45) யாதவர்கள் அரசு
யாதவர்கள் அரசு (கி.பி.1187-1317) :
யாதவர்கள் கி.பி.860 முதல் மேற்கு சாளுக்கிய அரசில் சிற்றரசாக இருந்து அவர்கள் வீழ்ந்து பட்டவுடன் கி.பி. 1187ல் ஜந்தாம் பில்லாமா தலைமையின் கீழ் சுதந்திர அரசாக பிரகடனப்படுத்திக் கொண்டனர். இவர்களின் அரசு இரண்டாம் சிம்ஹானாவின் கீழ் தான் அதன் உச்சநிலையை அடைந்திருந்தது. வடக்கே நர்மதை நதியையும் தெற்கே துங்கபத்திரை நதியையும் மேற்கே தக்காண பீடபூமிகளையும் எல்லைகளாக கொண்டு இன்றைய மஹாராஷ்டிரா, வடகர்நாடகா, மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளை கொண்டிருந்தது. அதன் தலைநகராக தேவகிரி (இன்றைய தெளலதாபாத், அவுங்காபாத் மாவட்டத்திலுள்ளது) இருந்தது. இவர்களின் ஆட்சியில் பொது மொழிகளாக கன்னடம், மராத்தி மற்றும் சமஸ்கிருதம் பேசப்பட்டது. ஹிந்து மதமும் சமண மதமும் பின்பற்றப்பட்டது. ஆரம்பத்தில் சின்னார் (நாஸிக் அருகில்) இருந்த தலைநகரை ஜந்தாம் பில்லாமா தேவகிரிக்கு மாற்றினார்.
யாதவ சிற்றரசர்கள்:
த்ரித்ரபிரஹாரா (கி.பி.860-880)
இவர் தான் சந்திராதித்யபுரா (இன்றைய Chandor) நகரை நிர்மாணித்து கண்டோஷ் பகுதி மக்களை எதிரிகளின் படையெடுப்பிலிருந்து காத்தார். இந்த நகரம் நாஸிக்கிலிருந்து சில மைல்கள் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த நேரத்தில் விந்திய மலைகளிலிருந்து வந்தவர்களின் எதிர்ப்புகளை சமாளிக்கவே நாஸிக் மற்றும் கந்தேஷ் பகுதி மக்கள் முயற்சித்த வேளையில் ஆபத்பாந்தவனாக வந்தார்.
சேவன சந்திரா (கி.பி.880-900) :
த்ரித்ரபிரஹாராவுக்கு பின்னர் ஆட்சியேறிய இவர் அவரின் மகன். இவர் இராஷ்டிரகூடர்களின் சிற்றரசாக இருந்து அவர்களுக்காக பரமரர்களை எதிர்த்தார். இதனால் இராஷ்டிரகூடர்கள் இவருக்கு சிற்றரசர் என்ற அந்தஸ்தை அளித்தனர். இவர் சேவனபுரா (இன்றைய சின்னார்) நகரை நிர்மாணித்து அதை தனது தலைநகராக ஆக்கினார். இவர் இருக்கும்வரை தனது இராஜ்ஜியத்தின் அளவுகள் பெருகாவிட்டாலும் குறையாமல் பார்த்துக் கொண்டார்.
முதலாம் தாடியப்பா , முதலாம் பில்லாமா & ராஜூகி (கி.பி.900-950) :
சேவன சந்திராவுக்கு பின்னர் வந்த இவர்கள் இராஷ்டிரகூடர்களின் சிற்றரசர்களாகவே இருந்தனர். முதலாம் தாடியப்பாவுக்கு பின் வந்த முதலாம் பில்லாமா மற்றும் ராஜூகி ஆகியோரின் ஆட்சியேறிய விவரங்கள் தெரியாவிட்டாலும் வாடிகா என்பவர் ஆட்சியேறியது கி.பி.950 என்பதிலிருந்து இவர்கள் மூவரின் ஆட்சிக்காலம் 900-950 என்று அறியமுடிகிறது.
வண்டூகி (அல்லது) பாடிகா (கி.பி.950-970) :
இவர் இராஷ்டிரகூடர்களுடன் திருமண உறவை ஏற்படுத்திக்கொண்டார். அன்றைய இராஷ்டிரகூட சக்ரவர்த்தி மூன்றாம் கிருஷ்ணாவின் இளைய சகோதரரான தோராப்பாவின் மகளான வாஹிவாயாவை திருமணம் செய்துக்கொண்டார். இதனால் இவர் மூன்றாம் கிருஷ்ணாவின் படையெடுப்புக்கு உதவி புரிந்தார். இதனால் மூன்றாம் கிருஷ்ணா இவருக்கு அதிகப்படியாக ஜாகீர்களை அளித்ததாலும் எந்த பகுதிகள் அதிகப்படுத்தப்பட்டன என்ற விவரம் தெரியவில்லை.
தாடியஸா (கி.பி.970-985) :
இவரை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இவரது காலத்தில் தான் இராஷ்டிரகூடர்கள் அரசு மேலை சாளுக்கியர்களால் தூக்கியெறியப்பட்டது. இந்த நேரத்தில் இவர் இராஷ்டிரகூட படைகளுக்கு உதவினாரா என்ற விவரமும் இல்லை.
இரண்டாம் பில்லாமா (கி.பி.985-1005) :
இராஷ்டிரகூடர்களை வென்ற கல்யாணி சாளுக்கியரான இரண்டாம் தைலப்பாவின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டார். தைலப்பாவுடன் சேர்ந்து பரமர அரசன் முஞ்சாவை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். இவ்ர இராஷ்டிரகூட இளவரசியான லக்ஷ்மி என்பவரை மணந்தார். பரமரர்களை வென்றதால் இரண்டாம் தைலப்பா இவருக்கு பரிசுகள் அளித்த விவரம் தெரியவில்லை. ஆனால் இவருக்கு அஹ்மத் நகர் மாவட்டம் கூடுதலாக வழங்கப்பட்டதை அறியமுடிகிறது. மேலும் பரமரர்களின் ஆதிக்கத்தில் இருந்த கந்தேஷ் பிரதேசமும் இவருக்கு அளிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இந்த வெற்றியினால் தனக்கு "விஜயபரணா" என்று பட்டத்தை சூடிக் கொண்டார். மேலும் சங்கமனேரில் "விஜயபர்ணேஷ்வரா" என்ற பெயரில் சிவன் கோயிலை கட்டினார். இதன் பிறகு இன்றைய நாஸிக் மாவட்டத்திலுள்ள சின்னார் நகருக்கு தனது தலைநகரை மாற்றிக்கொண்டார்.
முதலாம் வேசுகி (கி.பி.1005-1025) :
இரண்டாம் பில்லாமாவின் மகனான இவர் குஜராத் சாளுக்கியரான சோலங்கி வம்சத்தை சேர்ந்த நையிலாதேவியை திருமணம் செய்துக்கொண்டார்.
மூன்றாம் பில்லாமா (கி.பி.1025-1040) :
இவர் சாளுக்கிய மன்னனான இரண்டாம் ஜெயசிம்ஹாவின் மகளான ஆவல்லதேவியை மணந்துக்கொண்டார். இந்த திருமணத்தினால் இவரது செல்வாக்கு உயர்ந்தது. தனது மாமனார் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரரான முதலாம் சோமேஸ்வராவுக்காக பரமர அரசன் போஜாவை எதிர்த்து நின்று போரிட்டார்.
இரண்டாம் வேசுகி என்ற வாடிகா என்ற யாதுகி & நான்காம் பில்லாமா (கி.பி.1040-1050) :
மூன்றாம் பில்லாமாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இவர்களின் கால விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.
இரண்டாம் சேவன சந்திரா (கி.பி.1050-1085) :
நான்காம் பில்லாமா மறைவுக்கு பின்னர் அவரது மகனான இவர் ஆட்சியேறினார். இவர் சாளுக்கிய சகோதரர்களுக்கான வாரிசுரிமை சண்டையில் ஆறாம் விக்ரமாதித்யாவுக்காக இரண்டாம் சோமேஸ்வராவை எதிர்த்தார். முடிவில் ஆறாம் விக்ரமாதித்யாவே பட்டத்துக்கு வந்து இவருக்கு மஹா மண்டலேஷ்வரா பட்டமளித்தார்.
அய்ரமாதேவா (அ) எர்ம்மாதேவா (கி.பி.1085-1105) :
இவரும் இரண்டாம் சோமேஸ்வராவை எதிர்த்து ஆறாம் விக்ரமாதித்யா பக்கமே நின்றார். இந்த போரில் இரண்டாம் சோமேஸ்வராவுக்கு ஆதரவாக சோழன் வீர ராஜேந்திரன் இருந்தார். இவருடைய மனைவி யோகல்லா என்பவர். அஸ்வி கல்வெட்டுகள் இவர் சாளுக்கிய அரசருக்கு உதவியாக நின்றதை பற்றி கூறுகிறது.
முதலாம் சிம்ஹானா என்ற சிம்ஹராஜா (கி.பி.1105-1120) :
அய்ரமாதேவாவுக்கு பின் ஆட்சிக்கு வந்த இவர் அவரின் தம்பி. இவர் ஆறாம் விக்ரமாதித்யாவின் கார்பூரா-விரத பூஜைக்காக கார்பூரா யானையை பரிசளித்தார்.
அரசர்கள் தெரியவில்லை (கி.பி.1120-1145) :
முதலாம் மல்லுகி (கி.பி.1145-1160) :
இவர் சாளுக்கிய மன்னர் மூன்றாம் தைலப்பாவிற்கு விசுவாசமான சிற்றரசாக இருந்தார். இவரது தளபதியான தாதா மற்றும் அவரின் மகனாகிய மகிதாராவும் தைலப்பாவின் கீழிருந்த காலச்சூரிகளின் (இரண்டாம் பிஜ்ஜாலா) புரட்சியை அடக்கினர். இவர் தனது அரசை பர்ணகேதா (Modern Patkhed in Akola district) வை வென்று விரிவுபடுத்தினார். மேலும் உத்காலா அரசரிடமிருந்து யானைகளை கைப்பற்றியதாகவும் தெரிகிறது. காகத்திய அரசர் ருத்ராவுடன் நடந்த போரில் எந்த வித பலனும் கிடைக்கவில்லை என தெரிகிறது. முதலாம் மல்லுகிக்கு அமரகாங்கேயா மற்றும் கர்ணா என்ற இரு மகன்கள் இருந்தனர்.
அமரகாங்கேயா :
மல்லுகிக்கு பின் ஆட்சிக்கு வந்த அவரின் மூத்தமகன் இவர். ஆட்சியேறிய குறுகிய காலத்திலையே மரணமடைந்தார்.
அமர மல்லுகி (என்ற) இரண்டாம் மல்லுகி :
அமரகாங்கேயாவுக்கு பின் வந்த அவரின் மகன். இவர் ஆட்சியேறிய குறுகிய காலத்திலையே கலிய பல்லாலா என்பவர் இவரை விரட்டியடித்து ஆட்சியை கைப்பற்றினார்.
கலிய பல்லாலா (???-கி.பி.1175) :
இவர் அமரமல்லுகியை வீழ்த்திவிட்டு வந்த புரட்சி கூட்டத்தின் தலைவராக இருக்கலாம் என்ற சந்தேகமுள்ளது. இவரை அமர மல்லுகியின் தந்தையான அமரகாங்கேயாவின் சகோதரர் கர்ணாவின் மகனான ஜந்தாம் பில்லாமா குறுகிய காலத்திலையே விரட்டியடித்து ஆட்சியை கைப்பற்றினார்.
ஜந்தாம் பில்லாமா (கி.பி.1175-1187) :
இவர் பதவியேற்ற சமயத்தில் சாளுக்கியர்கள் ஹெய்சாலர்கள் மற்றும் காலச்சூரிகளுடன் சண்டையில் இருந்தார்கள். இவர் சாளுக்கிய குஜராத் சோலங்கிகள் மற்றும் பரமரா சிற்றரசர்கள் மீது தொடுத்த போரில் எந்தவித பகுதிகளையும் வெல்ல முடியவில்லை. ஆனாலும் இந்த போர்கள் அவரின் தன்னம்பிக்கையை அதிகரித்து. இந்த நேரத்தில் ஹெய்சால அரசர் இரண்டாம் பல்லாலா தெற்கு பக்கமிருந்து சோமேஸ்வராவின் மீது படையெடுக்க இவர் வடக்கு பக்கமிருந்து படையெடுத்தார். இருவரும் இணைந்து கி.பி1187ல் பில்லாமா சாளுக்கிய தலைநகரான கல்யாணியை வென்று தங்களை சுதந்திர அரசர்களாக அறிவித்து கொண்டனர்.
சுதந்திர தனி அரசர்கள்:
ஜந்தாம் பில்லாமா (கி.பி.1187-1191) :
மேற்கு சாளுக்கிய அரசின் கீழ் சிற்றரசராக 12 ஆண்டுகாலம் இருந்த ஜந்தாம் பில்லாமா அவர்களின் வீழ்ச்சிக்கு பின் தன்னை சுதந்திர அரசனாக பிரகனடப்படுத்திக் கொண்டு நாஸிக் அருகிலுள்ள சின்னார் இடத்திலிருந்த தலைநகரை தேவகிரிக்கு (இன்றைய தெளலாபாத்) மாற்றினார். இதற்கிடையில் ஹெய்சால பல்லாலா வனவாசி மற்றும் நுளம்பம்பாடியை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். பின்னர் பிஜப்பூர் மற்றும் தார்வார் மாவட்டங்கள் மீது படையெடுக்கவே ஜந்தாம் பில்லாமா ஹெய்சாலர்களின் சாம்ராஜ்ய ஆசையை உணர்ந்து கி.பி.1191 ஜூன் மாதத்தில் 2 லட்சம் காலாட்படை மற்றும் 12,000 குதிரைப்படையுடன் தார்வார் மாவட்டத்திலுள்ள கடக் என்ற இடத்தில் ஹெய்சால பல்லாலாவை எதிர்த்து போரிட்டார். இந்த போரில் ஹெய்சாலர்கள் வெற்றி பெற்றனர். இந்த போரில் ஜந்தாம் பில்லாமா மறைந்தார்.
ஜெய்துகி (கி.பி.1191-1210) :
ஜந்தாம் பில்லாமாக்கு பின் ஆட்சிக்கு ஏறிய அவரின் மகனான ஜெய்துகி கி.பி.1194ல் காக்கத்தீய அரசு மீது போர் தொடுத்து தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். பின்னர் கி.பி.1199ல் காகதீய அரசர் மகாதேவா தேவகிரியின் மீது போர்தொடுத்து வந்த போரில் கொல்லப்பட அவரின் மகனான கணபதி தேவா சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் கி.பி.1202ல் அவரை விடுவித்து தன்னுடைய ஆட்சிக்கு கீழ் இருக்க செய்தார்.
இரண்டாம் சிம்ஹானா (கி.பி.1210-1246) :
ஜெய்துகிக்கு பின் வந்த அவரின் மகனான இவரே இவர்களின் சாம்ராஜ்யத்தின் சிறந்த மன்னனாக கருதப்படுகிறார். இவரின் ஆட்சியின் கீழ் யாதவ பேரரசு வடக்கே நர்மதை நதி வரையும் தெற்கே துங்கபதத்திரா நதிவரையும் மேற்கே அரபிக்கடல் வரையும் கிழக்கே இன்றைய தெலுங்கானா மாநிலம் வரையும் பரந்து விரிந்திருந்தது. ஹெய்சாலர்கள் பாண்டியர்களுடன் போரிட்டு கொண்டிருந்த வேளையில் ஹெய்சாலர்களின் சில பகுதிகளை பிடித்துக்கொண்டார். ஹெய்சாலர்களின் கீழ் இருந்த சவுடான்டியை (இன்றைய சுகந்தவர்த்தி) ஆண்ட ரட்டர்களின் (கர்நாடக மாநிலத்தின் பெல்காம் பகுதியை ஆண்டவர்கள்) அரசை கைப்பற்றிக் கொண்டார்.கி.பி.1215ல் பரமரா அரசர் அர்ஜீன வர்மனுடன் நடந்த போரில் அர்ஜீன வர்மன் மாண்டு போனார். கி.பி.1216ல் கோலாப்பூரை ஆண்ட சில்ஹாரா வம்சத்து அரசன் இரண்டாம் போஜாவை தோற்கடித்து தனது ஆளுமையின் கீழ் கொண்டுவந்தார். கி.பி.1220ல் சிம்ஹானா தனது தளபதியான கோலேஷ்வராவை இன்றைய குஜராத்தின் தெற்கு பகுதியான லத்தாவுக்கு அனுப்பினார். அவர் லத்தாவின் அரசர் சிம்ஹாவை போரில் கொன்று லத்தாவை கைப்பற்றினார். பின்னர் சிம்ஹாவின் மகனான சாங்காவை தனது ஆளுநராக லத்தா பகுதிக்கு நியமித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு சாளுக்கிய தளபதி லவனபிரசாதா லத்தாவின் மீது போர் தொடுத்து துறைமுக நகரமான "காம்பத்"தை கைப்பற்றினார். பின்னர் சாங்கா யாதவர்களின் துணையோடு காம்பத் மீது இரு முறை போர் தொடுத்தும் மீட்க முடியவில்லை. கடைசியில் சாளுக்கியர்-யாதவர்கள் இடையே அமைதி ஒப்பந்தம் கி.பி.1232ல் வந்தது. கி.பி.1244ல் லவனபிரசாதாவின் பேரன் விசாலதேவா குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றி முதல் வகேலா அரசை ஆரம்பித்தார். இந்தமுறை சிம்ஹானா படையெடுத்து சென்றதில் அவரின் தளபதியான ராமா (கோலேஷ்வராவின் மகன்) போரில் கொல்லப்பட்டார். சிம்ஹானாவின் தளபதியான பிச்சானா ரட்டர்கள், தார்வாடை ஆண்ட குட்டர்கள், ஹங்கலை ஆண்ட கடம்பர்கள் மற்றும் கோவாவை ஆண்ட கடம்பர்களையும் அடக்கி தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்.
கிருஷ்ணா (என்ற) கண்ணாரா (கி.பி.1246-1261) :
சிம்ஹானாவுக்கு பின் ஆட்சிக்கு வந்த இவர் அவரின் பேரன். இவர் பரமரா அரசை தோற்கடித்தாலும் எந்த நிலப்பகுதியையும் கைப்பற்ற முடியவில்லை. இவர் குஜராத்தை ஆண்ட வகேலா அரசர்கள் மீது நடைபெற்ற போரில் இருவருக்குமே வெற்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் தான் ஹொய்சாலர்களுடன் நடந்த போரிலும் இருதரப்புக்குமே வெற்றி தோல்வியின்றி முடிந்திருக்கலாம். அதையே இருதரப்பினரும் தம் வெற்றி என்று சொல்லிக்கொண்டிருக்கலாம்.
மஹாதேவா (கி.பி.1261-1270) :
கிருஷ்ணாவுக்கு பின் ஆட்சிக்கு வந்த இவர் அவரின் இளைய சகோதரர். வடக்கு கொங்கணத்தை ஆண்ட சில்ஹாரா வம்சத்து சோமேஸ்வரனை வென்று தனது ஆளுமையின் கீழ் கொண்டுவந்தார். இவர் காகதீய அரசின் மீது படையெடுத்தார். ஆனால் ராணி ருத்திரமாதேவியின் படைகளை வெல்ல முடியாமல் திரும்பினார். இவர் தெற்கு ஹொய்சால அரசின் மீது படையெடுத்தார். ஆனால் அதன் அரசர் இரண்டாம் நரசிம்ஹாவை சமாளிக்க முடியாமல் திரும்பினார். கி.பி.1268ல் மஹாதேவாவின் கடம்பர்கள் இவர்களின் மேலாதிக்கத்திற்கு எதிரான புரட்சியை இவர் தளபதி பாலிகா தேவா அடக்கினார்.
அம்மானா (கி.பி.1270) :
மஹாதேவாவிற்கு பின் ஆட்சிக்கு வந்த இவர் மஹாதேவாவின் மகன். இவரை மஹாதேவாவின் அண்ணன் கிருஷ்ணாவின் மகனான இராமச்சந்திரா பதவியிலிருந்து அகற்றினார்.
ராமச்சந்திரா (என்ற) ராமதேவா (கி.பி.1271-1308) :
இவர் பதவிக்கு வந்த வருடங்களில் பலவீனமாக இருந்த பரமரா அரசின் மீது போர் தொடுத்து வென்றார். இவர் வகேலா அரசர்கள் மீது தொடுத்த போரில் எந்தவித பயனுமில்லை. கி.பி.1275ல் தனது மிகுந்த படைபல்த்துடன் தனது தளபதி திக்காமா தலைமையில் ஹொய்சாலர்களின் மீது படையெடுத்தார். இவரின் தலைமையின் ஹொய்சாலர்களின் பகுதியை சூறையாடிய பின் கி.பி.1276ல் திரும்பினர். காகதீயர்களுடன் நடந்த போரில் ராயச்சூர் பகுதியை அவர்களிடம் இழந்துவிட்டார். இவர் வடகிழக்கு பிரதேசங்களை வென்றார். பின்னர் காலச்சூரிகளின் திரிபுரி (இன்றைய தேவார் நகரம் ஜபல்பூர் அருகில்)யை கைப்பற்றினார். வாரணாசியில் கோவில் ஒன்றையும் கட்டினார். கொங்கண் பகுதியான கேத் மற்றும் சங்கமேஸ்வர் பகுதி சிற்றரசர்களை அடக்கினார். கி.பி.1296ல் அலாவூதின் கில்ஜி தேவகிரி மீது படையெடுத்து கைப்பற்றினார். நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து தலைநகரை மீட்டாலும் அதன்பிறகு வருடந்தோறும் கப்பம் கட்டாததால் மீண்டும் கி.பி.1307ல் கில்ஜி மாலிக்காபூரின் தலைமையின் கீழ் படைகளை அனுப்பி வைத்தார். அந்த படைகளுடன் மால்வா மற்றும் குஜராத் முஸ்லீம் சிற்றரசரர்களின் படைகளும் சேர்ந்து கொண்டதால் தேவகிரி எதிர்ப்பின்றி வீழ்ந்தது. இராமச்சந்திரா டெல்லிக்கு கில்ஜியின் அரசவைக்கு கொண்டு போகப்பட்டார்.
கில்ஜியின் சிற்றரசர்கள்:
ராமச்சந்திரா (என்ற) ராமதேவா (கி.பி.1308-1311) :
தனக்கு வருடாந்திர கப்பம் கட்டும் சிற்றரசாக இருக்கவைத்து தேவகிரிக்கு ஆளுநராக இராமச்சந்திராவை வைத்தார்.
மூன்றாம் சிம்ஹானா (என்ற) சங்கரதேவா (கி.பி.1311-1313) :
ராமசந்திராவுக்கு பின் வந்த இவர் கில்ஜிக்கு கப்பம் கட்ட மறுத்து சவால் விட மாலிக்காபூர் மீண்டும் போர்தொடுத்து போரில் மூன்றாம் சிம்ஹானாவை கொன்று தேவகிரியை கைப்பற்றினார்.
ஹரபலாதேவா (கி.பி.1313-1317) :
பின்னர் அலாவுதீன் கில்ஜி கி.பி.1317ல் தனது இராஜ்யத்துடன் இணைத்துக்கொண்டதுடன் யாதவர்களின் அரசு முடிந்து போனது.அப்போது முதல் கி.பி.1317 ல் தெளலாபாத் என்று பெயர் மாற்றம் பெற்று இன்றுவரை அதே பெயரில் உள்ளது.
உதவிய நூல்கள்:
மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா
எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
The Early History of Deccan - G.Yazdani
விக்கிபீடியா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள் & திருமுத்துகுமரன்



Comments
Post a Comment