43) கீழை கங்கர்கள் அரசு

 கீழை கங்கர்கள்  (கி.பி.1078-1434)

கி.பி.11ம் நூற்றாண்டில் கடைசி முதல் கி.பி.15ம் நூற்றாண்டில் பாதிவரை கலிங்கம், ஓரிஸா பகுதிகளை ஆண்டவர்கள் கீழை கங்கர்கள். மேலை கங்கர்களுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? சோழர்களுக்கும் இவர்களுக்கும் என்ன உறவு? சரித்திரத்தை திருப்பி பார்த்தால் மிக்க பிரமிப்பே ஏற்படும்.

அனந்தவர்மன் சோடகங்கன் இவர் தான் கீழைகங்கர்கள் பரம்பரையை தோற்றுவித்தவர். சங்ககாலத்தில் சேரர் வலுகுன்றியிருந்த நேரத்தில் சேரர்களின் இடத்தை நிரப்பிய மேலை கங்கர்களின் கிளையின் மரபில் வந்த அதிஇராஜ இந்திரன் என்னும் இந்திரவர்மன் கி.பி.498ல் கலிங்கத்தை ஆண்ட பாண்டு/கேசரி மன்னர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இன்றைய ஆந்திரபிரதேசத்தில் ஶ்ரீகாகுளம் மாவட்டத்தில் முக்கலிங்கத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தனர். பின்னர் கி.பி.1038ல் மேலைகங்கர்களின் கிளையில் வந்த கலிங்கத்தை ஆளும் ஜந்தாம் வஜ்ரஹஸ்தன் சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களை வெற்றிக்கொண்டு அவர்களுடைய பிரம்மமகேஷ்வரர் மற்றும் மகாராஜாதிராஜன் பட்டங்களை சூடிக்கொள்கிறார். மேலும் மூன்று பிரிவுகளாக இருந்த கலிங்க நாடு(பீஹார்), ஓட்டநாடு (இன்றைய ஓரிஸா) ஆகியவற்றை ஆண்டதால் திரிக்கலிங்காபதி என்று பட்டம் சூட்டிக் கொள்கிறார். இவரின் மகனான ராஜராஜ கங்கேயன் (இராஜராஜதேவ கங்கன்) முதலாம் இராஜேந்திர சோழனின் மகளாகிய இராஜசுந்தரியை திருமணம் செய்துகொள்கிறார். இராஜராஜதேவ கங்கன் இளம் வயதிலையே இறந்துவிடுவதால் சோழ இளவரசியான இராஜசுந்தரி தன் அண்ணனாகிய வீரராஜேந்திரனிடம் தங்களின் எதிரிகளான கீழைசாளுக்கியர்களை  வீழ்த்த உதவி கேட்கிறார். அப்போது அவரின் மகனான அனந்தவர்மன் சோடகங்கனுக்கு 5வயது. ஆனால் கீழை சாளுக்கியர்களும் சோழர்களும் உறவுமுறை என்பதால் வீரராஜேந்திரனும் அவருக்கு பின் வந்த அவரின் தம்பி அதிராஜேந்திரனும் கங்கர்களுக்கு உதவவில்லை. அதிஇராஜேந்திரனும் போரில் கொல்லப்பட கீழை சாளுக்கிய பரம்பரையில் இராஜராஜ நரேந்திரனின் வழியில் வந்தவர் சாளுக்கிய சோழனாக முதலாம் குலோத்துங்க சோழன் என்ற பெயரில் பட்டத்திற்கு வருகிறார். அவர் தங்கள் பரம்பரை பகைக்காகவும் அனந்தவர்மன் இருமுறை கப்பம் செலுத்த தவறியதாலும்  கலிங்கத்தின் மீது படையெடுத்து அதை கைப்பற்ற கருணாகரரை தளபதியாக அனுப்பினார். இந்த போரில் போர் நுட்பங்களை பயில இளவரசர் விக்கிரமச்சோழனும் கலந்துக்கொண்டார். அனந்தவர்மனை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தாலும் கலிங்கத்தை வெற்றி கொண்டு கலிங்கத்தில் வெற்றித்தூணை நிறுவினாலும் அனந்தவர்மன் சோடகங்கனை பிடிக்கமுடியவில்லை.  இதன் பின்னர் கி.பி.1135 ல் கலிங்க நகருக்கு (இன்றைய கட்டாக்) தன் தலைநகரை அனந்தவர்மன் மாற்றினார். இதன் பின்னரே மேலை கங்கர்கள் என்ற அடையாளத்தை துறந்து "கீழை கங்கர்"களாக மாறினர்.

கீழை கங்கர்கள் தற்கால ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசத்தின் சில பகுதிகளை கி.பி.1078 முதல் கி.பி.1434 வரை ஆண்டார்கள். இவர்களின் தலைநகரம் கலிங்க நகரம் (கட்டாக்). இவர்களின் ஆட்சி காலத்திலையே கோனார்க் சூரியனார் கோவில் மற்றும் பூரி ஜெகந்தாதர் கோயில் ஆகியவை கட்டப்பட்டது.


இன்றைய ஓரிஸ்ஸாவின் கடற்கரையோரம் கோனார்க் என்னுமிடத்தில் சூரியக்கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் சிவப்பு மணல் பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. இது தேர்வடிவ சூரியக்கோயில். ஐரோப்பிய மாலுமிகள் இந்த கோயிலுக்கு சூட்டிய பெயர் "பிளாக் பகோடா (கறுப்பு கோவில்)". இந்த கோயிலை  அரசினுடைய 12 ஆண்டுகால வருமானம் முழுவதுமாக செலவிட்டு கட்டினார்களாம்.

இந்து மத மரபுகளில் ஒன்றான ஜொராஷ்டிரியத்தில் சூரியன் தான் முக்கியமான கடவுள். இங்குள்ள சிலைகள் அத்தனையும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டவை. பாலியல் விளையாட்டுகளை காட்டும் சிற்பங்களும் உண்டு. ஏனெனில் இந்த மதத்தில் சூரியனே சிருஷ்டிதேவனாக வணங்கப்படுகிறார். கோவிலின் முன்பகுதியிலுள்ள நாதமந்திர் மண்டபம் தான் சிற்பங்கள் நிறைந்தது. முழுக்கோவிலும் தற்போது இல்லை. சில பகுதிகள் இடிந்து விட்டன. யுனெஸ்கோ அமைப்பால் இக்கோவில் கி.பி.1984ல் "உலக பண்பாட்டு சின்னமாக"அறிவிக்கப்பட்டது


அனந்தவர்மன் சோடகங்கன் (கி.பி.1077-1150) :

இவரே இந்த வம்சத்தை தொடக்கி வைத்தவர். முதலாம் இராஜேந்திர சோழனின் மகளாகிய இராஜசுந்தரியின் மகன் இவர். இவர் மிகுந்த இறைபக்தி மிக்கவர். கலைகளையும் இலக்கியங்களையும் ஆதரித்தார். பூரியிலுள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் ஆலயத்தை கட்டியவர் இவர் தான். ஆரம்பத்தில் சைவராக இருந்த இவர் இராமானுஜரின் விஜயத்திற்கு பிறகு வைணவராக மாறினார். இவர் கி.பி.1118ம் ஆண்டு கல்வெட்டில் தன்னை பரம வைஷ்ணவர் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் இரண்டு வருடங்களாக சோழர்களுக்கு கட்ட வேண்டிய வரிப்பணத்தை கட்டவில்லை என்பதாலும் வேங்கி சாளுக்கிய வழியில் வந்த முதலாம் குலோத்துங்க சோழனுக்கும் இவர் வழியில் வந்த மேற்கு கங்கர்களுக்கும் பரம்பரை பகையின் காரணத்தாலும் சோழ தளபதி கருணாகர தொண்டைமான் கி.பி.1112ல் படையெடுத்து வென்றதை கலிங்கத்துபரணி பாடுகிறது. இந்த தோல்விக்கு பின்னர் தனது தலைநகராக முக்கலிங்கம் (இன்றைய ஶ்ரீகாகுளம் மாவட்டம்,விழியநகரம் அருகில்) இருந்து  இன்றைய கட்டாக் நகருக்கு தனது தலைநகரை மாற்றியமைத்து கீழை கங்கர்கள் என்ற புது வம்சத்தை தோற்றுவிக்கிறார். அது வரை கலிங்கர்கள் என்ற பெயர் ஒட்டியர்கள் என்ற மாறியது. இவர் இலங்கை திரிகோண மலையிலுள்ள கோணேஷ்வரன் ஆலயத்திற்கு நன்கொடைகள் வழங்கியதாகவும் தெரிகிறது.

ஜதேஷ்வர தேவன் (கி.பி.1150-1156) :

ராகவ தேவன் (கி.பி.1156-1170) :

இரண்டாம் ராஜராஜ தேவன் (கி.பி.1170-1190) :

இரண்டாம் அனங்க பீமதேவன் (கி.பி.1190-1198) :

மூன்றாம் இராஜராஜ தேவன் (கி.பி.1198-1211) :

இவர் கிழக்கு சாளுக்கிய இளவரசியான மால்ஹனதேவியை மணந்தார். இவர் காலத்தில் கில்ஜி வம்சத்து முஸ்லீம்களின் படையெடுப்பினால் கி.பி.1206ல் ஒரிஸாவை இழந்தார்.

மூன்றாம் அனங்க பீமன் (கி.பி.1211-1238) :

இவரின் ஆட்சியில் அரசு வடக்கே கங்கையாறு வரையும் தெற்கே கோதாவரி ஆறு வரையும் விரிந்தது. இவர் அரசுக்கு மேற்கே தொல்லையாக இருந்த காலச்சூரிகளை வென்றார். வங்காளத்தில் தொல்லையாக இருந்த துருக்கி-ஆப்கானிய முஸ்லீம்களை வென்று இன்றைய இந்தியா-பங்களாதேஷ் எல்லையிலுள்ள "கவ்டா" நகரை கைப்பற்றினார். தந்தையின் காலத்தில் இழந்த ஒரிஸாவை கில்ஜி வம்சத்திடம் இருந்து மீட்டு மேகேஸ்வரா மற்றும் புவனேஷ்வரா கோயிலை கட்டினார். இவருக்கு சோமலதேவி மற்றும் கஸ்தூரதேவி என்ற இரு அரசிகள் உண்டு. இவரின் மகளான சந்திரிகா என்பவர் விஷ்ணு பக்தை. தனது சகோதரர் முதலாம் நரசிம்ம தேவன் காலத்தில் அனந்தவாசுதேவர் ஆலயத்தை புவனேஷ்வரில் கட்டினார்.

முதலாம் நரசிம்ம தேவன் ( கி.பி.1238-1264) :

.இவரின் ஆட்சிக்காலத்தில் தான் கோனார்க் சூரியனார் கோவில் கட்டப்பட்டது. மேலும் கபிலாஷ் கோவிலையும் கட்டினார். இவரின் ஆட்சியில் சிம்ஹாசலத்திலுள்ள வராகலெட்சுமி நரசிம்ஹா கோயிலும் விரிவுப்படுத்தப்பட்டது. இவர் வங்காளத்தின் முஸ்லீம் படைகளை தோற்கடித்தார். மால்வாவின் பரமர வம்சத்து இளவரசியான சீதாதேவி இவரது பட்டத்தரசி. ஒரிசாவில் கஜபதி என்ற பட்டத்தை பயன்படுத்திய முதல் அரசர் இவரே. 

முதலாம் பானு தேவன் (கி.பி.1264-1279) :

இரண்டாம் நரசிம்ம தேவன் (கி.பி.1279-1306) :

இரண்டாம் பானு தேவன் ( கி.பி.1306-1328) :

இவரின் ஆட்சியில் கி.பி.1321ல் துக்ளக் வம்சத்தின் கியாஸ்சுதீன் துக்ளக் தனது மகனான உலா கான் (இவரின் பெயரே பின்னர் முகம்மது பின் துக்ளக் என்றாகியது) படைகளுடன் வந்து கங்கர்களின் எல்லைகளில் நடந்த போரில் தோற்றுப் போனார். ஶ்ரீகுர்மாம் கோயில் கல்வெட்டுகளில் இந்த அரசர் தனது தளபதியான ஶ்ரீராம சேனாதிபதியை கலகங்களை வென்றெடுப்பவர் என்று புகழ்ந்துரைத்துள்ளார். கடைசியில் உலா கானின் படைகள் தோற்று கங்கர்களின் காடுகளில் இருந்து யானைகளை மட்டுமே பிடித்து கொண்டு போயினராம்.

மூன்றாம் நரசிம்ம தேவன் (கி.பி.1328-1352) :

மூன்றாம் பானு தேவன் (கி.பி.1352-1378) :

இவரது ஆட்சியில் டெல்லியை ஆண்ட ஃபெரோஸ் ஷா துக்ளக் வங்காளத்தின் பாண்டவா அரசின் மீது படையெடுத்தார். அந்த அரசர் இலியாஸ் ஷா மூன்றாம் பானு தேவனின் உதவியை நாடினார். இவர் டெல்லி படைகளை வீழ்த்தி பாண்டவா அரசை காப்பாற்றியதாகவும் பாண்டவா அரசர் 22 யானைகளை பரிசளித்ததாக தர்மலிங்கேஷ்வர் கோயில் கல்வெட்டுகளில் செய்திகள் தெரிவிக்கின்றன. ஃபெரோஸ் ஷா துக்ளக்கின் இரண்டாவது படையெடுப்பில்  பாண்டவா அரசர் பெங்காலின் ஷா மன்னரை தோற்கடித்தது மட்டுமல்லாது சில கங்க தளபதிகளுக்கு இலஞ்சம் கொடுத்து கங்கர்களை தோற்கடித்தனர். விஜயநகர பேரரசு கி.பி.1356ல் இவரை தோற்கடித்தது. 

நான்காம் நரசிம்ம தேவன் (கி.பி.1379-1425) :

நான்காம் பானு தேவன் (கி.பி.1425-1434) :

இவரை பைத்தியக்கார அரசர் என்றே குறிப்பிட்டுள்ளனர். இவரே மேற்கு கங்கர்கள் அரசின் கடைசி அரசர். இவரை இவரின் மந்திரி கபிலேந்திரா என்பவர் வீழ்த்திவிட்டு சூர்யவம்ச ஆட்சியை ஆரம்பித்தார்.

உதவிய நூல்கள் :

சேர சோழ பாண்டியர் வரலாறு - எஸ். கிருஷ்ணன்

விக்கிபீடியா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு