48) வகேலா அரசு
வகேலா வம்சம் (கி.பி.1244-1304) :
சரித்திரத்தில் பேரரசாக குறைந்த ஆண்டுகள் ஆண்ட வம்சமாக இருந்தாலும் இவர்கள் முதலில் குஜராத் சாளுக்கியர்களான சோலாங்கி வம்சத்தின் கீழ் சிற்றரசாக ஆண்டனர். அவர்களின் வீழ்ச்சிக்கு பின் இவர்கள் தனியரசாக ஆண்டதும் கி.பி.1304ல் டெல்லியை ஆண்ட அலாவூதின் கில்ஜியினால் தோற்கடிக்கப்பட்டு அரசை இழந்தனர். அகமதாபாத்தில் கட்டப்பட்ட அடலேவ் உறைகிணறு கட்டிடக்கலையின் சிறப்பு.
இவர்களது ஆட்சியில் அபு மலையில் தில்வாரா கோயில் கட்டப்பட்டது. கிர்னார் மலையில் பல சமண கோயில்கள் கட்டப்பட்டன.
அர்னோராஜா:
இவர் தவாலா என்பவருக்கும் சோலங்கி மன்னர் குமாரபாலாவின் மருத்துவச்சிக்கும் பிறந்த மகன். செளராஷ்டிராவில் குமாரபாலாவிற்கு எதிரான மக்கள் புரட்சியை அடக்கிய குழுவில் இவரும் இருந்தார். இதனால் குமாரபாலா இவருக்கு பீமப்பள்ளி கிராமத்தை சாசஸனமாக கொடுத்தார். குமாரபாலாவிற்கு பின் வந்த அவரின் மகன் இரண்டாம் பீம தேவனுககு எதிராக பிற ஆளுநர்கள் புரட்சிக்கொடி பிடித்த சமயத்தில் இவர் பீம தேவனுக்கு உதவியாக இருந்து மேடப்பட்டா மற்றும் சந்திராவதி ஆளுநர்களை அடக்கினார்.
லவனபிரசாதா:
இவர் அர்னோராஜாவுக்கும் சாலக்கனதேவிக்கும் பிறந்த மகன். இவர் பிறந்த நேரத்தில் அர்னோராஜா குமாரபாலாவின் அரசவையில் இருந்தார். குழந்தை பிறந்த செய்தி அறிந்த குமாரபாலா அர்னோராஜாவின் மகனுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு என்று அறிவித்தார். இரண்டாம் பீம தேவனின் காலத்தில் இவருக்கு மஹா மண்டலேஷவரா மற்றும் ரானாகா என்று மேலும் பதவியின் தரம் உயர்த்தப்பட்டார். இவரின் அரசாட்சி பகுதியாக தாவாலகாக்கா (இன்றைய தோல்கா) இருந்தது. இவர் பரமர ஆட்சியாளரை விரட்டியடித்தார். போரில் இறந்து போன இவருக்கு பின்னர் இவரது மகன் விரதவாலா ஆட்சி பொறுப்பேற்றார்.
விரதவாலா :
இவர் லவனபிரசாதா மற்றும் மதனரஜ்னியின் மகனாக பிறந்தவர். மதனரஜ்னி விரதவாலாவை விட்டு பிரிந்து தேவராஜாவுடன் வாழ்க்கை நடத்தினார். தேவராஜா இறந்த போன மதனரஜ்னியின் அக்கா கணவர். குழந்தை பருவத்தில் விரதவாலா தாயுடன் வளர்ந்து பின்னர் விவரம் தெரிந்த நிலையில் தந்தை லவனபிரசாதாவிடம் வந்து சேர்ந்தார். இரண்டாம் பீம தேவன் ஆட்சியில் இவர்கள் சாளுக்கிய சோலங்கி வம்சத்தின் எதிரிகளின் படையெடுப்புகளை தடுத்து நிறுத்தினார்கள். விரதபாலா இரண்டாம் பீம தேவனின் ஆட்சியில் மரணமடைந்த பின் அவரது மகனான விரமா மஹாமண்டலேஷ்வர ரணகா பட்டத்தை கி.பி.1239ல் பெற்றார்.
விரமா:
கி.பி.1239ல் பட்டம் பெற்ற விரமா இரண்டாம் பீமதேவனின் கீழ் பணியாற்றினார். இவரது அரசாக வித்யூதபுரா இருந்தது.
வகேலா வம்ச அரசர்கள்:
விசால தேவா (கி.பி.1244-1262) :
விரமாவின் சகோதரரான இவர் அவரின் மரணத்திற்கு பின் ஆட்சிக்கு வந்தார். அந்த நேரத்தில் சாளுக்கிய சோலங்கி வம்சத்தின் கடைசி அரசன் திரிபுவனபாலா வாரிசின்றி இறந்ததால் இவர் தனியாட்சியாக அறிவித்து வகேலா வம்ச ஆட்சியை தொடங்கி வைத்தார். இவர் மாளவத்தின் மீது படையெடுத்து பரமரா அரசர் ஜெய்துகி தேவாவை தோற்கடித்தார். மேலும் இவர் மேவாரின் குஹிலா அரசரை (தேஜசிம்ஹாவாக இருக்கலாம்) தோற்கடித்தார். யாதவ மன்னர்களுடான போரில் தோற்று போனாலும் அரசை காப்பாற்றி கொண்டார். இவர் ஹொய்சாலா வம்சத்து அரசர்களுடன் மணவினை தொடர்புகளை ஏற்படுத்தினார். இவர் இன்றைய வதேதரா (பழைய பெயர் பரோடா) மாவட்டத்தில் தபோய் கோட்டையை கட்டினார். இவரது அவையில் அமைச்சராக இருந்த தேஜபாலா என்பவர் வந்திலி மற்றும் ஜூனாகட் இடையில் ரா கெங்கர் உறைகிணறை வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொடுத்தார். தேஜ பாலா எண்ணற்ற கோயில்களை கட்டினார். அபு மலையில் உள்ள நேமிநாதர் ஆலயம் இவரால் கட்டப்பட்டது தான்.
அர்ஜீன தேவா (கி.பி.1262-1275) :
முந்தைய ஆட்சியாளரான விசால தேவாவின் சகோதரர் பிரதாபமல்லாவின் மகன். சித்தப்பாவிற்கு பின்பு ஆட்சிக்கு வந்தார். இவரை பற்றிய விவரங்கள் தெரியாவிட்டாலும் இவர் யாதவர்களுடன் தோற்றது மட்டுமே தெரிகிறது.
ராமா (கி.பி.1275) :
அர்ஜீன தேவாவின் மூத்த மகன். இவர் சில மாதங்களே ஆண்டார்.
சாரங்க தேவா (கி.பி.1275-1296) :
அர்ஜீன தேவாவின் இன்னொரு மகன். இவர் பரமரர்களையும் யாதவர்களையும் தோற்கடித்தார். வகேலா குறிப்புகளின் படி கி.பி.1285ல் துருக்கிய படையெடுப்பை விரட்டியடித்தார் என்று கூறுகிறது. தற்போதைய ஆய்வாளர்கள் இவர் விரட்டியடித்தது மங்கோலிய ஆட்சியாளர்கள் அல்லது பால்பனின் படைகளாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
கர்ண தேவா (கி.பி.1296-1304) :
சாரங்க தேவாவின் அண்ணனான ராமாவின் மகன். இவர் வேறு சாளுக்கியர்களின் கர்ணா வேறு. இரண்டாம் கர்ண தேவா தனது அமைச்சரான மாதவா என்பவரை வேறு வேலைக்காக அபு மலைக்கு அனுப்பிவிட்டு அவரின் மனைவியான ரூப்மதியை அபகரிக்க முயற்சி செய்யும்போது தடுத்த மாதவாவின் தம்பியை கொலை செய்தார். இதனால் அமைச்சரின் சகோதரன் மனைவி இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறி உயிர் துறக்கிறாள். அமைச்சர் மாதாவாவின் மனைவியான ரூப் சுந்தரி அரண்மனைக்கு வந்தவுடன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து உயிர் துறக்கிறார். இதனால் தன் குடும்பத்தை இழந்த மாதவா அபு மலை வழியாக டெல்லி சென்று அலாவூதின் கில்ஜியிடம் முறையிட்டார். கில்ஜியிடம் தனது அவமானத்திற்கு பழி தீர்க்குமாறும் அதற்கு பதிலாக வகேலா அரசின் கஜானா வருமானத்தை எங்கு வைத்திருக்கிறார்கள் என்ற விவரத்தை கூறுவதாகவும் கூறவே கி.பி.1296ல் அலாவூதின் கில்ஜி குஜராத் மீது படையெடுத்து வந்து வளமான பகுதிகளான பதான், கம்பத், சூரத் மற்றும் சோம்நாத் பகுதிகள் சுரண்டிக்கொண்டார் . கர்ண தேவன் யாதவர்களின் அரசான தேவகிரியை நோக்கி ஓட்டம் பிடித்தார். அலாவூதின் கில்ஜி கர்ணதேவனின் மனைவியான கமலா தேவியையும் சிறைபிடித்து சென்றார். கர்ண தேவனால் திரும்ப சில பகுதிகளை மட்டுமே மீட்க முடிந்தது. ஆனால் எப்போது மீட்டார் என்ற விவரம் தெரியவில்லை. பின்னர் அலாவூதின் கில்ஜியினால் தூக்கி செல்லப்பட்ட இவரின் மனைவியான கமலா தேவி தன் மகளான தேவலா தேவியை தன்னிடம் ஒப்படைக்க கேட்க இவரும் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டாலும் இவர் தன் மகளை வேறு ஒருவருக்கு கோட்டை வாசலில் கில்ஜி படைகள் முற்றுகையிட்டு கொண்டிருக்கும் போது திருமணம் செய்து கொடுத்தார் என்று கூறினாலும் அது உண்மையில்லை. திருமணம் முடிப்பதற்காக மகளை தேவகிரி கோட்டைக்கு அனுப்பிய வழியில் அலாவூதின் கில்ஜியின் படைகளால் பிடிக்கப்பட்டார். அலாவூதின் கில்ஜியின் மகனான கிஸிர் கானை தாயின் உத்தரவினால் இவர் கி.பி.1308ல் திருமணம் செய்து கொண்டார். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கி.பி.1316ல் அலாவூதினுக்கு பின் ஆட்சியேறிய இன்னொரு மகனான குப்த்யூதின் முபாரக் ஷா தனது சகோதரனான கிஸிர் கானை கொன்று இவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் கி.பி.1320ல் முபாரக் ஷா அவரது அவரது தகாத உறவு தோழனான குஸ்ரூ கானால் கொலை செய்யப்பட்டவுடன் மீண்டும் ஒருமுறை அவரால் மூன்றாவது முறை திருமணம் செய்யப்பட்டார். பின்னர் குஸ்ரூ கான் கொல்லப்பட்ட சமயத்தில் இவரும் தற்கொலை செய்து மடிந்தார். இந்த விவரங்கள் நந்தகுமார் மேத்தாவின் குஜராத்தி வரலாற்று நாவலான "கரண் கெலோ"வில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. கி.பி.1304 ல் இரண்டாவது முறையாக அலாவூதின் கில்ஜி படையெடுப்பில் கர்ணதேவன் போரில் தோற்று இறந்து போனார். போரின் முடிவில் அவரது மகளும் மறைந்து போனதாக கூறப்படுகிறது. கர்ண தேவனின் மறைவுடன் வகேலா வம்ச ஆட்சி முடிந்தது.
ஆனால் கர்ண தேவனுக்கு பின் வந்த அரசர்கள் பற்றிய விவரமில்லை. ஆனாலும் கி.பி.1498ல் குறிப்பேட்டின் படி வகேலாவின் கிளைவம்சம் தான்தாஹி என்ற இடத்தை குறுநில அரசராக முஸ்லீம் அரசர் மெஹ்மூத் பெகாடாவின் கீழ் ஆட்சி செய்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் ரேவா பகுதியை ஆண்ட அரசர்கள் முதலாம் பீம தேவனின் கிளையில் வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
உதவிய நூல்கள்:
மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா
விக்கிபீடியா தகவல்கள்
படங்கள் :
திருமுத்துகுமரன்


Comments
Post a Comment