52) டெல்லி சுல்தான்கள் -சைய்யீத் வம்சம்
சைய்யித் வம்சம் (கி.பி.1414-1451)
துக்ளக் வம்சத்தின் கடைசி அரசனான நஸ்ரூதீன் மஹ்மூத் ஷா துக்ளக் தைமூரின் படையெடுப்பினால் தனது அரசின் ஸ்திரத்தன்மையை இழந்து ஒடி தைமூர் டெல்லியை விட்டு சென்ற பின் வந்து பெயரளவுக்கு ஆட்சி புரிந்தார். கி.பி.1412-13களில் இவர் வாரிசின்றி இறக்க 1 1/2 வருடங்களாக டெல்லியில் அரசர் யாருமில்லாமல் பிரபுக்களின் கையில் இருந்தது. இந்த நேரத்தில் துக்ளக்கால் முல்டானின் கவர்னராக நியமிக்கப்பட்ட கிஸிர்கான் (பின்னர் தைமூரால் முல்தான் மற்றும் லாகூர் கவர்னராக நியமிக்கப்பட்டார்) டெல்லியை பிடித்து சைய்யித் வம்ச ஆட்சியை தொடங்கினார். இவர்கள் முகமது நபியின் மகளான பாத்திமா மற்றும் மருமகனுமான அலி இவர்களின் வழித்தோன்றல்கள் என்பதால் தங்களை சைய்யித் என்று அழைத்துக் கொண்டார்கள். இவர்களின் ஆட்சியில் பெர்ஷியா மொழி அரசு மொழியாக இருந்தது. இவர்கள் சன்னி இஸ்லாம் பிரிவை சேர்ந்தவர்கள்
சைய்யித் கிஸிர் கான் (கி.பி.1414-1421)
இவர் துக்ளக் ஆட்சியில் இருந்த நாணயங்களே புழக்கத்தில் இருக்க அனுமதித்தார். தொடக்கத்தில் தன்னை சுல்தானை என்று அழைக்காமல் ரயத்-இ-அலா (தைமூரின் சிற்றரசர்) என்றே அழைத்துக் கொண்டார். இவர் ப்ரோஷ் ஷா துக்ளக்கின் கீழ் முல்தானின் கவர்னராக இருந்தார். பின்னர் தைமூரின் இந்திய படையெடுப்பின் போது அவருடன் சேர்ந்து வந்தார். இதனால் தைமூர் இவரை முல்தான் மற்றும் லாகூர் கவர்னராக நியமித்தார். ஏன் டெல்லிக்கு நியமிக்கவில்லை என்று கேட்கலாம்? தைமூர் அந்த நேரத்தில் டெல்லியிலுள்ள 3 லட்சம் மக்களை (கணக்கு 5 லட்சத்திற்கு மேலும் இருக்கலாம்) கொன்று குவித்து நகரையே பிணக்காடு ஆக்கிவிட்டு சென்றதால் அந்த நகரை எதற்கு ஆளணும் என்பது தைமூரின் எண்ணமாக கூட இருக்கலாம். கி.பி.1414ல் டெல்லியை பிடித்தாலும் தன்னை தைமூரின் சிற்றரசர் என்றே அழைத்துக் கொண்டார். தன் பெயரில் நாணயங்கள் எதுவும் வெளியிடவில்லை. அரியணை ஏறியவுடன் மாலிக்-உஸ்-சார்க்-தூஃபா என்பவரை தன்னுடைய வஸீராக நியமித்து அவருக்கு தாஜீல்-முல்க் என்ற பட்டமளித்தார். கி.பி.1414ல் கடோகாரை ஆண்ட அரசரான ஹர்சிங் புரட்சி செய்ததால் அவரை எதிர்த்து தன்னுடைய வஸீரை அனுப்ப அவர் காட்டிற்கு சென்று ஒளிந்து கொண்டார். கடைசியில் டெல்லிக்கு கட்டுபடுவதாகவும் வருங்காலத்தில் கப்பம் அனுப்புவதாகவும் ஒத்துக்கொண்டார். திரும்பவும் ஹர்சிங் கி.பி.1418ல் புரட்சி செய்தார். இந்தமுறை வஸீர் அவரை முழுவதுமாக தோற்கடித்தார். கி.பி.1416ல் பயானா மற்றும் குவாலியர் பகுதிகளில் வஸீர் தலைமையிலான படை சென்று ஆட்சிக்குரிய கம்பத்தை வசூலித்து திரும்பியது.
சைய்யித் முபாரக் ஷா (கி.பி.1421-1434)
கிஸிர்கானுக்கு பின் அவரது மகனான முபாரக் ஷா ஆட்சிக்கு வந்தார். இவரது கால நாணயங்களில் மிஸீத்தின் முபாரக் ஷா என்று பொறிக்கப்பட்டிருந்தது.
யாஹ்யா-பின்-அஹ்மத் சிர்ஹிண்டி எழுதிய தாரிக்-இ-முபாரக் சாஹி நூலில் இவரது ஆட்சியை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இவரும் தந்தையை போலவே தங்களது இழந்த பிரதேசங்களை மீட்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவர் கி.பி.1434ல் கொல்லப்பட்டார்.
முஹம்மது ஷா (கி.பி.1434-1443)
முபாரக் ஷாவுக்கு பின்னர் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் மூஹம்மது ஷா ஆட்சிக்கு வந்தார். இவர் தன்னை சுல்தான் முஹம்மது ஷா என்று அழைத்துக் கொண்டார். இறப்பதற்கு முன்னர் பாதொவுன் நகரை ஆண்ட தன் மகன் அலாவூதின் ஷாவை அழைத்து ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தார்.
ஆலம் ஷா (கி.பி.1445-1451)
முஹம்மது ஷாவின் மகனான இவர் அலாவூதின் ஷா என்ற பெயரை பட்டத்திற்கு வந்தபின் ஆலம் ஷா (உலகத்தின் அரசன்) என்று தன்னை அழைத்துக் கொண்டார். இவர் சைய்யித் வம்சத்தின் நான்காவது மற்றும் கடைசி சுல்தான்.கி.பி.1451ல் பாஹ்லுல் கான் லோடியிடம் தோற்றுப்போய் டெல்லி அரசை இழந்து பாதொவுன் (இன்றைய உத்திரப்பிரதேசத்தில் உள்ளது. டெல்லியிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ளது) நகருக்கு இடம் மாறி கி.பி.1478ல் இறந்து போனார்.
உதவிய நூல்கள்:
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
மொகலாயர்கள் - முகில்
மத்திய கால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா
விக்கிபீடியா தகவல்கள்



Comments
Post a Comment