50) டெல்லி சுல்தான்கள் - கில்ஜி வம்சம்
டெல்லி சுல்தான்கள்: கில்ஜி வம்சம் (கி.பி.1290-1320)
ஜலாலுதீன் கில்ஜி (கி.பி.1290-1296)
அடிமை வம்சத்தை முடித்து வைத்த ஜலாலுதீன் பரோஷ் ஷா பின்னர் டெல்லி அரியணையில் ஜலாலுதீன் கில்ஜியாக டெல்லி சுல்தானாக அமரும் போது அவருக்கு வயது 70க்கு மேல். அவரது மூத்த மகன் ஆர்காலிகான் முல்தான் பிரதேசங்களை கவனித்து வந்தார். இவரின் சகோதரரின் மகனான அலாவூதினுக்கு தன் மகளை மணம் செய்து கொடுத்து தனது மருமகனாக்கி கொண்டார். இவரின் அனுமதியில்லாமல் தக்காணத்தின் தியோகிர் பிரதேசங்களில் படையெடுத்து சென்று வென்று மலை போல செல்வத்தை குவித்தார். அந்த நேரத்தில் இவர் ஆவாத் (இன்றைய அயோத்தி) ஆளுநராக இருந்தார். ஜலாலுதீனின் மனைவியான முல்லிக் ஜஹான் இவரை நம்ப வேண்டாம். அலாவூதின் தன்னை வளப்படுத்திக் கொள்ளவே இந்த போர்களை நடத்தினார் என்றும் கூறியதை பொருட்படுத்தாமல் அலாவூதினை வரவேற்க சென்றபோது பின்னால் இருந்து எண்பது வயதை நெருங்கிய சுல்தானான ஜலாலுதீன் கில்ஜியை அலாவூதினின் ஏற்பாட்டின்படி கொலை செய்தனர்.
அலாவூதின் கில்ஜி (கி.பி.1296-1316)
பின்னர் ஜலாலுதீன் கில்ஜியின் மனைவியான முல்லிக் ஜஹான் தனது பத்து வயது சிறுவனான ரூக்னுதீன் இப்ராஹிம்மை அரசராக ஆக்கினார். டெல்லி கோட்டைக்கு வெளியே நிதானமாக டெண்ட் அமைத்த அலாவூதின் கில்ஜி தேவகிரியிலிருந்து கைப்பற்றிய தங்கத்தையும் முத்தையும் வைரங்களையும் உண்டி வில்லில் கோட்டைக்கு உள்ளே வீசினார். இதனால் வந்திருப்பவர் கொள்ளைகாரர் அல்ல நம்மை வாழ்விக்க வந்த வள்ளல் தான் என்று ரூக்னுதீனின் தளபதிகளும் அமைச்சர்களும் படை வீரர்களும் அலாவூதின் கில்ஜியின் பக்கம் சாய்ந்து கோட்டையை திறந்தனர். முல்லிக் ஜஹான் தன் மகனான சுல்தான் ரூக்னுதினுடன் தனது மூத்த மகன் ஆர்காலிகானின் இடமான முல்தானுக்கு ஓடிப்போனார். பின்னர் மாலிக் காபூரை படைகளுடன் முல்தானுக்கு அனுப்பி ஆர்காலிகானையும் ரூக்னுதீன் இப்ராஹிம்மையும் கொன்று ஜலாலுதீனின் வாரிசுகளின் கதையை முடித்தார். பணத்திற்காக தன்னுடன் சேர்ந்த சுல்தானின் தளபதிகள், அமைச்சர்கள் ஒருவரையும் விடாமல் கொன்று தீர்த்தார். குஜராத் படையெடுப்பின் போது தன்னோடு வந்த ஜலாலுதீன் காலத்தில் முஸ்ஸீம்களாக மாறிய மங்கோலியர்கள் அதிக பங்கு கேட்டதால் ஆயிரக்கணக்கான மங்கோலியர்களை கொன்று குவித்ததுடன் அவர்களது குடும்பத்தினருக்கும் கொடுமையான தண்டனைகள் வழங்கினார். மது விருந்தில் தன்னை எதிர்த்து கலகம் செய்ய சூழ்ச்சி நடக்கும் என்பதாலையே மது ஓயின்களுக்கு தடைபோட்டார். பின்னாளில் டெல்லியில் இதனால் கள்ளச்சாராயம் ஆறு போல ஒடியது.
குஜராத்தில் உள்ள காம்பத் நகரை வெற்றி கொண்டபோது மன்னருக்கு பரிசளிக்க இராணி கமலா தேவியை (கர்ண தேவாவின் மனைவி) தூக்கி சென்றனர் கில்ஜி படைவீரர்கள். அப்படி ராணியோடு அனுப்பப்பட்ட அடிமைகளுள் ஓருவர் தான் மாலிக் காபூர். காம்பத் நகரில் ஆயிரம் நாணயங்கள் தந்து ஒரு வணிகரால் வாங்கப்பட்டதால் அவரை ஹசார் தினார் என்றழைத்ததாகவும் வரலாற்று குறிப்பு உள்ளது. இவரது ஆட்சியில் அத்தியாவசிய தானியங்களின் விலையை அரசே தான் தீர்மானித்தது. எந்த காலத்திலும் விலை மாறாது இருந்தது. பதுக்கல்காரர்களும் கள்ளச்சந்தை வியாபாரிகளும் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். தனது படையிலுள்ள ஒட்டுமொத்த வீரர்களின் விவரங்களை பட்டியலிட்டு அவர்களுக்கு மாதச்சம்பளம் தரும் முறையை ஏற்படுத்தினார்.
இவர் ஓரு சிற்றின்ப பிரியர். மது மாது கேளிக்கைகளில் மட்டுமல்ல குரூரத்திலும் எல்லையை கடந்தவர். இவரின் உல்லாசத்தோழனான மாலிக் காபூர் ஒரு அரவாணி. அவருக்கு தலைமைதளபதி பதவி கொடுத்து கெளரவித்தார். இவரின் ஆட்சியில் குஜராத், ரத்னாம்பூர் மற்றும் சித்தூர் இராஜபுத்திரர்களை வீழ்த்தினார். அடுத்து தேவகிரியை ஆண்ட யாதவ அரசர்களை வீழ்த்தி வெற்றி கொண்டார். மைசூரையும் வெற்றி கொண்டார். இவரின் தளபதியான மாலிக்காபூர் மதுரையில் நடந்த வாரிசுமை போரில் உதவி செய்வதாக சுந்தர பாண்டியன் மற்றும் வீர பாண்டியனை வென்று மதுரையில் சுல்தான்களின் ஆட்சியை ஏற்படுத்தினார். (மதுரை சுல்தான்கள் பகுதியில் அதையும் பார்க்கலாம்) பின்னர் காகதீய அரசர்களை (வாரங்கல், துவாரசமுத்திரம் பகுதிகளை வென்று கைப்பற்றினார்) வென்று காகதீய அரசுக்கும் முடிவுரை எழுதினார். பாமினி பிஜப்பூர் சுல்தான்கள் எல்லாம் இவரின் படையெடுப்புகளின் விளைவாக வந்தவர்கள் தான். இஸ்லாமிய ஆட்சி வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியா வரைக்கும் பரவியதற்கு இவரின் படையெடுப்புகளே காரணமாகும்.
கி.பி.1301-02 ஆண்டுகளில் சித்தூரின் மீது படையெடுத்து மேவார் ராணாவான ரத்தன் சிங்கை வீழ்த்தியதால் அவரின் மனைவியான பத்மினியும் மற்ற பெண்களும் ஜோஹர் (தீக்குளிப்பு) செய்து கொண்டனர். (பத்மாவத் படக்கதை- ஆனால் ஜோஹர் நடந்தது உண்மை தான் . ஆனால் பத்மினி என்ற அரசியின் பெயரே பிற்காலத்தில் கி.பி.16ம் நூற்றாண்டுகளில் தான் வெளியாயிற்று என்பதும் உண்மை)
குதுப்மினார் வளாகத்தில் மசூதி ஒன்றை கட்டினார். அலாய்தர்வாசா என்ற அழகிய வேலைப்பாடு அமைந்த நுழைவாயில் கட்டிடத்தையும் அமைத்தார்.
மேலும் குதுப்மினாரை மிஞ்சும் வகையில் அலாய்மினார் என்னும் கட்டிடத்தை கட்ட ஆரம்பித்தார். முதல் மாடி அளவிலலையே எழும்பிய அலாய்மினார் இவரது மரணத்தினால் அப்படியே நின்றது.
சாஹோப் உத்-யூதின் (கி.பி.1316)
அலாவூதின் கில்ஜியின் இளைய மகன். அலாவூதின் கில்ஜியின் மூன்றாவது மனைவிக்கு பிறந்தவர். அலாவூதின் கில்ஜி இறந்தவுடன் மூத்த மகனான முபராக்கை (இவர் அலாவூதின் கில்ஜியின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்) மாலிக் காபூர் சிறையில் அடைத்து சிறுவனான இவரை அரசர் பதவியில் அமர்த்தினார். இவரை வைத்து அலாவூதினின் மற்ற பிள்ளைகளான கிஸிர்கான் மற்றும் ஷாதிகான் இருவருடைய பார்வையையும் பறிக்க சொல்லி மாலிக் காபூர் உத்தரவிட்டான். பட்டத்துக்கு வந்த உமர்கான் கில்ஜியின் தாயை (அலாவூதினின் மூன்றாவது மனைவி) அரவாணியான மாலிக் காபூர் மணந்து கொண்டார். பின்னர் மூத்த மகனான முபாரக்கை கொல்ல சிறைக்கு ஆளனுப்பினார். முபராக் தன்னிடமிருந்த நெக்லஸில் இருந்த முத்துக்களையும் வைரங்களையும் பிய்த்து எறிந்த பின்னர் வந்தவர்கள் மனம்மாறி மாலிக் காபூரின் மாளிகைக்கு சென்று அவரை கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்தனர். இவ்வளவும் அலாவூதின் கில்ஜி மறைந்த 35 நாட்களுக்குள் நடந்தது. மாலிக் காபூர் கொலை செய்யப்பட்ட பின் சிறையில் இருந்து வெளியே வந்த முபாரக் தன் தம்பியே ஆட்சி நடத்தட்டும் . நான் உதவியாக இருக்கிறேன் என்று சொல்லி மெல்ல மெல்ல அடுத்த இரண்டு மாதங்களில் தம்பியை நீக்கிவிட்டு கண்களை குருடாக்கி சிறையில் அடைத்துவிட்டு அரசரானார்.
குப்த்-யூதின் முபாரக் (கி.பி.1316-1320)
அரியணைக்கு வந்த புதிதில் 17000 சிறை கைதிகளுக்கு விடுதலை வழங்கினார். இராணுவ வீரர்களுக்கு 6 மாத போனஸ் வழங்க உத்தரவிட்டார். பின்னர் அந்தபுரம் போனவர் தான் குடிப்பது சல்லாபிப்பது தான் வேலையே ஆயிற்று. சல்லாபமும் யாருடன் என்பதும் முக்கியம். தனக்கு சேவை புரிய குஜராத்திலிருந்து அலாவூதின் கில்ஜி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்து இளைஞனான மல்லிக் குஸ்ரூவுடன் அரண்மனையில் கொட்டம் அடித்தார். அவரை குஸ்ரூ கான் என்ற பெயர் மாற்றி முஸ்ஸீமை மாற்றினார். அவரை தன் பிரதம அமைச்சராக ஆக்கிக் கொண்டார். இந்த நேரத்தில் குஜராத்தில் கிளர்ச்சி நடந்தது. அதனை அய்ன்-உல்-மூல்க் என்ற தளபதியை அனுப்பி அடக்கினார். தேவகிரி மன்னர் ஹரபாலதேவர் புரட்சிகொடி தூக்க அவரை வீழ்த்தி சிறைப்பிடித்து எல்லோர் முன்னிலையிலும் தோல் உரித்து கொன்றார். தேவகிரி மன்னரின் தலையை வெட்டியெடுத்து கோட்டை வாசலில் ஈட்டியில் பொருத்தி வைத்தார்கள் முபாரக்கின் வீரர்கள். பின்னர் தெலுங்கானாவுக்கு படைகளுடன் சென்ற குஸ்ரூகான் அதை வென்று திரும்பினார். இந்த நேரத்தில் சுல்தானின் ஆசிரியரை குஸ்ரூகான் கொன்ற விஷயம் வெளியே தெரியாமலிக்க தன்னுடைய வீரர்களை அழைத்து சுல்தானை பிடித்துக்கொள்ள அவரின் தலையை வெட்டி வீழ்த்தினான் குஸ்ரூகான். பின்னர் சிறையில் புகுந்த முபாரக்கின் இளைய சகோதரரான முன்னாள் அரசரை கொன்றுவிட்டு அந்தபுரத்தில் புகுந்த அரச குடும்ப பெண்களையெல்லாம் வீரர்கள் மானபங்கப்படுத்தினார்கள்.
குஸ்ரூகானின் ஆட்சியில் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களையும் நாசமாக்கினார். பொறுக்கமுடியாமல் பிரபுக்கள் லாகூரை நிர்வகித்து வந்த கியாஸீதின் துக்ளக்கிற்கு தகவல் அனுப்பி படையுடன் டெல்லிக்கு வரவழைத்தனர். இந்த யுத்தத்தில் குஸ்ரூகானின் படை தோற்று ஓடியது. டெல்லியின் வெளியே சுடுகாட்டில் கல்லறைக்கு அடியில் பதுங்கியிருந்த குஸ்ரூகானை பிடித்து வந்து கோட்டையின் வெளியே கை கால் தலை உடல் என்று தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். மொத்தத்தில் இவர் 2 1/2 மாதங்களே ஆட்சியில் இருந்தார்.
இவ்வாறாக டெல்லி சுல்தான்களின் இரண்டாவது வம்சமான கில்ஜி வம்ச ஆட்சி முடிந்து துக்ளக் வம்ச ஆட்சி கியாஸீதின் துக்ளக்கிலிருந்து ஆரம்பித்தது.
உதவிய நூல்கள்:
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
மொகலாயர்கள் - முகில்
மொகலாயர் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே. ரவீந்திரன்
எனது இந்தியா -எஸ்.ராமகிருஷ்ணன்
மத்தியகால இந்தியா வரலாறு - சதீஷ் சந்திரா
மற்றும் விக்கிபீடியா தகவல்கள்




Comments
Post a Comment