47) கோஹில்கள் அரசு :

கோஹில்கள் (Gohils dynasty) அல்லது சவுராஷ்டிராவின் கோஹில்க்கள் :


இவர்கள் இன்றைய குஜராத் மாநிலத்திலுள்ள செளராஷ்டிரா பகுதியை முதலில் சிற்றரசாகவும் பின்னர் தனியரசாகவும் கி.பி.12ம் நூற்றாண்டு முதல் இந்தியா சுதந்திரம் வரை ஆண்டனர். இவர்களின் தோற்றம் எங்கிருந்து என்று பார்த்தால் கி.பி.12ம் நூற்றாண்டில் மேவாரின் குஹிலா அரசிலிருந்து வந்த கிளை வம்சத்தினர் என தெரிகிறது. இவர்களின் மங்ரோல் கல்வெட்டிலிருந்து இவர்கள் ஆரம்பத்தில் இவர்கள் சாளுக்கியர்களின் பேரரசில் தென்மேற்கு வளைகுடாவை ஆண்டனர் என தெரிகிறது. பின்னர் கிழக்கு கடற்கரைக்கு நகர்ந்து  தனிப்பகுதியை ஆளுகைக்கு கொண்டு வந்து அதற்கு கோஹில்வாத் என்ற பெயருடன் இந்திய சுதந்திரம் அடையும் வரை ஆண்டு வந்தனர். பாவ் நகர், பாலிடனா, லத்தா, வாலா மற்றும் ராஜ்பிப்லா பகுதிகளை ஆண்டவர்களும் கோஹிலாக்களின் பிரிவு அரசர்கள் தான். இவர்கள் சூர்யவம்சி பரம்பரையை சேர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் இன்றைய குஜராத் மாநிலத்திலுள்ள பாவ் நகர், பாலிடானா, வாலா மற்றும் லத்தா சமஸ்தானங்களை ஆண்டவர்கள்.

கோஹில்களின் வம்சாவழி:
மோஹதாஸா :

சாலிவாஹனா வழிவந்த இவர்கள் லூனி ஆற்றங்கரையில் (சாண்டில்யன் கூட தன் நாவலில் வர்ணித்திருப்பார் இந்த ஆற்றை. லாவணி அல்லது லூனி ஆறு என்பதை உப்பு நீர் ஆறு என்று வர்ணித்திருப்பார்) உள்ள கேராகத் என்ற இடத்தில் ஆண்டு வந்தனர். கேராவின் கடைசி இளவரசான மோஹதாஸாவை ரதோர்களின் அரசனான சியாஹி (கன்னோசியை ஆண்ட ஜெயச்சந்திராவின் பேரன்) கொன்றார்.

சேஜக்ஜி (கி.பி.1240-1290) :

மோஹதாஸாவின் மறைவுக்கு பின்னர் அவரது பேரனான சேஜக்ஜி இன்றைய செளராஷ்டிரா பகுதிகளுக்கு நகர்ந்து சென்று இன்றைய ஜூனாகத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த சுதாஸாமா வம்ச அரசர் மஹிபாலாவின் கீழ் சிற்றரசாக பணியில் அமர்ந்தார். இவருக்கு சாபூர் சுற்றியுள்ள 12 கிராமங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பை பெற்றனர். ஆனால் பார்டிக் கணக்கின் படி இவர் இன்னொரு சுதாஸாமா அரசரான காவத்தின் கீழ் பணியில் அமர்ந்தனர். இவரது மகளான வாலம்குன்வர்பாவை காவத்தின் மகனான கென்ஹாருக்கு திருமணம் செய்து கொடுத்தார். காவத் இவருக்கு சாஹ்பூர் சுற்றியுள்ள 12 கிராமங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பை பெற்றார். சேஜக்ஜியின் மகன்களான ஹாஜி மற்றும் ஸாரன்ஜி ஆகியோர் தங்களது தங்கையின் தயவில் மாண்ட்வி சோவ்ஸி மற்றும் அர்தில்லா சோவ்ஸி பகுதிகளை பெற்று அரசாண்டனர். பாலிடனா மற்றும் லத்தா (தெற்கு குஜராத் -இன்றைய ப்ரூச்சை தலைநகரமாக கொண்ட பகுதி) வை ஆண்ட அரசர்கள் இந்த இரு சகோதரர்களின் வழிவந்தவர்கள் தான். சேஜக்ஜி புது நகரத்தை நிர்மாணித்து அதற்கு சேஜக்பூர் என்று பெயரிட்டார். பக்கத்திலுள்ள கிராமங்களை வென்று தன்னுடன் இணைத்துக் கொண்டார். கெளரிசங்கர் ஓஸா என்ற வரலாற்று ஆய்வாளர் லூனி பகுதியிலிருந்து வந்த சஹாஜிகா மற்றும் அவரின் மகனான சேஜக்ஜி இருவரும் குஜராத் சாளுக்கியர்களான சோலங்கி அரசர் சித்தராஜ் ஜெயசிம்ஹாவின் கீழ் பணிபுரிந்தனர். அவரின் படைகளில் இருந்து செளராஷ்டிரா பகுதிகளை வென்ற பிறகு அப்பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டனர் என்று கூறுகிறார்.

ரணாஜி (அ) ரணோஜி (கி.பி.1290-1309) :


சேஜக்ஜிக்கு பின் வந்த இவர் ரான்பூர் நகரை நிர்மாணித்து தலைநகரை அதற்கு மாற்றினார். கோலி பழங்குடியினர் (தான்மீர்) உதவியால் வல்லபிபூர் (இன்றைய வாலா)வை கைப்பற்றினார். அகமதாபாத்தில் குஜராத் சுல்தான்களுக்கு எதிராக நடந்த போரில் இவர் இறந்து போனார். சிலர் இவரை சேஜக்ஜியின் பேரன் என்றும் சிலர் மகன் என்றும் கூறுகிறார்கள்.

சேஜக்ஜகயின் 5வது சகோதரரான விஸோஜி தாண்டூகாவை ஆண்ட கோலி பழங்குடியினரின் அரசனின் மகளை மணந்தார். இவர்களின் வழிவந்தவர்கள் காஸியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆய்வாளர் வாட்சன் என்பவர் விஸோஜி ரணோஜியின் மகன் என்றும் இவர்களின் வழிவந்தவர்கள் 15 தலைமுறையாக காஸ் என்ற இடத்திலையே இருந்ததால் காஸியர்கள் என்றும் பின்னர் இரண்டாம் அஹேரன்ஜியின் காலத்தில் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மட்டியாலாவுக்கு இடம் மாறினர் என்றும் கூறுகின்றார்.

மோஹதாஜி (கி.பி‌.1309-1347) :

ரணாஜியின் மகனான இவர் வாலா ராஜபுத்ரர்களிடமிருந்து பீம்தாத்யும் கோலிகளிடமிருந்து உம்ராலாவையும் கைப்பற்றினார். பிறகு இவர் கோக்ராவையும் பின்னர் கோஹாவின் முஸ்லீம் ஆட்சியாளரையும் விரட்டியடித்தார். பின்னர் இவர் காம்பே வளைகுடாவிலுள்ள பிரம் தீவை கைப்ற்றிக்கொண்டார். இதனால் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக் உடன் நடந்த போரில் இறந்து போனார். அதனால் பிரம் தீவு மற்றும் கோஹா திரும்பவும் கி.பி.1347ல் டெல்லி சுல்தான் கைகளுக்கு போயிற்று. மோஹதாஜிக்கு 50 வயது வரை குழந்தை இல்லாததால் பலன்ஷா என்ற காரகாடியை சேர்ந்த முஸ்லீம் துறவியின் அருளால் குழந்தைகள் பிறந்ததால் இவர் அங்கே மசூதியை கட்டிக் கொடுத்தார்.

துங்கர்ஜி (கி.பி.1347-1370) :

மோஹதாஜியின் மூத்த மகனான இவர் டெல்லி சுல்தானின் படையெடுப்பினால் கோஹா பகுதியிலிருந்து வெளியேறி பின்னர் கோஹாவை திரும்ப மீட்டு தனது தந்தையின் இடமான உம்ராலாவையும் மீட்டார்.

விஸோஜி (கி.பி.1370-1395) :

இவர் ஜானி மற்றும் ரானா பிரிவுகளான சிஹோரை சேர்ந்த ஆதிச்சய பிராமணன் நிலச்சுவன்தார்களுடையான பிரச்சினையில் ஜானி கிளையை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக ரானா கிளைக்கு ஆதரவாக இருந்த காரியதாரை சேர்ந்த கந்தோஜி கோஹில்லை வென்று சிஹோரை கைப்பற்றி தனது தலைநகராக ஆக்கிக் கொண்டார்.

கணோஜி (கி.பி.1395-1420) :
சாரங்ஜி (கி.பி.1420-1445) :
சிவ்தாஸ்ஜி (கி.பி.1445-1470) :
ஜெதிஜி (கி.பி.1470-1500) :
ராம்தாஸ்ஜி (கி.பி.1500-1535) :
சர்தான்ஜி (கி.பி.1535-1570) :
விஸோஜி (கி.பி.1570-1600) :
துனாஜி (கி.பி.1600-1619) :
ரதன்ஜி (கி.பி.1619-1620) :
ஹர்பாம்ஜி (கி.பி.1620-1622) :
கோவிந்த்ஜி (கி.பி.1622-1636) :
சத்ராஸல்ஜி (கி.பி.1636) :
அஹேரஜ்ஜி (கி.பி.1636-1660) :
இரண்டாம் ரதன்ஜி (கி.பி.1660-1703) :


பாவ்சிங்ஜி (கி.பி.1703-1764) :

இரண்டாம் ரதன்ஜியின் மகனான இவர் கி.பி.1722-23 வருடத்தில் பாவ் நகரை நிர்மாணித்து தலைநகரை சிஹோரிலிருந்து பாவ் நகருக்கு மாற்றினார்.

இரண்டாம் அஹேரஜ்ஜி (கி.பி.1764-1772):

இவர் வாலா மாவட்டத்தை தந்தையின் ஆட்சிகாலத்திலையே தனது இரட்டை சகோதரரான விஸாஜிக்காக உருவாக்கினார்.

கி.பி.14 ம நூற்றாண்டின் நடுவில் மோஹதாஜியின் இளைய மகனான சமர்சிங்ஜி ஜீனாராஜ்ன (இன்றைய ராஜ்பிப்லா - உலகின் உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு போகும் வழியில் 30 கி.மீ முன்னதாக உள்ளது- இந்த அரசு உஜ்ஜையினியின் பார்மர் அரசுடன் இணைந்தது) இளவரசனான சோக்ரானா என்பவரின் மகளை மணந்தார். மேலும் சோக்ரானாவுக்கு ஆண்வாரிசு இல்லாததால் அவருக்கு பின்பு சமர்சிங்ஜி அர்ஜீன்சிங்ஜி என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டார். இவரின் வழி வந்தவர்களே பின்னர் இந்தியா சுதந்திரம் அடையும்வரை ராஜ் பிப்லா பகுதிகளை ஆண்டனர். மேலும் செளராஷ்டிரா பகுதியிலுள்ள சிறு சிறு அரசுகளும் இவர்களின் வழி வந்தவர்களே. பின்னர் பிரிட்டிஷ் அரசின் கீழ் ஆட்சி புரிந்தும் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் தங்களது அரசுகளை சுதந்திர இந்தியாவுடன் இணைந்தனர்.

உதவிய நூல்கள்:

விக்கிபீடியா தகவல்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு