53) டெல்லி சுல்தான்கள் - லோடி வம்சம்

லோடி வம்சம் (கி.பி.1451-1526) :

முந்தைய சைய்யித் வம்சத்தின் ஆட்சியை முடித்து வைக்க லாகூரை ஆண்ட ஆப்கானிய வம்சாவளியை சேர்ந்த பலூல் லோடி கி.பி.1443 ல் டெல்லியின் மீது படையெடுத்து தோற்றுபோனார். பின்னர் கி.பி.1447லும் படையெடுத்து தோற்றுப்போய் திரும்பினார். பின்னர் கி.பி.1448ல் சைய்யித் வம்சத்தின் ஆராம்ஷா பாதொவுன் நகருக்கு தனது ஆட்சியை திருப்பிய நேரத்தில் கி.பி.1451 ல் டெல்லியை கைப்பற்றி லோடி வம்சத்து ஆட்சியை தொடங்கினார்.

பலூல் லோடி (கி.பி.1451-1489) :

தனது 88 வயது வரை வாழ்ந்த இவரே டெல்லியில் லோடி வம்சத்து ஆட்சியை தொடங்கி வைத்து 37 ஆண்டுகள் டெல்லியை ஆண்டார். இவருக்கு இரண்டு மனைவிகள். அவர்களுள் ஒருவர் ஆஜ்மீரை சேர்ந்த இந்து பொற்கொல்லரின் மகள். அவருக்கு பிறந்த இரண்டாவது மகனான சிக்கந்தர் லோடியே பலூல் லோடிக்கு பின் அரியணை ஏறினார்.


ரொம்ப கேஷீசுவலான சுல்தான் இவர்.  ஜாலி டைப் சுல்தான். அரியணையில் படுத்துக்கொண்டே தான் இருப்பாராம். வாயில்காப்பாளனை கூட பேர் சொல்லி அழைக்கும் நகைச்சுவையான மன்னர் என்று வந்தார்கள் வென்றார்கள் நூலில் மதன் குறிப்பிட்டுள்ளார். பலூல் லோடி தனது ஆட்சியின் பெரும்பாலான நேரங்களை சார்கி வம்சத்து அரசர்களுடனான போர்களிலையே செலவழித்தார். அவர்களை அப்புறப்படுத்தினார். இவரது ஆட்சியில் ஜான்பூரை கைப்பற்றியதே பெரிய சாதனையாக இருந்தது. ஜான்பூரை கைப்பற்றி தனது மூத்தமகன் பார்பேக் கையில் அதன் அரசை ஒப்படைத்தார்.

சிக்கந்தர் லோடி (கி.பி.1489-1517) :

பலூல் லோடிக்கு பின் அவரது இரண்டாவது மகனான நிஸாம் கான், சிக்கந்தர் லோடி என்ற பெயரில் ஆட்சியில் அமர்ந்து தன்னை சிக்கந்தர் ஷா என்றழைத்துக்கொண்டார். இந்து தாய்க்கு பிறந்தாலும் இந்துக்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். பயணப்படுகிற வழியிலுள்ள இந்து கோயில்களையெல்லாம் இடித்துக்கொண்டே சென்றவர். யமுனை நதியில் இந்துக்கள் குளிக்கக் கூடாது என்று சட்டமும் கூட போட்டாராம். இவர் பீஹார், மால்வா பகுதிகளை வென்று தன்னரசுடன் இணைத்துக்கொண்டார். நல்ல வீரராக மட்டுமில்லாது சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவராகவும் இருந்தார். இவரது ஆட்சியில் மாவட்ட ஆளுநர்களிடம் திடிரென்று கணக்கு கேட்பதால் எல்லோரும் சரியான முறையில் கணக்கை வைத்திருந்தார்களாம். சென்ஸஸ் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவி தொகையும் இலவச உணவும் வழங்கப்பட்டது.

கி.பி.1503-04 களில் ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் இவரே. ஆக்ராவில் கோட்டை மற்றும் மசூதிகளை கட்டி தலைநகரை டெல்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றினார். இவர் குல்ராக் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதினார். சமஸ்கிருதத்தில் இருந்த மருத்துவ குறிப்புகளை பெர்சிய மொழியில் இவரது ஆட்சியில் மொழிபெயர்க்கப்பட்டது. இவரது ஆட்சியில் தான் கி.பி.1505ல் டெல்லியும் அதன் சுற்றுபுறங்களையும் பலமான பூகம்பம் தாக்கியதாக செய்திகள் உள்ளது. ஒருமுறை பிராமண பிரபு ஓருவர் இந்து மதமும் இஸ்லாமிய மதமும் ஒன்றே. இரண்டுமே இறைவனிடம் கொண்டு செல்லும் பாதைகள் என்று பொதுகூட்டத்தில் பேசிட அவரை அழைத்து விசாரிக்க மத குருமார்கள் ரெண்டுமே ஒன்று என்றால் நீங்கள் இஸ்லாத்தை பின்பற்றலாமே? என்று சொல்ல அரசரும் அது சரி தான் என்று சொல்ல பிராமண பிரபு ஆட்சோபித்து இரண்டுமே ஓன்று தான் என்று சொன்னேன். அதனாலையே நான் இந்து மதத்திலையே இருக்க தங்களுக்கு என்ன ஆட்சேபணை என்று திருப்பி கேட்க சிக்கந்தர் லோடி மன்னனிடம் தலை வணங்காமல் எதிர்வாதம் செய்யும் இவரை கொல்ல உத்தரவிட்டு அவ்வாறே நடந்தது. 


இப்ராஹிம் லோடி (கி.பி.1517-1526) :

சிக்கந்தர் லோடிக்கு பின்னர் அவரது இளைய மகன் இப்ராஹீம் லோடி பட்டத்திற்கு வந்தார்.  இவர் ஓரு முன்கோபக்காரர்.


இவரது கொடுங்கோல் அணுகுமுறையை எதிர்த்த சொந்த சகோதரர் ஜலாலுதீன் லோடி மற்றும் அவருடன் இருந்த பஸ்தூன் பிரபுக்களையும் படை திரட்டி ஜான்பூரை வெற்றி கொண்டதோடு மட்டுமல்லாமல் சகோதரர் மட்டுமின்றி அவருடன் இருந்த பஸ்தூன் பிரபுக்களையும் கொன்றது மட்டுமில்லாமல் ஒன்றுவிட்ட சகோதரர் ஹீமாயுன் என்பவரையும் சித்திரவதை செய்து கொன்றார். பின்னர் ஜான்பூருக்கு தனது ஆளை ஆளுநராக நியமித்தார். 

இவரது ஆட்சியின் போது தான் மேவார் ராணா சங்கா தன் ராஜபுத்திர ஆட்சியை விரிவுபடுத்தினார். ராணா சங்கா இப்ராஹிம் லோடியின் படைகளை தோற்கடித்து விரட்டினார். இப்ராஹிம் லோடியின் கொடுமை தாங்காமல் ஆப்கானிய பிரபுக்கள் லாகூர் கவர்னர் தெளலத்கான் என்பவரின் தலைமையில் கூட்டம் போட்டு பாபருக்கு தகவல் அனுப்பி படையெடுத்து வந்து டெல்லிக்கு அருகேயுள்ள பானிபட் என்னுமிடத்தில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்து டெல்லியில் லோடி வம்சத்து ஆட்சியை முடித்து முகலாயர்களின் அரசை ஏற்படுத்தினார். முதலாம் பானிபட் யுத்தம் நடந்தது கி.பி.1526. இந்த பானிபட் போரில் இப்ராஹிம் லோடியின் சொந்த மாமாவான ஆலம் கான் என்பவரும் பாபரின் படையெடுப்புக்கு ஆதரவை தெரிவித்த நிகழ்வும் நடந்தது. இந்த போரில் துருக்கிய தளபதியின் கீழ் போரிட்ட பாபரின் படைகள் முதன்முதலாக துப்பாக்கி மற்றும் பீரங்கிகளை உபயோகித்தது. வட இந்திய அரசர்கள் அதுவரை போரில் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை ஏனெனில் துப்பாக்கியின் வட இந்தியாவில் இல்லை. அதனால் பாபர் எளிதாக மதியத்தில் ஆரம்பித்த போரை சூரியன் மறைவதற்குள் வெற்றியுடன் முடித்தார்.  இன்றும் பானிபட்டில் பிஸியான மார்க்கெட் வளாகத்திலுள்ள பூங்காவில் செங்கல்லால் கட்டப்பட்ட சிதிலமடைந்து இருக்கும் இவரின் சமாதியை காணலாம்.


மஹ்மூத் லோடி :

இவர் இப்ராஹிம் லோடியின் சகோதரர். இப்ராஹிம் லோடியின் மறைவுக்கு பின்னர் தன்னை சுல்தானாக அறிவித்துக் கொண்டு முகலாயப்படைகளை எதிர்த்தார். பாபருடன் மேவார் ராணா சங்கா மோதி தோற்ற கன்வா போரில் (கி.பி.1527ல்) இவர் 4000 ஆப்கானிய வீரர்களை ராணா சங்காவுக்கு உதவிக்கு அனுப்பினார். இந்த போரின் தோல்விக்கு பின்னர் இவர் கிழக்கு பக்கமாக ஓடி ஓளிந்துக்கொண்டு இரண்டு வருடங்களில் மீண்டும் காக்ரா போர்களத்தில் (கி.பி.1529ல்) பாபருடன் மோதி தோல்வியடைந்தார். இவருடன் லோடி வம்சம் முற்றிலும் முடிந்தது.

உதவிய நூல்கள்:

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

மொகலாயர்கள் - முகில்

மொகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்

மத்திய கால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா

விக்கிபீடியா தகவல்கள்

படங்கள் உதவி :

கூகுள் படங்கள் & திருமுத்துகுமரன்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு