42) சேனா (அல்லது) சென் அரசு
சேனா வம்சம் (கி.பி.1070-1230)
சென் பேரரசு அல்லது சேனா பேரரசு வடகிழக்கு இந்திய பகுதிகளான வங்காளத்தை மையமாக கொண்டு ஆண்ட 11-13ம் நூற்றாண்டுகளில் ஆண்ட இந்து பேரரசாகும். பாலர்கள் பேரரசு வீழ்ச்சியுறும் நேரத்தில் அதன் வங்காள கவர்னராக இருந்த சமந்த் சென் மற்றும் அவர் மகனான ஹேமந்த் சென் கி.பி.1095ல் சென் பேரரசை உருவாக்கினார்கள். இவர்களின் தலைநகரங்களாக கவ்டா, பிர்ஹாம்பூர், லக்குனோட்டி மற்றும் நவ்தீப் இருந்தது. இவர்களின் ஆட்சியில் சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழிகள் பேசப்பட்டன. இவர்கள் பிராஹ்மசத்ரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். பிராமணர்களாக இருந்தாலும் சத்திரியர்களின் தொழிலை மேற்கொண்டதால் அவ்வாறு கூறப்பட்டனர். இவர்களின் மூதாதையர்கள் கர்நாடகாவிலிருந்து வந்தவர்கள்.
சமந்த் சேனா (கி.பி.1070)
இவர் இந்த பேரரசை ஆரம்பித்தார். பாலர்களின் ஆட்சியில் கீழ் வங்காளத்தின் இரார் பகுதியின் ஆளுநராக இருந்தார்.
ஹேமந்த் சேனா (கி.பி.1070-1096) :
சமந்த் சேனாவுக்கு பின் வந்த அவரது மகன் ஹேமந்த் சேனா தன்னை அரசர் என்று அழைத்துக் கொண்டார். இவர் காலத்தில் தான் பாலர்கள் அரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. அந்த நேரத்தில் அதன் வங்காள ஆளுநராக இருந்த இவரின் தந்தையும் அவருக்கு பின் இவரும் சேனா வம்சத்து ஆட்சியை ஆரம்பித்து வைத்தனர். பாலர்களின் ஆட்சியில் வங்காளத்தின் இரார் பகுதியின் பொறுப்பாளராக அங்கே ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தனர். பிறப்பால் சத்திரிய வம்சத்தை சேர்ந்தவர்கள்
விஜய் சேனா (கி.பி.1096-1159) :
ஹேமந்த் சேனாவுக்கு பின் ஆட்சிக்கு வந்த இவர் அவரின் மகனாவார். 63 வருடங்கள் ஆண்ட இவரின் ஆட்சியில் பேரரசு நன்கு விரிந்து பரந்தது. இவர் கவ்டா, காமரூபா மற்றும் கலிங்க அரசர்களை தோற்கடித்து வங்காளத்தை கைப்பற்றினார். இவரின் தலைநகராக விஜயபுரி மற்றும் விக்ரமபுரா (இன்றைய டாக்காவிலிருநது 19 கி.மீ தூரத்திலுள்ள பிர்ஹாம்பூர்) இருந்தது. இவர் பாலர்கள் வீழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பாலர்களின் அரசனான ராம்பாலாவின் அங்கீகாரத்தை பெற்று இரார் பகுதியில் சுயாட்சியை பெற்றார். பின்னர் இவர் பாலர்களை தோற்கடித்து ஆட்சியை நிறுவினார். இவர் சுர் வம்சத்து இளவரசியான விலாஸ் தேவியை மணந்தார். சுர் வம்சத்து இளவரசியை மணந்ததால் அவர்களின் நட்பை பெற்று இரார் பிரதேசத்தை தக்கவைத்து கொண்டார். ஒரிஸ்ஸாவின் அரசராக இருந்த அனந்தவர்மன் சோடகங்காவுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தது இவரின் அந்தஸ்த்தை உயர்த்தியது. ஆனாலும் அனந்தவர்மனின் மகனான ராகவ் உடன் இவருக்கு மோதல்கள் ஏற்பட்டது. ஆட்சியின் கடைசி காலங்களில் வங்காளத்திலிருந்து பாலர்களை வெளியேற்றி வர்மன்களை தோற்கடித்து முழு வங்காளத்தையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தார். இவர் சைவ சமயத்தை பின்பற்றினாலும் மற்ற மதத்தினருடனும் நட்புறவுடன் இருந்தார்.
பல்லால சேனா (கி.பி.1159-1178) :
பாலர்களிடமிருந்து கெளர் பிரதேசத்தை கைப்பற்றி வங்காள டெல்டா பகுதிகளுக்கு அரசராக ஆனார். இவர் கல்கத்தா கடற்கரைகளில் புதியதாக நவ்தீப் நகரை உருவாக்கி தனது தலைநகராக ஆக்கிக் கொண்டார். மேற்கு சாளுக்கிய இளவரசி ரமாதேவியை தன் அரசியாக திருமணம் செய்துகொண்டார். இவர் காலத்தில் தான் டாக்காவில் தாகேஸ்வரி கோவில் கட்டப்பட்டது.
மேலும் காஷ்மீரிலும் கோயில்களை கட்டினார். இவர் பாலர்கள் அரசரான கோவிந்த பாலாவை தோற்கடித்து அவர்களின் அரசுக்கு முடிவுரை எழுதினார். இவர் வட வங்காளம், மகதம் மற்றும் மிதிலா ஆகிய பகுதிகளையும் வென்று தன் அரசை 5 பகுதிகளாக பாங்கா, பரேந்திரா, இரார், பாக்ரி (கீழ் வங்காளம்) மற்றும் மிதிலா & டெல்லி என பிரித்தார். இவரே குலினியம் என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இது ஹிந்து மதத்திலுள்ள சாதி மற்றும் திருமண சட்டங்களாகும். இதன் படி குலின் இன பெண்ணானவள் தனக்கு சமமான அல்லது உயர்ந்த பிரிவுகளில் உள்ள ஆணை தான் திருமணம் செய்யமுடியும். இவர் கி.பி.1168ல் தனசாகரா என்ற நூல் எழுதினார். ஆனால் கி.பி.1169ல் எழுதிய நூலான அத்பூதசாகரா முழுமையடையவில்லை. இந்த நூல் இவரின் மிதிலை வெற்றியை குறித்து எழுதப்பட்டது.
லக்ஷ்மண சேனா (கி.பி.1178-1206) :
பல்லால சேனாவுக்கு பின் வந்த இவர் 28 ஆண்டுகள் ஆண்டார். தனது பேரரசை ஒரிஸ்ஸா, பீஹார் மற்றும் வாரணாசி வரை பேரரசை விரிவுபடுத்தினார். இவர் தனது தந்தையின் காலத்தில் கரூடா, கலிங்கா, காமரூபம் மற்றும் வாரணாசி அரசர்களுடனான போரில் பங்கு பெற்றவர்.இவரின் ஆட்சியில் கி.பி.1203ல் துருக்கிய தளபதி பஹ்தியார் கில்ஜி நவ்தீப் மேல் படையெடுத்து இவரை தோற்கடித்து வடமேற்கு வங்காளத்தை கைப்பற்றிக் கொண்டார். கிழக்கு வங்காள பகுதிகள் மட்டுமே சேனா அரசர்களின் கீழ் இருந்தது. இவர் தனது தந்தை பல்லால சேனா முடிக்காமல் விட்ட "அத்பூதசாகரா" நூலை எழுதி முடித்தார். இவர் இலக்கியத்தில் சிறந்த புலமை கொண்டு நிறைய பாடல்களை எழுதியுள்ளார். இவரது அரசவையில் தான் "கீதகோவிந்தம்" இயற்றிய ஜெயதேவா என்ற சமஸ்கிருத புலவர் இருந்ததாக தெரிகிறது. இவரது அரசவையில் நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்ட புலவர்கள் இருந்ததாக தெரிகிறது. அவர்களில் சில கோவர்த்தனா, சரணா, ஜெயதேவா, உமாபதி மற்றும் தோஹியான் உள்ளிட்டவர்கள் இலக்கியத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பை செய்திருக்கின்றனர். இவர் தனது பெயரில் லக்ஷ்மண் காலண்டர் (நாள்காட்டி) என்ற பெயரில் வெளியிட்டார். இது வங்காளம் மற்றும் பீஹார் பகுதிகளில் அவருக்கு பின்னர் 400 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இவர் கவுட (லக்நெளதி) என்ற நகரை வங்காளத்தில் நிறுவினார். இவர் வைணவத்தை பின்பற்றி வந்தார். துருக்கிய தளபதி பஹ்தியார் கில்ஜியால் மோசமாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர் சென்றதும் கிழக்கு வங்காளத்திலுள்ள பிக்ராம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை கி.பி.1203ல் கைப்பற்றி கொண்டு மீண்டும் சேனா ஆட்சியை தன் இறுதிக்காலம் கி.பி.1206 வரை தொடர்ந்தார்.
விஸ்வரூப சேனா (கி.பி.1206-1225) :
சேனா வம்சத்தின் 5வது அரசர் இவர். இவர் பிஷ்ரூப் சேனா என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகிறார்.
கேசவ சேனா (கி.பி.1225-1230) :
இவரே சேனா வம்சத்தின் கடைசி அரசர். இவருக்கு பின் தேவா வம்சத்து அரசர்கள் வங்காளத்தை ஆட்சி செய்தனர். கில்ஜியின் படையெடுப்புக்கு பின்னர் மேற்கு வங்காளப்பகுதிகள் முஸ்லீம் அரசர்களின் ஆட்சிக்கு போய்விட சேனா வம்சத்து அரசர்கள் கிழக்கு வங்காளத்துடன் தங்கள் ஆட்சியை தொடர்ந்தாலும் பலவீனமாக இருந்த காரணத்தால் கேசவ சேனாவுடன் சேனா வம்சத்து ஆட்சி முடிந்தது. இவருக்கு பின்னர் இவர்களது கிளையில் சிற்றரசர்களாக இருந்த சூர்யா சேனா தேவா வம்சத்து ஆட்சியை தொடர்ந்து வைக்க அவருக்கு பின்னர் நாராயண சேனா மற்றும் லக்ஷ்மண சேனா என்ற தொடர்ச்சியான அரசர்களுடன் தேவா வம்சமும் முடிவுற வங்காளத்தில் இந்து அரசர்களின் ஆட்சி முடிவடைந்தது. தேவா வம்சத்து அரசர்களே வங்காளப் பகுதிகளின் கடைசி இந்து அரச பரம்பரையாகும்.
உதவிய நூல்கள் :
விக்கிபீடியா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்




Comments
Post a Comment