49) டெல்லி சுல்தான்கள் - மாமுல்க் (அடிமை ) வம்சம்

டெல்லி சுல்தான்கள் - மாமுல்க் வம்சம் (அடிமை வம்சம்) (கி.பி.1206-1290)


இந்தியாவை ஆண்ட கோரி முகமது கி.பி. 1206ல் தனது முன்னாள் அடிமையான தளபதி குத்புதீன் ஐ-பெக்கிடம் தனது அரசை கொடுத்துவிட்டு தனது சொந்த இராஜ்யமான கோர் பிரதேசத்துக்கு செல்லும் வழியிலையே இன்றைய பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகிலுள்ள தாமியாக் என்னும் கிராமத்தில் கொல்லப்பட்டார். அவர் டெல்லியை தனக்கு பின் ஆள கொடுத்த வம்சமான மாமுல்க் வம்சம் அதாவது பாரசீக மொழியில் அடிமை வம்சம் என்று அழைக்கப்படுகிறது. கோரி முகமதுக்கு குழந்தைகள் இல்லாததால் அவர் கொல்லப்பட்ட பிறகு அவரின் அடிமை தளபதிகள் தங்களது இராஜ்யங்களை பிரித்துக்கொண்டு குட்டி சுல்தான்களாக உருவாயினர். அப்படி தான் கஜினிக்கு தாஜீயூதின் யெல்டோஸ்ம் வங்காளத்திற்கு முகமது பின் பக்தியார் கில்ஜியும் முல்தானுக்கு நஸ்ரூத்தின் குபாச்சோவும் மற்றும் டெல்லிக்கு குத்புதின் ஐ-பெக்கும் சுல்தான்களாக ஆயினர். அப்படி தான் டெல்லியின் அடிமை வம்ச சுல்தான்களின் ஆட்சி தொடங்கியது.

குத்புதின் ஐ-பெக் (கி.பி.1206-1210)

கி.பி.1150ல் துருக்கியின் அய்பெக் பழங்குடியின மரபில் பிறந்தவர். குழந்தை பருவத்திலையே வடகிழக்கு ஈரானிலுள்ள நிஸாப்பூர் பிரதம தளபதியிடம் அடிமையாக விற்கப்பட்டார். அந்த தளபதி இவரை தன் மகனை போல வளர்த்தார். இவருக்கு கல்வி கற்பித்தும் குதிரையேற்றம் மற்றும் அம்பெறியவும் கற்றுக்கொடுத்தார். தளபதி இறந்தவுடன் அவரது மகன்கள் இவரை ஒரு ஆசிரியரிடம் அடிமையாக விற்றுவிட்டனர். அதன்பிறகு மத்திய ஆப்கானிஸ்தானின் முகமது கோரி அடிமையாக வாங்கினார். அவரிடம் விசுவாசமாக இருந்து மெல்ல மெல்ல அவரது அடிமை தளபதிகளுள் ஒருவராக அவரது நம்பிக்கைக்கு உரியவராக ஆனார். இவரது வட இந்திய படையெடுப்புகளே முகமது கோரியின் இடத்தை அவரது ராஜ்யத்தில் தக்கவைக்க காரணமாயிற்று. இவர் முகமது கோரியுடன் சேர்ந்து கி.பி.1176ல் குஜராத்தின் நைய்கி தேவியுடனான போரில் தோற்றுப் போனார். பின்னர் கி.பி.1192ல் இரண்டாம் தரெய்ன் போரில் மூன்றாம் பிரித்விராஜ்ஜை வென்ற போரில் இவரே தளபதியாக இருந்தார். பின்னர் கி.பி.1196-97ல் முன்பு தன்னை தோற்கடித்த சோலங்கி வம்சத்தினரின் பதான் நகரை வென்று சூறையாடினார். அதனை ஆட்சி செய்ய ஒரு கவர்னரை நியமித்து விட்டு அஜ்மீர் செல்ல திரும்பவும் சோலங்கி வம்சத்தினர் பதானை கைப்பற்றி கொண்டனர். முகமது கோரி தன்னை வட இந்தியா பாகிஸ்தான், இன்றைய பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் தன்னை வலுவான அரசராக நிலைநிறுத்திக்கொண்ட சமயத்தில் கி.பி.1206ல் கொல்லபப்ட்டார். அதன் பின்னர் குத்புதின் ஐ-பெக் தன்னை டெல்லி சுல்தானாக அறிவித்துக் கொண்டார்.  இவர் டெல்லியை வென்ற பிறகு முஸ்லீம்கள் வழிபாடு நடத்த மசூதி இல்லை என்று இன்றைய குதுப்மினார் வளாகத்தில் மசூதியை கட்டி வழிபாடு செய்தார். இன்றைய குதுப்மினார் வளாகத்தில் பழைய கோயில்களை இடித்து கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்தார்.


கி.பி.1192 ல் கோரியில் கட்டளைப்படி ஆஜ்மீரில் கட்ட ஆரம்பித்த மசூதி கி.பி.1199ல் இவரால் கட்டி முடிக்கப்பட்டது. இப்படி அடிமையாக வாழ்வை ஆரம்பித்து சுல்தானாக உயர்ந்த இவரின் வாழ்வு கி.பி.1210ல் குதிரையிலிருந்து விளையாடும் ஹாக்கி விளையாட்டான போலா விளையாட்டின் போது குதிரையிலிருந்து கீழே விழுந்து அடிபட்டு இறந்து போனார். இன்றைய புகழ்பெற்ற குதுப்மினார் கட்டிடம் இவரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.  ஆனால் கட்டி முடிப்பதற்குள் இவர் இறந்து போனார்.

ஆராம் ஷா (கி.பி.1210-1211) :

குத்புதீன் ஐ-பெக் மறைவிற்கு பின் அவரது மகனான ஆராம் ஷா பதவிக்கு வந்தார். வந்த சில மாதங்களிலையே இவரை குத்புதின் ஐ-பெக்கின் மகளை மணந்த இல்ட்டுமிஷ் வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினார்.

சம்சுத்தீன் இல்ட்டுமிஷ் (கி.பி.1211-1236) :

இவர் குத்புதின் ஐ-பெக்கின் மகளை மணந்தவர். இவரும் அடிமையாக தான் தன் வாழ்க்கையை தொடங்கினார். அடிமை வம்சத்தின் மூன்றாவது அரசரான இவரே இந்த வம்சத்தில் சிறந்த அரசராக கருதப்படுகிறார். குத்புதின் ஐ-பெக் மகனான ஆராம் ஷாவை வீழ்த்திவிட்டு அரசை கைப்பற்றிய இவர் தலைநகரை லாகூரிலிருந்து டெல்லிக்கு மாற்றினார். இவரது ஆட்சியில் தான் மங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார். அந்த நேரத்தில் அனைத்து இராஜபுத்திரர்களும் அவரை எதிர்க்க தயாராக இருந்தனர். ஆனால் இல்ட்டுமிஷ் அவர்களுடன் சேராமல் எதற்கு தேவையற்ற வம்பு என்று ஒதுங்கி கொண்டார். சிந்து வரை வந்த செங்கிஸ்கான் தன் பார்வையை பாரசீகம் நோக்கி திருப்பி சென்றதால் இந்தியா செங்கிஸ்கானின் படையெடுப்பிலிருந்து தப்பியது என்றே சொல்லலாம்.  குத்புதின் ஐ-பெக் கட்ட ஆரம்பித்து பாதியிலையே நின்ற குதுப்மினாரை முழுவதுமாக இவரே கட்டி முடித்தார்.


டெல்லியிலுள்ள குவாத்-உல்-இஸ்ஸாம் என்ற மசூதியை இவர் கட்டினார். இவரது காலத்தில் வங்காளம், பீஹார், முல்டான் மற்றும் பஞ்சாப் வரை பரவியிருந்தது.இவரது மூத்த மகனான நஸ்ரூத்தின் முகமது கி.பி.1229ல் திடிரென இறந்ததாலும் இவரது மற்ற மகன்கள் மது மாது மற்றும் நிர்வாக திறமையற்றவர்களாக இருந்ததால் தனது மரண படுக்கையின் போது தனது மகளான ரஸியா பேகத்திற்கு ஆட்சியை கொடுக்க அமைச்சர்களிடம் கூறினார். ஆனால் பெண் அதுவும் கட்டுப்பாடான முஸ்லீம் பெண்ணிடம் ஆட்சியை கொடுப்பதா? என்று அமைச்சர்கள் அவரை சமாதானப்படுத்தி அந்த நேரத்தில் லாகூரின் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்த அவரது மகனான ருக்கினுத்தீன் பெஃரூஸ்ஸை வரவழைத்து அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். இப்படிக்கு கி.பி.1233ல் தான் லாகூரின் நிர்வாகத்தை கவனிக்க இவர் அனுப்பப்பட்டார்.

ருக்கினுத்தீன் பெஃரூஸ் (கி.பி.1236) :

இவர் இல்ட்டுமிஷ்க்கும் துருக்கியை சேர்ந்த வேலைக்கார பெண்ணாக இருந்து அவரை மணந்த ஷா துர்கானுக்கும் பிறந்த மகன்.  இல்ட்டுமிஷின் ஆட்சியில் இவர் பாதூன் மற்றும் லாகூர் பகுதிகளை நிர்வகித்த இளவரசாக இருந்தார்.இவரது அம்மாவான ஷா துர்கான் என்ற பெண்மணி இவரது ஆட்சியில் தன்னை எதிர்த்த அமைச்சர்கள் அனைவரையும் தீர்த்துகட்டினார். அரண்மனையிலுள்ள மற்ற ராணிகளின் அதிகாரத்தையும் அடக்கி தனது கீழ் அனைவரையும் வைத்திருந்தார். இல்ட்டுமிஷின் கடைசி காலத்தில் அவருக்கு பிறந்த குழந்தையை பின்னால் வாரிசு பிரச்சினை வரக்கூடாது என்று மற்ற ராணிக்களின் முன்னால் குழந்தையின் கண்களை தோண்டியெடுக்க உத்தரவிட்டு நிறைவேற்றினார். மகன் எப்போதுமே மதுவும் மாதுவுமாக இருக்க இவரே நிர்வாகத்தை தனது பிடியில் வைத்திருந்தார். வெறும் 7 மாதங்களே ஆட்சியில் இருந்த இவரது ஆட்சியை எதிர்த்த புரட்சி படையை எதிர்க்க முடியாமல் கோட்டையின் நிலவறையில் போய் ஒளிந்து கொண்டிருந்த இவரையும் இவரது அம்மாவையும் புரட்சி படை கொன்று இல்ட்டுமிஷின் மகளான ரஸியா பேகத்தை டெல்லியின் சுல்தானாக முடிசூட்டியது.

ரசியா பேகம் (கி.பி.1236-1240) :

இல்ட்டுமிஷின் மகள். டெல்லியை ஆண்ட முதல் பெண் சுல்தான். ஆட்சி புரிந்தது 3 1/2 ஆண்டுகளே ஆனாலும் தனது ஆட்சியை காப்பாற்ற சகோதரர்களின் சூழ்ச்சியையும் மற்றும் துருக்கிய பிரபுகளுக்கும் இடையே போராட வேண்டியிருந்தது.  இல்ட்டுமிஷ்ஷின் ஆட்சியில் செல்வாக்கு பெற்றிருந்த "நாற்பதின்மர் (சாகல்கனி)" என்ற கூறப்பட்ட துருக்கிய பிரபுகள் தங்களது மேலாண்மையை ரஸியாவிடமும் ஏற்படுத்தினார்கள். ஆனால் ரஸியா பேகம் அவர்களுக்கு கட்டுப்பட்டு பொம்மை ஆட்சியாக நடத்த இஷ்டப்படவில்லை. ரஸியா பெண்ணுக்குரிய ஆபரணங்களை துறந்து முகத்து முக்காட்டை நீக்கி அரசு புரிய தொடங்கினார். வேட்டையாடவும் போர்களில் படை நடத்தவும் செய்தார். தன்னை எதிர்த்த நிஜாம்-உல்-ஜீனாய்தியை தோற்கடித்து விரட்டியடித்தார். ரன்தம்பூரில் இராஜபுத்திரர்களை அடக்குவதற்கு படைகளை அனுப்பினார். தனக்கு விசுவாசமானவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினார். துருக்கிய பிரபுக்கள் ரஸியா பேகத்திற்கும் அவரது உதவியாளர் என்று சிலரும் அபிசீனியப் பிரபு என்று சிலராலும் சொல்லப்பட்ட யாகூத்கானிடம் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டினார். குதிரைமிலிருந்து யாகூத்கான் ரஸியா இறங்குவதற்கு உதவினார் என்பதே குற்றச்சாட்டு. ஆனால் பொதுவிடங்களில் ரஸியா குதிரை சவாரி செய்வதில்லை. யானை மீது ஏறியே சவாரி செய்வது தான் வழக்கம் என்று இக்குற்றச்சாட்டு அபத்தமானது என்று சமகால வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவரின் ஆட்சிக்கு எதிராக லாகூரிலும் சிர்கண்ட்டிலும் புரட்சி வெடித்தது. அதை இவர் படையெடுத்து சென்று முறியடித்தார். திரும்பும் வழியில் யாகூத்கான் கலகக்காரர்களால் கொல்லப்பட ரஸியா பேகம் "தாபர்ஹிண்டா"வில் சிறை வைக்கப்பட்டார். இவரை சிறை வைத்த "அல்டூனியா" என்பவர் இவரின் காதற் சிறையில் விழுந்து இவரை மணம்புரிந்து கொண்டார். பின்னர் தம்பதிகள் இருவரும் டெல்லியை கைப்பற்ற விரைந்தனர். இந்த போரில் இருவரும் வீரத்துடன் போர் புரிந்தாலும் தோற்கடிக்கப்பட்டனர். தப்பித்து சென்ற போது ரஸியா பேகம் குண்டர்களால் காட்டினில் படுகொலை செய்யப்பட்டார்.

முஸ்ரூத்தின் பக்ராம் (கி.பி.1240-1242)  :

இல்ட்டுமிஷின் மகன். ரஸியா பேகத்திற்கு பின் ஆட்சிக்கு வந்த அவரின் சகோதரன் இவர். துருக்கிய பிரபுக்கள் குழுவை இவரும் பகைத்துக் கொண்டார். அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட முஸ்லீம் மகான் ஒருவரை தூக்கிலிட்டார். இந்த நேரத்தில் மங்கோலியப்படை லாகூரை சூறையாடியது. மற்றொருபுறம் பீஹார்,வங்காளம், சிந்து மற்றும் முல்தான் பிரதேசங்கள் மெல்ல டெல்லியின் பிடியிலிருந்து கழன்று கொண்டன. பிரபுக்களின் படை இந்த சுல்தானின் மாளிகையை சுற்றி வளைத்து சுல்தானை வெட்டி கொன்றனர்.

அலாவூதின் மசூத் (கி.பி.1242-1246) :

ரூக்னுத்தீனின் மகன். இல்ட்டுமிஷின் பேரன். பஹ்ராம்முக்கு பின் வந்த இவரும் ஒரு மனிதன் எவ்வளவு தான் கேளிக்கையில் இன்பத்தை அனுபவிக்கமுடியுமோ அவ்வளவையும் அனுபவித்தார். அரச நிர்வாகத்தை பொருட்படுத்தவேயில்லை. பொறுத்து பார்த்த துருக்கிய பிரபுக்கள் குழு இவரை பாதாள சிறையில் வைத்து பூட்டினார்கள். அத்தோடு இந்த சுல்தானின் கதை பாதாள சிறையிலையே முடிந்தது.

நஸ்ரூதீன் மஹ்மூத் (கி.பி.1246-1266)‌ :

இல்ட்டுமிஷின் இளைய மகனான இவர் பட்டத்திற்கு வந்து 20 ஆண்டுகள் ஆண்டார். இவரது ஆட்சியில் தான் கியாஸ்தீன் பால்பன் முதலமைச்சராக பணியாற்றினார். ஆட்சி அதிகாரம் எல்லாமே பால்பனின் கையில் தான் இருந்தது. பெயரளவுக்கு சுல்தானாக இருந்த இவர் கி.பி.1266ல் இறந்தவுடன் பால்பன் ஆட்சியை கைப்பற்றினார். மற்ற சுல்தான்களை போல அல்லாமல் எளிமையாக வாழ்ந்த சுல்தான் இவர். வாழ்நாள் முழுவதையுமே புனித குர்-ஆன்னை அழகாக எழுதி அதனை விற்று தன் உணவு போன்ற தேவைகளுக்கு செலவிட்டார். எந்தவொரு பெண்ணையும் பாராமல் ஓரே மனைவியுடன் வாழ்ந்த ஏகபத்தினி விரதர் இவர். மனைவியின் சமையலையே உண்ணுபவர். சமையலறையில் கை சுட்டுக்கொண்ட போது வேலையாளை வைக்கலாமா என்று மனைவி கேட்டதற்கு அந்த ஆடம்பரமெல்லாம் எதற்கு என்று இவரிடம் இருந்து பதில் வந்தது. இந்த மன்னருக்கு குழந்தைபேறு இல்லாததால் நஸ்ரூதின் பால்பனையே தன் வாரிசாக நியமித்தார். டெல்லி அரியணையில் முன்னர் அமர்ந்த புலிக்குட்டியான ரஸியாவின் தம்பியான இவர் ஒரு குணத்தில் மான்குட்டியாய் 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து மறைந்தார்.

கியாஸ்தீன் பால்பன் (கி.பி.1266-1286) :

பழைய அடிமை. இல்ட்டுமிஷின் மகளை மணந்தவர். முந்தைய சுல்தானான நஸ்ரூத்தின் மஹ்மூத்தின் முதலமைச்சராக இருந்தவர். நஸ்ரூத்தின் அமைச்சரவையில் இவருக்கு எதிர்ப்புகள் நிறைய இருந்தது. இதனால் இவர் 1 1/2 வருடங்கள் பதவியிலிருந்து ஒதுங்கியிருந்து தன்னை எதிர்த்தவர்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு மீண்டும் அதுவரை பதவியிலிருந்த இந்திய முஸ்லீம் அமைச்சரை விலக்கிவிட்டு முதலமைச்சராக தொடர்ந்தார். பால்பனின் செல்வாக்கை மீறி இளம் சுல்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. சுல்தானின் மறைவுக்கு கூட பால்பன் அவருக்கு விஷம் கொடுத்தது தான் காரணம் என்று கூட சொல்லுவார்கள். சுல்தானின் மறைவுக்கு பின் ஆட்சியை கைப்பற்றிய இவர் ஆட்சியில் துருக்கியர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. துருக்கியர்களே மேன்மை வாய்ந்தவர்கள் இந்தியர்கள் இழிந்தவர்கள் என்ற எண்ணத்துடனே ஆட்சியை நடத்தினார். இந்துஸ்தானத்தின் கிளி என்றழைக்கப்பட்ட பாரசீக கவிஞர் "அமீர் குஸ்ரூ" இவரால் ஆதரிக்கப் பட்டவர். 

இவரின் ஆட்சியில் வழிப்பறி கொள்ளைகளே நடக்காத அளவுக்கு திறமையான ஆட்சி நடந்தது. திறமையான ஒற்றர் படையை வைத்திருந்து ஆட்சிக்கு எதிரான பிரபுக்களையும் கிளர்ச்சியில் ஈடுபட்ட இராஜபுத்ரர்களையும் பிடித்து கழுவேற்றி கொன்றார். தவறு செய்தவர்களின் தோலை உரித்துக்கொன்றார். சட்டத்தின் முன் எல்லோரும் சமம். இதை புரிந்துகொண்டால் போதும் என்பதை அடிக்கடி சொல்லுவாராம். இளம் வயதில் மதுப்பழக்கம் இருந்த பால்பன் அரியணையில் அமர்ந்த பிறகு அதை தொடக்கூட இல்லை. கலைஞர்கள், படித்தவர்கள், அறிஞர்களை மிக மதிப்புடன் நடத்தினார். த்வைதம் என்னும் தத்துவத்தை தந்த மகான் மத்வாச்சாரியார் டெல்லிக்கு வந்தபோது அவரை வரவேற்று உபசரித்து மரியாதை செய்தவர் பால்பன். வங்காளத்தின் கவர்னராக துஹ்ரில்கான் தன்னை சுதந்திர அரசனாக அறிவித்து கொண்டவுடன் தனது இளைய மகனான புஹ்ராகானை அனுப்பி கவர்னரை பிடித்து தோலுரித்து கொடூரமாக கூரான மூங்கில்களின் மேல் இருத்தி கொன்றார். கி‌.பி.1285ல் மங்கோலிய படையெடுப்பை தடுக்க சென்ற இவரின் மூத்த மகன் முகமது திடீர் தாக்குதலில் இறந்து போக பால்பன் பித்துபிடித்ததை போல மாறினார். இருட்டு அறையிலையே முடங்கிய பால்பன் மகன் இறந்த ஒரு வருடத்திற்குள்ளே இறந்து போனார்.

மொயிஸ்தீன் கைக்காபாத் (கி.பி.1286-1290) :

இவர் பால்பனுக்கும் நஸ்ரூதின் மஹ்மூத்க்கும் பேரன். தாத்தா பால்பன் இருந்தவரையில் ஒழக்கமாக இருந்த இவர் அரியணை ஏறியதும் மது மாது என்ற கொண்டாட்டங்களிலையே மூழ்கி போனார். இவரது அமைச்சராக இருந்த நிஜாமூதின் இவரை அந்தப்புரத்திலையே மங்கைகளின் அரவணைப்பிலையே இருக்க விட்டு பட்டத்து ராஜா மாதிரி நடந்துகொண்டார். இவரது கொண்டாட்டங்களின் விளைவாக இளவயதிலையே முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட இவருக்கு மேலும் பல நோய்களும் வந்தது. டெல்லியின் அடிமை வம்சத்தின் 10வது சுல்தானாக இருந்த இவர் 18 வயதில் ஆட்சிக்கு வந்து வெறும் 3 வருடங்களே ஆட்சியில் இருந்தார். இந்த நேரத்தில் டெல்லிக்கு அடங்கிய கஜினியை சேர்ந்த ஜலாலுதீன் கில்ஜி (அலாவூதின் கில்ஜியின் மாமனார்) டெல்லி மீது படையெடுத்து வந்தார். கில்ஜி வம்ச தளபதியான ஜலாலுதீன் பிரோஷ் ஷா (இவர் தான் பின்னர் ஜலாலுதீன் கில்ஜி என்றழைக்கப்பட்டவர்) தலைமையில் வந்த கமாண்டோ படை அரண்மனையை சுற்றி வளைத்தது. இவரது அமைச்சரான நிஜாமூதினுக்கு வலுக்கட்டாயமாக விஷம் புகட்டி கொன்றனர். மாமூல்க் சுல்தான்களால் ஏற்கனவே பிரோஷ் ஷாவின் தந்தை கொலை செய்யப்பட்ட வஞ்சம் இருந்ததால் அவர் சுல்தானை கழுத்திலையே மிதித்து கொன்றார். பின்னர் சுல்தானின் உடலை யமுனை ஆற்றில் வீசியெறிந்தார்.  இவருடன் அடிமை வம்ச (மாமூல்க்) டெல்லி சுல்தான்களின் ஆட்சி முடிந்து கில்ஜி வம்ச ஆட்சி டெல்லியில் அரியணை ஏறியது.

உதவிய நூல்கள்:

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

மொகலாயர்கள் - முகில்

மத்திய கால இந்தியா - சதீஷ் சந்திரா

விக்கிபீடியா தகவல்கள்

மொகலாயர் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே. ரவீந்திரன்

படங்கள் :

கூகுள் படங்கள் & திருமுத்துகுமரன்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு