன் (கி.பி.1108-1152) :

வீர பல்லாளாவின் தம்பி இவர். தனது முன்னோர்களை போல சமணத்தை பின்பற்றிய இவர் பிட்டிதேவா என்ற அழைக்கப்பட்டார். பின்னால் இராமானுஜரால் சமணத்தை துறந்து வைஷ்ணவரானார். வைஷ்ணவத்தை பின்பற்ற ஆரம்பித்தவுடன் பிட்டிதேவா என்ற பெயரை விஷ்ணுவரத்தனன் என்று மாற்றிக்கொண்டார். இவனது ஆட்சியில் கலை இலக்கியங்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டதால் இவரையே ஹொய்சாலர்களின் சிறந்த மன்னனாக குறிப்பிடப்படுகிறார். சாளுக்கிய மன்னனான ஆறாம் விக்ரமாதித்தனுடன் போரிட்டு சுயாட்சி பெற்றார். தலக்காடு போரின் முடிவில் சோழர்களின் வசமிருந்த கங்கபாடி (தற்போதைய தெற்கு கர்நாடகா மற்றும் கொங்கு நாட்டின் வடபகுதி) பகுதிகளில் சில பகுதிகளை தன்னுடைய நாட்டுடன் சேர்த்துக்கொண்டார். நுளம்பம்பாடியையும் தன் அரசுடன் சேர்ந்து கொண்டார். கன்னட மொழியில் காவிய கவிஞர் நாகசந்திரா ராமசந்திர சரித புராணம் மற்றும் மல்லிநாதபுராணம் ஆகியவற்றையும் எழுதினார். கணித அறிஞரான ராஜாதித்தா என்பவர் கணிதத்தில் வியாஹரகனிதா மற்றும் லீலாவதியை எழுதினார். தலக்காட்டில் சோழர்களுக்கு எதிரான வெற்றியை கொண்டாட கீர்த்தி நாராயணர் கோவிலையும், பேலூரில் விஜயநாராயணர் கோவிலையும் விஷ்ணுவுக்கு சென்னகேசவ கோயிலையும் கட்டினார். இவரது அரசியால் சென்னகேசவ கோயில் வளாகத்தில் கப்பே சென்னிகராய கோவில் அமைக்கப்பட்டது. கலை இலக்கியங்கள் கட்டிடக்கலை இவர் காலத்தில் உச்சத்தில் இருந்தது. 

முதலாம் நரசிம்மன் (கி.பி.1152-1173) :

விஷ்ணுவர்த்தனின் ஆட்சிக்கு பின் வந்த இவரின் ஆட்சியிலையே மேலை சாளுக்கிய மன்னனான மூன்றாம் தைலப்பாவை வென்று ஹொய்சாலர்கள் முழுமையான சுயாட்சி பெற்றனர். மூன்றாம் தைலப்பா இவரால் போரில் கொல்லப்பட்டார். காலச்சூரிகளுடான போரில் தோற்று போனார். இவரது மகனான இரண்டாம் வீர பல்லாளன் இவரது அரியணையிலிருந்து அகற்றினார்.

இரண்டாம் வீர பல்லாளன் (கி.பி.1173-1220) :

தந்தையான முதலாம் நரசிம்மனை பதவியிலிருந்து இறக்கி அரியணை ஏறினார். ஹொய்சாள மன்னர்களுள் இவர் முக்கியமானவர். இவர் தேவகிரி யாதவர்கள், தெற்கு காலச்சூரிகள் மற்றும் மேலை சாளுக்கியர்களுக்கு எதிரான போர்களில் வெற்றி பெற்றார். மதுரை பாண்டியர்கள் மற்றும் வீழ்ச்சியுற ஆரம்பித்த சாளுக்கியர்களுக்கு எதிரான வெற்றிகள் இவரது பலத்தை அதிகரித்தது. சோழர்கள் தங்களது வலு குறையும் நேரத்தில் அவர்களுக்கு உதவியாக இருந்தனர். இவரது வெற்றிகள் இவரை தக்காணத்தின் பலமான அரசர்களுள் ஒருவராக மாற்றியது. இவரது அவையில் சமண கவிஞர்களான ஜன்னா மற்றும் நேமிச்சந்திராவும் பிராமண கவிஞரான ருத்ரபட்டாவும் இருந்தனர். இவரது காலத்தில் அம்ருதபுரத்தில் அம்ருதேஸ்வரர் கோயிலும் பெலவாடியில் வீர நாராயண கோயிலும் ஹளபேடுவில் கேதாரேஸ்வரா கோயிலும் கட்டப்பட்டது. சமண துறவிகளுக்கு உணவு வழங்குவதற்காக மேருஹள்ளி கிராமம் மற்றும் சில நிலங்களை நன்கொடையாக கொடுத்தார்.

இரண்டாம் வீர நரசிம்மன் ( கி.பி.1220-1235) :

இரண்டாம் வீர வல்லாளனுக்கு பின் ஆட்சிக்கு வந்த அவரின் மகன் இவர். இவர் காலத்தில் ஹொய்சாளர்கள் காடவர் மற்றும் பாண்டியர்களுடன் போர்களில் ஈடுபட்டார். தீவிர வைஷ்ணவராக இருந்தார். சோழ மன்னனான மூன்றாம் இராஜராஜன் இவரின் மருமகன் ஆவார். அவரை சிறையெடுத்து தமிழகத்தில் உள்ள வைணவக் கோயில்களையும் பாண்டியர்களின் உதவிக்கொண்டு சோழ சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன் கொள்ளையடித்து வந்தார். உடனே இவர் பாண்டியர்கள் மீது படையெடுத்து வென்று கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து தன் மருமகன் மூன்றாம் இராஜராஜனை சிறை மீட்டு சோழ நாட்டை மீட்டு கொடுத்தார். திருவரங்கம் அருகில் கண்ணணூர் குப்பம் அருகில் தனது இரண்டாவது தலைநகரை அமைத்தான். நெல்லூர் தெலுங்கு சோழர்கள், வாரங்கல்லின் காகதீயர்கள் மற்றும் மதுரை பாண்டியர்களிடமிருந்து தனது ஹொய்சால அரசை பாதுகாக்க காஞ்சியில் தனது படைக்களத்தை வைத்திருந்தார். கவிஞர் சுமனோபனா என்பவர் அரசவை கவிஞராக இருந்தார். இவர் ஶ்ரீரங்கம் கோயிலில் ஒரு மண்டபத்தை கட்டி கொடுத்துள்ளார். பாண்டியர்களை வென்றதன் பொருட்டு இராமேஸ்வரத்தில் வெற்றி தூணை நிறுவினார்.

வீர சோமேஸ்வரன் (கி.பி.1235-1254) :

இரண்டாம் வீர நரசிம்மனுக்கு பின்னர் அவர் மகனான வீர சோமேஸ்வரன் ஆட்சிக்கு வந்தார். தமிழ்நாட்டின் விவகாரங்களையே கவனித்ததால் யாதவர்களிடம் துங்கபத்திரை ஆற்றுபகுதிகளில் சில பகுதிகளை இழந்தார். பாண்டியன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் எழுச்சியினால் சோழர்களிடம் நட்பு கொண்ட மூன்றாம் இராஜேந்திர சோழன் வீர சோமேஸ்வரின் மகனான வீர இராமநாதனை சோழ நாட்டில் கண்ணணூர் (இன்றைய திருச்சி அருகிலுள்ள சமயபுரம்) இடத்தின் மன்னனாக்கினான். போஜேஸ்வரா கோயில் கண்ணணூரில் இவரால் கட்டப்பட்டது. தன்னுடைய இராஜ்ஜியத்தை இரண்டாக பிரித்து மூன்றாம் நரசிம்மரிடம் ஒப்படைத்து கண்ணணூர் பகுதிகளை இன்னொரு மகனான ராமநாதனிடம் ஒப்படைத்து அவருடன் கண்ணணூர் வந்து தங்கினார். இந்த நேரத்தில் பாண்டியன் சடையவர்மன் சுந்தரபாண்டியனுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார்.

மூன்றாம் நரசிம்மன் (கி.பி.1254-1291) :

இவர் வீரசோமேஸ்வரின் மூத்த மகன். இவருக்கு நாட்டின் வடக்குப் பகுதியான கர்நாடகப் பகுதியை தனக்கு பின் ஆள பிரித்து கொடுத்தார். ஆனாலும் தமிழக பகுதியை ஆண்ட சகோதரனான ராமநாதனுக்கும் இவருக்கு உட்பகை இருந்தது.  இவரின் ஆட்சியில் வடக்கிலிருந்து யாதவர்கள் படையெடுத்து வந்து ஹளபேடுவை தாக்கினார். இருந்தாலும் தனது மகன் மூன்றாம் வல்லாளனின் துணையுடன் தன் நாட்டை பாதுகாத்துக் கொண்டார். இவர் தந்தையின் பெயரால் கட்டிய சோமேஸ்வர் ஆலயம் பவானிசாகர் அணைப்பகுதியால் மூழ்கிய கோயில்களுள் ஓன்றாயிற்று.

வீர இராமநாதன் (கி.பி.1254-1295) :

இவர் வீரசோமேஸ்வரரின் இரண்டாவது மகன். இவருக்கு நாட்டின் தென்பகுதியான தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளை தனக்கு பின் ஆள பிரித்துக் கொடுத்தார். நாடு விரிவாக இருந்ததால் நிர்வாக வசதிக்காக அமைதியான முறையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இவர் குந்தாணி (இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகொத்தூர் கிராமம்)யை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தார். சோழப் பேரரசு வீழ்ந்து பாண்டிய பேரரசின் எழுச்சி இவருக்கு ஆபத்தில் முடிந்தது. மாறவர்மன் குலசேகர பாண்டியன் சோழர்களின் பகுதி மட்டுமல்லாது ஹொய்சாலர்களின் தமிழகப் பகுதிகளையும் வென்றார். இதனால் ஆட்சியை இழந்த இவர் தன் அண்ணனோடு கலகம் செய்து அவரிடமிருந்து பெங்களூர், கோலார் மற்றும் தும்கூர் பகுதிகளை ஆட்சி புரிய பெற்றுக்கொண்டார்.

மூன்றாம் வீர வல்லாளன் ( கி.பி.1291-1343) :

இவரே ஹொய்சாளர்களின் கடைசி மாமன்னன். இவரது ஆட்சிகாலத்தில் வடக்கு தெற்கு பகுதிகள் ஓன்றிணைக்கப்பட்டது. இவரது ஆட்சியின் தலைநகரமாக ஹளபேடு மற்றும் துவாரசமுத்திரமும் இருந்தது. இவரின் ஆட்சியில் தேவகிரி யாதவர்கள், மதுரை பாண்டியர்களுடன் போர் நடந்தது. துளு நாட்டு அளுப்பர்களை வென்று அடக்கினார். மதுரையில் வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் நடைபெற்ற போட்டியில் சுந்தரபாண்டியனை ஆதரித்தார். தில்லியை ஆண்ட அலாவூதின் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து வந்தான். கி.பி.1311ல் ஹளபேடுவை முற்றுகையிட்ட சமயத்தில் சமாதான ஒப்பந்தம் செய்ததால் துவாரசமுத்திரத்தின் அனைத்து செல்வங்களையும் மாலிக்காபூர் கைப்பற்றினான். மேலும் ஹொய்சாளர்கள் டெல்லிக்கு அடங்கிய சிற்றரசாக கப்பம் கட்ட வலியுறுத்தப்பட்டது. கி.பி.1317ல் தேவகிரி யாதவர்களை அழித்து அலாவூதின் கில்ஜியின் மகன் தேவகிரியை கைப்பற்றினார். கி.பி.1327ல் மூன்றாம் வல்லாளன் கப்பம் கட்ட மறுத்ததால் முகம்மது பின் துக்ளக் ஹளபேடுவை தாக்க மீண்டும் படை அனுப்பினான். இதனால் மூன்றாம் வல்லாளன் திருவண்ணாமலைக்கு பின்வாங்கி சென்றான். கி.பி.1336களில் ஹொய்சாலர்களை தவிர மற்ற தென்னிந்தியா முழுவதும் டெல்லி சுல்தான்களின் வசம் போயிற்று. சுல்தான்களை எதிர்கொள்ள துங்கபத்திரை ஆறற்ங்கரையில் "ஹொசபட்டணா" என்னும் நகரை நிறுவி தனது இரண்டாவது தலைநகராக்கினார். பின்னர் இந்தநகரே விஜயநகரம் என்ற பெயருடன் விஜயநகரபேரரசின் தலைநகரமாக விளங்கியது. கி.பி.1343ல் வீர வல்லாளனுக்கும் மதுரை சுல்தானான கியாஸ்தீன் தம்கானிக்கும் நடைபெற்ற போரில் கண்ணணூர் கொப்பம் கோட்டை முற்றுகை போரின் போது  80 வயது முதிர்ந்த வீர வல்லாளன் சிறைபிடிக்கப்பட்டார். மதுரை சுல்தான் அவரை கொன்று வைக்கோல் அடைக்கப்பட்ட அவரது உடலை மதுரை கோட்டை சுவர்களில் காட்சிக்கு வைத்தார். பின்னர் அவரது மகன் நான்காம் வீர வல்லாளனுடன் கி.பி.1346ல் ஹொய்சாலர்களின் ஆட்சி முடிவுற்றது.

உதவிய நூல்கள்:

மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

மதுரை சுல்தான்கள் - S.P..சொக்கலிங்கம்

எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்

விக்கிபீடியா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு