51) டெல்லி சுல்தான்கள் - துக்ளக் வம்சம்

டெல்லி சுல்தான்கள்: துக்ளக் வம்சம் (கி.பி.1321-1413)

கில்ஜி வம்சத்தின் கீழ் லாகூரை ஆண்ட வந்த இவர்களும் துருக்கியர்களே. கியாத்துல்-தீன்-துக்ளக் லாகூரை ஆண்ட பொழுது குஸ்ரூ கான் கில்ஜி வம்சத்தின் கடைசி அரசனான அலாவூதின் கில்ஜியின் இரண்டாவது மகனை கொன்று ஆட்சியை பிடித்தான். இவனது தொல்லைகள் பொறுக்கமுடியாமல் துருக்கிய பிரபுக்களின் குழு கியாத்துல்-தீன்-துக்ளக்கிற்கு அழைப்பு அனுப்பியது. இவர் வந்து குஸ்ரூ கானை வென்று பின்னர் கோட்டையின் வாசலில் கொன்று துக்ளக் வம்ச ஆட்சியை டெல்லியில் ஏற்படுத்தினார். மொராக்கோ நாட்டு பயணியான இபின் பதுதா துக்ளக் வம்சம் துருக்கியை சேர்ந்த குவாரனோ பழங்குடியினரை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் துர்கிஸ்தான் மற்றும் சிந்துவுக்கு இடைப்பட்ட மலைப்பிரதேசங்களில் வசித்தவர்கள் என்றும் கூறுகிறார். சிலர் துக்ளக்கின் தந்தை பால்பனின் அடிமை என்றும் தாய் இராஜபுத்ர ஜாட் வம்சத்திலிருந்து வந்தவர் என்றும் கூறுகிறார்கள். ஆனால் பெரும்பாலான அறிஞர்கள் அதை மறுக்கிறார்கள். பீட்டர் ஜாக்சன் என்ற வரலாற்றிஞர் துக்ளக் மங்கோலியர் அல்லது மங்கோலியர்-துருக்கியர் கலப்பு இனத்திலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்கிறார்.

காஸி மாலிக் (அல்லது) கியாத்துல் தீன் துக்ளக் (கி.பி.1321-1325)

குஸ்ரூ கானை வீழ்த்திய காஸி மாலிக் டெல்லி சுல்தானாகும் போது கியாத்துல்-தீன்-துக்ளக் என்ற பெயரில் சுல்தானாக பதவியேற்றார். நம் பாடப்புத்தகங்களில் இவரது பெயர் "துக்ளக் ஷா" என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சுல்தானாக இவர் பதவியேற்கும் போதே இவருக்கு வயது 60ஐ தாண்டியிருந்தது. கேலிக்கூத்துக்கு பெயர்போன "முகமது-பின்-துக்ளக்"ன் தந்தை இவரே. இவர் ஆட்சிக்கு வந்த புதிதில் முஸ்லீம்களுக்கு வரியை குறைத்தும் இந்துக்களுக்கு வரியை கூட்டியும் உத்தரவிட்டார். இதை இவரின் அரசவையிலுள்ள "ஜியாவூதின் பர்ணி" குறிப்பிட்டுள்ளார். டெல்லிக்கு கிழக்கே 6 கி.மீ தூரத்தில் மங்கோலிய படையெடுப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக "துக்ளகாபாத்"என்ற கோட்டையை நிறுவினார்.


கி.பி.1321ல் வாரங்கல் மற்றும் தெலுங்கானாவை ஆண்ட ஹிந்து அரசர்களின் மீது படையெடுக்க தன் மகன் உலா கான்னை (இவர் தான் சரித்திர புகழ்பெற்ற முகமது-பின்-துக்ளக்) அனுப்பி முதல் போரில் தோற்றார். பின்னர் 4 மாதத்திற்கு பின்னர் கூடுதலாக உலாகானுக்கு படையனுப்ப இரண்டாவது முயற்சியில் வாரங்கல்லை வெற்றிக்கொண்டு அதற்கு சுல்தான்பூர் என்று பெயரிட்டார். வாரங்கல்லை கொள்ளையிட்டு நிரம்ப செல்வங்களை டெல்லியின் கஜானாவில் நிரப்பினார். பின்னர் கி.பி.1324-25ல் துக்ளக் ஷாவும் அவரது இன்னொரு மகனான மஹ்மூத் கானும் வங்காளத்தை வெற்றி கொண்டு திரும்பினர். இந்த நேரத்தில் துக்ளக் ஷா சூபி ஞானியின் சாபத்தில் விழுந்தார். "டெல்லி உனக்கு ரொம்ப தூரம்" என்று சொல்லியதன் அர்த்தம் டெல்லிக்கு நுழையிகையில் ஆடம்பர வளைவு இவர்களின் மீது விழுந்து இறந்து போனார்கள். விபத்து மாதிரி நடந்த நிகழ்வை ஏற்படுத்தியதே இவரது மகனான உலாகான் என்ற முகமது பின் துக்ளக் தான்.

முகமது பின் துக்ளக் (கி.பி.1325-1351)

துக்ளக் ஷாவுக்கு பின் ஆட்சிக்கு ஏறிய உலா ஜீனா கான் தன்னை துக்ளக் ஷாவின் மகன் என்ற பொருளில் "பின் துக்ளக்" என்ற அழைக்கவே அதுவே அவருக்கு முகமது-பின்-துக்ளக் என்ற பெயராக நிலைத்துவிட்டது. 26 வருடங்கள் ஆண்ட இவரின் ஆட்சியில் தான் துக்ளக் வம்ச ஆட்சி அதன் உச்சத்தை தொட்டது. இவர் மாள்வா (மத்திய பிரதேசம்), குஜராத், மாபார்(தமிழகம்), வங்காளம், சிட்டகாங்க் வரை தனது ஆட்சியை விரிவுபடுத்தினார். இவர் ஹிந்து அரசர்கள் ஆட்சி புரிந்த இராஜ்யங்களை போரில் வென்று அவர்களின் செல்வங்களை கொள்ளையடித்து திரும்புவதையே வழக்கமாக கொண்டிருந்தார். கங்கை மற்றும் யமுனை பகுதிகளில் முஸ்லீம் அல்லாதவர்களின் (திம்மிஸ்) விளைநிலங்களுக்கு நிலவரியை அதிகப்படுத்தினார். விளையும் பயிர்களின் பாதி அல்லது அதற்கு மேலும் வரியாக பெற்றார். இதனால் இந்து விவசாயிகள் தங்களது நிலங்களை விட்டுவிட்டு காட்டிற்கு சென்று ஒளிந்துகொண்டு வழிப்பறி கொள்ளையர்களாக மாறினர்.

சரித்திரத்தின் கேலிக்கூத்தான இடம்பெயர்வு இவரது உத்தரவின் பேரிலையே நடந்தது. டெல்லியிலிந்து  தெளலாபாத் (தேவகிரி- இன்றைய ஒளரங்கபாத் அருகிலுள்ளது) க்கு நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் கண்டிப்பாக இடம்பெயர உத்தரவிட்டார்.


உத்தரவுக்கு கீழ்படியாதவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டது. இப்படி மாறிய பின்னர் இரண்டே ஆண்டுகளில் திரும்பவும் டெல்லிக்கு தலைநகரை மாற்றினார். திரும்பவும் மக்கள் அனைவரும் தங்களது உடைமைகளுடன் டெல்லிக்கு பயணப்பட்டனர். சரித்திரத்தின் பக்கத்தில் கேலிக்கூத்தான இடம்பெயர்வு உத்தரவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் "துக்ளக் தர்பார்" என்று காட்டாச்சியை குறிப்பிடவும் பயன்படுத்துகிறார்கள். திரும்பவும் டெல்லிக்கு திரும்பியதற்கு காரணமாக தண்ணீர் பற்றாக்குறையை தான் காரணமாக சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

கி.பி.1335க்கு பிறகு விஜயநகர பேரரசின் எழுச்சி கொண்டு டெல்லியிலிருந்து பிரிந்து தனியரசாகியது. கி.பி.1336ல் முசுனுரி நாயக்கர்களால் வாரங்கல்லின் மீது படையெடுத்து வந்த துக்ளக்கின் படைகள் தோற்கடிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மதுரையில் இவரது தலைமையில் ஆட்சி புரிந்த சுல்தான் தன்னை தனியாட்சியாக அறிவித்து கொள்ள அவரை வீழ்த்த படைகளுடன் டெல்லியிலிருந்து புறப்பட்டார். வழியில் படைகளுக்கு காலரா பாதிப்பு ஏற்பட காலராவினால் இவர் இறந்த போனதாக வதந்தி பரவ இவரது ஒன்றுவிட்ட சகோதரன் மாள்வாவில் தன்னை தனியரசராக அறிவித்துக் கொண்டார். உடனே மதுரையை விட்டுவிட்டு மால்வாவுக்கு புறப்பட்டு சகோதரனை வீழ்த்தி டெல்லிக்கு திரும்பினார். கி.பி.1339ல் கிழக்கு பகுதியிலுள்ள முஸ்லீம் கவர்னர்கள் மற்றும் தெற்கு பகுதியை ஆண்ட இந்து அரசர்களும் தங்களை சுதந்திர பகுதிகளாக அறிவித்துக் கொண்டனர். இவரது ஆட்சியில் மொராக்கோ நாட்டு சுற்றுலா பயணியாக வந்த "இபின் பதூதா" இவரின் உத்தரவால் நீதிபதியாக பணியாற்றினார். ஒருமுறை கோபத்தில் (இபின்பதூதா இங்கு வந்து திருமணம் செய்த மனைவியின் தந்தையான ஜலாலுதீன் அசன் கான் மதுரையில் சுல்தான்களின் தனியாட்சி அறிவித்த காரணத்தால்) இவரை கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர் மனம் மாறி 10 நாட்களில் இபின் பதூதாவை விடுவித்து சீனாவுக்கு தூதராக பணியாற்றுமாறு கூற அவரும் இதுதான் சாக்கு என்று இவரிடம் தப்பித்து மதுரைக்கு ஒடி அங்கிருந்து சீனா வழியாக தனது நாட்டுக்கு போனார். நாட்டில் நாணயத்தின் மதிப்பை குறைக்க புது நாணயங்கள் அச்சிட்டு கொடுக்க ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்த அதே மாதிரி கள்ள நாணயங்கள் புழக்கம் நாட்டில் பரவ தனது பழைய நாணயங்களை திரும்பவும் செல்லாது என்று அறிவித்தார்.


சரித்திரத்தில் மிகவும் கோமாளியாக பதிவு செய்யப்பட்ட அரசரின் மறுபக்கம் வித்தியாசமானது. சிறந்த ஒழங்குமுறையுடன் நாட்டை நிர்வகித்தார். குற்றங்களை விசாரிக்க நாடு முழுவதும் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இஸ்லாமிய சட்ட விதிமுறைப்படி நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவரது ஆட்சியில் இவரது கட்டுப்பட்டு இருந்த பாமினி சுல்தான்கள் கி.பி.1347ல் தங்களை சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டனர்.

ப்ரோஷ் ஷா துக்ளக் (கி.பி.1351-1388)

இவர் முகமது-பின்-துக்ளக்கின் சித்தப்பா மகன். ஒன்றுவிட்ட சகோதரர். சொந்தங்களின் மீது சந்தேகம் கொண்டிருந்த துக்ளக் இவரின் மீது மட்டும் அன்பு கொண்டிருந்தார். ஏனெனில் இவர் பதவியாசை இன்றி "என் பணி- அண்ணனுக்கு உதவுவதே"என்று இருந்தது தான். சாகும் தருவாயில் ப்ரோஷ் ஷா துக்ளக்கை அழைத்து அமைச்சர்களிடம் எனக்கு பின் என் தம்பி ப்ரோஷ் தான் பதவிக்கு வரவேண்டும் என்று கட்டளையிட்டார். இவர் டெல்லிக்கு திரும்புவதற்கு முன்பே துக்ளக்கின் உறவினரான 96 வயது க்வாஜா ஜஹான் என்ற முதியவர் துக்ளக்கின் வாரிசு என்று 6 வயது சிறுவனை பதவியில் அமர்த்தினார். உண்மையிலேயே அந்த சிறுவன் அந்தபுரத்தில் இருந்த ஒரு ராணிக்கும் துக்ளக்கிற்கும் பிறந்தவர். டெல்லி வந்தவுடன் எல்லோரும் ப்ரோஷ் ஷா துக்ளக்கையே வரவேற்று ஆட்சியில் அமர்த்தினார்கள். இவரது ஆட்சியில் பேரரசு குறுகிக் கொண்டே போனாலும் 37 வருடங்கள் ஆட்சி புரிந்தார். மேற்கு வங்காள கவர்னர் ஷாம்ஷீதீன் இலியாஸ் கிழக்கு வங்காளத்தையும் கைப்பற்றி தன்னை சுல்தானாக அறிவித்துக் கொண்டார். ப்ரோஷ் ஷா இவரை போரில் வென்றதும் அவர் கோட்டையில் பதுங்கிக்கொண்டார். கோட்டையில் இருந்து அழகுரல்கள் கேட்டதும் மனம் மாறி போரை நிறுத்திவிட்டு டெல்லி திரும்பினார். 6 வருடம் கழித்து அவர் மகன் சிக்கந்தரும் இதே வழியை பின்பற்றினார். இந்தமுறை படையெடுப்பில் சிக்கந்தர் ஷா கோட்டையை விட்டு வெளியே வரவில்லை. மழைக்காலம் புயல் ஆகியவற்றினால் டெல்லி படைகள் திரும்பியது. திரும்பும் வழியில் ஓரிஸாவின் மீது படையெடுத்து வென்றார். பூரி ஜெகந்தாதர் ஆலயம் இவரால் நாசமாக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் நாகர்கோட் மன்னரை வென்றார். ஆனால் அவரை மன்னித்தாலும் ஜ்வாலமுகி ஆலயத்தை உடைத்தெறிந்தார். மீரட்டிலும் அம்பாலாவிலும் இருந்த அசோகர் ஸ்தூபிகளை கொண்டு வந்து தான் டெல்லிக்கு அருகில் கட்டிய "ப்ரோஷ்ஷாபாத்" நகரின் கோட்டை உச்சியில் பொருத்தினார்.

இவர் ஆட்சியில் விவசாயிகளுக்கு வரிச் சுமையை குறைத்தார்.நீர்பாசன வசதிகளை செய்து கொடுத்தார். டெல்லியை சுற்றி 1200 பூங்காக்களுக்கு மேல் கட்டினார். இந்தியாவில் முதன்முதலில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஆரம்பித்தவர் இவர் தான். ஏழைபெண்கள் திருமண உதவிதிட்டம், விதவைகளுக்கு மான்யம், குழந்தைகள் காப்பகம் மற்றும் சத்துணவு ஆகியவை இவரின் ஆட்சியில் அமுல்படுத்தப்பட்டது. டெல்லியில் உருப்படியாக ஆண்ட கடைசி சுல்தான் இவர் மட்டுமே. மசூதிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பாலங்கள், அணைகள் என்று நிறைய இவரின் ஆட்சியில் கட்டப்பட்டது.

கியாத்துல் தீன் துக்ளக் ஷா (கி.பி.1388-1389)

ப்ரோஷ் ஷாவுக்கு பின் ஆட்சிக்கு வந்த இவர் அவரின் பேரன். அரண்மனை அந்தப்புரத்திலையே கிடந்ததால் 5 1/2 மாதங்களிலையே அமீர்களால் இவர் கொல்லப்பட்டார்.

அபு பக்கர் ஷா (கி.பி.1389-1390)

துக்ளக் ஷாவுக்கு பின் ப்ரோஷ் ஷாவின் இன்னொரு பேரனான அபுபக்கர் ஷாவுக்கு அமீர்கள் பட்டம் சூட்டினார்கள். ஒரு வருடம் கூட ஆட்சிசெய்யாத இவரை இவரது மாமன் முஹமத் ஷா ஆட்சியிலிருந்து அகற்றினார்.

முஹமத் ஷா (கி.பி.1390-1394)

4 வருடங்கள் ஆட்சி என்ற பெயரில் ஏதோ நடத்தியவாறு அந்தப்புர்ததிலையே குடி கூத்து என்று கும்மாளமிட்டார்.

அலாவூதின் சிக்கந்தர் ஷா (கி.பி.1394)

சுல்தான் முஹமத் ஷா மறைவுக்கு பின்னர் அவரது மகனான ஹீமாயூன் கான் அலாவூதின் சிக்கந்தர் ஷா என்ற பெயரில் முடிசூட்டிக்கொண்டார். இரண்டு மாதங்களிலையே இவர் கொல்லப்பட்டார்

நஸ்ரூதீன் மஹ்மூத் ஷா துக்ளக் (கி.பி.1394-1413)

ஹீமாயூன்கான் மறைவுக்கு பின் முஹமத் ஷாவின் இன்னொரு மகனான நஸ்ரூதின் மஹ்மூத் ஷா பட்டத்திற்கு வந்தார். இவருக்கு போட்டியாக இவரது ஒன்றுவிட்ட சகோதரர் நஸ்ரத் ஷாவும் ஆட்சிக்கு உரிமை கோரினார். இதனால் நஸ்ரூதின் மஹ்மூத் ஷா துக்ளக் டெல்லியின் மேற்கு பகுதியை ஆண்டார். கி.பி.1398ல் தைமூர் டெல்லி நோக்கி படையெடுத்து வந்தபோது அவருடன் மோதி தோல்வியடைந்தார். டெல்லியில் அமர்ந்த தைமூர் ஒட்டுமொத்த டெல்லியின் செல்வத்தையும் யானைகளையும் கைப்பற்றிக் கொண்டார். அவரது படையினரை சிலர் தாக்கியதால் வெகுண்டு பிறப்பித்த ஆணை டெல்லியிலுள்ள மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை கொல்ல காரணமாயிற்று‌. தைமூர் வெளியேறிய 2 மாதங்கள் டெல்லியில் யாருமே நடமாடவில்லை. பிணங்களை அப்புறப்படுத்த ஆளில்லாமல் ஊரே நாறிபோய் கிடந்தது. பின்னர் நஸ்ரூதின் முஹமூத் ஷா துக்ளக் திரும்பி வந்து டெல்லியை சுத்தப்படுத்தி கி.பி.1412 ம் ஆண்டு வரை ஆண்டார். அவருக்கு பின்னர் வாரிசில்லாததால் கி.பி.1412லிருந்து 1414 வரை இரண்டு வருடங்கள் டெல்லி ஆட்சியாளர்கள் இல்லாமல் இருந்தது.

நஸ்ரூதீன் நுஸ்ரத் ஷா துக்ளக் (கி.பி.1394-1398)

இவர் பரீதாபாத்திலருந்து டெல்லியின் கிழக்கு பகுதியை ஆண்டார். ஆறு கி.மீ தூரத்தில் இருந்து இருவரும் தனிதனி ராஜாங்கம் நடத்தினார்கள். தைமூர் வெறியாட்டத்திற்கு பிறகு இவரது நிலைமை என்னவானது என்று தெரியவில்லை.

உதவிய நூல்கள்:

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

மொகலாயர்கள் - முகில்

மொகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்

மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா

விக்கீபிடியா தகவல்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு